இடைவிடாத சாதனை

ஒரு நாள் பொன்னொளிப் பித்தர் தன் சீடன் ஒருவனிடம் சொன்னார்,  “ஆன்மீகப் பாதையில் முன்னேற இடைவிடாத இறை நினைவு அவசியம் வேண்டும்,” என்றார்.

சீடன் மூன்றாண்டுகள் முயற்சி செய்து இடைவிடாத இறைநினைவைப் பெற்றான். பொன்னொளிப் பித்தரை  சந்தித்து தான் சாதித்தைப் பற்றிச் சொன்னான். “நீ உள்ளே நுழையும் போது உன் செருப்புகளை விட்ட இடத்தில் எத்தனை ஜோடி செருப்புகள் இருந்தன?” என்று கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் விழித்தான் சீடன் . “ஆன்மீகப் பாதையில் முன்னேற இடைவிடாத விழிப்புணர்வு தேவை,” என்று அறிவுரை சொன்னார் பொன்னொளிப் பித்தர்.

சீடன் மூன்றாண்டுகள் கடுமையான முயற்சி செய்து இடைவிடாத விழிப்புணர்வை அடைந்தான். பொன்னொளிப் பித்தரை  சந்திக்கச் சென்றான். அவர் என்னென்ன சோதனைகள் வைக்கக்கூடும் என்பதைத் தெளிவாக யோசித்து பதில்களோடு சென்றான். பொன்னொளிப் பித்தரை  சந்தித்து தான் சாதித்ததைப் பற்றிச் சொன்னான். 

பொன்னொளிப் பித்தர், “நீ உள்ளே நுழையும் போது.." என்று ஆரம்பித்ததும், சீடன் , “ஆறு ஜோடி செருப்புகள் இருந்தன,” என்று பதில் கூறி ஒவ்வொரு செருப்பையும் பற்றி நுணுக்கமாக விவரித்தான். 

பொன்னொளிப் பித்தர், “அதில்லையப்பா, நான் கேட்க வந்தது வேறு. நீ உள்ளே நுழையும் போது மற்ற செருப்புகளையெல்லாம் கவனித்தாயே, அப்போது இறைவனை நினைத்தாயா?" என்று கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் விழித்தான் சீடன் .

சீடன் மறுபடியும் மூன்றாண்டுகள் கடுமையான  முயற்சி செய்து விட்டு பொன்னொளிப் பித்தரை சந்தித்தான். அவரிடம் தன் சாதனையைப் பற்றி அவன் எதுவும் கூறவில்லை. அவரும் அவனிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. 

(மறு ஆக்கம் செய்யப்பட்ட பழைய கதை )
 

Tamil Author Term
Tamil Content Terms