வீரம்

பொன்னொளிப் பித்தரின் மடத்திற்கு ஒரு பக்தர் கோழையான நாயைக் கொண்டு வந்தார். 'உங்கள் அருளால் இதை வீரமுள்ள நாயாக மாற்ற வேண்டும்,' என்று கேட்டுக் கொண்டார். 

'இதென்னடா வம்பாக போச்சு!' என்று திடுக்கிட்ட பொன்னொளிப் பித்தர் தன் சிஷ்யக் கேடிகளைக் கூப்பிட்டார். 

"உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வீரத்துடன் நடந்து கொண்ட நிகழ்ச்சியைச் சொல்லுங்கள். உண்மையான வீரமுள்ள கதையைக் கேட்டால், இந்த நாயின் கோழைத்தனம் போய்விடும். அதற்கு வீரம் வந்துவிடும்," என்றார். 

சிங்கம், கொள்ளை, புயல், வெள்ளம், போர் போன்றவற்றின் முன் தாங்கள் செய்த வீர சாகசச் செயல்களை ஒவ்வொருவரும் விளக்கமாகக் கூறினர். 

ஒவ்வொரு கதையையும் கேட்டபின் நாய் தன் வாலை இன்னமும் அதிகமாக சுருட்டி, அதைக் கால்களுக்கிடையில் பதுக்கிக் கொண்டு பயந்து நடுங்கியது. 

கமலக் கூத்தர் எழுந்தார்,"இன்று காலையில் நான் என்னைக் கண்ணாடியில் பார்த்தேன்.  நான் கொஞ்சம் கூட பயப்படவில்லை," என்று கூறிவிட்டு அமர்ந்தார். 

நாய் எழுந்து நின்று, வாலை நிமிர்த்தி, வீரத்துடன் குரைக்க ஆரம்பித்தது.

Tamil Author Term
Tamil Content Terms