இறை தருணம்

பேரான்மா சில சமயங்களில் மனிதர்களின் நடுவே நடமாடுவதுண்டு. அப்போது மனித ஜீவனின் மேற்பரப்பு நீரோட்டத்தில் இறைவனின் மூச்சோட்டம் மிதந்து செல்லும். பேரான்மா ஓய்வெடுக்கும் சமயங்களும் உண்டு. அப்போது மனிதர்கள் தங்கள் சொந்த அகந்தையின் வலிமையை, அல்லது வலிமையின்மையை, அனுசரித்து செயல்பட வேண்டிய நிலைக்கு விடப்படுவார்கள். முதலாவது காலக்கட்டங்களில் சிறுமுயற்சிகூட பெரும்பலன்களைத் தந்து, ஊழை மாற்றும். இரண்டாவது காலவெளிகளிலோ, சிறுபலனை உருவாக்க ஏராளமான உழைப்பு தேவைப்படும். பின்னது முன்னதை ஆயத்தப்படுத்துகிறது என்பது மெய்யாக இருக்கக்கூடும். விண்ணகத்தை நோக்கி மேழெலும் நிவேதனச் சிறுபுகை, இறைவனின் கொடைமழையை கீழிறங்க அழைக்கக்கூடும்.

இறைதருணம் வந்தடையும்போது உறங்கிக் கொண்டிருக்கும் அல்லது அதை பயன்படுத்த ஆயத்தமின்றி இருக்கும் மனிதனும், தேசமும் துயருற்றவர்கள். ஏனெனில் அதை வரவேற்க விளக்கின் திரி சீர்செய்யப்படவில்லை. அழைப்பை அறியமுடியாதபடி செவிகள் மூடி முத்திரையிடப்பட்டுவிட்டன. வலிமையோடு, ஆயத்தமாக இருந்தும், அந்த ஆற்றலை வீணாக்குபவர்களுக்கு, அத்தருணத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு மும்முறையும் முழுதுன்பம் உண்டாகும். அவர்களுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பும், பேரழிவும் உண்டாகும்.

இறைவனின் தருணத்தில் எல்லா சுயஏய்ப்புகளிலிருந்தும், பாசாங்குகளிலிருந்தும், பயனற்ற தற்புகழ்ச்சியிலிருந்தும் உன் ஆன்மாவை விலக்கி, துலக்கித் தூய்மைப்படுத்து, அப்போது உன் ஆன்மாவை நேரிடையாகக் கண்டு, அதற்கு அழைப்பாணை இடும் குரலைக் கேட்கமுடியும். இறைவனின் விழிகளிலிருந்தும், லட்சியத்தின் ஒளியிலிருந்தும் இதுவரை உன்னை மறைத்துக் காத்த உன் சுபாவத்தின் அனைத்து அசிரத்தையும், இப்போது உன் கேடயத்தில் பிளவுகளாகி, அடிகளுக்கு அழைப்பு விடுக்கிறது. இத்தருணத்தில் நீ வெற்றி பெற்றாலும், அது உனக்கு மேலும் பெரிய கேடாகத்தான் ஆகும், ஏனெனில், பின்னர் விழும் அடி, உனது வெற்றி ஆர்ப்பரிப்பின் நடுவே உன்னை கீழே வீழ்த்திவிடும். ஆனால் நீ தூய்மையானவனாக இருந்தால், அனைத்து அச்சங்களையும் புறந்தள்ளிவிடு. இறைவனின் தருணம் பல நேரங்களில் பயங்கரமானதாக, தீயாக, சுழல்காற்றாக, புயல்காற்றாக, இறைவனின் சீற்றத்தில் மிதிபட்ட பழச்சாறுபேழையாக இருக்கக்கூடும். ஆனால், தன் செயல்நோக்கத்தின் சத்தியத்தின் மீது நின்று, அத்தருணத்தை எதிர்கொள்ளக்கூடியவன், நிலைத்து நிற்பான். அவன் விழுந்தாலும், மீண்டும் எழுவான். காற்றின் சிறகுகளில் ஏறிப் பறந்துவிட்டானோ என்று தோன்றினாலும் அவன் திரும்பி வருவான். பொருள்சார் முன்மதி உன்னை நெருங்கி உன் காதோடு மெல்லியகுரலில் பேச விடாதே. ஏனெனில், இது எதிர்பாராததன் நேரம், கணித்தற்கரியதின் நேரம்.அளவிடற்கரியதின் நேரம். உன் அற்பக் கருவிகளால் பேருயிர்ப்பின் ஆற்றலை அளவிடாதே. அதை நம்பி முன்னகர்ந்து செல்.

ஆனால் ஆன்மாவைத் தெளிவாக வைத்திருத்தல் மிகவும் முக்கியம். சற்று நேரமாவது அதை அகந்தையின் ஆரவாரமின்றி வைத்திரு. அப்போது இரவிலே தீயொளி உன் முன் அணிவகுக்கும். சூறாவளி உன் உதவியாளனாகும். வெல்லப்படவேண்டிய மகத்தான உயரங்களின் உச்சத்தில் உன் கொடி அசைந்தாடும்.

இறைவன் வரும் தருணம்
(எளிமையான மொழியாக்கம்)

இறைவன் சில சமயங்களில் மனிதர்களை நெருங்கி வருவதுண்டு. அப்போது அவன் அவர்களுடைய வாழ்வின் மிக அருகில் இருப்பான். இறைவன் சில சமயங்களில் மனிதர்களை விட்டு விலகி தொலைவில் இருப்பான். அப்போது மனிதர்கள் தங்கள் பலம் அல்லது பலவீனத்தை ஒட்டி காரியங்களை செய்ய வேண்டியதாகிவிடும். இறைவன் நெருங்கி வரும் நேரத்தில் சிறுமுயற்சிகூட பெரும்பலன்களைத் தந்து, விதியை மாற்றும். இறைவன் விலகி நிற்கும் நேரத்தில் சிறிய பலனுக்குக் கூட கடுமையாக முயற்சி செய்ய நேரிடும். பின்னது, முன்னதை தயார் செய்கின்றது என்பது உண்மையாக இருக்கலாம். சொர்க்கத்தை நோக்கி மேலே எழும் தியாகப் புகை, இறைவனின் அருளை பூமிக்கு அழைக்கும்.

இறைவன் வரும் தருணத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் அல்லது அதை பயன்படுத்த தயாராக இல்லாமல் இருக்கும் மனிதனும், தேசமும் வருந்த நேரிடும். ஏனெனில் அவர்கள் அழைப்பை அறியவில்லை. தகுதி இருந்தும், அத்தருணத்தை வீணடிப்பவர்களுக்கும்.. தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கும், துன்பமும், அழிவும் உண்டாகிவிடும்.

இறைவன் வரும் தருணத்தில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுதல், பாசாங்கு, தற்புகழ்ச்சி, போன்றவற்றை விலக்கி ஆன்மாவை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உன் ஆன்மாவைக் காண முடியும், அதற்கு ஆணையிடும் ஆண்டவனின் குரலைக் கேட்க முடியும். இதுவரை இருளில் உன்னை வைத்திருந்த உன் சுபாவத்தின் உண்மையின்மை, உனக்கு பிரச்சினைகளை உண்டுபண்ணும். தற்காலிகமாக நன்மை நடப்பது போலிருந்தாலும். பின்னர் பெரிய பிரச்சினை வந்துவிடக்கூடும். இத்தருணம் மிகவும் சோதனைகள் நிறைந்ததாக இருந்தாலும், நீ தூய்மையானவனாக இருந்தால் அஞ்சத் தேவையில்லை. சத்தியத்தின் பக்கமிருந்தால், ஒரு சங்கடமும் வராது. விழுந்தாலும் எழுந்து விடலாம். ஆதாயமனப்பான்மையோடு இருக்காதே, உன் அற்பக் கருவிகளால் ஆண்டவனின் ஆற்றலை அளவிடாதே. அதை நம்பி முன்னேறிச் செல்.

ஆன்மாவை தூய்மையாக சிறிது நேரமாவது அகந்தையின்றி வைத்திருந்தால், பிரச்சினை வாய்ப்பாக மாறும். எதிரி நண்பனாவான். வாழ்வில் உச்சகட்டத்தை அடையலாம் 

The Hour of God By Sri Aurobindo

There are moments when the Spirit moves among men and the breath of the Lord is abroad upon the waters of our being; there are others when it retires and men are left to act in the strength or the weakness of their own egoism. The first are periods when even a little effort produces great results and changes destiny; the second are spaces of time when much labour goes to the making of a little result. It is true that the latter may prepare the former, may be the little smoke of sacrifice going up to heaven which calls down the rain of God's bounty.

Unhappy is the man or the nation which, when the divine moment arrives, is found sleeping or unprepared to use it, because the lamp has not been kept trimmed for the welcome and the ears are sealed to the call. But thrice woe to them who are strong and ready, yet waste the force or misuse the moment; for them is irreparable loss or a great destruction.

In the hour of God cleanse thy soul of all self-deceit and hypocrisy and vain self-flattering that thou mayst look straight into thy spirit and hear that which summons it. All insincerity of nature, once thy defence against the eye of the Master and the light of the ideal, becomes now a gap in thy armour and invites the blow. Even if thou conquer for the moment, it is the worse for thee, for the blow shall come afterwards and cast thee down in the midst of thy triumph. But being pure cast aside all fear; for the hour is often terrible, a fire and a whirlwind and a tempest, a treading of the winepress of the wrath of God; but he who can stand up in it on the truth of his purpose is he who shall stand; even though he fall, he shall rise again, even though he seem to pass on the wings of the wind, he shall return. Nor let worldly prudence whisper too closely in thy ear; for it is the hour of the unexpected, the incalculable, the immeasurable. Mete not the power of the Breath by thy petty instruments, but trust and go forward.

But most keep thy soul clear, even if for a while, of the clamour of the ego. Then shall a fire march before thee in the night and the storm be thy helper and thy flag shall wave on the highest heights of the greatness that was to be conquered. 

Tamil Author Term
Tamil Content Terms