ஆலங்கட்டி மழை

சுத்தம் என்றால் சிங்கப்பூர் தான் நமக்கு நினைவுக்கு வரும். சிங்கப்பூருக்கு பலமுறை சென்றுவந்திருந்ததால் நானும் சுத்தத்திற்கு உரைகல் சிங்கப்பூர் தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த மாயை நியூஸிலாந்தில் காலடி வைத்ததும் உடனடியாக விலகிவிட்டது.

நம்மூர்ப் பெரியவர்கள் "நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் நல்ல எண்ணத்திற்கும், தானாகவே சுயம்புவாக இருக்கும் நல்ல எண்ணத்திற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு" என்று அடிக்கடி சொல்வார்கள். அதன் சாரம், நியூஸிலாந்தின் மண்ணிலும், மண்ணின் மைந்தர்களிடமும் இயற்கையாகவே ஊறிப்போயிருந்த சுத்தத்தைப்பார்த்ததும் புரிந்தது.

சிங்கப்பூர் சுத்தம், நம் நாட்டு அசுத்தத்தைவிட உயர்ந்தது என்றாலும் அது அரசாங்கம் ஏற்படுத்திய சட்டத்தின் மூலமும், தண்டனை தருவதன் மூலமும் ஏற்பட்டது என்பதால் அதில் ஒரு செயற்கைத்தனம் எப்போதும் இருக்கும். யாரும் சொல்லாமல், கட்டுப்பாடு என்று எதுவுமே இல்லாமல், இயல்பாகவே சுத்தமாக இருப்பதால், நியூஸிலாந்தின்சுத்தத்தின் உயர்வை எதோடு ஒப்பிடுவது?

இப்படியாகப் பரவசப்பட்டுக்கொண்டு ஆக்லாந்து நகர விமான நிலையத்தைவிட்டு வெளிவே வந்ததும், "வாருங்கள் சந்துரு'' என்று உற்சாகமாக வரவேற்பு தந்தார் கண்ணப்பன். இவர் என் பால்ய சிநேகிதர். கடந்த ஐந்து வருடங்களாக நியூஸிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

எனக்கு வேலை கிடைக்கும்வரை தம் வீட்டில் நான் தங்கிக்கொள்ள பெரிய மனத்துடன் சம்மதித்திருந்தார்.

"இங்கே பாய் விரிக்காமலேயே பிளாட்பாரத்தில் தூங்கலாம் போலிருக்கிறதே. எவ்வளவு சுத்தம்!'' என்று வியந்தேன்.

"தூங்கலாம்தான். ஆனால் குளிருமே'' என்று சிரித்தார் கண்ணப்பன்.

இயற்கை அழகிலும், சுத்தத்தின் உயர்விலும் இதயத்தை பறி கொடுத்திருந்த எனக்கு நான் ஸ்வெட்டர் போடாமல் இருந்தது அப்போதுதான் உறைத்தது. திடீரென குளிர ஆரம்பித்தது. ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டேன்.

கண்ணப்பனின் காரில் ஏறிக்கொண்டேன். ஊதா நிறத்தில் நீண்ட படகுபோலிருந்த மிட்சுபிஷி காரில் நானும் பயணம் செய்யமுடியும் என்று இதுவரை பகல் கனவுகூடக் கண்டதில்லை.

மெத்துமெத்தென்று மிருதுவாக இருந்த கார் சீட்டில் உட்கார்ந்தால் மகிழ்ச்சி. சத்தமின்றி சரேலென்று கார் நகருவதைப் பார்த்தால் சந்தோஷம். பனித்துளிகள் கார் கண்ணாடிமீது பூமழையாகப் பெய்து சிதறுவதைப் பார்த்தால் பரவசம். பட்டிக்காட்டான் பட்டிணத்தைப் பார்த்த பழைய கதை அன்று உண்மை நிகழ்ச்சியாக மாறியது.

"கார் பிரமாதமாக இருக்கிறது'' என்று அடக்கமுடியாத மகிழ்ச்சியைவெளிப்படுத்தினேன்.

"கேலி செய்யாதீர்கள். இது மிகவும் பழைய கார். இதைத் தள்ளுபடி விலையில் கார் சந்தையில் வாங்கினேன்'' என்றார் கண்ணப்பன்.

எனக்குத் தலை சுற்றியது. பழைய காரே இப்படி என்றால் புதிய கார் எப்படி இருக்கும்?

"கண்ணப்பன், இது உண்மையாகவே பழைய கார்தானா?'' என்று கேட்டேன்.

"சந்தேகமே வேண்டாம். உங்களுக்கு வேலை கிடைத்ததும் முதல் காரியமாக கார் சந்தைக்குப் போய் இதேபோல ஒரு கார் வாங்கி விடலாம்'' என்றார் கண்ணப்பன்.

எவ்வளவு கெட்ட எண்ணம்! தான் பழைய கார் ஓட்டுவதனால் நானும் பழைய கார் ஓட்டவேண்டுமென்று நினைக்கிறார். இவரெல்லாம் ஒரு நண்பரா? எனக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். அப்போது எப்படியெப்படிப் பேசவேண்டுமோ அப்படியப்படிப் பேசிக்கொள்கிறேன். இவர் வீட்டில் சில நாட்கள் இலவசமாகத் தங்கப்போவதால் இப்போது எதுவும் பேசக்கூடாது, தவறாகிவிடும்.

"கண்ணப்பன், உங்களுக்கு மாதம் எவ்வளவு வருமானம் வரும்?'' என்று கண்ணப்பனைக் கேட்டேன். கேட்கக்கூடாத கேள்விதான். ஆனால், எவ்வளவு நேரம் தான் மனதின் குறுகுறுப்பைப் பொறுத்துக் கொள்வது?

கண்ணப்பனோ இந்திரஜித்திற்கே வித்தை காட்டும் ஆசாமி. "என்ன பிரமாதமாக வந்துவிடப்போகிறது? வரவிற்காக செலவு, செலவிற்காக வரவு என்று ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது'' என்றார்.

ஒருவேளை நான் கடன் கிடன் கேட்கப்போகிறேன் என்று பயந்து விட்டாரா?

சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பராக்கு பார்த்து பரவசமடைய குழந்தையாகத்தான் இருக்கவேண்டுமா என்ன!

"இந்த ஊரில் என்னவெல்லாம் விசேஷங்கள் உண்டு?'' என்று கேட்டேன்.

"ஆலங்கட்டி மழை என்றால் எல்லோருக்கும் இங்கு பயம்'' என்றார் கண்ணப்பன்.

"ஆலங்கட்டி மழையா?'' என்று கேட்டேன்.

"மழைத்துளி ஒவ்வொன்றும் ஐஸ்கட்டியாக, சிறு கூழாங்கல் போல் இருக்கும். மேலே பட்டால் வலிக்கும். திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் படபடவென்று பெய்யும். அது பெய்தால் ஒரு நிமிடம்கூட வெளியே நிற்கமுடியாது. ஆக்லாந்துவாசிகள் எல்லோரும் வீட்டிற்குள் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டியதுதான்'' என்றார் கண்ணப்பன்.

"வேறு என்ன விசேஷங்கள் உண்டு?'' என்று கேட்டேன்.

"நமக்கு பரிச்சயமே இல்லாத சில அபூர்வமான சங்கதிகள் இங்கு உண்டு'' என்றார் கண்ணப்பன்.

"அப்படி என்ன நமக்குத் தெரியாத அபூர்வமான சங்கதிகள்?'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

"பொய்யே தெரியாத உண்மை, சட்டத்தை மதித்து நடக்கும் தன்மை, மனிதன் அனைத்தையும்விட முக்கியம் என்ற நடைமுறை.....'' என்று அடுக்கிக் கொண்டு போனார் கண்ணப்பன்.

"ஏதேது, நீங்களே இந்த நாட்டுக்காரராகிவிட்டீர்கள் போலிருக்கிறதே'' என்றேன்.

"இன்னமும் ஆகவில்லை என்பதுதான் என் வருத்தம். என் இந்தியப் பிறப்போடு, இந்த உயர்ந்த குணங்களும் சேர்ந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும்!'' என்றார் கண்ணப்பன்.

"அப்படி இருந்தால் பிழைக்கமுடியாது. கொஞ்சம் நெளிவு சுளிவாகத்தான் வாழவேண்டும். அதுதான் நடைமுறை யதார்த்தம்'' என்றேன்.

"இளிச்சவாய்த்தனம்" என்று நாக்கு நுனிவரை வந்த வார்த்தையைக்கட்டுப்படுத்திக்கொண்டேன்.

மயில்வண்ணப்பட்டுச்சேலையில் மல்லிகைப் பூக்கள் சறுக்குவதுபோல்,மேடுபள்ளமில்லாத பரந்த கரிய சாலையில் கலர்கலராக கார்கள்சத்தமின்றி சறுக்கிக்கொண்டு சென்றன.

"கண்ணப்பன், சாலை கூட்டமின்றி இருக்கிறது. நான் சிறிது தூரம் கார் ஓட்டட்டுமா?'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

ஒரு வினாடி தயங்கினார் கண்ணப்பன்.

"சந்துரு, நீங்கள் கார் ஓட்டுவீர்கள் என்று தெரியும். ஆனால் இங்கே கார் ஓட்ட இந்த நாட்டு லைசென்ஸ் வேண்டும். குறைந்தபட்சம் இந்தியாவிலிருந்து எடுத்துவந்த இன்டர்நேஷனல் பெர்மிட்டாவது வேண்டுமே!'' என்றார் கண்ணப்பன்.

"என்னிடம் இரண்டும் இல்லை'' என்றேன்.

"லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது ஆபத்து'' என்றார் கண்ணப்பன்.

"சிறிது தூரம்தானே. அதில் என்ன ஆகிவிடப்போகிறது? நீங்கள்தான் என் கூடவே இருக்கிறீர்களே'' என்றேன்.

மீண்டும் தயங்கினார்.

"எல்லா நாடுகளிலும் போக்குவரத்துச் சட்டம் இருந்தாலும், இந்த நாட்டில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஏதாவது சின்ன பிரச்சினை என்றாலும் வெளிநாட்டுக்காரரான நீங்கள் இந்த நாட்டில் இருப்பதே பெரிய பிரச்சினையாகிவிடும்'' என்று பயந்தார் கண்ணப்பன்.

"அதெல்லாம் ஒன்றும் ஆகாது. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நான் ஓட்டவில்லை'' என்று சிறிது வருத்தத்துடன் சொன்னேன்.

சிறிது நேரத்திற்குப்பிறகு, "சரி, நீங்கள் மிகவும் ஆசைப்படுகிறீர்கள். சிறிது நேரம் காரை நீங்கள் ஓட்டுங்கள்'' என்றார் கண்ணப்பன்.உற்சாகமாக காரை ஓட்ட ஆரம்பித்தேன். இந்தியாவில் மாருதி காரையும், அம்பாஸிடர் காரையும் மட்டுமே நன்றாக ஓட்டப் பழகியிருந்த எனக்கு, முதலில் சிறிது பதற்றமாக இருந்தாலும், ஓரிரு நிமிடங்களில் நிதானம் வந்துவிட்டது.

"நீங்கள் கவலையே படாதீர்கள் கண்ணப்பன். பார்முலா ஒன் கார் ரேஸில் கார் ஓட்டுமளவுக்கு எனக்குத் திறமை உண்டு. என்ன, அப்படி ஒரு சந்தர்ப்பம் இன்னமும் அமையவில்லை. அதனால்தான் இந்த உலகத்திற்கு நான் யாரென்று சரியாகத் தெரியவில்லை'' என்று என் அசாத்தியத் திறமையைப்பற்றி விவரித்தபடி காரை ஓட்டினேன்.

சிறிது தூரம் சென்றதும் கார்கள் வரிசையாக நிற்பது தெரிந்தது. விஷயம் விளங்காமல் நானும் காரை மெதுவாக நிறுத்தினேன்.

கண்ணப்பனுக்கு முகம் வெளிறியது.

"என்ன நடக்கிறது? என்று கேட்டேன்.

"போலீஸார் சோதனைபோடுகிறார்கள்'' என்றார் கண்ணப்பன்.

கண்ணப்பனின் பயம் என்னையும் தொற்றிக்கொண்டது.

"இப்போது என்ன செய்வது? நாம் இடத்தை உடனே மாற்றிக் கொண்டுவிடலாமா? நீங்கள் டிரைவர் ஸீட்டுக்கு வந்துவிடுங்களேன்'' என்றேன்.

"வேண்டாம் சந்துரு. அப்படிச் செய்தால் போலீஸார் கவனம் நம்மீது திரும்பிவிடும்'' என்றார் கண்ணப்பன்.

"இந்த ஊரில் உங்களுக்குத் தெரிந்த பெரிய மனிதர்கள் யாரேனும் உண்டா? அவர்கள் பெயரைச் சொன்னால் போலீஸ்காரர் விட்டுவிடுவார்'' என்றேன்.

"அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே'' என்றார் கண்ணப்பன்.

"ஏதேனும் பணம் கொடுத்துப்பார்க்கலாமா? என்று கண்ணப்பனிடம் மெதுவாகக் கேட்டேன்.

"இங்கே போலீஸ்காரர்கள் இலஞ்சம் வாங்கமாட்டார்கள். அதற்கு வேறு நமக்குத் தனியாகத் தண்டனை தருவார்கள்'' என்றார் கண்ணப்பன்.

"பத்திற்குள் எண் ஒன்றைச் சொல். உன் நெஞ்சிற்குள் யாரென்று சொல்வேன்" என்று ஆருடக்காரன் கேட்கும்போது, "பதினெட்டு" என்று பதில் வந்தால், மேற்கொண்டு என்ன பேசமுடியும்?

தப்பித்துக்கொள்ள உருப்படியாக எந்த வழி சொன்னாலும் அதை மறுத்துப் பேசும் கண்ணப்பனைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பொங்கியது. தண்டனை எனக்கல்லவா கிடைக்கப்போகிறது. இவருக்கென்ன வந்தது? திடீரென்று பொறிதட்டியது போலிருந்தது. என்னை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிவிட்டால், எனக்காகச் செய்யப்போகும் செலவு மீதமாகும் என்பதால் இப்படி நடந்துகொள்கிறாரோ?

"என்ன கண்ணப்பன், நான்தான் அறிவில்லாமல் கார் ஓட்டுகிறேன் என்று சொன்னால் நீங்களாவது உறுதியாக மறுத்திருக்கக்கூடாதா? என்னைப் பிடித்துவிட்டால், திரும்ப இந்தியாவிற்கே அனுப்பி விடுவார்களே? இப்படி என் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டீர்களே'' என்று புலம்ப ஆரம்பித்தேன்.

கண்ணப்பன் பதில் பேசவில்லை.

சென்னையில் வேலையை இராஜினாமா செய்துவிட்டு, வீட்டை காலி செய்துவிட்டு, மனைவியை மாமனார் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, எவற்றையெல்லாம் விற்கமுடியுமோ அவற்றையெல்லாம் விற்றுவந்த பணத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு நியூஸிலாந்திற்கு வந்தேன். இனி இந்தியா திரும்பி, வீடில்லாமல், வேலையில்லாமல், பணமில்லாமல் என்னதான் செய்யப்போகிறேன்?

பதற்றம் மெல்ல மெல்ல பயமாக மாறியது. சாதாரணமான பயமில்லை. ஜீவனையே உலுக்கும் பயம். வயிறு கலங்கியது. கலக்கத்தின் நடுவில் பெரிய பந்துபோல் ஏதோ ஒன்று அடிவயிற்றில் திரண்டது. அந்தப் பந்து மெல்ல மெல்ல மேலெழுந்து நெஞ்சை நோக்கி நகர்ந்தது. காது நுனிகள் சூடாகின. சுவாசம் பெருமூச்சாக மாறியது. கண்களில் இலேசாக நீர் துளிர்த்தது.

"இறைவா, இதுவா என் விதி?'

திடீரென எங்கேயோ எப்போதோ படித்த வரிகள் நினைவுக்கு வந்தன.

"எப்போது எதுவுமே காப்பாற்ற முடியாது என்ற நிலை உருவாகிறதோ, அந்த நிமிடமே இறைவனை அழைக்கச் சரியான தருணம்'.

இன்னும் பத்துக் கார்கள் தாம் எங்கள் காரின் முன்னால் இருக்கின்றன. மூன்று, நான்கு நிமிடங்களில் என்முறை வந்துவிடும். அதற்குள் பாவம், கடவுள்தான் என்ன செய்துவிடமுடியும்?

கடவுளாலும் என்னைக் காப்பாற்றமுடியாது என்பது தெளிவாகப் புரிந்தது. இருந்தாலும் செய்வதற்கு நானறிந்த வழிகள் எதுவுமில்லை என்பதால் கடவுளை நினைத்து அழைத்தேன்.

"கடவுளே, ஒரு பாவமும் அறியாத எனக்கு ஏன் இந்தச் சோதனை? தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். கடவுளே, கடவுளே, கடவுளே" என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்தேன்.

கடவுள் என்னைக் காப்பாற்ற வரவில்லை.

என் முன்னால் எட்டு கார்கள் தான் இருந்தன.

உடனே பிரார்த்தனையைத் தீவிரமாக்கினேன்.

ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

என்னுள் வேகமும், தவிப்பும், பதற்றமும் அதிகமாயின. "கடவுளே, என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றினால் செலவு போக மீதம் இருக்கும் என் முதல் மாத சம்பளத்தைக் காணிக்கையாகத் தருகிறேன்" என்று மனமுருகி வேண்டிக்கொண்டேன்.

அப்போதும் கடவுள் என்னைக் காப்பாற்ற வரவில்லை.

கடவுளுக்கு அளவற்ற சக்தி இருப்பதாக நான் கேள்விப்பட்டது பொய்யா? உண்மையாகவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?

என் முன்னால் ஆறு கார்கள் தான் இருந்தன.

நானென்ன பெரிய தவறு செய்துவிட்டேன்? சிறிது தூரம் கார் ஓட்ட ஆசைப்பட்டேன். அது தவறா?

சரி, லைசென்ஸ் இல்லாமல் ஓட்டிவிட்டேன். அது சிறிய தவறுதான். அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா?

காரணத்தைப் புரிந்துகொண்டு, செய்த தவற்றை மனமும், உணர்வும் ஓரளவு ஏற்றுக்கொண்டதும் மனம் நிதானமடைவதுபோலவும், பயம் விலகுவதுபோலவும் இருந்தது. ஏதோ தெளிவு பிறப்பதுபோருந்தது. அந்தத் தெளிவே அடுத்தக் கட்டத் தெளிவைத் தந்தது.

எது எப்படி இருந்தாலும், நான் கடவுளை எப்படி நம்புவது? என் பிரார்த்தனை பலிக்கவில்லையே. தான் செய்த தவற்றைத் தானே உணரத் தொடங்கியபோது ஏற்பட்டதெளிவும், நிதானமும், தெம்பும் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தபோது ஏன் ஏற்படவில்லை?

தன்னைத் தானே தெரிந்துகொள்வதுதான், கடவுளைத் தெரிந்து கொள்ளும் வழிபோலும்.

என் முன்னால் இன்னும் நான்கே கார்கள் தாம் இருந்தன.நான் செய்தது மிகப்பெரிய தவறுதான். லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டுவது குற்றம் என்று தெரிந்தும், அதைச் செய்தேன். இனி இந்தத் தவற்றை இன்னொரு முறை செய்யமாட்டேன். நடப்பது நடக்கட்டும்.

கார் ஜன்னல் வழியாக விரிந்துகிடந்த வானத்தைப் பார்த்தேன். தூரத்தில் ஒரு விமானம், உயரே உயரே ஏறி உலோகப்பறவையாகப் பறந்துசென்றது.

இன்னும் ஒரு நிமிடத்தில் நான் வெளிநாடு வர பல ஆண்டுகள் செய்த கடும்முயற்சி, எதிர்காலத்தைப்பற்றிய கனவுகள் அனைத்தும் பறிபோய்விடும்.

பல ஆண்டு வாழ்க்கையை, ஒரு நிமிடம் முடிவு செய்யமுடியுமானால், காலத்தில் வாழ்வது என்பதே அர்த்தமற்றதா? நிலையற்றதா?

எனக்குக் கவலையாக இருந்தது.

மனிதனுக்குக் கவலை உண்டு. அவன் கவலையை விட்டுவிட்டால் கவலை இல்லாத நிலை உண்டு.

கார் இருக்கிறது. காரை விட்டுவிட்டால் கார் இல்லாத நிலை இருக்கவே இருக்கிறது.

அப்படியானால் காலத்தை விட்டுவிட்டால் காலமற்ற நிலையில் இருக்கமுடியுமா? ஆனால் மனிதச் செயல்கள் காலத்தில்தானே நடக்க முடியும்?

அதற்கு என்ன வழி?

பேருந்தில் பயணம் செய்யும்போது சில நிமிடங்களுக்கு ஒரு முறை மைல்கல் கண்களில் படும். இன்னமும் இவ்வளவு கிலோமீட்டர்கள் போகவேண்டும், இவ்வளவு நேரம் பிரயாணம் செய்யவேண்டும் என்று மனம் சலிக்காமல் கணக்குப்போடும்.

விமானத்தில் ஏறி, உயரத்தில் பறக்கும்போது, கீழே பார்த்தால் எல்லா மைல்கற்களும் ஒரே சமயத்தில் தெரியும். அப்போது எதை வைத்து காலத்தைக் கணக்குப் போடுவது?

அனைத்தும் ஒரே சமயத்தில் தெரிவதால், ஓரளவிற்கு அது காலமற்ற நிலையைக் காட்டுகிறது. எந்த இடத்திற்குப் போகவேண்டுமோ, விமானத்தில் அங்கே விரைவாகப் போகமுடிகிறதே. காலமற்ற நிலையைப் போன்ற நிலையிலிருந்து செயல்படுவதால் அது சாத்தியமாகிறதா?

வானத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்த விமானத்தை பார்த்தவண்ணம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்த எனக்கு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

என் முன்னால் இரண்டே கார்கள்தாம் இருந்தன.

காலமும், காலமற்ற நிலையும் சேரும் இடத்தில் எப்போதும் இருக்கப்பழகிக்கொண்டால் இரண்டையும் அனுபவிக்கலாம். காலமற்ற நிலையில்இருந்துகொண்டு, காலத்தில் காரியத்தைச் செய்தால் அனைத்தும் உடனே நடக்குமல்லவா? அந்த இடத்தை எப்படி அடைவது? புரியவில்லை.

இனி என்னை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பினாலும் கவலை இல்லை. பூரண நிதானமும், அளவற்ற பொறுமையும் என்னை நிரப்பின. இந்தக் கணம்முதல் பொறுமையுடன், நிதானமாக என் எல்லா செயல்களையும் விரைவாகவும், நேரந்தவறாமலும் செய்வேன். இது உறுதி. எனக்குப் புல்லரித்தது.

அட, இதுதான் அதுவா! காலமும், காலமற்ற நிலையும் ஒன்றாகச் சேரும் இடத்தைப் பாமரன் அடையும் உபாயம் இதுதானா!

மனம் சலனத்தை இழந்தது. என் முன் கணக்கற்ற கோடானுகோடி ஆண்டுகள் இருப்பனபோலவும், நான் விரும்பினால் கோடானுகோடி ஆண்டுகளும் வினாடிகளாக மாறிவிடும்போலவும் ஓர் உணர்வு.

காலமும், காலமற்ற நிலையும் ஒன்றாகச் சங்கமமாகின்ற சைமல்டானியஸ் இன்டகராலிடி என்கிற நிலை இதுதானா!

என் முன்னால் ஒரே ஒரு கார்தான் இருந்தது. இன்னும் அரை நிமிடத்தில் என் வாழ்க்கை முடிந்துவிடும்.

"எனக்கு ஒரு கோடி வயதானால் என் முகம் எப்படி இருக்கும்?" என்று யோசித்தேன். சிரிப்பு வந்துவிட்டது. வேளை கெட்ட வேளையில் சிரிக்கும் என்னை, கண்ணப்பன் விசித்திரமாகப் பார்த்தார்.

திடீரென்று சடசடவெனப் பெருஞ்சத்தம்.

ஆலங்கட்டி மழை!

பெரிய பெரிய ஐஸ்கட்டிகள் கார்களின் மீது ஆவேசமாக விழுந்தன. ஐந்தே வினாடிகளில் முழுவதும் நனைந்துவிட்ட போலீஸ்காரர் பாதுகாப்புத் தேடி தன் காருக்குள் நுழைந்து, கதவுகளை மூடிக்கொண்டார்.

ஆலங்கட்டி மழை வலுத்தது.

போகிற போக்கைப் பார்த்தால் மழைநிற்பதுபோல தெரியவில்லை. கார் வரிசை நீண்டுக்கொண்டேபோனது.

நேரம் நழுவியது.

கார்களை எவ்வளவு நேரம் காக்கவைப்பது என்ற தர்மசங்கடத்திற்கு ஆளான போலீஸ்காரர் கார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். புன்னகையுடன் எல்லாக் கார்களையும் போகச் சொல்லி சமிக்ஞை செய்துவிட்டு, தம் காரை கிளப்பி எதிர்த்திசையில் ஓட்டிக்கொண்டு சென்றார்.

"கண்ணப்பன், காரை நீங்களே ஓட்டுங்கள். நேராகப் போக்குவரத்து ஆபீஸ் சென்று லைசென்ஸ் வாங்க விண்ணப்பித்துவிட்டு, பின் வீட்டுக்குப் போகலாம்'' என்றேன்.

கண்ணப்பன் புன்னகைத்தார்.

கார்கள் நகரத் தொடங்கின.

****

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms