ஜாதிமல்லி

ஒரு வாரமாகவே தேவிகாவின் முகம் வாடி இருந்தது. 'என்ன விஷயம்' என்று கேட்டு அவளை மலரச் செய்ய வேண்டும் என்று குமரனுக்கு ஆர்வம் இருந்தாலும், கேட்க சிறிது தயக்கமாக இருந்தது.

அவள் பாட்டுக்கு 'புதிய நகை வேண்டும், பட்டு சேலை வேண்டும், உங்கள் அம்மாவோடு பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்,' என்பது போன்ற வில்லங்கமான கோரிக்கைக் கணைகளைத் தொடுத்தால் என்ன செய்வது என்ற பயம்தான் தயக்கத்திற்கான காரணம்.

மனைவியின் மீது உண்மையான பிரியம் கொண்ட எந்த கணவனால் அவள் முகவாட்டத்தை நாட்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அதனால் எல்லாம் வல்ல இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு, சனிக்கிழமை மாலையில் தேவிகா காபி தரும் போது குமரன் மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.

"காபி பிரமாதமாக இருக்கிறது," என்றான் குமரன்.

"இன்னமும் குடிக்கவே ஆரம்பிக்கவில்லை?" முறைத்தாள் தேவிகா.

"நீ போடும் காபி எப்போதும் பிரமாதமாகத்தான் இருக்கும். உன் முகம் வாடி இருப்பதை பற்றிய கவலையில், ஏதோ சொல்லி விட்டேன்," என்று சமாளித்தான் குமரன்.

"பரவாயில்லையே, என் முகத்தை கூட நீங்கள் ஏறெடுத்து பார்க்கிறீர்களே," என்றாள் தேவிகா.

"என்ன இப்படி சொல்லி விட்டாய்? நான் போன பிறவியில் தெரியாத்தனமாக செய்து விட்ட சில புண்ணிய காரியங்களினால்தான் நீ எனக்கு இந்தப் பிறவியில் மனைவியாக வந்திருக்கிறாய். என் குறைகளை எல்லாம் திருத்துகிறாய். எனக்காக என்னவெல்லாம் செய்கிறாய். சரி, அதை விடு, உன் கவலை என்ன? அதைச் சொல்," என்று தன்மையாகப் பேசினான் குமரன்.

'வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் - மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும், கண்ணா, கண்ணா,' என்ற இசைப்பாடல் எங்கிருந்தோ மெல்லிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. பாடலை சிறிது நேரம் கவனித்த தேவிகா, "நான் போன வாரம் முப்பது ரூபாய் பெறுமானமுள்ள விஷயத்தில் ஏமாந்து போய் விட்டேன்," என்று சொன்னாள்.

"என்ன நடந்தது?" என்று குமரன் கேட்டான்.

"வழக்கமாக நம்மிடம் பழைய பேப்பர் வாங்கும் பெரியவர் வேறு ஊருக்குப் போய் விட்டார். அதனால், போன வாரம் செந்தில் என்ற புதிய பையனிடம் முப்பது ரூபாய்க்கு பழைய பேப்பரை விற்றேன். 'என்னிடம் நூறு ரூபாயாக இருக்கிறது, உங்களிடம் சில்லறை இருக்கிறதா?' என்று கேட்டான். 'இல்லை,' என்று சொன்னேன் . 'மாற்றிக் கொண்டு வருகிறேன்,' என்று சொல்லி விட்டுப் பேப்பரையும் எடுத்துக் கொண்டு போனான். போனவன் இன்னமும் திரும்பவே இல்லை," என்று விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னாள் தேவிகா.

"போனால் போகிறது. முப்பது ரூபாய்தானே? இதற்காகவா இப்படிக் கவலைப்படுவது? " என்று ஆறுதல் சொன்னான் குமரன்.

"முப்பது ரூபாய் பணத்திற்காக முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் குடும்பத்தில் பிறந்தவள் என்றா என்னைப் பற்றி நினைக்கிறீர்கள்? படிப்பறிவு இல்லாத ஒரு சிறு பையன் எத்தனை சுலபமாக என்னை ஏமாற்றி விட்டான்? அந்த அவமானம்தான் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது." என்றாள் தேவிகா.

"அந்தப் பையனை கண்டுபிடிக்க முயற்சி செய்தாயா?" என்று கேட்டான் குமரன்.

"இரண்டு, மூன்று நாட்கள் எல்லா வீதிகளையும் சுற்றி ஊர்வலம் வந்து விட்டேன். கண்ணில் செந்தில் தட்டுப்படவில்லை. பழைய பேப்பர் கடைகளில் சென்று அடையாளம் சொல்லி விசாரித்தேன். தெரியவில்லை என்கிறார்கள். எல்லோரும் கூட்டுக் களவாணிகள்," என்றாள் தேவிகா.

சிறிது நேரம் யோசித்த குமரன் சொன்னான், " நாம் ஏமாந்ததற்கு நாம்தான் பொறுப்பு. பிறரைக் களவாணிகள் என்று சொல்வதை விட்டு விடு. போன மாதம் ஒரு கட்டுரைப் படித்தேன்.ஒருவர் பால் பாயிண்ட் பேனாவில் இருக்கும் ஸ்பிரிங்கை தொலைத்து விட்டு தேடு தேடு என்று வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லையாம்."

"அய்யோ பாவம், அது மிகவும் சின்ன பொருள். கண்ணால் தேடினால் கிடைக்காது. வெள்ளை துணி அல்லது பூந்துடைப்பம் கொண்டு தேடினால் கிடைக்கும். அதுவும் நிச்சயமில்லை," என்றாள் தேவிகா.

"அவர் பொதுவாக வித்தியாசமான வழிகளில் பிரச்னைகளைத் தீர்ப்பாராம். அந்த வழிகளின் மூலம் எந்த பிரச்னையும் முழுவதுமாகத் தீருமாம், "என்றான் குமரன். "அது என்ன வழி என்று சொல்லுங்களேன், நானும்தான் முயற்சி செய்து பார்க்கிறேன்," தேவிகாவிடம் ஆர்வம் எழுந்தது.

"உள்ளே போனால் வெளியே இருப்பதைக் காணலாம்," என்றான் குமரன்.

"இந்தத் திரைக் கதை வசனமெல்லாம் எனக்கு சரி வராது. நான் என்ன செய்தால் எனக்கு முப்பது ரூபாய் கிடைக்கும்? அதை மட்டும் தத்துவம் எதுவுமில்லாமல் சொல்லுங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது," என்றாள் தேவிகா.

"அவர் எழுதியதை எனக்குப் புரிந்த வகையில் சொல்கிறேன். உனக்குப் பிடித்திருந்தால் முயற்சி செய். எந்த விஞ்ஞானியும் தனக்கு உள்ளே இருந்துதான் ஒரு புதிய பொருளை உருவாக்குகிறார். உள்ளே எழுந்த கருத்துக்களை திரட்டித் தொகுத்து வெளியே பொருளாக மாற்றுகிறார். அவர் கண்டுபிடிக்கும் அவருக்கு சொந்தமான பொருள் அவருக்குள்ளேயே இருக்கிறது. ஆரம்பம் உள்ளே இருக்கிறது. அவருக்குள்ளே இருந்ததுதான் வெளியே தென்படுவது உருவாகுகிறது." என்றான் குமரன்.

"சரி. ஒப்புக் கொள்கிறேன்," என்றாள் தேவிகா.

"அப்படிப் பார்த்தால் உனக்கு சொந்தமான பொருளும் உனக்குள்ளே இருக்கிறது. உள்ளே போய் தேடிப் பார்த்தால், காணாமல் போன பொருள் கிடைக்கலாம். அதைத்தான் அவர் செய்தார். வெளியே தேடுவதை நிறுத்தி விட்டு, தன்னுள்ளே சென்று தேடினார். யாரோ ஸ்பிரிங்கை எடுத்துக் கொண்டு வந்து அவர் கையில் கொடுத்தாராம்," என்றான் குமரன்.

"கேட்க நன்றாகத்தான் இருக்கிறது . ஆனால் குருவி உட்கார பனங்காய் விழுந்தால் அதையே வழிமுறை ஆக்கி விடுவதா? சரி, உள்ளே என்றால் மனம் என்று அர்த்தமா? " என்றாள் தேவிகா.

"அப்படியும் வைத்து கொள்ளலாம். தேடுவது உள்ளே தென்பட்டால் அது வெளியே தானாகவே கிடைத்து விடும் என்பதை நம்ப வேண்டும். நம்பிக்கை மலையைக் கூட நகர்த்தும். நம்பிக்கை வந்த பின் சிறிது நேரம் கண்களை மூடி, அந்தப் பையனையும், முப்பது ரூபாயையும் உள்ளே தேடித்தான் பாரேன். பனங்காய் விழுகிறதா இல்லையா என்று பார்த்து விடலாம்," என்ற குமரனுக்கு எப்படியாவது தன் அறிவை தேவிகா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு வந்து விட்டது.

"சரி, நீங்கள் சொல்வதால் முயற்சி செய்கிறேன். ஆனால் நான் கண்களை மூடும் போது கிச்சு கிச்சு பண்ணக் கூடாது," என்று நிபந்தனை விதித்தாள் தேவிகா.

"அதெல்லாம் பண்ண மாட்டேன்," சிரித்தான் குமரன்.

கண்களை மூடினாள் தேவிகா. 'மாம்பழம் வாங்க வேண்டுமே, கடையை மூடி விடுவார்களே, ' என்ற எண்ணம் தோன்றியது.

"தூங்குமுன் உங்கள் யோசனைப்படி முயற்சி செய்கிறேன். இப்போது நான் போய் மாம்பழம் வாங்கிக் கொண்டு வருகிறேன்," என்று சொன்னாள் தேவிகா. "என்னிடம் சொன்னால் நான் வாங்கி வருவேனே? எனக்கு அலைச்சல் கொடுக்கக் கூடாது என்று நினைக்காதே," என்றான் குமரன். "அப்படி ஒன்றும் நான் நினைக்கவில்லை. நீங்கள் பழம் வாங்கி வந்தால், அது என்ன இலட்சணத்தில் இருக்கும் என்று எனக்குத்தானே தெரியும்," என்று சிரித்து கொண்டே சொன்ன தேவிகா வண்டியைக் கிளப்பினாள்.

வண்டியை நகர்த்தாமல் சிறிது நேரம் சிந்தனைவயப் பட்டாள். 'எப்போதும் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசும் இவர் இன்று சொன்னதில் ஏதேனும் உண்மை இருக்குமா? பாவம், என் மீது இருக்கும் அன்பினால்தானே பேசத் தெரியவில்லை எனறாலும் ஏதோ ஒரு விஷயத்தை விளக்க முயற்சி செய்தார்? அந்த அன்பிற்கு ஒரு மரியாதை தர வேண்டாமா?'

கிளப்பிய வண்டியை நிறுத்தினாள் தேவிகா. வண்டியில் அமர்ந்தவண்ணமே கண்களை மூடி மனதைப் பார்க்க முயன்றாள். ஒன்றும் புலப்படவில்லை. எல்லாம் ஒரே இருட்டாக இருந்தது. இருந்தாலும் செந்திலின் முகத்தையும், முப்பது ரூபாய்களையும் பார்க்க முயற்சி செய்தாள். முப்பது ரூபாய்களை மனத்தில் கண்டுபிடிக்க முயன்றாள். கலங்கிய நீரில் பிரதிபலிக்கும் சிதைந்த பிம்பங்கள் போல சில தெளிவற்ற உருவங்கள் தோன்றின. அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் மனத்தில் மகிழ்ச்சி எழுந்தது. அது எதனாலோ? புதியது ஒன்றை கற்கும் முயற்சியாலா அல்லது கணவனின் அன்பைப் பற்றிய நினைப்பாலா?

'சரி, இரவு தூங்குமுன் மீண்டும் தேடலைத் தொடரலாம்,' என்ற எண்ணத்தோடு வண்டியைக் கிளப்பி, நகர்த்தி, ஓட்டத் தொடங்கினாள் தேவிகா.

தெருமுனையில் தேவிகா கவனமாக வண்டியைத் திருப்பியபோது எதிர் திசையிலிருந்து வேகமாக சைக்கிள் ஒன்று வந்தது. பாதை மிகவும் குறுகலானதால், விலக வழி இல்லாமல் இருவரும் வண்டிகளை எதிரெதிரே நிறுத்தினர்.

சைக்கிளை ஒட்டி வந்தவன் செந்தில்.

'வசமாக மாட்டிக் கொண்டோமே,' என்ற பதைபதைப்பில் சில விநாடிகள் வார்த்தைகளுக்காகத் தடுமாறிய செந்தில், "அக்கா, நான் உங்கள் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருந்தேன்," என்றான்.

"அப்படியா?" சாதாரணமான குரலில் கேட்டாள் தேவிகா.

தன் பொய் பலித்து விட்டதென்று உற்சாகமானான் செந்தில். "போன வாரம் சில்லறை மாற்றிக் கொண்டு வர போனபோது சைக்கிள் ரிப்பேராகி விட்டது. அதனால்தான் அன்றே வந்து முப்பது ரூபாயை கொடுக்க முடியவில்லை, " என்று கூறி மூன்று பத்து ரூபாய் தாள்களை நீட்டினான்.

அதை வாங்கிக் கொண்ட தேவிகா, "சந்தோஷம் செந்தில், அடுத்த மாதம் பத்தாம் தேதி மறக்காமல் சில்லறையோடு வந்து விடு," என்றாள். "சரி அக்கா," என்றவன் 'விட்டால் போதும்,' என்று விரைந்து சைக்கிளை ஓட்டி மறைந்தான்.

அவன் சென்ற திசையையே சிறிது நேரம் தேவிகா பார்த்துக் கொண்டிருந்த போது, பல வருடங்களாக தேவிகாவிற்கு பூ விற்கும் பெண் எதிரே வந்தாள்.

"முப்பது ரூபாய்க்கு ஜாதிமல்லி கொடு," என்றாள் தேவிகா. "எப்போதும் கதம்பம்தானே வாங்குவீர்கள்? ஜாதிமல்லி வாசம் உங்களுக்குப் பிடிக்காதே," என்று கேட்டாள் பூக்காரி. "கல்யாணமான நாளிலிருந்து இன்றைக்குத்தான் உருப்படியான ஒரு யோசனையை என் வீட்டுக்காரர் சொல்லி இருக்கிறார். அதனால் அவருக்கு பிடித்தமான பூவை வாங்குகிறேன்," என்றாள் தேவிகா.

பூக்காரி பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தாள். பக்குவம் நிறைந்தவள். வாழ்க்கையில் முன்னுக்கு வந்து விடுவாள். அவள் தந்த பூவை வாங்கி கூந்தலில் சூடிக் கொள்ள யத்தனித்த தேவிகா,அதைச் செய்யாமல் பூச்சரத்தை கைப்பையில் வைத்தாள். 'அவரையே வைத்து விடச் சொல்லலாம். சந்தோஷப்படுவார்.'

மாம்பழத்தை மறந்தாள் தேவிகா. அவள் மனம் குமரனை நோக்கியும், வண்டி வீட்டை நோக்கியும் பறந்தன.

( முற்றும் )

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms