ஞானப் பால்

ஐந்தாம் வகுப்பில் கணக்கு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரை பார்க்க அலுவலக அறையில் யாரோ காத்துக் கொண்டிருப்பதாக பியூன் தாத்தா வகுப்பிற்குள் வந்து சொன்னார்.

"எல்லோரும் முதல் நாலு கணக்குகளையும் சத்தம் போடாமல் பண்ணிக்கிட்டு இருங்க. நான் அஞ்சு நிமிஷத்திலே வந்திடறேன். மல்லிகா, நீதானே லீடர்? யாராவது ஒழுங்கா இல்லன்னா பேரை எழுதி வை. வந்து பேசிக்கிறேன்," என்றவாறு கணக்கு ஆசிரியை வகுப்பை விட்டு வெளியே போனார்.

கணக்கு ஆசிரியை பயங்கரவாதி. அதனால் சிவாவைத் தவிர எல்லா மாணவ, மாணவிகளும் மூச்சு விடும் சத்தம் கூட வெளியே கேட்காதவாறு கணக்கு போட ஆரம்பித்தனர்.

பத்து வயதான சிவா ஓவியப் பித்து பிடித்தவன். தடிமனான ஒரு ஓவிய நோட்டு அவனது உடலின் ஒரு பகுதி. எங்கு போனாலும் அதைத் தூக்கிக் கொண்டு அலைபவன். ஒரு நிமிடம் அவகாசம் கிடைத்தாலும், அதை விரித்து ஏதாவது வரைய ஆரமபித்து விடுபவன், ஐந்து நிமிடங்கள் கிடைத்தால் சும்மா இருப்பானா?

"சிவா , கணக்குப் போடு, படம் போடாதே," என்றாள் மல்லிகா.

"அப்படித்தான் போடுவேன், நீ என்ன பண்ணிடுவே?" என்ற சிவா தோகை விரித்தாடும் மயில் படத்தை வரைவதில் மும்முரமானான்.

"உன் பேரை எழுதிடுவேன்," என்றாள் மல்லிகா.

"எழுதேன், எனக்கென்ன பயம்?" என்ற சிவாவிற்கு திடீரென்று கோபம் வந்தது. "உனக்கு படம் வரையத் தெரியாது. கோழி மாதிரி கிறுக்குவே. அதனாலே உனக்கு என் மேலே பொறாமை," என்றான்.

சிறிது நேரம் கழித்து மல்லிகா கடுமையான குரலில் எச்சரித்தாள். "சிவா, நீ இப்போ கணக்குப் போடப் போறியா இல்லையா?"

"உங்கப்பா பெரிய ஆளுன்னு டீச்சருங்கதான் உன்னைப் பார்த்து பயப்படுவாங்க. நான் பயப்பட மாட்டேன்," என்று சிவா குத்தலாகச் சொல்லவும் சில மாணவர்கள் சிரித்தனர்.

"என்ன சிரிப்பு?" அதட்டிக் கொண்டே கணக்கு ஆசிரியை வந்தார்.

"மிஸ், சிவா கணக்குப் போடாமல் படம் வரையறான்," அவனிடமிருந்து ஓவிய நோட்டைப் பறித்த மல்லிகா அதை ஆசிரியையிடம் கொடுத்தாள்.

"அவன் தலையிலே மூணு தடவை குட்டு வை. படிக்கிற வயசிலே படம் என்ன வேண்டி கிடக்கு?" என்றார் கணக்கு ஆசிரியை.

சிவா தலையில் இலேசாகக் குட்டினாள் மல்லிகா.

"சத்தமே கேட்கலையே! எப்படிக் குட்டணும்னு உன் தலையிலே சொல்லித் தரவா? உங்கப்பா பணக்காரர்னா எனக்கென்ன?" என்று மல்லிகாவை மிரட்டினார் கணக்கு ஆசிரியை. பாவம், சரியாக சம்பாதிக்காத தன் கணவர் மீது என்ன கோபமோ!

பயந்து போன மல்லிகா, தன் பலத்தையெல்லாம் திரட்டி சிவாவின் தலையில் 'நங்'கென்று ஓங்கிக் குட்டினாள். அவளுக்கு விரல்கள் வலித்தன. அவனுக்கு தலையும், மனமும் வலித்தன.

"அப்படித்தான், இன்னும் ரெண்டு போடு," என்றார் கணக்கு ஆசிரியை.

மூன்றாவது குட்டு மிகவும் வலிக்கவும், "அம்மா!" என்று தலையைப் பிடித்துக் கொண்டு முனகினான் சிவா. எல்லா மாணவர்களும் சிரித்தனர்.

ஆரவாரத்தைக் கேட்டு வராண்டாவில் நடந்து போய்க் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் வகுப்பிற்குள் எட்டிப் பார்த்தார்.

நாற்காலியிலிருந்து எழுந்து கொண்ட கணக்கு ஆசிரியை, "சார், இந்த சிவா பாடத்தை கவனிக்காமல் படம் போடுறேன் என்று கிறுக்கிக் கொண்டிருந்தான். விசாரித்தால் எதிர்த்து பேசுறான், அதான்..." என்றபடி சிவாவின் ஓவிய நோட்டை பவ்யமாக நீட்டினார்.

"இந்த காலத்து பசங்களுக்கு எதுக்கு முக்கியத்துவம் தரதுன்னே தெரியலே! சின்ன வயசிலேயே தறி கெட்டுப் போறானுங்க. நோட்டு என் கிட்டேயே இருக்கட்டும்," என்றவர் வகுப்பை விட்டு வெளியே நடந்தார்.

அந்த நிகழ்ச்சி சிவாவைத் தவிர அனைவராலும் அந்த நிமிடமே மறக்கப்பட்டது. அடுத்து நடத்த இரண்டு வகுப்புகளும் அவன் காதுகளில் பொருளற்ற ஓசையாக ஒலித்தன. வகுப்பில் தனியாக குட்டு வாங்கிய அவமானம். தன் வலியைக் கண்டு பிறர் சிரித்த அவமானம். ஆசிரியரிடம் திட்டு வாங்கிய அவமானம். இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஓவிய நோட்டு பறிபோன துயரம்தான் தாங்க முடியவில்லை.

உணவு இடைவேளையின் போது எல்லோரும் சாப்பிட்டுவிட்டு விளையாடப் போய் விட்டனர். சிவா தனியாக வகுப்பறையில் சோகமே உருவாக உட்கார்ந்திருந்தான். மல்லிகாவையும், ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் எப்படிப் பழி வாங்குவதென்று புரியவில்லை. கோபமும், அதை வெளிப் படுத்த முடியாத பலவீனத்தால் எழுந்த வருத்தமும் அவன் பிஞ்சு முகத்தை வாடச் செய்திருந்தன.

சிவாவை யாரும் கடுமையாக நடத்தியதில்லை. இரணடாவது வகுப்பு படிக்கும்போது அம்மாவிடம் ஒரே ஒரு முறை குட்டு வாங்கி இருக்கிறான். ஏதோ ஒரு பண்டிகை சமயத்தில் சாப்பிடாத தெய்வங்களை திருப்திப்படுத்த நெய் மணக்க அதிரசம் சுட்ட அம்மா, மறுநாள் படையல் முடிந்தபின்தான் அதை சாப்பிடலாம் என்ற சட்டத்தை அமல் படுத்திவிட்டு தூங்கப் போய் விட்டார். அதுவரை பொறுக்க முடியாத சிவா இரண்டு அதிரசங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து சாப்பிட்டு விட்டான். சட்டை மேல் சிந்திக் கொள்ளாமல் சாப்பிட்டிருந்தால் அம்மாவிடம் அகப்பட்டுக் கொண்டிருக்க மாட்டான். பிட்டுண்ட பித்தனான சிவனுக்கு அரசனின் பொற்பிரம்பால் பளீரென்று அடி கிடைத்தது. அகிலத்திற்கே வலித்தது. அதிரசமுண்ட சிறுவனான சிவாவிற்கு அம்மாவின் கையால் நறுக்கென்று குட்டு கிடைத்தது. அவனுக்கு மட்டும் வலித்தது. அதற்கு பின் சிவா யாரிடமும் திட்டோ, குட்டோ வாங்கியதில்லை.

"என்ன தம்பி, ஏன் தனியா உட்கார்ந்திருக்கே? உன் கூட்டாளிங்க எல்லாம் எங்கே? அழறியா என்ன?" வகுப்பை கூட்டிப் பெருக்கும் ஆயாவின் கரிசனமான விசாரிப்பு, அவனது மனவலியை சிறிது கூட்டிப் பெருக்கித் தள்ளியது.

"மல்லிகா கெட்டவள். இன்னிக்கு என் தலையிலே ரொம்ப ரொம்ப வலிக்கிற மாதிரி மூணு தடவை ஓங்கி குட்டினாள்," என்றான் சிவா. சொல்லும்போதே அவமானத்தில் கண்களில் கண்ணீர் ஊறியது.

"ஐயோ பாவம், கொஞ்ச நேரத்திலே சரியாப் போயிடும்," என்று அவனது தலையை கருணையோடு தடவித் தந்த ஆயா, "நம்மளோட பழகுறவங்க எல்லாருமே நல்லவங்கதாம்பா. யாரும் கெட்டவங்க இல்லை. ஒருத்தங்க விடாம நமக்கு நல்லதுதான் பண்ணுவாங்க. நாம உள்ளுக்குள்ளே மத்தவங்க மேல கோவமா இருந்தா, அவங்க நமக்கு கோவமா நல்லது பண்ணுவாங்க. உள்ளுக்குள்ளே அன்பா, சந்தோஷமா இருந்தா நமக்கு சந்தோஷமா நல்லது பண்ணுவாங்க," என்று ஆறுதல் கூறியவாறு தன் முந்தானையால் அவன் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

தலையை ஆட்டினான் சிவா.

ஆயா சம்பந்தனுக்கு ஞானப் பாலூட்டும் உண்ணாமுலையம்மன் என்ற உண்மை அவனுக்கும் தெரியாது, ஆயாவிற்கும் தெரியாது,

மதியம் தமிழ் வகுப்புத் தொடங்குமுன் மல்லிகாவின் அருகே சென்று நின்றான் சிவா. அவன் தன்னோடு சண்டை போட வந்திருக்கிறான் என்று எண்ணத்தில், முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டு மல்லிகா அவனைப் பார்த்தாள். இவர்கள் இருவரும் போடப் போகும் சண்டையைப் பார்க்க சில மாணவ, மாணவிகள் தயாராயினர்.

"உனக்கு சரியா படம் வரைய வராதில்லே? இனிமேலே நான் உனக்கு போட்டுத் தரேன்," என்று சொன்னான் சிவா.

மல்லிகாவின் முகத்தில் இறுக்கம் விலகி மலர்ச்சி தோன்றியது. "காலையிலே நான் வேணுமின்னு குட்டலை. டீச்சருக்கு பயந்துதான் அப்படிப் பண்ணிட்டேன். இன்னும் வலிக்குதா?" என்று கவலையோடு கேட்டாள்.

"அப்பவே வலிக்கலையே," என்று சொன்னான் சிவா.

"என் பக்கத்திலேயே உட்காரேன்," பக்கத்திலிருந்த வேறொரு மாணவனுக்கு இட மாற்ற உத்தரவைக் கொடுத்துவிட்டு, தன்னருகே சிவாவை உட்கார வைத்துக் கொண்டாள் மல்லிகா.

"என் மேல் கோவமா இருக்கியா?" என்று கேட்டாள் மல்லிகா.

"ம்ஹூம்," என்று மறுத்தான் சிவா.

இதே பாணியில் இருவரும் சிறிது நேரம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது மணி அடித்தது. தமிழாசிரியர் உள்ளே நுழைய, கூடவே தலைமை ஆசிரியரும் நுழைந்தார். முப்பது குரல்கள் ஒரு குரலில், "வணக்கம் அய்யா," என்று அவர்களை வரவேற்றன.

"எல்லோரும் உட்காருங்கள்," என்று வகுப்பிலிருந்த ஒரே நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட தலைமை ஆசிரியர் கூற, தமிழாசிரியர் தவிர, அனைவரும் உட்கார்ந்தனர்.

"சிவா," என்றார் தலைமை ஆசிரியர். பயத்துடன் எழுந்து நின்ற சிவாவை அருகே அழைத்து ஓவிய நோட்டை அவன் கைகளில் தந்தார்.

"கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே மல்லிகாவோட அப்பா வந்திருந்தார். யதேச்சையா என் மேஜை மேலே இருந்த உன் படத்தைப் பார்த்தவர் நம்ம பள்ளிக்கூடப் பையனுக்கு இப்படி ஒரு திறமையான்னு பிரமிச்சுப் போய்ட்டார். உன்னை ஆர்ட் ஸ்கூலில் சேர்த்து விட்டு அதுக்கான எல்லா செலவையும் அவரே பார்த்துக்கப் போறாராம். அடுத்த மாசம் பெங்களூரிலே படம் வரையிற போட்டி நடக்கப் போகுது. நம்ம பள்ளிக்கூட சார்பா உன்னை அனுப்பச் சொல்லி இருக்கார். நாளைக்கு உன் அப்பாவை இங்கே வந்து என்னைப் பார்க்கச் சொல்." என்றார் தலைமை ஆசிரியர்.

தலையை ஆட்டினான் சிவா.

"ரொம்ப சந்தோஷம் சார். அவருக்கு தாராள மனசு சார். பணமும், மனமும் சேர்ந்து இருக்கிறது அபூர்வம் சார், " என்றார் தமிழாசிரியர்.

"மல்லிகாவைப் பத்தி விசாரிச்சார். நல்ல சூட்டிகையான பெண். பள்ளி மாணவர் தலைவி வேலையை அபாரமாக பண்ணுகிறாள் என்று ஒரு போடு போட்டேன். அவருக்கு ஒரே சந்தோஷம்," என்றார் தலைமை ஆசிரியர்.

"சார், மல்லிகா வகுப்புத் தலைவிதான்," என்று தயக்கத்துடன் சொன்னார் தமிழாசிரியர்.

"என்னய்யா இது, நான் வாய் தவறி அப்படி சொல்லி விட்டேனே! விஷயம் தெரிந்தால் தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறார்," என்று ஒரு நிமிடம் கவலைப்பட்ட தலைமை ஆசிரியர், "இதென்ன பிரமாதம், மல்லிகா, இன்னிக்கிருந்து நீதான் பள்ளித் தலைவி. அப்பாகிட்டே மறக்காமே சொல்லிடணும், தெரியுதா?" என்றார்.

"சரி சார். ஆனால் நான் யாரையும் குட்ட மாட்டேன்," எனறாள் எழுந்து நின்ற மல்லிகா.

எல்லோரும் சிரித்தார்கள்.

அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று சிவாவிற்குப் புரியவில்லை. பிடிக்கவுமில்லை. ஆனால் "நம்மளோட பழகுறவங்க எல்லாருமே நல்லவங்கதாம்பா. யாரும் கெட்டவங்க இல்லை. ஒருத்தங்க விடாம நமக்கு நல்லதுதான் பண்ணுவாங்க. நாம உள்ளுக்குள்ளே மத்தவங்க மேல கோவமா இருந்தா, அவங்க நமக்கு கோவமா நல்லது பண்ணுவாங்க. உள்ளுக்குள்ளே அன்பா, சந்தோஷமா இருந்தா நமக்கு சந்தோஷமா நல்லது பண்ணுவாங்க," என்ற ஆயாவின் வாக்கு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

(முற்றும்)
 

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms