எதிர் வீடு

நேர்மையாகவும், உண்மையாகவும், விசுவாசமாகவும் இருந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கம்பெனிக்காக கடுமையாக உழைத்ததில் நான் பெற்ற பலன், மாத சம்பளமும், மனக்கசப்புமே. என்னை விட பத்து வயது குறைந்தவர்கள் எல்லாம் டெல்லியிலும், மும்பையிலும், பெரிய பதவியில் இருக்கும் போது, நான் மட்டும் ஒரே பதவியில் பதினாறு வருடங்களாக இருக்கிறேன். இதையேதான் நான் டெல்லியிலிருக்கும் கம்பெனி தலைமை அலுவலகத்திலிருந்து நான் வேலை பார்க்கும் கிளைக்கு தணிக்கைக்காக வந்திருந்த என் நெருங்கிய நண்பரான பரந்தாமனிடமும் சொன்னேன்.

ஒரு மாலை நேரத்தில் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று என் ஆதங்கத்தை அவரிடம் வார்த்தைகளாகக் கொட்டினேன். "பரந்தாமன் சார், நம் கம்பெனியில் இருக்கும் எல்லோரையும் விட அனுபவத்தில் மூத்த அதிகாரி நான்தான். எனக்கு இன்னும் இரண்டு பதவி உயர்வுகள் வர வேண்டும். அவை எனக்கு நியாயமாக வர வேண்டியவைதானே? நான் சம்பள உயர்வுக்கோ, பிற வசதிகளுக்கோ ஆசைப்பட்டு இதைச் சொல்லவில்லை. எனக்கும் ஐம்பத்தேழு வயதாகி விட்டது. கம்பனி கடமைகளில் ஒரு குறையும் வைத்ததில்லை. குடும்பக் கடமைகள் எல்லாவற்றையும் நல்லபடியாக முடித்து விட்டேன். இனி எனக்கு வேண்டியது என்ன? மரியாதையும், கௌரவமும்தானே? உண்மையான உழைப்பிற்கு மரியாதை தரவில்லை என்றால் இந்த கம்பெனி எப்படி உருப்படும்?"

"ஆடிட்டர் சார், நீங்கள் சொல்வதெல்லாம் வாஸ்தவமான பேச்சு. கம்பெனி சிறியதாக இருந்தபோது எல்லாமே ஒரு கட்டுப்பாட்டில் இருந்தது. மிகவும் பெரியதாக வளர்ந்த பின் ஒழுங்கு முறை சரி இல்லாமல் போய் விட்டது. இப்போதெல்லாம் கடமையைச் சரியாகச் செய்தால் மட்டும் பதவி உயர்வு வந்து விடுவதில்லை. தலைமை அலுவலகத்தில் இருக்கும் எல்லோருடனும் சுமுகமான உறவு வைத்திருக்க வேண்டும். உங்களுக்கோ மனிதர்களோடு பழகத் தெரியவில்லை. மனிதர்கள் சரியானவர்களோ, தவறானவர்களோ, நமக்கு அவர்களது உணர்வுகளை மதிக்கத் தெரிய வேண்டும். அந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் மட்டுதான்," என்று பரந்தாமன் உரிமையோடு சொன்னார்.

"இத்தனை வயதிற்கு அப்புறம் நான் மாறுவது என்பது கஷ்டமான காரியம்," என்று பெருமூச்சு விட்டேன்.

"மாற மனம்தான் வேண்டும். வயது பிரச்சனை இல்லை. நான் இன்றே நம் மேனேஜிங் டைரக்டரிடம் போனில் பேசுகிறேன். அவர் என்னைத் தவறாக நினைத்தாலும் சரி, உங்கள் பிரச்சனை பற்றிப் பேசி விடுகிறேன்," என்றார் பரந்தாமன்.

"உங்களுக்கு ஏன் சார், வீண் பொல்லாப்பு?" என்றேன்.

"இது கூட பண்ணவில்லை என்றால் நட்பு என்பதற்கு என்ன அர்த்தம்? நான் வெகு காலத்திற்கு முன்பே இதைப் பண்ணி இருக்க வேண்டும். சீனியர் ஆடிட்டர் பதவியைத்தானே கேட்கப் போகிறோம்? அவருடைய மேனேஜிங் டைரக்டர் பதவியையா பறிக்கப் போகிறோம்? ஆடிட்டர் சார். உங்கள் பதவி உயர்வு பற்றிய என் தனிப்பட்ட கருத்துக்களை உங்களுக்குச் சொல்லலாமா? " என்று கேட்டார் பரந்தாமன்.

"அதற்கென்ன தயக்கம்?" என்றேன்.

"நமக்கு நடப்பதெல்லாம் நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் இவற்றின் எதிரொலிதான் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டுதானே?" என்று கேட்டார் பரந்தாமன்.

"பல வருடங்களுக்கு முன் உங்களோடு பழக ஆரம்பித்ததில் இருந்து அந்த நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றேன்.

"நாம் வாழ்வது கண்ணுக்குத் தெரியாத பெரிய சாம்பியனோடு செஸ் விளையாடுவது போன்றது. விளையாட்டின் சட்டங்கள் தெரிந்தால் ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்கலாம். சட்டம் தெரியவில்லை என்றால் விளையாடவே முடியாது, அல்லது ஓயாமல் தோற்றுக் கொண்டே இருப்போம். சாம்பியன் இரக்கப்பட்டு நம்மை ஓரிரண்டு முறை ஜெயிக்க விட்டால் அது நம் அதிர்ஷ்டம்," என்றார் பரந்தாமன்.

"உண்மைதான் சார்," என்றேன்.

"வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான சட்டங்கள் உண்டு. ஒவ்வொரு வினாடியும் அந்த சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வாழ்கிறோம் என்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சதுரங்கத்தில் ஒவ்வொரு காயையும் ஒரு விதமாகத்தான் நகர்த்த முடியும் என்பது போல ஒவ்வொரு பிரச்சனையையும் ஒவ்வொரு வகையான சட்டத்தின் மூலம்தான் தீர்க்க முடியும். எதைத் தொட்டால் எது நகரும் என்பதைப் புரிந்து கொண்டால், நமக்கு கட்டுப்பட்ட காரியத்தைச் செய்வதன் மூலம், கட்டுப்படாத காரியத்தை செய்து முடிக்கலாம். முரண்டு பிடிக்கும் மாட்டை அடக்கி இழுப்பது கஷ்டம். ஒரு கன்று குட்டியையோ, அல்லது அது போன்ற பொம்மையையோ காட்டினால் மாடு நம் பின்னால் தானாகவே வரும்," என்றார் பரந்தாமன்.

"புரிகிறது பரந்தாமன் சார், எங்கள் ஊரில் ஜட்கா வண்டி குதிரை ஓடவில்லை என்றால் வண்டிக்காரன் குதிரையை அடித்து கஷ்டப்படுத்தமாட்டான். வண்டிக்காரன் வண்டியில் உட்கார்ந்து கொண்டு, ஒரு நீளமான குச்சியில் கொள்ளைக் கட்டி, கொள் குதிரையின் கண்ணுக்குத் தெரியும்படி குச்சியை முன்னால் நீட்டுவான். அதை சாப்பிட குதிரை முன்னால் நகர்ந்து வரும். வண்டி நகரும். குச்சியும் நகரும். போக வேண்டிய இடத்திற்கு போய் சேரும் வரை குச்சியும், கொள்ளும், குதிரையும், வண்டியும். நகர்ந்து கொண்டே இருக்கும்!" என்றேன்.

"நாம் பாமரர்கள் என்று நினைக்கும் நம் கிராமத்து மக்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நடைமுறை சூட்சும ஞானம் அதிகமாக உண்டு. நம்மைப் போன்றவர்கள் படித்துப் பட்டம் வாங்குகிறேன் என்ற பெயரில் தானாகவே நமக்குள் ஊறும் ஞானத்தைத் மறந்து விட்டு, அறிவாளிகளாகி விட்டோம் என்று அசட்டுத்தனமாக நினைத்துக் கொள்கிறோம்," என்றார் பரந்தாமன்.

"ஞானத்தைத் தொலைத்து தலை முழுகி விட்டதால், என் பதவி உயர்விற்கு சிபாரிசு கேட்பதுதான் வாழ்வின் சட்டமா?" சிறிது கசப்புடன் கேட்டேன்.

"மறந்ததை தொலைந்தது என்று நினைக்கக்கூடாது. நீங்கள் சொல்லுவது ஒரு வகையான வாழ்வின் சட்டம்தான். ஆனால் அதை விட உயர்ந்த, தவறாமல் பலன் தரக் கூடிய பலமான சட்டங்கள் உண்டு. எந்தக் காரியத்திலும் உடல், உணர்வு, மனம் என்று மூன்று பகுதிகள் இருக்கும். அவற்றில் எந்த குறையும், தடையும் இல்லாவிட்டால் நாம் யாரையும் கெஞ்சாமல் காரியம் கூடி வரும்," என்றார் பரந்தாமன்.

"என் வேலையில் நான் ஒரு குறையும் வைக்கவில்லையே!" என்றேன்.

"நம் கம்பெனியில் தணிக்கை பற்றிய அதிகபட்ச அறிவு ஆடிட்டரான உங்களுக்குத்தான் உண்டு. நீங்கள் செய்த வேலையில் இது வரையிலும் ஒரு சின்ன குறை கூட வந்ததில்லை. சட்டதிட்டங்களை எந்த வகையிலும் மீறாதவர் நீங்கள். மனத்திலும், உடலிலும் தடை இருப்பது போல் தெரியவில்லை. உணர்வுகளில் ஏதேனும் விட்டுப் போய் இருக்குமோ என்று தோன்றுகிறது," என்றார் பரந்தாமன்.

"கொஞ்சம் வெளிப்படையாகத்தான் சொல்லுங்களேன். இலைமறை காயாகச் சொன்னால் எனக்குப் புரியாது," என்றேன்.

"பதவி உயர்வு வந்தால் டெல்லிக்குப் போக வேண்டும். இங்கே நீங்கள் கிளைத் தலைவர். டெல்லியில் அப்படி இருக்க முடியாது. பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க வேண்டும். அதை பற்றிய ஏதாவது சங்கடம் உண்டா உங்களுக்கு?"

"இல்லை. கம்பெனியின் அமைப்பு அப்படி இருக்கும்போது அதை பற்றி ஒரு சங்கடமும் இல்லை," என்றேன்.

"ஹிந்தி தெரியாமல் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம்?" என்று கேட்டார் பரந்தாமன்.

"நான் பள்ளியில் படிக்கும் போதே ஹிந்தியில் பரீட்சை எழுதி பாஸ் செய்திருக்கிறேனே!" சிறிது பெருமிதத்தோடு சொன்னேன். ஆனால் இப்போது எல்லாமே மறந்து விட்டது. பழைய புத்தகங்ககளைப் புரட்டிப் பார்த்தால் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து விடாதா?

"சொந்த வீட்டை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலை? " என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் பரந்தாமன்.

"குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து விட்டேன். வேலை பார்க்கிறார்கள். மூத்த பையன் வீட்டைப் பார்த்துக் கொள்வான். 'டெல்லிக்கு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னாலே போதும் என் மனைவி மூட்டை கட்ட ஆரம்பித்து விடுவாள்," என்றேன்.

"நீங்கள் அதிர்ஷ்ட சாலி, என் மனைவி நான் எதைச் சொன்னாலும் அதற்கு நேர் எதிராகத்தான் பேசுவாள்," என்று சிரித்தார் பரந்தாமன்.

"அப்படித்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்ப வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும்," என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. பரந்தாமன் வாங்கித் தந்த பாதாம் அல்வாவையும், மசாலா டீயையும் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்குக் கிளம்பினேன். பரந்தாமன் தங்கியிருந்த விருந்தினர் விடுதியிலிருந்து என் வீட்டிற்கு இருபது நிமிடத்தில் நடந்து விடலாம். உடம்பிற்கு நல்லது. வாடகை வண்டிச் செலவு மிச்சம்! தினமும் உடற் பயிற்சி முறையாக செய்யாத சோம்பேறிகள் வழக்கமாகத் தரும் விளக்கம்.

வாழ்வின் சட்டங்களைப் பற்றி யோசித்துக் கொண்டே என் வீடு இருக்கும் தெருவில் திரும்பும்போது எதிரே மாலா வந்தாள். என் வீட்டிற்கு எதிர் வீடு. அவளுக்கும் என்னைப் போலவே அறுபதை நெருங்கும் வயது என்றாலும், கல்யாணம், காட்சி, குழந்தைகள் என்று எதுவுமில்லாமல் இருப்பதால் தோற்றத்தைப் பார்த்தால் அதிகபட்சம் ஐம்பது என்றுதான் சொல்ல முடியும். "கைப் படாத ரோஜா எப்படிக் கசங்கும்?" என்று என் மனைவி சிலசமயம் பொறாமைப்படுவதுண்டு. கல்யாணம் ஆகி இருந்தால் என்னைப் போலவே அவளுக்கும் பேரன், பேத்தி, இரத்தக் கொதிப்பு, கடன் தொல்லை எல்லாம் இருந்திருக்கும்.

மாலா முகம் மலர்ந்து அன்புடன் புன்னகைத்தாள்.

"கோவிலுக்கா?" என்று கேட்டேன்.

"ஆமாம். இன்று சிவராத்திரி. சிவன் கோவிலில் பூஜை விசேஷமாக இருக்கும். உங்களுக்குத்தான் அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே!" என்று சிரித்தபடி கூறினாள்.

"நம்பிக்கை இருக்கிறது. இதை விட உயர்ந்தது என்று வேறு நம்பிக்கைகளை, விஷயங்களை ஏற்றுக் கொண்டதால் கோவிலையும், பூஜையும் விட்டு விட்டேன். ஆனால் நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓயாமல் சிலர் பிரார்த்தனை செய்து கொண்டால் அதை நான் தடுப்பதில்லை. பல வருஷங்களாக எனக்குப் பதவி உயர்வு வரவில்லை. அதற்கும் சேர்த்து வேண்டிக் கொண்டால் நன்றாக இருக்கும்," என்றேன்.

"அதைவிட வேறு என்ன முக்கியமான வேலை எனக்கு இருக்கப் போகிறது?" என்று மெல்லிய குரலில் சொன்ன மாலா விடை பெற்றுக் கொண்டாள்.

அந்த இருள் சூழ்ந்த மாலை நேரம் திடீரென்று நடுப்பகலாகிவிட்டது போல ஒரு பிரமை. ஆணின் இருளுக்குப் பெண்ணின் அன்புதான் ஒளியா? மாலாவின் அன்பு அவளிடமிருந்து எந்த எதிர்பார்ப்புமின்றி எத்தனையோ வருடங்களாக எனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது எனது அதிர்ஷ்டமா, அவளது துரதிர்ஷ்டமா?

நாற்பது வருடங்களுக்கு முன் என்னோடு கல்லூரியில் படித்த எதிர் வீட்டு மாலாவை நானும், பிற மாணவர்களும் நெஞ்சாரக் காதலிக்க எத்தனையோ காரணங்களுண்டு. ஆனால் எதைக் கண்டு அவள் என்னைக் காதலித்தாள் என்பது இன்று வரையிலும் எனக்குப் புரியாத புதிர்தான். அதைவிடப் பெரிய புதிர், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் மேல் பழியைப் போட்டுவிட்டு அவள் காதலைத் துறந்து வேறொரு பெண்ணை மணந்து கொண்ட என் மனம்! மாலா கல்யாணம் செய்து கொள்ளவில்லை. எப்போதும் போல எதிர்வீட்டில் இருக்கிறாள். எப்போதும் போல மாறாத அன்புடன் இருக்கிறாள். எதிர்பாராமல் வழியில் சந்தித்துக் கொண்டால் இன்று போல ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வதுண்டு. அது தரும் நிறைவு வேறெதிலும் எனக்குக் கிடைப்பதில்லை.

அதைத் தவிர எல்லைகளை மீறும் தைரியம் இதுவரை எனக்கு வரவில்லை. எது எல்லைக் கோடு? நான் நினைப்பதுவா? பிறர் நினைப்பதுவா? யார் போட்ட எல்லைக் கோடு இது? ஏன் இதை மீறத் தயங்குகிறேன்? என் வாழ்க்கையை நான்தானே நிர்ணயிக்க வேண்டும்? என் வாழ்வின் மர்மத்தை நான்தானே உடைத்து உண்மையின் தரிசனத்தைப் பெற வேண்டும்?

கோபுர தரிசனம் பாப விமோசனம். எனக்கு மாலாவின் வீடுதான் கோபுரம். எதிர் வீடு என்பதால் பெண் தெய்வத்தின் தரிசனமும் தினசரி கிடைக்கும். அவள் தினமும் என்னையும், என் குடும்பத்தினரையும் பார்ப்பதால்தான், எந்தக் குறையுமின்றி எல்லாம் நன்றாக நடப்பதாக எனக்கோர் இரகசியமான நம்பிக்கை உண்டு. மூட நம்பிக்கை என்று பிறர் நினைத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. இந்த நாற்பது வருடங்களில் நான் வெளியூர் போன நாட்களைத் தவிர வேறெந்த நாளும் அவளது கருணை வழியும் முகத்தை பார்க்கத் தவறியதில்லை. தினமும் ஒரு முறையாவது மாலாவைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே!

எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும்?

இதுதான். இதுவேதான்.

இதுதான் என் பதவி உயர்விற்குத் தடையா? மாலா தடையா? இல்லையில்லை. அவள் தடையில்லை. அவள் தடைகளை நீக்குபவள்! மாலாவை தினமும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்ற என் ஆசைதான் தடையா? பதவி உயர்வோடு இட மாற்ற உத்தரவு வந்தால் மாலாவை தினமும் பார்க்க முடியாதே என்ற என் இரகசியத் தவிப்புதான் தடையா? என் உள்ளுக்குள் நானே அறியாமல் சுடர் விடும் அதிக பட்ச ஆர்வத்தைத்தானே இத்தனை காலமாக வாழ்க்கை நிறைவேற்றித் தந்தது? அதற்காக சந்தோஷப்படாமல் ஏன் இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்?

'ஆடிட்டர் சார். உங்களுக்கு பதவி உயர்வு வேண்டுமா? இல்லை தினசரி மாலாவின் தரிசனம் வேண்டுமா?' உள்மனம் சிரித்தது.

தெளிவு பிறந்தது. 'யாருக்கு வேண்டும் பதவி உயர்வு?'

பதவியின் மீதிருந்த பற்று சட்டென்று மறைய, மனத்திலிருந்த பாரம் விலகி நான் இலேசானது போன்ற உணர்வு. ஒய்வு பெறப் போகும் வயதில் இளமை திரும்பியது போன்ற இனிய உணர்வோடு வீட்டிற்குள் நுழையும் போது போன் அழைத்தது.

"ஆடிட்டர் சார், நான் உங்களிடம் சொன்னபடி மேனேஜிங் டைரக்டரிடம் பேசினேன். அந்தரங்கமாக ஒரு செய்தியைச் சொன்னார். யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அடுத்த மாதம் நம் கம்பெனியை நான்கைந்து கம்பெனிகளாகப் பிரிக்கப் போகிறார்களாம். ஒவ்வொரு கிளையும் ஒரு தனி கம்பெனி ஆகப் போகிறது. அந்தந்த கிளையில் இருக்கும் மூத்த அதிகாரியை மேனேஜிங் டைரக்டர் ஆக்கி விடப் போகிறார்களாம். இந்த ஊர் கம்பெனிக்கு நீங்கள்தான் மேனேஜிங் டைரக்டர்..." பரந்தாமன் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனார்.

(முற்றும்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms