டாக்டர் சம்பையா

டெல்லியில் வெளிநாட்டு வங்கி ஒன்றில் துணை மேனேஜராக வேலை பார்க்கும் இருபத்தியெட்டு வயது அமலா ஒரு மாத விடுமுறையில் சென்னைக்கு வந்து என்னோடு தங்கி இருந்தாள். நானும் ஒரு மாதம் என் சொந்த அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு அவளோடு பேசுவது ஒன்றையே என் வாழ்வின் அப்போதைய குறிக்கோளாகக் கொண்டிருந்தேன்.

அவள் சென்னைக்கு வந்த மூன்றாவது நாள் என் கால்களில் முட்டிக்குக் கீழே தோல் பல இடங்களில் கறுத்திருப்பதை கவனித்து விட்டுப் பதறிப் போனாள். உடனே அவள் அப்பாவிடம் போனில் பேசி தோல் வியாதி நிபுணர் ஒருவரின் விலாசத்தை வாங்கியவள், கையோடு என்னை அவரிடம் அழைத்துக் கொண்டு சென்றாள்.

யாருமே இல்லாமல் தனியாக ஒரு சிறிய இருட்டறையில் உட்கார்ந்திருந்த தோல் வியாதி நிபுணர் டாக்டர். சம்பையாவின் முன்னால் நானும், அமலாவும் நின்றோம். டாக்டர் வெள்ளை நிறத்தில் கை வைத்த பனியன் போட்டுக் கொண்டு மேஜை விளக்கு வெளிச்சத்தில் தடிமனான மருத்துவப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.

டாக்டர். சம்பையா தன் தலையைத் தூக்கி மூக்கின் நுனியில் தொற்றிக் கொண்டிருந்த கண்ணாடி வழியாக 'ஏண்டாப்பா நான் புத்தகம் படிப்பதை தொந்தரவு செய்கிறாய்?' என்பது போல என்னைப் பார்த்தார். என் பின்னால் நின்று கொண்டிருந்த அமலாவை ஒரு முறை பார்த்தார். "யாருக்கு பிரச்சனை?" என்று கேட்டார்.

"எனக்குத்தான் சார். என் பெயர் சந்துரு," என்றேன்.

"அப்படியா? இந்த ஸ்டூலில் உட்காரப்பா," என்றவர், அமலாவைப் பார்த்து, "பாப்பா, அந்த விளக்கையும், பேனையும் போடம்மா," என்று உத்தரவிட்டார்.

"பாப்பா யார்? உன் சம்சாரமா?" என்று கேட்டார்.

"இல்லை சார்," என்றேன்.

"உன் தங்கையா?" என்று கேட்டார்.

"சேச்சே, இல்லை சார்," என்றேன்.

"அதுவுமில்லையா? ம்ம், சரி, உனக்கு என்ன தொந்தரவு?" என்று கேட்டார்.

"அதாவது சார், அது வந்து சார், காலில் தோல் மீது கறுப்பாக திட்டு திட்டாக இருக்கிறது. சில சமயம் அரிக்கிறது," என்றேன்.

"கால் சட்டையை கழற்று," என்றார். அமலா சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"வேண்டாம் சார், முழங்காலுக்குக் கீழே மட்டும்தான் இருக்கிறது," என்றவாறு முழங்கால் வரை கால்சட்டையை தூக்கி விட்டேன்.

சற்று நேரம் அந்த கறுப்பு திட்டுகளை உற்றுப் பார்த்தவர், "எத்தனை நாட்களாக இருக்கிறது?" என்று கேட்டார்.

"கொஞ்சம் நாட்களாகத்தான்," என்று நான் கூற, அமலா "ஆறு மாதங்களாக இருக்கிறது," என்று குறுக்கிட்டு மறுத்தாள். எரிச்சலுடன் அவளைப் பார்த்து முறைத்தேன். என் எரிச்சலை அவர்கள் இருவருமே சட்டை செய்யவில்லை.

"அரை வருஷமாக என்னென்ன மருந்துகள் போட்டாய்? இங்கே எப்படி வந்தாய்?" என்று கேட்டார்.

அமலா முந்திக் கொண்டாள். "இவர் எந்த விஷயத்தையும் யாரிடமும் சொல்ல மாட்டார். பிரச்சனை வளர்ந்து சிக்கலாகும் வரை ஒன்றும் செய்யமாட்டார். தோல் பிரச்சனையையும் அதே போல வளர விட்டுவிட்டார். நீங்களே பாருங்கள் சார், எவ்வளவு மோசமாக இருக்கிறது! நான்தான் உங்களைப் பற்றி சொல்லி இங்கே கூட்டி வந்தேன். உங்களைப் பற்றி என் அப்பா நிறைய சொல்லி இருக்கிறார். இவருக்கு மருந்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் உங்களைப் பார்த்தால் சரியாகி விடும் என்று நான்தான் கூட்டிக்கொண்டு வந்தேன்," என்று ஆதங்கத்துடன் சொன்னாள் அமலா.

"ஏம்பா, சுத்தமான இடத்தில்தானே வேலை பார்க்கிறாய்?" என்று கேட்டார்.

"நான் ஆடிட்டர். என் அலுவலகம் மிகவும் சுத்தமாக இருக்கும். நானும் எப்போதும் சுத்தமாகத்தான் இருப்பேன்," என்றேன்.

"சரி, உன் குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜியோ, அல்லது இதே மாதிரி பிரச்சினையோ உண்டா?" என்று கேட்டார்.

"இல்லை சார்," என்றேன்.

"அந்த மாதிரி இடங்களுக்கு போகும் பழக்கமுண்டா?" என்று கேட்டார்.

"எந்த மாதிரி இடங்களுக்கு?" என்று புரியாமல் கேட்டேன்.

"அதுதாம்பா, சிவப்பு விளக்கு என்பார்களே! அங்கே போனால் இந்த மாதிரி சீக்கெல்லாம் வரும்," என்றார் டாக்டர்.

"பாவம் சார், இவருக்கு போக்குவரத்து சிக்னலில் இருக்கும் சிவப்பு விளக்கு தவிர வேறு எதுவும் தெரியாது. பேச்சுதான் கொஞ்சம் கூடுதலாக முன்னே பின்னே இருக்கும். மற்றபடி இவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது," என்று எனக்காகப் பரிந்து பேசினாள் அமலா.

"உனக்கு இந்த மாதிரி தோல் வியாதி உண்டா?" என்று அமலாவைப் பார்த்துக் கேட்டார்.

களுக்கென்று சிரித்தாள் அமலா. "எனக்கு இல்லை. எங்கள் இருவருக்கும் இடையில் அப்படிப்பட்ட பழக்கவழக்கம் இல்லை," என்றாள். எனக்கு விஷயத்தைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. மீண்டும் மூண்ட எரிச்சலால் முகம் சிறிது சிணுங்கியது.

"உன்னைப் பார்த்தால் நல்ல பெண்ணாகத் தெரிகிறது, இவரைப் பார்த்தால் கொஞ்சம் விவகாரப்பட்ட ஆள் போலிருக்கிறார். அதனால்தான் கேட்டேன்," என்றவர், "பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. நான் சொல்வது போல் செய்தால் நான்கு நாட்களில் சரியாகி விடும்," என்றார்.

"தோல் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை எதுவும் பண்ண வேண்டியதில்லையா?" என்று கேட்டேன்.

"நீ டாக்டரா, நான் டாக்டரா?" என்று கேட்டவாறு ஒரு காகிதத்தில் எதையோ எழுதி நீட்டினார் டாக்டர் சம்பையா.

'எரிச்சலை தவிர்க்கவும், இனிமையாக இருக்கவும்,' என்று எழுதியிருந்தது.

"மருந்து?" என்று கேட்டேன்.

"அதுதான் மருந்து," என்றார்.

"புரியவில்லை சார்," என்றேன்.

"வியாதிகளை மருந்து, அறுவை சிகிச்சை, பிரார்த்தனை, மந்திரம், பரிகாரம் என்று எத்தனையோ வழிகளில் தீர்க்கலாம். அலோபதி டாக்டரைக் கேட்டால், அலோபதியைத் தவிர வேறு எதையும் காதில் போட்டுக் கொள்ளமாட்டார். நாட்டு வைத்தியர் அலோபதி டாக்டரைப் பார்த்தால் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். யோகிகள் மருந்து மனிதனின் அறியாமை என்பார்கள். நோயாளிதான் பாவம், இந்த சண்டைகளைப் பற்றி அவருக்கு என்ன கவலை? அவருக்கு நோய் தீருவதுதானே முக்கியம்?" என்று கேட்டார் டாக்டர்.

"சார், நீங்கள் இலண்டனில் முப்பது வருஷங்கள் வேலை பார்த்தவர். உங்களுக்கு அலோபதியைத் தவிர மற்ற முறைகளில் கூட நம்பிக்கை உண்டா என்ன!" என்று ஆச்சரியப்பட்டாள் அமலா.

"என்னிடம் வரும் நோயாளிகளின் கஷ்டம் நிச்சயமாகத் தீருமென்றால் நான் எதை வேண்டுமானாலும் நம்புவேன். என்னைப் பொறுத்த வரை நோயாளியின் கஷ்டத்தை எந்த வழிமுறை தீர்க்கிறதோ அதுதான் அறிவு. மனித அறிவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நாம் அறிவு என்று நம்புவது நாற்பது வருஷங்கள் கழித்து அபத்தமாகத் தோன்றுகிறது. வழிமுறை அபத்தமா இல்லையா என்பது ஆளுக்காள் மாறும்," என்றார் டாக்டர்.

"எந்த வழிமுறை பலிக்கும் என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள், சார்?" என்று கேட்டேன்.

"கவனமாக இருக்க வேண்டிய இடம் அதுதான். உடல் தன்னைத் தானே குணப்படுத்தி கொள்ள கூடியது. நம் சந்தேகங்கள்தான் அதற்கு எதிரி. உடம்பு விஷயத்தில் நீக்குபோக்காக இருக்க வேண்டும். பிடிவாதமோ, முரட்டுத்தனமோ இருக்கக் கூடாது. நம் மனதில் சில எண்ணங்கள் இருக்கும். உணர்வில் சில பிடிவாதங்கள் இருக்கும். அதையெல்லாம் பொருத்துதான் சிகிச்சை முறையை தீர்மானிக்க வேண்டும்." என்றார் டாக்டர்.

"நாம் என்ன நினைத்தால் என்ன? நம்பினால் என்ன? மருந்து சாப்பிட்டால் குணமாகாதா?" என்று கேட்டாள் அமலா.

"மருந்து மட்டுமே குணப்படுத்தி விடும் என்றால் இப்போது இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில் நோயாளி ஒருவர் கூட உலகத்தில் இருக்கக்கூடாதே? நோய் தீர வேண்டுமானால் நோயாளி ஒத்துழைக்க வேண்டும். தனக்கு நோய் தீர வேண்டும் என்று அவர் நம்ப வேண்டும். ஏம்பா, உனக்கு கால் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?" என்று கேட்டார் டாக்டர்.

"இருக்கிறது சார், ஆனால்..." என்று இழுத்தேன்.

"இந்த ஆனா, ஆவன்னா எல்லாம் என்கிட்டே வேண்டாம்," என்றார் டாக்டர்.

"மறைவான இடத்தில் இருக்கிறது. பெரிய தொந்தரவு ஒன்றும் இல்லை. அதனால் தீருமா இல்லையா என்று நான் யோசித்ததே இல்லை," என்றேன்.

"நோயைப் பற்றி யோசிக்காமல் இருப்பதுவும் நல்லதுதான். யோசித்தால் அதிகமாகி விடும். பல நோய்கள் வெறும் கற்பனையாலும், பயத்தினாலுமே, யோசிப்பதாலுமே வருகின்றன. நம் குணத்தினால் கூட நோய்கள் வரலாம்," என்றார் டாக்டர்.

"மனநோய்களைப் பற்றி சொல்கிறீர்களா?" என்று கேட்டாள் அமலா.

"அவை வேறு ரகம். குணவிஷேசத்தினால் கூட உடலில் நோய்கள் வரலாம். எந்த குணத்தினால் நோய் வரக்கூடுமோ, அந்த குணத்தை மாற்றிக் கொண்டால் நோய் தீர வாய்ப்புண்டு," என்றார் டாக்டர்.

"குணத்தை மாற்ற முயற்சி பண்ணி கொண்டு, மருந்து சாப்பிடாமல் இருந்தால் ஆபத்தில் முடிந்து விடாதோ?" என்று கேட்டாள் அமலா.

"அதனால்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றேன். நம் எல்லோருக்குமே பரம்பரையாக மருந்தில் நம்பிக்கை உண்டு. அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நம் சூழ்நிலையில் எது சிறந்த மருத்துவமோ அதை நமக்கு நம்பிக்கை இருக்கும் அளவிற்கு அவசியம் செய்து கொள்ள வேண்டும். கூடவே ஆபத்தில்லாத வழிமுறைகளையும் செய்து பார்த்தால், நோய் சீக்கிரம் குணமாகி விடும்," என்றார் டாக்டர்.

"எதை ஆபத்தில்லாத வழிமுறை என்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"ஒருவன் அடிபட்டு வலியில் துடிக்கும் போது, மருந்து கொடுத்து வலியைக் குறைக்க வேண்டும். கூடவே பிரார்த்தனை செய் என்று சொல்லலாம். அதை விட்டு விட்டு பிரார்த்தனை செய், மருந்து வேண்டாம் என்று சொல்வது ஆபத்தில் முடியும். உனக்கு தோல் வியாதி குணமாக நீ எந்த அவசரமும் படவில்லை. மருந்திலும் உனக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் குணத்தை மாற்றும் வழியைச் சொன்னேன்," என்றார் டாக்டர்.

"எந்த நோய்க்கு எந்த குணத்தை மாற்ற வேண்டும்?" என்று கேட்டாள் அமலா.

"எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்தால் சர்க்கரை வியாதி அதிகமாகும். பேராசையைக் குறைத்தால் கேன்சர் கட்டுப்படும். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் ஆளைப் பொறுத்துக் ஒரு காரணம் சொல்லலாம். உன் தோல் கறுத்துப் போனதற்கு உன் எரிச்சலும், மனஅழுத்தமும்தான் காரணங்கள்," என்றார் டாக்டர்.

"ஏன் சார், இதையெல்லாம் மற்ற டாக்டர்களிடம் சொல்வீர்களா?" என்று கேட்டேன்.

"அதெப்படி முடியும்? சொன்னால் என் மேல் புகார் கொடுத்து என் டாக்டர் பட்டத்தையே பிடுங்கி விடுவார்கள்! நீயும் வெளியே சொல்லிக் கொள்ளாதே. நம் கூட இருப்பவர்கள் கோணலாக இருந்து அவர்கள் மீது நாம் பிரியம் வைத்தாலோ, இந்த வழிமுறைகளைப் பற்றிப் பேசினாலோ நோய் தீர நாளாகும்," என்றார் டாக்டர்.

"இந்த நோய்க்கு இந்த குணம்தான் காரணம் என்று தெரியாவிட்டால் என்ன செய்வது?" என்று கேட்டாள் அமலா.

"ஏதோ ஒரு குணவிஷேசம்தான் நோய்க்குக் காரணம் என்று வைத்துக்கொண்டு, அதை மாற்றிக் கொள்கிறேன் என்று மனதிற்குள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் என்ன குணம் என்பது மெல்ல புரிந்து விடும் அல்லது நோயே தீர்ந்து விடும்," என்றார் டாக்டர்.

"நீங்கள் சொல்கிறபடி எரிச்சலை மாற்றிக் கொண்டு, இனிமையாக இருந்தால் அதுவே போதும் என்று சொல்கிறீர்களா?" என்று சிறிது தயக்கத்துடன் கேட்டேன்.

"போதும். ஆனால் இந்த மருந்து போதாது என்று உனக்குத் தோன்றினால், தோல் வியாதி பற்றிய நினைப்பு வரும் போதெல்லாம் இந்த பாப்பாவை நினைத்துக் கொள்," என்றார் டாக்டர்.

அமலாவின் முகம் மலர்ந்தது.

"அமலா என்ன கடவுளா?" என்று கேட்டேன்.

"உனக்கு வியாதி குணமாக வேண்டுமென்று எத்தனை ஆர்வமாக இருக்கிறாள்! உன் மேல் நல்லெண்ணம் வைத்திருக்கும் எல்லோரும் உனக்கு கடவுள்தான். அவர்களைப் பற்றி நினைத்தால் எரிச்சல் போய் விடும். நோயும் போய் விடும். பாப்பா போன்றவர்களின் நல்லெண்ணத்தை விட பெரிய மருந்து எதுவுமில்லை," என்றார் டாக்டர்.

"ஏன் சார், இது பலிக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டேன்.

"திரும்பவும் என்னிடம் வா. அலோபதி மருந்து கொடுக்கிறேன்!" என்றவர் பின் திடீரென்று நினைவு வந்தவராக, "பீஸ் ஐம்பது ரூபாய்," என்றார்.

அமலா பணத்தைத் தந்தாள். அதை வாங்கி மேஜை அறையில் போட்டுக் கொண்ட டாக்டர், அமலாவைப் பார்த்து, "பாப்பா, போகும்போது அந்த விளக்கையும், பேனையும் அணைத்து விட்டுப் போய் விடம்மா," என்று கூறிவிட்டு, மேஜை விளக்கின் ஒளியில் மீண்டும் தடிமனான மருத்துவப் புத்தகத்தில் மூழ்கி விட்டார். அவருக்கு வணக்கம் போட்டு விட்டு இருவரும் வெளியே வந்தோம். அவர் கவனித்தாரா என்று தெரியவில்லை.

நான் இப்போது சொல்லப் போவதை நம்புவது உங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்.

மறுநாள் எனக்கு தோல் வியாதி பாதி குணமாகி விட்டது. ஒரு வாரத்திற்குள் முழுவதுமாக சரியாகி விட்டது. அதற்குப் பிறகு தோல் வியாதி எனக்கு வரவே இல்லை. சந்தேகமாக இருந்தால் சாட்சியாக இருந்த அமலாவை வேண்டுமானால் கேட்டுப் பாருங்களேன்.

(முற்றும்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms