தெளிவு

சொந்தமாக சிறிய வியாபார நிறுவனத்தை நடத்தி வரும் ஜானகி  என்ற இளம்பெண் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் என்னை சந்திக்க வந்திருந்தார். 'என் நிறுவனம் பெரிய அளவில் வளர என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார்.  உள்ளுக்குள் படபடப்பும், அவசரமும் இருந்தாலும், அதை வெளிக்காட்டாத அழகிய முகம். மேற்பரப்பில் அமைதியான, தடங்கலற்ற வற்றாத நீரோட்டப் பேச்சு.

எத்தனையோ ஆன்மீகப் புத்தகங்களை படித்திருந்த போதும், பல வருடங்களாக ஆன்மீகவழிகளைப் பின்பற்றிய பின்னும், தான் யார், தன் நிலை என்ன, தான் செய்வது என்ன, இனி என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பவர்களைப் பார்க்கும்போது, எனக்கு அவர்கள் மேல் அனுதாபம் பிறக்கும். எனக்கு தெரிந்ததை எல்லாம் அவர்களுக்குச் சொல்லி, எப்படியாவது அவர்களுக்கு உதவ நினைப்பேன்,

"அகமே புறம்;அகத்தில் சக்தி பெருகினால், புறத்தில் வியாபாரம் வளரும். சக்தியை பெருக்க பல வழிகள் இருந்தாலும், எல்லா உறவுகளிலும் சுமுகத்தை உருவாக்குவது வெற்றிக்குக் குறுக்குவழி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்," என்றேன்.

"என் எந்த உறவிலும் சுமுகம் என்பதே இல்லை. சிறுசிறு விஷயங்களில் கூட மனப்பிணக்குகள் உண்டாகிவிடுகிறன, சுமுகத்தை எப்படி உருவாக்குவது?" என்று கேட்டார் ஜானகி .

"அதைப் பற்றி விரிவாகப் பேசி, உதாரணங்களோடு விளக்கினால்தான் தெளிவு பிறக்கும். உங்களுக்கு நான் பேசுவதை கவனிக்க இப்போது நேரம் இருக்கிறதென்றால் பேசுகிறேன்," என்றேன்,

"காரில் டிரைவரோடு வந்திருக்கிறேன். உங்களுக்கு சிரமம் இல்லை என்றால் இரவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கத் தயாராக இருக்கிறேன், நீங்கள் பேசுவதைக் கேட்க உற்சாகமாக இருக்கிறது," என்றார் அப்பெண்,

இது போதாதா எனக்கு? ஒரு பெண் ஆணைப் பாராட்டிவிட்டால், அதைவிடப் பெரிதாக  அவனுக்கு வேறென்ன வாழ்க்கையில் கிடைத்துவிடப் போகிறது? பிறவிதோறும் பெண்ணின் பாராட்டுக்காக ஆண் ஏங்கி நின்றாலும், பெண் அதை எளிதில் அதைத் தந்துவிட மாட்டாள். பெண்ணால் பாரட்டப்பட்டவன் பாக்கியசாலிதான்,

"மற்ற எல்லா உறவுகளையும்விட கணவன் மனைவி உறவு மிகவும் நெருக்கமானது," என்று ஆரம்பித்தேன்.

"என் சமையலை ஒரே ஒரு முறை கூட என் கணவர் பாராட்டியதில்லை. குறைகள் மட்டுமே கூறி இருக்கிறார்."  என்றார் ஜானகி 

"புரிகிறது. கணவன் மனைவி உறவு சிக்கலானதும்கூட! ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்யக் கூடிய உறவு என்பதால் அதில் எண்ணற்ற சிறிய, பெரிய முரண்பாடுகளும்,  பிணக்குகளும் இருப்பது இயல்பே. எனவே முதல் காரியமாக கணவருடனுள்ள உறவில் சுமுகத்தை உருவாக்க வேண்டும்," என்றேன்,

"சார். என் கணவரைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும்," என்றார் ஜானகி 

நான்  ஜானகி கூற வந்ததை உடனே புரிந்து கொண்டு ஆறுதலாகப் பேசினேன், "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு தெளிவாகப் புரிகிறது. அது எல்லா பெண்களும் தவறாமல் சொல்வதுதான், 'என்னை என் கணவர் புரிந்து கொள்ள மறுக்கிறார். என் அன்பை உதாசீனப்படுத்துகிறார். என் மனமறிந்து நான் ஒரு தவறும் செய்யவில்லை. என்னிடம் எக்குறையும் இருப்பது போலத் தெரியவில்லை. எனக்கு மட்டும் ஏனிந்தக் கஷ்டம்?' என்று கேட்க நினைக்கிறீர்கள். அப்படிக் கேட்பதில் ஒரு தவறுமில்லை. ஆனால் ஆன்மீகவழியில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால். அகமே புறம் என்பதை முதலில் ஏற்க வேண்டும். நெற்றியில் பொட்டு நடுவே இல்லாமல் தள்ளி இருப்பதைக் கண்ணாடியில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் நெற்றியிலுள்ள பொட்டை  நேரடியாக ஒரு போதும் சரி செய்ய முடியாது. நம் நெற்றியில் உள்ள பொட்டை சரி செய்தால், கண்ணாடியிலுள்ள பிம்பம் தானாகவே சரியாகிவிடும். கணவர் கண்ணாடியில் தெரியும் பிம்பம். நீங்கள்தான் அசல். உங்களை சரி செய்து கொண்டால் உங்கள் பிம்பமான கணவரும் தானாகவே சரியாகிவிடுவார்."

"சார், ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்." என்றார் ஜானகி 

"கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிடுகிறேன். இனிய உறவுக்கு இருபது வழிகள் என்று ஒரு சிறிய கட்டுரை இருக்கிறது. அதிலுள்ள வழிகளை புரிந்து கொள்வது எளிதானது. ஆனால் அவற்றை பின்பற்றுவது மிகவும் சிரமமானது. அவற்றில் ஏதேனும் ஒரு கருத்தை இன்றே செயல்படுத்தி பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு கருத்து என்று இருபது நாட்களுக்கு அவற்றை பின்பற்றி பாருங்கள்,"  என்றேன்.
 
அப்பெண் குறுக்கே பேசினார், "சார், இப்படிப்பட்ட வழிகளைப் பின்பற்றுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது."

நான் ஞானப்புன்னகை பூத்தேன். "நாம் செய்ய விரும்பவில்லை என்பதை சில சமயங்களில் சிக்கலானது என்று புரிந்து கொள்கிறோம். இந்த கருத்துக்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்கு இப்போது சொல்கிறேன்,"' என்றேன்.

"அது இருக்கட்டும் சார். நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்..." என்றார் ஜானகி 

"சில சமயங்களில் மிகவும் உன்னதமான கருத்துக்களைப் பற்றி விரிவாகப் பேசும் போது, குறுக்கே பேசினால் சரடு அறுந்து பேச்சு தொடர்பற்று போய்விடும். நீங்கள் சொல்ல வருவதையும், உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் நான் சுமுகத்தைப் பற்றி விளக்கமாக கூறி முடித்த பின் கேட்டுக் கொள்கிறேன். நான் விளக்கமாக பேசிய பின்னும் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா என்பது அப்போது தெரிந்துவிடும்," என்றேன்.

அதன்பின் சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதி, கீதை, திரைப்படம், இலக்கியம் என்ற பலவற்றையும் மேற்கோள் காட்டி சுமுகத்தை விளக்கினேன். அடுத்த ஒரு மணி நேரமும் என்னை மறந்து வேறொரு உலகில் இருந்து பேசினேன்.  பேசி முடித்த பின் புன்னகையோடு அப்பெண்ணிடம் கேட்டேன், 'இப்போது எல்லாம் தெளிவாகி இருக்குமே! சந்தேகம் எதுவுமே இருக்காதே!' என்றேன்.

"ஒரே ஒரு சந்தேகம்  சார், கேட்கட்டுமா?" என்றார் ஜானகி 

"தாராளமாக கேளுங்கள். பதில்களை விட கேள்விகள் முக்கியமானவை," என்றேன்.

"நீங்கள் இல்லற வாழ்வில் சுமுகம் பற்றி பேசியது கருத்துச் செறிவுடன் தெளிவாக இருந்தது. ஆனால் இக்கருத்துக்கள் எனக்கு பயன்படாது என்று நினைக்கிறேன்"' என்றார்.
 
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"நான் என் கணவரை பல வருடங்களுக்கு முன்னால் விவாகரத்து செய்து விட்டு தனியாக அல்லவா இருக்கிறேன்? அதைச் சொல்லத்தான் நான் அப்போதிருந்து முயற்சி செய்கிறேன். எங்கே என்னை சொல்லவிட்டீர்கள்?  நான் சொல்வதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் கணவரோடு எப்படி சுமுக உறவு ஏற்படுத்தவது என்று ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்!" என்றார் ஜானகி 

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் என் பெரிய முட்டை கண்களை உருட்டி உருட்டி விழித்தேன்.

அப்பெண்ணுக்கே சிரிப்பு வந்துவிட்டது.  "போனால் போகிறது, தெரியாமல்தானே பேசினீர்கள்? விடுங்கள், சார்," என்று எனக்கு ஆறுதல் கூறினார்

இப்போதுதான் எனக்கு என்னைப் பற்றி தெளிவாகப் புரிய ஆரம்பித்திருக்கிறது!

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms