அய்யா

மதிய உணவிற்கு ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்த சந்திரகாந்தன் கவலையுடன் இருந்தான். அதற்கான காரணம் அவன் மனைவி பூங்கொடிக்குத் தெரியாவிட்டாலும், கணவன் கவலையுடன் இருந்த ஒரே காரணத்தினால் மனைவியும் கவலையில் ஆழ்ந்தாள். வாடிய பயிரைக் கண்டால் தான் வாடிவிடும் ஆன்மீகப் பரம்பரையில் வந்த இந்திய மனைவியால் கணவனின் கவலையை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்?

‘அவராக எதுவும் சொல்லாமல், காரணத்தைக் கேட்பது அவரை சங்கடப்படுத்திவிடும்,’ என்று நினைத்துக் கொண்டே பூங்கொடி பேச்சு எதுவுமின்றி மதிய உணவைப் பரிமாற ஆரம்பித்தாள். சந்திரகாந்தன் மௌனமாக சாப்பிட்டான்.

தான் வீட்டிற்குள் நுழைத்ததுமே விதவிதமான விஷயங்களை வாய் ஓயாமல் உற்சாகமாக விவரிக்க தொடங்கிவிடும் பூங்கொடியின் அமைதிக்கான காரணம் தன் இறுக்கமே என்பது சந்திரகாந்தனுக்குப் புரிந்தது.

“பூங்கொடி, கவியரசு ஒரு பெண்ணின் சமையலைப் பாராட்ட அவள் கத்திரிக்காய் கூட்டு வைத்தால், கடவுளுக்கே பசியெடுக்கும் என்று கவிதை எழுதினார். நீ அவளை விட மேலானவள். என் பூங்கொடி பீர்க்கங்காய் கூட்டு வைத்தால் பிரம்மத்திற்கே பசியெடுக்கும்,” என்றான் சந்திரகாந்தன்.

கருமேகங்கள் குவிந்து இருண்டிருக்கும் வானத்தில் திடீரென வீசிய காற்றினால் மேகங்கள் சிறிது விலக, அந்த இடைவெளியில் பளிச்சென்று தெரியும் வெளிறிய வானவில் போல் ஒரு புன்முறுவல் அவள் அதரங்களில் மின்னலாகத் தோன்ற, அதனால் அவளது செழித்த கன்னங்கள் சிறிது குழிந்தன.

“போங்கள், என்னைப் பார்த்தாலே உங்களுக்கு கேலி செய்யத்தான் தோன்றுமா?” என்று மேலுக்குப் பூங்கொடி சொன்னாலும், இதேபோல் தன்னைப் பற்றி இன்னும் நாலைந்து கவிதைகள் கணவன் சொன்னால் நன்றாக இருக்குமே என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் சந்திரகாந்தன் கவிதையிலிருந்து மீண்டும் கவலைக்குப் போனான். “பூங்கொடி, எனக்கு அவசரமாக ஐம்பதாயிரம் தேவைப்படுகிறது. அதுவும் ஆறு மணிக்குள் வேண்டும்,” என்றான் சந்திரகாந்தன்.

“எதற்கு?” என்றாள் பூங்கொடி.

“கட்டிட வேலை நடக்கிறதே. அதில் வேலை பார்ப்பவர்களுக்கு சனிக்கிழமைதானே வாரக்கூலி தருகிறோம்? இன்று சனிக்கிழமை. கூலியைக் கொடுக்காவிட்டால் அவனவன் அடிக்க வந்து விடுவான். மானம் போய் விடும்,” என்றான் சந்திரகாந்தன்.

“எப்படியாவது அவர்களுக்கு நாம் பணம் கொடுக்கத்தான் வேண்டும். அவர்கள் பாவம், இந்தப் பணத்தை வாங்கித்தானே குடும்பம் நடத்த வேண்டும்? வங்கியில் பணம் எதுவும் இல்லையா?” என்று கேட்டாள் பூங்கொடி. 

“வங்கியில் நிறைய பணம் இருக்கிறது, நம் கணக்கில்தான் ஒன்றுமில்லை,” என்றான் சந்திரகாந்தன்.

“பல வருடங்களாகக் கணக்கு வைத்திருக்கிறீர்களே, தற்காலிகக் கடன் எதுவும் தர மாட்டார்களா?” என்று கேட்டாள் பூங்கொடி.

“வங்கியில் கடன் வாங்க வழியில்லை. இன்று விடுமுறை. வேலை நாளாக இருந்தாலும் கடன் தருவார்களா என்பது சந்தேகம்தான். அங்கே வேலை பார்ப்பவர்கள் எவரிடமும் ஒழுங்காகப் பழகவில்லை. முன்பே யோசித்து பணம் தயார் பண்ணி இருக்க வேண்டும். எப்படியாவது சமாளித்து விடலாம் என்று அறிவில்லாமல் இருந்து விட்டேன்,” என்றான் சந்திரகாந்தன்.

“இந்த தங்க வளையல்கள் உபயோகப்படுமா?” என்று கேட்டாள் பூங்கொடி.

“கல்யாணமான ஆறாவது மாதமே உன் வளையல்களைத் தவிர மீதி எல்லா நகைகளையும் அடமானம் வைத்து பணம் வாங்கி செலவும் பண்ணிவிட்டேன். அதற்கே வட்டி பாக்கி. இப்போது வளையல்களும் இல்லை என்றால் உன் பாதுகாப்பிற்கு என்ன இருக்கும்?” என்றான் சந்திரகாந்தன்.

“நீங்கள் இருக்கிறீர்களே?” என்றாள் பூங்கொடி.

“மூன்று வளையல்களையும் விற்றால் கூட ஐம்பதாயிரம் கிடைக்காது. அந்தப் பேச்சை விடு,” என்றான் சந்திரகாந்தன்.

“உங்கள் சொந்தக்காரர்கள் எத்தனையோ பேர் வட்டிக்கு பணம் தருகிறார்களே. அவர்களிடம் கேட்கலாமே? அவசரத்திற்குத் தானே கேட்கிறோம்,” என்றாள் பூங்கொடி.

“அதிக வட்டிக்கு பணம் சுலபமாக கிடைக்கும். அழிவும் கூடவே வரும். வங்கி போன்ற இடங்களில் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும். கிடைப்பது கஷ்டம். ஆனால் அதுதான் பயன்படும்,” என்றான் சந்திரகாந்தன்.

“இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் பூங்கொடி.

“அதுதான் எனக்கும் தெரியவில்லை,” என்றான் சந்திரகாந்தன்.

“நீங்கள் தியானம் செய்து வேண்டிக் கொண்டால் என்ன?  உடனே பிரச்சனை தீரும் என்று எல்லோருக்கும் சொல்வீர்களே?” என்றாள் பூங்கொடி.

“அதைத்தான் செய்ய வேண்டும். வேறு வழி?” என்றான் சந்திரகாந்தன்.

பூங்கொடி புன்னகைத்தாள்.

* * * *

மத்தியான நேரம் என்பதால் தியான, பூஜை அறையில் . சந்திரகாந்தன் சுவரோரமாக, மின் விசிறி காற்று நன்றாக வரும்படியான, ஒரு வசதியான இடத்தில் உட்கார்ந்து கொண்டான். அவனெதிரே மிகப் பெரிய இரண்டு படங்கள். ஒன்றில் ஸ்ரீ அரவிந்தர். இன்னொன்றில் அன்னை. கறுப்பு வெள்ளை படங்கள்.

படங்களை உற்றுப் பார்த்த சந்திரகாந்தனுக்கு, “எத்தனையோ தடவை என்னை காப்பாற்றி இருக்கும் இவர்கள் இந்தத் தடவை மட்டும் கைவிட்டு விடுவார்களா என்ன? என்று தோன்றியது.

பின் கண்களை மூடிக் கொண்டு அன்னையின் பெயரை மனத்திற்குள் மெதுவாக மீண்டும் மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.

நிமிடங்கள் வேகமாக ஓடின.

எப்போதும் தியானம் செய்ய ஆரம்பித்தால் ஒரு நிமிடத்திற்குள் மனம் அடங்கி தானே தியானமாக மாறிவிடுவது சந்திரகாந்தனது அனுபவம். ஏனோ அன்று சிதறாத கவனம் பலிக்கவில்லை.

பத்து நிமிடத்திற்கு பின் மனம் தளர ஆரம்பித்தது. ‘ஸ்ரீ அரவிந்தரின் பெயரையும் சேர்த்து அழைக்கலாமா? அவசியமான சமயங்களில் அப்படிச் செய்யலாம் என்று அவரே சொல்லி இருக்கிறாரே!’ என்று தனக்குத் தானே விளக்கம் தந்து கொண்டு சந்திரகாந்தன் இருவர் பெயர்களையும் சேர்த்து சொல்ல ஆரம்பித்தான். ஐந்து நிமிடங்களில் அதுவும் அலுத்து விட்டது. 

‘அட போங்கப்பா, நீங்களும் உங்கள் அழைப்பும்!’ என்று தோன்ற ஆரம்பித்தது.

புதிய எண்ணம் ஒன்று தோன்றியது. ‘ஓம் நமோ பகவதே அல்லது தங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும். என் விருப்பமில்லை என்ற திருமந்திரங்களை சொன்னால் என்ன?’ மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டது. இன்னொரு பத்து நிமிடங்கள் செலவாயின. 

ஒன்றும் நடக்கவில்லை. ஆன்மீக சக்தி அவ்வளவுதானா?

அகத்தைப் பார், மனோபாவத்தை மாற்று, சமர்ப்பணம் செய் என்பனவெல்லாம் சக்தி வாய்ந்தவையாக இருக்கலாம். அவற்றையெல்லாம் செய்தால் நல்லதுதான். ஆனால் அவற்றை செய்ய நேரமாகுமே. அவனுக்கு ஐம்பதாயிரம் அவசரமாக தேவைப்படுகிறதே!

அவன் வராத தியானத்தை செய்ய முயற்சிப்பதை விட்டு விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான், அவனுள் பற்பல எண்ணங்கள் தோன்றின. ‘எங்கோ பிறந்து, ஏதேதோ கனவுகள், லட்சியங்களோடு வளர்ந்து, இங்கே வந்து சேர்ந்து விட்டேனே? எப்படி இங்கே வந்தேன்?’

அவனுடைய பத்து வயதில் ஒருவர் அவனிடம் அன்னையைப் பற்றி விதவிதமாக வர்ணித்து மகிழ்ந்தார். அது அன்னையின் அழைப்பு என்பது புரியவில்லை. பின் ஜோன் ஆப் ஆர்க் பற்றி கட்டுரை எழுத கன்னிமரா நூலகத்தில் புத்தகங்களை தேடிய போது அன்னையின் பதினேழு புத்தகங்களும் ஸ்ரீ அரவிந்தரின் முப்பது புத்தகங்களும் கைகளில் கிடைத்தன. அது அன்னையின் அழைப்பு என்பது அப்போதும் புரியவில்லை. இருபத்தி நான்கு வயதில் அவன் பிரயாணித்த சிதம்பரம் போக வேண்டிய பேருந்து ஏதோ பிரச்சினை காரணமாக பாண்டிச்சேரிக்குப் போய் நின்று விட்டது. உடனே வேறொரு பேருந்து பிடித்து பாண்டிச்சேரியை விட்டு சிதம்பர த்திற்குப் போய்விட்டான். அந்த அழைப்பும் புரியவில்லை. 

அதற்குப்பின் பத்திரிக்கைகளை வாடகைக்குத் தரும் பையன் பக்கத்து வீட்டிற்குத் தர வேண்டிய அமிர்தவர்ஷிணி பத்திரிக்கையை அவன் வீட்டில் தவறுதலாக போட, அதில் அய்யா என்பவர் அன்னையைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்த பின்புதான் ஸ்ரீ அரவிந்தரிடம் வந்தான். 

“இதுவரை அவரை வெறும் எழுத்தாளர் என்று தானே நினைத்தேன்? அவரை ஏன் அன்னையின் தூதர் என்று நினைக்கவில்லை? அவரையே ஏன் அன்னையாகப் பார்க்கவில்லை? மனிதன் நன்றி இல்லாதவன் என்பது என்னைப் பொறுத்த வரை உண்மைதான். பணம் எப்படியோ போகட்டும். அன்னையை வெறும் புகைப்படமாக இதயச் சுவரில் மாட்டி வைத்திருக்கிறேன். இறைவன் நேரடியாக வந்தபோதும், ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மனிதனிடம் இல்லாதபோது, அவன் எற்றுக் கொள்ளும் வகையில் மனித உருவில்தான் இறைவன் வரவேண்டியதாகி விடுகிறது.'

சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தபின் நன்றி உணர்வோடு, ‘அய்யா, அய்யா’ என்று தனக்குள் மெதுவாக நிசப்தமாகக் கூற ஆரம்பித்தான். 

பதினைந்தே வினாடிகளில் அவனது முழு ஜீவனும் இதயத்தில் ஒரு பொன்னிறமான புள்ளியில் குவிந்தது. அப்புள்ளி மொட்டாக மாற, அம்மொட்டின் இதழ்கள் மெல்ல விரிய, மலர்ந்துவிட்ட புஷ்பம் ஒன்று பொன்னொளி வீசியது. தன்னையே உருக்கித் தரும் அப்பொன்னொளியின் அன்பை அவனால் உணர முடிந்தது, அவனது உடலின் ஒவ்வொரு அணுவையும் பொன்னொளியின் அன்பு தீண்டியது, உலர்ந்து, காய்ந்து, காற்றில் சரசரத்துப் பறக்கும் குப்பைச் சருகுகளாக இருந்த அவனது ஜீவனின் எல்லா பகுதிகளும் புத்துயிர் பெற்றன. ஒரு மணி நேரம் வேகமாகக் கரைந்தது, 

அது போன்ற தியானம் அதுவரை அவனுக்கு அமைந்ததில்லை.

* * * *

சந்திரகாந்தன் பூஜை அறையை விட்டு வெளியே வரும்போது வரும் போது மூன்று மணி இருக்கும். கூடத்திற்குள் நுழையும் போதே முருகவேள் நிலைகொள்ளாமல் உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டான்.

சத்தம் கேட்டு வெளியே வந்த உள்ளறையை விட்டு பூங்கொடி, சந்திரகாந்தனை பார்த்ததும், “பாவம் உங்கள் சினேகிதர் அரைமணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார்,” என்றவள் குரலை தாழ்த்திக் கொண்டு, “மிகவும் நல்ல மனிதர். ஏதோ பணகஷ்டம் என்று தோன்றுகிறது. நமக்கு பல தடவை உதவியிருக்கிறார். ஏதாவது உதவி கேட்டால் எப்படியாவது சமாளித்து அதை செய்து விட வேண்டும்,” என்று உத்தரவிடுவது போல் சொன்னாள்.

பூங்கொடியின் ஊகம் சரியாகத்தான் இருந்தது.

“சந்திரா, எனக்கொரு பிரச்சினை. நீதான் உதவ வேண்டும்,” என்று ஆரம்பித்தான் முருகவேள்.

“உன்னை மாதிரி நல்லவர்களுக்கு பிரச்சினையே வராது. வந்தாலும் சரியாகி விடும். என்னவென்று சொல்.” என்றான் சந்திரகாந்தன்.

“உனக்குத்தான் தெரியுமே, என்னுடைய ஒரே வருமானம் எனக்கு வரும் வட்டிப் பணம்தான். ஆறு இலட்சத்தை ஒன்றரை வட்டிக்கு விட்டதில் மாதம் ஒன்பதாயிரம் வருகிறது. அதை வைத்துத்தான் என் பிழைப்பே நடக்கிறது. நாணயமானவர்கள் என்று நம்பி மூன்று பேர்களிடம் ஆளுக்கு இரண்டு இலட்சம் கொடுத்திருந்தேன். அதில் ஒருவன் இன்று காலை வாரி விட்டுவிட்டான்,” என்று வேகமாக பேசினான் முருகவேள்.

“விவரத்தை நிதானமாக சொல்லப்பா,” என்றான் சந்திரகாந்தன்.

“நான்கு வருடகாலத்திற்குக் கடன் வேண்டும். மாதாமாதம் வட்டி தருகிறேன் என்று போன வருடம் என்னிடம் இரண்டு இலட்சம் வாங்கிப் போன மூர்த்தி இன்று மத்தியானம் வந்தான். பூர்வீக சொத்து விற்றதில் பணம் வந்தது என்று இரண்டு இலட்சத்தை ரொக்கமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டான். என்ன அநியாயம்!” என்றான் முருகவேள்.

“இதில் என்ன அநியாயம்? கொடுத்த கடன் திரும்பி வருவது நல்லதுதானே?” என்றான் சந்திரகாந்தன்.

“என்ன நல்லதை கண்டாய்? கடன் தருபவனுக்கு வட்டி மட்டும் தவறாமல் வர வேண்டும். அசல் வரக்கூடாது அதுதான் நல்லது. .இன்று மாலை நான் குடும்பத்தோடு கல்கத்தா போகிறேன். திரும்பி வர பல வாரங்களாகும். ஒரு சொத்து விவகாரம். அங்கேயே இருந்து முடித்து விட்டுத்தான் வரப் போகிறேன். இவ்வளவு பணத்தை எங்கே பத்திரமாக வைப்பது? நான் வட்டி வியாபாரி. பணத்தைப் பீரோவில் பூட்டி வைத்தால் எனக்கு தரித்திரம் வந்துவிடும். பணம் புரண்டு கொண்டே இருக்க வேண்டும். யாருக்காவது கடன் தரலாம் என்றால் நானாகப் போய் தந்தால் சரி வராது. நஷ்டமாகி விடும். அதற்குத்தான் உன் உதவி வேண்டும்.” என்றான் முருகவேள்.

“இதில் நான் என்ன உதவி செய்ய முடியும்?” என்றான் சந்திரகாந்தன்.

“நீதான் ஆடிட்டராயிற்றே. யார் நல்ல நிலையில் இருக்கிறார்கள், யாருக்கு கடன் தந்தால் பாதுகாப்பு என்பது உனக்குத்தானே நன்றாகத் தெரியும். வெளியே மூன்று வட்டிக்குத்தான் பணம் கிடைக்கும். நான் ஒன்றரை வட்டிக்கு தருகிறேன். யாராவது இருக்கிறார்களா?” என்றான் முருகவேள்.

"ஒதுங்கி இருப்பதே உத்தமம் என்ற நல்ல புத்தி எனக்கு எப்போதோ வந்து விட்டது. நல்லது செய்கிறேன் என்று அடுத்தவர்களின் கொடுக்கல், வாங்கலில் தலையிட்டு நான் பட்ட சிரமங்களும், அவற்றிலிருந்து நான் எப்படி மீண்டு வந்தேன் என்பதுவும் உனக்குத் தெரியாதா?" என்றான் சந்திரகாந்தன்.

"தெரியும்தான். இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் என்று வந்தேன். என்னைத் தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு கேள்வி கேட்கிறேன். உனக்கு ஏதாவது பணம் தேவைப்படுமா?" என்றான் முருகவேள்.

சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் சந்திரகாந்தன் தடுமாறினான். 

சமையலறையிலிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கொடி, கூடத்திற்கு வந்து, "முருகண்ணா, அவருக்கு அவசரமாக ஐம்பதாயிரம் தேவையாக இருக்கிறது," என்று கூறிவிட்டு மீண்டும் சமையலறைக்குள் போய் விட்டாள்.

"என்னப்பா சந்திரா, இவ்வளவு நேரமாகப் பேசுகிறோம்,.எதையும் வெளியில் சொல்லாமல் சரியான அமுக்குப் பிள்ளையாராக இருக்கிறாயே!" என்றான் முருகவேள்.

"எனக்கு பணம் தேவைதான். ஆனால் சினேகிதரிடம் பணம் வாங்கினால், உறவு என்ன ஆகுமோ!" என்றான் சந்திரகாந்தன்.

"ஓஹோ, அதுதான் உன் கவலையா? வட்டி கொடுத்து விட்டால், உனக்கும் நிம்மதி, எனக்கும் நிம்மதி, உறவும் சுமுகமாக இருக்கும்." என்றான் முருகவேள்.

"இல்லை முருகா, எனக்கு ஒன்றரை வட்டி எல்லாம் கட்டுப்படி ஆகாது. பூங்கொடியின் நகைகளை ஒன்றரை வட்டிக்கு அடகு வைத்து, ஒரு லட்சம் கடன் வாங்கினேன். அந்த வட்டி கட்டவே சிரமமாக இருக்கிறது." என்றான் சந்திரகாந்தன்.

"எனனப்பா இது! நீயும், நானும், பள்ளிக்கூட காலத்திலிருந்து பழகுகிறோம். நகைகளை அடகு வைக்கும் அளவிற்கு நீ போனது எனக்குத் தெரியாமல் போயிற்றே! வட்டி எல்லாம் ஒரு விஷயமா? நீ என்ன பிரியப்படுகிறாயோ, என்ன முடியுமோ அதை கொடுத்தால் போதும். வேறு பேச்சே வேண்டியதில்லை," என்றான் முருகவேள்.

"அதெல்லாம் சரிவராது முருகா. உறவு எவ்வளவுதான் நெருக்கமானதாக இருந்தாலும், அடுத்தவன் பணம், அடுத்தவன் மனைவி, அடுத்தவன் பதவி, இவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதையும் தெளிவாகப் பேசிவிட வேண்டும்," என்றான் சந்திரகாந்தன்.

சிறிது நேரம் யோசித்த முருகவேள், "சந்திரா, நான் பிரயாணம் முடிந்து வர பத்து வாரங்களாவது ஆகும். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் கிளம்ப வேண்டும். என் வங்கிக் கணக்கில் உன்னைப் பணத்தைக் கட்டச் சொல்லலாம். நடப்புக் கணக்கில் ஒரு பைசா கூட வட்டி கிடைக்காது. நான் சொல்வதைக் கேள். எனக்கு அரை வட்டி போதும். நீ நகைகளை மீட்டு வீடு. மூன்று மாதங்கள் கழித்து அப்போதைய நிலவரப்படி,என்ன செய்யவேண்டுமோ, அப்படி செய்து கொள்ளலாம்." என்றான்.

"முருகா, எனக்கு இன்று ஐம்பதாயிரம் வேண்டும். நகைகளை மீட்க ஒரு லட்சம் வேண்டும். ஒன்றரை லட்சம் போதும்." என்றான் சந்திரகாந்தன்.

முருகவேள் தன் பொறுமையை இழக்க ஆரம்பித்தான். "மீதிப் பணத்தை நான் என்ன தலையில் உருமால் கட்டி, அதில் செருகிக் கொண்டா போகமுடியும்? இதோ பார், ஒன்றரை லட்சத்திற்கு அரைவட்டி கொடு. மீதிப் பணத்தை மூன்று மாதங்களுக்கு வட்டி இல்லாமல் உபயோகப்படுத்திக் கொள். சரிதானே?" என்றான் முருகவேள்.

"சரி என்று சொல்லுங்கள்," சமையலறையிலிருந்து பூங்கொடியின் குரல் கேட்டது. 

"சரி," என்றான் சந்திரகாந்தன்.

முதல் முறையாக முருகவேளின் முகத்தில் புன்னகை தோன்றியது, 

ஒரு சிறிய மஞ்சள் நிறத் துணிப்பையை நீட்டினான். அதற்குள் ஒரு பொட்டலம் இருந்தது. பணக்கட்டு! அது பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டு, ஒரு சணல் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.

"சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்துக் கொள்," என்றான் முருகவேள்.

சரியாக இருந்தது. 

"வரட்டுமா? ஒன்றரைக்கு அரை வட்டி, மூன்று மாதங்கள், மறந்துவிடாதே!" கிளம்பினான் முருகவேள்.

"மறப்பேனா?" என்றான் சந்திரகாந்தன்.

அவன் சென்றதும் கூடத்திற்குள் வந்த பூங்கொடி, "உங்கள் சினேகிதர் மூன்று மாதங்கள் ஊருக்குப் போகிறாரே, ஒரு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பக் கூடாதா? இது கூடவா நான் சொல்ல வேண்டும்? உங்கள் அம்மா உங்களை லட்சணமாகத்தான் வளர்த்திருக்கிறார்." என்றாள்.

"பணத்தைப் பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். அதற்கு என் அம்மாவை ஏன் குறை சொல்கிறாய்?" என்ற சந்திரகாந்தன் பணப்பையை பத்திரப்படுத்தி விட்டு, அய்யா எழுதிய ஒரு தத்துவப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.

சமையலறையில் மாவாட்டும் வேலைகயை முடித்து விட்டு, சேலைத் தலைப்பால் கைகளைத் துடைத்துக் கொண்டு வந்த பூங்கொடி, சந்திரகாந்தனின் அருகே உட்கார்ந்தாள். 

அவளை நிமிர்ந்து பார்த்த சந்திரகாந்தன், "மத்தியானம் அழுதாயா என்ன? உன் கண்களைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது," என்றான்.

"நீங்கள் கவலைப்படுவதைப் பார்த்தால் எனக்கு அழுகை வராமல், சிரிப்பா வரும்? சரி, எனக்கு அலுப்பாக இருக்கிறது. ஆறு மணிக்குத்தானே நீங்கள் வெளியே போக வேண்டும்? சிறிது நேரம் தூங்கட்டுமா?" என்ற பூங்கொடி அவன் மடியில் தலையை சாய்த்துக் கொண்டு, கண்களை மூடியவண்ணம், கால்களை நீட்டிக் கொண்டாள்.

சந்திரகாந்தன் அவளது புருவங்களை தன் இடது கைவிரல்களால் வருடிவிட்டு கொண்டே, தன் தத்துவப் புத்தகத்தில் மூழ்கினான். கணவனின் தீண்டலில் பூரண பாதுகாப்பு உணர்வைப் பெற்ற பூங்கொடி ஒரு நிமிடத்திற்குள் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.

(முற்றும்)
 

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms