சலீமா

குடியாத்தத்தில் நடந்த என் நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது, மண்டப வாசலில் நாற்பது லட்ச ரூபாய்க்கு குறைவான தொகையில் வாங்க முடியாத காரொன்றில் உயர்தர உடையணிந்திருந்த கனவான் வந்திறங்கினார். அவரை எங்கேயோ எப்போதோ பார்த்திருக்கிறேனே? யோசித்தபோது, அவன் என் பள்ளிக்கூட நண்பன் குமார் என்பது நினைவிற்கு வந்தது.

* * * *

அப்போது மதுரையிலேயே சிறந்த பள்ளி என்று பெயரெடுத்திருந்த தூய மேரிப் பள்ளியில் இறுதியாண்டு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். புதன்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்கள். பள்ளிக்குப் பின்புறமாக தூய ஜோசப் பெண்கள் பள்ளி இருந்ததால் எங்கள் பள்ளியைக் கடந்துதான் எல்லா மாணவிகளும் போக வேண்டும். இந்த இரண்டு காரணங்களால் பள்ளிக்கு போவதில் ஒருமுறை கூட எனக்கு சலிப்பு ஏற்பட்டதே இல்லை.

மிகவும் உயரமாக இருந்ததால், எப்போதுமே கடைசி பெஞ்சில்தான் உட்காருவேன் அல்லது உட்கார வைக்கப்படுவேன். கண்ணாடி போட்டிருந்த எனக்கு கரும்பலகை சரியாகத் தெரியாது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் நானும் கவலைப்பட்டதில்லை. மற்றவர்களும் கவலைப்பட்டதில்லை.

கடைசி பெஞ்சுக்கு மாப்பிள்ளை பெஞ்சு என்றொரு செல்லப் பெயர் உண்டு. அதில் உட்காரும் பெரும்பேறு பெற்றவர்கள் மாமியார் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளைகள் போலிருக்கலாம். வகுப்பிற்கு வரலாம், வராமலிருக்கலாம். பாடத்தை கவனிக்கலாம், கவனிக்காமலிருக்கலாம். பரீட்சைகளில் தேறலாம், தேறாமலிருக்கலாம். விருப்பம் போலிருக்க உரிமை உண்டு. யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். ஒரே ஒரு வித்தியாசம். மாமியார் வீட்டு மாப்பிள்ளைக்கு சலுகைகளோடு மரியாதையும் கிடைக்கும். மாப்பிள்ளை பெஞ்சு மாணவர்களுக்கு சலுகைகள் மட்டுமே கிடைக்கும். மரியாதை கிடைக்காது.

பாடங்களை வேகமாகப் படித்து மனதில் நிரந்தரமாக இருத்திக் கொள்ள என்னிடம் பல குறுக்கு வழிகள் இருந்தன. அதனால் பள்ளி ஆரம்பித்த ஓரிரு மாதங்களுக்குள் எல்லா பாடங்களையும் படித்து விடுவேன். எந்த நேரத்தில், எந்த பாடத்தில் எவர் கேள்வி கேட்டாலும் பிழையில்லாமல் சரியாக பதில் சொல்லிவிடுவேன். வகுப்பில், பள்ளியில், எல்லா பாடங்களிலும் எனக்குத்தான் முதல் மதிப்பெண் கிடைக்கும்.

அதனால் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது எனக்குப் பிடித்த பழம்பெரும் நடிகையான வைஜெயந்திமாலாவை விதவிதமாக படம் வரைந்துக் கொண்டிருப்பேன். அல்லது நடிகை சாவித்ரியின் கண்களைப் பற்றி வெண்பா எழுதிக் கொண்டிருப்பேன்.

எந்த சத்தமுமில்லாமல் ஒழுங்காக பள்ளிக்கு வந்துவிட்டு, நல்ல மதிப்பெண்களும் வாங்கிவிட்டு, ஆசிரியர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டதால் எந்த ஆசிரியரும் எனக்கு தொந்தரவு தந்ததில்லை நானும் எந்த ஆசிரியருக்கும் தொந்தரவு தந்ததில்லை இனிமையான குணம் கொண்ட என் ஆசிரியர்கள் அனைவரும் என்னிடம் பிரியத்துடன் இருந்தார்கள்.

மாப்பிள்ளை பெஞ்சில் எனக்கு வலதுபக்கத்தில் முகமது கபீரும் இடதுபக்கத்தில் குமாரும் உட்கார்ந்தார்கள். இருவருக்குமே கல்விதெய்வத்தோடு தீராப்பகை இருந்தது. குமாருக்கு படிப்பதோ, வீட்டுப்பாடம் எழுதுவதோ பிடித்ததே இல்லை. கபீர் வீட்டுப்பாடங்களை அழகாக எழுதுவதில் குறை வைத்ததில்லை.

மதுரையில் ஒருநாள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஊருக்கே தண்ணீர் இல்லை என்றானபின் பள்ளியில் தண்ணீர் இல்லை என்று பள்ளி நிர்வாகத்திடம் முறையிட பெற்றோர்கள் துணியவில்லை. எனவே, அவரவருக்கு வேண்டிய தண்ணீரை அவரவரே நீர்க்குடுவையில் கொண்டு வரும் வழக்கம் உண்டானது.

கொஞ்சம் சொகுசுப் பேர்வழியான எனக்கு வீட்டிலிருந்து நீர்க்குடுவையை நெரிசலான பஸ்ஸில் கொண்டு போகப் பிடிக்கவில்லை. தூய ஜோசப் பள்ளி மாணவிகள் பார்த்தால் என் கௌரவம் என்ன ஆவது? நான் கொண்டு வராததால் குமாரும் கொண்டு வரவில்லை. கபீரின் வீடு பள்ளிக்கு அருகிலிருந்த தென்னோலைக்காரத் தெருவிலிருந்தது. அதனால் அவனும் தண்ணீர் கொண்டு வர மாட்டான். மதிய உணவிற்குப் போகும்போது ஒட்டகம் போல் வேண்டிய அளவு தண்ணீர் குடித்துவிட்டு வந்துவிடுவான்.

அதை கவனித்த குமார் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்த தன் மூளையைப் பயன்படுத்தி ஒரு யோசனை சொன்னான். ‘தினமும் சாப்பிட்டதும் நேரே கபீரின் வீட்டுக்குச் சென்று தண்ணீர் குடித்துவிட்டு அவன் கூடவே சேர்ந்து திரும்பி விடலாம்’ என்பதுதான் அந்த யோசனை. அது நல்ல யோசனையாக எனக்கும் பட்டது.

கபீரிடம் இந்த யோசனையைச் சொன்னதும் திகைத்து பதில் பேசாமல் நின்றான் அது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. தண்ணீர் தரக் கூடவா ஒருவன் யோசிப்பான்? இல்லை அவன் வீட்டில் தண்ணீர் தட்டுப்பாடு அந்தளவிற்கு அதிகமா?

குமார், ”முதலில் தண்ணீர் கேட்பார்கள். அப்புறம் சாப்பாடு கேட்பார்கள். என்று பயப்படுகிறாயா?” என்று கேலியாகக் கேட்கவும், கபீர் ”அதெல்லாம் ஒன்றுமில்லை,” என்று கூறி தினமும் மத்தியானம் தண்ணீர் தர சம்மதித்தான்.

ஒருவன் உதவி செய்கிறேன் என்றால் அதை தள்ளிப் போடாமல் உடனே ஏற்றுக் கொள்ளும் உத்தமமான குணம் என்னிடமும், குமாரிடமும் இருந்ததால் அன்று மதியமே கபீரின் வீட்டிற்கு போய் விட்டோம்.

அவன் வீட்டிற்கு போகும் வழியில்தான் இதுவரை எத்தனையோ முறை கபீர் என் வீட்டிற்கும், குமாரின் வீட்டிற்கு வந்திருந்தாலும் ஒருமுறை கூட எங்களை அவன் வீட்டிற்கு அழைக்காதது மனதில் பட்டது. ஒருவேளை அளவு கடந்த வறுமையில் இருந்து, அது நண்பர்களுக்குத் தெரியக்கூடாது என்று அவன் நினைத்திருக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

நான் கற்பனை செய்தது போல் அவன் வறுமையில் இல்லை. என்னை விட வசதியானவனாகத்தான் இருந்தான். பச்சை வர்ணம் பூசிய பெரிய வீடு, வீட்டைச் சுற்றி தோட்டமும், அதில் பல வண்ண ரோஜாச்செடிகளும் இருந்தன. பழைய அம்பாசிடர் கார் இருந்தது. வீட்டில் சாம்பிராணி நறுமணமும், ஊதுபத்தி வாசமும் தூக்கலாக வீசின. கூடத்தில் பெரிய காஷ்மீரக் கம்பளம் விரித்து அதில் அகன்ற உருண்டையான திண்டுகள் போடப்பட்டிருந்தன.

தலையில் தொப்பி வைத்து, லுங்கி கட்டியிருந்த கபீர் எங்களை உற்சாகமாக வரவேற்றான். “தொழுகை செய்துவிட்டு இப்போதுதான் சாப்பிட்டு முடித்தேன்,” என்றான். கபீர் அழகானவன். எப்போதும் சிரித்த முகமாக இருப்பான்.

அப்போது உள்ளறையிலிருந்து கூடத்திற்குள் நுழைந்த ஒரு இளம்பெண், எங்களைக் கண்டதும் திடுக்கிட்டு துப்பட்டாவை எடுத்து கண்கள் மட்டும் தெரியுமாறு தன் தலையையும், முகத்தையும் மறைத்துக் கொண்டாள். ஆனால் மேகத்திற்குள் மறைய நிலா முயற்சி செய்த சில வினாடிகளுக்குள் அவளை நான் நன்றாகப் பார்த்து விட்டேன். வகுப்பில் கரும்பலகையை சரியாகப் பார்க்காத என் கண்கள், இது போன்ற சமயங்களில் ஒரு குறையுமில்லாமல் கச்சிதமாக வேலை செய்யும்.

அப்பெண்ணிற்கு எங்கள் வயதுதான் இருக்கும். கபீரை விட கூடுதலான பொன்னிறம். பிறை நிலாவைப் போன்ற பொட்டில்லா நெற்றி, நன்றாக வளைந்திருந்த அடர்த்தியான புருவங்களுக்குப் கீழே குளிர்ச்சியான கண்கள். நீண்ட முகம், சிவப்பு நிறத்தில் ஈரப் பசையுள்ள உதடுகள். இடுப்பு வரை வளர்ந்திருந்திருந்த கூந்தலை விரித்து விட்டு மிகவும் நீளநீளமான மல்லிகைச் சரங்களை சூடியிருந்தாள். நடுநடுவே கனகாம்பரம் தென்பட்டது. மத்தியான நேரத்தில் வீட்டில் இருக்கும்போது கூடவா இவ்வளவு பூ வைப்பாள்!

அப்பெண் கபீரைப் பார்த்து உருதுவிலோ, இந்தியிலோ ஏதோ மெல்லிய குரலில் கேட்க, கபீர் தமிழில் பதில் சொன்னான். “சலீமா, இவர்கள் என் கூட படிக்கிற நண்பர்கள். தினமும் மதியம் நம் வீட்டிற்கு தண்ணீர் குடிக்க வருவார்கள். நானில்லாவிட்டாலும் கவனித்துக் கொள்,” என்றான்.

சரியென்று தலையசைத்த சலீமா வேகமாக உள்ளே சென்றாள். அவள் போன பின்பும் அதே இடத்தில் அவளது ஒளி நிற்பது போல எனக்கொரு பிரமை. அவள் திரும்பி வந்தபோது பர்தா போட்டிருந்தாள். அகன்ற தட்டில் மூன்று கண்ணாடிக் கோப்பைகளில் ஐஸ்கட்டிகள் போட்ட சர்பத் இருந்தது. அவள் எதுவும் சொல்லுமுன் குமார் பாய்ந்து ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டான். நான் எடுக்காமல் தயங்க, சலீமா கபீரைப் பார்க்க, கபீர் என்னிடம் “எடுத்துக் கொள்,” என்றான்.

அவன் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டபின் நானும் எடுத்துக் கொண்டேன். வறண்டு போயிருந்த தொண்டையை சர்பத் இனிமையாக குளிர வைத்தது. இனித்தது சர்பத்தா, சலீமாவா என்பது பட்டிமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம்.

“நான் போய் சீருடை போட்டுக் கொண்டு வருகிறேன்,” என்று கூறிவிட்டு கபீர் உள்ளறைக்கு போனான்.

கைகளில் ஏந்திய தட்டில் காலிக் கோப்பைகளை வைத்திருந்த சலீமா, “உட்காருங்களேன்,” என்றாள். “பரவாயில்லை,” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குமார் கம்பளத்தின் மீது போடப்பட்டிருந்த மெத்தையில் உட்கார்ந்து விட்டான். சலீமா பர்தாவிற்குள் நிச்சயம் புன்னகைத்திருப்பாள். அதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கில்லை.

“நான் உள்ளே போகிறேன்,” என்று கூறிய சலீமா, திரும்பாமல் அப்படியே சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து உள்ளறைக்குச் சென்று விட்டாள்.

பள்ளிக்குத் திரும்பிய பின், கபீர் இல்லாத நேரத்தில் குமார் என்னிடம் “எனக்கு சலீமா நினைப்பாகவே இருக்கிறது.” என்றான்.

“எனக்கும்தான்,” என்றேன்.

“சலீமா கபீரின் தங்கையா, அக்காவா?” என்று கேட்டான் குமார்.

“அவன் இதுவரை குடும்பத்தைப் பற்றி நம்மிடம் பேசியதே இல்லை. சலீமா இருப்பதால்தான் நண்பர்கள் யாரையும் வீட்டிற்கு அழைப்பதில்லை போலிருக்கிறது. நாம் தினமும் தண்ணீர் குடிக்க வருகிறோம் என்றதும் அதனால்தான் தயங்கி இருக்கிறான்,” என்றேன்.

“எனக்கென்னவோ அவள் தங்கையாகத்தான் இருப்பாள் என்று தோன்றுகிறது. அக்கா என்றால் இத்தனை அதிகாரத்துடன் கபீரால் பேச முடியுமா?” என்றான் குமார்.

“அக்காவோ, தங்கையோ! அழகி” என்றேன்.

“நான் இதுவரை இத்தனை அழகைப் பார்த்ததேயில்லை. முஸ்லீம்களில்தான் இப்படிப்பட்ட அழகிகள் இருப்பார்களோ?” என்று சந்தேகம் கேட்டான் குமார்.

“எல்லா பிரிவுகளிலும் அழகிகள் இருப்பார்கள் ஆனால் உன்னையும், என்னையும் போல எதற்கும் வக்கில்லாதவர்களுக்கு எல்லா பெண்களுமே பேரழகிகள்தான்,” என்றேன்.

“அனார்கலி, மும்தாஜ் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்களோ!” என்றான் குமார்.

“அவர்களை விட இவள்தான் அதிக அழகி,” என்று அடித்துச் சொன்னேன்.

“ஆமாம், ஆமாம்,” என்றான் குமார்.

“அந்த நெற்றி! பிறை நிலாதான் நினைவிற்கு வருகிறது,” என்றேன்.

“யார் நெற்றி பிறை நிலா போலிருக்கிறது?” என்று கபீரின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

குமாரின் முகம் பயத்தில் மாறிவிட்டது. நான் இதற்கெல்லாம் அசருகிறவன் இல்லை, “வைஜெயந்திமாலாவின் நெற்றிதான்! இதயவானின் உதயநிலவே பாட்டில் அவர் நெற்றி பிறை நிலா போலவே இருக்கிறது” என்று சமாளித்தேன்.

“நான் இன்னமும் பார்த்திபன் கனவு படம் பார்க்கவில்லை. சலீமா கூடப் பார்க்க வேண்டும் என்றாள். ரொம்ப பழைய படம். சென்ட்ரலில்தானே ஓடுகிறது?” என்று கபீர் கேட்டான்.

“ஆமாம்,” என்று பதில் சொன்னான் குமார்.

சலீமாவைப் பற்றி எங்களிடம் கபீர் பேசியது அதுதான் முதல் முறை.

மூன்று மாதங்களில் மதியம் கபீர் விட்டிற்கு போவது பள்ளிக்குப் போவதில் ஒரு பகுதியாகிவிட்டது. ஆனால் எங்களால் சலீமாவின் முகத்தை மறுபடியும் பார்க்க முடியவில்லை. அவளது இனிமையான குரலும், குளிர்ந்த குடிநீரும் குறைவில்லாமல் கிடைத்தன.

ஒரு நாள் எங்கள் தமிழாசிரியரான அரங்கநாதன் கம்பராமாயணத்திலிருந்து வாலி வதம் பற்றி ஆவேசத்துடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, குமார் சம்பந்தமில்லாமல் சந்தேகம் கேட்டான், “ஐயா, இந்திய இலக்கியத்தில் கண்டதும் காதல் பற்றி என்ன சொல்லியிருக்கிறது?”

ஒரு கணம் திகைத்துப் போன அரங்கநாதன் என்னை சந்தேகத்துடன் பார்த்தார். “சந்துரு, நீதான் அவனைத் தூண்டி விட்டாயா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

“இல்லை ஐயா, இது என் சொந்த கேள்வி,” என்று குமார் காப்புரிமை கொண்டாடினான்.

“குமார், நீ இதுவரை ஒரு சந்தேகம் கூட கேட்டதில்லை. இப்போது நடக்கும் வாலி வதம் பாடத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இலக்கியத்தில் சந்தேகம் கேட்கிறாய். சந்துருவோடு நீ வைத்திருக்கும் சகவாசத்தினால் இந்த முன்னேற்றம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன் இது நல்ல முன்னேற்றம்தான்,” என்றார்.

எதற்கும் உபயோகமில்லாதவன் என்று எல்லோராலும் கைவிடப்பட்ட ஒருவன் என் நட்பால் உந்தப்பட்டு இலக்கியத்தில் கேள்வி எழுப்பியதும் அதற்காக நான் மறைமுகமாகப் பாராட்டப்பட்டதும் எனக்குப் பெருமையாக இருந்தது.

மிதிலைக்கு வரும் ராமன், சீதையை முதன்முதலில் பார்க்கும் காட்சியை கம்பனின் வார்த்தைகளில் தன்னை மறந்து அரங்கநாதன் விவரித்தார். அதன்பின் கண்வ முனிவரின் குடிலில் துஷ்யந்தன் சகுந்தலையை முதன்முதலில் கண்டதும் காதல் கொண்ட காட்சியை வர்ணித்தார். அவரே துஷ்யந்தனாக மாறிவிட்டது போல எனக்குத் தோன்றியது. இறுதியாக ராதை முதன்முதலாக கண்ணனை சந்திக்கும் காட்சியை விளக்கினார்.

“தம்பிகளா, தான் பிறந்த ஊரான பர்ஸானாவிலிருந்து ராதை தன் தகப்பனாரான விருஷபானுவோடு, பிருந்தாவனத்திற்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தாள். வழியில் களைப்பாறுவதற்காக கண்ணனின் ஊரான கோகுலத்தில் தங்கினாள். அங்கே ஒரு தோட்டத்தில் கண்ணனை அவன் தாய் யசோதா மரத்தோடு கட்டிப் போட்டிருப்பதைப் பார்த்தாள். ராதைதான் அக்கட்டை அவிழ்த்து விட்டாள். கண்டதும் இருவருக்குமே காதல் பிறந்து விட்டது. கொஞ்ச நாள் கழித்து ராதையைத் தேடிக்கொண்டு கண்ணன் அவள் வாழ்ந்த ஊரான பிருந்தாவனத்திற்கு சென்றான்,” என்றார் அரங்கநாதன்.

“ராதையால் அவிழ்க்க முடிந்த கட்டை கண்ணனால் அவிழ்த்திருக்க முடியாதா?” என்று குமார் கேட்டான். அவன் மூளை இவ்வளவு வேலை செய்வதைப் பார்த்து எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“தாய் அன்போடு போட்ட கட்டை அவிழ்க்கும் வல்லமை மகனிடம் இல்லை. சுயநலமில்லாமல் உள்ளன்போடு ஒரு பெண், ஆணுக்குக் கட்டுப் போட்டால், ஆண் அதற்கு முழுமையாகக் கட்டுப்படுவான். ஆணை அடக்கியாளும் சுயநல நோக்கத்தோடு பெண் கட்டுப் போட்டால் அதை ஆண் மீறுவான். கட்டும் பெண் தாயாகவோ, மனைவியாகவோ, தோழியாகவோ இருக்கலாம்,” என்றார் அரங்கநாதன்.

“ஐயா, காத்திருக்கும் பெண்ணை, ஆண் நாடிவந்து காதலிப்பதுதான் பொதுவாக இலக்கியத்தில் நடக்கிறது. ராமனும், துஷ்யந்தனும் பெண்ணைத் தேடி வருகிறார்கள். ஆனால் ராதையின் கதையில் பெண்ணல்லவோ ஆணைத் தேடி வருகிறாள்?” என்று நான் கேட்டேன்.

அரங்கநாதன் தன் மாணவர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்டதும் மகிழ்ந்து போய்விட்டார். மாணவர்களை நல்ல கேள்விகள் கேட்க வைப்பவரே நல்ல ஆசிரியர்.

“சந்துரு, நீ சொல்வதுபோல காத்திருக்கும் பெண்ணை ஆண் தேடி வருவது சாதாரண வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் நடப்பது. ஆனால், ஆன்மீக வாழ்க்கையிலும், பேரிலக்கியத்திலும் பெண்தான் ஆணைத் தேடி வருவாள். பெண் ஆணைத் தேடி வருகிறாள் என்றால் செயலற்றுப் போயிருக்கும் புருஷனான ஆணை, சக்திரூபமான பெண் நாடி வந்து, அவனை பிரபஞ்சத்தையே உலுக்கும் பெரிய சாதனைகளை செய்ய வைக்கப் போகிறாள் என்று அர்த்தம்.” என்றார் அரங்கநாதன்.

“எந்த கருத்துக்கும் எதிரான கருத்தும் உண்மை போலிருக்கிறது!” என்றேன்.

“இல்லையா பின்னே? யோசித்துப் பார். ராதை கண்ணனை நாடிய பின்புதான் பக்தி, சுயார்ப்பணம் என்கிற ஆன்மீக விஷயமெல்லாம் உருவாயின. மேனகை விசுவாமித்திரரை தேடி வந்ததால்தானே மகாபாரதம் உருவாயிற்று? மரணத்தை ஜெயித்த சாவித்ரிதானே காட்டில் அலைந்து கொண்டிருந்த சத்யவானைத் தேடி வந்தாள்? தம்பிகளா, எந்த கருத்தையும் இதுதான் சரி என்று அடித்துப் பேசுவது அபத்தமானது. எதைச் சொன்னாலும் `இதுவும் சரி’ என்று வேண்டுமானால் சொல்லலாம்,” என்றார் அரங்கநாதன்.

காளிதாசனின் உவமையில் வரும் அமைதியான நீர் பரப்பின் கீழே மறைந்திருக்கும் ஆபத்தான முதலை போல, அமைதியாக குமார் கேட்ட கேள்விக்குப் பின்னே ஒரு விபரீதமான எண்ணம் மறைந்திருந்தது எனக்கு மறுநாள்தான் தெரிந்தது.

மறுநாள் மதியம் சலீமா வீட்டிற்கு, அதாவது கபீர் வீட்டிற்கு, தண்ணீர் குடிக்கச் சென்றபோது கபீர் வீட்டில் இல்லை. சலீமா தந்த ஐஸ்கட்டி, ரோஜா இதழ், துளசி போட்ட தண்ணீரைக் குடித்துவிட்டு விடைபெறும்போது, குமார் தன் சட்டைப்பையில் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்து சலீமாவிடம் நீட்டினான். “என் மனதிலிருப்பதை எழுதி இருக்கிறேன் தனியாக இருக்கும்போது படித்துப் பாருங்கள்,” என்றான். காற்றில் அசையும் மல்லிகைக் கொடி போல லேசாக தலையை அசைத்து அக்காகிதத்தை சலீமா வாங்கிக் கொண்டாள்.

நான் திடுக்கிட்டேன்.

வெளியே வந்ததும் “என்னடா அது?” என்று குமாரைக் கேட்டேன்.

“எனக்கு சலீமாவைக் கண்டதும் காதல் வந்துவிட்டது மூன்று மாதங்களாக யோசித்து யோசித்து காதல் கடிதம் எழுதினேன் இன்றுதான் கொடுக்க தைரியம் வந்தது,” என்றான் குமார்.

“அடப்பாவி, அவள் கபீரின் தங்கையடா,” என்றேன்.

“அதையெல்லாம் பார்த்தா காதல் வருகிறது?” என்று கேட்டான் குமார்.

“சலீமா மிகவும் கட்டுப்பாடான முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவள்,” என்றேன்.

“கட்டுப்பாடுகளை மீறினால்தான் காதல் இனிக்கும். நான் கொடுத்த கடிதத்தை அவள் உடனே வாங்கிக் கொண்டதை கவனித்தாயா?” என்றான் குமார்.

“எனக்கென்னவோ, உன்னோடு சேர்ந்த எனக்கும் உதை விழப் போகிறது என்று தோன்றுகிறது,” என்றேன்.

குமார் “நானிருக்கிறேன், பயப்படாதே! அப்படியெல்லாம் நடக்காது,” என்று நம்பிக்கையோடு சொன்னான். அடி விழும்போதுதானே மனிதனுக்கு நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும்?

“நாம் இன்னமும் கல்லூரிக்குக் கூடப் போகவில்லை. ஏதோ அழகை ரசித்தோமா, மறந்தோமா என்றில்லாமல் இதெல்லாம் தேவைதானா? படிக்கும் காலத்தில் படிப்பை கவனிக்க வேண்டும் கவனம் சிதறினால் எதிர்காலம் வீணாகிவிடும்.” என்றேன்.

“போடா பயந்தாங்கொள்ளி,” என்றான் குமார்.

அடுத்த நாள் கபீரின் வீட்டிற்கு போவதைத் தவிர்க்கும் உத்தேசத்தோடு, வீட்டிலிருந்தே நீர்க்குடுவையை எடுத்துச் சென்றேன். ஆனால் குமார் வற்புறுத்தியதால் நானும் அவனோடு கபீர் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது.

எல்லாமே வழக்கம் போல நடந்தன. எதிலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. கபீர் உடை மாற்ற அறைக்குள் சென்றபோது சலீமா மடிக்கப்பட்ட காகிதமொன்றை குமாரிடம் தந்தாள். “உங்கள் கடிதத்திற்கு பதில் இதில் இருக்கிறது,” என்றாள். குமார் அதை அவசரமாக தன் சட்டைப்பையில் செருகிக் கொண்டான்.

மதியம் விளையாட்டு வகுப்பில் கபீர் கபடி விளையாடப் போனான். நானும், குமாரும் மட்டும் தனித்திருக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.

“கடிதத்தை எடு, வாசிக்கலாம்,” என்று வெட்கமில்லாமல் குமாரை அவசரப்படுத்தினேன்.

“முதலில் நான் வாசித்துவிட்டு அப்புறம் உனக்குத் தருகிறேன்,” என்ற குமார் கடிதத்தை பிரிக்குமுன் இஷ்டதெய்வத்திற்கு பிரார்த்தனை செய்துவிட்டு வேகமாக வாசித்தான். மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு என்னிடம், “தப்பு பண்ணிவிட்டேன்,” என்றான்.

கடிதத்தை அவன் கையிலிருந்து பிடுங்கி வாசித்தேன். பழக்கமான கையெழுத்து போலிருந்தது.

அன்பிற்குரிய நண்பர் குமாருக்கு,

உங்கள் கடிதத்திற்கு நன்றி.

கபீர் என் கணவர். அந்தத் தகவலை உங்களிடம் அறிமுகப்படுத்தும்போதே வெட்கத்தால் சொல்லாமல் விட்டது என் தவறு. போன வருடம் என் அப்பாவிற்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டபோது, ஒரே பெண்ணான என்னை உறவினரான கபீருக்கு கல்யாணம் செய்துதர ஆசைப்பட்டார். இருவருமே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும், பெரியவர்களின் கட்டாயத்தினால் கல்யாணம் நடந்து விட்டது. கல்யாணம் முடிந்தபின் அப்பா பிழைத்துக் கொண்டார். நான் பள்ளிக்கு போவதை நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தே படிக்கிறேன்.

நம் வயதில் படிப்பு மிகவும் முக்கியம். படிப்பில் அக்கறையில்லாமல் இருந்த என் கணவரை, பெருமுயற்சி எடுத்து ஏதோ படிக்க வைத்து வருகிறேன். இந்த வருடம் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று விடுவார். அதற்குபின் என் அப்பா கொடுத்த தோல் பதனிடும் தொழிற்சாலையை பார்த்துக் கொள்ளப் போகிறார். நான் மேலே படிக்கப் போகிறேன்.

படிப்பில் கவனம் செலுத்தாமலிருக்கும் நீங்களும் நன்றாகப் படித்து பெரிய பட்டங்கள் வாங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இக்கடித விஷயம் வேறு யாருக்கும் தெரியாது. மறந்து விடுவோம்.

அன்புடன்,

சலீமா

பி.கு. நீங்கள் எப்போதும் போல மதியம் வீட்டிற்கு வரலாம்.

“சலீமாதான் கபீருக்கு தினமும் வீட்டுப்பாடம் எழுதித் தருகிறாள். அதே கையெழுத்து!” என்றேன்.

“இப்போது அதுவாடா பிரச்சினை?” என்று கேட்டான் குமார்.

“அடி,கிடி விழாமல் பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்து விடு,” என்றேன்.

சிறிது நேரம் பேசாதிருந்த குமார், “நான் கபீரைப் பார்த்து பேசப் போகிறேன்,” என்றான்.

“வேண்டாமடா, அவனுக்கு விஷயமே தெரியாது. அவனையும் குழப்பி, சலீமாவையும் சிக்கலில் மாட்டி விடாதே. நல்ல பெண்,” என்றேன்.

நான் கூறியதை சட்டை செய்யாத குமார் வேகமாக விளையாட்டு மைதானத்தை நோக்கிப் போனான். நானும் அவன் பின்னாலேயே கிட்டத்தட்ட ஓடினேன். ஒரு மரத்தின் பின்னே நின்று கொண்ட குமார் கபடி விளையாடிக் கொண்டிருந்த கபீரை தன்னருகே கைகாட்டி அழைத்தான்.

“என்னடா?” என்று சிரித்தபடி கேட்டுக்கொண்டே கபீர் அருகே வந்தான். இனி அவன் சிரிக்கமாட்டான் என்று நினைத்தேன்.

விஷயத்தை சுருக்கமாகச் சொன்ன குமார், “கபீர், எனக்கு புத்தி வந்துவிட்டது. மன்னித்துவிடு. சந்துரு விஷயத்தை உன்னிடம் சொல்லாமல் விட்டுவிடச் சொன்னான். ஆனால் உன்னை வைத்துதான் உன் குடும்பத்தினரைத் தெரியும். உன்னிடம் சலீமா சொல்லாமல் விட்டதை சொல்லி விட்டேன். நண்பனின் மனைவியை விட நண்பன்தான் முக்கியம்,” என்றான்.

சிரித்தான் கபீர், “மனைவிக்கு, கணவனின் நண்பனை விட கணவன்தான் முக்கியம்! சலீமா நேற்று சாயந்திரமே என்னிடம் விஷயத்தை சொல்லிவிட்டாள். எனக்கு கோபம் வந்தது. அவமானமாக இருந்தது. அவள்தான் பொறுமையாக நம் வயதில் வரும் குழப்பங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி என்னை சமாதானப்படுத்தினாள். கடிதத்தில் விஷயத்தை மறந்துவிடச் சொல்லி எழுதப்பட்டு இருந்ததே! அப்புறம் ஏன் அதைப்பற்றி பேசுகிறாய்?” என்றான் கபீர்.

சில வினாடிகள் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தோம்.

“எல்லோரும் கபடி விளையாட எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் போகட்டுமா?” என்று கேட்டான் கபீர்.

“கபீர் உன் வீட்டுப்பாடத்தை எழுதுவது சலீமாதானே?” என்று கேட்டேன். கபீர் சிரித்துவிட்டு பதில் சொல்லாமல் விளையாடப் போய்விட்டான்.

என்னை முறைத்த குமார், “ஏன்டா, நீ திருந்தவே மாட்டாயா? அவனவன் அதிர்ச்சியில் இருக்கும்போது, கையெழுத்து யாருடையது என்று ஆராய்ச்சி செய்கிறாயே!” என்றான்.

அடுத்து வந்த நாட்களில் தண்ணீர் குடிக்க கபீரின் வீட்டிற்கு நாங்கள் போய்வந்து கொண்டிருந்தபோது ஒரு வாரம் தொடர்ந்து பெருமழை பெய்ததால் வறண்ட வைகையில் வெள்ளமே வந்துவிட்டது. பள்ளியிலேயே குடிதண்ணீர் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. நாங்கள் கபீர் வீட்டிற்குப் போவது நின்றுவிட்டது பள்ளி இறுதித் தேர்வில் எல்லோருமே தேர்ச்சி பெற்றோம். நான் சென்னை வந்துவிட்டேன்.

* * * *

அதன்பின் பல வருடங்கள் கழித்து இன்றுதான் குமாரைப் பார்க்கிறேன்.

“இப்போது என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான் குமார்.

“எழுத்தாளனாக இருக்கிறேன்,” என்றேன்.

“நீயா?” என்று நம்பிக்கையில்லாமல் கேட்டான் குமார்.

“சரி, சரி, அதை விடு. நீ என்ன பண்ணுகிறாய்?” என்று கேட்டேன்.

“மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தேன். அங்கேயே பத்து வருஷம் வேலை பார்த்தேன். அப்புறம் இந்தியா திரும்பி விட்டேன். உனக்கு நம்மோடு படித்த கபீரை ஞாபகமிருக்கிறதா? அவருடைய தோலாடை ஏற்றுமதி நிறுவனம் பெரிதாக வளர்ந்துவிட்டது. அதில்தான் நிர்வாக இயக்குனராக வேலைப் பார்க்கிறேன்,” என்றான்.

அவனையே சிறிது நேரம் பார்த்தேன்.

“சலீமா சௌக்கியமா?” என்று கேட்டேன்.

புன்னகைத்தான் குமார், “சௌக்கியம்தான். தமிழாசிரியர் சொன்னதுபோல மேடம் போட்ட கட்டுதான் என்னை முன்னேற்றியது,” என்றான்.

“உங்கள் மேடம் என்னைப் பற்றி எப்போதாவது பேசியதுண்டா?” என்று கேட்டேன்.

“இல்லை,” என்றான் குமார்.

“அந்த கையெழுத்து யாருடையது என்று கண்டுபிடித்தாயா?” என்று கேட்டேன்.

“அட போப்பா!” என்றான் குமார்.

(முற்றும்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms