நெடுஞ்சுவர்

ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று எங்கள் வீட்டிலிருந்த பழைய காலத்து பிலிப்ஸ் வானொலிப் பெட்டியில், அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவின் விசேஷ ஒலிபரப்பை அப்பாவும், அம்மாவும், மாமாவும், நானும், கேட்டுக் கொண்டிருந்தோம். அமரராகி விட்ட பகுத்தறிவுத் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தைப் பற்றிய நேரடி ஒலிபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அப்பா தன்னை பகுத்தறிவுத் தலைவரின் பக்தர் என்று கூறிக் கொள்பவர். எனக்குத் தெரிந்து அப்பா இந்து தினசரியைத் தவிர வேறெதையும் வாசித்ததில்லை. நண்பர்கள் பேச்சினூடே உதிர்க்கும் நாத்திகக் கருத்துக்களை, வீட்டில் அப்பா உணர்ச்சியோடு கூறும்போது ஏதோ அவரே ஏராளமான புத்தகங்களை வாசித்து, யோசித்து உருவாக்கிக் கொண்ட கருத்துக்களை கூறுவது போலிருக்கும். வார இதழ்களில் வரும் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டுமே அவரது அதிகபட்ச புத்தக வாசிப்பு. விபூதி பூச மறுத்து தன் கொள்கைப்பிடிப்பை அடிக்கடி வெளிப்படுத்திக் கொள்வார்.

மாமா என் அம்மாவின் கடைசி தம்பி. பழனியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்று விட்டு, வேலை தேடி சென்னை வந்து எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். ஓம் என்று காகிதத்தின் உச்சியில் போட்ட பின்புதான் எதையும் எழுதுவார். தினசரி குளித்ததும் முதல் காரியமாக கந்தர் சஷ்டி கவசத்தை முழுவதுமாக ஒரு முறை வாசிப்பார். தடி, தடியான இலக்கியப் புத்தகங்கள் அவரிடம் இருந்தன, எப்போதும் நெற்றியில் சிறுகீற்றாக விபூதி இருக்கும்.

பிரச்சனைகள் எதுவுமில்லாதபோது முனைந்து தனக்கு பிரச்சனையை உருவாக்கிக் கொள்ளாதவன் மனிதனா? அப்பா மாமாவிடம் “மெய்யப்பன், நாம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டால் என்ன?” என்று கேட்டார்.

மாமா சிறிது தயங்கி விட்டு, “ஊர்வலம் பெரியார் திடலில் வந்து முடியுமாம். நாம் அங்கே போய்விட்டால் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் எல்லோரையும் பார்க்க முடியும் மத்தியான வெயிலில் என்னத்துக்கு வீணாக நடக்க வேண்டும்?” என்றார்.

“நம்மையெல்லாம் திடலுக்குள் விட மாட்டார்களே!” என்று கூறி யோசித்த அப்பா, “திடலுக்கு எதிரே ஒரு மாதாகோவில் இருக்கிறது. அதிலிருக்கும் மைதானம். பெரிய இடம். காலியாக இருக்கும். அங்கே நின்று கொண்டால் திடலுக்குள் நுழையும் எல்லோரையும் பார்த்து விடலாம்.” என்றார். ஆயிரக்கணக்கான சென்னைவாசிகள் அதேபோலத்தான் யோசித்தார்கள் என்பதை அப்போது நாங்கள் அறியவில்லை.

மாமா, அப்பாவோடு, நானும் பெரியார் திடலுக்குக் கிளம்ப, அம்மா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “சின்னப்பையன். கூட்டத்தில் சிக்கி அவதிப்படவேண்டுமா?” என்றார்.

“கிளம்பும்போதே அபசகுனமாகப் பேசாதே!” என்று அப்பா கோபிக்க, “பாவா, பாதுகாப்பு உணர்ச்சியால் அக்கா அப்படிச் சொன்னார். அக்கா, நான் சந்துருவை பார்த்துக் கொள்கிறேன்,” என்று எல்லோரையும் மாமா சமாதானம் செய்தார்.

நான், அப்பா, மாமா மூவரும், அதிகமான பிரயாணிகள் ஏறிவிட்டதால் ஒரு பக்கமாக சாய்ந்து ஓடிய 71-ஆம் எண் பேருந்தைப் பிடித்து, பெரியார் திடலுக்கு அருகே இறங்கிக் கொண்டோம்.

அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்த மாமா “பாவா, தப்பு செய்து விட்டோமோ?” என்று கேட்டார். தன் திட்டம் விமர்சனத்திற்கு உட்படுவதை ஏற்காத அப்பா, “என்ன மெய்யப்பன், இதற்கெல்லாம் பயந்து கொண்டு! வாருங்கள், மாதாகோவில் மைதானத்திற்குள் சென்று விட்டால், வசதியாக வேடிக்கை பார்க்கலாம்,” என்று கூறி எங்களை அங்கு அழைத்துச் சென்றார்.

ஜனத்திரள் இருந்தாலும் மிகப் பெரிய மைதானம் என்பதால் தள்ளுமுள்ளு எதுவுமில்லை. திடலின் வாசல் நன்றாகத் தெரியும்படி மாமா இடம் பிடித்தார். அங்கே அப்பாவும், மாமாவும் நின்று கொள்ள தற்காலிகத் தடுப்புக் கட்டை மீது நான் உட்கார்ந்து கொண்டேன்.

அச்சூழல் எனக்கு பயங்கரத்தைத் தந்தது. அச்சம் தந்தவற்றில் வசீகரிக்கும் அழகு இருந்தது

என்னை விட உயரமான குதிரைகள் மீது கையில் நீண்ட பிரம்புகளோடு, குதிரைப்படை போலீஸ்காரர்கள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தனர். திடலின் வாசல் கதவுகளுக்கருகே பல வரிசைகளில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரர்கள் தலையில் இரும்புத் தொப்பி அணிந்து வலது கையில் நீண்ட பிரம்போடும், இடது கையில் மூங்கில் கேடயத்தோடும் விறைப்பாக நின்று கொண்டிருந்தனர்.

“இரும்புக் கேடயம் வைத்துக் கொண்டால் இன்னமும் பாதுகாப்பாக இருக்குமே!” என்றேன். “வேகமாக நகர வேண்டுமானால் கனமில்லாமல் இருக்கும் மூங்கில் கேடயங்களைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். இரும்பு மிகவும் கனக்கும்,” என்று அப்பா பதில் சொன்னார்.

ஓர் ஓரமாக சிறிய துப்பாக்கிப்படை நின்று கொண்டிருந்தது. போலீஸ்காரர்களின் தோள்களில் நீண்ட குழல்களை உடைய துப்பாக்கிகள் சாய்க்கப்பட்டிருந்தன.

பல போலீஸ் ஜீப்புகளும், வேன்களும் நின்று கொண்டிருந்தன. பெரிய போலீஸ் அதிகாரிகள் அங்குமிங்கும் நடந்து சிறிய அதிகாரிகளை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் பூட்ஸ்கள் எழுப்பிய அதிகார ஒலி எனக்கு பீதியைத் தந்தது.

“மாமா, வீட்டுக்குத் திரும்பி விடலாமா?” என்றேன்.

“இதற்குத்தான் இந்த மாதிரி இடங்களுக்கு சின்னப் பையன்களை கூட்டிக் கொண்டு வரக்கூடாது என்பது. எங்கே நான் கிளம்பினாலும் இவன் அம்மா இவனை என்னோடு அனுப்பி விடுகிறாள்,” என்றார் அப்பா.

“பயப்படாதே சந்துரு, நாங்கள் இருக்கிறோமே,” என்று மாமா பயந்த குரலில் என்னை சமாதானப்படுத்தினார்.

நேரமாக, நேரமாக கூட்டம் அதிகமாகியது. டிசம்பர் மாதம் என்பதால் வெயில் அதிகமில்லை. ஒவ்வொரு முறையும் ஒலிபெருக்கி, 'இதோ, இறுதி ஊர்வலம் வந்துவிட்டது,' என்று கூறியபோது அதை நம்பினேன். ஒரு மணி நேரம் அதை நம்பி சலித்தபின். கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உண்மையிலேயே இறுதி ஊர்வலம் பெரியார் திடல் வாயிலை நெருங்கியது.

தடுப்பு மரச்சட்டத்தில் ஏறி நின்று கொண்டு என்னால் முடிந்தவரை எட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். ஊர்வலத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து வந்த நடிகர்களையும், ,முக்கியஸ்தர்களையும் பார்க்க மாதாகோவில் மைதானத்திலிருந்தோர் ஆர்வத்துடன் முண்டியடித்தனர். அவர்கள் தடுப்பு மரச்சட்டங்களை தாண்டி விடாதபடி மனிதச்சுவர்களாக நின்று போலீஸார் ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் திடாரென கடல் ஆர்ப்பரிப்பது போல ஓசை எழுந்தது. மக்களின் மனதைக் கவர்ந்த நடிகரின் கார் திடலுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. மக்கள் அவரை சூழ்ந்து கொண்டுவிடுவார்கள் என்பதால் அவர் நடந்து வரவில்லை. அதிக பிரபலத்திற்கு விலையாக தனிமனித உரிமைகளை, அந்தரங்க சந்தோஷங்களை விலையாகத் தரத்தானே வேண்டும்!

நடிகரின் முகத்தை பார்க்கும் ஆவலில் ஒரு சில ஆர்வலர்கள் காரின் பின்னால் ஓட, போலீஸார் அவர்களைத் துரத்திப் பிடித்தனர். ஓடியவர்கள் போலீஸாரைத் தள்ளிவிட்டு மீண்டும் ஓட முயலவும் அவர்கள் முழங்கால்களுக்குக் கீழே போலீஸார் பிரம்பால் அடித்தனர். வலி தாங்க முடியாத ஆர்வலர்கள் பின்வாங்கினர்.

போலீஸார் கவனம் இவர்கள் மீது இருந்தபோது, வேறு பலர் தடுப்பு மரச்சட்டங்களை மீறி திடலுக்குள் நுழைந்துவிட்டனர். அதைப் பார்த்ததும் ஏராளமானவர்களுக்கு தாங்களும் நுழைந்து விடலாம் என்று தோன்றவே, கூட்டம் ஒழுங்கை இழந்தது. தள்ளுமுள்ளு ஆரம்பித்தது.

குதிரைப்படை போலீஸார் திடல் வாயிலை மறித்து நிற்க, பிற போலீஸார் தடியடி செய்ய ஆரம்பித்தனர். யாரோ ஒருவன் செருப்பு ஒன்றை போலீஸ் அதிகாரி ஒருவர் மீது வீசினான். தொடர்ந்து பலர் செருப்புக்களையும், கற்களையும் வீச ஆரம்பித்தனர்.

ஒலிபெருக்கியில் போலீஸ் அதிகாரி ஒருவர் கடுமையான குரலில், “உடனே கலைந்து போங்கள். கண்ணீர் புகை குண்டு போடப் போகிறோம்”' என்று கத்தினார். அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்டது போலிருந்தது. அந்த இடத்தைப் புகை சூழ்ந்தது. கண்கள் எரிய ஆரம்பித்தன.

கூட்டத்தினர் எல்லாத் திசைகளிலும் ஓட ஆரம்பித்தனர்.

'சந்துரு, ஓடிவா,' என்ற மாமாவின் குரல் கேட்க அவர் கையை பிடித்துக் கொண்டு தடுப்பு மரச்சட்டத்திலிருந்து குதித்தேன். நாங்கள் மூவரும் ஓட ஆரம்பித்தோம். எல்லோரும் எல்லாத் திசைகளிலும் ஓடியதால் எது சரியான பாதை என்பது தெரியாமல் ஓடினோம். தப்பிக்க வேண்டும் என்பது மட்டுமே குறியாக இருந்தது.

ஓடிக் கொண்டிருந்தபோது என் வலது கால் செருப்பு அறுந்துவிட்டது. மாமாவின் கையை விட்டுவிட்டு குனிந்து செருப்பை சரி செய்ய முனைந்தேன்.

'ஓடுடா, ஓடுடா போலீஸ் வருகிறது,' என்ற குரல் கேட்டது. குனிந்தபடியே தலையைத் திருப்பிப் பார்த்தேன். நான் செருப்பு வீசப் போகிறேன் என்று நினைத்துவிட்ட இரும்புத்தொப்பி அணிந்திருந்த போலீஸ்காரர் ஆவேசமாக பிரம்பை உயர்த்திக் கொண்டு என்னை குறியாக வைத்து ஓடி வந்து கொண்டிருந்தார்.

செருப்புகளை உதறிவிட்டு ஓட ஆரம்பித்தேன். என்னெதிரே ஒரு மதில் சுவர். அதன் மேல் அப்பாவும், மாமாவும் ஏறி நின்று கொண்டிருந்தனர். “ஏறுடா மேலே,” என்றார் அப்பா. மாமா என்னைத் தூக்கிவிட கை நீட்டினார்.

ஓடி வந்தவன் வேகமாக மதில் சுவரைத் தாண்டி மறுபுறத்தில் போய் விழுந்தேன்.

அமைதி, அமைதி.. சுவருக்கு இப்புறம் அமைதி! அமளி. அமளி. சுவருக்கு அப்புறம் அமளி.

சுவர் மேலிருந்து குதித்து மாமாவும், அப்பாவும் இறங்கினர். மாமாவின் கால்சட்டையும், அப்பாவின் மேல்சட்டையும், கிழிந்திருந்தன. இருவர் கை, கால்களிலும் கீறல்களும், சிராய்ப்புகளும் இருந்தன, எனக்கு எதுவும் ஆகவில்லை. சிறுவலி கூட இல்லை. குதிக்கும்போது மண்ணில் விழுந்ததால், உடையில் அங்குமிங்கும் மண் ஒட்டிக் கொண்டிருந்தது,

“தப்பித்தோம்,” என்றார் அப்பா.

“சந்துருவை முருகன்தான் அலாக்காக தூக்கி இந்தப் பக்கம் போட்டிருக்கிறான், மனதில் முருகன் நினைப்பு இருந்தால் ஆபத்து சமயத்தில் முருகன் வருவான், அருளைத் தருவான்,” என்றார் மாமா.

“அதெல்லாம் சும்மா! பதறாமல் தப்பிக்க வேண்டும் என்ற மனஉறுதியோடும், பகுத்தறிவோடும் நடந்து கொண்டால் இமயமலையையே தாண்டலாம்,”' என்றார் அப்பா.

நான் தாண்டிய சுவரைப் பார்த்தேன். என்னை விட உயரமாக இருந்தது. என்னால் எந்த ஜென்மத்திலும் தாண்ட முடியாத உயரமுள்ள சுவர்.

சுவரைப் பார்த்துக் கொண்டே யோசித்தேன். சுவரை தாண்டியபோது என் மனதில் இருந்தது தெய்வமா? பகுத்தறிவா?.சுவரை குறி வைத்து ஓடி, அதைத் தாண்டியபோது என் மனதில் இரண்டுமே இல்லை.

மனதில் எதுவுமே இல்லை.

மனம் செயல்படவில்லை.

'வாடா போகலாம்,' என்றார் அப்பா.

நெடுஞ்சுவரைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தேன்.

(முற்றும்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms