யாருக்காக

மாலை ஆறு மணிக்கு நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது இருட்டி விட்டது. 

இறைவன் வாழ்வில் வரும் தருணத்தில் மனிதன் மீது பொழியப்படும் அடையருளை அவன் அலட்சியப்படுத்தும்போது, அது மெல்லக் குறைந்து மறைந்து விடுவதைப் போல, அதிகாலை முதல் பெய்து கொண்டிருந்த அடைமழை மெல்லக் குறைந்து, தூறலாகி, மாலையில் நின்று விட்டிருந்தது. 

தன்னலமற்ற அன்பை பிறருக்குத் தர மறுக்கும் அகம்பாவி, எவரோடும் கலந்துறவாடாமல் பிரிந்தே வாழ்ந்து சமூகத்திற்கு பிரச்சினை ஆவதைப் போல, மனிதனால் வீதியில் வீசியெறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் பைகளும் இயற்கையின் உடலான மண்ணோடு மட்கிக் கலக்காமல் தனித்தே இருந்ததால் மழைத் தண்ணீர் வடியாமல், மண்ணிற்குள் போக முடியாமல், தேங்கி நின்று, நான் அடுத்த அடி வைக்கப் போவது பாதையிலா, பள்ளத்திலா என்ற குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. 

எதிர்பார்ப்புகள் தந்த ஏமாற்றங்களால் வறண்டு போன இருண்ட வாழ்வை தன்னந்தனியாக எதிர்கொள்ளும் மனிதனுக்கு, எதிர்பாராமல் கிடைத்த பெண்ணின் ஒளிமிகுந்த பேரன்பு புதிய நம்பிக்கையைக் கொடுப்பதைப் போல இருண்டு விரிந்து கிடந்த வானத்தின் நடுவில் ஒளி வீசியபடி உருண்டோடிக் கொண்டிருந்த சிறு பூவேலைப்பாடு செய்யப்பட்ட வட்ட வடிவ பீங்கான் தட்டு போன்ற வெண்ணிலா எனக்கு உற்சாகத்தைத் தந்து, கூடவே என் மனைவி ஜமுனாவின் முகத்தையும் நினைவுப்படுத்தியது.

வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன். 

வீடு விளக்கேற்றப்படாமல் இருண்டிருந்தது. அக்கம்பக்கத்திலிருந்த எல்லா வீடுகளிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால் என் வீடு அதிகமாக இருண்டு தெரிந்தது. ஒளியைச் சுற்றி இருள் இருப்பது இயல்பே. இருளைச் சுற்றி ஒளி இருந்தது சற்று வித்தியாசமாக இருந்தது. 

வாசல் கதவு திறந்தே கிடந்தது. படுக்கை அறையில் மாயமான நீலநிற வெளிச்சம் தெரிந்தது. மெல்ல மின்விசிறி சுழலும் சத்தமும் கேட்டது. திருமணமான தினத்திலிருந்து ஒருநாள் கூட மாலையில் ஜமுனா விளக்கேற்றாமல் இருந்ததே இல்லை. என்ன ஆயிற்று அவளுக்கு?

படுக்கை அறையில் தளர்வாக கட்டி வைக்கப்பட்ட பட்டுச்சேலை மூட்டை போல கட்டில் மேல் என் பெண் காயத்ரி படுத்துறங்கிக் கொண்டிருந்தாள். அவளை அணைத்தபடி ஜமுனா கழற்றி வைக்கப்பட்ட மலர்மாலை போல ஒருக்களித்து சுருண்டு படுத்திருந்தாள். அவளருகே ஒரு புத்தகம் திறந்து கிடந்தது.

“ஜமுனா,” என்று மெல்ல அழைத்தேன். அவள் கண் இமைகளை சிறிது திறந்ததும், “என்ன ஆயிற்று?” என்று கேட்டேன்.
 
`கூடத்திற்குப் போகலாம். இங்கே எதுவும் பேசவேண்டாம்’ என்று சைகை காட்டிய ஜமுனா, எழுந்து சேலையை திருத்திக் கொண்டு என்னோடு அறையை விட்டு வெளியே வந்தாள்.

“உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன்.

“எனக்கென்ன? நன்றாகத்தான் இருக்கிறேன். காயத்ரிதான் வயிற்றுவலி என்று மத்தியானமே பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து விட்டாள்,” என்றாள் ஜமுனா.
 
“டாக்டரிடம் அழைத்துப் போனாயா?” என்று கேட்டேன்.

“போன் செய்தேன். டாக்டர் இரண்டு நாட்கள் ஊரில் இருக்கமாட்டாராம். அதனால் போகவில்லை,” என்றாள் ஜமுனா.

“எனக்கு போன் பண்ணியிருக்கலாமே?” என்று கேட்டேன்.

“அங்கே நீங்கள் என்ன வேலையாக இருப்பீர்களோ? நானே சமாளித்துக் கொள்ளலாம் என்று தோன்றியதால் போன் செய்யவில்லை. காயத்ரி வலி, வலி, என்று சொல்லிக் கொண்டே இருந்தாள் தூங்கவே இல்லை. காய்ச்சல் வேறு அடித்தது. அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி விட்டேன். வயிற்றை லேசாக அழுத்தி விட்டுக்கொண்டே தீவிரமாக பிரார்த்தனை செய்தேன். அரைகுறையாகத் தூங்கினாள். நடுநடுவே விழித்துக் கொண்டு அழுதாள். காயத்ரி குணமடைய வேண்டும் என்ற நினைப்போடு சாவித்ரி புத்தகத்தை எடுத்து மெதுவாக சில பக்கங்களை வாசித்தேன். எப்படியோ தூங்க ஆரம்பித்து விட்டாள். காய்ச்சல் இன்னமும் குறையவே இல்லை,” என்றாள் ஜமுனா.

“காலையிலிருந்து என்னவெல்லாம் நடந்தது? எல்லாம் சரியாக இருந்தால் உடம்பு கெட்டுப் போகாதே!” என்றேன். காலையிலிருந்து என்ன நடந்தது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஜமுனாவும் யோசிக்க ஆரம்பித்தாள்.

காரணமில்லாமல் காரியமில்லை. எது காரணம் என்பது காண்பவரைப் பொறுத்து மாறுகிறது. பாட்டியைக் கேட்டால் 'திருஷ்டி பட்டுவிட்டது, சுற்றிப் போடு. சரியாகி விடும்,’ என்கிறார்., மருத்துவரிடம் கேட்டால், 'இது கிருமிகளின் செயல். மருந்து சாப்பிட்டால் சரியாகிவிடும்,' என்கிறார். ஆன்மீகவாதி ‘அகத்தில் காரணத்தைத் தேடி, தவறை சரி செய்தால் நோய் தீரும்,’ என்கிறார். திருஷ்டி கழித்துவிட்டு, மருந்தை சாப்பிட்டுவிட்டு, அகக்காரணத்தை தேடும் ஜீவன்களும் உலகில் உண்டு.
 
எது சரி, எது தவறு? சரியும், தவறும் மனிதரின் நிலையை பொறுத்து மாறத்தான் செய்கின்றன. அடுத்தவருக்கு ஒத்து வருவது எனக்கு ஒத்து வரும் என்று யாரால் உத்தரவாதம் தரமுடியும்?
சிறிது நேர மௌனத்திற்கு பின் பெருமூச்சு விட்ட ஜமுனா, “இன்று மதியம் வேலைக்காரி வேலைக்கு வரவில்லை. யாரோ ஒரு பெண் மூலம் `எனக்கு காய்ச்சல். வேலைக்கு வரமாட்டேன்’ என்று சொல்லி அனுப்பி இருந்தாள். எனக்கு கோபம் வந்தது,” என்றாள்.

“என்ன கோபம்?” என்று கேட்டேன்.

“ஏதாவது பொய் சாக்கு சொல்லி வேலைக்கு வராமல் இருப்பதுதான் இவளது வழக்கம். நான் ஜென்மம் எடுத்ததே கேட்கும்போதெல்லாம் இவளுக்கு சாப்பாடு, துணி, பணம், விடுப்பு தருவதற்காகத்தான் என்ற நினைப்பில் வாழ்கிறாள். வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பே இல்லை. நானில்லை என்றால் ஒருவேளை சாப்பாடு நிம்மதியாக சாப்பிட முடியுமா என்று நினைப்பதே இல்லை. இவள் மட்டும் என்றில்லை எல்லா வேலைக்காரர்களுமே இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றாள் ஜமுனா.

இருண்டிருந்த கூடத்திற்குள் சன்னல் வழியே வந்த வெண்ணிலாவின் ஒளிக்கரங்கள், தரையில் செவ்வக வடிவ ஒளிச்சித்திரங்களை வரைந்திருந்தன. நிலாவைப் போலவே தன்னைத் தருவதற்கு பிறரிடம் அனுமதி கேட்டு காத்திராத குளிர்ந்த தென்றல் என்னையும் ஜமுனாவையும் மென்மையாக வருடிக் கொடுத்துவிட்டு, போகிறபோக்கில் தான் எங்கிருந்தோ சுமந்து கொண்டு வந்திருந்த ஜாதிமல்லி வாசத்தையும் கூடம் முழுவதும் பரப்பி விட்டுச் சென்றது.

நானும், ஜமுனாவும் ஒரே சமயத்தில் சன்னல் வழியே தெரிந்த வானத்தை நோக்கி எங்கள் பார்வையைத் திருப்பினோம். சின்னக் கவலைகளையும், சிறிய ஆசைகளையும் ஒரு கணம் மறந்துவிட்டு நிலவொளி ததும்பும் விழிகளால் ஆர்வத்தோடு வானத்தை அளந்தோம்.

“அப்பப்பா! வானம் எப்படி விரிந்து கிடக்கிறது. பெரிய, பெரிய நட்சத்திரமெல்லாம் சின்னச் சின்ன மூக்குத்தி போலத் தெரிகிறது. எத்தனை யுகங்களாக இவையெல்லாம் இருக்கின்றன! பிரம்மத்தின் பிரம்மாண்டமான படைப்பின் முன் நாமெல்லாம் வெறும் தூசி. அதன் காலமற்ற காலத்தில் நம் வாழ்நாள் என்பதே ஒரு கணம்தான். எல்லா மனிதர்களின் கற்பனையையும், கனவுகளையும் ஒன்று திரட்டினாலும் இந்த பிரம்ம படைப்பின் முன் அது கடலில் தோன்றும் நீர்க்குமிழிதான்,” என்று பரவசமான குரலில் கூறினாள் ஜமுனா.
 
“ஆமாம், ஜமுனா, பிரம்மத்திற்குதான் நம்மீது எத்தனை பிரியம்! இறைவன் நமக்காக, நம் சந்தோஷத்திற்காக இத்தனையையும் படைத்திருக்கிறார்,” என்றேன்.

சட்டென்று திரும்பி என்னைப் பார்த்தாள் ஜமுனா. அக்னித் தழலில் தீப்பொறி சிதறுவது போல, நிலவொளி வீசிய அவள் கண்களில் மின்னலொன்று தெறித்தது. பின் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் யோசித்தாள்.

“கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்களேன். இவை அத்தனையும் நமக்காகவா இருக்கின்றன? மனிதன் தோன்றுவதற்கு முன்பே இவை இருக்கவில்லையா? மனித குலமே மறைந்து விட்டாலும் இவை இருக்கத்தானே செய்யும்? நமக்குத் தெரியாத சக்தி ஏதோ ஒரு பெரிய லட்சியத்திற்காக இவற்றையெல்லாம் படைத்திருக்கலாம். எப்பேர்ப்பட்ட கட்டற்ற, அளவற்ற சக்தி இது! உங்களுக்கும் எனக்கும் வேலை வாங்கித் தருவதும், வீடு கட்டித் தருவதும், கல்யாணம் செய்துவைத்து, பிள்ளை பெற வைப்பதும்தானா இவ்வளவு பெரிய சக்தியின் லட்சியமாக இருக்க முடியும்?” என்று கேட்டாள் ஜமுனா.

அவள் பேச்சிலிருந்த தர்க்கத்தின் தெளிவும், மெய்யின் வலிமையும் என் இருப்பை, என் வாழ்வை, என் ஆளுமையை, என் அகந்தையை மிகச் சிறியவையாக உணர வைத்தன. என் சிறிய உருவத்தை உற்றுப் பார்த்துப் புன்னகைக்கும் ஆயிரம் யானைகளின் முன்னிற்கும் சிற்றெறும்பாக என்னை உணர்ந்தேன். “நான் முழு மூடன்! கண் சிமிட்டும் நேரத்தில் மனிதனின் சிறுமையை, இயலாமையை, அறியாமையை புரிய வைத்து விட்டாய். படைத்தவன் முன் மனிதன் ஒரு பொருட்டே அல்ல,” என்றேன்.
 
“அந்த நினைப்பும் சரியில்லை. பிரம்மத்திற்கு நாமும் முக்கியம் என்றுதான் நினைக்கிறேன். சர்வம் பிரம்மம் என்று சொன்ன பெரியவர்கள் சமம் பிரம்மம் என்றும் சொல்லி இருக்கிறார்களே!” என்றாள் ஜமுனா.
 
“சமம் பிரம்மம் என்பது சரிதானா? சன்னல் வழியே தெரியும் சூரியமண்டலத்தைப் பார். நம் தோட்டத்துமரத்தின் கீழே இருக்கும் எறும்புப்புற்றையும் பார். இரண்டும் சமமா? பார்த்தாலே எறும்புப்புற்று சிறியது என்பது தெரிகிறதே?” என்றேன்.

“அது அளவைப் பற்றிய அறியாமை. அளவு நாம் பார்க்கும் விதத்தில்தானே இருக்கிறது? மலை உச்சியில் நின்று கொண்டு பார்த்தால், பக்கத்தில் இருக்கும் மரம் பெரியதாகவும், கீழே இருக்கும் பத்துமாடிக் கட்டிடம் சின்ன பொம்மை போலவும் தெரியும். அது பார்வைக்கு உண்மை போலத் தோன்றினாலும் நாமிருக்கும் நிலையில் கொள்ளும் பார்வையின் பிழைதானே?” என்றாள் ஜமுனா.

“அளவை விடு. கல்லில் சிற்பம் செதுக்குவதை விட, அரிசிமணியில் சிற்பம் செதுக்குவது மிகவும் சிரமமானது. மிகவும் நுணுக்கமாக செய்யப்படவேண்டியது, எறும்புப்புற்று எத்தனை சிறியது! அதைச் செய்வது எவ்வளவு கஷ்டம். பெரிய சூரியமண்டலத்தைப் படைப்பதை விட, சிறிய எறும்புப்புற்றைச் செய்வது சிரமம். அந்த வகையில் தரத்தில் எறும்புப்புற்று உயர்ந்ததுதானே? இங்கே சர்வம் பிரம்மம் எப்படி செல்லுபடியாகும்?” என்று கேட்டேன். 

“இது தரத்தைப் பற்றிய தவறான நினைப்பு,” என்றாள் ஜமுனா. 

“இதுவும் தப்பா!” என்றேன். 

புன்னகைத்தாள் ஜமுனா. அவளது மோகனப் புன்னகைக்கு விலையாக சூரிய மண்டலத்தையே தரலாம்.

“கல்யாணம் செய்து கொண்டு, மனைவி ஆனதும் என் பெண்மையை உங்களுக்கு முழுமையாகத் தந்தேன். குழந்தை பெற்று தாயானதும், என் தாய்மையை குழந்தைக்கு முழுமையாகத் தந்தேன். இரண்டு நிலைகளிலும் நான் பூரணமாகத்தான் என்னைத் தந்தேன். குழந்தையைப் பார்த்துக் கொள்வது சாதாரணமான காரியமா என்ன? எத்தனை கவனமாக செய்ய வேண்டிய காரியம். தாய்மையின் கடமையை நுணுக்கமாகச் செய்வதால், நான் உங்களுக்குத் தந்த பெண்மை தரம் குறைந்ததாகி விடுமா? பெண்மையைத் தராவிட்டால் தாய்மை எங்கிருந்து வரமுடியும்?” என்றாள் ஜமுனா.

"நீ சொல்வது உண்மைதான், கணவனின் கைகளை அழுத்திப் பற்றுகிறாய், குழந்தையின் கைகளை மென்மையாகப் பற்றுகிறாய். வலிமையான காரியத்தையும், மென்மையான காரியத்தையும் சமமான பிரியத்தோடு செய்கிறாய்," என்றேன், 

“பிரியம் சமமானது என்றாலும், மனைவியாக இருப்பது வேறு, தாயாக இருப்பது வேறு,” என்றாள் ஜமுனா.

"குழந்தையையும், என்னையும், வீட்டையும் பார்த்துக் கொண்டு வேலையும் பார்க்கிறாய். வாழ்க்கையைப் பற்றிய தத்துவத்தைப் பற்றியும் யோசிக்கிறாய். இதுவரையில் உன்னைப் புரிந்து கொள்ள நான் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. எனக்காக நீ இருக்கிறாய், எனக்கு செய்ய வேண்டியது உன் கடமை என்று சுயநலமாக இருந்து விட்டேன். உன்னுடைய ஆசைகள், தேவைகள் என்ன, உனக்காக நான் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் ஒருதடவை கூட நான் நினைத்துப் பார்த்ததே இல்லை." என்றேன்.

"எதையாவது சொல்லாவிட்டால் உங்களுக்கு பொழுது போகாதே! நான் கேட்காமலே எனக்கு வேண்டியதை நீங்கள் செய்து கொடுப்பது எனக்குத் தெரியாதா என்ன? நம் கணக்கை விடுங்கள். நமக்காகத்தான் இருக்கிறது என்று பிரம்மத்தைப் பற்றி நாம் போடும் கணக்கு சரிதானா? இத்தனை காலமாக என் மனம் போட்ட கணக்கெல்லாம் கள்ளக்கணக்கு. எனக்கு நான்தான் முக்கியம். என் சந்தோஷத்திற்காகத்தான் எல்லாமே இருக்கின்றன என்று என்னை அறியாமலேயே வாழ்ந்து விட்டேன். நான் மட்டுமே எனக்கு முக்கியமாகி விட்டேன். எனக்காக பிரம்மம் இருக்கிறது என்று நினைத்து விட்டேன். அசல் அறியாமை! இது அகந்தையின் ஆணிவேர். பிரம்மத்திற்காக, அதன் லட்சியத்திற்காக நானிருக்கிறேன் என்ற நினைப்போடு இனிமேல் வாழப் போகிறேன்,” என்றாள் ஜமுனா.

"அப்பா," என்று மெல்லிய குரலில் கூறிக் கொண்டு படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தாள் காயத்ரி, கூடத்து மின்விளக்கை எரியவிட்ட ஜமுனா அவளை அணைத்து தூக்கிக் கொண்டாள். 

"நன்றாகத் தூங்கி எழுந்ததில் முகம் தெளிவாகி விட்டது. காய்ச்சலும் சுத்தமாக இல்லை," என்றேன்.

குழந்தையின் உடல் நிலையை மறந்து பிரம்மபோதத்தில் ஆழ்ந்திருந்த ஜமுனா, “எனக்காக பிரம்மம் இருக்கிறது, என் விருப்பப்படி அது செயல்பட வேண்டும் என்ற என் நினைப்பு சரியென்றால் தனக்காகத்தான் ஜமுனா இருக்கிறாள், தன் விருப்பப்படி ஜமுனா செயல்பட வேண்டும் என்று வேலைக்காரி நினைப்பதில் தவறொன்றுமில்லையே! நானும், வேலைக்காரியும் ஒரே ரகம்தான். அவள் மாறுகிறாளோ இல்லையோ, நான் இனி மாறப் போகிறேன்,” என்றாள்.

“அம்மா, அம்மா” என்று திறந்திருந்த வாசல்கதவின் வழியாக வேலைக்காரியின் குரல் கேட்டது. மிகவும் களைத்துப் போன தோற்றத்தோடு நின்று கொண்டிருந்த வேலைக்காரி, ஜமுனாவைப் பார்த்ததும், “அம்மா, பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். தனியாக சிரமப்படுவீர்களே என்பதால் என்னால் முடிந்தவரை ஏதேனும் செய்து கொடுத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்,” என்றாள்.

இவள் வேலைக்காரிதானா? அல்லது அவள் சாயலில் இருக்கும் வேறு யாரோவா? வேலைக்காரியின் போக்கு எனக்கு ஆச்சரியத்தை தந்தது போலவே ஜமுனாவுக்கும் ஆச்சரியத்தைத் தந்தது என்பது அவளது முகபாவத்திலிருந்து தெரிந்தது. “காய்ச்சல் என்றாயே!” அவள் நெற்றியை லேசாகத் தொட்டுப் பார்த்தாள் ஜமுனா. 

“எழுந்திருக்க முடியாத அளவிற்கு காய்ச்சல்தான். பாத்திரமாவது கழுவிக் கொடுத்து விட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். நாளை முடியவில்லை என்றால் அக்காவை அனுப்பி வைக்கிறேன். அவளையும் கூட நீங்கள் காலை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். நன்றாக வேலை செய்வாள். நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை சந்தோஷமாக வாங்கிக் கொள்வாள்,” என்றாள் வேலைக்காரி. 

“காய்ச்சலோடு ஏன் தண்ணீரில் கை வைக்க நினைக்கிறாய்? நாளை பார்த்துக் கொள்ளலாம்,” என்றாள் ஜமுனா.
 
“அதையெல்லாம் பார்த்தால் ஒரு வேலையும் நடக்காது,” என்று கூறிக் கொண்டே சமையலறையை நோக்கி வேலைக்காரி நடந்தாள்.

“கொஞ்சம் பொறு, காபி தருகிறேன்,” என்று அவள் பின்னோடு சென்றாள் ஜமுனா.

ஜமுனாவின் கண்களில் மகத்தான பிரபஞ்சம் ஒளியோடு ஒரு கணம் காட்சி தந்தது. அக்காட்சி உண்மையானதா அல்லது என் பிரமையா என்று தெரியவில்லை.

(முற்றும்)
 

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms