அஸ்திவாரம்

வெளியே போவதற்காக கதவைத் திறந்தபோது வாசலில் ஆனந்தி நின்று கொண்டிருந்தாள். “கதவை தட்டப் போனேன், என்னை வரவேற்க கதவை திறந்து விட்டீர்கள்!” என்றாள் ஆனந்தி.

“அப்படி வேறு நினைத்து விட்டாயா? நான் புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம் என்று நினைத்துக் கிளம்பினேன்,” என்றேன்.

ஒரு வெண்ணிற காகித உறையை எடுத்து நீட்டினாள் ஆனந்தி. “என் அப்பாவின் நண்பர் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். அதில் உங்களை விசேஷ தணிக்கையாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று என் அப்பாவிடம் கெஞ்சி, சண்டை போட்டு சிபாரிசு கடிதம் வாங்கி வந்திருக்கிறேன். அப்பாவும் தன் நண்பரிடம் பேசி விட்டார். நான்கு மணிக்குள் தன்னை வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார். உங்களை கையோடு அழைத்து செல்ல வந்திருக்கிறேன்,” என்றாள் ஆனந்தி.  

அக்காகித உறையை புரட்டி பார்த்து விட்டு அவளிடமே திருப்பி தந்தேன். “உனக்கு எதற்கு இந்த வீண் வேலை, நான் கேட்டேனா?” என்றேன்.. 

“நீங்கள் கேட்காமல் நான் செய்யக் கூடாதா என்ன? கிளம்புங்கள், என் காரில் போகலாம்,” என்றாள் ஆனந்தி.
 
“போகலாம் நேரே புத்தகக் கண்காட்சிக்கு,” என்று கூறியபடி கார் கதவைத் திறந்து காரின் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன்.  

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பிய ஆனந்தி “மாதம் ஏழு நாட்கள்தான் வேலை இருக்கும். லட்ச ரூபாய் ஊதியம் கிடைக்கும்,” என்றாள். 

“எனக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை,” என்றேன். 

“அது என்ன அப்படி சொல்லி வீட்டீர்கள்? பணம் தான் எல்லாவற்றிற்கும் அஸ்திவாரம். இறக்கை இல்லாத பறவை, எனக்கு பறப்பதில் விருப்பமில்லை என்று சொல்வதும், பணம் சம்பாதிக்க முடியாதவன் எனக்குப் பணத்தில் நாட்டமில்லை என்று சொல்வதும் ஒன்றுதான். சம்பாதித்துக் காட்டிவிட்டு. அதன்பின் அப்படி சொன்னால் நன்றாக இருக்கும்,” என்றாள் ஆனந்தி 

“இயலாமையை மறைக்க லட்சிய முகமூடி போடுகிறேன் என்கிறாய? நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்.எனக்கு ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும் மட்டும்தான் விருப்பம் இருக்கிறது. உயிர் வாழ்வதற்காக அவ்வப்போது ஏதேனும் வேலை பார்த்து சம்பாதிக்கிறேன். எனக்கெதற்கு பணம்? உனக்கு ஒரு கதை தெரியுமா? பணம் தனக்கு பக்கத்தில் வந்தாலே தன உடல் நடுங்கும் என்று ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார்.  அதில் நம்பிக்கை கொள்ளாத சீடரான விவேகானந்தர் குருவின் வார்த்தை உண்மையா என்று சோதிப்பதற்காக ஒரு அணா காசை ராமகிருஷ்ணரின் படுக்கைக்கு அடியில் அவருக்கு தெரியாமல் வைத்து விட்டார். அப்படுக்கையில் படுத்ததும் ராமகிருஷ்ணரின் உடல் நடுங்கி தூக்கி போட ஆரம்பித்து விட்டது. விவேகானந்தர் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்,” என்றேன்.

“பிற்காலத்தில் விவேகானந்தர் சிகாகோவிற்கு போக வாய்ப்பு வந்தபோது பணம் இல்லாமல் எப்படி போவது என்று தயங்கினார். அப்போது அவரது சீடர்கள் பணம் கொடுத்தார்கள். அப்பணம் இல்லை என்றால் அவரால் இந்தியாவில் ஆன்மீக பெருமையை உலகம் முழுவதும் பரப்ப முடிந்திருக்குமா?” என்று கேட்டாள் ஆனந்தி. 

“கடவுள் சீடர்கள் மூலம் பணம் தந்தார்,” என்றேன்.

“அதே கடவுள்தான் என் அப்பாவின் நண்பர் மூலம் உங்களுக்கு பணம் தருகிறார்,” என்றாள்.

“எதையாவது பேசாதே,” என்றேன்.

“வரலாறு தெரிந்த எவருக்கும் யோகிகளுக்கும், கலைஞர்களுக்கும் அரசர்கள் பணம் கொடுத்து ஆதரித்தார்கள் என்பது தெரியும். யோகிகளும், கலைஞர்களும் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் பொது மனிதர்கள். அரசாங்கம் நதிகள், காடுகள் போன்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது போல அவர்களையும் பாதுகாத்தது. கம்பரை  சோழனும், காளிதாசனை விக்கிரமாதித்தனும், தான்சேனை அக்பரும், பொருளும், பாதுகாப்பும் கொடுத்து ஆதரித்ததால்தான் அவர்கள் நிம்மதியாக தங்கள் நேரத்தை முழுமையாக கலை துறையில் செலவழித்து உன்னதமான ஆக்கங்களை தர முடிந்தது,” என்றாள் ஆனந்தி. 
 
“உண்மைதான்,” என்றேன்.

“உங்களுக்கு தெரியாத ராமாயணமா, மகாபாரதமா? அவற்றில் மன்னாதி மன்னர்கள் யோகிகளுக்கும், ரிஷிகளுக்கும் பொன்னும், பாதுகாப்பும் தந்து யாகங்கள் நடத்தவில்லையா? தங்கள் சக்தியை சம்பாதிப்பதில் செலவழிக்கும் அவசியம் இல்லாததால்தானே அந்த ரிஷிகளால் மனங்குவிந்து ஆன்மீக பணிகளை செய்ய முடிந்தது?” என்று கேட்டாள் ஆனந்தி. நான் மௌனமாக இருந்தேன்.

“மதர் எதற்காக ஆஸ்ரமம் ஆரம்பித்தார். சாதகர்களுடைய உலக தேவைகளை தான் பூர்த்தி செய்து விட்டால் அவர்கள் நிம்மதியாக யோகம் செய்வார்கள் என்றுதானே ஆஸ்ரமத்தை ஆரம்பித்தார்?” என்றாள் ஆனந்தி.

“எத்தனை பேர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள்?” என்றேன்.

“வாய்ப்பை எதிர்ப்பது மனிதசுபாவம். உங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். பணம் முக்கியமில்லை புத்தகக் கண்காட்சிக்குத்தான் போவேன் என்று நீங்கள் சொல்லவில்லையா? லட்சுமண ரேகை ராவணனிடமிருந்து சீதைக்குப் பாதுகாப்பு தந்தது போல, பணம் சமூகத்திடமிருந்து லட்சியவாதிகளுக்குப் பாதுகாப்பு தரும்.” என்று கேட்டாள்.

புத்தகக் கண்காட்சியை நெருங்கி விட்டோம். “பணத்தாசை பிடித்த உன் பேச்சை கேட்டுக் கொண்டு என் இலட்சியத்தை விட முடியாது,” என்று கூறிக் கொண்டே காரில் இருந்து இறங்கினேன். சாலையின் ஓரமாக காரை நிறுத்தி விட்டு ஆனந்தியும் இறங்கினாள்.

மிகவும் நெரிசலான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில்,  பழம்பெரும் கல்லூரிக்கு எதிர்புறமாக இருக்கும் பெரிய வளாகத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பழங்காலத்து கட்டடங்களாலான பள்ளிக்கூடம் ஒன்றிருக்கிறது. மரங்கள் கூட இருக்கும். எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில் இருக்கும் அக்கட்டடங்களின் நடுவே ஒரு பெரிய மைதானம் இருக்கிறது. அப்பள்ளியில் மனிதன் நடமாட அந்த மைதானம் ஓன்றுதான் பாதுகாப்பானது. அங்குதான் வருடாவருடம் மிகப் பெரிய தமிழ் புத்தக கண்காட்சி நடக்கும். இலக்கிய புத்தகங்கள் தேடித்தேடி வாங்குவதற்காக நான் செல்வதுண்டு. அழகான அட்டைபடமிட்டு கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட  புத்தம் புதிய புத்தகங்களை முகர்ந்து பார்த்து மலரிதழ்களை தொடுவது போல தொட்டுத் திருப்பி வரிவரியாக வாசித்து அப்புத்தகங்களில் இருப்பவற்றை  என் அக அனுபவமாக மாற்றி அதன் வழியே பிரபஞ்ச தரிசனம் பெற முயல்வதும், பார்க்கும் புத்தகங்களை பாய்ந்து வாங்க மனம் பரபரத்தாலும் இவ்வளவுதான் செலவழிக்கலாம் என்று கையிருப்பு விரித்த கட்டுப்பாட்டினால் புத்தகங்களை பொறுக்கி எடுத்து வாங்குவதும். நான் விரும்பிச் செய்யும் காரியம்.

புத்தகக் கண்காட்சி அருகே சாலையைக் கடக்கக் காத்திருந்த போது என்னை நோக்கி ஒரு மெலிந்த மனிதன் வந்தான். சரியாக சீவப்படாத பரட்டை தலை, கரியும், எண்ணையும், புழுதியும் படிந்த காக்கி நிற கால்சட்டை மேல் சட்டை அணிந்திருந்த அவனிடத்து வந்த பீடி நாற்றமும் வியர்வை நாற்றமும் என்னை சிறிது கலங்கடித்தன. 

தயக்கத்துடன்,  “சார் நீங்க சந்துருதானே? என்றான். 

“ஆமாம்” என்றேன்.

அவன் முகத்தில் தயக்கம் மறைந்து உற்சாகம் எழுந்தது. கண்கள் மின்ன “டேய் சந்துரு! நான்தான்டா பால்ராஜ்” என்றான்.

நாங்கள் இருவரும் தனியாகப் பேச வசதியாக ஆனந்தி சற்று தள்ளி நின்றாள்.

யார் இவன்?  என் தடுமாற்றத்தை கவனித்த பால்ராஜ் “உன் தம்பி குணாவும் நானும் ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோமே! நீ, குணா, நான் எல்லோரும் தெருவில் கிட்டிப்புள் ஆடுவோமே மறந்திட்டியாடா?” என்று கேட்டான்.
 
மங்கலான வெளிச்சமுள்ள என் நினைவறைகளில் லேசாக நிழல் படுவது போலிருந்தது.  எதுவும் தெளிவாக இல்லை இருந்தாலும் தலை சாய்த்து சிரித்து வைத்தேன்.

“அப்புறம் நீ என்ன பண்ணுகிறாய்?” என்று கேட்டான்.
 
“சார்ட்டர்ட் அக்கவுண்ட்டாக, ஆடிட்டராக இருக்கிறேன்” என்றேன். அது என்ன தொழில் என்று அவனுக்கு புரியவில்லை அதனால் அதைப் பற்றி அவன் அக்கறை கொள்ளவில்லை.

“குணா என்ன பண்ணுகிறான்?” என்று கேட்டான்.

“டாக்டராகி விட்டான்” என்றேன்.

“என்னது டாக்டரா!” அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஆமாம்,” என்றேன்.

“அடப்பாவி அவனெல்லாம் எப்படி டாக்டரானான்? எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.

“அமெரிக்காவில் இருக்கிறான்,” என்றேன்.

திகைத்து நின்றான் பால்ராஜ். சிறிதுநேர மௌனத்திற்கு பின், “நிறைய சம்பாதிக்கிறானா?” என்று கேட்டான்.

“ஆமாம்” என்றேன்.

“மாதம் ஒரு ஐம்பதாயிரம் வருமா?” என்று கேட்டான்.

“கூட வரும்,”

“மாதம் ஒரு லட்சம்?”  

“கூட வரும்,” 

“மாதம் பத்து லட்சம்?”

“கூட வரும்,”

அதற்கு மேல் அவன் அதைப் பற்றிக் கேட்கவில்லை. 

"எங்கே இந்தப் பக்கம்?" என்று கேட்டான். 

"புத்தகக் கண்காட்சிக்கு வந்தேன். அப்படியே நுங்கம்பாக்கம் சென்று வீணை இசைத்தட்டுகள் வாங்க வேண்டும்," என்றேன்.

சாலையில் வந்து முட்டும் ஒரு சிறிய சந்தின் முனையில், விரிசல் விட்ட    பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பெட்டிக் கடை இருந்தது. அங்கே பழைய சைக்கிள் டயர்களும், டியூப்களும் தொங்கின. ஒரு பெரிய பாத்திரத்தில் அழுக்குத் தண்ணீர் இருந்தது. அதை சுட்டிக் காட்டிய பால்ராஜ் “சார், அதுதான் என் கடை. சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை. நேரம் கிடைக்கும் போது வாருங்கள்” என்றான்.

அவ்வாறு செய்யும் உத்தேசம் எதுவுமின்றி “சரி” என்றேன்.

“டாக்டர் சார் இந்தியா வந்தால் நான் விசாரித்தேன் என்று சொல்லுங்கள். முடிந்தால் அவரையும் நம் கடைக்கு கூட்டிவாருங்கள்,” என்றான்.

“சரிப்பா” என்றேன்.

தலையசைத்து விடை பெற்றுக் கொண்டு தன் கடையை நோக்கி சில அடிகள் வைத்து வைத்த பால்ராஜ் மீண்டும் என்னிடம் வந்தான். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் “ சார்,  நீங்கள் எங்கே என் கடைக்கெல்லாம்  வரப் போகிறீர்கள்? உங்கள் நிலை வேறு, என் நிலை வேறு. நன்றாகப் படித்து முன்னுக்கு வந்துவிட்டீர்கள். சம்பாதிக்கிறீர்கள். மனதிற்குப் பிடித்த புத்தகம் வாசிக்கலாம். பாட்டு கேட்கலாம். நானோ முழு நேரமும் தொடர்ந்து  வேலை பார்த்தால்தான் இரண்டு வேளை சாப்பிட முடியும். சாப்பாட்டிற்காக வேலை, வேலை செய்ய சாப்பாடு. அவ்வளவுதான் என் வாழ்க்கை,” என்றான். பின் பெருமூச்சுவிட்டான். மீண்டும் தன் கடையை நோக்கி நடந்தான், திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிதுநேரம் தூரத்தில் தெரிந்த பால்ராஜின் கடையையே வெறித்து பார்த்துவிட்டு, பின் காரின் முன்னிருக்கையில் அமர்ந்தேன். வெளியே நின்று கொண்டிருந்த ஆனந்தியைப் பார்த்து, “காரை கிளப்பு, போகலாம்” என்றேன். 

“எங்கே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஆனந்தி. 

“உன் அப்பாவின் நண்பரை பார்க்கத்தான்,” என்றேன். 

“புத்தகக் கண்காட்சி?” என்று கேட்டாள் ஆனந்தி 

“அதற்கு என்ன அவசரம்? முதலில் பணம் சம்பாதிக்கிறேன். இலக்கியமோ, யோகமோ, அஸ்திவாரம்தான் முக்கியம்,” என்றேன். 

கன்னங்குழிய  புன்னகைத்த ஆனந்தி காரை கிளப்பினாள்.

(முற்றும்).
 

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms