ஐம்பது லட்சம் - பகுதி 1

மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. நேரமாக, நேரமாக கனத்தது. கண்ணைப் பறிக்கும் மின்னல்களும், காதைக் கிழிக்கும் இடிகளும் மழைக்குத் துணை சேர்ந்தன. உயரமான மரங்களின் ஈரமான கிளைகளிலே, பயந்துபோன பறவைகள் குளிர்காற்றில் விறைத்துப் போன இறகுகளுடன் அசைவின்றிப் படுத்திருந்தன.

அந்த அசாதாரணமான அதிகாலைப் பொழுதில் நான் விழித்துக் கொண்டிருந்தேன். தூங்கினால்தானே விழிப்பது பற்றிய கேள்வி? நான் தூங்கிப் பல நாட்களாகி விட்டன.

பூலோகமே சொர்க்கமாக மாறிய அந்த அற்புதமான நேரத்திலே எனக்கொரு பெரிய பிரச்சினை.

என்னிடம் பணமில்லை என்பதே அந்தப் பிரச்சினை.

பணமில்லாத காரணத்தால், என் வியாபாரம் கடலைக் காண முடியாத நதியைப் போல தடுமாறிக் கொண்டிருந்தது.

சரித்திரப் பேராசிரியர்களும், பேரறிஞர்களும் மனித வரலாற்றை கி.மு., கி.பி., - அதாவது கிறிஸ்துவிற்கு முன், கிறிஸ்துவிற்குப் பின் - என இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். நான் என் வாழ்க்கையை க.மு., க.பி., - அதாவது, கடனுக்கு முன், கடனுக்குப் பின் - என்று பிரித்திருக்கிறேன்.

****

என் கம்ப்யூட்டர் கடை ஓரளவு நன்றாகத்தான் ஓடிக் கொண்டு இருந்தது. விற்பனை நன்றாக இருந்தாலும் இலாபம் மிகக் குறைவுதான். காரணம் வேறென்ன? கழுத்தை அறுக்கும் கடும் போட்டிதான்.

போன மாதம்வரை அரை நிஜார் போட்டுக் கொண்டு நடுத்தெருவில் கிரிக்கெட் விளையாடிய சின்னப் பயல்களெல்லாம் கூட போட்டிக் கடை ஆரம்பித்து விடுகிறார்கள். போதாக்குறைக்குப் பெரிய கம்பெனிகள் வேறு "இ-காமர்ஸ் செய்கிறோம்' என்று இன்டெர்நெட்டில் பாதி விலைக்குப் பொருட்களை விற்கிறார்கள்.

என்னைப் போன்ற சிறு வியாபாரிகள் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

நான் தனிக்கட்டை. சின்ன அழகான வாடகை அபார்ட்மெண்டில் குடியிருந்தேன். ஒன்பது வயதான வெள்ளை நிற மாருதி கார் எனக்குச் சொந்தம்.

பளபளக்கும் புத்தம் புதிய ஓபல் ஆஸ்ட்ரா கார், போயஸ் கார்டனில் ஒரு வீடு, உலகப் பேரழகி பட்டம் வாங்கிய பெண் போன்ற மனைவியோடு வாழ்க்கை - இவையெல்லாம் என் வாழ்வில் நடக்குமா என்று தெரியவில்லை.

நான் உழைப்பதற்கு அஞ்சியவனில்லை. எப்படி வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் என்ற திட்டங்களோடுதான் கண் விழிப்பேன். எப்படி நிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவுகளோடுதான் தூங்குவேன்.

ஆனால், 'இனிமேல் கையில் இருக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள்கூட நிலைக்குமா?' என்ற பெரிய சந்தேகம் இப்போது வந்துவிட்டது.

என் பிரச்சினைக்கு நான் காரணமில்லை. எல்லாம் என் வாடிக்கையாளரால் வந்த வினை.

ஸ்டார்டெக் என்ற பெரிய கம்பெனிக்கு நான் அவ்வப்போது கம்ப்யூட்டர்கள் விற்பேன். இந்தக் கம்பெனியிலிருந்து போன மாதம் பதினைந்து இலட்சம் ரூபாய்களுக்குப் பெரிய ஆர்டர் கிடைத்தது. வேறு சில வாடிக்கையாளர்கள் மூலம் இருபது இலட்சம் ரூபாய்களுக்குப் புதிய ஆர்டர்கள் வரும் போலிருந்தது.

எனக்குத் தலைகால் புரியவில்லை.

சொன்ன தேதியில், சொன்னபடி ஸ்டார்டெக்கிற்குப் புதிய கம்ப்யூட்டர்களைக் கொடுத்து விட்டேன். அன்றிலிருந்து பதினைந்தாவது நாள் ஸ்டார்டெக் எனக்குப் பணம் தந்து விடுவதாகப் பேச்சு. என் வாடிக்கையாளர் பணம் தந்ததும், நான் மொத்த வியாபாரிகளுக்குப் பணம் கொடுத்து விடுவேன். அதுதான் வியாபார வழக்கம்.

அந்த வழக்கத்திற்கு ஸ்டார்டெக் வெடி வைத்தது. பதினைந்தாம் நாள் ஒரு சின்ன பிரச்சினை பற்றிப் பேச ஸ்டார்டெக் முதலாளி கண்ணபிரான் என்னை அழைத்தார்.

சின்ன பிரச்சினை!

அவரது வங்கி இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துதான் கடன் தர முடியும் என்று சொல்லிவிட்டதாம். அதனால் எனக்கு இரண்டு மாதம் கழித்துதான் பணம் தர முடியும் என்றும், அது எனக்குச் சரி வாராது என்றால் கம்ப்யூட்டர்களைத் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறும் கூறினார்.

பிறர் உபயோகித்த கம்ப்யூட்டர்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய முடியும்? வேறு வழியில்லாமல் 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்று இரண்டு மாதங்களுக்கு ஒப்புக்கொண்டேன்.

அன்று முதல் விதி கோரத் தாண்டவமாடியது.

நான் மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்த செக்குகள் பணமின்றி திரும்பின. 'இன்னொரு தடவை இதுபோல் நடந்தால் கணக்கை முடிக்க வேண்டியதுதான்,' என்று என் வங்கியிலிருந்து பதிவுத் தபால் வந்தது.

வெற்றியைப் பிறரிடம் சொல்லாமல் மறைக்கலாம். தோல்வியை மறைக்க நினைப்பது பேதமை.

பரந்து விரிந்த சென்னை மாநகரிலிருந்த ஒரு கோடி பேருக்கும் என் பிரச்சினை பற்றித் தெரிந்துவிட்டது போலவும், அவர்கள் வேறு எந்த வேலையும் இல்லாமல் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது போலவும் பிரமை. மிகவும் அவமானமாக இருந்தது. ஒருவரையும் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. நண்பர்கள், உற்றார், உறவினர்கள் என்று எவரையும் பார்க்கப் பிடிக்கவில்லை.

மூலப் பொருட்கள் வாங்க முடியாததால் முன்பணம் கொடுத்த வாடிக்கையாளர்களுக்குச் சொன்னபடி, சொன்ன தேதியில் என்னால் கம்ப்யூட்டர்களைத் தர முடியவில்லை. அப்போதுதான் தமிழில் எத்தனை வகையான வசவுகள் உண்டு என்று தெரிந்தது.

வட்டிக்குப் பணம் தந்தவர்கள், உடனே பணத்தைத் திரும்பக் கேட்டார்கள். ஒரு சிலர், "வட்டிகூட வேண்டாம். அசலை மட்டும் கொடுத்து விடுங்கள்," என்று பெருந்தன்மை காட்டினார்கள்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் உருட்டல், புரட்டலை ஆரம்பித்தேன். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று அனைவரிடமும் கடன் கேட்டேன். பெரும்பாலும் கிடைக்கவில்லை.

என் பிரச்சினையைப் பற்றித் தெரியாத "நல்ல உள்ளம்' கொண்டவர்கள் மாதம் மூன்று வட்டிக்கும், நான்கு வட்டிக்கும் கடன் தந்தார்கள். வட்டி என்ன பெரிய வட்டி? பணம் இன்று வரும், நாளை போகும். கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா?

யாரும் கடன் தாராதபோது உருட்டல் நின்றது. புரட்டலும் தானே நின்றது. பின் எவற்றையெல்லாம் விற்க முடியுமோ, அவற்றையெல்லாம் விற்றேன். ஒரு மேஜை, சில நாற்காலிகள், கட்டில், பழைய கார் - இவைதான் மிஞ்சின. இவற்றையும் எப்படியாவது விற்றுவிடலாம் என்றுதான் முயன்றேன். என்ன செய்வது? வாங்க ஆளில்லையே!

அதற்கடுத்த வாரம், எனக்கு மிகவும் வேண்டிய மொத்த வியாபாரி ஒரு பெரிய வேனையும், மூன்று குண்டர்களையும் என் கடைக்கு அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் என் கண்ணெதிரே அள்ளிச் சென்றனர். குண்டர்களானாலும் நல்ல தன்மை கொண்ட மனிதர்கள். "கவலைப்படாதே தலைவா, எல்லாப் பணத்தையும் கொடுத்தவுடன், நாங்களே இந்தப் பொருட்களைத் திரும்பவும் கொண்டு வந்து நன்றாக அடுக்கி விடுவோம்,'' என்று உறுதி கூறி, விடை பெற்றனர்.

காலியான கடைக்குச் செல்வது வீண் வேலை என்பதால் நான் வீட்டிலேயே உட்கார்ந்து கவலைப்படுவதில் நேரத்தை செலவிட்டேன். நேரத்தைத் தவிர வேறு எதை என்னால் செலவு செய்ய முடியும்!

எண்ணி பதினைந்தே நாட்களில் பரதேசி ஆனேன். பெருநோயாளியாக, காட்டு விலங்காக, தீண்டத்தகாதவனாக என் உலகம் என்னைப் பார்த்தது.

தொலைபேசி தொல்லைபேசி ஆனது. சில சமயம் குரலை மாற்றிப் பேசி, "இது ராங் கால்," என்று சாதித்தேன்.

அழைப்பு மணி ஆபத்து மணி ஆனது. விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு வீட்டுக்குள் யாருமில்லாதது போல்உட்கார்ந்திருந்தாலும் கடன் கொடுத்தவர்கள் மிகவும் விவரமானவர்களாக இருந்தார்கள். 'எப்படி வியாபாரம் செய்வது? நேர்மை என்றால் என்ன?' என்பது பற்றி சின்னச் சின்ன சொற்பொழிவுகள் தந்தார்கள்.

ஏதேனும் பூகம்பம் வந்து, எல்லாக் கடன்காரர்களும் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

எல்லாக் கடன்களையும் திருப்பிக் கொடுத்தபின், என்னை அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு நான்கு கேள்விகளாவது நறுக்கென்று கேட்க வேண்டும். அப்போதுதான் மனம் ஆறும்.

எந்த தெய்வ நம்பிக்கையும் இல்லாத நான், 'எதற்கும் இருக்கட்டும்,' என்று முக்கியமான கோவில்களுக்கு வேண்டுதல்கள் செய்து வைத்தேன். அந்தச் சமயத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்பட்ட தெய்வத்திடம் 'பிரச்சினையைத் தீர்த்துவைத்தால், இனி வரும் வருமானத்தில் கால் பங்கை கொடுக்கிறேன்,' என்று வேண்டிக்கொண்டேன். கோவிலை விட்டு வெளியே வரும்போது கால் பங்கு சற்று அதிகம் போல் தோன்றியது.

'பரவாயில்லை, பிரச்சினை தீரட்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம்,' என்று முடிவு செய்துகொண்டேன்.

சாமியார் ஒருவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், அவர் கையால் பிரசாதம் பெற்றுவிட்டால் ஒரே நாளில் பிரச்சினைகள் மறைந்து விடும் என்றும் வீடு கூட்டும் பெண் கூறியதன் பேரில், தெரிந்தவர்களிடம் கெஞ்சி, சிபாரிசு பெற்று, அவரை விசேஷ தரிசனம் செய்து, காணிக்கை தந்து, பிரசாதம் வாங்கினேன். மறுநாள், செய்திகளை முந்தி தரும் தினசரிப் பத்திரிக்கையில், அவருடைய வண்ணப்படத்தை முதல் பக்கத்தில் பெரியதாகப் போட்டு, பலே சாமியாரின் சரச சல்லாப உல்லாச ராசலீலா வினோதங்களை விலாவாரியாக, பத்தி, பத்தியாக விவரித்திருந்தார்கள். அத்தோடு, எல்லாச் சாமியார்களுக்கும் பெரிய கும்பிடு போட்டுவிட்டேன்.

எண் கணித நிபுணர்களோ, என் வியாபாரப் பெயரில் எந்த வில்லங்கமும் இல்லை, இயற்பெயரில்தான் பிரச்சினை என்றும், பெயர், பிறந்த தேதிக்கு பொருத்தமாக இல்லாததே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்றும் சொன்னார்கள். அதனால், என் பெயருக்குச் சம்பந்தமே இல்லாத பல ஆங்கில எழுத்துக்களைப் பெயரில் புகுத்தி, சுத்தமாகக் குளித்து, பால் சாம்பிராணி போட்டு, பதினான்கு நாட்களுக்கு, தினமும் குறைந்தது ஐம்பது முறை புதிய பெயரை விடாமல் எழுதச் சொன்னார்கள். பால் சாம்பிராணிப் புகையில் மூச்சு முட்டியதும், வெள்ளைத் தாளும், பேனா மையும், நேரமும் வீணானதுமே நான் கண்ட பலன்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே முக்காலத்தையும் துல்லியமாக ஒரு மாமுனிவர் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பதாகவும், ஐநூறே ரூபாயில் வாழ்வின் அனைத்து இரகசியங்களையும் சுலபமாக அறிந்து கொள்ளலாம் என்றும் கேள்விப்பட்டேன். விஷயத்தைச் சொன்னவர் சரியான விலாசத்தைச் சொல்லாததால், அலைந்து, திரிந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகே அந்த நாடி சோதிடரின் வீட்டைக் கண்டுபிடித்தேன். என் கட்டைவிரல் ரேகையை பரிசோதித்த சோதிடர், "உன் பெயருக்கு ஓலைச் சுவடியே இல்லை," என்று கையை விரித்துவிட்டார். அகத்திய முனிவருக்கே என் அந்தரங்கத்தைப் பற்றி எழுதப் பிடிக்கவில்லை போல் இருக்கிறது.

விவரம் தெரிந்த நாளிலிருந்து, சோதிடத்தைக் கேலி செய்து வந்து நான், என்னென்ன வகையான சோதிடங்கள் உண்டோ, அனைத்தையும் பார்த்துவிட்டேன்.

கடைசியாகப் பார்த்த மலையாள சோதிடர், "ஆறாம் இடத்தில் கெட்ட கிரகங்கள் இருப்பதால்தான் வாழ்க்கை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது," என்று இருநூறு ரூபாய் தட்சணை வாங்கிக்கொண்டு, சோழி போட்டுப் பார்த்து, கண்டுபிடித்துச் சொன்னார். அதற்குப் பரிகாரமாக, செவ்வாய்கிழமை தோறும் ராகு காலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி, பிரதி சனிக்கிழமைதோறும் விரதமிருந்து, காகத்திற்கு சாதம் தந்து, சனிபகவானுக்கு எள் தானமும் செய்யச் சொன்னார். விரைவாகத் துன்பம் விலகி, பெரிய அதிர்ஷ்டம் என்னைத் தேடி வர, வரிசையாகப் பல வகையான பரிகாரங்களைச் செய்யச் சொன்னார்.

வீட்டிலே மனைவி, அம்மா, அக்கா, தங்கை என்று பெண்கள் இருந்தால் எனக்காக அவர்களை விரதம், நோன்பு, பரிகாரம் ஆகியவற்றைப் பண்ணச் சொல்லலாம். எனக்குதான் அந்தக் கொடுப்பினை இல்லையே. ஆண்பிள்ளையான எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். இவற்றையெல்லாம் என்னால் எப்படிச் செய்ய முடியும்?

ரிஷிகளாலும், ஞானிகளாலும் கண்டறியப்பட்டு, போற்றி வளர்க்கப்பட்ட ஜோதிட சாஸ்திரங்கள் உண்மையானவையாக இருக்கலாம். ஆனால், நான் சந்தித்த ஜோதிடர்கள் மூலம் எனக்கு எந்த நல்ல பலனும் கிடைக்கவில்லை. என் நேரமும், பணமும் வீணாகி, மனமும், உடலும் தளர்ந்தது மட்டும்தான் இந்த சோதிடத்தாலும், பரிகாரத்தாலும் அடியேன் கண்ட பலன். எனவே, இனிமேல் பகுத்தறிவோடு செயல்பட்டு, என்னை நானே காப்பாற்றிக் கொள்வதென்று உறுதியாக முடிவு செய்தேன்.

என்னைக் காப்பாற்றிக் கொள்ள இரவு, பகலாகப் பல்வேறு கணக்குகளைப் போட்டேன். அவற்றைப் பார்த்தால் பாவம், கணித மேதை இராமனுஜரே குழம்பிப் போயிருப்பார். என் சிற்றறிவுக்கு எட்டியக் கடைசி கணக்கின்படி, கையில் பத்து இலட்சம் ஒரு வாரத்திற்குள் கிடைத்தால் மீண்டும் கடையை ஆரம்பித்து விடலாம், புதிய ஆர்டர்களையும் எடுத்து விடலாம், விரைவில் வியாபாரம் சரியாகி விடும். காலப்போக்கில் எல்லாக் காயங்களும் ஆறி விடும்.

ஒரு வாரத்தில் பத்து இலட்சம் கிடைக்க இரண்டு வழிகள்தாம் இருந்தன. தண்ணீர் வாராத குழாயிலிருந்து பணம் கொட்ட வேண்டும். அல்லது தலைக்கு மேலிருந்து திடீரென மழைபோல் பணம் கொட்ட வேண்டும்.

இரண்டுமே நடக்கப் போவதில்லை.

இப்படியாக மனச்சுமையுடனும், மன வேதனையுடனும் அந்த அற்புதமான அதிகாலை வேளையில் வரதனாகிய நான் கண் விழித்திருந்தேன்.

****

Tamil Author Term
Tamil Content Terms