ஐம்பது லட்சம் - பகுதி 2

தொலைபேசி சிணுங்கியது. எடுக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம். பூவா, தலையா போட்டுப் பார்க்கலாம் என்றால் கையில் காசில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டு ரிசீவரை எடுத்தேன்.

மறுமுனையில் மணிவாசகம் பேசினார். 'மனிதர் என்ன சொல்லப் போகிறாரோ,' என்று மனம் துணுக்குற்றது.

"வரதன், எப்படி இருக்கிறீர்கள்?'' என்றார் மணிவாசகம்.

"ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை,'' என்று மன்னிப்புக் கேட்கும் பாவனையில் சொன்னார் மணிவாசகம். 'பரவாயில்லையே, பரந்த உலகில் எனக்கு மட்டும்தான் பிரச்சினை' என்று நினைத்துக் கொண்டேன்.

"என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் மணி,'' என்று ஆதரவான குரலில் சொன்னேன்.

"என் மனைவியோடு அவசரமாக மருத்துவமனைக்குப் போக வேண்டியுள்ளது. எங்கள் குடும்ப நண்பர் ஏழு மணிக்கு பாரிஸ் செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். டாக்ஸியில் அனுப்பினால் மரியாதையாக இருக்காது. நீங்கள் அவரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா?'' தயக்கத்தோடு கேட்டார் மணிவாசகம்.

இந்தக் கொட்டும் மழையிலும், குளிரிலும் ஒரு மணி நேரம் கார் ஓட்டவேண்டும் என்ற நினைப்பே சிரமத்தைத் தந்தது. ஆனால், என்னால் மறுக்க முடியவில்லை. நான் மணிவாசகத்திற்கு அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டும்.

"இன்னும் கால் மணி நேரத்திற்குள் உங்கள் வீட்டில் இருப்பேன்,'' என்றேன்.

"நன்றி, வரதன். நீங்கள் சமயசஞ்சீவி. நண்பரை வீட்டு வராண்டாவில் காத்திருக்கச் சொல்கிறேன். நானும், என் மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டுப் போகிறோம்,'' என்று கூறி தொலைபேசியை வைத்தார் மணிவாசகம்.

கிளம்புமுன் அலமாரியை உருட்டியதில் ஒரே ஒரு நூறு ரூபாய் தாள் கிடைத்தது. இன்று சுபயோக சுபதினம்தான்.

நான் மணிவாசகத்தின் வீட்டை அடைந்தபோது, ஒரு வெளிநாட்டுக்காரர் வீட்டு வராண்டாவில் ஒரு பெரிய பை மீது உட்கார்ந்திருந்தார்.

அவர்தான் மணிவாசகத்தின் நண்பர் என்று ஊகித்தேன். வீட்டுக் கதவு இழுத்துப் பூட்டி இருந்தது. மணிவாசகம் தம் மனைவியோடு மருத்துவமனைக்குக் கிளம்பிப் போய்விட்டிருந்தார்.

"வணக்கம். என் பெயர் வரதன்,'' என்று ஆங்கிலத்தில் என் திறமையைக் காட்டினேன்.

"வணக்கம். இவர் பெயர் புனித்,'' என்று தூய தமிழில் பதில் சொன்னார்.

"புனித்தா? இந்தியப் பெயரைப்போல் இருக்கிறதே!'' என்று தமிழில் வியந்தேன்.

"பிறப்பால் பிரான்ஸ் என்றாலும், உணர்வால் இந்தியர். அதனால், இவர் தம் பெயரை புனித் என்று மாற்றிக் கொண்டு விட்டார்,'' என்றார் புனித்.

நான், என் என்ற வார்த்தைகளின்றி புனித் பேசுவதை கவனித்தேன். ஒவ்வொரு வரியையும் சிறிது தயக்கத்திற்குபின் பேசினார். 'வேடிக்கை மனிதர்கள் உலாவும் உலகமடா இது,' என்று தோன்றியது. இருவரும் கை குலுக்கினோம்.

புனித்திற்கு அறுபது வயதிருக்கும். உயரமான மனிதர். கனவு கண்களில் அமைதி தவழ்ந்தது. கண்கள் ஒளியுடன் பளபளத்தன. "ஏதோ விசேஷமான வெளிநாட்டு கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கிறார் போலிருக்கிறது,' என நினைத்துக் கொண்டேன்.

"போகலாமா?'' என்று கேட்டு அவரது பெரிய பையைத் தூக்க முடியாமல் தூக்கி, தொப்பென்று பின் சீட்டில் போட்டேன். காருக்குள் ஏறி படாரென்று கதவை மூடினேன்.

"நன்றி.'' என்ற புனித் தன் சிறு கைப்பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறினார். முன் சீட்டில் அமர்ந்துகொண்டு, மெதுவாக ஆனால் உறுதியாக கதவை மூடினார். கதவுக்கு வலிக்கும் என்று கவலைப்பட்டாரோ என்னவோ!

காரை மெதுவாக, கவனமாக ஓட்ட ஆரம்பித்தேன்.

சற்று நேரம் பொறுத்து புனித், "உங்கள் காரில் புகை பிடிக்கலாமா?'' என்று கேட்டார்.

"தாராளமாக,'' என்று கூறிவிட்டு, அவர் பக்கத்து ஜன்னல் கதவை இறக்கிவிட்டேன். மழைச்சாரல் காருக்குள் வருமே என்று பதட்டமாக இருந்தது. பெரிய சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார் புனித். மிகவும் ரசித்து சுருள் சுருளாக புகை விட்டார். "இந்தக் காலத்தில் நல்ல சுருட்டு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது,'' என்று அங்கலாய்த்தார்.

சுருட்டின் கடுமையான நெடி எனக்குக் குமட்டியது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, "நான் புகைப் பிடிப்பதில்லை. எனக்கு சுருட்டு பற்றி எதுவும் தெரியாது,'' என்றேன்.

என் குரலில் இருந்த எரிச்சலைக் கவனித்த புனித், உடனே சுருட்டை ஆஷ்டிரேயில் போட்டார். "சில சமயங்களில் புனித் கவனக் குறைவாக இருந்து விடுகிறார். அவரை மன்னியுங்கள்,'' என்று சாந்தமான குரல் சொன்னார்.

"புனித் புரிந்துகொண்டதற்கு சந்துருவின் நன்றி,'' என்று விளையாட்டாகச் சொன்னேன். விரைவாக ஜன்னல் கதவுகளை மூடினேன். மனம் ஏதோ கொஞ்சம் நிம்மதி அடைந்தது. புனித் புன்னகைத்தார். எனக்கு அவரை மெல்லப் பிடிக்க ஆரம்பித்தது.

"நீங்கள் இந்தியா வருவது இதுதான் முதல் முறையா?'' என்று கேட்டேன்.

"இல்லை. புனித் வருடா வருடம் இந்தியா வருவார்,'' என்றார் புனித்.

அடுத்த முறை வரும்போது இவரை டிஜிட்டல் கேமிரா வாங்கிவரச் சொல்லவேண்டும். ஆசை யாரை விட்டது?

"சுற்றுப்பயணம் பிடிக்குமோ?'' என்று கேட்டேன்.

"இல்லை. புனித்திற்குப் பயணம் செய்யப் பிடிக்காது. பாரிஸில் தம் அறையில் அமர்ந்து, மௌனமாக வேலை செய்யத்தான் பிடிக்கும்,'' என்றார் புனித்.

"போயும், போயும் இந்தியாவிற்கு ஏன் வருடா, வருடம் வருகிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"புனித்தின் நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கான்ப்ரன்ஸ் நடத்துவார்கள். அவர்களுக்கு உதவ இவர் வருவார்,'' என்றார் புனித்.

"ஓ! நீங்கள் பேச்சாளரா?'' என்றேன்.

"இல்லை. வியாபாரிகள் தொழில், வருமானம், கடன், தொழிற்சாலை போன்ற விஷயங்களில் உள்ள சிக்கல்கள் பற்றியும், தங்கள் சொந்த பிரச்சினைகள் பற்றியும் கேள்விகள் கேட்பார்கள். புனித்தின் நண்பர்கள் அவற்றை எப்படித் தீர்க்கலாம் என்று பதில் சொல்வார்கள். வில்லங்கமான கேள்விகளுக்கு புனித் விவரமாகப் பதில் சொல்வார்,'' என்றார் புனித். கெட்டிக்காரர்கள் தாம்.

"புரிகிறது. ஆர்டர் பிடிப்பது, கடன் ஏற்பாடு செய்வது போன்றவற்றைச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும்,'' என்றேன்.

புன்னகைத்தார் புனித்.

"என்ன செய்வது! பலர் இப்படித்தான் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். பிரச்சினைக்கான இந்தத் தீர்வுகள் வேறு வகையானவை. புனித்தின் நண்பர்கள் சில புதிய கருத்துகளைப் பற்றிக் கூட்டத்தில் விளக்குவார்கள். பின் கேள்விகளும், பதில்களும் அவற்றை ஒட்டியே இருக்கும். அவரவர் பிரச்சினைகளை அவரவர்தாம் தீர்க்க முடியும்,'' என்றார் புனித்.

இது போன்ற எத்தனை, எத்தனையோ விளம்பரங்களைப் பார்த்தாகிவிட்டது. உலக பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் அறிவாளி மர்மமான மந்திரத் தீர்வு சொல்கிறார். "கேட்பவன் ஏமாளி என்றால் கழுதை கப்பலோட்டியது,' என்றுதான் சொல்வார்கள். சரி, சரி. அடுத்தவர் விவகாரத்தில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? எவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நம் பிரச்சினையே பெரிய பிரச்சினை.

"கூட்டத்திற்கு நிறைய பேர் வருவார்களா?'' என்று கேட்டேன்.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டார் புனித்.

மனம் சுருங்கியது. பதில் சொல்லப் பிடிக்கவில்லை. "கம்ப்யூட்டர் கடை வைத்திருக்கிறேன்'' என்று கூறிவிட்டு கார் ஓட்டுவதில் கவனமானேன்.

"உங்களுக்கு கான்ப்ரன்ஸ் மிகவும் பயன்படும்'' என்றார் புனித்.

"ஆமாம், ஆமாம்'' என்று ஒத்து ஊதிவிட்டு, 'இலவச பாஸ் கொடுத்தால் கான்பரன்சுக்குப் போகலாம்,' என்று நினைத்துக்கொண்டேன்.

மேற்கொண்டு ஏதேனும் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஏனோ, அவருடன் மேலும் பேச வேண்டும் என்று தோன்றியது. அவர் கைப்பையில் பெரிய புத்தகங்கள் இருந்ததை கவனித்தேன். "நிறைய வாசிப்பீர்கள் போலிருக்கிறது'' என்றேன்.

"ஆம். இவர் நிறைய வாசிப்பார்,'' என்றார் புனித்.

"என்ன மாதிரியான புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்கும்?'' என்று கேட்டேன்.

"ஆன்மீகப் புத்தகங்கள் என்றால் அலாதிப் பிரியம்,'' என்றார் புனித்.

சரிதான். வயதாகிவிட்டதல்லவா? போகிற வழி நல்லதாக இருக்கட்டும்.

"நான் பதினாறு வயதிலேயே கீதை படித்திருக்கிறேன்'' என்று பெருமை அடித்துக்கொண்டேன்.

"அப்படியா!'' என்று வியந்தார் புனித். "இவர் நாற்பது வயதில்தான் கீதையைப் படித்தார்,'' என்றார்.

அவர் வியப்பைப் பார்த்து எனக்கு மிகவும் உற்சாகமாகவும், பெருமையாகவும் இருந்தது. "ஆனாலும் எனக்கு, கிருஷ்ணர் பண்ணிய காரியம் கொஞ்சமும் பிடிக்கவில்லை,'' என்றேன்.

"ஏன்?'' என்றார் புனித்.

"பகையாளி அர்ஜுனனே 'சண்டை வேண்டாம், சமாதானமாகப் போகலாம்,' என்று நினைத்தபோது கிருஷ்ணர் இவ்வளவு விளக்கமாக உபதேசம் செய்து மகாபாரதப் போர் நடத்தியது சரிதானா?'' என்றேன்.

"அதில் என்ன தவறு?'' என்றார் புனித்.

"என்ன தவறா? கடவுள் அன்பு மயமானவர்,'' என்றேன்.

"அப்படி யார் சொன்னது?'' என்று கேட்டார் புனித்.

'இவர் என்ன சரியான விவகாரம் பிடித்த மனிதர் போலிருக்கிறதே,' என்று தோன்றியது. "நான் படித்த ஆன்மீகப் புத்தகங்களில் அப்படித்தான் எழுதியிருக்கிறது,'' என்று உறுதியாகச் சொன்னேன்.

"அந்தப் புத்தகங்களை எழுதியது மனிதனா? கடவுளா?'' என்று கேட்டார் புனித்.

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரம் பேசாமலிருந்தேன். தத்துவ விசாரம் செய்யும் நேரமா அது? தெய்வமே, அதிகாலையில் ஏன் எனக்கு இந்த அனாவசியமான சோதனை? ஆனால், மனிதர் என் மன வேதனையைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

'என்னைப் பற்றி ஏதேனும் அரசல், புரசலாகத் தெரிந்திருக்குமோ,' என்று கூச்சமாக இருந்தது.

"முதலில் கவலைப்படுவேன். அப்புறம், சொத்து, கடன், வரவு, செலவு எல்லாவற்றையும் அலசி ஒரு தெளிவான முடிவுக்கு வருவேன். வருமானத்தைக் கூட்டவோ, மேற்கொண்டு பணம் புரட்டவோ வழி தேடுவேன்,'' என்றேன்.

"சரி. உங்களுக்குப் பிடித்ததை மட்டும் செய்துவிட்டு பிறவற்றைக் கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்?'' என்றார்.

"முதலில் குழப்பம், முடிவில் திவால்'' என்றேன்.

"பெரும்பாலான ஆன்மீகப் புத்தகங்கள் இறைவனின் ஒரே ஒரு பகுதியைப் பற்றி மட்டும் பேசுகின்றன. அது தவறுக்கு வழி செய்கிறது'' என்றார்.

"அப்படியானால் அவை சொல்வது எல்லாம் பொய் என்கிறீர்களா?'' என்று கேட்டேன்.

"ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் எல்லாப் பகுதிகளையும் ஆராய வேண்டும். முரண்பாடுகளைப் புரிந்து சரி செய்துகொண்டு, அதன்பின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்று சேர்த்து, எது உண்மை என்று அறியவேண்டும். அப்போதுதான் அந்த விஷயத்தின் முழுமை பிடிபடும்,'' என்றார் புனித்.

எனக்கு "வேறு ஏதேனும் பேசலாம்,' என்று தோன்றியது.

"நீங்கள் பிரான்ஸில் என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"படிப்பது, எழுதுவது, மௌனமாக உள் வேலை செய்து வருவது - இவையே இவரது வாழ்க்கை,'' என்றார் புனித்.

'வெளிநாட்டில் ஏதேதோ புதுமையான வேலைகள் இருக்கின்றன. அதில் உள் வேலையும் ஒன்று போலிருக்கிறது,' என்று நினைத்தேன். "உள் வேலையா? அது என்ன புது வகைத் தொழிலாக இருக்கிறதே,'' என்றேன்.

"அது தொழிலன்று, வாழும் முறை,'' என்றார் புனித்.

"அப்படி என்ன விசேஷமான வாழ்க்கை முறை?'' என்று ஆர்வத்துடன் கேட்டேன். "உள் வேலை என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள, புதிய ஜீவியம் பற்றித் தெரிய வேண்டும்,'' என்றார் புனித்.

"அது என்ன புதிய ஜீவியம்?'' என்று கேட்டேன்.

"ஜீவியம் என்றால் என்ன?'' என்று என்னைத் திருப்பிக் கேட்டார் புனித். ஒரு விநாடி குழம்பினேன்.

அதுதானே, ஜீவியம் என்றால் என்ன? ஒரு வேளை, ஜீவிப்பது பற்றி பேசுகிறாரோ?

"ஜீவிப்பது என்றால் உண்பது, நினைப்பது, வாழ்வது. இறந்து போனால் ஜீவனில்லை,'' என்றேன்.

"புனித் குறிப்பிடும் ஜீவியம் வேறு வகையானது. அது அனைத்தும் அறிந்தது. மனிதன் அதனோடு பேசலாம், பழகலாம், உறவாடலாம். அது பூமிக்கு வந்து ஒரு சில வருடங்கள்தான் ஆகின்றன,'' என்றார் புனித்.

"ஓஹோ! வேற்று கிரகத்து உயிரினமா? நான் பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்,'' என்றேன்.

"அதில்லை இது'' என்றார் புனித்.

"அதற்கு பூமியில் என்ன வேலை?'' என்று கேட்டேன்.

"மனித பரிணாமத்தைத் துரிதப்படுத்துவதுதான் அதன் வேலை,'' என்றார் புனித்.

இவர் என்ன விசித்திரமான ஆசாமியாக இருக்கிறார்! 'என்ன பேசுகிறோம்,' என்று புரிந்துதான் இவர் பேசுகிறாரா? 'பொழுது போக வேண்டுமே,' என்று பேச்சுக் கொடுத்தால் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே!

"மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது,'' என்று கூசாமல் பொய் சொன்னேன்.

"இது மிகவும் சுவாரஸ்யமான விஷயம்தான். மிக, மிக அற்புதமான எதிர்கால உலகம் ஒன்றை மனிதர்களுக்குத் தெரியாமல் இந்த ஜீவியம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நீங்களும் விரும்பினால் அதனோடு சேர்ந்து புதிய உலகை உருவாக்கலாம்,' என்றார் புனித்.

எனக்கு திக்கென்றது. மிகவும் அபாயமான ஆள் இவர். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். எப்போது என்ன செய்வாரோ? 'இனிமேல் இவரிடம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேச வேண்டும், பழக வேண்டும்,' என்று முடிவு செய்துகொண்டேன்.
 

Tamil Author Term
Tamil Content Terms