ஐம்பது லட்சம் - பகுதி 3

"நீங்கள் அந்த ஜீவியத்தைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். பின் என்னை அறியாமலே திடீரென சொன்னேன், "எனக்கு அதைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.''

ஒரு கணம் தயங்கிய புனித், "உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உண்டா?'' என்று கேட்டார்.

"ஏன் கேட்கிறீர்கள்? மனிதனாகப் பிறந்தால் பிரச்சினை இல்லாமருக்குமா?'' என்றேன்.

"இந்த ஜீவியத்தை அணுக ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் ஏதேனும் பிரச்சினை இருந்தால், இந்த ஜீவியத்தின் சக்தியை உடனே அறிய முடியும். உள் வேலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மனிதனால் தீர்க்க முடியாத எல்லாப் பிரச்சினைகளையும் இதனால் தீர்க்க முடியும்,'' என்றார் புனித்.

"மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை,'' என்று குறுக்கே பேசினேன்.

"உண்மையைச் சொல்லுங்கள். உங்களது முக்கியமான பிரச்சினைக்கு உங்களிடம் தீர்வு உண்டா?'' என்று கேட்டார் புனித்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். பின், "ஒரு சில பிரச்சினைகளுக்குத் தீர்வில்லை என்பது உண்மைதான். ஆனால் காலமே மருந்து,'' என்றேன்.

"காலம், நேரமென்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள். புதிய ஜீவியம் செயல்பட்டால் எதுவும் உடனே நடக்கும்,'' என்றார் புனித்.

"பேசுவதற்கு எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நடைமுறைதான் சிக்கல் நிறைந்தது,'' என்றேன்.

"உங்களுக்கு என்ன பிரச்சினை?'' மென்மையான குரலில் ஆதரவாகக் கேட்டார் புனித்.

அரை மணிகூட பழகாதவருடன் என் பிரச்சினை பற்றிப் பேச விரும்பவில்லை. அதே சமயம் அவருடன் நன்றாகப் பழகிக் கொள்ள முடிவு செய்தேன். வெளிநாட்டுக்காரர். நிறைய பணம் வைத்திருப்பார். ஏன், இவரேகூட எனக்கு உதவலாம். எனவே, "எனக்குப் புதிய ஜீவியம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்,'' என்றேன்.

"வார்த்தைகளால் அதை வர்ணிக்க முடியாது. மனதிற்கு அப்பாற்பட்ட விஷயத்தை மனதைக் கொண்டு அறிய முடியாது. சொந்த அனுபவமே தெளிவான விளக்கம் தரும்,'' என்ற புனித் சிறிது நேரம் கண்களை மூடித் திறந்தார். "புதிய ஜீவியத்தை நீங்கள் அழைத்தீர்கள். அது உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது,'' என்றார்.

"நான் எப்போது அழைத்தேன்?'' என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.

"அதைப் பார்க்க வேண்டுமென்று சொன்னீர்கள் அல்லவா? மனதில் ஆர்வத்துடன் நினைத்தாலே போதும், உடனே செயல்படக் கூடிய பெரிய சக்தி அது,'' என்ற புனித், மேலும் சொன்னார், "ஆனால் உங்கள் பிரச்சினை தீர அதன் உதவியை நீங்களே கேட்க வேண்டும்.''

எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. என் பிரச்சினை பற்றி புனித்திடம் பேச மனமில்லை. 'பேசினால் தீர்வு கிடைக்கும்,' என்றும் தோன்றியது. பத்து இலட்சம் புரட்டாவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். ஒரு பெரிய மனப்போராட்டத்திற்குப் பிறகு கடைசியாக, அவரிடம் சொல்வது என்று முடிவெடுத்தேன். மான, அவமானம் பார்த்தால் காரியம் நடக்காது.

"எனக்கு ஒரு பயங்கரமான பிரச்சினை. இன்னும் ஒரு வாரத்திற்குள் பத்து இலட்சம் ரூபாய் வேண்டும். எனக்கு உதவ எதுவுமில்லை, யாருமில்லை,'' என்று மிகுந்த கவலையுடன் சொன்னேன். 'மூன்றாம் மனிதரிடம் இப்படிப் பேச வேண்டியுள்ளதே,' என்ற வெட்கமும், அவமானமும் என்னைப் பிடுங்கித் தின்றன. குரல் தடுமாறியது. கண்கள் கலங்கின.

"உங்கள் பிரச்சினை மிகவும் சாதாரணமானது,'' என்றார் புனித்.

"என் பிரச்சினையின் அளவு தெரியாமல் பேசுகிறீர்கள். என்னிடம் விற்க சொத்தோ, உதவ உற்றாரோ, உறவினரோ இல்லை,'' என்று கலங்கிய குரல் கூறினேன்.

"உங்கள் பிரச்சினை உங்களுக்குப் பெரியது. அருளுக்கு மிகவும் சிறியது,'' என்றார் புனித்.

"அது உண்மைதான்,'' மிகவும் உற்சாகமானேன். "அருள் சென்னையிலேயே பெரிய வைர வியாபாரி. அவருக்கு பத்து இலட்சம் சிறியதுதான். அருளை உங்களுக்குத் தெரியுமா?'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

புன்னகைத்தார் புனித். "அடடா, இவர் குறிப்பிட்டது புதிய ஜீவியத்தின் அருளை அல்லவா!'' என்றார்.

"அவ்வளவுதானா?'' எனக்கு சப்பென்றானது.

"உங்கள் பிரச்சினைக்கானத் தீர்வு உங்களிடம்தான் உள்ளது,'' என்றார் புனித்.

"எப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"உங்கள் பிரச்சினையை நீங்கள்தான் தீர்க்க முடியும் என்று நம்புகிறீர்கள். அது தவறு,'' என்றார் புனித்.

"அது எப்படித் தவறு? வியாபார ஆலோசகர்களையோ, சட்ட நிபுணர்களையோ பணம் கொடுத்து ஆலோசனை கேட்கக்கூடிய நிலையில் நானில்லை'' என்றேன்.

"உங்கள் பிரச்சினை பணம் சம்பந்தப்பட்டதன்று, மனம் சம்பந்தப்பட்டது,'' என்றார் புனித். இது என்ன, கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது!

"ஒருவேளை என்னை மனோதத்துவ டாக்டரிடம் போகச்சொல்கிறீர்களா?'' என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.

"இல்லை, இல்லை. மனிதர்களால் உங்களுக்கு உதவ முடியாது,'' என்று கூறி சிரித்த புனித் தொடர்ந்து கூறினார். "மனம் உருவாக்கிய பிரச்சினையை மனத்தைக்கொண்டு தீர்க்க முயல்வது, தன் வலக்கையால், தன் இடக்கையோடு சண்டை போடுவது போன்றது.''

நான் யார் என்று தெரியாமல் என்னைக் குறைத்து மதிப்பிடுகிறார் போலிருக்கிறது. என் கௌரவத்தை நிலைநாட்ட முடிவு செய்தேன். "மனம்தான் பிரச்சினை என்கிறீர்கள். எனக்குக் கடன் இருப்பதால் என் அறிவை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்,'' என்று சொன்னேன்.

"உங்கள் அறிவின் விளைவுகளைத்தானே இன்று நீங்கள் அனுபவிக்கிறீர்கள்'' என்ற புனித் தொடர்ந்து, "மனத்தால் உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அதை முதலில் நம்புங்கள்,'' என்றார்.

"மனதின் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?'' என்று கேட்டேன்.

"கோபமில்லை. மனம் நல்ல கருவிதான். ஆனால் எல்லாக் கருவிகளுக்கும் ஏதேனும் பிரச்சினை இருப்பதுபோல, மனதிற்கும் பல பிரச்சினைகள் உண்டு. தனக்குத் தெரிந்ததைக் கொண்டு மட்டுமே செயல்படும் தன்மை கொண்ட மனம் முழுமையை எப்போதும் காண முடியாது. மனம் எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்கும் தன்மை கொண்டது. அதனால்தான் அதை நம்ப வேண்டாம் என்றேன்,'' என்றார் புனித்.

"மனதை நம்பாதே. அறிவை நம்பாதே. மனிதனை நம்பாதே. மிகவும் நல்லது. அப்புறம் நான் என்னதான் செய்வது?'' என்று கேட்டேன்.

"கடந்தகாலத்தை மாற்றினால் நல்லது. கடந்தகாலத்தின் கனத்த சுமையோடு, எதிர்காலத்தை நோக்கி நடக்க முடியாது,'' என்றார் புனித்.

"கடந்தகாலம் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசி என்ன பயன்?'' என்று விரக்தியுடன் சொன்னேன்.

"நீங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நினைக்கிறீர்கள். நிகழ்காலத்தில் செயல்படுகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்கிறீர்கள். காலத்தால் கட்டுப்படுத்தப் படுகிறீர்கள். ஆனால், புதிய ஜீவியம் முக்காலத்தையும் கடந்தது. காலத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், புதிய ஜீவியத்தால் கடந்தகாலத்தை இன்று மாற்ற முடியும். எதிர்காலத்தை இன்றே அதனால் கொண்டுவர முடியும்,'' என்றார் புனித்.

"என்னால் நம்ப முடியவில்லையே,'' என்றேன்.

"இதுதான் மனதின் தன்மை. கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்பது தவறான எண்ணம். ஒளியால் அதை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்பினால், ஒளியின் வேலை எளிதாகிவிடும்,'' என்றார் புனித்.

"சரி. என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"சமர்ப்பணம்,'' சுருக்கமாகச் சொன்னார் புனித்.

"என்ன சொல்கிறீர்கள்? இன்னும் சிறிது விளக்கமாக, புரியும்படி பேசுங்களேன்,'' என்றேன்.

"நீங்கள் உங்கள் பிரச்சினைக்கானக் காரணத்தை உணர வேண்டிய அளவில் உணர்ந்து மாறிவிட்டால் பிரச்சினைத் தீர்ந்துவிடும். இதற்குச் சமர்ப்பணம் மட்டுமே கருவி,'' என்றார் புனித்.

சரிதான். சமர்ப்பணத்தை 'சர்வரோக நிவாரணி' என்று சொன்னாலும் சொல்லுவார்.

"எப்படி சமர்ப்பணம் செய்ய வேண்டும்?'' என்றேன்.

"புதிய ஜீவியத்தின் ஒரு துளி ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது'' என்றார் புனித்.

"அப்படியா?'' எனக்குச் சிரிப்பு வந்தது.

"உண்மையைத்தான் சொல்கிறேன். அது உங்கள் நெஞ்சின் நடுவில் உள்ளது,'' என்றார் புனித்.

நான் குனிந்து என் நெஞ்சைப் பார்த்தேன். பின் புன்னகையுடன் விஷமமாகச் சொன்னேன். "எனக்கு என் சட்டை பித்தான்கள்தான் தெரிகின்றன.''

என் குதர்க்கம் அவரை பாதிக்கவில்லை.

"உங்கள் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் அது அங்கே நிச்சயம் இருக்கிறது,'' என்றார் புனித்.

"நான் அதை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? மொட்டைத் தலை, சுருட்டை வால் என்று ஏதேனும் நல்ல அடையாளம் சொல்லுங்களேன்,'' என்றேன்.

புனித் தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். "அது கட்டைவிரல் உயரமிருக்கும் அக்னி ஜ்வாலை. உண்மையை வாழவைக்கும் வெண்சுடர்,'' என்றார் புனித்.

"நான் எப்படி அதைப் பார்ப்பது?'' என்றேன்.

"நீங்கள் அதைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நெஞ்சுக்குள் நிச்சயமாக இருக்கிறது,'' என்றவர், "உண்மையாகவே உங்கள் பிரச்சினை தீர விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார்.

"ஆமாம். உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். உங்கள் மனதில் "நான் என்ன செய்யவேண்டும்' என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உள்ளபடி சொல்லுங்கள்,'' என்றேன்.

"அப்படியானால் சரி. நீங்கள் தனியாக இருக்கும்போது, கண்களை மூடி ஒரு சிறிய வெண்சுடரை, வெண்ணிறத் தீம்பிழம்பை உங்கள் நெஞ்சின் நடுவே மனதால் பார்க்க முயலுங்கள். அது முடியாவிட்டால், வெறுமனே கற்பனையாவது செய்யுங்கள். தேவையில்லாத எண்ணங்களையும், உணர்வுகளையும் விலக்கிவிட்டு இந்த முயற்சியைச் செய்ய வேண்டும்,'' என்று கூறி நிறுத்தினார் புனித்.

"நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்,'' என்று உறுதி கூறினேன்.

"மனம் சிறிது அமைதி அடைந்ததும், உங்களுடைய பிரச்சினையின் வரலாற்றை அந்த ஒளியிடம் மானசீகமாகச் சொல்ல வேண்டும். பிரச்சினையின் எல்லாக் கூறுகளையும் முடிந்த வரை சொல்ல வேண்டும். சிறியவை, பெரியவை என்று எதையும் ஒதுக்காமல், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லி வரும்போது, எதைப் பற்றியும் உணர்ச்சிவசப்படாமல், மனதில் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும்,'' என்றார் புனித்.

"எளிமையாக இருக்கிறதே!'' என்று ஆச்சரியப்பட்டேன்.

"கேட்கும்போது அப்படித்தான் இருக்கும். செய்வது மிகவும் சிரமம். பிரச்சினைகளை நிதானமாக ஆராயும்போதுதான் உங்களிடம் உள்ள பல்வேறு வகையான குறைகளும், இந்தப் பிரச்சினை உருவாக நீங்கள் காரணமாக இருந்தீர்கள் என்ற உண்மையும் விளங்கும்,'' என்ற புனித் தொடர்ந்து, "அந்தக் குறைகளை எல்லாம் இப்போது சரி செய்துகொள்ள வேண்டும். அவற்றை ஒளிக்குத் தர வேண்டும்,'' என்றார்.

"மேலே சொல்லுங்கள்,'' என்றேன்.

"இரயில் இஞ்சின் டிரைவர் நிலக்கரியை பெரிய கரண்டி கொண்டு தோண்டி எடுக்கிறார். இஞ்சின் பாய்லரில் உள்ள நெருப்புக்குக் கொடுக்கிறார். வண்டி ஓடுகிறது. அதேபோல, நம்முள்ளே ஆழமாகப் போய், பிரச்சினையின் கூறுகளை எடுத்து, அவற்றை உள்ளொளிக்குக் கொடுக்க வேண்டும். அப்போது பிரச்சினை நகர ஆரம்பிக்கும். இதை நிதானமாக, தொடர்ந்து செய்ய வேண்டும். பிரச்சினையின் எல்லாக் கூறுகளையும் எடுத்து, உள்ளொளிக்குக் கொடுக்க வேண்டும்,'' என்றார் புனித்.

"எடு, கொடு என்கிறீர்கள்,'' என்றேன்.

"ஆமாம். இதைத்தான் சமர்ப்பணம் என்று சொல்வார்கள். எல்லாம் தெரிந்த ஒளியை அழைத்து, பிரச்சினையை அதற்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்,'' என்றார் புனித்.

"எல்லாம் தெரிந்த ஒளிக்கு எதற்காக பிரச்சினையின் வரலாற்றை விளக்கமாகச் சொல்ல வேண்டும்? அதற்குத்தான் எல்லாம் தெரியுமே!'' என்று சந்தேகம் கேட்டேன்.

"மனிதன் தன்னைத் தானே அறிய வேண்டும் என்பது ஒளியின் நோக்கம். தன்னைத் தானே அறிய சமர்ப்பணத்தை விட்டால் வேறு வழியில்லை,'' என்றார் புனித்.

"சமர்ப்பணம் செய்தால் எப்படிப்பட்ட பிரச்சினையும் தீர்ந்து விடுமா?'' என்று கேட்டேன்.

"எந்தப் பிரச்சினைக்கும் சில மூல காரணங்கள் இருக்கும். எண்ணம், உணர்வு, செயல், மனோபாவம் - எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். மூல காரணம் தெரிந்துவிட்டால், அதை மீண்டும், மீண்டும் சமர்ப்பணம் செய்தால், ஒளி எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கரைத்து விடும்.'' என்றார் புனித்.

"மூல காரணம் தெரியாவிட்டால் என்ன செய்வது?'' என்று கவலையுடன் கேட்டேன். "அதற்காகத்தான் பிரச்சினையின் வரலாற்றை ஒளியிடம் சொல்ல வேண்டும். அப்போது மூல காரணம் தெரிந்துவிடும். சில சமயங்களில் மூல காரணம் என்று தவறான காரணத்தை நினைத்துக் கொண்டு இருப்போம். அதையும் ஒளி சரி செய்துவிடும்,'' என்றார் புனித்.

"பிரச்சினை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்த ஒளியால் தீர்க்க முடியுமா?'' என்று கேட்டேன்.

"நிச்சயம் முடியும்,'' என்றார் புனித்.
 

Tamil Author Term
Tamil Content Terms