ஐம்பது லட்சம் - பகுதி 4

"என்னைப் பொறுத்தவரை என் பிரச்சினை எனக்கு மிகவும் பெரியது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்,'' என்று புனித்திடம் கேட்டுக்கொண்டேன்.

"ஒரு வேளைக்கு நீங்கள் சுமாராக எத்தனை இட்லிகள் சாப்பிடுவீர்கள்?'' என்று சம்பந்தமில்லாமல் கேட்டார் புனித்.

"பசியோடு இருந்தால் ஆறு. இல்லாவிட்டால் நான்கு. தொட்டுக் கொள்ளும் சட்னியைப் பொறுத்து ஒன்றிரண்டு கூடலாம் அல்லது குறையலாம்,'' என்று புரியாமல் பதில் சொன்னேன்.

"குழந்தை எத்தனை சாப்பிடும்?'' என்று புனித் கேட்டார்.

"ஒன்று அல்லது இரண்டு'' என்று சொன்னேன்.

"பெரிய குஸ்தி பயில்வான் எத்தனை சாப்பிடுவார்?'' என்று புனித் கேட்டார்.

"குறைந்தது பத்தாவது சாப்பிடுவார்,'' என்று கூறினேன்.

ஏதேது, திடீரென்று வகைதொகை இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்! அடுத்தபடியாக, "கொழுக்கு, மொழுக்கு என்றிருக்கும் பிரபல நடிகை தினசரி எத்தனை இட்லிகள் சாப்பிடுவார்?' என்று கேட்டாலும் கேட்பார் போலிருக்கிறது! நல்ல வேளையாக, புனித் அப்படி எதுவும் என்னைக் கேட்கவில்லை.

"அவரவர் அளவுக்கு உட்பட்டுத்தான் பிரச்சினைகள் வரும். நீங்களே மனதார விரும்பினாலும் நாற்பது இட்லிகளை உங்களால் சாப்பிட முடியாது. உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்திருக்கிறது என்றால், அதனை உங்களால் சமர்ப்பணத்தின் மூலம் நிச்சயம் தீர்க்க முடியும் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அளவுகள் மனிதனுக்குத்தான் உண்டு. அவை உள்ளொளிக்கு இல்லை,'' என்று விளக்கினார் புனித்.

"எனக்கு ஏதோ புரிந்தது போலவும் இருக்கிறது. ஆனால், எதுவுமே புரியாதது போலவும் இருக்கிறது,'' என்றேன்.

"மனதை ஒருமைப்படுத்தி புரிந்ததை நம்பிக்கையோடு செய்துவிட்டால், புரியாதவை தாமே புரியும். புதிய ஜீவியம் எதைச் செய்ய வேண்டுமோ, அதைத் தவறாமல் செய்யும்,'' என்றார் புனித்.

"என் மனம் எப்போதும் ஒரு நிலையில் இருக்காது. கடன் தொல்லை வந்த பிறகு எதிலும் கவனம் இருப்பதில்லை. கவலைகளும், குழப்பங்களும் மட்டும்தான் இருக்கின்றன,'' என்றேன். "கவலைகளையும், குழப்பங்களையும் ஒவ்வொன்றாக, நிதானமாக ஒளியிடம் எடுத்துச் சொன்னால், அவை நிச்சயமாகக் கரையும்,'' என்றார் புனித்.

"ஒளியால் அப்படிச் செய்ய முடியுமா? இதெல்லாம் நடக்குமா?'' என்று கேட்டேன்.

"நம்பினார் கெடுவதில்லை,'' என்றார் புனித்.

அவர் குரலில் இருந்த உறுதியும், கண்களில் தெரிந்த உண்மையும் புனித்தின் வார்த்தைகள் மீது சிறிது நம்பிக்கை உண்டாக்கின. இருந்தாலும், 'சமர்ப்பணம் செய்தால் என்ன நடக்கும்?'' என்று தெரிந்துகொள்ள ஆர்வம் பொங்கியது.

"எப்போது பிரச்சினை தீரும்?'' என்று கேட்டேன்.

"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது,'' என்றார் புனித்.

"யார் மூலம் தீர்வு வரும்?'' என்று கேட்டேன்.

"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது,'' என்றார் புனித்.

"எங்கிருந்து உதவி கிடைக்கும்?'' என்று கேட்டேன்.

"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது,'' என்றார் புனித்.

"தீர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்?'' என்று கேட்டேன்.

"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது,'' என்றார் புனித்.

எனக்கு ஒரே ஆயாசமாக இருந்தது. திடீரென 'ஒளி, சமர்ப்பணம் என்பனவெல்லாம் வெறும் மனப்பிரமையோ!' என்று தோன்றியது. பகுத்தறிவால் எத்தனையோ விஞ்ஞான வித்தைகள் நிகழும் இந்தக் காலத்தில் இவற்றை நம்புவது நல்லதுதானா?

"என்னவோ போங்கள். எனக்கு நம்பிக்கை குறைவது போலிருக்கிறது,'' என்று வெளிப்படையாகச் சொன்னேன்.

என்னை ஆழமாக உற்றுப்பார்த்து, மிகவும் நிதானமாக, அழுத்தமாக, உத்தரவிடும் குரலில் புனித் சொன்னார், "புனித் சொல்வது சத்தியம். அவர் வார்த்தையை நீங்கள் நம்பலாம்."

திடீரென மீண்டும் நம்பிக்கை பிறந்தது.

"எனக்கு பத்து இலட்ச ரூபாய் ஒரு வாரத்தில் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் உடனே தீர்ந்துவிடும். 'சமர்ப்பணம் செய்தால் அது நடந்துவிடும்' என்கிறீர்கள்,'' என்று நான் அவர் வாயைக் கிளறப் பார்த்தேன்.

"உங்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். அது பத்து இலட்ச ரூபாய் கிடைப்பதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்," என்றார் புனித்.

"நான் என்னதான் செய்ய வேண்டும்? தெளிவாகச் சொல்லுங்கள்,'' என்றேன்.

"சமர்ப்பணம். அதுவே முதல், அதுவே முடிவு,'' என்று அழுத்தமாகச் சொன்னார் புனித்.

"எதைச் செய்யக்கூடாது? அதையாவது விளக்கமாகச் சொல்லுங்கள்,'' என்று கேட்டேன்.

"எதிர்பார்க்கக் கூடாது,'' என்றார் புனித்.

"அது எப்படி? மிகவும் சிரமப்பட்டு என் பிரச்சினையை சமர்ப்பணம் செய்யும்போது, 'பலனை எதிர்பார்க்காதே' என்றால் நன்றாகவா இருக்கிறது? நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கள்,'' என்றேன்.

"எதிர்பார்ப்புகளே உங்கள் ஏமாற்றங்களுக்குக் காரணம். உங்களிடமிருந்து எதிர்பார்ப்பின் கடைசித் துளி கரையும்போது, எங்கிருந்தோ தீர்வு வரும்,'' என்றார் புனித்.

"எதிர்பார்க்காமல் இருப்பது பெரிய சிரமம்,'' என்றேன்.

"புரிகிறது. என்ன செய்வது? அது மிக முக்கியமான நிபந்தனை,'' என்றார் புனித்.

"நீங்கள் தவணை முறையில் தகவல் தருகிறீர்கள். வேறு நிபந்தனைகள் உண்டா? அவற்றையும் சொலில்விடுங்கள்,'' என்றேன்.

"ஏன் இல்லாமல்? நம்பிக்கையும், விடாமுயற்சியும் வேண்டும். உண்மையான நம்பிக்கையுடன் ஒளியிடம் சமர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் முறையில் சமர்ப்பணம் முடியவில்லை என்றால் வருத்தப்பட்டு விட்டுவிடக் கூடாது. மீண்டும், மீண்டும் முயல வேண்டும். முதல் நாள் முடியவில்லை என்றால் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று தொடர வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்,'' என்றார் புனித்.

"என்னால் சமர்ப்பணம் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது?'' என்று கேட்டேன்.

"பிரச்சினைகள் தீர விருப்பம் இருக்கிறதா, இல்லையா, என்பதே கேள்வி. உண்மையில் விருப்பம் உண்டு என்றால் சமர்ப்பணம் நிச்சயம் முடியும். செய்து பாருங்கள் தெரியும்,'' என்றார் புனித்.

"கேலி செய்யாதீர்கள். 'பிரச்சினைகள் தீர வேண்டும்' என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்,'' என்றேன்.

"மனிதர்களின் உள்மனம் பற்றி உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை'' என்ற புனித், "இன்னொரு விஷயம். பிரச்சினை தீர வேண்டும் என்பது வேறு. பிரச்சினை இப்படித்தான் தீர வேண்டும் என்று வீண் பிடிவாதம் செய்வது வேறு. பிடித்தவையும், பிடிக்காதவையும் சமர்ப்பணத்தின் எதிரிகள்,'' என்றார்.

"சரிதான், சரிதான்'' என்று அலுப்புடன் சொல்லிவிட்டு, "என் சமர்ப்பணம் நிறைவேறியது என்று எப்படித் தெரியும்?'' என்று கேட்டேன்.

"பல அறிகுறிகள் உண்டு. அவை அனுபவத்தில்தான் புரியும். பொதுவாக ஒன்றைச் சொல்லலாம். நெஞ்சிலிருந்து ஒரு பெரிய பாரம் விலகியது போன்ற உணர்வு ஏற்பட்டால் சமர்ப்பணம் செய்ய முடிந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்,'' என்று விளக்கினார் புனித்.

"நான் வெளியே சொல்ல முடியாத எத்தனையோ பல இரகசியங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒளியிடம் சொல்லத்தான் வேண்டுமா?'' என்று சிறிது வெட்கத்துடன் கேட்டேன்.

"இதில் வெட்கப்பட ஒன்றுமே இல்லை. ஒவ்வொருவர் மனமும் சந்தைக் கடையாக, சாலையோரச் சாக்கடையாகத்தான் இருக்கிறது. ஒரு தவற்றை உணர்ந்துவிட்டால் அதை மீண்டும் செய்யக்கூடாது. அதுதான் முக்கியம்,'' என்றார் புனித்.

"மீண்டும் தவறு செய்தால் என்ன நடக்கும்?'' என்றேன்.

"தமக்குத் தாமே சமாதி கட்டிக் கொள்பவரின் கையைப் பிடித்தா தடுக்க முடியும்?'' என்று கேட்டார் புனித்.

நான் பதில் சொல்லவில்லை.

'ஒரு வேளை கடுமையாகப் பேசிவிட்டோமோ?' என்று புனித் நினைத்தார் போலிருந்தது. சாந்தமான குரலில், "சரியான மனோபாவத்துடன் நீங்கள் ஒளியை அழைத்தால், ஒருபோதும் இதுபோன்ற கேள்விகள் எழாது,'' என்றார் புனித்.

"எது சரியான மனோபாவம்?'' என்று கேட்டேன்.

"ஒளியைச் சரணடைய வேண்டும் என்பதே சரியான மனோபாவம்,'' என்றார் புனித்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தோம்.

"யாராவது சமர்ப்பணம் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கிறார்களா?'' என்று கேட்டேன்.

"எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன. இவரது அனுபவங்களில் எதைச் சொல்வது? எதை விடுவது?'' என்றார் புனித்.

"உங்களைப் போன்ற அனுபவசாலிகளை விடுங்கள். என்னைப் போன்ற பாமரனுக்குச் சமர்ப்பணம் பலிக்குமா?'' என்று கேட்டேன்.

"புனித்திற்குத் தெரிந்தவர்கள் பலர் சமர்ப்பணம் செய்ய முயல்கிறார்கள்,'' என்றார் புனித்.

"அவர்களது முக்கியமான அனுபவங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்,'' என்றேன்.

"அவர்களால் ஒரு சில பிரச்சினைகளை, சமர்ப்பணம் செய்ய முடிகிறது. பல பிரச்சினைகளை, சமர்ப்பணம் செய்ய முடிவதில்லை,'' என்றார் புனித்.

"அது ஏன்?'' என்று கேட்டேன்.

"சமர்ப்பணம் பலிக்க எண்ணம், சொல், செயல் என்ற அனைத்தையும் மாற்றத் தயாராக வேண்டும். அப்படி மாற விரும்பாததுதான் காரணம்,'' என்றார் புனித்.

"மாற்றம் எப்போதுமே சிரமமானது. வேறு ஏதேனும் சுருக்கு வழி இருக்கிறதா?" என்று கேட்டேன்.

"மாற்றமில்லாமல் முன்னேற்றமில்லை. சமர்ப்பணம் செய்யும்போது பலர் தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி ஒளி செய்ய வேண்டும் என்று இரகசியமாக ஆசைப்படுகிறார்கள். அது நடக்காது. எவராலும் ஒளியை ஏமாற்ற முடியாது. மனத்தின் உண்மைக்குத்தான் மதிப்பு. உள்ளொளியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது,'' என்றார் புனித்.

"என்னுடைய எண்ணம், சொல், செயல் எல்லாம் எப்போதுமே கொஞ்சம் கோணலாகத்தான் இருக்கும். இவை சரியாக இருக்கின்றன என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?'' என்று கேட்டேன்.

"உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்துப் பார்த்தால் புரிந்துவிடும். ஒரு தவறான எண்ணம் தோன்றினால், எண்ணத்தைப் பொறுத்து, தவறான நிகழ்ச்சிகள் நடப்பதை அனுபவத்தில் பார்க்கலாம்,'' என்றார் புனித்.

"நீங்கள் சொல்வனவெல்லாம் உண்மைகள் என்றால் எல்லாப் பிரச்சினைகளையும் சமர்ப்பணத்தின் மூலம் தீர்க்கலாம் போலிருக்கிறது. ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் பிரான்சுக்குப் போய்விடுவீர்கள். சமர்ப்பணத்தைப் பற்றிச் சந்தேகம் வந்தால் நான் என்ன செய்வது?'' என்று கேட்டேன்.

"உள்ளொளியை நம்புங்கள். அது மட்டுமே தவறில்லாத வழியைக் காட்டும். தெளிவைத் தரும்,'' என்றார் புனித்.

விமான நிலையத்தை அடைந்தோம். நான் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் புனித் எங்கிருந்தோ ஒரு டிராலியை சம்பாதித்துக்கொண்டு வந்தார்.

"உங்களோடு பேசியபின் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகி இருக்கிறது. உங்கள் கான்ப்ரன்ஸில் இந்தப் புதிய ஜீவியம் பற்றி பேசுவீர்களா?" என்று கேட்டேன்.

"இல்லை. புனித் கான்ப்ரன்ஸில் வேறு மாதிரி பேசுவார். பொதுவாகவே இவர் பிறருடன் இந்த ஜீவியம் பற்றி எதுவும் பேசுவதில்லை. அது இவருக்கு ஒத்து வருவதில்லை. ஆனால், உங்கள் தொடர்பால் இவர் சூழல் பாதிக்கப்படவில்லை. அதனால்தான் உங்களிடம் புதிய ஜீவியம் பற்றிப் பேசினார்,'' என்றார் புனித்.

புனித் என்ன சொன்னார் என்று சரியாகப் புரியவில்லை. இருந்தாலும், புரிந்துகொண்டதாகத் தலையைச் சற்று பலமாகவே அசைத்து வைத்தேன். "நீங்கள் வித்தியாசமான மனிதர். உங்களோடு தொடரும் நட்பை விரும்புகிறேன்,'' என்று கூறி என் விசிட்டிங் கார்டை அவரிடம் நீட்டினேன்.

அதை வாங்கிக்கொண்ட புனித், "இவரிடம் விசிட்டிங் கார்ட் இல்லை,'' என்று கூறினார். பின் தம் கைப்பையிலிருந்து ஒரு சிறு காகிதத்தை எடுத்தார். ஒரு கணம் தயங்கிவிட்டு தம் விலாசத்தை எழுதித் தந்தார். அச்சடித்தது போன்ற அழகான கையெழுத்து.

"என் போன்ற பிரச்சினையில் இருப்பவனுக்கு விலாசம் தரலாமா என்று யோசித்தீர்கள் போலிருக்கிறது,'' என்று என் ஆதங்கத்தை வெளியிட்டேன்.

"தயக்கம் ஒன்றுமில்லை. எந்தச் சிறு செயலானாலும் சமர்ப்பணம் செய்துவிட்டுத்தான் இவர் செயல்படுவார். அப்போதுதான் அந்தச் செயல் ஜீவனுள்ளதாக மாறும்,'' என்றார் புனித்.

"அப்படியா விஷயம்?'' என்ற நான் சிறு நெகிழ்ச்சியுடன், "உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி. கடைசியாக ஒரு கேள்வி கேட்கலாமா?'' என்று கேட்டேன்.

"கேளுங்கள்,'' என்ற புனித் தம் பைகளை டிராலியில் அடுக்கலானார்.

"நீங்கள் பள்ளிக்கூடம் போனதுண்டா?'' என்று மெல்ல அவரிடம் கேட்டேன்.

"போயிருக்கிறார். என்ன விஷயம்?'' என்று வியப்புடன் கேட்டார் புனித்.

"உங்கள் ஆசிரியர் உங்களுக்கு 'நான், எனது' என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தாரா, இல்லையா?'' என்று புன்னகையுடன் கேட்டேன்.

குபீரென்று வாய்விட்டு சிரித்துவிட்டார் புனித். தம் வலக்கையை உற்சாகமாக உயர்த்தி அசைத்துவிட்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் டிராலியைத் தள்ளிக்கொண்டு பயணிகள் பகுதியினுள் விரைவாக நுழைந்தார், மறைந்தார்.
 

Tamil Author Term
Tamil Content Terms