ஐம்பது லட்சம் - பகுதி 5

உற்சாகமாக உணர்ந்தேன். மனம் சிறிது மலர்ந்தது போலிருந்தது. என்னோடு யாரோ இருப்பது போலவும், என் தனிமை மறைந்தது போலவும் உணர்ந்தேன்.

விமான நிலைய உணவு விடுதியில், 'மசால் தோசை கிடைக்கும்' என்று எழுதியிருந்தது. "அட, இதுகூட இங்கு கிடைக்கிறதே,' என்று சிறிது ஆச்சரியமாக இருந்தது. அதைப் பார்த்ததும் கொஞ்சம் பசிப்பதுபோல் இருந்தது. ஒரே ஒரு மசால் தோசை சாப்பிட்டேன். அநியாய விலை. இதையே வெளியே சாப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு விலைதான். சரியான பகல் கொள்ளை - இல்லை, இல்லை - அதிகாலைக் கொள்ளை! புனித்திற்குப் பிரச்சினை இல்லை. விமானத்தில் வகை, வகையாக உணவு தருவார்கள். திருப்தியாகச் சாப்பிடுவார்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது எதிரே விமானப் பணிப்பெண்கள் சிலர் வந்தனர். என் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அழகான பெண்களைப் பார்த்தால் எனக்கு, சின்ன வயது முதலே இப்படித்தான் ஆகிவிடுகிறது. முப்பத்தாறு வயதான பின்னும்அப்படியேதான் இருக்கிறேன். 'நான் மட்டும்தான் இப்படியா, இல்லை, எல்லா ஆண்களும் இப்படித்தானா?' என்று விசாரிக்க வேண்டும்.

அந்தப் பெண்கள் என்னைக் கடந்து செல்லும்போது ஒரு பெண்ணின் கைப்பை கீழே விழுந்தது. அழகாகக் குனிந்து அதை எடுத்த வண்ணமயில் ஒயிலாக நடந்து மறைந்தது.

எங்கோ ஓர் ஒலிபெருக்கியில், ஓர் உருக்கமான பக்திப் பாடலை பிரபலமான பாடகர் ஒருவர் மிகவும் உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்தார். பக்கத்திலேயே இன்னொரு ஒலிபெருக்கியில் காமரசம் பொங்கி வழியும் பாடல் ஒன்றை கட்டையான பெண் குரல் பாடிக் கொண்டிருந்தது.

ஏதேதோ நினைத்துக்கொண்டு காரை கிளப்பி மிக நிதானமாக ஓட்டினேன். மழையில் எப்போதுமே கவனமாக ஓட்ட வேண்டும். புனித்தின் புன்சிரிப்பும், வசீகரிக்கும் கண்களும் மீண்டும், மீண்டும் மனக்கண்ணில் தோன்றின. இந்த மனிதர் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்? வங்கியில் நிறைய பணம் வைத்திருப்பார் போலிருக்கிறது.

'சமர்ப்பணம், மாற்றம், பரிணாமம் போன்ற பெரிய வார்த்தைகளை வேலை வெட்டி இல்லாதவர்கள்தாம் பேசித் திரிவார்கள். வியாபார நடைமுறைச் சிக்கல்கள் பற்றி இவர்களுக்கு எதுவும் புரியாது. நாம்தாம் சாமர்த்தியமாக நடந்து, கடனைத் தீர்க்க வேண்டும். ஒளி, கிளி என்று நம்பி மோசம் போய்விடக் கூடாது,' என்ற எண்ணம் தோன்றியது.

திடீரென, எதிர்பாராமல் ஒரு வழிப்பாதையில் தவறாக ஒரு ஸ்கூட்டர்காரர் வேகமாக வந்தார். நல்ல வேளையாக, சட்டென காரை நான் குலுக்கலுடன் நிறுத்தி விட்டதால் விபத்து ஏற்படவில்லை. ஸ்கூட்டர்காரர் ஏதோ நான்தான் தவறு செய்துவிட்டது போல் கோபத்துடன் என்னைப் பார்த்து கடுமையாக இரண்டு வார்த்தைகள் சொல்லி விட்டு, மீண்டும் தவறான வழியில் தொடர்ந்து சென்றார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு!

மீண்டும் காரை ஓட்டலானேன். 'ஒருவேளை, புனித் சொன்னதுபோல் சற்று நேரத்திற்கு முன் தோன்றிய தவறான எண்ணம்தான் இந்த இடைஞ்சலுக்கு காரணமாக இருக்குமோ?' என்று தோன்றியது. 'இருந்தாலும், இருக்கும். இனிமேல் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். தவற்றை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது,' என்று தீர்மானம் செய்துகொண்டேன்.

மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது.

என் தீப்பெட்டி வீட்டிற்குள் நான் நுழைந்தபோது சுவர்க் கடிகாரம் ஏழு முறை அடித்துவிட்டு ஓய்ந்தது. செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாததால், என்ன செய்வது என்று தெரியாமல் நாற்காலியில் உட்கார்ந்தேன்.

புனித் சொல்லியவற்றைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எதையும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. விசித்திரமான குழப்பம்.

இதயத்தின் அந்தரங்கத்திலிருந்து பிறர் கேட்கமுடியாத இரகசியக் குரல் ஒன்று கிசுகிசுத்தது. 'எடு, கொடு; எடு, கொடு; எடு, கொடு,' என்ற அக்குரல் என்னை விடுவதாயில்லை. 'இது என்ன பெரிய தொந்தரவாகப் போய்விட்டதே' என நினைத்தேன். நேரமாக, நேரமாக அக்குரல் வலுத்தது.

ஒரு நல்ல முடிவுக்கு வந்தேன். 'சமர்ப்பணம் செய்தால் என்னதான் நடக்கும்? அதையும் பார்த்து விடலாம்,' என்று நினைத்தேன். தெளிவான முடிவு. புதிய சக்தி கிடைத்தது போலிருந்தது.

நாற்காலியிலிருந்து எழுந்து சிறிது நேரம் உலாவினேன். பின் சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்து அமர்ந்தேன். உணர்வுகளையும், உடலையும் தளர்த்தி கண்களை மெதுவாக மூடினேன். முதலில் மனதை அமைதியாக்க வேண்டும்.

எண்ணங்களைக் கவனிக்கலானேன்.

முதல் எண்ணம் முளைத்தது. விமான நிலையத்தில் மசால்தோசை ஆறிப் போயிருந்தது. பெரிய தவறு செய்து விட்டேன். இவ்வளவு விலை கொடுத்ததற்கு, புதிய தோசை சூடாகக் கேட்டிருக்க வேண்டும்.

மேலே யோசிக்காமல் அந்த எண்ணத்தை நிராகரித்தேன்.

அடுத்த விநாடி, பிரபல நடிகர் ஒருவர் நினைவுக்கு வந்தார். அவரது சமீபத்திய திரைப்படம் வெற்றி படமா? கோடி, கோடியாய் வருமானம் வந்திருக்கும். இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்னதான் செய்வார்? ஒரே கவலையாக இருந்தது.

அத்துடன் அந்த எண்ணத்திற்கு விடை கொடுத்தேன்.

சிறிது நேரம் ஒன்றுமில்லாத வெறுமை.

பாம்புபோல மெதுவாக விமானப் பணிப்பெண்ணின் நினைவு ஊர்ந்து வந்தது. கீழே தவற விட்ட கைப்பையை எடுக்கக் குனிந்தபோது அவளது சீருடை சற்றே விலகியது. வெளேரென்ற தொடை பளிச்சென தெரிந்து மறைந்தது. அந்தக் காட்சி மீண்டும், மீண்டும் மனக்கண்ணில் தோன்றியது. இந்த இன்பமான எண்ணத்தை விலக்க எனக்கு விருப்பமில்லை. உணர்வு கிளர்ந்தது. சமர்ப்பணம் செய்யும் முடிவு மெல்ல, மெல்லத் தளர்ந்தது.

திடீரென என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன். உலுக்கி விழுந்தேன். 'எதற்கு முக்கியத்துவம் தருகிறேன்,' என்ற விழிப்புணர்வு வெட்கத்தைத் தந்தது. கண்களைத் திறந்தேன்.

மீண்டும் கண்களை மூடினால், அழகுராணியின் அபாயகரமான உடல் வளைவுகள் என்னை நிச்சயம் தொந்தரவு செய்யும் என்று தோன்றியது. இதை எப்படி விலக்குவது?

மின்னலென புதிய ஜீவியத்தின் நினைவு வந்தது. அந்தக் கணமே என் வாழ்வில் இறைவன் வந்த தருணம்.

கட்டை விரலளவு வெண்ணிற அக்னி ஜ்வாலையை என் நெஞ்சத்தின் நடுவே கற்பனை செய்தேன்.

முதலில் முடியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது. முயன்றேன். மீண்டும், மீண்டும் முயன்றேன். சிறிது நேரத்தில் மங்கலாக ஏதோ தெரிவதுபோல் இருந்தது. அது உண்மையா, கற்பனையா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

"புனித் சொன்ன ஒளியே, புதிய ஜீவியமே, எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்களால் என்னைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏனோ வருகிறது. இந்தச் சமர்ப்பண முயற்சியை உங்களிடம் சமர்ப்பணம் செய்கிறேன். என் பிரச்சினையை உங்களிடம் சமர்ப்பணம் செய்ய ஆர்வமாக உள்ளேன். என் பிரச்சினையின் கூறுகளை உங்கள் ஒளிக்குத் தருகிறேன். என்னால் எதுவும் முடியாது. ஆனால் உங்களால் எல்லாம் முடியும் என்று நம்புகிறேன். எது சரியோ, அதைச் செய்யுங்கள்,'' என்று மனமுருகிச் சொன்னேன்.

அதன் பின், கண்களை மூடினேன். எண்ணங்களோடு அடுத்த யுத்தத்திற்கு தயாரானேன்.

என்ன விந்தை!

சஞ்சலமூட்டும் அர்த்தமற்ற எண்ணங்களைக் காணோம். என் பிரச்சினைகள் பற்றிய எண்ணங்கள் மட்டுமே உலா வர ஆரம்பித்தன.

என் கம்பெனியைப் பற்றி நினைத்தேன். அதன் பெயரை கற்பனை செய்து மங்கலான ஒளியிடம் கொடுத்தேன்.

எனக்கு, பத்து இலட்சம் தேவை. எனவே, ஒளியிடம் சொன்னேன், "எனக்கு பத்து இலட்சம் தேவைப்படுகிறது. என் தேவையை உங்களிடம் சமர்ப்பணம் செய்கிறேன்."

நான் கட்ட வேண்டிய பில்களைப் பற்றி நினைத்தேன். ஒவ்வொரு பில்லாக உள்ளொளிக்குச் சமர்ப்பித்தேன்.

என் பொருட்கள், சிப்பந்திகள், வங்கி, விற்பவர்கள், வாங்குபவர்கள் என்று என் நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒளிக்குச் சமர்ப்பித்தேன். வெண்சுடர் சற்றே வளர்ந்தது. ஒளி தெளிவாகத் தெரிந்தது.

சற்று நேரம் எதுவுமில்லை.

விமானப் பணிப்பெண் விஷமமாகச் சிரித்துக்கொண்டு, 'கைப்பையை குனிந்து எடுக்கட்டுமா?' என்று கேலியாகக் கேட்டாள். அந்த எண்ணத்தை ஒளியிடம் தந்தேன். மோகினி மாயமாக மறைந்தாள்.

உள்ளொளியை ஊன்றிக் கவனித்தேன். என் வியாபாரம் தொடங்கியதிலிருந்து நடந்தவற்றை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தேன். அவற்றைச் சமர்ப்பணம் செய்தேன்.

திடீரென நிகழ்ச்சிகள் நிழற்படங்களாக, காட்சிகளாகத் தோன்றின. அந்த நிமிடம் முதல் எதையும் நானாக நினைத்து, யோசித்து சமர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியமே இருக்கவில்லை. என் வியாபார வாழ்க்கை அடுத்தடுத்து பல வண்ணப்படங்களாகத் தோன்ற ஆரம்பித்தன. தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சி ஆரம்பமானது. விருப்பு, வெறுப்பின்றி நாடகத்தைக் கவனித்தேன்.

சிறிய விஷயங்கள் வெளிவந்தன. பெரிய விஷயங்கள் வெளிவந்தன. சிறியவை, பெரியவை, உயர்ந்தவை, தாழ்ந்தவை, நல்லவை, கெட்டவை, அனைத்தும் வந்தன. அனைத்தையும் சமர்ப்பணம் செய்தேன். ஒவ்வொன்றாய் ஒளிக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

விதவிதமான விஷயங்கள். இரகரகமான இரகசியங்கள். அனைத்தையும் சமர்ப்பணம் செய்தேன்.

விநாடி முள் கடிகாரத்தை முடிவே இன்றி சுற்றிச் சுற்றி வந்தது - ஜென்ம, ஜென்மமாக ஒரே விஷயத்தை நாம் சுற்றிச் சுற்றி வருவது போல்.

திடுக்கென முள் நின்றது.

ஒரு காட்சி. ஒளி புசிக்க முடியாத காட்சி. கரும் புகை படர்ந்த சிறிய, கரிய காட்சி.

எனக்கு மிகவும் வேண்டிய ராம்லால் என்ற வாடிக்கையாளர் என்னிடம் கம்ப்யூட்டர் கீபோர்டு வாங்கினார். கையோடு அறுநூறு ரூபாய் பணமும் தந்தார். ராம்லால் கொஞ்சம் மறதிகாரர். பணம் கொடுத்ததை மறந்துவிட்டு, பத்து நாட்கள் கழித்து, அதே பொருளுக்கு செக் அனுப்பினார். அது சிறிய தவறு என்பதால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. அது சிறிய தொகை என்பதால் நான் அதை திருப்பிக் கொடுக்க நினைக்கவில்லை. நான் அவரை ஏமாற்றவில்லை. அவர் கேட்டிருந்தால் நிச்சயம் திருப்பிக் கொடுத்திருப்பேன். எவரையும் ஏமாற்றும் எண்ணம் எப்போதும் எனக்கு இல்லை.அது என் தவறில்லை. ராம்லாலின் தவறு.

அப்படியா? உண்மையாகவா? திடீரென எனக்குள் சின்ன வெளிச்சம். மின்னலாய் ஒரு பெரிய ஞானோதயம்.

நான் ஓர் ஏமாற்றுக்காரன். நான் பிறரை ஏமாற்றுபவன். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் பொருந்தி வந்தால் எவ்வளவு வேண்டியவரானாலும், எத்தனைச் சிறிய விஷயமானாலும் தயங்காமல் ஏமாற்றிவிடுவேன்.

இதுவே நான்.

எனக்கு நான்தான் முக்கியம். என் ஆதாயம் மட்டுமே எனக்கு முக்கியம். புரிய ஆரம்பித்தது. மங்கலான ஒளி தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. என் செயல் தவறானது. என் செயலுக்குப் பின்னணியில் இருந்த என் மனோபாவம் தவறானது.

எனக்குப் பணம் ஒரு பிரச்சினையே இல்லை. மனம்தான் பிரச்சினை.

ஒரு விநாடியில் என்னைப் பற்றிய சுயகணிப்பு தலைகீழாக மாறியது. என்னையே நான் எதிர்கொண்டேன். நான் நல்லவனில்லை. திருடன், ஏமாற்றுக்காரன். வெறும் அறுநூறு ரூபாய்! நான் அயோக்கியனாகிவிட்டேன். நான் ஏமாற்றுக்காரன் என்று ஒப்புக்கொள்வதும், உயிர் போவதும் ஒன்றே.

கண்களில் முள் நெருடியது. 'கண்களை உடனே திறக்க வேண்டும். சமர்ப்பணத்தைத் துறக்க வேண்டும்,' என்ற வேகம் தோன்றியது. 'இது வீண் வேலை,' என்ற சிறு சந்தேகம் முளைத்தது. ஆனால் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று ஈர்த்தது. சமர்ப்பணத்தைத் தொடர்ந்தேன். நம்பிக்கை நெருப்பு சந்தேகத்தைச் சுட்டெரித்தது.

இதயத்தின் ஆழத்திலிருந்து ராம்லாலிடம் சொன்னேன். "என்னை மன்னித்து விடுங்கள் ராம்லால். உங்கள் பணத்தைத் திருப்பித் தந்து விடுகிறேன்.''

எத்தனையோ பிறவிகளாக ஆடாத, அசையாத கருங்கல் பாறையில் நீண்ட விரிசல் ஒன்று விழுந்தது.

மனங்கசிந்து ஒளியிடம் சொன்னேன். "உள்ளொளியே, நான் மாற மனமார சம்மதிக்கிறேன். திரும்பவும் இத்தவற்றைச் செய்யமாட்டேன். பெரியதோ, சிறியதோ, என் மனோபாவம் இனி எப்போதும் சரியாகவே இருக்கும். இது சத்தியம்."

பெரிய சூறாவளி ஒன்று என் நெஞ்சினுள் ஒரு கணம் வீசியது. அக்காற்றில் மலைத்துரும்புகள் பறந்தன. அளவுகள் அழிந்தன. அறுநூறும், அறுபது கோடியும் ஒன்றே என்று என் புத்திக்கு எட்டியது.

அவிழாத என் அந்தரங்க முடிச்சினை, கண்களைக் கூச வைக்கும் ஒளி வாளொன்று ஆவேசமாகத் தீண்டியது. என் ஜீவன் அதிர்ந்தது. விடுதலை, கனவிலும் கற்பனை செய்யாத விடுதலை.

சுதந்திரக் காற்றை எத்தனையோ பிறவிகளுக்குப் பின் நான் சுவாசித்தேன்.

கரும்புள்ளியைக் கனல் விழுங்கியது. கரும்புள்ளியைக் காணோம். வரதனையும் காணோம். உள்ளொளி மட்டும் வெள்ளொளியாக ஒளிர்ந்தது.

வெண்சுடர் மேலே, மேலே எழுந்தது.

ஆயிரம் பிறவிகளில் அடக்கிவைத்த எண்ணங்கள், உணர்வுகள், ஏமாற்றங்கள், செயல்கள், விருப்பு, வெறுப்புகள் அலை, அலையாக எழுந்தன. ஒவ்வொன்றாய் உள்ளொளிக்கு உளமாரத் தந்தேன். அனைத்தையும் அவ்வொளிக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

ஒளி வளர்ந்தது.

எண்ணற்ற முகமூடி மனித முகங்கள், அர்த்தமற்ற வெற்றி, தோல்விகள் அலை, அலையாக எழுந்தன. ஒவ்வொன்றாய் உள்ளொளிக்கு உளமாரத் தந்தேன். அனைத்தையும் அவ்வொளிக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

ஒளி ஓங்கி வளர்ந்தது.

இஞ்சின் டிரைவர் நிலக்கரியை எடுத்தார். நெருப்பிற்குக் கொடுத்தார். பொறுமையாக, நிதானமாக தம் வேலையைத் தொடர்ந்து செய்தார்.

புரிந்துவிட்டது. இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. உள்ளே வேலை செய்யவேண்டும் என்பதன் உண்மையான பொருள் நன்றாகப் புரிந்துவிட்டது. கடந்தகாலப் படுகுழியிலிருந்து நிலக்கரியைத் தோண்டி எடுத்தேன். கரும்பொய்களைச் சுட்டெரிக்கும் நெருப்பிற்கு நிலக்கரியைக் கொடுத்தேன். குழி! கடந்தகால குழி! முடிவே இல்லாத மரணக் குழி!

என் வேலையைத் தொடர்ந்தேன். ஒளிச்சுடர் வளர்ந்தது. ஓங்கி, ஓங்கி வளர்ந்தது. மேலும், மேலும் வளர்ந்தது.

என் மௌன நிமிடங்கள், என்றோ கடந்து முடிந்துபோன மாதங்களையும், வருடங்களையும் விழுங்கின.

ஏதோ சத்தம் கேட்டது. அதோ, அதோ எந்தக் காதுகளும் கேட்காத தேவ கானம் எனக்கு மட்டும் கேட்கிறதே! பரவசமடைந்தேன். இதோ, இதோ, எந்தக் கண்களும் பார்க்காத பரந்த புல்வெளி எனக்கு மட்டும் புலனாகிறதே! புளங்காகிதமடைந்தேன். எவரும் சுவைத்தறியாத இனிய பழச்சாறு என் நாவில் மட்டும் ஊறியது. இனி அமுதும், தேனும் எதற்கு?

பொய்ம்மையின் பள்ளத்தைத் தோண்டினேன். ஆழமாகத் தோண்டினேன். தோண்டிக்கொண்டே இருந்தேன். பாவங்களைத் தோண்டி எடுத்தேன். புண்ணியங்களைத் தோண்டி எடுத்தேன். எடுத்தவற்றை உண்மையின் உருவமான உள்ளொளிக்குக் கொடுத்தேன். இனி பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை.

எந்த ஜென்மத்திலோ நான் மறதியால் மூடிய ஜன்னல் கதவொன்று படீரெனத் திறந்தது.

கரிய கடலில் பொம்மையாக மிதந்த தூரத்துக் கப்பலில் இருந்து துளி வெளிச்சம் தெரிந்தது. தொலைதூர விண்மீன்போல் மங்கலாய்க் கண்சிமிட்டியது.

மூடியிருந்த கதவொன்று மின்னலெனத் திறந்தது. காலத்தளைகள் கணப்பொழுதில் தாமாகத் தகர்ந்தன. வேறொரு கதவு வலப்புறம் விருட்டெனத் திறந்தது. வறண்ட என் பாலைவன இதயத்தில் வற்றாத நீரூற்று பீரிட்டுத் துள்ளி எழுந்தது.

இன்னொரு கதவு இடப்புறம் ஓசையின்றித் திறந்தது. தணலெனத் தகித்த என் தலையை பனியாய்க் குளிர்ந்த கைகள் மென்மையாக வருடின. யார் கைகளோ? நானறியேன். இல்லை, இல்லை. இந்தக் கைகளை எனக்குத் தெரியும். எப்போது தெரியும்? எப்படித் தெரியும்? அது எனக்குத் தெரியாது.

ஒளியற்ற இருளில் என்றோ, எதையோ தொலைத்துவிட்டு, எதைத் தொலைத்தேன் என்று தெரியாமல், யுக, யுகமாய் அதைத் தேடித் தவித்தலைந்த என் ஜீவனின் அந்தரங்க அலறலை யாரறிவார்?

மூச்சுக் காற்றுக்கு முட்டி, மோதி, ஏங்கி, சுருங்கிக் கிடந்த என்னிரு சுவாசப் பைகளில் சுத்தமான காற்று நிரம்பியது. சத்தமின்றி நிரம்பியது. இனி நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை. நானும் இல்லை. எவருமில்லை. ஒளி மட்டுமே உண்டு.

உள்ளொளியே பேரொளி. பேரொளியே பொன்னொளி. பொன்னொளியே என்னொளி.

குட்டையாகக் குழம்பிக் கிடந்த என் தலைமீது, குற்றால அருவியாய் குளிர்சாந்தி கொட்டியது. நெஞ்சுக்கூட்டைக் குளிர்க்காற்று ஊடுருவ, ஜடவுடல் சிலிர்த்தது. நெஞ்சம் விம்மி பூரித்தது.

யாரது, யாரது, அணையாத தீபத்தை என்னுள் ஏற்றுவது? சாயாத சூரியன் எப்படி என் இதயத்தில் உதித்தது? எப்படி இந்த மாயம் இங்கே சாத்தியம்?

வரையற்ற வான்வெளியில், வெண்பறவை ஒன்று சத்தமின்றி சிறகடித்து, சுதந்திரமாய் சுற்றிச் சுற்றி பறந்தது. காற்றே இல்லாத உயரமான மலைமுகட்டில் மெல்லிய புல்லொன்று லேசாக நடுங்கியது. மெல்லத் துடித்து நிமிர்ந்தது.

பொன்னுலகம் என்னுள்ளே பூத்தது. அது வேறோர் உலகம். வேறொரு காலம். அங்கே முப்பதே நிமிடங்களில் முன்னூறு ஜென்மங்கள் கழிந்தன.

தூரத்திலே ஒரு விடியல். விடியலின் விளிம்பிலே ஒரு தேவதை. தேவதைக்குச் சிறகுகள். பொன்னாலான பன்னிரெண்டு சிறகுகள். சிறகுகள் மெல்ல அசைந்தன.

எங்கோ தொலைவில் யாரோ ஊதிய நீண்ட ஊதல் ஒலி தேய்ந்து மங்கலாய் கேட்டது. பின் நிசப்தம். நிசப்தத்தின் நடுவே சின்னதாய் ஓர் உலுக்கல். உலுக்கலின் முடிவில் சக்கரங்கள் சுழன்றன.

வண்டி மெல்ல நகரத் தொடங்கியது.

இதயத் தாமரையை நோக்கிய
என் இனிய பயணம்
ஒளி பொருந்திய பாதையில்
அன்று ஆரம்பமானது.

****

Tamil Author Term
Tamil Content Terms