ஐம்பது லட்சம் - பகுதி 6

தொலைபேசி அழைத்தது. வழக்கமான தயக்கமின்றி, 'துணிவே துணை' என்று ரிசீவரை எடுத்தேன். நான் பேசுமுன், ஒரு மென்மையான குரல் சிநேகமாகக் கேட்டது. "வரதன், எப்படி இருக்கிறீர்கள்?''

ஆனந்தியின் இனிய குரல் புன்னகைத்தது. உடலெங்கும் உற்சாகம் பரவியது. குரல் புன்னகைக்குமா? நம்பிக்கையில்லாவிட்டால் ஆனந்திக்குப் போன் செய்து பேசிப் பாருங்களேன்.

"ஆனந்தி, எத்தனை நாளாகிவிட்டது உன் குரலைக் கேட்டு! என் மீது ஏதேனும் கோபமா?'' என்று கேட்டேன். "ஏன், நீங்கள் போன் செய்திருக்கலாமே?'' என்று கேட்ட ஆனந்தி சிரித்தாள். இவள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். சிரிக்காவிட்டால் புன்னகைப்பாள்.

ஆனந்தியை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். இறுதி வகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தோம். அவள் குடும்பத்தினர் அனைவருடனும் எனக்கு நல்ல பழக்கம். மத்தியவர்க்க மனிதனான எனக்கு பணக்கார ஆனந்தியின் பல வருட நட்பு பெரிய பாக்கியம். ஆனந்தியின் அப்பா பெரிய பணக்காரர். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் உண்டு. நம் வீட்டில் நாலணா, எட்டணா என்று நாம் சாதாரணமாகப் பேசுவதுபோல், ஆனந்தியின் வீட்டில் ஒரு கோடி, இரண்டு கோடி என்று பேசிக்கொள்வார்கள்.

பங்காளிகள் பங்கு கேட்டு அவர்மீது பொய்யான வழக்கு போட்டிருப்பதால் சொத்துகள் முடங்கிக் கிடந்தன. ஆனால் வழக்கு விரைவில் இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பாகிவிடும் என்பது ஊருக்கே தெரியும். வழக்கு முடிந்ததும் ஆனந்திக்குத் திருமணம் செய்வார்கள் போலிருந்தது. யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ! எனக்குக்கூட இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

சிறிது நேரம் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். திடீரென ஆனந்தி கேட்டாள். "வரதன், உங்கள் கடை எப்படி நடக்கிறது?''

என்ன சொல்வது? ஆனந்தியிடம் பொய் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. அதேசமயம் என் பிரச்சினைகளைப் பற்றி அழகான பெண்ணிடம் பேசவும் பிரியமில்லை. பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தேன்.

"காலையில் மணிவாசகம் எனக்கு மருத்துவமனையில் இருந்து போன் செய்தார். ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். அதைச் சொல்ல போன் செய்தவர் உங்கள் பிரச்சினைகளைப் பற்றியும் சொன்னார். கவலைப்படாதீர்கள், எது எப்படிப் போனாலும் ஆனந்தியின் அன்பும், ஆதரவும் எப்போதும் உங்களுக்கு உண்டு. வழக்கு பிரச்னை இல்லாமல் இருந்திருந்தால் நானே வேண்டிய பணத்தைக் கொடுத்திருப்பேன்,'' என்று கனிவுடன் சொன்னாள் ஆனந்தி.

"அது எனக்குத் தெரியாதா?'' என்றேன். எனக்காக இவளாவது பரிந்து பேசுகிறாளே! உலகம் முழுமையாகக் கெட்டுப் போகவில்லை. இன்னும்கூட சில நல்லவர்கள் இருக்கிறார்கள். மணிவாசகத்தின் செயல் எனக்குப் பிடிக்கவேயில்லை. அவர் மீது கடுமையான கோபம் வந்தது.

"என் அத்தை மகன் குமரன் சிறிது நேரத்திற்கு முன் வீட்டிற்கு வந்திருந்தார்,'' என்றாள் ஆனந்தி. பகீரென்றது. இதயம் துடிக்க மறந்தது. இவளுக்கு அத்தை மகன் இருக்கிறான் என்ற விஷயம் அடிவயிற்றில் அமிலத்தை உருவாக்கியது. மௌனமாக இருந்தேன்.

"அவரது மனைவியின் வளைகாப்புக்காக அழைப்பு தர வந்திருந்தார்,'' என்றாள் ஆனந்தி. மீண்டும் எனக்கு உற்சாகம் வந்தது. 'குமரன், நீங்களும் உங்கள் மனைவியும் நீடூழி, நிம்மதியாக வாழ வேண்டும்,' என்று மனமார வாழ்த்தினேன்.

"குமரன் பெரிய பணக்காரர்,'' என்றாள் ஆனந்தி.

"உன்னை விடவா?'' என்று கேட்டுவிட்டேன்.

கலகலவென்று சிரித்தாள் ஆனந்தி. எனக்கு கர்னாடக சங்கீதம் தெரியாததால் அது என்ன ராகமென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

"குமரன் போன்ற நல்ல மனிதரை பார்க்கவே முடியாது. 'நாடு முன்னேற வேண்டும். நல்லவர்கள் வாழ வேண்டும்' என்று நினைப்பவர். நல்ல தொழிலும், நாணயமும் இருந்தால் கடன் தரத் தயாராக இருக்கிறார். அவர் இதைச் சொன்னதும் உங்கள் ஞாபகம்தான் வந்தது,'' என்றாள் ஆனந்தி.

மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. சடசடவென பெரிய துளிகள் ஜன்னல் கதவுகளில் பட்டுத் தெறித்தன. இசையுடன் இரைச்சல் எழுந்தது.

"ஆனந்தி, எனக்கு ஏராளமாகப் பணம் தேவை என்பது உண்மைதான். ஆனால் குமரன் கடனுக்கு ஈடு தர என்னிடம் சொத்து எதுவுமில்லை,'' என்று கவலையுடன் கூறினேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடப் போகிறதே என்று ஏக்கமாக இருந்தது.

"குமரன் ஈடு கேட்க மாட்டார். அவருக்கு நம்பிக்கை, நாணயம் தான்முக்கியம். நான்தான் சொன்னேனே, அவர் ஒரு வித்தியாசமான மனிதர்," என்று உறுதியாகச் சொன்னாள் ஆனந்தி.

ஒரு கணம் நிதானித்தேன். எதற்காக குமரன் இப்படிச் செய்கிறார்? ஆனந்திக்கு ஏதேனும் இரகசியமான உள்கமிஷன் இருக்குமா? பலவித எண்ணங்கள் மின்னலெனத் தோன்றி மறைந்தன. ஆனந்தி நல்லவள்தான். ஆனால், தேவை என்று வந்தால் மனிதர்கள் மாறி விடுகிறார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண்ணை நம்பி மோசம் போய்விடக்கூடாது. 'அழிவது பெண்ணாலே' என்ற வரி நினைவுக்கு வந்தது. அதற்கு முந்திய வரியை மறந்துவிட்டேன்.

"ஒரு வேளை வட்டி அதிகம் கேட்பாரோ?'' என்று சந்தேகமாகக் கேட்டேன்.

"இல்லவே இல்லை வரதன். இவர் எல்லாப் பணத்தையும் பாங்க் டெபாசிட்களில் வைத்திருக்கிறார். வருடத்திற்கு 5%தான் வட்டி கிடைக்கிறது. பாங்க், வியாபாரிகளுக்கு 18% வட்டிக்கு கடன் தருகிறது. இவர் 10% வட்டிக்கு தரத் தயாராக இருக்கிறார். குமரனுக்கும் இலாபம், உங்களுக்கும் 8% வட்டி குறையும்,'' என்று விளக்கமாகக் கூறினாள் ஆனந்தி.

'இருவருக்குமே இலாபம்' என்ற திட்டம் மிகவும் நல்ல யோசனையாகத் தோன்றியது. "கேட்க நன்றாகத்தான் இருக்கிறது,'' என்றேன்.

"வரதன், உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் 48% வட்டி கொடுப்பதாகச் சொன்னாலும் யாராவது உங்களுக்கு ஆயிரம் ரூபாயாவது கடன் கொடுப்பார்களா?'' பளிச்சென கேட்டாள் ஆனந்தி.

ஆனந்தியின் பவள வாயால் இப்படிக் கேட்க நேர்ந்தது மிகவும் அவமானமாக இருந்தது. 'எந்தச் சமயத்தில் எதை ஆண்களிடம் சொல்வது' என்று இந்தப் பெண்களுக்குப் புரிவதேயில்லை. ஏனோ, உண்மை எப்போதும் மனிதனின் சுயமரியாதையைத்தான் சீண்டுகிறது. "உண்மைதான் ஆனந்தி. என் நிலைமை அப்படித்தான் ஆகிவிட்டது,'' என்றேன்.

வாய்ப்பை நழுவவிடாமல் விரைவாகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு, "குமரன் எவ்வளவு கொடுப்பார்? எப்போது திருப்பித் தர வேண்டும்?'' என்று பரபரப்புடன் கேட்டேன்.

"உங்களுக்கு எவ்வளவு தேவை என்று எனக்குத் தெரியவில்லை. இருபது இலட்சம் கிடைத்தால் தேவலை என்று சொல்லி இருக்கிறேன்,'' என்றாள் ஆனந்தி.

"ஆனந்தி, உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேன். எனக்குத் தேவை பத்து இலட்சம்தான். அதிகமாகப் பணமிருந்தால் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்,'' என்றேன்.

"நீங்கள் சீக்கிரமாகப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும். அதுதான் எனக்குத் தேவை,'' என்றாள் ஆனந்தி.

"நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்? குமரனை எங்கே, எப்போது பார்க்கலாம்? அவரது விலாசத்தைச் சொல், நான் வந்துவிடுகிறேன்,'' என்று சொல்லிவிட்டு அவசரமாகப் பேனாவைத் தேடினேன். எப்போதுமே முக்கியமாகப் போன் பேசும்போதுதான் பேனா காணாமல் போய்விடுகிறது.

சிரித்தாள் ஆனந்தி. "உங்களை வரச் சொல்லவில்லை. என்னிடம் நீங்கள் கையெழுத்து போட வேண்டிய எல்லாப் பத்திரங்களையும் தருவதாகக் கூறினார். நீங்கள் கொஞ்சம் உற்சாகமானவுடன் அடுத்த வாரம் உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன்,'' என்றாள் ஆனந்தி.

"வட்டி பற்றி ஏதாவது சொன்னாரா?'' என்று கேட்டேன்.

"வருடத்திற்கு 10% வட்டி. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி தர வேண்டும். எப்போது முடியுமோ, அப்போது அசலைத் திருப்பித் தந்தால் போதும்,'' என்றாள் ஆனந்தி.

"நல்லது. அப்படியே செய்யலாம்,'' என்றேன்.

"நீங்கள் இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பீர்களா?'' என்று கேட்டாள் ஆனந்தி.

"நானெங்கே போகப் போகிறேன்? கழுதை கெட்டால் குட்டிச்சுவர். ஆனந்தி, நீ எந்த நேரம் சொன்னாலும் நான் காத்துக் கொண்டு இருப்பேன்,'' என்றேன்.

திடீரென, 'அடடா, ஆனந்திக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டோமே,' என்ற நினைவு வந்தது.

"ஆனந்தி, நீ மிகவும் நல்லவள். உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை....'' என்று ஆரம்பித்தேன்.

"அடடா, போதுமே உங்கள் புகழாரம்,'' என்று என் வாயை அடைத்த ஆனந்தி, "மத்தியானம் சாப்பாடு நானே சமைத்துக்கொண்டு வருகிறேன். பிரச்சினை வந்தால் நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடமாட்டீர்கள். இன்று நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம்,'' என்றாள்.

இது என்ன, கரும்பு தின்னக் கூலியா?

நான் பதில் சொல்லுமுன் போனை வைத்து விட்டாள் ஆனந்தி.

****

நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தேன். ஏதோ உறுத்தியது. என் கார் சாவி. சட்டென்று ஒரு திட்டம். இன்னும் ஒரு ஐந்து இலட்சம் கூட கடன் வாங்கினால், புதிய கார் வாங்கிவிடலாம். சிறிது நேர யோசனைக்குபின் என் அற்புதமான திட்டத்தைக் கைவிட்டேன். கார் சாவியை குட்டி டீப்பாய் மீது விட்டெறிந்தேன்.

எங்கோ ஒரு பறவை மெலிதாகக் குரல் கொடுத்தது. ஆனந்தியிடம் நன்றியும், சந்தோஷமும் என் நெஞ்சு முழுவதும் நிரம்பி வழிந்தன. 'ஆனந்தி பற்றி ஒரு விநாடி தவறாக நினைத்தோமே' என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. யோசித்துப் பார்த்தால் எனக்கு எப்போது நல்லது நடந்தாலும், அதில் என்னருமை ஆனந்தி சம்பந்தப்பட்டிருப்பது புரிந்தது.

யார் அந்தக் குமரன்? அவருக்கு ஏது இவ்வளவு பணம் அரசியல்வாதிகளின் பினாமியாக இருப்பாரோ? அவரோடு தொடர்பு வைத்துக் கொள்வது பாதுகாப்பானதா! சந்தேகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு, பயம் என பல வகையான உணர்வுகள் எனக்குள் புகுந்து கும்மாளம் போட்டன. ஏனோ, ஆனந்தியின் நல்லெண்ணத்தின்மீது அளவுகடந்த நம்பிக்கை சுரந்தது. அந்த நம்பிக்கையின் பலத்தின் முன் தவறான உணர்வுகள் வெகு நேரம் நிற்க முடியாமல் விலகி ஓடின. குழம்பிக் குட்டையாக கிடந்த மனம் மெல்ல, மெல்ல மயங்கியது. தூக்கம் கண்களைத் தழுவியது. காலை நேரம் நழுவியது.

****

Tamil Author Term
Tamil Content Terms