ஐம்பது லட்சம் - பகுதி 7

நான் கண் விழித்தபோது மணி இன்னும் இரண்டு ஆகவில்லை. ஆனால் எனக்கு பரபரப்பு வந்துவிட்டது. "கடிகார முள் ஏன் இவ்வளவு மெதுவாகச் சுற்றுகிறது?' என்று பொறுமை இழந்தேன். சுத்தமாகக் குளித்தேன். "நன்றாக வாசனை வரட்டும்' என்று சோப்பை தாராளமாகச் செலவு செய்தேன். நீலநிற ஜீன்ஸும், சிவப்பு நிற அரைக்கைச் சட்டையும் அணிந்து கொண்டு கண்ணாடியில் இருபதாவது தடவையாகப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது.

வீடு முழுவதும் ரோஸ் ஏர்-பிரஷ்னர் அதிகமாகவே தெளித்து விட்டேன். ஆனந்திக்கு ரோஜா நறுமணம் பிடிக்கும். சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்து தூசி தட்டி அடுக்கி வைத்தேன். ஆனந்திக்குச் சுத்தம் பிடிக்கும். சாப்பாட்டு அறையையும், மேஜையையும் சுத்தப்படுத்தி, தட்டுகளையும், கோப்பைகளையும் மிக நேர்த்தியாக அடுக்கி வைத்தேன். ஆனந்திக்குச் ஒழுங்கு பிடிக்கும்!

என் வேலை முடிந்தது.

சுவர்க் கடிகாரம் இரண்டு முறை பலமாக அடித்தது. அழைப்பு மணி ஒரு முறை மென்மையாக ஒலித்தது. கண்ணாடியில் என்னைக் கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொண்டேன். பரவாயில்லை, நன்றாகத்தான் இருந்தேன்.

கதவைத் திறந்தேன். பொற்சிலை புன்னகைத்தது.

ஆனந்திக்குக் கிட்டத்தட்ட முப்பது வயதானாலும், பார்வைக்குப் பத்தொன்பது என்றுதான் எனக்குத் தோன்றும். அடர்த்தியான கரிய கூந்தலை நடுவகிடிட்டு, வாரி இருந்தாள். மெல்லிய விற்களின் கீழே இரு பட்டாம்பூச்சிகள் படபடத்தன. செழிப்பான கன்னங்களைச் சில நீர்த்துளிகள் அலங்கரித்தன. பவளப் பாறையின் பிளவிலே முத்துகள் பிரகாசித்தன. மலர்ந்த முகத்திலே எத்தனை ஒளி! மழைத் துளிகள் பட்டு ஆங்காங்கே ஈரமாக இருந்த மஞ்சள் நிற சேலையும், மின்னும் கண்ணாடி பதித்த கறுப்புநிற சோளியும் மனதை மயக்கின. பந்தாகக் கூந்தலை முடித்து, அதை சுற்றி பிறைச் சந்திர வடிவத்தில் ஜாதிமல்லி சூடி இருந்தாள்.

கடவுளே! ஏன் சில பெண்கள் மட்டும் இத்தனை அழகாக இருக்கிறார்கள்? என் இதயம் படபடவெனத் துடித்தது.

"என்ன வரதன், எப்படி இருக்கிறீர்கள்?'' என்று ஆனந்தி மென்மையான குரலில் கேட்டாள்.

"காலையிலிருந்தே உன்னை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்,'' என்றேன்.

"உண்மையைச் சொல்லுங்கள். சாப்பாட்டைத்தானே எதிர்பார்த்தீர்கள்?'' என்று சிரித்தாள் ஆனந்தி.

"இல்லவே இல்லை. உன்னைத்தான் எதிர்பார்த்தேன்,'' என்று சொன்னேன். பணத்தைத்தான் எதிர்பார்த்தேன்' என்ற உண்மையை எப்படிச் சொல்வது?

ஆனந்தியின் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது. "உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா?'' என்றாள். என் உண்மையான சொரூபம் தெரிந்தால் என்னோடு பழகுவாளா? ஒரு வேளை தெரிந்தும் என் மீது அன்பு காட்டுகிறாளா?

"உள்ளே வா,'' கதவை அகலமாகத் திறந்து, நன்றாக வழிவிட்டேன். அவள் வீட்டிற்குள் கால் வைத்தது என் இதயத்தில் வைத்தது போல் இன்பமாக இருந்தது. அப்போது சிறிது பலமாகக் காற்று வீசியதில், நன்றாக முடித்திருந்த போதும் ஓரிரு கூந்தல் இழைகள் என் முகத்தை சற்றே வருடின. 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு' என்று இறையனார் பாடல் மூலம் ஏற்கனவே முத்தமிழ்ச் சங்கம் முடிவு செய்துவிட்டபடியால், ஆனந்தியின் கூந்தல் நறுமணம் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் எழவில்லை .

காதல் எண்ணங்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு, ஆர்வத்துடன் அவள் கைகளைப் பார்த்தேன். என்ன ஏமாற்றம்! கையில் சிறு கைப்பையும், ஒரு பெரிய டிபன் கேரியரும் இருந்தன. பத்திரங்களுக்கான அறிகுறியைக் காணோம். 'ஒரு வேளை மழையில் காகிதம் நனைந்து விடும்,' என்று காரிலேயே வைத்துவிட்டாளோ! அப்படித்தான் இருக்கும்.

சிறிய மேஜை மீது தன் அழகிய கைப்பையை வைத்தாள். எதுவும் பேசாமல் டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு, சாப்பிடும் அறைக்குச் சென்றாள். என் வீடு அவளுக்கு மிக நன்றாகத் தெரியும். எத்தனையோ முறை வந்திருக்கிறாள். ஆனாலும், இதுதான் முதல் முறை போல் உணர்ந்தேன்.

அவளைப் பின்தொடர்ந்தேன், "பாவாடை, தாவணியில் பார்த்த உருவமா?'' என்று மெல்ல பாடினேன்.

"ஏன், இப்போது சேலையில் அழகாக இல்லையா?'' என்று பொய்க் கோபம் காட்டினாள்.

"நீ எப்போதுமே அழகுதான். நீ உடுத்தியதால்தான் சேலைக்கே அழகு வந்திருக்கிறது,'' என்றேன்.

அவள் முகம் நாணத்தால் மலர்ந்தது. "போதுமே, உங்கள் புகழாரம்,'' என்றாள்.

கூந்தலில் இருந்த ஜாதிமல்லி பூக்களை முகர்ந்த வண்ணம் ஒரு காதல் கவிதை கூற மனம் துடித்தது. "கடன்காரா, உனக்குக் காதல் ஒரு கேடா?' என்று மனசாட்சி இடித்தது.

டிபன் கேரியரை மேஜைமீது வைத்து நிதானமாகப் பிரித்தாள். விதவிதமான உணவு வகைகள்.

"இவ்வளவா! விருந்தே சமைத்திருக்கிறாய்'' என்றேன்.

"இது என்ன பிரமாதம். இது கூட இல்லாமல் எப்படி சாப்பிடுவது?'' என்றாள் ஆனந்தி.

"இவ்வளவும் நீயாகவே செய்தாயா?'' என்று கேட்டேன்.

"ஆமாம். என் கையாலே உங்களுக்கு சமைத்து போட்டு எத்தனை நாளாகி விட்டது. இன்றுதான் மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது," என்றாள் ஆனந்தி.

அதெல்லாம் இருக்கட்டும். எங்கே பத்திரங்கள்? பணம் எங்கே? ஒரு வேளை வேடிக்கையாக ஏமாற்றினாளோ? இது ஏப்ரல் மாதம்கூட இல்லையே? இருக்கட்டும், அப்படி ஏதேனும் வேடிக்கை செய்திருந்தால், இன்றோடு இவள் உறவை முறித்துக்கொள்ள வேண்டியதுதான்.

சுத்தமான மேஜை மீது பீங்கான் தட்டுகளும், கோப்பைகளும் ஒழுங்காக இருந்ததைப் பார்த்துவிட்டு, "அட, இதென்ன அதிசயம்!'' என்று ஆச்சரியப்பட்டாள் ஆனந்தி. அவளுக்காக நான் இதை இவ்வளவு கவனமாகச் செய்திருக்கிறேன் என்பதில் அவளுக்கு அலாதி இன்பம். கவனத்துடன் செய்யும் சின்னச் சின்ன செயல்கள் மனித வாழ்க்கைக்கு எத்தனை மகிழ்ச்சியும், மனநிறைவையும், புதிய அர்த்தத்தையும் தருகின்றன!

பரிமாற ஆரம்பித்தாள் ஆனந்தி. நான் உதவி என்ற பெயரில் உபத்திரவம் செய்ய முயன்றேன். "நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் சாப்பிட ஆரம்பியுங்களேன்,'' என்றாள் ஆனந்தி.

இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். ஆனந்தி ஏதேதோ விஷயங்களைப் பற்றிக் கலகலவெனப் பேசினாள்; சிரித்தாள். எனக்கு எதுவுமே மனதில் பதியவில்லை. பணம் மட்டுமே என் மனதில் இருந்தது. ஆனாலும் பேசினேன், சிரித்தேன், நடித்தேன். என் நடிப்பாற்றலைப் பார்த்து எனக்கே வியப்பாக இருந்தது.

சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. ஒரு பெண் அன்புடன் சமைக்கும் உணவின் சுவையே அலாதிதான். சாப்பாடு முடிந்ததும் ஆனந்தி பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்தாள். அவளுக்கு உதவ வேண்டும் என்று கூடத் தோன்றாமல் அவள் வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வேலையை முடித்து விட்டு ஹாலுக்கு வந்த ஆனந்தி நாற்காலியில் வசதியாக உட்கார்ந்தாள். அவள் எதிரே உட்கார்ந்தேன். நுனிநாக்கால் மெல்லிய உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள் ஆனந்தி. என் உதடுகள் வறண்டன. ஆனந்தி தன் கைக்குட்டையால் உதடுகளை ஒற்றி எடுத்தாள். அடடா, அடடா, கைக்குட்டையின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! பணம் என்ன ஆயிற்று?

கடிகாரத்தைப் பார்த்த ஆனந்தி, "உங்கள் அருகில் இருந்தால் நேரம் போவதே தெரியவில்லை'' என்றாள்.

"உன்னைப் பற்றி நினைத்தாலே போதும், எனக்கு நேரம் போவது தெரியாது'' என்று கூறினேன். மீண்டும் நாணத்தால் மலர்ந்தாள் ஆனந்தி.

எல்லாம் சரிதான், பணம் என்ன ஆயிற்று? அதைப்பற்றி மட்டும் ஏன் பேச மறுக்கிறாள்?

ஒரு வேளை குமரன் மறுத்துவிட்டாரோ? பணத்தைப் பற்றி நானே பேச்சை ஆரம்பிக்க கஷ்டமாக இருந்தது. ஆனால், பேசித்தான் ஆகவேண்டும். எவ்வளவு நேரம்தான் பொறுப்பது? இனி பொறுப்பதில்லை. வரதா, பொறுத்தது போதும். பொங்கி எழு.

"வரதன், நான் இன்று மதியம் ஒரு மணிக்கு குமரனின் அலுவலகத்துக்குச் சென்றேன்,'' என்று ஆரம்பித்தாள் ஆனந்தி.

நல்லவேளை, அவளே பேச்சை ஆரம்பித்துவிட்டாள். நன்றி, ஆண்டவா நன்றி!

"குமரன் டெல்லியில் ஒரு வெளிநாட்டு பாங்க்கில் கடன் அதிகாரியாக வேலையில் இருந்தார். கடன் கேட்பவர், 'நல்லவர், நாட்டுக்கு உபயோகமான திட்டம் தருபவர்' என்று தோன்றினால் தைரியமாகக் கடன் கொடுத்துவிடுவார். இதனால் இவருக்குப் பல பிரச்சினைகள். போன வருடம் இவர் வேலையே போய்விட்டது,'' என்றாள் ஆனந்தி.

"பாங்க் என்றால் பல சட்டதிட்டங்கள் இருக்கும். அதை மீறினால் எப்படி வேலையில் இருக்க முடியும்?'' நான் வங்கிக்கு ஆதரவாகப் பேசினேன்.

"ஆனால், குமரனுக்கு அதிர்ஷ்டம் அதிகம். எங்கள் பெரிய மாமாவுக்கு வாரிசு இல்லாததால் போன வருடம் இறந்துபோவதற்கு முன் எல்லாச் சொத்துகளையும் குமரனுக்கு எழுதிவைத்துவிட்டார்! குறைந்தது இருபது கோடி தேறும்!'' என்றாள் ஆனந்தி.

"பெரிய அதிர்ஷ்டம்தான்,'' என்றேன். 'எனக்கு இப்படி ஒரு வாரிசில்லாத பணக்கார மாமா இல்லாமல் போய்விட்டாரே,' என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

"எல்லாப் பணமும் பாங்க் டெபாசிட்டில் இருக்கிறது. எந்த வில்லங்கமும் இல்லை. அதனால் அந்த பாங்கில் செய்ய முடியாததை குமரன் தானே செய்கிறார்,'' என்றாள் ஆனந்தி.

"குமரன் என்ன சொன்னார்?'' என்று கேட்டேன்.

"காலையில் 'உடனே பணம் தருகிறேன்' என்றுதான் சொன்னார். நடுவில் என்ன நடந்ததோ, தெரியவில்லை. உங்களைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். அவர் கேட்டதைப் பார்த்தால், 'பணம் தருவாரோ' என்று சந்தேகமாக இருந்தது,'' என்றாள் ஆனந்தி.

மீண்டும் என் மனம் கவலைப்பட ஆரம்பித்தது. "என்ன செய்வது ஆனந்தி, விதியை யாரால் மாற்ற முடியும்?'' என்றேன்.

ஆனந்தி புன்னகைத்தாள். "உங்களுக்கு இந்தச் சமயத்தில் உதவாவிட்டால் எப்படி? அதனால் அப்பாவிடம் அங்கிருந்தே செல்போனில் பேசினேன். அப்பா உங்களுக்கு உத்தரவாதம் தருவதாகக் குமரனிடம் சொன்னார்.''

மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது. "அப்புறம் என்ன ஆயிற்று?'' ஆர்வமாகக் கேட்டேன்.

"அப்பா உத்தரவாதம் தந்து, என் பெயரில் கடன் வாங்குவதானால், 'ஐம்பது இலட்சம்வரை தரத் தயார்,' என்று சொன்னார் குமரன். நீங்கள் கடையை விரிவுபடுத்த உதவியாக இருக்கும் என்பதால் அப்பாவிடம் சொல்லிவிட்டு, நானே கையெழுத்து போட்டு, உடனே ஐம்பது இலட்சம் ரூபாய் வாங்கிவிட்டேன்,'' என்றாள் ஆனந்தி.

இது என்ன கனவா, நனவா? இப்படியும் நடக்குமா?

"ஆனந்தி, நானே நொந்துபோயிருக்கிறேன். நீ என்னைக் கேலி செய்யவில்லையே?'' என்றேன்.

புன்னகைத்தாள் ஆனந்தி. "எங்கள் இருவருக்கும் ஒரே பாங்கில்தான் கணக்கு என்பதால் அவர் பணத்தை உடனே என் கணக்கிற்கு மாற்ற முடிந்தது. நீங்கள் எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து போட வேண்டாம். பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்ற ஆனந்தி, தன் கைப்பையிலிருந்து காசோலை புத்தகத்தை எடுத்தாள்.

செக் எழுத ஆரம்பித்தவள், ஒரு விநாடி தயங்கினாள். "எந்த பெயருக்கு செக் எழுதட்டும்? நீங்கள் எண் கணிதப்படி பெயரை மாற்றி விட்டீர்களாமே!'' என்று கேட்டாள் ஆனந்தி.

எனக்கு வெட்கமாக இருந்தது. "அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது அதே பழைய பெயர். ஏதோ குழப்பத்தில் அப்படிச் செய்துவிட்டேன்,'' என்றேன். இதையெல்லாம்கூடவா மணிவாசகம் ஆனந்தியிடம் சொல்லியிருக்கிறார்!

மல்லிகைப்பூ கையெழுத்தில் ஐம்பது இலட்சத்திற்கு என் பெயருக்குச் செக் எழுதினாள் ஆனந்தி. சத்தமில்லாமல் அந்த செக்கைக் கிழித்து என் கையில் கொடுத்தாள்.

நான் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று இறந்தவர். இவ்வளவு பெரிய தொகையை இதுவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததேயில்லை. எனக்கு எதுவும் புரியவில்லை. 'என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என்றே விளங்கவில்லை.

"ஆனந்தி, உன் பெருந்தன்மை.....'' என்று தடுமாறினேன்.

"அடடா, போதுமே உங்கள் புகழாரம்,'' என்று சிரித்தாள் ஆனந்தி. இவள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாள். சிரிக்காவிட்டால் புன்னகைப்பாள்.

என் கைகளை மிக மென்மையாகப் பற்றி, ஆதரவாக வருடினாள் ஆனந்தி. "வரதன், கவலையை விடுங்கள். இனி, உங்களுக்கு நல்லது மட்டுமேதான் நடக்கும்'' என்று அன்பு ததும்பும் வார்த்தைகளைக் கூறி விடைபெற்றாள் அருமை ஆனந்தி.

என்னருமை ஆனந்தி!

****

மழை நின்றுவிட்டது. மழைத்துளிகள் உயரமான மரங்களின் ஈரமான இலைகளிருந்தும், நனைந்து போன ஜன்னல் கதவுகளிருந்தும் சொட்டின. வேற்று மனிதரை அம்மாவின் பின்னாலிருந்து எட்டிப் பார்க்கும் குட்டிப் பையனைப் போல சூரியன் மேகத்திற்கு பின்னாலிருந்து அவ்வப்போது எட்டிப் பார்த்தான்.வரையில்லா நீலவானத்தில் சிதறிக் கிடந்த வெண்பஞ்சு மேகங்கள் திட்டுதிட்டாகத் தெரிந்தன. ஜன்னலில் இருந்த மழைத் துளிகள் சூரிய ஒளியில் சின்னச் சின்ன வைரக் கற்களாக ஜொலித்தன. தென்றல் என்னை வருடியது. நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்களில் நீர் துளிர்த்தது.

சமர்ப்பணத்தின் சக்தி சத்தியமென சந்தேகமறப் புரிந்தது.

(முற்றும்)

Tamil Author Term
Tamil Content Terms