மகுடம்

இன்றைய பேரொளியின் அடர்ந்த அதிதீவிர வெளிப்பாடே இருண்டிருந்த நேற்றைய இரவு என்றுணர வைத்த உஷத்தேவியை எண்ணி நன்றியால் நெகிழ்ந்து பனியாக உருகிக் கொண்டிருந்த இமயமலைக்கு பொன்மகுடம் அணிவித்துக் கொண்டிருந்தான் சூரியன். நன்றியை பொற்கவசமாகவும், அறத்தை மணிகுண்டலங்களாகவும் அணிந்து, அழிந்தொழியும் அற்பர்களிடையே அமரனாக வல்லவனை பொற்கரங்களால் அணைக்க, மின்னும் அணிகலன்கள் பூண்டு, ஏழுவகைப் புரவிகளை ஞானத்தேரில் பூட்டி வான வீதியில் நகரத் தொடங்கியிருந்தான்.

கடந்த காலத்தின் மகத்தான சாதனைகளை கடந்து செல்ல விழைபவர்களை பின் தொடரும் அன்னை உஷத்தேவி, உயிரற்ற இருண்ட உடலுக்கும் பெருந்தன்மைப் பேரொளியால் உயிரூட்ட முடியும் என்றுணர்த்த, இருண்ட பழைய இரவால் மூடப்பட்டிருந்த பூமாதேவியின் உடலுக்கு தன் பொன்னொளியால் புதிய வாழ்வும். பிரகாசமான விடியலும் தர ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். இன்றைய விடியலோடு முரண்படும் நேற்றைய விடியலின் பிணக்குகளை தீர்க்க முடியுமென்றால் அவளால் எதைத்தான் சாதிக்க முடியாது? 

என்று வரும் என்று வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நாள் இன்று வந்தேவிட்டது.

அதிகாலையிலேயே மக்கள் அணிகலன்களும், அலங்காரமும் பூண்டு விளையாட்டரங்கை நிறைக்கத் தொடங்கியிருந்தனர். ஒரு தலைமுறைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே சாத்தியமான மங்கல நிகழ்ச்சி. பல வருடங்களுக்கு முன் சிறுவர்களாக குருகுலத்திற்கு சென்ற இளவரசர்கள் இன்று குருகுலவாசம் முடிந்து வீரர்களாக திரும்புகின்றனர். தங்கள் வீரத்தையும், வித்தைகளையும் வெளிப்படுத்தப் போகின்றனர்.

இளவரசர்களின் கல்வி தம் குருகுலத்தில் நிறைவுற்றதாக அஸ்தினபுரி அரசவையில் கூறி அரசரின் அடுத்த ஆணை என்ன என்று சில நாட்களுக்கு முன்பு துரோணர் வினவினார்.

‘உத்தமரே, தங்கள் பணியில் பழுதென்பதே இருக்காது என்பதை உலகம் அறியும். பிதாமகர் என்ன ஆணையிடுகிறாரோ அதன்படி செயல்படுவோம்’ என்றார் அஸ்தினபுரியின் பேரரசரான திருதராஷ்டிரர்.

‘இளையவர்களின் திறனையும், சாதனையையும் காண்பதைத் தவிர மூத்தவர்களுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? ஒவ்வொரு முதியவனும் தான் சாதிக்காததை தன் மகன் மூலம் சாதிக்க விரும்புகிறான். மகன் என்பவன் தந்தையன்றி வேறு யார்?’ என்றார் அவைத் தலைவரும், பிதாமகருமான பீஷ்மர்.

‘ஆனால் தங்களைத் தவிர வேறெந்த மகனும் அவ்வாறு நினைப்பதில்லை' என்றார் பேரமைச்சர் விதுரர்.

‘உலகில் மகத்தானவற்றை அடைய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனுள்ளும் யுகந்தோறும் இடைவிடாது தொடரும் ஆர்வமாக இருக்கிறது. சத்திரியனுக்கு உலகாள வேண்டும். வணிகனுக்கு குபேர செல்வம் வேண்டும். துறவிகளின் பேராசைக்கு அளவேயில்லை. அவர்களுக்கு பிரம்மமே வேண்டும்’ என்று கூறி உரக்க சிரித்தார் திருதராஷ்டிரர்.

‘பிதாகமர் கூறுவதே சரி. இளவரசர்கள் தத்தம் ஆற்றலை, வித்தையை மக்களுக்கு வெளிகாட்டும் வகையில் வீர விளையாட்டரங்கம் ஒன்றை அமைப்போம்’ என்றார் அரசரின் மைத்துனரான சௌபாலர் சகுனி.

விதுரரைத் தவிர அனைவரும் சகுனியின் கருத்தை ஆதரித்தனர்.

‘அரசே, துரோணரை போன்ற குரு கல்வி நிறைவுற்றது என்று கூறிய பின் யாருக்கு எதை நாம் நிரூபிக்க வேண்டும்? அவரவர் திறமை அதற்குரிய நேரத்தில் தானே வெளிப்படட்டுமே’ என்றார் விதுரர்.

‘விதுரா, சொற்களையே ஆயுதமாகக் கொண்ட நீ, விவாத அரங்கம் என்றால் உடனே ஒப்புக் கொண்டிருப்பாய். வீர விளையாட்டரங்கம் என்பதால் தயங்குகிறாயா?’ என்றார் திருதராஷ்டிரர்.

அனைவரும் நகைத்தனர்.

‘விதுரா, மக்கள் தங்கள் தலைவனைப் பற்றி தத்தம் ஆழ்மனதில் கனவு காண்கிறார்கள். அவர்களின் ஆழ்மனங்கள் கூட்டாக எவரை ஏற்கிறதோ அவரே தலைவனாகி நீடிக்க முடியும். மக்களின் ஆழ்மனத் தலைவன் உள்ளதை உள்ளபடி தொடர்ந்திருக்க வைக்கிறான். உலகை உயர்த்த நினைப்பவன் பொது வாழ்விற்கு வருவதில்லை. அவன் தனித்து தவமிருந்து தன்னை மாற்றி உலகையும் மாற்றுவான். நம் இளவரசர்கள் நாடாள பிறந்தவர்கள். தவமியற்றும் ரிஷிகளல்ல. அவர்களில் எவன் தலைவன் என்பதை மக்களே முடிவு செய்யட்டும். அதற்கு விளையாட்டரங்கம் ஒரு வாய்ப்பு’ என்றார் பீஷ்மர்.

‘அரசே, முரண்பாடுகளற்ற நிலையில்தான் அரசனால் நல்லாட்சி தர முடியும் என்று அமைச்சு நூல்கள் கூறுகின்றன. நாம் எந்த வேறுபாட்டையும் பாராட்டாத போதும் இளவரசர்களிடையே பாண்டவர்கள், கௌரவர்கள் என்ற இரண்டு அணிகள் ஏற்கனவே உருவாகிவிட்டன. அவை ஒன்றோடொன்று முற்றிலும் முரண்பட்டு நிற்கின்றன. எந்த ஆதாரமும் இன்றி மக்களும் இதை ஓரளவு அறிந்திருக்கிறார்கள். பொது அரங்கம் அமைத்தால் முரண்பாடுகளையும், மோதல்களையும் மக்களுக்கு அதிகாரபூர்வமாக ஆதாரத்துடன் அறிவிப்பது போலாகிவிடும்’ என்றார் விதுரர்.

‘விதுரா, நம்மை மீறி மைந்தர்கள் எதுவும் செய்து விடமுடியாது’ என்றார் பீஷ்மர்.

‘தந்தை ஆகாததால் பிதாமகரால் மைந்தர்களின் போக்கை அறிய முடியவில்லை. அரங்கு அமைத்தால் முரண்பாடுகளும், மோதல்களும் மக்களுக்கு தெரிய வரும் என்ற பேரமைச்சர் விதுரரின் கருத்தை ஏற்கிறேன். அது நிகழ்வது நாட்டுக்கு நல்லது’ என்றார் சகுனி.

‘மைத்துனரே, உங்கள் கருத்தை சற்று விளக்கமாக கூறுங்கள்’ என்றார் திருதராஷ்டிரர் குழப்பத்துடன்.

‘பாலைநிலமான காந்தாரம் ஒரு காலத்தில் வறியவர்களின் நிலமாக இருந்தது.  எங்கள் குடிகளுக்கு செழிப்பான வாழ்வு அமைய வேண்டுமென நாங்கள் விரும்பினோம். கண் முன்னிருந்த வீண் மண்ணும், இதயம் கண்ட லட்சியக் கனவும் முற்றிலும் முரண்பட்டிருந்தன. முரண்பாட்டை முன்னேற்றப் பாதையாக காணும் பக்குவம் பெற்றோம். பசுமையால் செல்வம் பெற்றிருந்த பல தேசத்தினருக்கும் வணிக சேவை செய்தோம். குறுகிய காலத்தில் காந்தாரத்தை பாரதத்தில் மிகுந்த செல்வமுள்ள தேசமாக மாற்றினோம். அச்செல்வம் அல்லவா பாலையில் காந்தாரம் என்ற ஒரு தேசமிருப்பதை அஸ்தினபுரி அறிய வைத்தது?’ என்றார் சகுனி.

‘காந்தாரத்தின் முரண்பாடுகளை முன்னேற்றத்தின் பாதையாக மாற்றிய பெருமை தங்களுடையதே’ என்றார் திருதராஷ்டிரர்.

'இல்லை. அதுவே இயற்கையின் வழி என்பதை உலக நடப்பை உய்த்துணருபவர்கள் அனைவரும் அறிவர். பேரரசே, நான் பேரமைச்சர் விதுரரைப் போல அனைத்தும் அறிந்தவனல்ல. எப்போதும் தங்கள் நலன் மட்டுமே கருதும் எளியவன். இளவரசர்களின் முரண்பாடுகளை அனைவரும் அறிய வேண்டும், ஏற்று எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் பேரமைச்சர் போன்றவர்களின் துணை கொண்டு அவற்றை களையும் வழிகளை அறிய முடியும். முரண்பாடுகளைக் களையும் வழியை கண்டறிந்தால் அஸ்தினபுரி பாரததேசத்தின் மணிமகுடமாகிவிடும். அப்போது இன்றைய பேரரசர்கள் அனைவரும், நாளைய அஸ்தினபுரியின் பேரரசரான துரியோதனருக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக இருப்பர். மாவீரர்களான பாண்டவர்களை படைத் தலைவர்களாக பெறப் போகும் துரியோதனரை எவரால் வெல்ல முடியும்?' என்றார் சகுனி.

'மைத்துனரே, விழியற்ற எனக்கு நீங்களே விழியாக இருந்து வழி நடத்துகிறீர்கள்' என்று மனம் நெகிழ்ந்து கூறினார் திருதராஷ்டிரர்.

'நிகழ்காலத்தில் செய்யவேண்டியதைப் பற்றி சிந்திப்போம். எதிர்காலக் கனவுகள் சற்று காத்திருப்பதில் பிழையில்லை' என்றார் விதுரர்.

'எதையும் அறிவை மட்டும் கொண்டு ஆராயாதே விதுரா, அஸ்தினபுரி அரியணையைப் பற்றி கனவு காண கற்றுக் கொள். சகுனியைப் போல பெருங்கனவுகள் காண்பவன்தான் பெருஞ்சாதனைகளை செய்கிறான்' என்றார் பீஷ்மர்.

'நடைமுறைக்கு பொருந்தி வராத பெருங்கனவுகள் பேரழிவையும் தரக்கூடும். அரசே, அஸ்தினபுரியின் இளவரசர்களிடையே உள்ள பிணக்கு தீர்க்கமுடியாத சிக்கல் என்றஞ்சுகிறேன்' என்றார் விதுரர்.

'இங்கு மட்டுமல்ல. எங்குமே இணக்கமின்மைதான் சிக்கலின் அஸ்திவாரம். சரிந்த சாம்ராஜ்யங்களின் சரித்திரத்தை சிந்தித்துப் பாருங்கள். பிணக்குகள் அனைத்தும் இணக்கமின்மையின் தோற்றங்களே. அறிவிலிருந்து சற்று விலகி நின்று செயலாற்றியிருந்தால் அவையனைத்தும் அழியாமல் இருந்திருக்கும். அறிவால் தீர்க்க முடியாத எந்த சிக்கலுக்கும் உரிய தீர்வை உள்ளுணர்வால் அறிய முடியும். அதை செய்யாதபோதுதான் தீராசிக்கல் உண்டாகிவிட்டது என்று திகைத்து நிற்கிறோம். பேரமைச்சரைப் போன்ற நுண்மதியாளர்கள், நடைமுறை நிபுணர்கள் சிக்கலை மறைக்கலாம், தள்ளிப் போடலாம், தவிர்க்க முயலலாம். இவையெல்லாம் குறுகிய எல்லை கொண்ட மனித அறிவின் முயற்சிகள். இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கை, முரண்களின் மோதலால் பிறக்கும் இணக்கத்தை மட்டுமே விரும்புகிறது. அது நிகழும் வரை முரண்பாடுகள் பெரிதாகிக் கொண்டேதான் இருக்கும். அதுவும் வரவேற்கத்தக்கதுதான். பெரிய ஊடல்கள்தான் பெரிய கூடல்களில் முடிகின்றன என்பதை என் பதினோரு சகோதரிகளை மணந்த பேரரசர் அறியமாட்டாரா என்ன? முரண்பாடுகள் மிகப் பெரியவை என்றால் இருப்பவை அனைத்தையும் அதிகபட்ச திறனோடும், ஆற்றலோடும் பயன்படுத்தும் அவசியம் எழுகிறது, அங்கு சாதனைகளும், மிகப் பெரியவையாகத்தான் இருக்க முடியும். துரியோதனர் சிறிய சாதனைகளை செய்யப் பிறந்தவர் அல்ல' என்றார் சகுனி.

'காந்தார அரசர் சொல்வது முற்றிலும் உண்மை' மகிழ்ச்சியுடன் தலையசைத்துக் கூறினார் திருதராஷ்டிரர். ‘மைத்துனரே, என்னருகே வந்தமர்ந்து பேசுங்கள். அப்போதுதான் என்னால் இன்னும் தெளிவாகக் கேட்க முடியும்’

பேரரசரின் அரியணை அருகே ஆசனம் அமைக்கப்பட அதிலமர்ந்த சகுனி ‘இயற்கை மேலும், மேலும் நுட்பமானவற்றை படைக்க விரும்புகிறது. பயனற்று ஜடமாகக் கிடந்த நிலத்தைக் மனித அறிவு விளைச்சல் நிலமாக மாற்றிவிட்டது. விளைச்சல் நிலங்களை இணைத்து ஊர்களாக்கியது. சிற்றூர்களை இணைத்து சிற்றரசுகளை உருவாக்கியது. சிற்றரசுகளை இணைத்து பேரரசுகளை உருவாக்கியது. இந்த ராஜ்யங்கள் எல்லாம் விருப்பம் போல இயங்குகின்றன. இவற்றை ஒருங்கிணைக்கும் உலக சாம்ராஜ்யம் உண்டாகும் வரை இயற்கை ஓயப் போவதில்லை. அந்த உலக ராஜ்யத்தின் அரசராக துரியோதனருக்கு முடிசூட்டாமல் நானும் ஓயப் போவதில்லை' என்றார்.

'விதுரா, சகுனி என் மைத்துனராக அமைந்தது அஸ்தினபுரியின் தவப்பயன்' என்றார் திருதராஷ்டிரர்.

விதுரர் பதில் கூறாததால் 'சகுனி, இதை பெருங்கனவு என்பதா, பேராசை என்பதா!  உலக சாம்ராஜ்யம் எப்படி உருவாக முடியும்! இதுவரை அப்படி ஒன்று இருந்ததில்லையே' என்று கேட்டார் பீஷ்மர்.

'இல்லாத ஒன்றை எவராலும் கனவில்கூட காண முடியாது. இல்லை என்று ஒன்றை மறுத்துக் கூறும்போதே அது இருக்கிறது என்ற கூற்றும் தோன்றி விடுகிறது. பிதாமகரே, மெய்நூல்கள் ‘ஜடத்தில் வாழ்வும், வாழ்வில் மனமும் மறைந்துள்ளன, மறைந்திருப்பதுதான் வெளிப்பட முடியும்’ என்கின்றன. மிருகத்துள் மனிதனும், மனிதனுள் தேவனும் மறைந்துள்ளான் என்றும் கூறுகின்றன. நானும் அதையேதான் அரசியல் கருத்தாகக் கூறுகிறேன். சிற்றூர்களின் தொகுப்பில்தான் சிற்றரசு மறைந்திருக்கிறது. சிற்றரசுகளின் தொகுப்பில்தான் பேரரசு மறைந்திருக்கிறது. பேரரசுகளின் தொகுப்பில்தான் உலக சாம்ராஜ்யம் மறைந்திருக்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கும். ஒன்று மற்றொன்றை திரையாக மறைக்கிறது. திரையை விலக்கத் தெரிந்தவனுக்கு தேடுவது கிடைக்கும். திரையின் சூட்சுமத்தை அறிந்தவன் அஞ்சாமல் எதற்காகவும் ஆர்வமுறலாம். நீங்கள் பேரரசு என்பதே இறுதி என்றெண்ணி விட்டீர்கள்.  நான் அதையும் கடந்து செல்ல விரும்புகிறேன். பாதையில் நின்றுவிட்டவன் ஒருபோதும் இலக்கை அடைவதில்லை. துரியோதனரின் நலனை முன்னிட்டு நான் இலக்கை அடையும்வரை நிற்காமல் நடந்து கொண்டே இருப்பேன்’ என்றார் சகுனி.

'மைத்துனரே, உங்கள் விருப்பப்படி விளையாட்டரங்கம் அமைக்க உங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கிறேன். தாங்கள் இனி எதன்பொருட்டும் என் உத்தரவைக்கூட பெற வேண்டிய அவசியமில்லை' என்றார் திருதராஷ்டிரர்.

சினத்துடன் எழுந்த விதுரரை கைகாட்டி அமரச் செய்தார் பீஷ்மர்.     

'கிருபரே, அரங்கம் அமைய மங்கல நாளொன்றை கண்டறிந்து கூறுங்கள்' என்றார் பீஷ்மர்.

கிருபர் தலை வணங்கினார்.

'அனைத்தும் கைமீறி விடுமோ என்று அஞ்சுகிறேன்' என்றார் விதுரர்.

'எல்லாமே நம் கட்டுப்பாட்டில்தான் உள்ளன' என்றார் பீஷ்மர்.

'இல்லை பிதாமகரே, அருளும் அழையா விருந்தாளியே. ஆபத்தும் அழையா விருந்தாளியே' என்றார் விதுரர்.

'நாம் விழையாத ஒன்று நம்மிடம் வருவதே இல்லை பேரமைச்சரே' என்றார் சகுனி.

அவை கலைந்தபின் விதுரர் பீஷ்மரிடம் தனிமையில் 'சகுனி ஆபத்தானவர்' என்றார்.

பீஷ்மர் விதுரரை சமாதானப்படுத்தும் வகையில் பேசினார். 'சகுனியை பற்றி வீண் ஐயங்கள் கொள்ளாதே. அவன் பொய்யுரைப்பதே இல்லை. எப்போதும் சத்தியமே பேசுகிறான்'

'சற்றே திரித்து! அதனால்தான் ஆபத்தானவர் என்கிறேன். நான் அமைச்சன். எதையும் ஐயத்தோடுதான் அணுகுவேன். முனைந்து முதலடி எடுத்து சிக்கலை உருவாக்கிவிட்டோம். இனி ஊழின் வழிதான் சென்றாக வேண்டும்' என்று கூறி விடைபெற்றார் விதுரர்.

'அரங்கமும், ஆட்டமும், ஆடுபவனும் அவனே. நீ பற்றற்று இரு' என்று விடை கொடுத்தார் பீஷ்மர்.

அவையை விட்டு வெளியேறும்போது சகுனியிடம் அணுக்க உதவியாளன் 'காந்தார அரசே, விளையாட்டில் எது வேண்டுமானாலும் நிகழலாம்' என்றான்.

'ஆம். நான் விரும்பும் எது வேண்டுமானாலும் நிகழலாம். மக்கள் மன்றத்தில் துரியோதனரிடம் பீமன் தோற்பதே நான் விரும்புவது. யுதிஷ்டிரனே தங்கள் அடுத்த அரசன் என்றெண்னும் மக்களையும் சற்று சிந்திக்க வைப்போம். அரங்கம் எனது பகடையாட்டம். அதற்காகவே அதை அமைத்தேன்' என்றார் சகுனி.

இளவரசர்களின் வித்தைகளை காட்ட கிருபர் மங்கல நாளொன்றை கோள்நிலை சுவடிகளை ஆராய்ந்து குறித்தார். சில நாட்களே இருந்தபடியால் பதினாயிரம் பணியாட்களைக் கொண்டு அரங்கம் விரைவாக அமைக்கப்பட்டது. அஸ்தினபுரியின் கோட்டைக்கு வெளியே இருந்த வீண் நிலமொன்று சீராக்கப்பட்டு அழகிய மலர் தோட்டங்களும், தாமரை தடாகங்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டன.

அரச குலத்தினர் அமர பாதுகாப்பு நிறைந்த இரண்டடுக்கு அலங்கார மண்டபங்களும், பட்டு மெத்தை கொண்ட இருக்கைகளும் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு வர்ணத்திற்கும், குலத்திற்கும் உரிய வகையில் பற்பல மண்டபங்களும், எதுவுமற்ற எளியவர்கள் நின்ற வண்ணம் காண வெற்றிடங்களும் உருவாக்கப்பட்டன. 'வீரர்களின் அரங்கேற்றம் காண அனைவரும் வருக' என்று நாடெங்கும் முரசறிவிக்கப்பட்டது.

என்று வரும் என்று வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நாள் இன்று வந்தேவிட்டது.

அதிகாலையிலேயே உயர் குலத்தினரும், பிரதானிகளும், வீரர்களும், பிராமணர்களும், வணிகர்களும் சூதர்களும், பிற மக்களும் அவையை நிறைத்து விட்டிருந்தனர். குறித்த நேரத்தில் அரச குடும்பத்தினர் அவையில் நுழைந்து அமர்ந்த பின் வெண்ணாடை, வெண்ணூல், வெண்முடி, வெண்தாடி, வெண்மாலை அணிந்த துரோணர் அரங்கின் நடுவே வந்து அனைவரையும் வணங்கினார்.

யாகங்களும், மங்கல சடங்குகளும் நடத்தப்பட்டன. அதன்பின் முரசுகள் அதிர துவங்கின. சங்குகள் ஊதப்பட்டன. கொம்புகள் முழங்கின.

‘இது என்ன, வானம் இடிந்து விழும் ஓசையா!’ என்று அனைவரும் திகைத்தனர்.

இளவரசர்கள் இருவரிருவராக தங்களுக்குரிய ஆயுதங்களோடு வந்து தத்தம் திறமைகளை வெளிப்படுத்தினர். எவரும் பிழைகளின்றி சிறப்பாக செய்வதைப் போலவே வித்தைகளின் நுட்பங்களை அறியாத மக்களுக்குத் தோன்றியது. இடையிடையே வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சிகளும், நாடகங்களும், இன்னுணவுகளும் செவிகளுக்கும், கண்களுக்கும், வயிற்றிற்கும் விருந்தளித்தன.

அலங்கரிக்கப்பட்ட யானைகளும், குதிரைகளும், ரதங்களும், அவற்றை இளவரசர்கள் செலுத்திய விதமும் கந்தவர்கள் அஸ்தினபுரிக்கு வந்துவிட்டார்களோ என்று எண்ண வைத்தன. விதவிதமான கொலை ஆயுதங்களான மின்னும் வாட்களும், கூரிய அம்புகளும், கனத்த கதைகளும் மக்களை அஞ்ச வைத்தன. ‘இந்த ஆயுதங்களுக்கு உருவமும், உயிரும் தந்துவிட்டனரே. இனி இவை குருதி சுவை அறியாமல் அடங்காவே’ என சிலர் மனதிற்குள் வருந்தினர். எங்கும் ஆரவாரமும், கூச்சலும் நிறைந்திருந்தன.

பீஷ்மர் ‘பார்த்தாயா விதுரா, நம் குமாரர்கள் எத்தனை ஒற்றுமையாக இருக்கிறார்கள். நீதான் வீணாக அஞ்சினாய்’ என்றார்.

‘தவறு நிகழ காரணமாக போகிறவர்கள் இன்னமும் அரங்கிற்குள் வரவில்லை பிதாமகரே’ என்றார் விதுரர்.

அரங்கில் சற்று அமைதி ஏற்பட்டு, வீரவிளையாட்டில் மக்களின் கவனம் குறையத் தொடங்கியபோது, பீமனும், துரியோதனனும் இறுக்கி அணிந்த அரையாடையைத் தவிர வேறு அணிகலன்கள் ஏதுமின்றி ஆளுக்கொரு கதாயுதத்தை தோளில் சுமந்து கொண்டு அரங்கினுள் நுழைந்தனர். அடுத்த் கணம், அரங்கு ஆரவாரத்தால் அதிரத் தொடங்கியது.

அரங்கினர் ஆளுக்கொரு கருத்தை கூற ஆரம்பித்தனர்,     

'இன்று மூத்த கௌரவரான துரியோதனர் வீரசொர்க்கம் புகப் போகிறார். பத்து செம்புக்காசுகள் பணயம்’

'பீமசேனருக்கு உடலில் பலமே இல்லை. அளவற்ற உணவால் மாமிச மலையாகிவிட்டாரே தவிர போர்பயிற்சி இல்லாதவர். அவர்தான் நிச்சயம் தோற்பார், ஆனால் பணயம் வைக்க என்னிடம் காசுகள் இல்லை'

'காசுக்கு ஈடாக வேறெதையேனும் கூட பணயம் வைக்கலாம்'

'அவ்வாறு செய்ய நான் கீழ்மகனோ, அரசனோ அல்ல. பீமசேனர் தோற்பார் அது எனக்குத் தெரியும்'

'யார் சொன்னது? அவருக்கு வாயுதேவனின் அருளும், அனுமனின் பலமும் உண்டு'

'அறிவாளிகள் மறுக்கவேண்டிய கட்டுக்கதைகள். துரியோதனர்தான் வெல்வார்.'

'என் மாமனார் ஆருடம் கூறினார். இன்று முதல் பாண்டவர்களுக்கு நற்காலம் பிறக்கிறதாம்'

'முதலில் உனக்கு எப்போது நற்காலம் பிறக்கிறது என்று உன் மாமனாரை கண்டறியச் சொல்'

'யார் வென்றால் நமக்கென்ன? நம் சிரமங்கள் அப்படியேதான் இருக்கப் போகின்றன'

'துரியோதனர்தான் வெல்வார். அவர் கோபக்காரர் என்றாலும் பெருந்தன்மை கொண்டவர். பாண்டவர்களின் அற்பத்தனம் அவரிடம் இல்லை'

'மூடா! இப்படியெல்லாம் இளவரசர்களைப் பற்றி பேசினால் நீதான் கழுவேறி வீரமில்லாத சொர்க்கத்திற்கு முதலில் போவாய்'

'நான்தான் பேசினேன் என்று கூட்டத்தில் யாருக்குத் தெரியப் போகிறது!'

'உனக்கும், எனக்கும் இரண்டு கண்கள்தான். விதுரருக்கு ஊரெங்கும் கண்கள். எல்லா இடங்களிலும் ஒற்றர் வைத்திருக்கிறார்'

'பாண்டவர்கள்தான் வெல்ல வேண்டுமென பெரியவர்கள் விரும்புகிறார்கள். அதற்கான திட்டத்தை விதுரர்தான் வகுத்தாராம். என் காதலி விதுரர் மாளிகையில் பணிபெண்ணாக இருக்கிறாள். விதுரர் பேசியதை அவள் காதால் கேட்டாளாம்.'

'பிதற்றவேண்டாம். உன்னை காதலிப்பதிலிருந்தே அவளுடைய அறிவின் திறம் புரிந்து விட்டது. இது வெற்றியோ, தோல்வியோ இல்லாத வெறும் விளையாட்டுதான்'

'விளையாட்டு என்றாலும் எவரேனும் ஒருவர் வெல்லத்தானே வேண்டும்'

'பீமசேனர்தான் வெல்வார்'

'துரியோதனர்தான் வெல்வார்'

'பீமசேனர்'

'துரியோதனர்'

'பீமசேனர்'

'துரியோதனர்'

சற்று நேரத்தில் அரங்கு இரண்டு அணிகளாகப் பிரிந்துவிட்டது.  புயலால் ஆர்ப்பரிக்கும் கடல் போல அரங்கு மாறியது.

பெண் யானை மீது உரிமை கொள்வதற்காக மோதிக் கொள்ள தயாராகும் இரண்டு ஆண் யானைகள் எதிரெதிரே துதிக்கைகளை சுழற்றிக் கொண்டு நிற்பது போல, பீமனும், துரியோதனனும் கதைகளை சுழற்றிக் கொண்டு நின்றனர்.

கவலையுடன் வெண்தாடியை உருவி விட்டுக் கொண்ட துரோணர், 'அஸ்வத்தாமா, இம்மாவீரர்கள் இருவரையும், அவையை வணங்கிவிட்டு விலக சொல். இவர்களின் வீரத்தை, வலிமையை அனைவரும் ஏற்கனவே அறிவர்' என்றார்.

பீமனுக்கும், துரியோதனனுக்கும் நடுவே சென்று நின்ற அஸ்வத்தாமன் உரத்த குரலில் குருவின் ஆணையைக் கூறினான். இருவரும் அவையை வணங்கி விலகினர். மக்கள் ஏமாற்றமடைந்தனர். அணுக்க உதவியாளன் சகுனியைப் பார்த்தான். அவர் புன்னகையுடன் இருவரையும் தன்னருகே அழைத்து அன்புடன் தழுவியபின் உரையாடத் தொடங்கினார்.

துரோணர் கையசைத்ததும் அனைவரும் அமைதி அடைந்தனர். அரங்கு நடுவே நிதானமாக நடந்து வந்த துரோணர் ஆழமான குரலில், 'அஸ்வத்தாமனை விட எனக்கு அதிக பிரியமானவனும், அனைத்து ஆயுதங்களையும் ஆளத் தெரிந்தவனும், இந்திரனின் குணாதிசயங்களைக் கொண்டவன் என்ற புகழ் பெற்றவனும் எவனோ அவன் அவை நடுவே வருக' என்றார்.

'அர்ச்சுனர்! பார்த்தர்! பல்குணர்!'

அவை மீண்டும் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. இம்முறை பெண்கள் பகுதியில் உற்சாகமும், எழுச்சியும் அதிகமாக இருந்தன. குந்தியின் கண்களில் பெருமிதம் தோன்றியது. 'இன்று முதல் காந்தாரர்களும், கௌரவர்களும் அர்ச்சுனனைப் பற்றிய அச்சத்தோடுதான் வாழ்ந்தாக வேண்டும்' என்று குந்தி தன் தோழியிடம் மெல்லிய குரலில் கூறினாள்.

'ஆம், பேரரசி' என்றாள் தோழி.

அர்ச்சுனன் வில்லோடும், பலவித அம்புகள் நிறைந்த தூளியோடும் அவை நடுவே வந்து நின்றான். துரோணரையும், தருமனையும் மட்டும் வணங்கி விட்டு நாணேற்றப்பட்டிருந்த தன் வில்லை நிலை நிறுத்தினான்.

அக்னீச அஸ்திரத்தால் நெருப்பையும், வருணாஸ்திரத்தால் நீரையும், வாயவ்ய அஸ்திரத்தால் காற்றையும், பர்ஜென்ய அஸ்திரத்தால் மேகத்தையும், உருவாக்கிக் காட்டினான். பாகுமாஸ்திரத்தால் நிலத்தை அதிர வைத்தான். பர்வத்யாஸ்திரத்தால் நிலத்தை சிறுகுன்றுகளாக்கினான். அந்தர்தன அஸ்திரத்தின் மூலம் புகையெழுப்பி பிறர் கண்களில் படாமல் மறைந்தான்.

‘இது மந்திர மாயங்களால் உருவாகவில்லை. இயற்கை விதிகளை ஆராய்ந்து அறிந்தவர்களின் அறிவாலும், அர்ச்சுனனின் பயிற்சியாலும் உருவாக்கப்பட்டது. இதோ இந்த அக்னீச அஸ்திரத்தின் முனையில் கந்தகம் இருக்கிறது. அம்பு வேகமாக பாயும்போது அம்பினுள் இருக்கும் சிறு பொறிகளால் அக்னி உண்டாக்கப்படுகிறது’ என்று துரோணர் விளக்கம் தந்தார். அர்ச்சுனன் ஒவ்வொரு வித்தையை செய்து காட்டிய பின் துரோணர் அதற்கான விளக்கத்தைத் தந்தார். பெரும்பாலானோருக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், புரிந்ததாக தலையசைத்து வைத்தனர்.

பின் அர்ச்சுனன் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த இரும்புப் பாவையின் வாயினுள் ஒரே சமயத்தில் ஐந்து அம்புகளை செலுத்தினான். ஒரு கயிற்றால் கட்டப்பட்டு வேகமாக ஆடிக் கொண்டிருந்த மாட்டுக் கொம்பின் மீது இருபத்தியோரு அம்புகளை ஒன்றன்மீது ஒன்றாக செலுத்தி நிறுத்தினான். கையருகே இருந்த இறுதி அம்பை அர்ச்சுனன் இழுக்க கொம்பு அவன் கைக்கு வந்தது. 'நாம் முதன்முதலில் ஆசிரியரை சந்தித்தபோது கிணற்றிலிருந்து பந்தெடுக்க இந்த வித்தையைத்தானே அவர் பயன்படுத்தினார்' என்று நகுலன் சகதேவனிடம் கூறினான்.

வாலிபர்களின் கவனமனைத்தும் அர்ச்சுனன் செய்த வித்தைகளில் இருந்தது. இளம்பெண்களின் கவனமோ வித்தைகள் செய்த அவனது சிலை போன்ற உடல் மீதிருந்தது. வாயிலிருந்து வந்த வார்த்தைகளெல்லாம் அர்ச்சுனனைப் பற்றியே இருந்தன.

'அடுத்த பிறவியிலாவது இளவரசியாகப் பிறந்து இவரது உள்ளத்தில் இடம் பெற வேண்டும்'

'மழை தரும் இந்திரனை போன்றவர் இளவரசர். பெண்கள் விஷயத்தில் குலம், இனம், வர்ணம், உயர்வு, தாழ்வு என்ற எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இப்பிறவியிலேயே கூட நீ முயற்சி செய்யலாம். நானும் முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன்.'

'நீ என்னை விட அழகி. அதிக அணிகலன்கள் வைத்திருக்கிறாய், உனக்கு வாய்ப்பதிகம்'

'கவலைப்படாதே. ஒரே ஒரு இடம் என்றால்தான் போட்டி இருக்கும். அர்ச்சுனருக்கு பரந்த இதயம். அதில் பெண்களுக்கு ஏராளமான பீடங்கள் போட்டு வைத்திருக்கிறார்'

'பிருந்தாவனத்து கிருஷ்ணனும் இப்படிப்பட்டவர்தானாமே'

'ஒரு வித்தியாசம். பெண்ணொருத்தியை ஏற்றுக் கொண்டுவிட்டால் கிருஷ்ணன் பிறகெப்போதும் அவளை கைவிடுவதில்லை. நம் இளவரசர் காரியம் முடிந்ததும் கைவிட்டு விடுவார்'

'என்ன காரியம்?'

'இவளொருத்தி எல்லாவற்றிலும் சந்தேகம் கேட்கிறாள்! எதுவும் புரியாதவள்'

'தெரிந்தேவா அழிகிறோம்!'

'ஆசையின் தன்மையே அதுதானே'

அதைத் தொடர்ந்து தாழ்ந்த குரலில் ஒருத்தி ஏதோ கூற, இளம்பெண்கள் வெடித்து சிரித்தனர்.

'மெல்லப் பேசுங்களடி. நம் அன்னையர் காதில் விழுந்து விடப் போகிறது'

இளம்பெண்கள் சற்றே தள்ளியிருந்த மூத்த பெண்களையும், அன்னையரையும் பார்த்தனர். அவர்கள் கவனமும் பார்த்தன் மீதிருப்பதை பார்த்த இளம்பெண்கள் மீண்டும் வெடித்து சிரித்தனர்.

இறுதியாக அர்ச்சுனன் வெகு தூரத்திலிருந்த தாமரை தடாகத்தின் நடுவே இருந்த மலர்ந்த தாமரையை குறி வைத்தான். அவன் விடுத்த அம்பு சீறிச் சென்று தாமரை மலரை கொய்ய, வேறொரு கோணத்தில் அதைப் பின் தொடர்ந்த மற்றொரு அம்பு, அம்மலரை தாங்கிப் பறந்து சென்று, குந்தியின் பாதங்களின் அருகே நிற்க வைத்தது.

மக்களும், அவையினரும் எழுப்பிய ஆரவாரம் தூரத்து மலைகளில் எதிரொலி உண்டாக்கி பாறைகளை உருட்டிவிட்டது. துரோணர் புன்முறுவலோடு வெண்தாடியை உருவி விட்டுக் கொண்டார்.  அஸ்வத்தாமனின் முகம் இறுகியிருந்தது. பீமன் யானையின் துதிக்கை போன்ற தன் கைகளை தட்டி எழுப்பிய ஓசை யானைகளை திடுக்கிட வைத்தது. தருமனும், நகுலனும், சகதேவனும் பாய்ந்தோடிச் சென்று அர்ச்சுனனை அணைத்து கொண்டனர். அர்ச்சுனின் பார்வையோ தன்னை விழிகளால் விழுங்கி கொண்டிருந்த பெண்களின் அழகிய அங்கங்கள் மீது நிலைத்திருந்தது. பீஷ்மரும், கிருபரும் துரோணரைப் பார்த்து மெல்ல தலையசைத்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். முதலமைச்சர் விதுரர் திருதராஷ்டிரரின் மெலிதான எரிச்சல் எழுந்திருந்த முகத்தையும், சகுனி மலர்ந்த முகத்தோடு புன்னகைத்து கொண்டிருப்பதையும் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.  காந்தாரியான வசுமதியின் முகத்தை குந்தி புன்னகையுடன் திரும்பிப் பார்த்தாள். கண்களை பட்டுத் துணியால் கட்டியிருந்த காந்தாரியின் காதில் அவள் தோழி ஏதோ கூற, காந்தாரி தன் முகத்தை வேறுபுறமாக திருப்பிக் கொண்டாள்.

பெருமிதத்துடன் அவையை சுற்றிலும் பார்த்த துரோணர் தன் வெண்தாடியை உருவியபடி புன்சிரிப்புடன், 'என் மகன் அர்ச்சுனனே எவ்வுலகிலும் சிறந்த வில்லாளி. அவனுக்கு நிகரானவன் எவனுமில்லை' என்றார்.

அப்போது எளியோர் வரிசையில் குழப்பமான ஒலிகள் எழுந்தன. பல வீரர்கள் சேர்ந்து ஒருவனை தடுக்க முயல்வதை அனைவரும் கண்டனர். தன்னை தடுத்த அனைவரையும் ஒரே உதறலில் விலகி விழச் செய்த வாலிபன் நிமிர்ந்த தலையுடன் அரங்கினுள் நடந்து வந்தான்.

'மண்ணில் இறங்கி நடந்து வரும் சூரியன் போலிருக்கிறான்'

'கண்களில் நிலவின் குளிர்ச்சி உள்ளது'

'நிலவில் களங்கம் உண்டு. இவன் விழிகள் களங்கமற்றவை'

'எவ்வளவு உயரமாக இருக்கிறான். எல்லோரும் இவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும்'

'எந்த நாட்டு இளவரசன்?'

'உடைகளைப் பார்த்தால் மிகவும் வறியவன் போலிருக்கிறான். ஆனால் பொன்னாலான கவச, குண்டலங்களை அணிந்திருக்கிறானே!'

'எங்காவது தானமாகப் பெற்றிருப்பான்'

'இல்லை, இல்லை. இவன் தருபவனாகத் தெரிகிறான். பெறுபவனாகத் தெரியவில்லை'

அரங்கின் நடுவில் வந்து நின்றவனை துரோணர் அடையாளம் கண்டு கொண்டார். 'கர்ணன்! கல்வி தர முடியாது என்று என் பாடசாலையை விட்டு விரட்டி விட்டேன். அன்று முனைந்து விலக்கியது இன்று விலக்க முடியாதபடி விசையுடன் திரும்பி வந்திருக்கிறது' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

ஏற்கனவே மலர்ந்திருந்த குந்தியின் முகம் மேலும் மலர்ந்தது

கர்ணனின் உத்தேசம் என்ன என்று எவரும் புரிந்து கொள்ளுமுன் தானே செய்த எளிய வில்லை நிலைநிறுத்திய கர்ணன் தன் தூளியிலிருந்த பாணங்களை விரைந்து செலுத்தத் தொடங்கினான். அர்ச்சுனன் தனித்தனியே செய்து காட்டிய வித்தைகளை கர்ணன் தொடர்நாடகம் போல விரிவாகவும், நுட்பமாகவும் செய்து காட்டினான்.

அக்னீச அஸ்திரத்தால் பெருநெருப்பு வளையத்தை உருவாக்கி, அது அணையுமுன் வாயவ்ய அஸ்திரத்தால் பெருங்காற்றை உருவாக்கி நெருப்பை ஓங்கி வளர வைத்தான். நெருப்பின் கீழ் பர்வத்யாஸ்திரத்தையும், பாகுமாஸ்திரத்தையும், எய்து எரிமலை உண்டாகி விட்டதோ என்ற புலன் மயக்கத்தைத் தந்தான். பின்னர் அந்தர்தன அஸ்திரத்தின் மூலம் கண்ணை மறைக்கும் புகையை உண்டாக்கி தான் நெருப்பு வளையத்தின் நடுவே நிற்பது போன்ற மாயையை உருவாக்கினான். மூன்று அஸ்திரங்களை ஒரே சமயத்தில் தொடுத்து இடியும், மின்னலும், மழையும் தோன்றச் செய்து அந்த மழையால் நெருப்பு வளையத்தை அணையச் செய்தான்.

ஐந்து அம்புகளை ஒரே சமயத்தில் தொடுத்து நகர்ந்து கொண்டிருந்த இருப்புப் பாவையின் வாயிலிருந்த அர்ச்சுனனின் அம்புகளை உடைத்தெறிந்தான். பின் ஏழு அம்புகளை ஒரே சமயத்தில் அப்பாவையின் வாயில் நிறுத்தினான். மூன்றே அம்புகளில் கயிற்றில் ஆடிக் கொண்டிருந்த கொம்பை தன் கையில் வர வைத்தான்.

கர்ணன் வித்தைகளைக் கண்ட அர்ச்சுனன் திகைத்து நின்றான். தான் செய்தவற்றை எண்ணி வெட்கமடைந்தான்.

மக்கள் மீண்டும் மீண்டும் கர்ணனை வாழ்த்தி குரலெழுப்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவனும் தானே அரங்கின் நடுவில் நின்று வித்தைகள் செய்வதாக எண்ணி பெருமிதம் அடைந்து கொண்டிருந்தான்.

எளியவர் வரிசையில் நின்று கொண்டிருந்த தேரோட்டி அதிரதனின் மனைவி, கர்ணனை வளர்த்த அன்னை ராதை கண்களில் நீர் வழிய நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள். 

'என் விருப்பப்படி என்னை வில்வீரனாக்க எதுவுமற்ற என் அன்னை எத்தனை துயரங்களை அனுபவித்தார்! அவருக்கு நான் திருப்பித் தரக் கூடியது என்று ஏதேனும் உலகில் உண்டா?' ராதையை எண்ணிய கர்ணனின் உடலும், பிராணனும், மனமும் நன்றியால் நெகிழ்ந்திருந்தன.

இறுதியாக கர்ணன் பல அம்புகளை ஒரே சமயத்தில் வில்லில் ஏற்றினான். தொலைவிலிருந்த தாமரைத் தடாகத்தில் மலர்ந்திருந்த பல மலர்களை குறி வைத்தான். 'அன்னையே, கர்ணன் என்றென்றும் உங்களுக்கே உரியவன். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் நன்றிக் கடன் தீராதிருப்பதாக' என்று மெல்லிய குரலில் கூறி அம்புகளைத் தொடுத்தான்.

அம்புகள் மலர்களைக் கொய்யும்போது மேலும் மேலும் அம்புகளை செலுத்தி மலர்மாலை ஒன்றை தொடுக்கத் தொடங்கினான். அம்புகள் தொடுக்கும் மலர்மாலையை உலகம் முதல்முறையாகப் பார்த்தது. மலர்மாலை தயாரானதும் நீண்ட அம்பை கர்ணன் செலுத்த அது மலர்மாலையை தூக்கிக் கொண்டு வானில் பறந்தது.

குந்தியின் அருகே மாலை வந்தபோது அவள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. குந்தி ஓர விழிகளால் தன் அணுக்கத் தோழியைப் பார்த்தாள். குந்தியின் அந்தரங்கமனைத்தும் அறிந்த தோழி புன்னகையோடு 'இளையவர் ஒற்றை மலர் தந்தார். மூத்தவரோ மாலையே தொடுத்து விட்டார்’ என்றாள்.

'இவன் யார் என்று இன்று சொல்லும் நிலையில் நானில்லையே. பேரரசி என்ற பதவி பெருமையும், பெருஞ்சுமையும் கொண்டது' என்றாள் குந்தி.

‘அதனால் என்ன? எளிய வீரனுக்கும் அன்னை போன்றவள் பேரரசி என்பதற்கு இம்மாலை சான்றாகப் போகிறது. பேரரசியின் பெருமைக்கு மக்கள் மன்றத்தில் வேறேன்ன சான்று வேண்டும்?' என்றாள் தோழி.

பேரழகியான குந்தியின் சிவந்த அதரங்களில் புன்னகை விரிந்தது. 'இன்றைய உலகின் இருபெரும் வில்லாளிகளின் தாய் நான்' என்று அவள் மனம் பூரித்தது. 'இருவரும் தங்கள் திறமையை தொடர்ந்து காட்டட்டும். இவர்களை பெற்றவளை எண்ணி உலகம் வணங்கட்டும்.'

ஆனால் கர்ணன் தொடுத்த அடுத்த அம்பு மாலையை மேலும் நகர்த்தி சென்று எளியவர் வரிசையில் நின்று கொண்டிருந்த ராதையின் பாதங்களின் மீது வைத்தது. அவை ஆரவாரம் செய்தது.

கர்ணனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ராதை அப்போதுதான் தன் பாதங்களில் ஏதோ விழுந்ததை உணர்ந்து குனிந்து பார்த்தாள்.

குந்தியின் கண்கள் இருண்டன. அவள் மயங்கி சரிந்தாள். பணிப்பெண்கள் குளிர்ந்த நீரால் குந்தியின் முகத்தை துடைத்தனர். கண் திறந்த குந்திக்கு பருக தேன் கலந்த இளநீர் தந்தனர்.

'நல்லாதரவோ, உறவோ இல்லாத அனாதை அற்பனுக்கு யார் இந்த வித்தைகளை கற்பித்திருப்பார்கள்?' என்று சினத்துடன் உறுமினான் பீமன்.

'அனாதையான ஆண்டவன், அனாதைக்கு நேரடியாக எதையும் கற்பிப்பான். உனக்கும், எனக்கும்தான் மனித குரு தேவை' என்றான் யுதிஷ்டிரன். பின் 'அர்ச்சுனனை விட கர்ணனே வில்வித்தையில் சிறந்தவன்' என்று சகதேவனுக்கு மட்டும் கேட்கும்படி யுதிஷ்டிரன் கூறினான்.

'சில கருத்துக்களை வெளியிடாதிருப்பதுதான் நமக்கு நல்லது’ என்றான் சகதேவன்.

'தர்மத்தையும், ஆன்மீகத்தையும் அறிந்தவன் பிரச்சினையே அதுதான். எவரிடமும் எதையும் சொல்ல முடிவதில்லை. சொல்லாமல் இருக்கவும் முடிவதில்லை' என்று பெருமூச்சு விட்டபடி கூறினான் யுதிஷ்டிரன்.

மக்களில் ஆண்கள் அனைவரும் கர்ணனே சிறந்தவன் என்றனர். பெண்களில் காதலை விழைந்தவர்கள் கர்ணனை ஆதரித்தனர். பிற பெண்களோ அர்ச்சுனனை ஆதரித்தனர். கர்ணனுக்கு மக்கள் தந்த ஆதரவு அர்ச்சுனனுக்கு சினமூட்டியது. அவன் கர்ணனை பார்த்து, 'வெட்கமறியாதவனே அழையாத விருந்தாளியாக வருவான். மூடனே, அரங்கினுள் நீ அத்துமீறி நுழைந்ததற்காக உன்னை இக்கணமே கொல்வேன்’ என்றான்.

‘இளவரசே, இது வீரர்களின் அரங்கேற்றம் என்றே முரசறிவிக்கப்பட்டது. அதையே அழைப்பாக ஏற்று வந்தேன். இது அஸ்தினபுரி இளவரசர்கள் தங்களுக்குள் எவர் சிறந்தவர் என்று அறியும் அரண்மனை விளையாட்டு என்று தாங்கள் கூறினால் இப்போதே விலகி சென்று விடுகிறேன். எனக்குரிய களம் உலகம். இச்சிறு அரண்மனையல்ல. என்னோடு மோத எண்ணி, ஏன் தங்கள் சொற்களையும், அம்புகளையும் வீணடிக்கிறீர்கள்? வில் வித்தை காட்ட வந்த தன்னிகரற்றவனான என்னை ஏன் போருக்கு அழைக்கிறீர்கள்?’ என்றான் கர்ணன்.

சினத்துடன் அர்ச்சுனன் தன் வில்லில் நஞ்சு தோய்த்த அம்புகளை ஏற்றி கர்ணனை குறி வைத்தான். ‘இளவரசே, சற்று பொறுங்கள். இந்த மூடனிடம் நான் பேசுகிறேன்’ என்றார் கிருபர்.

அரங்கின் நடுவே வந்த கிருபர் கர்ணனைப் பார்த்து, 'மறைந்த பேரரசர் பாண்டுவின் மைந்தரான இளவரசரின் குலப் பெருமையை பாரதவர்ஷமே அறியும். எவர் மீதெல்லாம் இளவரசர் கணை தொடுக்கிறாரோ அவரெல்லாம் பெரும் புண்ணியத்தோடு பிறந்தவர்கள். அர்ச்சுனரோடு போரிட்டு தோற்கும் பெருமை பெற நெறிநூல்கள் கூறும் தகுதி வேண்டும். வில்லேந்தி நிற்பவனே! உன்னை பெற்றவர்களின் பெருமைகளையும், குலச் சிறப்புகளையும் கூறி பின் கணை தொடுப்பாயாக!' என்றார்.

எளியவர் வரிசையில் நின்றிருந்த ராதை தவித்தாள். 'மூடனே, நானும் அதிரதனும் உன்னை பெற்றவர்கள் அல்ல. வளர்த்தவர்கள் என்ற உண்மையைக் கூறிவிடு. அது உனக்கு பெருமை தரும். என் சிறுமையை வெளிப்படுத்தி உன் பெருமையை மீட்டு எடு. உன் பெருமை என் பெருமை அல்லவா! பேசடா, நீ யாரென்பதை உலகறிய இதுவே உரிய தருணம்'. ராதையின் இதயம் துடித்தது.

கடும் வெயிலால் பொலிவிழந்து கருகிய தாமரை மலராக கர்ணனின் முகம் மாறியது. நதியில் நீராடும் போது ஒற்றை ஆடையை இழந்த இளம் பெண் போல அரங்கின் நடுவே கர்ணன் மௌனமாக நின்றான்.

'வில்லில் சிறந்தவன் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவனே! ஏனிந்த மௌனம்? உன்னோடு வில்லாட இளவரசர் காத்துக் கொண்டிருக்கிறார். குலப் பெருமை மிக்கவர்களிடம் மட்டுமே இளவரசர் போரிடுவார். மறுமொழி கூறு' என்று கிருபர் கூறினார்.

அவைப் பெரியோர் முகத்தில் ஏளனப் புன்னகை எழுந்தது. ஆனால் மக்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

துரியோதனன் எழுந்தான், 'இது வீரர்களின் அரங்கம் என்றெண்ணினேன். ஆனால் இது வீண்விவாத அரங்கம் என்பது இப்போதுதான் புரிகிறது. தனக்கு சாதகமாக நெறிநூல்களை திரிப்பதுதானே கற்றவர்கள் காலந்தோறும் செய்து வருவது? தினமும் ஒரு பெண்ணை நாடும் பாண்டவ இளவரசர், பெண்களிடம் வேற்றுமை பாராட்டாத பேராண்மை மிக்கவர், குலப்பெருமைகளை தீர ஆராய்ந்து தெளிந்த பின்தான் ஒவ்வொரு பெண்ணையும் அணைக்கிறாரா என்று அறிய விரும்புகிறேன். ஆனால் அவருக்காக உங்கள் நெறிநூல்களில் அதற்கு விலக்குத் தரப்பட்டிருக்கும். பெரியோர்களே, பெரும் பண்புகளைத் தவிர பிறிதொன்றை தெய்வமாக ஏற்காத நாத்திகனான நானறிந்த நூல்நெறிகளைக் கூறுகிறேன். அரச குருதி உறவு உள்ளவரும், மாவீரர்களும், படை நடத்துபவர்களும் அரசர்களாகவே கருதப்பட வேண்டும். மறந்துவிட்டீர்களா? அல்லது மறைக்கிறீர்களா? அரசரை மட்டும்தான் எதிர்கொள்வேன் என்று அர்ச்சுனன் ஆசைப்படுவானாயின் இதோ இக்கணமே அங்க தேசத்திற்கு கர்ணனை அரசனாக்குகிறேன்' என்று உரத்த குரலில் கூறினான்.

'பேரரசர் திருதராஷ்டிரர் மட்டுமே எவருக்கும் நாடளிக்கும் அதிகாரம் உள்ளவர்' என்றார் விதுரர்.

‘துரியோதனன் மனம் புண்படுவதை நான் விரும்பவில்லை’ என்றார் பேரரசர் திருதராஷ்டிரர்.

குந்தியிடம் அவள் தோழி மந்தணம் பேசும் குரலில் ‘பேரரசி, இது நீங்கள் மகிழ்ந்திருக்க வேண்டிய தருணம். அனைவருக்கும் மூத்தவருக்கு ஏதோ ஒரு மகுடம் கிடைத்துவிட்டது. அதற்கு பாண்டவர்கள் மறைமுகமாக உதவினர். கௌரவர்கள் நேரடியாக உதவினர். யுதிஷ்டிரரோ, துரியோதனரோ முடிசூடிக் கொள்ள வெகுகாலமாகும்’ என்றாள்.

‘கர்ணனுக்கு மகுடம் கிடைத்தது குறித்து மகிழ்கிறேன். ஆனால் அந்த மாலை?’ என்றாள் குந்தி.

நிகழ்ச்சிகள் துரிதமாக நடக்கத் துவங்கின. பொன்னாலான சிங்காதனமும், குடையும், கொடியும், கோலும் அரங்கிற்கு விரைந்து வந்தன. மலர்களும், தானியங்களும் தங்கத்தட்டுகளிலும், கங்கைநீர் பொற் குடங்களிலும் மங்கல பெண்களால் கொண்டு வரப்பட்டன. அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டன. தன்னிலை மறந்து நின்று கொண்டிருந்த கர்ணனை துரியோதனனும், துச்சாதனனும் அழைத்துச் சென்று அங்க தேச அரியணையில் அமர வைத்தனர். அங்க தேச மகுடத்தை மக்கள் வாழ்த்தொலி எழுப்ப பீஷ்மர் கர்ணன் தலையில் சூட்டினார்.

‘அஸ்தினபுரி இளவரசே, சற்றுமுன் உயிரற்ற சடலமாக இருந்தேன். தாங்கள்தான் அந்த சடலத்திற்கு உயிர் தந்தீர்கள். அந்த உயிர் தங்களுக்கு மட்டுமே உரியது. என் உயிர் உட்பட எதை வேண்டுமானாலும் கோரி எனக்கு ஆணையிடுங்கள். நான் தருவது எதுவும் தங்கள் பெருந்தன்மைக்கு ஈடாக முடியாது’ என்றான் கர்ணன்.

‘அங்க அரசே, நமது நட்பைத் தவிர வேறெதையும் நான் நாடவில்லை’ என்றான் துரியோதனன்.

அங்க அரசன் பேரரசரையும், பிதாமகரையும், பிரதானிகளையும் தனித்தனியே வணங்கி ஆசி பெற்றான். ஆனால் எவரைப் பணியும் போதும் ராதையை பணிவதாகவே உணர்ந்தான்.

அப்போது கிழிந்து அழுக்கேறிய உடையோடும், கலைந்த தலையோடும் வியர்த்து நடுங்கும் உடலோடும் மெல்ல அரங்கினுள் நுழைந்து கர்ணனை நோக்கி ஒரு முதியவன் தள்ளாடி நடந்து வந்தான்.

அவனைத் தடுத்த ஒரு வீரன், 'யாரடா நீ?' என்று அதட்டினான்.

'அரசே, அடியேன் அதிரதன். தேரோட்டுபவன். கருணை காட்ட வேண்டும்' என்று முதுகை வளைத்து வணங்கிக் குழறினான். வீரன் கேலியாக சிரித்தான்.

அதிரதனை கவனித்த கர்ணன் அவனருகே சென்று, 'இவர் என் தந்தை' என்று கூறி அதிரதனின் பாதங்களை பணிந்தான். அவை நின்று பழகியிராத அதிரதன் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் உகுத்தான். கங்கை நீரால் மகுடாபிஷேகம் செய்யப்பட்டிருந்த கர்ணனின் தலை மீது அதிரதனின் கண்ணீர் துளிகள் விழுந்து ஆசிர்வதித்தன.

பீமன் எள்ளல் மிகுந்த குரலில் கர்ணனிடன், 'ரதமோட்டும் சூதனின் மகனே! குதிரை சவுக்குதான் உன் ஆயுதம். வில்லை மறந்து விடு மாவீரன் அர்ச்சுனனின் கையால் இறக்கும் தகுதி உனக்கில்லை.  இழிவான மனிதர்களில் கீழானவனே, யாக அவிசு தகுதியற்ற தெரு நாய்க்கு கிடைத்தது போல உனக்கு அங்க நாடு கிடைத்து விட்டது' என்றான்.

பதில் எதுவும் கூறாமல் வானை அண்ணாந்து பார்த்தான் கர்ணன். சூரியன் நண்பனுக்கும், எதிரிக்கும், நல்லவனுக்கும், தீயவனுக்கும் ஒளி தந்து கொண்டிருப்பதை பார்த்தான். எதிர்ச்சொல்லின்றி, எதிர்வினையின்றி பீமன் முன் இடையில் இரு கைகளயும் ஊன்றி, கால்களை அகற்றி அசையாமல் நின்றான் கர்ணன்.

ஆனால் துரியோதனனால் பொறுக்க முடியவில்லை. புண்பட்ட மதயானை மலர்ப்பந்தலில் நுழைந்தது போல துரியோதனன் வெகுண்டு எழுந்து கர்ணனுக்கும், பிமனுக்கும் இடையே வந்தான். உரத்த குரலில் பேசினான்.

'பீமா, நீ பேசுவது சத்திரியனுக்கு உகந்த மொழியல்ல. பெருந்தன்மையே சத்திரியனின் அடிப்படை அறம். ரிஷியின் மூலமும், பிரம்மத்தின் மூலமும், வீரத்தின் மூலமும் எவரும் அறியாதவை. அதன் பொருள் நாம் அறிய விரும்புவதில்லை என்பதுதான். அறியாதது அறியப்பட முடியாதது அல்ல. எதனுள்ளும் எதுவும் இருக்கவும், பிறக்கவும் முடியும். பிறப்பால் மட்டுமே எவரையும் மதிப்பிடுவது அறியாமையின் வழி. பிராமணர்களிலிருந்து சத்திரியர்கள் உருவானதையும், சத்திரியர்களிலிருந்து ரிஷிகள் உருவானதையும் அறியாதவர்கள் உண்டா? நம் குருவான துரோணர் உயர்ந்த குலத்தை சேர்ந்த பிராமணருக்கும், தாழ்ந்த குலத்தை சேர்ந்த மலை நாட்டு பெண்ணுக்கும் பிறந்தவர்தானே? குலமற்ற அவரை குருவாக ஏன் ஏற்றாய்? பிதாமகரான பீஷ்மரின் பிறப்பை பற்றி நீ அறிய மாட்டாயா? நாமனைவரும் மீனவப் பெண்ணின் குருதியில் பிறந்தவர்கள்தானே? உன் தந்தையும், என் தந்தையும், முதலமைச்சர் விதுரரும் பிறந்த விததை நான் விளக்கத்தான் வேண்டுமா? குலப்பெருமையைப் பற்றி நீயா பேசுவது!  நீயும், உன் சகோதர்களும் பிறந்த விதத்தை நானறிவேன். ஆயினும், இன்றுவரை உன்னை என் குருதி உறவாகத்தானே கருதி இருக்கிறேன்? பிறப்பைக் கருதியிருந்தால் உன்னோடு நான் மட்டுமல்ல, இங்கிருக்கும் சாதாரண வீரன் கூட கதை கோர்க்க மாட்டானே!'

துரியோதனின் சொற்களால் சீண்டப்பட்ட பீமன் ஒரடி முன்னே வைக்க சிரித்தான் துரியோதனன். பின் கூறினான். 'பிறர் களங்கங்களை சுட்டெரிக்கும் ஒளி வீசும் கர்ணனின் முகத்தைப் பார். அவன் அங்க அடையாளங்களைப் பார். பாயும் புலி போன்று தோன்றும் இவனை புள்ளிமானோ, நரியோ பெற்றிருக்க முடியுமா? அஸ்தினபுரி பணியாளனாக இருந்த கர்ணனை பற்றி நான் முன்பே சிறிது அறிந்திருக்கிறேன். சூரியனைப் போல அனைவரது வாழ்விலும் ஒளியேற்ற விழையும் இவன் எப்படி தாழ்ந்தவனாக இருக்க முடியும்? கர்ணனது உயர்வுதான் உன்னை சிறியவனாக உணர வைக்கிறது. இவன் அங்க நாட்டிற்கு அரசனாக தகுதியற்றவன் என்றாய். பகைவனே சத்தியம் பேசுவான் என்ற வகையில் உன் கூற்று உண்மையானதே. பண்புகளில் பூரணமடைந்தவன் பிரபஞ்சமாளப் பிறந்தவன். அவனை அங்க மன்னன் என்றழைப்பது தவறுதான். இதோ சூளுரைக்கிறேன். நான் என்றென்றும் கர்ணனுக்கு கட்டுப்படுபவனாக, கீழ்ப்படிபவனாக இருப்பேன். அஸ்தினபுரியின் இளவரசனான எனக்குக் கட்டுப்பட்டவர்கள் அனைவரும் கர்ணனுக்கும் கட்டுப்பட வேண்டியவர்களே.  என் முடிவை எதிர்ப்பவர்கள் எவராயினும் இக்கணமே ஆயுதமேந்தி என்னை எதிர்க்கலாம்'

அவையினர் திகைத்து நின்றனர். சொற்களை எப்போதோ இழந்து விட்டிருந்த கர்ணனின் கண்களில் நீர் துளிர்த்தது.

துரியோதனன் மேலும் கூறினான் 'பீமா, இன்று இறுதியாக நான் உன்னிடம் கூறுவது இதுதான். கர்ணன் வேறு, நான் வேறல்ல என்று நான் அறிவித்த பின்பும் நீ அவனை அவமதித்தது என்னையே அவமதித்தது போலாகும். குற்றமற்ற கர்ணனை, எனக்குப் பிரியமானவனை, நிறைந்த அவையில் அவமதித்தாய். பிதாமகர் உட்பட அனைவரும் உன் தகாத செயலை தடுக்காதிருந்தனர். உன்னை தண்டிக்கும் திறனிருந்தும், நீ அஸ்தினபுரியின் இளவரசன் என்பதால் பேரரசர் முன்னிலையில் எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறேன். வாழ்வின் கணக்கேட்டில் உன் செயல் பதிவு செய்யப்பட்டுவிட்டது'

யுதிஷ்டிரன் மென்மையான குரலில் துரியோதனனிடம் ஏதோ கூற முற்பட, பீமன் அவனை சினத்துடன் தடுத்தான். பீஷ்மரும், துரோணரும், கிருபரும் பாண்டவர்களின் அருகே வந்து அவர்களை அப்பால் அழைத்துச் சென்றனர்.

அரங்கில் துரியோதனனை வாழ்த்தி ஒற்றைக் குரல் எழுந்தது. அடுத்து கர்ணனை வாழ்த்தி ஒரு குரல் எழுந்தது. பின் இருவரையும் வாழ்த்தி அனைவரும் குரல் எழுப்பினர். இடைவிடாத பேரலைகள் போல வாழ்த்துக் குரல்கள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டே இருந்தன.

காந்தாரியின் முகத்தில் புன்னகை அரும்பியது. திருதராஷ்டிரரின் முகம் கனிந்திருந்தது.

துரியோதனனை நோக்கி கரங்கூப்பி நின்றிருந்தான் கர்ணன். அவன் கைகளை இறக்கிவிட்ட துரியோதனன், 'அங்க மன்னா. இன்று உன் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். உன் பெற்றோருடன் சேர்ந்திருக்க விரும்புவாய். நாளை நாம் என் அறையில் சந்திப்போம்' என்று கூறிவிட்டு தன் அரண்மனையை நோக்கி நடந்தான். அவன் பின்னே அவன் சகோதரர்கள் விரைந்தனர்.

அவை கலையத் தொடங்கியது. கர்ணனின் ஆணைக்காக அங்க வீரர்கள் காத்திருந்தனர்.

இளவரசர்கள் அகன்ற பின் கர்ணனை நோக்கி விரைந்தோடி வந்தாள் ராதை. கர்ணன் அர்ப்பணித்த மாலையை என்ன செய்வது என்று தெரியாமல் தன் கழுத்தில் சூட்டிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த கர்ணன் புன்னகைத்தான்.

தொலைவிலிருந்து இதை கவனித்த பேரரசி குந்தி ராதையை வெறித்துப் பார்த்தாள்.  ராதையின் முன்னே வந்து நின்று, அவளை குந்தியின் பார்வையிலிருந்து மறைத்தான் கர்ணன்.

சினத்துடன் தன் காலடியில் கிடந்த ஒற்றை தாமரை மலரை உதைத்து தள்ளி விட்டு விரைந்து அரங்கேற்ற களத்தை விட்டு வெளியேறினாள் குந்தி.

'முரடா! நீ அவருக்கு மலர்மாலையை அர்ப்பணம் செய்வாய் என்று பேரரசியார் எத்தனை எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். அவர் யார் என்பது உனக்குத்தான் தெரியுமே. அறிவை பயன்படுத்த மாட்டாயா? நீ மாலையை என் பாதங்களில் சூட்டுவாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை' என்றாள் ராதை.

'அறிவை நான் பொருட்படுத்துவதே இல்லை. ஆன்மாவின் சொற்களை மட்டுமே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அன்னையே, இப்பிறவியிலும், எப்பிறவியிலும் என் அன்பும், வணக்கமும், நன்றியும் தங்களுக்கு மட்டுமே உரியவை. உயிர் மட்டும் கௌரவ இளவரசருக்கு உரியது' என்று நெகிழ்ந்த குரலில் கூறி ராதையை அணைத்தான் கர்ணன்.

ராதையின் விழிகளில் நீர் துளிர்த்தது. 

அருகில் வந்து நின்ற அதிரதனின் மெலிந்த தோள்களில் தனது மற்ற கையை மாலையாக சூட்டிய கர்ணன், அவர்களோடு தன் குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அங்க மன்னனின் பணியாட்கள் திகைத்து பின் அவனை தொடர்ந்தனர்.

கர்ணனது நிமிர்ந்த தலையில் கர்வத்துடன் அமர்ந்திருந்த பொன்மகுடம் சூரியனின் ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

(நிறைந்தது)

* * * *

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms