நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

நான் இப்படி திகைச்சு நின்னுண்டிருக்கச்சே எதுத்த ஆத்துக்கு பாடம் படிக்க வர்ற புள்ளையாண்டான் கேட்டான், 'என்ன மாமி, முகம் வாடியிருக்கு?'

அவன் ஆடிட்டர் படிப்பு படிச்சிருக்கான். எதுத்தாத்து சாஸ்திரிகள்கிட்டே ஜோசியம் படிக்க வருவான். கையிலே ஒரு கம்ப்யூட்டர் வச்சுண்டு பித்து பிடிச்ச மாதிரி அதையே சதா வெறிச்சு பாத்துண்டு இருப்பான். கதை எழுதறேம்பான். அம்பாள் உபாசகன்னு சொல்லுவான். அப்புறம் யோகம் படிக்கிறேம்பான். இன்னும் என்னேன்னவோ சொல்லுவான். தான் என்ன செஞ்சிட்டிருக்கேன்னு அவனுக்கும் தெரியாது. மத்தவாளுக்கும் தெரியாது.

என் பிரச்சினையைப் பற்றி அவன்கிட்டே சொன்னேன். உடனே கம்ப்யூட்டரில் என்னவோ படபடன்னு அடிச்சான். சித்த நேரம் கழிச்சு, 'மாமி, உங்களுக்கு வழி பிறந்தாச்சு. ஒண்ணு சீட்டை கிழிச்சு போடுங்கோ, அது பிடிக்கலேன்னா யாருக்காவது கொடுத்துடுங்கோ' ன்னான்.

பாண்டிச்சேரியிலே அவனுக்கு வேண்டிய ஒருத்தர் இருக்காராம். கர்மயோகியோ, மர்மயோகியோ ஏதோ ஒரு பேர் சொன்னான். அவர்தான் இந்த யோசனைகளைச் சொன்னதாகவும், கம்ப்யூட்டரிலே கடுதாசி எழுதி, உடனே பதிலும் வாங்கிட்டதாகவும் சொன்னான்.

‘ஏண்டாப்பா, இரண்டுலே எது நேக்கு சரி வரும்?’ அப்படின்னு அவனைக் கேட்டேன்.  

‘அதை நீங்கதான் முடிவு பண்ணனும்’ ன்னான்.

ஒவ்வொரு விஷயத்திலும் பகவான் ஒரே ஒரு வழியைக் காட்டப்படாதா! இப்படி தேவையில்லாம பல வழிகளை வைச்சு குழப்பிடறானே!

‘அம்பி, நீயா இருந்தா என்னடா பண்ணுவே?’ இப்படி நான் கேட்டதும், 'சீட்டை கிழிச்சு போட்டுடுவேன்' ன்னான்.

பாண்டிச்சேரியிலே மதர்னு ஒரு வெள்ளைக்கார அம்மாள் இருந்தாளாம். ஒரு சமயம் அவா நடத்துன மடத்திலே செலவுக்கு திண்டாட்டமா இருந்துச்சாம். ஒரு சாதகன் சீட்டு ஒண்ணு வாங்கி, ‘அம்மா பரிசு விழணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்கோ. செலவுக்கு ஆகும்’ ன்னானாம். அந்த அம்மாளோ சீட்டை சுக்கல் சுக்கலா கிழச்சுப் போட்டுட்டாளாம். இந்தப்பணம் தெய்வகாரியங்களுக்கு உபயோகப்படாதுன்னு சொன்னாளாம்.

‘நாய் வித்த காசு குலைக்குமா அம்பி?’ன்னு கேட்டேன்.

‘நிச்சயம் குலைக்கும்’ங்கிறான்.

“எல்லா நோட்டும் சர்க்கார் நோட்டுதானே. இதில் என்ன வித்தியாசம்?’னு கேட்டேன்.

‘லோகத்துலே எல்லா ஆம்பிளைங்களும் பாக்க ஒண்ணுப் போலத்தான் இருக்கா? அதுக்காக எல்லோரும் ஆத்துக்காரா ஆயிடுவாளா?’ன்னு ஆடிட்டர் அம்பி ஒரு போடு போட்டான். நேக்கு கடுகடுனு ஆயிடுத்து. அசட்டு அம்பி எப்பவும் இப்படி விவகாரமாத்தான் பேசுவான். ஆனால் அப்படி பேசினால்தான் மனசுல உறைக்குது.

‘அம்பி, இதை என் அக்கா பிள்ளையிடம் கொடுத்தால், நாளைக்கு ஒண்ணுன்னா ஓடி வந்து உதவ மாட்டானா? ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன் சொன்னான், 'மாமி, மனுஷாகிட்டே நன்றி எதிர்பார்க்கிறதை மறந்துடுங்கோ. நாளைக்கு பிரயோஜனப்படணும்னு இந்த சீட்டை வேறு யாருக்காவது தர்றதுக்கும் இதை பணமா மாத்தி பேங்கிலே போட்டு வைக்கிறதுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். பேங்கிலே போட்ட பணம் திரும்ப வரும். மனுஷாகிட்டே தந்தது திரும்ப வரது கஷ்டம். சீட்டு பணத்திலே பிடிப்பு இருக்கிறவரைக்கும் இப்படித்தான் தோணும். பிடிப்பு இல்லைன்னா கிழிச்சு போட மனசு தயங்காது’ ன்னான்.

அவன் சொன்னதுல என்ன தப்பு?

உடனே பிடியை விட்டேன். அந்த சீட்டை எடுத்து பகவானையும் என் ஆத்துக்காரரையும் நெனச்சுண்டு கிழிச்சு போட்டேன். சொன்னா நம்ப மாட்டேள். அந்த சீட்டை கிழிச்சுப் போட்டதுலே உள்ளுக்குள்ளே பெரிய பாரம் விலகினாப்லே இருந்தது.

லட்ச ரூபாய் சீட்டை கிழிச்சுப் போட்டப்புறம் லட்ச ரூபாய் சம்பாதிச்ச மாதிரி சந்தோஷம் வந்தது.

இவருக்கு ஒரே சந்தோஷம். மிதிலைலே மொதமொதலே ராமர் சீதையைப் பார்த்தாராமே, அந்த மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்தார். நேக்கு ஒரே வெட்கமா போயிடுத்து.

அதுக்கப்புறம் நானும் அதை மறந்துட்டேன். அவரும் அதை மறந்துட்டார்.

கொஞ்ச நாளைக்கு முன்னாலே ஆத்துக்கு நாலைஞ்சு வண்டியிலே பெரிய பெரிய அதிகாரிகளும், போலீஸ்காராளும் வந்தா. எங்க ஆத்தை சோதனை போடணும்னா. நேக்கு திக்குன்னு ஆயிடுத்து.

சோதனை போட்டு என்ன கிடைக்கப் போறது? கிழிஞ்ச வேட்டியும், ஓட்டப் பாத்திரங்களும்தான் கிடைக்கும். எங்ககிட்டே ஒண்ணுமில்லே. அதிலே ஒரு அவமானமும் இல்ல. ஆனா அது மத்தவாளுக்கு தெரிஞ்சா அவமானமா இருக்கே!

 ‘எதுக்கு சோதனை?’ன்னு இவர் சிரிச்சுண்டே கேட்டார்.

‘போன மாசம் பத்மனாப சுவாமி கோவில் நிலவறையை திறக்கறச்சே ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பொக்கிஷம் கிடைச்சது. அங்க இருந்த கணக்குப் புஸ்தகத்துலே நிறைய விவரங்கள் இருக்கு. நூறு வருஷத்திற்கு முன்னே அந்த கோவில் கும்பாபிஷேகத்தச்சே பெரிய தடங்கல் வந்தது. அப்போ உம்ம பாட்டனாரோட தோப்பனார்தான் யாகமெல்லாம் நடத்தி அசுபத்தை சுபமாக மாத்தினாராம். திருவிதாங்கூர் மகராஜா அதுக்கு சன்மானமா ஒரு பொட்டி நிறைய தங்ககாசு தந்தாராம். அது இருக்கான்னு பாக்கணும்' னா

இவர் திகைச்சு போயிட்டார், 'இதோ பாருங்கோ பரண்லே பழங்கால பூட்டு போட்ட ஒரு பொட்டி இருக்கு.  என் தோப்பனார் அதைத் திறந்ததே இல்லே. நானும் அதைத் திறந்ததே இல்லே,’ அப்பிடின்னார்.

உடனே வந்தவா அந்தப் பொட்டியை பரணிலிருந்து இறக்கி பூட்டை உடைச்சுத் திறந்தா! என்னன்னு சொல்ல! பொட்டியிலே அரிசிமணி குவிச்சு வச்சாப்பிலே தங்கக்காசு ஜொலிக்குது. மகாராஜா வீட்டுத் தங்கமாச்சே! பசும்பொன் நிறம்னா அதுதான் பசும்பொன் நிறம்.

எல்லோரும் கூடி ஏதேதோ பேசினா. இவர்கிட்டே கையெழுத்து வாங்கிண்டா. எங்கிட்டே கைநாட்டு வாங்கிண்டா. பொட்டியை எடுத்துண்டு போயிட்டா.

‘இதுவும் போச்சே!’னு இவர்கிட்டே  சொன்னேன்.

‘இல்லேடி அசடு. தங்கக்காசை சர்க்கார் வைச்சுண்டு அதுக்கு ஈடா பணமா தருவா’ ன்னார்.

நான் பயந்துண்டே கேட்டேன், 'அந்தப் பணத்தை வாங்கிக்கலாமோ?”

‘அசடே. நான் பணம் வாங்கவே கூடாதுன்னு எப்போ சொன்னேன்? யார்கிட்டேயும் பணம் கேட்கக்கூடாது. ஆசைப்படக்கூடாதுன்னுதான் சொன்னேன். தெய்வக்காரியம் பண்ணறவாள ராஜாக்கள் ஆதரிக்கிறது வேதகாலம் முதல் இருக்கிற வழக்கம்தானே. நாமே ஞானத்த விலை பேசுறது வேற. மத்தவா அதோட பெருமைய புரிஞ்சுண்டு காணிக்கையா தர்றத வாங்கிக்கிறது வேற. சர்க்கார் கோடிக்கணக்கில பணம் தரும்னு சொல்றா. எல்லாத்தையும் உன்பேர்ல தான் பேங்கில போட சொல்லி இருக்கேன்’ ன்னார் என் ஆத்துக்காரர்.

நிம்மதி ஆயிடுத்து. ஆனா ஒண்ணு. பணம் வேண்டாம்னு இவர் சொல்லியிருந்தாலும் நான் சந்தோஷமாத்தான் ஏத்துண்டிருப்பேன்.

சித்த நேரம் கழிச்சு இவர் சொன்னார், 'லாட்டரி சீட்டு பத்தி நீ பேசின ச்சே நேக்கு உன்மேல வருத்தம் வந்தது என்னமோ வாஸ்தவந்தான். அப்புறம் நிதானமா யோசிச்சேன். நீ மதர்னு சொன்னதாலே அரவிந்தரையும் வாசிச்சேன், அகம், புறம்னு ஓயாம பேசுறேனே, அந்த அகத்திலே இருக்கிறது புறத்திலேயும் இருந்தாத்தானே அகத்துல இருப்பது உண்மைனு தோண ஆரம்பிச்சுடுத்து. நம்ம பெரியவா பரம்பரையா கொடுத்து எனக்கும் வந்த ஞானம் அத்தனையும் சொக்கத்தங்கம். அந்த ஞானத்தங்கத்துக்கு ஈடா புறத்திலேயும் பரண்ல தங்கம் இருந்தது. நான்தான் பணம்னாலே தப்புன்னு கண்ணை மூடிண்டு இருந்துட்டேன். நீ லாட்டரி பத்தி கேட்டப்பத்தான் என் கண் திறந்தது. நீ அசடு இல்லேடி. அசத்து! இதுவரை இல்லாததை கூட பொம்மனாட்டியாலே உருவாக்க முடியும்!’ இதேபோல இவர் பிரியமா பேசிண்டே போனார். நேக்கு ஒண்ணும் புரியலே.

இப்ப என் கவலையே வேற. ரொம்ப நாளா கழுத்தில் நீலக்கல் அட்டிகை போட்டுக்கணும்னு ஆச. எதுத்த வீட்டு மரகதமோ நேக்கு மரகத பச்சத்தான் எடுப்பா இருக்கும்னு சொல்றா. நான் நீலக்கல் போடறதா? மரகதப்பச்சை போடறதா? நேக்கு ஒண்ணும் புரியலையே!

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

(சுபம்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms