சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

சென்னையில் பெரும்செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில், இருபக்கங்களிலும் மரங்கள் உள்ள அமைதியான சாலையில், மிகவும் அகலமான கறுப்பு கம்பிக் கதவுகளும், உயரமான வெண்ணிற சுற்றுச் சுவரும் கொண்ட பெரிய மாளிகை பெரும்பாலானோருக்கு ஏதோ ஒரு பணக்கார வீடு. ஆனால் என்னைப் போல பெண்மையை ஆராதிக்கும் கலாரசிகர்களுக்கு அது அழகு தெய்வத்தின் திருக்கோவில். அது நடிகை மோகனாவின் வீடு.

இந்தியாவின் பிரபலமான தொழில் முறை ஓவியர் ஒரு முறை கூறினார்: 'ஓவியன் என்ற முறையில் நானறிந்த பெண்களில் மோகனாதான் பேரழகி என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஓவிய சாஸ்திரத்தில் பெண்களின் அங்கப் பரிமாணங்களுக்கு வரையறை உண்டு. கூந்தல், கண்கள், நெற்றி, காது, கன்னம், உதடு, கழுத்து, மார்பகம், தோள், கை, வயிறு, இடுப்பு, பிருஷ்டம், தொடை, கால், விரல் என ஒவ்வொரு அங்கமும் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த இலக்கணத்திற்கு கச்சிதமாகப் பொருந்துபவர் மோகனா மட்டுமே.'

நான் தொழில் முறை ஓவியனல்ல என்றாலும் பெண்ணழகு என்றால் என்னவென்பதை என்னிதயம் அறிந்திருந்தது, நானறிந்த பெண்களில் இருவரை பேரழகிகள் என்பேன். ஒருவர் மோகனா. மற்றொருவர் கணவர், குழந்தைகளோடு வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்.

மோகனாவும், அவரை விட சற்றே உயரம் குறைவான, நாட்டியத்திற்கு ஒளி தருபவர் என்று பாராட்டப்பட்ட நடிகை ஒருவரும் இணைந்து ஆடிய நடனம், ‘சபாஷ்! சரியான போட்டி’ என்று ரசிகர்களை வியக்க வைத்த ஒன்று. அது இடம் பெற்ற படத்தை என் சிறுவயதில் பார்த்தேன். அந்த நடனம் என் ஆழ்மனத்தில் ஒளிந்து கொண்டிருந்தது. சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி படிக்கும்போது மோகனா மூன்று வேடங்களில் நடித்த இந்தி படத்தை பார்த்தேன். அக்கணமே மோகனாவின் பரம ரசிகனாகி விட்டேன். நடிகை மோகனாவை போற்றினேன் என்று கூறுவதை விட, பூரணம் பெற்ற பேரழகைப் போற்றி, தூய பெண்மையை வழிபட்டேன் என்று கூறலாம். பிறர் கேலி செய்யும் இது போன்ற பலதரப்பட்ட ரசனைகள் என்னிடம் உண்டு.

அப்போது எனக்கு பதினெட்டு வயது, கல்லூரிக்குப் போகாமல் நேரடியாக சிஏ படிக்க சென்று விட்டிருந்தேன். வீடியோ டேப், விசிடி, டிவிடி என்பவை கிடைக்காத காலம். அதனால் பழைய படங்கள் போடும் தியேட்டர்களை கவனித்து மோகனா நடித்த படங்கள் போடும்போது பார்த்துவிடுவேன். அவர் நடித்த தமிழ் படங்களையும், பிற மொழிப் படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து பரவசமாவேன். நல்ல உயரமானவர், நீண்ட கால்கள் உள்ளவர் என்பதால், அவர் பாரத நாட்டியமோ. திரைப்பட நாட்டியமோ ஆடும்போது, கலையின் எழில் எல்லையற்று விரிவது போல எனக்குத் தோன்றும்

நண்பர்களிடம் நான் மோகனாவின் புகழ் பாடாத நாளே இல்லை. வாடிக்கையாளர்களின் கணக்குப் புத்தகங்களில் மோகனாவை பற்றிய மரபுக் கவிதைகளும், வசனக் கவிதைகளும் எழுதியிருக்கிறேன் என்றால் நான் எந்த அளவிற்கு மோகனா பித்தனாக இருந்தேன் என்பதை பிறரால் புரிந்து கொள்ள முடியும்.

திரை உலகின் சிகரத்தில், ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அரசாண்டபோது, ஒரு இந்தி படத்தில் மோகனா குறைவான உடைகளோடு கவர்ச்சியாக நடனமாடியது என் பதின்ம வயது மனத்தை வருத்தியது, பிறர் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். தப்பே இல்லை. ஆனால் மோகனா போன்ற தேவமங்கை அப்படி நடிக்கலாமா? கதையின் கால பிரமாண தேவைக்காக புத்த அஜந்தா ஓவியங்களில் உள்ளது போல உடை அணிந்து நடித்திருக்கிறார் என்று என் ஆப்த நண்பன் என்னை சமாதானப்படுத்தினான். என்றாலும் எனக்கு சிறிது வருத்தம் இருக்கத்தான் செய்தது, ஆனால் அதற்குப்பின் மோகனா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்ற செய்தி எனக்கு ஆறுதலைத் தந்தது. எத்தனையோ பெரிய வாய்ப்புகள் வந்தபோதும், அவர் நடிக்க மறுத்து விட்டார்.

தங்களை அறிவுஜீவிகளாக, ஞானவிளக்குகளாக கற்பனை செய்து கொள்ளும் மனிதர்கள், என்னைப் போன்றவர்களின் ரசனைகளை, மோகனா போன்றவர்களின் சாதனைகளை கேலி செய்து கொண்டிருப்பார்கள். கேலி செய்பவர்களை ஆராய்ந்து பார்த்தால் எதை இடைவிடாது கேலி செய்கிறார்களோ, அதுவே அவர்களை அகத்தில் ஆட்டுவிக்கும் தேவதை என்பது தெரியவரும். அதற்காக அந்த அறிவுஜீவிகளை நான் விமர்சனம் செய்வதில்லை. அவர்களது ஆன்மா கேலி பேசும் அனுபவத்தைப் பெற விரும்பினால் நான் ஏன் அதில் குறுக்கிட வேண்டும்?

எந்த மனிதரையும், எவரது சாதனையையும் நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. எனக்கு உதவுபவர்களைக் கூட நான் குறை கூறுவதில்லை! என்னை பொருத்தவரையில் எல்லோருமே சமமான சாதனையாளர்கள்தான். அதனால்தானோ என்னவோ நான் சிறிது நேரம் சந்தித்த மனிதர்கள் கூட ஏதோ ஒரு வகையில் எனக்கு வழி காட்டி இருக்கிறார்கள். நாம் பிரம்மம் என்ற எண்ணத்தோடு, நம்மை நாடும் எல்லா நிகழ்வுகளும், மனிதர்களும் நமக்கு வழிகாட்ட வரும் பிரம்மத்தின் ரூபங்கள் என்ற எண்ணமிருந்தால், அது அப்படியே நடக்கிறது என்பது என் அனுபவம். நான் கேளாமல் எனக்கமைந்த எண்ணற்ற குரு பிரம்மங்களில் மோகனாவும் ஒருவர்.

பள்ளியில் படிக்கும்போது என் நல்லூழால் அல்லது பிரம்மத்தின் பெருங்கருணையால் பூங்குன்றனின் பாடலை வாசித்தேன். அது என்னை விடாமல் பற்றிக் கொண்டதா அல்லது நான் அதை விடாமல் பற்றிக் கொண்டேனா என்று தெரியவில்லை. இப்பிறவிக்கடலில் என்னை தாங்கிச் செல்லும் பெருங்கலமாக இன்று வரை அப்பாடல் என்னோடு இருந்து வருகிறது. ‘காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற வரிகள் எந்த தனிமனிதரையும் எக்காரணத்தாலும் போற்றவோ, தூற்றவோ என்னை அனுமதித்ததில்லை.

ஒளியால் நிறைந்த வானை முட்டி நிற்கும் மலையை மனிதன் வியப்பதற்குக் காரணம் அவன் இருளால் நிறைந்த அதலபாதாளமான பள்ளத்த்தாக்கை கண்டதால்தானே? ராவணன் இல்லையேல் ராமனைப் பற்றி யார் காவியம் எழுதப் போகிறார்கள்? பொறாமையால் பொசுங்கிய சந்திரபலி இல்லையேல், சரணாகதியை ஏற்ற ராதைக்கு ஏது பெருமை? கணிகை மாதவியின் தியாகந்தானே கண்ணகிக்கு கற்பரசி என்ற கிரீடத்தை பெற்றுத் தருகிறது? அஞ்ஞானம் இல்லையேல், ஞானத்தை யார் தேடப் போகிறார்கள்? ஜடம் இல்லையேல், பிரம்மத்தை யார் பொருட்படுத்தப் போகிறார்கள்?

ஒரு நிலையில், இரண்டும் எதிரானவை என்றெண்ணி, இருளின் தியாகத்தை கவனிக்காமல் ஒளியைப் போற்றினாலும் அடுத்த நிலையில் இரண்டும் சமமே எனத் தோன்றுகிறது. அதற்கும் அடுத்த நிலையில் இருளின் பெருமை புரிகிறது. அதையும் கடந்த நிலையில் அடர்ந்த ஒளியே இருள், அடர்ந்த ஞானமே அஞ்ஞானம், கண்ணகியே மாதவி, ராமனே ராவணன், ராதையே சந்திரபலி, பிரம்மமே ஜடம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்த நோக்கில் என் சிற்றின்ப ஆசை என்பது பேரின்ப ஆர்வத்தின் திரிபுதானே? இது தருக்கத்தை வளைக்க வந்த விபரீத கோட்பாடு போல எல்லோருக்கும் தோன்றினாலும், ஞானக்கதிரொளி பரவிய பாதையில் நடப்பவனுக்கு மெய்யான கோட்பாடு.

அன்றொரு நாள் ஒரு பிரபல ரசாயன நிறுவனத்தில் தணிக்கை செய்ய ஆடிட்டர் என்னையும், என் நண்பனையும் அனுப்பினார். அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இருக்கும் சாலையில் மோகனாவின் வீடு இருப்பது அதுவரை எனக்குத் தெரியாது,

பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆளரவமற்ற சாலையில் நீண்ட தூரம் நடக்க வேண்டும். போகும் வழியெல்லாம் பெரிய பெரிய வீடுகள். அன்று அந்த மாளிகையை கடக்கும்போது, 'சந்திரா, இதுதான் மோகனாவின் பங்களா' என்றான் உடன் வந்த நண்பன். திகைத்து நின்று விட்டேன்.

உயரமான சுற்றுசுவர். அகன்ற வாசல். பெரிய கம்பிக் கதவுகள். சீருடை அணிந்த காவல்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். உள்ளே தொலைவில் வெண்ணிற மாளிகை. அதை சுற்றிலும் தோட்டம். மாளிகையை ஆர்வத்துடன் பார்ததேன். மோகனாவையே பார்ப்பது போல ஓர் உற்சாக உணர்வு.

ஒரு காவல்காரரை அணுகி 'நான் மோகனா மேடமின் ரசிகன். அவரை எப்படி பார்ப்பது?' என்றேன்.

என்னை சிறு பூச்சியைப் போல பார்த்த காவல்காரர் 'அதெல்லாம் பார்க்க முடியாது. போ, போ' என்று விரட்டினார்.

நான் வாசலை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டேன். நண்பன் 'நேரமாகிறது. போகலாம். மோகன தரிசனம், பாவ விமோசனம் என்ற நினைப்போ?' என்றான்.

'நான் ஆபிஸ் வரவில்லை. நீ போ' என்று கூறிவிட்டு அங்கேயே நின்று கொண்டேன்.

அரை மணி நேரம் கழித்து காவல்காரர்கள் பரபரப்புடன் காம்பவுண்டு கதவுகளை திறந்தனர். ஒரு நீண்ட கறுப்பு நிற கார் மெல்ல வெளியே வந்தது. கறுப்பு கண்ணாடி போட்ட ஜன்னல் வழியே பின்சீட்டில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. முகம் தெரியவில்லை. அனேகமாக மோகனாவாகத்தான் இருக்க வேண்டும் என்று பதற்றத்துடன் நினைத்துக் கொண்டேன். கார் சென்றதும் நான் அலுவலகம் போய் விட்டேன்.

அடுத்து வந்த நாட்களும் அதுபோலவே தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று காத்திருக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் வேறு நிறக் கார். அது போன பின்புதான் அலுவலகம் போவேன். ஆரம்பத்தில் என்னை கடுமையாகப் பார்த்த காவலர்கள் சில நாட்கள் கழித்து என்னையும் ஒரு மனிதப் பிறவியாக ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு நான் அவ்வப்போது பழங்களும், தின்பண்டங்களும் வாங்கித் தருவதுண்டு.

ஒரு மாதம் விடாமல் சென்று கொண்டிருந்தேன். தெளிவில்லாத உருவத்தை பின் சீட்டில் தரிசித்துவிட்டு அலுவலகம் செல்வேன். அந்த உருவம்தான் மோகனா என்று உறுதியாக நம்பினேன். ஆனால் ஒரு நாள் கூட காரிலிருந்த உருவம் என்னை கவனித்தது போலத் தெரியவில்லை. அதை பற்றி எனக்கு கவலையுமில்லை. மாலையிலும் மோகனா வீட்டு வாசலில் காத்திருக்க விருப்பம்தான் என்றாலும் எப்போது வீடு திரும்புவோம் என்பது மோகனாவிற்கே தெரியாது என்பதால் நான் மாலையில் செல்லாதிருந்தேன்.

ஒரு மாதம் கழித்து பரீட்சைகள் வந்ததால் படிப்பதற்காக ஆடிட்டர் ஒரு வாரம் விடுப்பு தந்தார். ஆறு நாட்கள் பரீட்சைகள் நடந்தன. அதனால் இரண்டு வாரங்கள் மோகனா வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

பதினைந்தாவது நாள் மீண்டும் வழக்கம்போல மோகனா வீட்டு வாசலில் நின்றேன். வழக்கம் போல கார் வீட்டை விட்டு வெளியே வந்தது. என்னை தாண்டும்போது நின்றது. கண்ணாடி கதவு இறங்கியது. ஜன்னல் வழியே மோகனாவின் அழகிய முகம் தெரிந்தது. என்னைப் பார்த்து கையசைத்தார். 'இந்தா பையா, இங்கே வா' என்றார் மோகனா.

அருகே பாய்ந்து சென்றேன்.

'இரண்டு வாரமாக ஆளைக் காணோமே' என்றார் மோகனா.

திகைத்தேன். தினமும் என்னை கவனித்திருக்கிறார் என்ற அறிதல் என்னை பெருமிதம் கொள்ள வைத்தது,

'பரீட்சை' என்றேன்.

'என்ன படிக்கிறே?' என்றார் மோகனா.

'சிஏ படிக்கிறேன் மேடம்' என்றேன்.

'வீடு எங்கே?' என்று கேட்டார் மோகனா.

'ஷெனாய் நகர். அண்ணா நகருக்கு முன்னால், கீழ்பாக்கம் பக்கத்திலே' என்றேன்.

'தெரியும் தெரியும். நியூடோன் ஸ்டுடியோ அங்கேதானே இருக்கு! அவ்ளோ தூரத்திலிருந்து இங்கே எதுக்கு வரே?' என்று கேட்டார் மோகனா.

'இந்த சாலையில்தான் நான் ஆடிட் செய்ய வேண்டிய கம்பனி இருக்கு. அதுக்கு போகிற வழியில் உங்களை பார்ப்பேன்' என்றேன்.

கார் கதவை திறந்து விட்டார் மோகனா. 'ஏறிக்கோ. உன் கம்பனியில் விட்டு விடுகிறேன்' என்றார்.

'பரவாயில்லை மேடம், நான் நடந்து போகிறேன்' என்றேன்.

'அட ஏறிக்கோப்பா' என்றார் மோகனா.

'மேடம் சொல்றாங்க இல்லே?' என்றார் காவல்காரர்.

'ஷட் அப்! நான் பேசும்போது ஏன் குறுக்கே பேசறே?' என்று காவல்காரரை கோபத்துடன் அதட்டினார் மோகனா மேடம்.

நான் பயந்து போய் காரில் ஏறிக் கொண்டேன். உடலை குறுக்கி மரியாதையுடன் உட்கார்ந்து கொண்டேன். வசதியான இருக்கை. திரையில் பார்த்ததை போலவேதான் இருந்தார் என்றாலும் சற்று வயதாகியிருந்தது. வயது நாற்பது இருக்கும். சினிமாவிலிருந்து அவர் ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகியிருந்தன.

கார் நகர்ந்தது. பின் சீட்டில் அவர் அருகே அமர்ந்திருப்பது கனவு போலிருந்தது.

'வயசென்ன?' என்றார் மேடம்.

'பதினெட்டு' என்றேன்.

'அதுக்குள்ளேயா சிஏ படிக்க வந்துட்டே?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மேடம்.

நான் அறிவியல் படிக்க விரும்பியதையும், என் அப்பா என்னை கல்லூரிக்கு அனுப்பாமல். நேரடியாக சிஏ படிக்க அனுப்பிய கதையையும் அவரிடம் சொன்னேன். ரோஜாவண்ண நகச்சாயம் பூசிய நீண்ட விரல்களால், தனது வலது கன்னத்தை தாங்கிக் கொண்டு வாய்விட்டு சிரித்தார்.

வைணவ பிராமணர் என்றாலும் சென்னை தமிழும், பம்பாய் தமிழும், பிராமணத் தமிழும் கலந்து பேசினார். நேக்கு, எனக்கு, நோக்கு, உனக்கு என்று எல்லா வார்த்தைளையுமே பாகுபாடின்றி பயன்படுத்தினார். பல ஊர்களில். பல மொழிகளில், பல கதாபாத்திரங்களில் வசனம் பேசியதால் இருக்கலாம்.

'ஏன் வருத்தப்படறே? உன் அப்பா நல்லதுதான் பண்ணியிருக்கார். காலேஜுக்கு போனால் நேரம்தான் வீணாகும். சொந்தமா படிக்கிறதுதான் நல்ல படிப்பு. எனக்கு எட்டு வயதில் ஒரு பிள்ளை இருக்கிறான். ஒரே பிள்ளை. உன்னைப் போலவே அவனையும் பெரிய படிப்பிற்கு அனுப்பணும். அது என் ஆசை. அவன் ஆசை என்னவோ! ஆண்டாளுக்குத்தான் தெரியும்' என்றார் மேடம்.

மோகனாவிற்கும் குழந்தையும், குடும்பமும் இருக்கும் என்று நான் அதுவரை யோசித்ததே இல்லை. மௌனமாக இருந்தேன்.

‘ஏதாவது பேசுப்பா’ என்றார் மேடம்.

‘எனக்கு எழுத வரும். தெரிந்தவர் என்னை சினிமாவிற்கு கூப்பிடுகிறார்’ என்றேன்.

‘எதுக்கு சினிமாவிற்கு வர நினைக்கிறே? பணக்காரனாகவா?’ என்று கேட்டார் மேடம்.

‘நான் கலைஞன். படிப்பையும், வேலையையும், பணத்தையும் விட கலையும், இலக்கியமும், ஆன்மீகமும் எப்போதுமே என்னை அதிகமாகக் கவர்ந்து வந்துள்ளன. முன்னவை உலகத்தினுள் நம்மை சிறை வைப்பவை. பின்னவை நம்முள்தான் உலகம் சிறைபட்டுள்ளது என்பதை உணர்த்துபவை’ என்று அறிவாளித்தனமாக சொல்லத் தோன்றியது. சொல்லவில்லை. ‘கலைஞனுக்கு பணம் தேவைதான். அதை விட பாராட்டுதான் அவனுக்கு முக்கியம்’ என்றேன்.

கோவில் சிற்பங்கள் பொறாமைப்படுமாறு, எவரையும் வசீகரிக்கும் புன்முறுவலை மென்மையாக உதடுகளில் கசியவிட்டார். ‘இடியட்! ஏதாவது வேணுமென்றால் அதை நாம் தேடித் போகக் கூடாது. அப்போத்தான் அது நம்மகிட்டே வரும். நாம் செய்யவேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். தகுதியை வளர்த்துக்கணும். கர்வம் கூடாது. புரியறதா?’ என்றார் மேடம். தலையை ஆட்டினேன்.

‘உன் முகத்தைப் பார்த்தால் ரொம்ப ரோஷக்காரனாகத் தெரிகிறாய். அது சினிமாவிற்கு ஒத்து வராது. படிப்பில் கவனமாக இரு’ என்றார் மேடம்.

தலையை ஆட்டினேன். பின் மெதுவாக, ‘ஒவ்வொரு நடிகையும் உங்களை மாதிரி திறமையாக நடிக்கணும்’ என்றேன். சொன்னபின் அப்படி அபத்தமாக சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. நான் வானத்தை வார்த்தைகளால் வசப்படுத்தவல்ல கலைஞன் அல்லவா? கலையொளி மிளிர, அணியலங்கார கவித்துவத்துடன் ஏதேனும் சொல்லியிருக்க வேண்டும். அழகிய பெண்கள் முன்னிலையில் ஆண்களின் அறிவு செயலற்றுப் போய் விடுகிறது.

மீண்டும் அதே வசீகரப் புன்னகை உதடுகளில் மலர்ந்தது. ‘நான் ஒண்ணும் பண்ணலை. எல்லாம் அவதான் பண்ணினா, பண்றா, பண்ணுவா’ என்றார் மேடம்.

‘யார்?’ என்று புரியாமல் கேட்டேன்.

‘ஆண்டாள் தெரியுமில்லே? மாலை சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. அவதான் என் இஷ்ட தெய்வம். எது பண்றதாயிருந்தாலும் முதலில் அவகிட்டேதான் சொல்வேன். சொன்னப்புறம் மனசு நிறைஞ்சால்தான் அந்த காரியத்தை பண்ணுவேன். ஆண்டாள் பகவானை சரணடைஞ்சவள். அவளை நான் எப்பவோ சரணடைஞ்சுட்டேன். இன்னிவரைக்கும் அவதான் எல்லாத்தையும் பண்றா. இனிமேலும் அப்படித்தான். போனவாரம் என்னை அரசியலுக்கு வர சொல்லி டெல்லியில் இருக்கும் ரொம்ப பெரிய இடத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் இன்னும் பதில் சொல்லலே. ஆண்டாள் அனுமதி நெஞ்சுக்குள்ளே கிடைச்சால்தான் அந்த அழைப்பை ஏத்துப்பேன். இல்லையானா நோ சொல்லிடுவேன். எத்தனை பெரிய இடமாக இருந்தால் என்ன? எவ்ளோ பெரிய வாய்ப்பாக இருந்தால் என்ன? ஐ டோன்ட் கேர். அடியாளுக்கு ஆண்டாள்தான் முக்கியம்’ என்றார் மேடம்.

நான் எதுவும் பேசாமல் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘வாழ்க்கையில் ஜெயிக்கிறவாளை பத்தி ஆராய்ச்சி பண்றவா சகட்டுமேனிக்கு காரணங்களை அடுக்குவா. அதையெல்லாம் நான் நம்பறதில்லை. பெரியது, சின்னது, நல்லது, கெட்டது – நான்சென்ஸ். எல்லாம் வார்த்தை குப்பை! சுத்த ஹம்பக். தெய்வ சங்கல்பம் மட்டும்தான் நிஜம்’ என்றார் மேடம்.

‘ஆண்டாள் கிட்டே என்னை வேண்டிக்க சொல்றீங்களா? நான் தூய அத்வைதி. உருவ வழிபாடு எனக்கு ஒத்து வராது’ என்றேன்.

‘நடிகையோட ரூபலாவண்ய தரிசனம் மட்டும் ஒத்து வருமாக்கும்!’ என்று கூறி உரக்க சிரித்தார் மேடம். வெட்கம் உண்டானாலும் அவர் என்னை கேலி செய்தது எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. ‘கடவுள் என்கிற கருத்தையே மறுத்தவர் புத்தர். உருவ வழிபாட்டை ஏற்காதவர். அவரோட சிஷ்யா புத்தருக்கு விதவிதமாக சிலை வைச்சு அவரை கடவுளாக்கிட்டா. அப்புறம்தான் அவாளாலே புத்தமதத்திலே இருக்க முடிஞ்சது. மனுஷன் எதையும் தன்னை அளவுகோலா வைச்சுத்தான் பாக்கிறான். பாரேன், மனுஷன் படைச்ச அத்தனை கடவுள்களும் அவன் சாயலில்தானே இருக்கா? கடவுளா, மனுஷனா, யாரு டைரக்டர், யாரு ஆக்டர்? யாரு யாரைப் படைச்சா என்பதிலேயே பல சமயங்களிலே சந்தேகம் வந்துடறது’ என்றார் மேடம்.

‘தூய ஞானம் உயரத்திலே இருக்கு. உருவ வழிபாடு கீழே இருக்கு’ என்றேன்.

‘நீ ரொம்ப கண்டுட்டே! அபிஷ்டு! மனுஷா பகவானை அடைய சரணாகதிதான் சிம்பிளான வழி. ஆண்டாள், ராதாராணி, மீரா மாதிரி பக்தி பண்றவாளுக்கு சரணாகதி செய்றது ரொம்ப சுலபம். ருபமில்லாமல் பக்தி செய்றது மனுஷாளுக்கு சிரமம். ஞானிக்கு சரணாகதி சுலபத்திலே வந்துடாது. அவன் அறிவே அவனுக்கு எதிரி. அறிவுங்கிறது அகம்பாவம்தானே?’ என்றார் மேடம்.

‘அகம்பாவியான சைவ அய்யரோட அத்வைதத்தைவிட, தாசானுதாசனாக தெண்டனிட்டு சேவிக்கிற வைணவ அய்யங்காரோட சரணாகதி மேல் என்று சொல்கிறீர்களா? வைணவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்’ என்றேன். சொன்னபின் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மோகனாவின் நட்புபாவம் எனக்கு அவ்வாறு பேசும் துணிச்சலை தந்திருக்கலாம்.

‘இந்த மாதிரி உளறலை கேட்டு எனக்கு கோபம் வராது. இப்ப என்னத்திற்காக ஜாதியை இழுக்கிறே? ஞானம் கூடாதுன்னு சொல்ல வரலே. ஞானம், பக்தி, கர்மம் எல்லாமே இருக்கணும். பிரிக்க முடியாதபடி எல்லாமே ஒண்ணா இருந்தால்தானே பூரணம்னு சொல்ல முடியும்? அது முடியாதவா ஒத்து வராததை விட்டுட்டு, எது வருதோ அதை மட்டும் செய்யலாம். செய்றது சின்னதா இருந்தாலும். சத்தியம் இருந்தா, மீதியை பகவான் பாத்துப்பார். வராததை வர வைச்சு பூரணமாக்குவார். வெத்து வீம்போட எதையும் விலக்க வேணாம்னு சொல்றேன். என்னத்திற்காக எதையும் தாழ்த்தணும்? எனக்கு ஆண்டாள்தான் உச்சம், ஒசத்தி. அதுக்காக சுடலைமாடனுக்கு கிடாவை பலி கொடுக்கிறவாளை தாழ்த்தியா நினைக்க மாட்டேன்’ என்றார் மேடம்.

‘எல்லாம் ஒன்றுதான் என்று அத்வைதி சொல்வதால் அவனை யாரை வேண்டுமானாலும் கும்பிட சொல்கிறீர்கள்’ என்றேன்.

அல்லியிதழ்கள் போன்ற நீண்ட விரல்கள் கொண்ட கைகளைக் கூப்பி ‘அப்படியா சொன்னேன்? பகவானே! இந்த பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடு’ என்று கூறி மீண்டும் வாய்விட்டு சிரித்தார் மோகனா மேடம். ‘பையா, நடிகைக்கு எத்தனை திறமை இருந்தாலும், டைரக்டரை மீறி எதுவும் செய்து விட முடியாது. தொழிலாளியின் திறமை முதலாளியின் முடிவைத் தாண்டிப் போக முடியாது. மேலே மேலே போகணும் என்றால் பெரிய டைரக்டர், நல்ல முதலாளி அமையனும். நீ எந்த தேவதையை ஏத்துக்கிறயோ, அதோட வலிமைதான் உன்னோட அதிகபட்ச ஆன்மீகமா அமைஞ்சுடும். ஆன்மீக வளர்ச்சி அனந்தமாக இருக்கணும்னா அதற்கேத்த தெய்வத்தை சரணடையணும். தெய்வத்துக்கு எத்தனையோ ரூபம். உன் தெய்வம் எதுன்னு கண்டுபிடி. அதுகிட்டே பொறுப்பை விடு. பொறுமையா இரு. உனக்கு எது தேவையோ அது தானா வரும். புரியறதா?’ என்றார் மேடம்.

தலையை ஆட்டினேன். சற்று நேர மௌனத்திற்கு பின் 'நீ என் ரசிகன், என் வீட்டு வாசலில் நீ நின்னா எனக்கு கௌரவம்தான். ஆனால் உனக்கு கௌரவக் குறைச்சல்' என்றார் மேடம்.

'அதாவது மேடம்...' என்று ஆரம்பித்தேன்.

'குறுக்கே பேசாதே. முன்பு நடிப்பு என் தொழில். இப்போ நடனம். நிறைய சம்பாதிக்கிறேன். உன் வேலையை ஒழுங்காய் பார்த்து சம்பாதி. பகவானை நினைச்சு நல்லபடியா எழுது. உனக்கு சினிமா வேண்டாம். பொழுதுபோக மட்டும் சினிமாவை பார். முன்பின் தெரியாத சினிமாக்காரா வீட்டு வாசலில் பிச்சைக்காரனைப் போல நிற்காதே. உன் அப்பா, அம்மா இதுக்கா உன்னை பெத்தா? புரியறதா?' என்றார்.

தலையை ஆட்டினேன். நான் வேலை செய்ய வேண்டிய அலுவலகம் வந்து விட்டது. கார் நின்றது. காரிலிருந்து இறங்கினேன்.

'இந்தா பையா, படிப்பில் கவனம் இருக்கணும். நீ முன்னுக்கு வந்தால் அது என் பையனே முன்னுக்கு வந்தது போல. எந்த வயசிலும் மனசை அலைய விடக் கூடாது, புரியறதா?' என்றார்.

தலையை ஆட்டினேன்.

'தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலைய, தலைய நன்னா ஆட்டு. என்ன புரிஞ்சதோ!' என்றவர் தன் கையை நீட்டி என் கையை பற்றி குலுக்கினார். 'ஆல் தி பெஸ்ட்' என்றார்.

கதவை பவ்யமாக மூடினேன். கார் நகர்ந்த பின்புதான் அவர் என் பெயரைக் கூட கேட்கவில்லை என்பதை உணர்ந்தேன். அவரைப் பொருத்தவரை என் பெயர் ரசிகன். என்னைப் போல கோடி ரசிகர்கள் இந்தியாவில் இருப்பார்கள். எல்லோர் பெயரையுமா அவர் தெரிந்து வைத்துக் கொள்ள முடியும்? மோகனாவைப் போன்ற சாதனையாளர் என்னைப் போன்ற எளிய சிறுவனிடம் சகஜமாகவும், வாஞ்சையுடனும் பேசியது மன நிறைவைத் தந்தது. ‘மேன்மக்கள் மேன்மக்களே’ என்று சொல்லத் தோன்றினாலும், ‘மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே’ என்ற பூங்குன்றனின் பாடல்வரி அதை தடை செய்தது, யதார்த்தமும், மெய்மையும், பொதுபுத்தியும் வாழ்வை எத்தனை தெளிவாகக் காட்டினாலும், கோணல்புத்தி லட்சியவாதிக்கு அவன் லட்சியம்தானே முக்கியம்?

அதற்கு பின்பு மோகனாவை நான் பார்க்கவே இல்லை. ஆனால் அவரைப் பற்றிய செய்திகள் பத்திரிக்கைளில் வந்து கொண்டே இருந்தன.

எனக்கு அறிவுரை சொல்லி சென்ற சில மாதங்களில் எவரும் எதிர்பாராவிதமாக தேர்தலில் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக மோகனா நின்றார். தனக்கு எதிராக நின்ற பழம்பெரும் அரசியல்வாதியை இந்தியாவே திகைக்கும்படியான பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றார். நானே வென்றது போன்ற பெருமிதம் என்னுள் எழுந்தது, அடுத்த முறை வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதே போல மீண்டும் அவர் வெற்றி பெற்றார். அப்பதவிகாலம் முடிந்ததும், பல ஆண்டுகள் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.

காரிலிருந்து இறக்கி விட்ட கணமே மோகனா என்னை மறந்திருப்பார். நான் அவரையும், அவர் சொன்னதையும் மறக்கவில்லை. அவரை சந்தித்த பின் எந்த நடிகர், நடிகை வாசலிலும் நிற்கவில்லை. எவருக்காகவும் இதுவரை காத்திருக்கவில்லை. அன்றிலிருந்து எனக்கு அவர் நடிகையாக மட்டும் தெரியவில்லை. கண்டிப்பான அம்மா போலவும் தெரிகிறார். சில சமயங்களில் ஆண்டாள் போலவும்தான்.

(முற்றும்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms