கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்

கமலாவிற்கு மிகவும் நீளமான, அடர்த்தியான கூந்தல். ‘மலையாளத்து மங்கையோ?’ என்று கூந்தலை பார்த்துவிட்டு கேட்பவர்கள் உண்டு. அளகபாரம் தொடை வரை தொங்கும். விரித்து விட்டால் உடை அணிந்திருக்கிறாளா இல்லையா என்பதே தெரியாது. கறுப்பு நிற மேலங்கி போட்டிருப்பது போலிருக்கும். ஆனால் அவள் ஒருபோதும் கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கமாட்டாள். குடும்பத்திற்கு ஆகாதாம்.

'இதென்ன மூட நம்பிக்கை?' என்று கேட்டேன்.

'என்னிடம் அம்மா அப்படித்தான் சொன்னார். அம்மாவிடம் பாட்டி அப்படித்தான் சொன்னார்' இரட்டை ஜடைகளில் இடப்பக்க ஜடையை மார்பின் மீது தவழ விட்டு, வலப்பக்க ஜடையின் கனத்த முனையை குழந்தை கம்பி மத்தாப்பை சுழற்றுவது போல சுழற்றியபடி பதில் சொன்னாள் கமலா. வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தன் நீளமான கூந்தலை இரட்டை ஜடைகளாகப் பின்னி, இரண்டு ஜடைகளையும் இணைக்கும் பாலமாக நீண்ட மல்லிகை மலர் சரத்தை பிறை நிலா வடிவில் சூடியிருப்பது அவள் வழக்கம். எனக்குப் பிடிக்கும் என்பதே அந்த வழக்கம் உண்டானதற்கான மூல காரணம்.

'நீயே சொந்தமாக யோசித்து ஏதேனும் விளக்கம் கொடு. நம் நாட்டில் சுயசிந்தனை காணாமல் போய் வெகு காலமாகிறது' என்றேன்.

'பெண்களை சக்தியின் அவதாரம் என்று புத்தகத்தில் எழுதிவிட்டு, அவளை முடிந்த அளவிற்கு அவமதிக்கும் சமூகத்தில் சுயசிந்தனை எங்கிருந்து வரும்? மனைவியை மகாலட்சுமி போல மதிக்காத வீடு விளங்குமா?' என்றாள் கமலா.

'அதிகம் பேசாதே. நான் சொன்னபடி சுயமாக சிந்தனை செய்து கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்' என்றேன்.

‘காளி போல கோபம் கொண்ட பெண் தெய்வங்கள் விரித்துப் போட்ட கூந்தலோடுதான் காட்சி தருகின்றன. மனைவியின் கூந்தலை பற்றி இழுத்து வந்தவனின் உடலைப் பிளந்து கள்ளென ஊறிய குருதியை பீமன் குடித்தபின் அதை தன் கூந்தலில் நெய்யாகத் தடவி சபதம் முடித்தாள் திரௌபதி. கோவலன் மாதவி வீட்டிற்கு போனதை எண்ணி மையிருங் கூந்தலுக்கு நெய்யணி செய்ய மறந்த கண்ணகி, பாண்டியனிடம் நீதி கேட்டு சென்றபோதும், மதுரையை எரித்தபோதும் கூந்தலை விரித்துதானே போட்டிருந்தாள்? நம் ஆழ்மனதில் இவையெல்லாம் கல்வெட்டுகளாக இருக்கின்றன என்று நினைக்கிறேன்’ என்றாள் கமலா.

'அப்படியானால் விரித்து போட்ட கூந்தலோடு இருக்கக் கூடாது என்று சொல்கிறாயா?' என்று கேட்டேன்.

'நானா சொன்னேன்? மரபு அப்படி சொல்கிறது. ஆனால், எந்த கருத்திற்கும் மாற்று கருத்து இருக்கும். அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்தான் முழுமையான அறிவு கிடைக்கும். பிரம்மத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து விட்டு அதுதான் முழு பிரம்மம் என்று சொன்னால், பூரண ஞானம் எப்படி கிடைக்கும்?' என்றாள் கமலா.

'உன்னிடம் மாற்றுக் கருத்து இருக்கிறதா?' என்று கேட்டேன்.

‘சத்யவானின் உயிரைக் காப்பாற்றிய பின், கருநீல முக்காட்டால் மூடப்பட்டிருந்த தன் கருங்கூந்தல் விரிந்து அவன் கால்களை பிணைக்குமாறு பணிகிறாள் சாவித்ரி. ஊழின் இரும்புச் சங்கிலியான கர்மக்கட்டைக் கூட எளிதாக அறுத்தெறியலாம். பெண்ணின் கரும்பட்டுக் கூந்தலிடும் அன்புக் கட்டை அறுக்க அவளை பெருந்தெய்வமாக ஏற்ற ஆணால் ஒரு போதும் முடியாது. யமனின் கனத்த பாசக் கயிறு உயிரைப் பறிக்க வல்லது. பெண்ணின் மெல்லிய கூந்தல் இழையோ உயிரை காக்க வல்லது,’ என்றாள் கமலா.

'அப்படியானால் விரித்து போட்ட கூந்தலோடு இருப்பதில் தப்பில்லை என்று சொல்கிறாயா?' என்று கேட்டேன்.

'அப்படியும் சொல்லவில்லை. பிரபஞ்சத்தில் எல்லாமே இரட்டைகளாகத்தான் இருக்கின்றன. சரி, தவறு என்பது பொருளிலோ, செயலிலோ இல்லை. நோக்கத்தைப் பொறுத்து, காண்பவனின் பார்வையைப் பொறுத்து பொருளும், செயலும் சரியாகவோ, தவறாகவோ காட்சி தருகின்றன. கடவுள் ஒரு கவிஞன். இரட்டைகள் கொண்ட படைப்பில் தற்குறிப்பேற்ற அணியை பயன்படுத்தி அதன் இலக்கிய நயத்தை மனிதனே அறிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்’ என்றாள் கமலா.

'எது மெய்யோ அதை கடவுள் தெளிவாக சொல்லிவிட்டால் என்ன?' என்றேன்.

'அவனுக்கு ஆனந்தம் வேண்டாமா? எந்த கவிஞனாவது தான் எழுதும் கவிதைக்கு தெளிவுரையும், பொழிப்புரையும் எழுதுவானா? அதை மற்றவர்கள் செய்வதுதான் சரி. தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன?' என்றாள் கமலா.

‘தானாக ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்கு அர்த்தம் எதுவும் இல்லை. ஆனால், கவிஞனோ, வாசகனோ, கதாபாத்திரமோ தன் மனநிலையைக் கொண்டு அதற்கு ஒரு அர்த்தம் உருவாக்கிக் கொள்வதுதான் அந்த அணி' என்றேன்.

'இதற்கான உதாரணத்தை பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் செய்திருப்பீர்களே? நம்மூர் பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் மட்டும்தானே செய்ய வேண்டும்?' என்றாள் கமலா.

'போருழந்து எடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல மறித்துக் கைகாட்ட' என்று கடகடவென்று சொன்னேன்.

'பிரம்பை வைத்துக் கொண்டு கேட்டால்தான் அர்த்தம் சொல்வீர்களோ? அல்லது மதிப்பெண் தருவேன் என்று சொல்லவேண்டுமோ?' என்றாள் கமலா.

‘மதுரை கோட்டையின் நீண்ட மதில்களின் மேலிருக்கும் போரில் வென்றெடுத்த கொடிகள் காற்றில் படபடத்து ஆடுவது கோவலனை இங்கு வராதே என்று மறித்து கைகாட்டுவது போலிருக்கிறது' என்றேன்.

'இதையே ஒரு முத்து வணிகன் பார்த்திருந்தால், ‘வணிகம் செய்ய விரைந்து வா’ என்று கொடிகள் கையசைத்து வரவேற்பது போல அல்லவா இருக்கும்? காதலன் பார்த்திருந்தால், தன் காதலியின் கண்ணிமைகள் படபடப்பது போல் அல்லவா இருந்திருக்கும்? வாழ்க்கையில் நன்மை, தீமை என்ற எதுவுமில்லை. மனிதனின் பார்வைதான் நன்மையையும், தீமையையும் உண்டாக்குகிறது. வாழ்வு காட்டும் அறிகுறி என்பது கூட ஒருவகையான தற்குறிப்பேற்ற அணிதான். நாமெல்லோருமே கவிஞர்கள்தான். நீங்கள் தினமும் பாராயணம் செய்யும் சாவித்ரியில் இதுபோல எத்தனை தற்குறிப்பேற்ற அணி கொண்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்று தெரியுமா?' என்றாள் கமலா

'இதனால்தான் ஆண்கள் பெண்களை பேசவோ, யோசிக்கவோ விடுவதில்லை' என்றேன்.

சாவித்ரியை முதன்முதலில் வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இனி எனக்கும், அக்காவியத்திற்கும் வாழ்நாள் முழுவதும் உறவு தொடரப் போகிறது என்பது புரிந்து விட்டது. ஒரு மாநிலமொழியான தமிழில் கம்பநாடன் என்ற செவ்வியல் இலக்கிய மேதையால் எழுதப்பட்ட ராமாயணத்தைப் பற்றி எத்தனையோ அறிவாளிகள் விரிவுரைகளும், விமர்சனங்களும், கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்கள். அப்படியிருக்க உலகமொழியான ஆங்கிலத்தில் ஸ்ரீ அரபிந்தோ என்ற ஆன்மீக செவ்வியல் இலக்கிய மாமேதையால் எழுதப்பட்ட சாவித்ரியின் இலக்கிய நுட்பங்களை, செவ்வியல் நுணுக்கங்களை, மறைஞான மந்தணங்களை, ஆழ்மனப் படிமங்களை. ஆன்மீக அனுபவங்களை, யோகக் குறியீடுகளை விளக்கும் எண்ணற்ற நூல்கள் நிச்சயமாக எழுதப்பட்டிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டு எழுதப்படாத நூல்களை பல நாட்கள் தேடியலைந்தேன். மீண்டும் மீண்டும் தவறாகிப் போனாலும், மனிதன் மீது நான் கொண்டிருக்கும் தளராத நம்பிக்கைக்கு இது ஒரு உதாரணம்.

‘பட்டால்தான் புரியும் பலருக்கு. பட்டாலும் புரிவதில்லை உங்களுக்கு’ என்பது கமலா எனக்களித்த அருள்வாக்கு.

எனவே சாவித்ரியின் நுட்பங்களை புறத்தில் தேடி புளகாங்கிதம் அடைவதற்கு பதில், அகத்தில் தேடி ஆனந்தமடைய முடிவெடுத்தேன். அதன்பின் அள்ளப் பெருகும் ஆன்மீகக் கருவூலமாக சாவித்ரி மாறிவிட்டது. உலகில் பல கோடி பெண்மணிகள் இருந்தாலும், தன்னை நிலைகுலைய வைத்து முற்றிலும் வேறானவனாக ஆக்கவல்ல பெண்ணை, தனக்குரிய அந்த பெண்ணை, காதலன் தானேதான் கண்டடைய முடியும் என்பது போல, சாவித்ரியில் எண்ணற்ற வைரமணிகள் கொட்டிக் கிடந்தாலும், எனக்குரியதை நானேதான் தேடி கண்டடைய வேண்டியிருக்கிறது, எனக்காக மற்றவர்கள் காதலித்தால் எனக்கெப்படி பெருங்காதல் பேரின்பம் கிடைக்கமுடியும்?

ஒரே ஒரு முறை கூட சோர்வையோ, சலிப்பையோ சாவித்ரி தந்ததே இல்லை. சாவித்ரி மட்டுமல்ல, ஸ்ரீ அரபிந்தோவின் எல்லா எழுத்துக்களும் அப்படிப்பட்டவையாகத்தான் எனக்கு இருந்து வருகின்றன.

சாவித்ரியில் ஐந்து இடங்களில் பெண்ணின் கூந்தலைப் பற்றியும், துறவியர், கடவுளர், காந்தர்வர், அசுரர் தலைமுடி பற்றி தலா ஒரு இடத்திலும் என மொத்தம் ஒன்பது இடங்களில் கூந்தலைப் பற்றி ஸ்ரீ அரபிந்தோ எழுதுகிறார். அஸ்வபதியிடம் பேசும்போது 'மண்ணகத்தில் உலாவும் விண்ணகப் பேரெழிலின் மேகக் கூந்தலில் ஆனந்தம் உறங்குகிறது' என்று பெண்ணின் கூந்தலைப் பற்றி பரபிரம்மமே வியந்தால் நான் சொல்லற்று போவதன்றி வேறென்ன செய்ய முடியும்?

ஆனந்தத்தை மட்டுமன்றி உரிமையைப் பற்றிய உணர்வெழுச்சியையும் தலைமுடி தரவல்லது. காந்திஜி தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியா நகரில் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு நாள் தலைமுடியை வெட்டிக் கொள்ள கடைக்கு சென்றார். வெள்ளையரான கடை உரிமையாளர் இந்தியருக்கு சிகையலங்காரம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். வீடு திரும்பும் வழியில் காந்திஜி கத்திரிக்கோல் வாங்கி தன் தலைமுடியை தானே வெட்டிக் கொண்டார். மறுநாள் நீதிமன்றம் சென்றதும் 'தூங்கும்போது உங்கள் தலைமுடியை எலி கடித்துவிட்டதா?' என்று நண்பர்கள் கேலி செய்தனர். அப்போது ‘இனப்பிரச்சினையின் விளைவு இது’ என்ற காந்திஜி கடைக்காரரைப் பற்றி குறை ஒன்றும் கூறவில்லை. தனிமனிதனின் செயலை உலகின் செயலாகவே பெரியவர்கள் காண்கிறார்கள். சிறியவர்களோ உலகின் செயலை தனிமனிதனின் செயலாகத்தான் காண்கிறார்கள். அகந்தையின் ஊற்றுமுகம் அது.

‘தனிமனித செயலை உலகத்தின் செயலாக பார்ப்பது போல, தனிமனித சொல்லை, உலகின் சொல்லாகவும் பார்க்க முடியும்’ என்று ஒருமுறை கமலா கூறினாள். அவள் சொன்னபின் என்னால் எப்படி அதை மீற முடியும்? எவரும் என்னிடம் ஏதேனும் ஒரு வார்த்தை சொன்னாலும், அதை ஏணியாக வைத்து மேலேறி உலகை என் பாணியில் பார்க்க முயல்வது என்னைப் போன்ற கதை சொல்லிகளின் படைப்பூக்க இயல்பு என்று அன்று முதல் கூறிக் கொள்ள ஆரம்பித்தேன். ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருங்கடவுளாக்கும் வதந்தியாளனும் என்னைப் போன்ற படைப்பாளியே. செல்லும் திசையும், கொள்ளும் நோக்கமும்தான் கவனிக்கப்பட வேண்டியவை.

கதை, கட்டுரைகளில் மட்டுமல்லாமல் பேச்சிலும், கடிதத்திலும் படைப்பூக்கம் வெளிப்பட முடியும். சிறிது காலத்திற்கு முன்புவரை கடிதம் எழுதுவது என்பது கலையாக கருதப்பட்டது. கடித இலக்கியம் என்று ஒரு இலக்கிய பிரிவு கூட இருந்தது. நண்பர்கள் எவரேனும் என் கருத்தையோ, ஆலோசனையயோ கோரி கடிதமெழுதினால், கேள்வி கேட்பவர் என் பதிலை வாசிப்பாரா என்ற சந்தேகம் இருந்தாலும், குறுங்காவியமாக பதில் எழுதுவது என் வழக்கம்.  நான் எழுதுவது மற்றவர்களுக்காக அல்ல. என்னை அறிந்து கொள்ளத்தான் எழுதுகிறேன். வார்ப்பிலிடப்பட்ட ஜீவனற்ற பதில்களை பெற நான் விரும்புவதில்லை. எனவே அவை போன்ற பதில்களை ஒருபோதும் எவருக்கும் நான் அனுப்புவதில்லை.

போன வாரம் அப்படிப்பட்ட கடிதக் குறுங்காவியமொன்றை அணியலங்காரங்களோடு சொல்லோவியமாக தீட்டிக் கொண்டிருந்தபோது, மாட்சிமை பொருந்திய இங்கிலாந்து மகாராணி அணிவது போன்ற, முன்புறம் பூவேலைப்பாடு செய்த வட்ட வடிவ தொப்பி ஒன்றை அணிந்த இந்திய இளம்பெண் என்னை சந்திக்க வந்தாள். பெயர் ஜானகி என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.

'சார், இங்கே சாமியார் ஒருவர் இருப்பதாக சொன்னார்கள்' என்றாள் ஜானகி. அவள் பார்வை கமலாவின் கூந்தல் மீதுதான் இருந்தது, அவள் வேறெதையும் பார்க்கவில்லை.

'சாமியார் யாரும் இல்லையே, அப்படி இருந்தாலும் நீ தனியாக அவரைத் தேடி வருவது சரியில்லை' என்றேன்.

'பெயர் சமர்ப்பணன் என்றார்கள்' என்றாள் ஜானகி.

'அது நான்தான். ஆனால் நான் சாமியாரில்லை. அப்படியாகும் உத்தேசமும் இல்லை.' என்றேன்.

‘பின் ஏன் சாமியார் என்கிறார்கள்? என்று குழப்பத்துடன் கேட்டாள் ஜானகி.

புறங்கையால் வாயை மூடிக் கொண்டு சிரித்தாள் கமலா.

'எனக்கும், என் இரண்டு சகோதரர்களுக்கும் சின்ன வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காது குத்தி, மொட்டை போட்டார்கள் பெரியவர்கள். அந்த காலத்தில் டாக்டர் காது குத்த மாட்டார். நாவிதர்தான் செய்வார். அவர் காது குத்த வந்தபோது என் அண்ணன், அவரை அடித்து தள்ளி விட்டு ஓடினான். தம்பியோ தரையில் உருண்டு, புரண்டு அலறி அழுதான். நான் மட்டும் தேவாங்கு போல விழித்துக் கொண்டு எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்தேன். அதைப் பார்த்து விட்டு என் மேல் பிரியம் கொண்டவர்கள் சாமியார் என்று செல்லப் பெயர் வைத்து விட்டார்கள். என் அம்மா மட்டும் கல்லுளிமங்கன் என்று பெயர் வைத்தார்' என்று காரணப் பெயரை விளக்கினேன்.  

சிரித்தாள் ஜானகி. 'சார். உங்களோடு என் பிரச்சினை பற்றி பேச வேண்டும். உங்கள் உதவி வேண்டும்' என்றாள் ஜானகி.

'காதல் பிரச்சினை தவிர வேறு எது வேண்டுமானாலும் பேசலாம்' என்றாள் கமலா.

'காதலைப் பற்றி பேசுவதில் என்ன பிரச்சினை?' என்றாள் ஜானகி.

'காதலில் ஒரு பிரச்சினையும் இல்லை. காதலர்களிடம்தான் பிரச்சினை இருக்கிறது. காதல் மங்களகரமாக கல்யாணத்தில் முடிய வழி சொல்லித் தருவார். கல்யாணம் முடிந்த ஒரே மாதத்தில் ‘எங்கள் வாழ்க்கையை கெடுத்து விட்டீர்கள்’ என்று இவர் மேல் கோபித்துக் கொள்வார்கள்’ என்றாள் கமலா.

‘அதனால் இப்போதெல்லாம் ‘தொடர்ந்து காதல் செய்யுங்கள், முடிந்தவரை கல்யாணத்தை தள்ளிப் போடுங்கள்’ என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறேன்' என்றேன்.

மீண்டும் சிரித்தாள் ஜானகி. 'சார், நான் இப்படி சந்தோஷமாக சிரித்து பல வருடங்களாகி விட்டன. எனக்கு காதல் பிரச்சினை எதுவும் இல்லை. அப்படி ஒன்று வர வாய்ப்பும் இல்லை' என்றாள் ஜானகி. அவள் சொற்களில் துயரமும், கைவிடப்பட்ட உணர்வும் இருந்தன.

'யாருக்கு, எப்போது, என்ன வருமென்று கடவுளால் கூட உறுதியாக சொல்ல முடியாது' என்றாள் கமலா.

'எனக்கு இருபத்தியாறு வயதாகிறது. வங்கியில் வேலை பார்க்கிறேன். இன்னும் கல்யாணம் ஆகவில்லை' என்றாள் ஜானகி.

'படிப்பிலும், வேலையிலும் நிறைவு ஏற்படும் வரை இக்கால பெண்கள் கல்யாணம் செய்து கொள்வதில்லையே? முப்பதிற்கு மேல் செய்து கொள்ளலாம் என்று எத்தனையோ பேர் நினைக்கிறார்கள்' என்றாள் கமலா.

'அவர்களுக்கு கல்யாணம் ஆகாமலிருப்பது அவர்களின் விருப்பத் தேர்வு. எனக்கு கல்யாணம் ஆகாமலிருப்பது என் தலைவிதி' என்று கூறிய ஜானகி தலையில் அணிந்திருந்த தொப்பியை கழற்றினாள்.

அவள் தலை மொட்டையாக இருந்தது. தலையில் ஆங்காங்கே கூந்தல் கொத்து கொத்தாக உதிர்ந்து ஏராளமான சிறுவட்ட வழுக்கை வடுக்கள் இருந்தன. தொப்பி அணிந்திருந்த வரை மிகவும் அழகாக இருந்தவள், திடீரென வித்தியாசமான தோற்றம் தந்தாள்.

‘ஆண்களுக்கு என் மேல் காதல் வராது, இரக்கம்தான் வரும் - இப்போது உங்களுக்கு வருவதைப் போல’ என்றாள் ஜானகி.

அவளுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று எழுந்த உணர்வை அடக்கிக் கொண்டேன். 'உடலில் எந்த வகையான பிரச்சினை எழுந்தாலும் அதை அவசியம் சரி செய்யவேண்டும். உனக்கு இப்பிரச்சினை எப்போது உண்டாயிற்று?' என்று கேட்டேன்.

‘பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது ஒரு நாளிரவு உச்சித்தலையில் கொத்தாக கூந்தல் உதிர்ந்தது, ‘பரீட்சை பயத்தால் இப்படி நடக்கிறது’ என்று அம்மா ஆறுதல் சொன்னார். பரீட்சை முடிந்த பின்னாலும் கூந்தல் உதிர்வது தொடர்ந்தது, இரண்டு மாதங்களுக்குள் பெரும்பாலும் உதிர்ந்து விட்டது,’ என்றாள் ஜானகி.

'உடனே தோல் மருத்துவரிடம் போகவில்லையா?' என்றாள் கமலா.

'தலைமுடி உதிர தொடங்கிய முதல் நாளே போய்விட்டேன். டாக்டர் வைட்டமின் குறைபாடு என்று கூறி மருந்து தந்தார். பயனில்லை சில நாட்கள் கழித்து வேறு டாக்டரிடம் போனேன். அவர் ஏதோ நோயின் பெயரைச் சொல்லி, அதுவாக இருக்கலாம் என்று கூறி மருந்து தந்தார். அதன்பின் உதிர்வது இன்னமும் வேகமாக நிகழலாயிற்று, கடந்த பத்து வருடங்களில் எத்தனையோ அலோபதி டாக்டர்களை பார்த்து விட்டேன். ஹோமியோபதி, நேச்சுரோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அக்குபங்சர், அக்குபிரஷர், மூலிகை வைத்தியம், உணவு சிகிச்சை, பழ சிகிச்சை, பூ வைத்தியம் எல்லாமே பண்ணி பார்த்துவிட்டேன். எத்தனை மருத்துவர்கள், எத்தனை முறைகள்! யாரைப் பார்க்கப் போனாலும், அவர் என் பிரச்சினையை தீர்த்து விடுவார் என்று உறுதியாக நம்புவேன். எல்லா கட்டுப்பாடுகளையும் சிறு தவறுமின்றி பின்பற்றுவேன். என் இளமையின் பெரும்பகுதியை சிகிச்சைகளில்தான் செலவழித்துவிட்டேன்.’ என்றாள் ஜானகி.

‘விரக்தியோ வெறுப்போ வரவில்லையா?’ என்று கேட்டேன்

‘இல்லை. வருமானமில்லாத அப்பாவால், அம்மாவின் சொற்ப நகைகளை விற்றுதான் சிகிச்சைக்காக செலவு செய்ய முடிந்தது. நானும், என் மூன்று தங்கையரும் படித்து முடித்து வேலைக்கு வந்த பின்தான் ஓரளவிற்கு நல்ல நிலையில் இருக்கிறோம். என் குடும்பத்தினர் எவருக்கும் இனி நல்லது நடக்குமென்ற நம்பிக்கை இல்லை. ஆனால் நான் நம்பிக்கையை ஒருபோதும் இழக்க மாட்டேன். என் பிரச்சினையை ஏதோ ஒன்று தீர்க்கப் போகிறது என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கிறது. அது மருந்தாக இருக்கலாம். மந்திரமாகவும் இருக்கலாம். தீர்வு எந்த ரூபத்தில் வரும் என்று யாரால் சொல்ல முடியும்?’ என்றாள் ஜானகி.

'இதுதான் காரணம் என்று எவரும் கண்டுபிடிக்கவில்லையா?' என்று கேட்டாள் கமலா.

'ஒவ்வொருவரும் ஒரு காரணம் கண்டுபிடித்தார். ஆனால் எந்த சிகிச்சையும் பயன் தரவில்லை. நான் போன கோவில்களுக்கும், ஆசி வாங்கிய சாமியார்களுக்கும், ஆலோசனை கேட்ட ஜோதிடர்களுக்கும் எண்ணிக்கை கணக்கு சொல்வது சிரமம்' என்றாள் ஜானகி.

'என்னால் உனக்கு எந்த வகையில் உதவ முடியும் என்று நினைக்கிறாய்?' என்று கேட்டேன்.

‘உங்களிடம் என்னை அனுப்பியவர், நீங்கள் சகலரோக நிவாரணி வைத்திருப்பதாகச் சொன்னார்' என்றாள் ஜானகி.

‘அனைத்து திறன்களும் கொண்ட மருத்துவர் நம்முள் இருக்கும் ஆன்மா மட்டுமே; அதனிடம் உடலை ஒப்படைப்பதுதான் உண்மையான சகலரோக நிவாரணம்’ என்றேன்.  

'எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். கேட்கிறேன். என் கூந்தல் பிரச்சினை குடும்பப் பிரச்சினையாக மாறி விட்டது' என்றாள் ஜானகி.

'சிகிச்சை செலவு பற்றி வருத்தப்படுகிறார்களா?' என்று கேட்டேன்.

'இல்லை. எனக்காக எல்லோருமே தங்கள் தேவைகளை விட்டு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது வேறு வகையான பிரச்சினை. கல்யாண வயதில் நான்கு நல்ல பெண்கள் இருந்தால் பெண் கேட்டு வரத்தானே செய்வார்கள்? பெரியவர்களும் பெண்களுக்கு சீக்கிரமாக கல்யாணம் செய்து வைத்துவிடுவது நல்லது என்று நினைக்கிறார்கள். பெண் கேட்டு வருபவர்கள் என் தங்கையரை விரும்புகிறார்கள். என் தங்கைகள் எனக்கு முதலில் கல்யாணமாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அம்மாவும், அப்பாவும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால். இப்போது நடைமுறை சாத்தியம் எதுவோ, அதை பின்பற்றலாம் என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். சொத்தில்லாத குடும்பத்தில் பெண்ணின் அழகும், இளமையும், வேலையும்தானே அவளுக்கு நல்ல மாப்பிள்ளையை வென்று பெற்றுத் தரும் ஆயுதங்கள்? அதனால் என்னால் ஏற்படும் காலத் தாமதம் எல்லோருக்கும் சங்கடத்தைத் தருகிறது.' என்றாள் ஜானகி.

'அடுத்தவர்கள் சங்கடத்தை பற்றியே பேசுகிறாய், உனக்கு மனவருத்தம் இல்லையா?' என்று கேட்டேன்.

'இல்லாமலிருக்குமா?' என்ற ஜானகி சிறிது நேரம் பேசாதிருந்தாள். மீண்டும் அவள் பேசியபோது குரல் தழைந்து தளுதளுக்கத் தொடங்கியது.

'காருக்கோ, நகைக்கோ, காதலுக்கோ, கல்யாணத்திற்கோ நான் ஆசைப்படுவதில்லை, என் ரகசிய ஆசை நீளமான ஜடை போட்டு அதில் நெருக்கக் கட்டிய இரண்டு முழம் மல்லிகைப் பூச்சரத்தை சூடிக் கொள்ள வேண்டும் என்பதுதான். என் ஆசைகள், கற்பனைகள் எல்லாமே கூந்தல் சம்பந்தப்பட்டதுதான். குளிக்கும்போது ஷாம்பூ போட ஆசைப்படுவேன். தங்கைகளுக்குத் துணையாக சிகையலங்காரக் கடைகளுக்குப் போனால், எனக்கு விதவிதமாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்வது போல வரவேற்பறையில் உட்கார்ந்து கற்பனை செய்வேன். இந்தியாவில் பழங்காலத்திலிருந்து இன்றுவரை என்னென்ன கூந்தல் அலங்காரமுறைகள் இருந்தன என்று எனக்கு நன்றாகத் தெரியும். பகுதி நேர படிப்பின் மூலம், கூந்தல் அலங்காரத்தில் சான்றிதழே வாங்கியிருக்கிறேன். நன்றாகவே அலங்காரம் செய்வேன்’ என்றாள் ஜானகி.

'பின் ஏன் தங்கைகள் கடைக்கு போகிறார்கள்?' என்றேன்.

'அவர்களைத்தான் கேட்க வேண்டும். ஒருவேளை என் கைப்படுவது ராசியில்லை என்று நினைக்கிறார்களோ?' என்றாள் ஜானகி.

'பிரச்சினை என்ன, அதற்கு எது நல்ல தீர்வு என்ற தெளிவு உன்னிடம் உண்டா?' என்று கேட்டேன்.

'கூந்தல் இல்லாதிருப்பது என் பிரச்சினை. அது நன்றாக வளர வேண்டும் என்பதுதான் தீர்வு' என்றாள் ஜானகி.

'நீளமான தலைமுடியை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?' என்றேன்.

'பெண்ணிடம் கேட்கும் கேள்வியா இது?' என்றாள் ஜானகி.

'உன் வருத்தம் எனக்கு புரிகிறது. ஆனால் நான் கேட்டதை பற்றி யோசி. தெளிவு வந்தால் பிரச்சினை தீர்ந்தது போல' என்றேன்.

'சரி. செய்கிறேன், அது போதுமா?' என்று கேட்டாள் ஜானகி.

'இன்னும் மூன்று விஷயங்கள் செய்ய வேண்டும். எனக்கு குருவாக இருந்தவர் தலைக்கு தைலம் ஒன்றை தயாரிக்கும் முறையை சொல்லித் தந்திருக்கிறார். தயாரிப்பு முறை இரண்டாயிரம் வருடங்களாக ரகசியமாக இருந்து வரும் முறை. அந்த தைலத்தை உனக்குத் தருகிறேன், தினமும் இரண்டு முறை பூசு. மந்திரம் எழுதிய காகிதம் இருக்கும் பேழை ஒன்றைத் தருகிறேன். அதை தூங்கும்போது தலையணைக்கடியில் வைத்துக் கொள். மணிக்கொரு முறை சில வினாடிகள் நெஞ்சிற்கு நடுவில் இருந்து வெண்ணிற ஒளி எழுந்து தலையில் படர்வது போல கற்பனை செய்து கொள். அலோபதி டாக்டர் கொடுத்த மருந்து தவிர பிற எல்லாவற்றையும் நிறுத்தி விடு' என்றேன்.

‘மணிக்கொரு முறை என்னவென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்?’ என்று கேட்டாள் ஜானகி.

'பிரார்த்தனை என்றால் நாம் விரும்பியதை கேட்பது, சமர்ப்பணம் என்றால் இறைவன் தர விரும்புவதை பெறத் தயாராவது. தலையில் ஒளி படர்வது போல நினைத்துக் கொள். எது நடக்கட்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அது நடக்கட்டும்' என்றேன்.

‘ஒரு நாளைக்கு எத்தனை முறை சமர்ப்பணம் செய்ய வேண்டும்?’ என்று கேட்டாள் ஜானகி.

‘உனக்கு எத்தனை முறை ஒத்துவரும் என்று நீயே முடிவு செய்து கொள். அதை அப்படியே பின்பற்று. ஆரம்பத்தில் உற்சாகமாக செய்வோம். மெல்ல மெல்ல ஒரு முறைமைக்காக ஜீவனே இல்லாமல் செய்ய ஆரம்பிப்போம். அதில் கவனமாக இருக்க வேண்டும். காதலரை முதல்முறை பார்க்கும்போது என்ன உணர்வு ஏற்படுகிறதோ, அதே புத்துணர்வோடு அவரை கல்யாணம் செய்து பத்து வருஷங்கள் கழித்தும் பார்க்க முடியுமா? அது முடியுமென்றால் மணிக்கொரு சமர்ப்பணம் பலிக்கும்.’ என்றேன்.

'மறந்து விட்டால் என்ன செய்வது?' என்று கேட்டாள் ஜானகி.

'காதலையா?' என்று கேட்டாள் கமலா.

'இல்லை, சமர்ப்பணத்தை' என்றாள் ஜானகி.

'தீவிரம் இருந்தால் மறக்காது. பல சமயங்களில் சமர்ப்பணமே தன்னை உனக்கு நினைவுபடுத்தும். தீவிரம் இல்லையென்றால் கடிகாரத்தை பார்த்துக் கொள். போதாது என்றால் அலாரம் வைத்துக் கொள்' என்றேன்.

'புனிதமான விஷயத்திற்கு ஜடமான அலாரத்தை உபயோகிக்கலாமா?' என்றாள் ஜானகி.

'அலாரம் புனிதமற்றது என்று உனக்கு யார் சொன்னது? இங்கு எல்லாமே பிரம்மம் என்றானபின் அலாரம் மட்டும் என்னவாம்? ஜானகி, நம்மிடம் இருக்கும் ஆர்வமும், சத்தியமும் மட்டும்தான் சமர்ப்பணம் செய்ய என்றும் நமக்கு உதவக் கூடியவை. மற்றவை இருந்தாலும், இல்லாமல் போனாலும் பொருட்படுத்த வேண்டியதில்லை' என்றேன்.

'சமர்ப்பணம் நல்ல தீர்வைத்தானே தரும்?' என்று கேட்டாள் ஜானகி.

'தேடி வரும் தீர்வு நல்லதாகத்தான் இருக்கும். நீ விரும்புவது போலிருக்குமா என்று தெரியாது. உனக்கு பிடிக்காததாகக் கூட இருக்கலாம்' என்றேன்.

‘சமர்ப்பணம் பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்டால் அது யோகம் சம்பந்தப்பட்டது போலிருக்கிறது. அதை சில்லறை பிரச்சினையை தீர்க்கவா பயன்படுத்துவது?’ என்று கேட்டாள் ஜானகி.

‘நாம் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டு அதை எதற்கு வேண்டுமானலும் பயன்படுத்த முயற்சி செய்யலாம். அதை செய்ய நமக்கு உரிமை உண்டு. நாம் செய்வது ஏற்கப்படுவதும், பூர்த்தி செய்யப்படுவதும் நம் வசத்தில் இல்லை. எது நம் முன்னேற்றத்திற்கு ஏற்றதோ, அதுவே நடக்கும்’ என்றேன்.

'மணிக்கொரு முறை மனதில் சில வினாடிகள் நினைத்தால் பிரச்சினை தீரும் என்கிறீர்களே. இது எப்படி நிகழ்கிறது?’ என்று கேட்டாள் ஜானகி.

'மனம் முடிவில்லாமல் ஓடும் முடுக்கிவிடப்பட்ட யந்திரம். எதையாவது திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருக்கும். தான் வேறு, பிறர் வேறு என்று ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டே இருக்கும். அந்த பிரிவினை உணர்வுதான் அகந்தைக்கு பலம் தரும் உணவு. சமர்ப்பணம் செய்யும்போது சில வினாடிகளாவது பிரம்மத்தை நினைக்கிறோம். அப்போது பிரிவிலிருந்து விலகி, மனம் சிறிது நேரம் இணைவில் நிற்கிறது. அதுவே பிரச்சினை தீர போதுமான சக்தியைத் தருகிறது’ என்றேன்.

'மணிக்கொரு சமர்ப்பணம் செய்து அகந்தையை அழிக்க முடியாதா?' என்று கேட்டாள் ஜானகி.

'மனிதனால் உலகில் எதையும் அழிக்க முடியாது. ஒன்றை மற்றொன்றாக மாற்றத்தான் முடியும். அதனால்தான் வீண் என்பதே இல்லை என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். வெள்ளம் பெருகினால் நதிக்கரைகளை உடைத்துவிடும். அணை கட்டினால், வெள்ளநீர் வறண்ட பூமியில் விவசாயம் செய்ய உதவும். ஆனால். அணையால் வெள்ளத்தை இல்லாமல் போகும்படி செய்துவிட முடியாது. மணிக்கொரு சமர்ப்பணம் அகந்தையால் உண்டாகும் பிரச்சினைகளை தீர்க்க உதவுமே தவிர, அகந்தையை மாற்ற பயன்படாது. அதை செய்ய நீ யோகியாக மாற வேண்டும்' என்றேன். 

எழுந்த நின்ற ஜானகி 'நீங்கள் சொல்லியபடி மணிக்கொரு சமர்ப்பணம் செய்கிறேன்' என்றாள்.

'உண்மையில் சமர்ப்பணத்தை விரும்புவதும், செய்வதும் நமக்குள் இருக்கும் சைத்தியம்தான். எங்கும், எதுவுமாக இருக்கும் ஆதியான்மா, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளரும் ஆன்மா என்ற ரூபத்தில் மறைந்திருக்கிறது. அதுவே சைத்தியம். அதன் செயல் சமர்ப்பணம். அதன் மொழி மௌனம். சமர்ப்பணம் செய்யப் போவது ஜானகி இல்லை. அவளது ஆன்மா' என்றேன்.

'இன்னும் சிறிது நேரம் இருந்தாயானால், ‘நான் ஜானகியோடு பேசவில்லை, பிரம்மத்தோடு பேசுகிறேன்’ என்பார். அதன்பின், ‘நான் பிரம்மத்தோடு பேசவில்லை. என்னோடுதான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான்தானே பிரம்மம்’ என்று சொல்வார்' என்றாள் கமலா.

நான் தந்தவற்றை சிரித்தபடி தன் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு விடைபெற்றாள் ஜானகி.

அவள் போனபின்பு ‘நீங்கள் எப்போது மருத்துவமும், மாந்திரீகமும் கற்றுக் கொண்டீர்கள்?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் கமலா.

'சற்று முன்புதான். ஜானகி பேசப் பேச கற்றுக் கொண்டுவிட்டேன்' என்றேன்.

‘சாமியார், மருத்துவராகி, மந்திரவாதியும் ஆகிவிட்டாரா?' என்றாள் கமலா.

'அலோபதி டாக்டர் நம்பிக்கை மருந்து கொடுத்தால் பிளாசிபோ நிபுணர் என்று பாராட்டுகிறீர்கள். நான் தைலமும், மந்திரமும் கொடுத்தால் கேலி செய்வீர்களோ?' என்றேன்.

சிரித்தாள் கமலா. நிஜமான மருந்தைத் தராமல், வெறும் வண்ண நீரை சிறந்த மருந்து என்று தந்து, நம்பிக்கை மூலம் குணப்படுத்த முயலும் பிளாசிபோ முறை நல்ல சிகிச்சை முறை என்று சில மருத்துவர்கள் நம்புகிறார்கள். பல மருத்துவர்கள் அதை ஏற்பதில்லை.

அதன்பின் நான் மீண்டும் கூந்தலை பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்து விட்டேன்.

'என் கூந்தலைப் பார்க்கும்போதெல்லாம் ‘காரிருங் கூந்தல், குழல்போல் கமழும் மதுமலரே, கருங்குழல் போல் உளவோ விரைநாறுங் கடிமலரே’ என்று பழைய பாண்டிக்கோவையை பாடுகிறீர்கள். எனக்கு வயதாகி நரைத்து விட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டாள் கமலா. 'நரை வந்தாலும் நீளமும் அடர்த்தியும் குறையுமா என்ன? அப்போது உன்னை ‘நன்னெடுங் கூந்தல் நரை மூதாட்டி’ என்று சீத்தலை சாத்தனார் போல அழைப்பேன்' என்றேன்.

கூந்தல் உதிர்வது ஒரு பிரச்சினை என்றால் நரை ஏற்படுவது மற்றொரு பிரச்சினை. நரை விழாதவர்கள் உலகில் உண்டா? குருவின் பெருந்தன்மையை தவறாகப் பயன்படுத்தும் சீடன் நல்லவன் போல வேடமிட்டாலும், அவன் பூசிக் கொள்ளும் சாயம் சத்தியத்தின் முன் வெகு விரைவில் வெளுத்துவிடுவதைப் போல, நரைக்கு எந்த சாயம் பூசிக் கொண்டாலும் சீக்கிரம் வெளுத்து விடுகிறதே? நரை என்றதுமே பிசிராந்தையார்தான் நினைவிற்கு வருகிறார்.

பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் காணாமலே நட்பு கொண்டவர்கள். இன்றைய இணைய உலகில் எல்லா நட்புகளும் அப்படிப்பட்டவைதானே, இதிலென்ன சிறப்பு? ஒரே ஒரு வேறுபாடுதான். கோப்பெருஞ்சோழன் உயிரை விட்டபோது பிசிராந்தையாரும் தன்னுயிரை விட்டு விட்டார். இந்த பிசிராந்தையாருக்கு வயதான காலத்திலும் நரையே வரவில்லை. 'என்ன ரகசியமது' என்று என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்க விரும்பியவர்கள் கேட்டபோது 'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்?' என்ற புகழ்பெற்ற புறநானூற்று பாடலைப் பாடினார். 'என் மனைவி, மக்கள், சகோதரர்கள், தலைவர், ஊர்மக்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பதால் எனக்கு கவலை என்பதே இல்லை. தலைமுடியும் நரைக்கவில்லை' என எல்லோரையும் நல்லவர்களாக காண்பதுதான் அவரது ரகசியம். பிசிராந்தையாரின் கருத்தை சிறிது மாற்றி ‘எல்லாவற்றையும் பிரம்மமாக நினைப்பவரின் உலகில் ஆனந்தம் மட்டும்தான் இருப்பதால் அமரத்துவமும், இளமையும் அவருடன் என்றும் இருக்கும்’ என்று எனக்கு ஒத்து வருமாறு அமைத்துக் கொண்டேன்.      

இன்று எங்களை மீண்டும் சந்தித்தபோது ஜானகி தொப்பி அணிந்திருக்கவில்லை.

'முன்கூட்டி சொல்லாமலே வந்து விட்டேன்' என்றாள் ஜானகி.

'அதிர்ஷ்டம் அப்படித்தானே வரும்?' என்றேன்.

'தொந்தரவும் அப்படித்தானே வரும்?’ என்றாள் ஜானகி.

‘தொந்தரவு என்பது முகமூடி போட்ட அதிர்ஷ்டம் என்று இவர் சமாதானம் சொல்வார்' என்றாள் கமலா.

சிரித்தேன். நான் கொடுத்த தைலபுட்டியையும், மந்திரப்பேழையையும் திருப்பித் தந்தாள். 'இனி இவை தேவையில்லை' என்றாள்

'வாங்கிய பொருட்களை திருப்பித் தர முடியும். பெற்ற அறிவை திருப்பித் தர முடியுமா?' என்றேன்.

'அது முடியாதுதான்' என்றாள் ஜானகி.

'ஆனால் உனக்கு சொல்லித் தந்ததன் மூலம் இவருக்கு அறிவு அதிகமாகி கணக்கு சரியாகிவிட்டது' என்றாள் கமலா.

'உங்கள் கணக்கு தப்பு. நீங்கள் தந்ததன் மதிப்பு உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எனக்கும், வாழ்க்கைக்கும் தெரியும். போன வாரம் வீடு திரும்பியபின் எது உண்மையான பிரச்சினை என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். போன வருடம் கூட தலைமுடி வளர்வதுதான் தீர்வாக இருந்திருக்கும். இன்றைய என் குடும்ப சூழ்நிலையில் எனக்கு திருமணம் நடப்பதுதான் தேவைப்படும் தீர்வு. தங்கைகளுக்கு வரதட்சணை கேட்காத நல்ல வரன்கள் வருகின்றன. எனக்கு திருமணம் ஆகுமா என்றே தெரியாத நிலையில், என் பொருட்டு அந்த வரன்களை வேண்டாம் என்று கூறுவது சரியில்லை. திருமணமே வேண்டாம் என்று கூற எனக்கு மனமில்லை.  அதனால் நீங்கள் சொன்ன மணிக்கொரு சமர்ப்பணத்தை வேறு வகையாக செய்தேன்’ என்றாள் ஜானகி.

'நாளுக்கொரு சமர்ப்பணமாக்கி விட்டாயா?' என்று கேட்டேன்.

‘இல்லை. கூந்தல் வளர வேண்டும் என்று சொல்வதற்கு பதில், நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று மட்டும் மணிக்கொரு முறை சொல்ல ஆரம்பித்தேன். மிகவும் ஆர்வத்தோடு செய்தேன். சில முறைகள் செய்தபின் எனக்கும் சமர்ப்பணத்திற்கும் நெருக்கமான நட்பு உண்டாகிவிட்டது. ஒரு சமர்ப்பணம் முடிந்ததுமே, அடுத்தது எப்போது வரும் என்று காத்திருக்கும் அளவிற்கு நெருக்கம் வந்து விட்டது. அடுத்த நாள் என் பிரச்சினை, என் கவலை, எல்லாமே மிகவும் அற்பமானவையாக தெரிந்தன. நான் பல பிறவிகளில் செய்த கடுமையான நீண்ட தவங்களின் சாரம், ஒவ்வொரு முறையும் எளிதாக எனக்குக் கிடைப்பது போலிருந்தது. ஒரு கதையில் சிறியதன் பின்னிருக்கும் பெரியது பற்றி ஏதோ எழுதியிருந்தீர்களே?' என்றாள் ஜானகி.

'உமிக்குள் உலகம், அணுவிற்குள் அகிலம், புள்ளிக்குள் பிரபஞ்சம் என்று எதுகை, மோனையோடு எதையாவது எழுதியிருப்பார்' என்றாள் கமலா.

'மணிக்குள் யுகம். அப்படித்தான் உணர்ந்தேன். ஒரு மணி தவம் ஒரு யுக தவத்திற்கு நிகராகத் தோன்றியது. முதலில் மாறும் காலத்தில் நின்று கொண்டு மாறாத காலமின்மையை கவனிக்க முடிவது போல ஒரு பிரமை. அதன்பின் காலம், காலமின்மை என்ற இரண்டு குதிரைகளையும் பூட்டிய ரதத்தில் ஊர்வலம் வருவது போல வேறொரு பிரமை. மணியைப் பார்க்கும் போதெல்லாம் காலத்தில் இருக்கும் உணர்வு வருகிறது. சமர்ப்பணத்தை பற்றி நினைக்கும்போதெல்லாம் காலமற்று போவது போலிருக்கிறது. மணிக்கொரு சமர்ப்பணம் காலத்தையும், காலமின்மையையும் இணைக்கும் குறியீடாகத் தோன்றுகிறது’ என்றாள் ஜானகி. 

'ஜானகி சொல்வதைக் கேட்டால் எனக்கும் மணிக்கொரு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. அதைப் பற்றி இப்போதுதான் எனக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது' என்றேன்.

'கடவுளே' என்று கமலா தலையில் கை வைக்க, ஜானகி சிரித்தாள்.

‘நான் சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்து நான்கு நாட்கள் கழித்து எனக்கு ஒரு வரன் வந்திருப்பதாகவும், மறுநாளே பெண் பார்க்க வருவதாகவும் சொன்னார்கள். வரன் கொண்டு வந்தவர் என் சித்தப்பா. அவரும் என் அப்பா போலவே வேலையில்லாதவர். அவருடைய ஒரே பெண்ணுக்கு நான்தான் எங்கள் வங்கி வாடிக்கையாளர் மூலம் நல்ல வேலை வாங்கித் தந்தேன். அதனால் அவருக்கு என் மீது பிரியம் அதிகம். ‘தலைமுடி பற்றி எதுவும் சொல்ல வேண்டாம், பெண் பிடித்திருந்தால் சாவகாசமாக சொல்லிக் கொள்ளலாம். பேசுகிற விதத்தில் பேசி சரிகட்டிவிடலாம்' என்றார் சித்தப்பா எனக்கு அது பிடிக்கவில்லை’ என்றாள் ஜானகி.

'ஏன்?' என்று கேட்டேன்.

'பொய்யால் கிடைப்பது பொய்யாகவே மறைந்துவிடும் என்பது என் நம்பிக்கை. ஆனால் பெண்ணை கேட்டுக் கொண்டா பெரியவர்கள் எதையும் செய்கிறார்கள்?’ என்றாள் ஜானகி.

‘கோழியைக் கேட்டுக் கொண்டா மசாலா அரைக்க முடியும்?’ என்று கேட்டாள் கமலா.

‘சித்தப்பாவின் யோசனைப்படி முதல் தங்கை மூன்றாயிரம் ரூபாய் கொடுத்து இரண்டடி நீளமுள்ள போலி கூந்தல் வாங்கி வந்தாள். அந்த விக்கை வைத்து அலங்காரம் பண்ணியதும் அழகாகவே இருந்தேன். பெண் பார்க்க வந்தவரின் அப்பா, அம்மாவிற்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. அவர் முகமோ உணர்ச்சியற்று இருந்தது, எதுவும் சொல்லாமல் அவர் விடை பெறும்போது 'உங்களோடு தனியாக சிறிது பேச வேண்டும்' என்றேன். 'சரி' என்றார். நாங்கள் இருவர் மட்டும் மொட்டை மாடிக்கு சென்றோம்.’ என்றாள் ஜானகி.

'அப்புறம்?' ஆர்வத்துடன் கேட்டாள் கமலா.

‘அவரிடம் 'எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது, உங்கள் வீட்டு பெரியவர்களுக்கு என்னை பிடித்திருக்கிறது. உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.  நீங்கள் வீடு திரும்பியதும் உங்கள் சம்மதம் கேட்டு எல்லோரும் வற்புறுத்துவார்கள். ஆனால் நீங்கள் சம்மதிக்க வேண்டாம்’ என்றேன். அவர் சிறிது திகைத்துவிட்டு 'வேறு யாரையாவது விரும்புகிறாயா?' என்று கேட்டார். 'இல்லை' என்றேன். 'என்னை பிடிக்கவில்லையா?' என்று கேட்டார். 'மிகவும் பிடித்திருக்கிறது. அதனால்தான் என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம் என்கிறேன்' என்றேன். 'ஏன்?' என்று கேட்டார் அவர்’ என்றாள் ஜானகி.

‘எனக்கும் புரியவில்லை’ என்றேன்.

‘என் போலி கூந்தலை எடுத்துக் காட்டினேன். 'பிறர் வற்புறுத்தலுக்காக இதை போட்டுக் கொண்டேன். நீங்கள் எந்த முடிவும் எடுக்குமுன் உங்களிடமும், மற்றவர்களிடமும் இதை பற்றி சொல்லிவிட நினைத்துக் கொண்டிருந்தேன். அவ்வளவுதான் நான் சொல்ல நினைத்தது.' அவர் சிரித்தார். 'முதலில் உன்னை பிடிக்கவில்லை. இப்போது மிகவும் பிடிக்கிறது' என்றார். 'புரியவில்லை' என்றேன். 'நீ போலி கூந்தல் வைத்து பொய்யான தோற்றம் தந்து ஏமாற்றப் பார்க்கிறாய் என்று நினைத்தேன்.' என்றார். 'என் கூந்தல் போலி என்று எப்படித் தெரியும்?' என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். 'உன் சித்தப்பாதான் சொன்னார். உன் குடும்பமே ஏமாற்றும் குணம் கொண்டது என்றும், அதற்கு உன் போலி கூந்தல் ஆதாரம் என்றும் கூறினார். கூடவே தன்னுடைய பெண்ணும் திருமணத்திற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்' என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது’ என்றாள் ஜானகி.

'இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?' என்றாள் கமலா.

‘நெருங்கிய உறவுள்ள மனிதர்கள் இப்படியும் நடந்து கொள்வார்கள் என்று நான் நினைத்ததே இல்லை. அவர் 'நான் சினிமா துறையில் வேலை செய்கிறேன். அழகின் மதிப்பு என்ன, உண்மையின் மதிப்பு என்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும். உன்னை கல்யாணம் செய்து கொள்ள எனக்கு முழு சம்மதம். உனக்கு சம்மதமா?' என்று கேட்டார். 'யோசித்து சொல்கிறேன்' என்றேன் சிரித்துக் கொண்டே. 'ஜானகி, கூந்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் கண்களுக்கு நீ பேரழகியாக இருக்கிறாய்' என்று கூறியபடி என் போலி கூந்தலை பறித்து வீசி எறிந்து விட்டார். நான் மொட்டை மாடியிலிருந்து கீழே வந்த கோலத்தை பார்த்து எல்லோருமே திகைத்து விட்டனர். அவர் தன் பெற்றோர்களுடன் சிறிது நேரம் பேசினார். அதன்பின், அப்போதே எங்கள் கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டது' என்றாள் ஜானகி.

ஜானகி விடைபெற்று செல்லும்போது கமலா சைகை காட்டினாள். அப்போதுதான் ஜானகியின் தலையில் பல இடங்களிலும் லேசாக கூந்தல் துளிர்த்திருப்பதை கண்டேன்.

‘ஜானகி அதை கவனிக்கவில்லையா? அல்லது பொருட்படுத்தவில்லையா?’ என்றேன்.

'அது எனக்கெப்படித் தெரியும்?' இரட்டை ஜடைகளில் இடப்பக்க ஜடையை மார்பின் மீது தவழ விட்டு, வலப்பக்க ஜடையின் கனத்த முனையை குழந்தை கம்பி மத்தாப்பை சுழற்றுவது போல சுழற்றியபடி கேட்டாள் கமலா.

(முற்றும்)

* * * *

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms