மாங்கனி

(கவி காசிதாஸ் வங்காள மொழியில் எழுதிய மகாபாரதத்தில் சத்தியத்திற்கு கட்டுப்படும் ஜடமான மாங்கனியின் கதை உள்ளது. ஆண்டுக்கொரு முறை தோன்றும் நாவல்கனி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் மாங்கனி என இதன் சற்றே மாறுபட்ட வடிவங்கள் ஒரிய மொழியிலுள்ள சரள மகாபாரதத்திலும், தமிழ்மொழியிலுள்ள வில்லி பாரதத்திலும் உள்ளன. பல்வேறு மொழிகளிலும் சிறு பாடபேதங்களோடு இக்கதை வாழ்ந்து வந்தாலும், மூலம் எது என எங்கும் குறிப்பிடப்படவில்லை. வியாச மகாபாரதத்தில் இக்கதை இப்போது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்ததா என்று தெரியவில்லை. கதை சிறப்பாக அமையுமாயின் அப்பெருமை மகாபாரதத்திற்கும் அதை பதிவு செய்த மூதாதையருக்கும் உரியது.
பிழைகளுக்கு நானும், என் அறியாமையுமே முழு பொறுப்பு.)

பலகோடி ஆண்டுகளாக பசுமையை மட்டுமே அறிந்திருந்த வனங்கள், பகடையாடித் தோற்ற பாண்டவர்களின் பாதங்கள் பட்டபின் மெல்ல மெல்ல பசுமையிழந்து, பத்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் வறண்டுவிட்டன. பழிவாங்கும் வெறி அணைக்கமுடியாத காட்டுத்தீயாக பாண்டவர்களின் அகத்தில் எரிந்து கொண்டே இருந்தது. தீயாக எரியும் ஆண்மையை, நீராக மாறும் பெண்மையால் தணித்து, அணைத்து விட முடியும். ஆனால் பாண்டவர்களின் பழிவெறி நெருப்பை ஓங்கி வளர்க்கும் எரிநெய்யாக அவிழ்ந்த கூந்தலுடன் திரௌபதி, யக்ஞசேனி, கிருஷ்ணை, பாஞ்சாலி இருந்து வந்தாள்.

மனிதர்களின் மனவெப்பத்தோடு தணியாத கோபம்கொண்டுவிட்ட கதிரவனின் கடும்வெப்பமும் சேர்ந்ததால் வனங்களிலிருந்த செடிகளும், கொடிகளும், மரங்களும், கருகி மழை குறைந்தது. மழை குறைந்ததால் வனங்கள் மேலும் வறண்டன. உணவையும், நீரையும் இழந்துவிட்ட புள்ளிமான்கள் துள்ளியோடும் சக்தியை இழந்து தள்ளாடி நடந்தன. இம்மான்களை வேட்டையாடினாலும் வறண்ட தோலும், எலும்புக்கூடுமே கிடைக்கும் என்பதை அறிந்துவிட்ட புலிகள் உறுமலோடு பாய்ந்து கொல்லும் தெம்பிழந்து ஊர்ந்தன. பசி, தாகம், வெப்பம், வெறுமை, இயலாமை மட்டுமே வனமெங்கும் வாழ்ந்தன.

'இது என்ன இடம்? பிற வனங்களை விட அதிக வறட்சியுடன் இருக்கிறதே' என்றாள் திரௌபதி.

'அருகே துறவி எவரேனும் தவமியற்றிக் கொண்டிருப்பார். வேறு காரணமிருக்க வாய்ப்பில்லை' என்றான் சகாதேவன்.

எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் அவர்கள் மேலும் நடந்தனர்.

'சுவையான கனியின் வாசம் என் நாசியைத் தொடுகிறது. என் நாவில் நீர் ஊறுகிறது' என்றான் பீமன்.

சிரித்தான் யுதிஷ்டிரன். 'இத்தனை துன்பத்தில் பித்தர்களாகிவிடாமல் நம்மைக் காப்பது பீமனின் நகைச்சுவையே' என்றான்.

அனைவரும் சிரித்தனர்.

பார்த்தன் சிரித்தாலும் கண்களை சுருக்கி வெகுதூரத்தில் இருப்பவற்றை கூர்ந்து பார்த்தான். ‘ஒரே ஒரு மாங்கனியோடு மரமொன்று செழித்து நிற்கிறது’ என்றான். அவன் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

'ஒரே ஒரு கனிதானா' என்று கவலையோடு கேட்ட பீமன் அர்ச்சுனன் பார்த்த செல்திசையில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்.

மரத்தை நெருங்கியதும் அதன் உச்சிக் கிளையில் மிகப் பெரிய பொன்னிற மாங்கனி ஒன்று பழுத்து கீழே விழும் நிலையில் தொங்கிக் கொன்டிருந்ததை அனைவரும் கண்டனர்.

வலக்கையை கனியை நோக்கி நீட்டினாள் கிருஷ்ணையான திரௌபதி. 'பசியால் மழுங்கிப் போன பசியுணர்வு, கனியைக் கண்டதும் உயிர் பெறுகிறது. கனி எனக்குக் கிடைக்குமா?' என்றாள் திரௌபதி.

பாஞ்சாலி கூறியதை பிறர் புரிந்து கொள்ளுமுன்னே அவளது நீட்டிய வலக்கையில் மாங்கனி விழுந்தது. திரௌபதி தன் ஆசையை வெளியிட்டு முடிக்குமுன்பே செயல்பட்டு விட்டான் பார்த்தன். அவன் வில் எடுத்ததையோ, கணை தொடுத்ததையோ, சரம் சீறிச் சென்றதையோ, அது கனியைக் கொய்ததையோ எவரும் காணவில்லை. திரௌபதியின் கையில் விழுந்த மாங்கனியையே அனைவரும் கண்டனர்.

அர்ச்சுனனைப் பார்த்து திரௌபதி பிரியத்துடன் புன்னகைத்தாள்.

யுதிஷ்டிரனின் மனம் குரோதத்தால் ஒரு கணம் நிரம்பியது. 'என்றும் திரௌபதிக்கு விஜயனே பிரியமானவன். அப்பிரியம் குறைந்து விடாதபடி விஜயனும் கவனமாக இருக்கிறான். மற்றவர்களை அவள் கணவர்களாக மதிப்பது அன்னையின் ஆணையை ஏற்குமாறு விஜயன் கூறியதனால் மட்டுமே. தன் சகோதரர்களுக்கு பார்த்தன் இட்ட பிச்சை பாஞ்சாலி.’

பீமனின் மனமோ மாங்கனியின் செழிப்பைக் கண்டு மயங்கியது. அதன் ருசியை அறிய விழைந்தாலும், மனைவியின் பசி தீருமுன் தான் உண்ணக் கேட்பது சரியல்ல என்று மௌனமாக இருந்தான். அவளே முழுக் கனியையும் உண்டு விடுவாளோ என்று ஒரு கணம் அஞ்சினான்.

திரௌபதியின் புன்னகை தன் பிரியத்தை அவள் ஏற்பதன் பதாகை என்றுணர்ந்த பார்த்தன் பெண்ணின் அடுத்த ஆணையை எதிர்பார்த்து காத்து நின்றான்.

நகுலனோ திரௌபதிக்கு தான் கனியூட்டுவது போல அழகிய சித்திரம் எழுதினால் என்ன என்று சிந்தித்தான். கனியால் வரப் போகும் ஆபத்து அவன் மனத்தில் மின்னலாகத் தோன்றியது. அடுத்த கணமே அதை அவன் மறந்துவிட்டான்.

‘பருவமற்ற காலத்தில் பழுத்த ஒற்றை கனி! இதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டும். அதை அறியாமல் அர்ச்சுனனும், திரௌபதியும் அவசரப்பட்டுவிட்டார்களே. இதனால் என்ன சிக்கல் உருவாகுமோ! அதை எப்படி எதிர்கொள்வது?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் சகாதேவன்.

வெயிலில் வாடி மூடிவிட்ட சிறிய இதழ்களைக் கொண்ட தாமரை போலிருந்த தன் வாயருகே திரௌபதி கனியை கொண்டு சென்றபோது, 'நிறுத்து திரௌபதி' என்று கூறிக்கொண்டே ரதத்திலிருந்து இறங்கினான் கிருஷ்ணன். ரதம் உருண்டோடி வந்த ஓசை கூட கேட்காத அளவிற்கு பாண்டவர்களின் செவிகளை பசி அடைத்திருந்தது.

'என்ன காரியம் செய்ய துணிந்தாய் திரௌபதி? இம்மாமரம் சந்தீப மகரிஷிக்குரியது.  இது நாளொன்றுக்கு ஒரே ஒரு மாங்கனி தரும் மரம். தினமும் அதிகாலையில் தியானமியற்றத் தொடங்கும் ரிஷி அஸ்தமனத்திற்கு பின் நீராடி இங்கு வருவார். கனியை புசித்து பசியாறுவார். மகாஞானியான அவரது சினத்தை எதிர்கொள்ளும் வலிமை உலகில் எவருக்குமில்லை. இன்னும் சற்று நேரத்தில் ரிஷி திரும்பியதும் அனைவரும் அழியப் போவது உறுதி' என்றான் கிருஷ்ணன்.

'புருஷோத்தமா, உன் பாதங்களைப் பணிகிறேன். திரௌபதியின் மீது தனக்குள்ள தனிப்பிரியத்தைக் காட்ட அர்ச்சுனன் அவசரப்பட்டதன் விளைவு இது. பிரச்சினைக்கான தீர்வு அதற்குள்ளே உண்டு என்ற ஆன்றோரின் வாக்கை நிரூபிக்க எங்களுக்கு ஒரு உபாயம் சொல்லி அருள வேண்டும்' என்று கைகூப்பி நின்றான் யுதிஷ்டிரன்.

'பாண்டு மன்னரின் மூத்த குமாரரே, அரண்மனையில் ஆயிரம் சேடியரின் சேவையில் பசியாற வேண்டிய அரசியான திரௌபதி ஒரு மாங்கனிக்காக ஏங்க வேண்டிய நிலையை சிருஷ்டித்தது யாரென்று தாங்கள் சிந்திக்க வேண்டும். பாஞ்சாலியை பணயமாக வைத்து பகடையாடியது அவசரக்காரரின் செயலா அல்லது நிதானமாக சிந்தித்து செயலாற்றுபவரின் செயலா என்பதையும் அறிய விரும்புகிறேன்' என்றான் அர்ச்சுனன்.

'யுதிஷ்டிரா, பார்த்தா, இணக்கமின்மை இன்னல்களை அதிகமாக்குமே அன்றி ஒருபோதும் இன்பத்தைத் தரப் போவதில்லை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை கைமேலிருக்கும் போது சகோதரர்கள் அதைப்பற்றி சிந்திக்காமல் சச்சரவு செய்வது வியப்பாக இருக்கிறது' என்றான் கிருஷ்ணன்.

'மன்னியுங்கள்' என்று இருவருமே ஒரே சமயத்தில் கூறினர். யுதிஷ்டிரன் பார்த்தனின் தோளைச் சுற்றி கை வைத்ததும், 'அரசே, தாங்களும் என்னை மன்னிக்க வேண்டும்' என்று அர்ச்சுனன் தன் தமையனிடம் கூறினான்.

‘ரிஷியின் மாங்கனி சத்தியத்திற்கு கட்டுப்படும்' என்றான் கிருஷ்ணன்.

'ஜடம் சத்தியத்திற்கு கட்டுப்படும் என்று தாங்கள் கூறுவது நான் இதுவரை கற்றறிந்தவற்றை ஏளனம் செய்வது போலிருக்கிறது' என்றான் சகாதேவன்.

'பாண்டவர்களாகிய நாங்கள் இதுவரை சத்தியம் தவறியதே இல்லை. எங்களை விட்டு மக்களோடு, மாக்களோடு ஜடமனைத்தும் நீங்கி விட்டனவே' என்றான் யுதிஷ்டிரன்.

'சத்தியம் என்று நீயே ஒன்றை நினைத்துக்கொண்டால் அது சத்தியமாகி விடாது. சத்தியம் என்று நீ அறிவது சத்தியமல்ல' என்றான் கிருஷ்ணன்.

‘சத்திரிய தர்மத்திற்கு ஏற்புடைய சூதாட்ட அரங்கில் சத்தியம் எங்களை காக்கவில்லை’ என்றான் நகுலன்.

'போர்க்காலத்தில் மதுவுண்டுப் பிளிறி வரும் மதயானைகள் மோதித் தகர்க்க முடியாத கோட்டைக் கதவுகளை, இடைவிடாமல் அரிக்கும் கறையான்கள் காற்றில் கரையும் துகள்களாக்கி விட முடியும்!. என்றோ நடக்கும் பகடையாட்டம் போன்ற பெருநிகழ்ச்சிகளில்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கும் சத்தியம் இருப்பதாக நினைக்காதே. நம் அன்றாட வாழ்வில் செய்யும் செயல்களில், ஏற்கும் எண்ணங்களில், உருவாக்கும் உணர்ச்சிகளில் உள்ளதே சத்தியம். அதுவே நாம் யார் என்பதை தீர்மானிக்கும். நம் வாழ்வின் ஏற்றங்களையும், இறக்கங்களையும் தீர்மானிக்கும்' என்றான் கிருஷ்ணன்.

‘அன்றாட வாழ்வில் நான் தர்மத்திலிருந்து வழுவியதில்லை’ என்றான் யுதிஷ்டிரன்.

'யுதிஷ்டிரா, வாழ்வு காட்டுவதே சத்தியம். நாம் பார்க்கும்விதம் சத்தியத்திற்கு புறம்பானதாக உள்ளது. சூதாட்டமோகம் சகுனியிடமோ, பொறாமை துரியோதனனிடமோ, குரூரம் துச்சாதனனிடமோ இல்லை. அம்மாவீரர்கள் உங்கள் அகத்தை பிரதிபலிக்கும் புறஆடிகளே. ஆடியில் தெரியும் பிம்பம் தன் பிம்பமல்ல என்றெண்ணிக் கொள்பவன் சத்தியத்திலிருந்து விலகி விடுகிறான்' என்றான் கிருஷ்ணன்.

'ஆடிகளை அழிப்பேன். பிம்பங்களையும் அழிப்பேன். நான் நானாக இருப்பேன்' என்றான் பீமன்.

‘சத்திரியன் சிந்திப்பது குருதியின் மேலமர்ந்து. வேதநூல்களின் மேலமர்ந்தல்ல’ என்றான் பார்த்தன்.

‘ஆடிகளை அழிக்கவும், குருதி மேலமர்ந்து சிந்திக்கவும் வேண்டுமானால் மகரிஷியின் சினத்திற்கு ஆளாகாமல் பிழைத்திருக்க வேண்டுமே! பாண்டுவின் மைந்தர்களே, பிரபஞ்சத்தில் எப்பொருளிலும் ஆன்மா உள்ளது.  நம் புலன்களால் அறிய முடியாததை அது அறியும். இயற்கையால் செய்ய முடியாததை அது செய்யும். மனிதமனம் குறுக்கிடாத தூயசத்தியம் வெளிப்படும் இடங்களில் மட்டும் அது செயல்படும். உங்களில் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய மெய் ஒன்றை, பொய்யின் சாயல் சிறிதுமற்ற மெய் ஒன்றைக் கூறினால், கனி தன் பிறப்பிடத்தில் சென்று அமர்ந்து கொள்ளும்’ என்றான் கிருஷ்ணன்.

'என்னைப் பற்றிய மெய் என்பது எது?' என்றான் பீமன்.

‘எதை பற்றி உன் மனம் இரவும், பகலும் ஓய்வின்றி சிந்திக்கிறதோ அதுவே நீ, அதுவே உன்னைப் பற்றிய கலப்பற்ற தூயமெய் என்று அறிவாயாக. அறிந்ததை வெளிப்படுத்தும் துணிவைப் பெறுவாயாக’ என்றான் கிருஷ்ணன்.

மரத்தின் அடியில் ஒரு இலைமீது மாங்கனி வைக்கபட்டது.

யுதிஷ்டிரன் அதனருகே நின்றான். 'தான் அர்ச்சுனன் மீது கொண்ட குரோதத்தைச் சொல்ல வேண்டுமா? என சிந்தித்தான். அது கணநேர குரோதமே. தன் மனதை இரவும், பகலும் ஆட்டுவிப்பது அதுவல்ல.

பின் எது?

‘நான் ஆன்றோருக்கும், சான்றோருக்கும் இடைவிடாமல் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதே என்னுள் தொடர்ந்திருக்கும் எண்ணம்' என்றான்.

கனி சற்றும் அசையாத கல்லாக இருந்தது. தன் சகோதரர்களின் பார்வைகளை சகிக்க முடியாத யுதிஷ்டிரன், 'கிருஷ்ணா, நான் பேசியது சத்தியமே' என்றான்.

'சத்தியம் முழுமையானது என்றால் கனி உயரும்' என்றான் கிருஷ்ணன்.

பெருமூச்சு விட்ட யுதிஷ்டிரன், 'நான் இழந்தவற்றைத் திரும்ப பெற்று அரசனாக வேண்டும். அவ்வாறு நடக்குமேயானால் ஆன்றோருக்கும், சான்றோருக்கும் இடைவிடாமல் அன்னதானம் செய்வேன்' என்றான்.

மாங்கனி தரையிலிருந்து எழுந்து சற்று உயரத்தில் நின்றது.

பீமன் மரத்தருகே சென்றான். 'துரியோதனையும் அவன் தம்பிகளையும் கொல்வேன். துரியோதனன் மற்றும் துச்சாதனன் குருதியைக் குடிப்பேன். அவர்களது குருதியை சுவைப்பதையே என் மனம் இடைவிடாது நாடுகிறது' என்றான்.

மாங்கனி மேலும் சற்று உயர்ந்தது.

அர்ச்சுனன் மரத்தருகே சென்றான். 'கல்விக்கு முடிவேது? வில்வித்தையில் நான் கற்றறிய வேண்டியவற்றை கற்க வேண்டும் என்பதே என்னை ஆட்டுவிக்கும் எண்ணம்' என்றான். கனி மேல் நோக்கி நகரவில்லை. தொடர்ந்து பேசினான் அர்ச்சுனன், 'அவ்வாறு கற்பதன் மூலம் வில்வித்தையில் உலகில் சிறந்தவனாகி கர்ணனைக் கொல்வேன்' என்றான்.

மாங்கனி மேலும் சற்று உயர்ந்தது.

நகுலன் மரத்தருகே சென்றான். ’எதிர்காலம் என்னவென்று அறிய முடிந்தாலும், அறிந்ததை அடுத்த கணமே மறந்து விடுகிறேன். யுதிஷ்டிரர் அரசாளும்போது அவரருகே நின்றிருந்து எதிர்காலத்தை கணித்து சொல்லியவண்ணமிருப்பேன். நான் மறந்தாலும் அரசர் என் வார்த்தைகளை நினைவில் வைத்திருந்து அதன்படி அரசாளுவார்' என்றான். கனி உயரத் தயங்கியது. ‘யுதிஷ்டிரருக்கு கூறும் சொற்கள் மூலம் நானே பாரதவர்ஷத்தின் மீது அதிகாரம் செலுத்துவேன்’ என்றான்.

மாங்கனி மேலும் சற்று உயர்ந்தது.

சகாதேவன் மரத்தருகே சென்றான். ‘எதிர்காலம் என்னெவென்று அறிய முடிந்தாலும், அறிந்ததை கூறினால் என் தலை சிதறிவிடும். அரசரோடு இருந்தால் என்னால் கருத்து கூறாமல் இருக்க முடியாது. நான் அன்னை குந்தியோடு இருந்து அவருக்கு சேவை செய்து வாழவேண்டும்' என்றான். கனி உயரத் தயங்கியது. ‘மாமா சல்லியரின் ஆலோசனையைக் கேட்டிருந்தால், அன்னையோடு, மனைவியோடு, சகோதரர்களோடு மத்ராவின் மன்னர்களாக நானும், நகுலனும் இருந்திருப்போம்’ என்றான்.

மாங்கனி மேலும் உயர்ந்து தான் பிறந்த கிளையைத் தொட்டு நின்றது.

திரௌபதி மரத்தருகே வந்து நின்றாள். அப்போது வீசிய அனல்காற்றில் கிருஷ்ணையின் அவிழ்ந்த கூந்தல் பறந்தது. ‘என் கூந்தலை முடிக்கும் நாளைப் பற்றி மட்டுமே நான் ஓயாது எண்ணமிட்டு வருகிறேன்' என்றாள்.

கனி மண்தரை மீது விழுந்து உருண்டது.

'திரௌபதி, என்ன இது?' என்று அன்புடன் கேட்டான் அர்ச்சுனன்.

கண்களை மூடினாள் பாஞ்சாலி.

நாணதிரும் ஒலி அவள் நெஞ்சில் எழுந்தது. எங்கிருந்தோ வந்த அம்பொன்று அவள் இதயத்தை துளைத்தது. அவளிடமிருந்து பெருமூச்சு ஒன்று எழுந்தது. வனத்தின் வெப்பம் அதிகரித்தது. கடலாழத்தில் நீந்திக் கொண்டிருந்த திமிங்கலம் ஒன்று கடலின் மேற்பரப்பிற்கு வந்தது. மேகத்தின் நடுவே மறைந்திருந்த முழுநிலா வெளிப்பட்டது போல ஒரு காட்சி வெளிப்பட்டது. மறைந்திருந்து வெளிவந்தது வெண்ணிலவுதானா? கதிரவனைப் போல ஒளி வீசுகிறதே?

அழிப்பதெற்கென்றே அக்னியில் இருந்தெழுந்த பாஞ்சாலியின் சுயம்வரம்.

துருபதத்தின் மன்னனான யக்ஞசேனன் தன் தலைநகரான காம்பில்யத்தில் தன் பிரிய மகள் திரௌபதிக்கு சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தான். பாண்டு புத்திரர்கள் அரக்கு மாளிகையில் மாண்டு விடவில்லை என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்திருந்தது.

அர்ச்சுனனே தன் பெண் கிருஷ்ணையை மணக்க வேண்டும் என்று விரும்பினாலும் அதை எவரிடமும் வெளியிடாதிருந்தான். திருமணம் முடிந்த பின்பே அதை திரௌபதியிடம் கூறினான். துரோணருக்காக அர்ச்சுனன் தன்னை போரில் வென்றதை துருபதன் மறக்கவில்லை. அவனுக்கு தன் பெண்ணை தானம் தந்து ஆசி தர விரும்பினான். அர்ச்சுனன் மட்டுமே வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பல கொல்லர்களைக் கொண்டு, எவராலும் எளிதில் நாணேற்றிவிட முடியாத வில்லொன்றைச் செய்தான். வானில் சுழலும் சிக்கலான யந்திரமொன்றை நிறுவி அதில் சிறுபுள்ளியை இலக்காக வைத்தான். மாறுவேடத்தில் பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை தான் அறிந்திருப்பதை அர்ச்சுனனுக்கு உணர்த்த ஐந்து கணைகளையும் வில்லருகே வைத்தான்.

‘நற்குலத்தில் பிறந்த அரசகுமாரர்களில் எவர் இவ்வில்லுக்கு நாண்பூட்டி, கணை கொண்டு இலக்கை துளைக்கிறாரோ அவருக்கு என் தங்கை யக்ஞசேனி மாலையிடுவாள்’ என திருஷ்டத்யும்னன் அறிவித்தான்.

'ஏன் ஐந்து கணைகள்?' என்று கிருஷ்ணனை வினவினாள் கிருஷ்ணை.

'உன் தந்தையை கேட்க வேண்டிய கேள்வி' என்றான் கிருஷ்ணன்.

'நீர் நினைப்பது என்னவோ?' என்று கேட்டாள் திரௌபதி.

'கிருஷ்ணை, இந்த வித்தையை ஐவரால் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியும். ஏகலைவ்யன் விரலை துரோணர் வாங்கிக் கொண்டுவிட்டார். பீஷ்மர் விரதமேற்றவர். உன் தந்தையின் நண்பரான துரோணர் உன் தந்தையே ஆவார். மீதி இருப்பவர்கள் கர்ணனும், அர்ச்சுனனுமே' என்றான் கிருஷ்ணன்.

'இருவரில் எவர் எனக்கு ஏற்றவர்?' என்றாள் திரௌபதி.

'சுயம்வரம் உன்னுடையது. என்னுடையதல்ல. தீர்மானிக்க வேண்டியவள் நீ' என்றான் கிருஷ்ணன்.

‘வழி காட்டவேண்டியது ஞானியின் கடமை அல்லவா?’ என்று கேட்டாள் திரௌபதி.

‘பிறரது கர்மத்தில் குறுக்கிடாதிருப்பதே ஞானியின் தர்மமாகும்’ என்று பதிலிறுத்தான் கிருஷ்ணன்

‘இவ்வழியில் செல் என நீர் ஆணையிட்டால் என் பாதை கதிரொளி பரவிய மலர்ப்பாதையாக இருக்குமே’ என்றாள் திரௌபதி.

‘பாதையின் ஒளியையும், மென்மையையும் புலன்கள் புறத்தில் வாழ்பவனுக்கு பெற்றுத் தருகின்றன. அகத்தில் வாழ்பவனுக்கு எப்பாதையும் ஏற்கப்படவேண்டியதே, பாதைகளின் எண்ணிக்கையை அவன் பொருட்படுத்துவதில்லை. அவனுக்கு ஒற்றை சத்தியம் மட்டுமே இலக்கு’ என்றான் கிருஷ்ணன்.

‘இறுதிக்கு இட்டு செல்லும் உறுதியான ஒற்றை பாதை எதுவுமே இல்லையா? என்று கேட்டாள் திரௌபதி.

‘பாதை ஒருபோதும் ஒற்றையானது அல்ல. ஒவ்வொரு அடி எடுத்து வைத்ததும் அது பலவாக பிரிந்தே செல்லும். செல்பாதையை நான் சொல்லித் தந்தாலும், பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உனக்கு உண்டு’ என்றான் கிருஷ்ணன்.

‘நான் அங்கமன்னருக்குத்தான் மாலையிட நேருமா? அர்ச்சுனரைப் பற்றி கேள்விப்பட்ட துயர செய்தி உண்மையானதாக இருந்தால் அவரெப்படி இங்கு வர முடியும்?' என்றாள் திரௌபதி.

'தவறான செய்தி ஆதாரமற்றதாக இருந்தால், ஆதாரம் கிடைக்கும்வரை அதை ஏற்க மறுப்பதே அறிவுடைமை. நீதி வழங்குதலின் அடிப்படை அதுவே' என்றான் கிருஷ்ணன்.

'அங்கமன்னர் சூதரால் வளர்க்கப்பட்டவர். அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்று நிரூபணம் செய்ய எவரிடமும் ஆதாரமில்லை. ஆதாரமின்மை அவருக்கு நீதியைப் பெற்று தரவில்லையே!' என்றாள் திரௌபதி.

'பாண்டவர்களும், கௌரவர்களும் இன்னமும் இளவரசர்களாகத்தான் இருக்கிறார்கள். கர்ணனோ இளவரசனாகாமலே நேரடியாக அங்கநாட்டு மன்னனாகி விட்டானே' என்றான் கிருஷ்ணன்.

'அதன் பொருள் என்ன?' என்றாள் திரௌபதி.

'மனிதன் அநீதி இழைத்தாலும் வாழ்வு நீதி தர ஒருபோதும் தவறாது’ என்றான் கிருஷ்ணன்.

'நான் அங்கமன்னருக்கு மாலை சூடலாமா?' என்று கேட்டாள் திரௌபதி.

'அவன் அறநெறி பிறழாத குணங்கொண்ட உத்தமன். அதே சமயம் தன் வித்தையில் கர்வம் கொண்டவன்' என்றான் கிருஷ்ணன்.

‘எந்த வீரனையும் நிராயுதபாணியாக்கும் வல்லமை பெண்ணின் விழிகளுக்கு உண்டு' என்று புன்னைகையோடு நினைத்துக் கொண்டாள் திரௌபதி. 'வேறென்ன பெருங்குணங்கள் அவரிடம் உள்ளன?' என்று கேட்டாள்.

'எந்த மனிதனும் பிறக்கும்போது அப்பிறவிக்கென்று ஒரே ஒரு பெருங்குணத்தோடும், அதை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் சில சிறிய குணங்களோடும் பிறக்கிறான். வேறொரு பெருங்குணத்தை அடுத்த பிறவியில்தான் பெறுகிறான்' என்றான் கிருஷ்ணன்.

'ஆனால் என் மனம் பெருங்குணங்கள் அனைத்தும் கொண்ட கணவரையே நாடுகிறது' என்றாள் திரௌபதி.

'அப்படிபட்டவர் இன்னமும் பிறக்கவில்லை. பிறந்து விட்டவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்' என்றான் கிருஷ்ணன்.

'கிருஷ்ணா, பாதுகாப்பு மட்டுமே வாழ்க்கை என்றால் அதை ஒரு படைவீரனால் கூட தர முடியுமே! வில் திறமை மட்டுமே பெண்ணுக்கு மன நிறைவைத் தருமா? அதுவே போதுமா?' என்றாள் திரௌபதி.

'போதாதுதான். நற்பண்புகளும், பெருங்குணங்களும், அறநெறிகளும் மனிதனை உயர்ந்தவனாக்குகின்றன. அவனையே தன் கணவனாக பெண் ஏற்க வேண்டும்' என்றான் கிருஷ்ணன்.

'குணம் பழகிய பின்னாலல்லவா தெரிய வரும்? தோற்றத்தையும், தோள்வலிமையையும் கொண்டு குணத்தை அறிய முடியாதே. நான் வென்றவருக்கு மாலைசூட்டி பின் அவரோடு வாழ்ந்தல்லவா குணத்தைப் பற்றி அறிய முடியும்?' என்றாள் திரௌபதி.

'விழிகள் இதயத்திலிருக்கும் ஆன்மாவின் சாளரங்கள். நீ பார்ப்பவனைப் பற்றி உன் ஆன்மா சொல்வதென்ன என்று தெரிந்து கொள்' என்றான் கிருஷ்ணன்.

மீன்கொடி படபடக்கும் தென்றல் தேரில் தன் காதலி ரதிதேவியோடு சுயம்வர மண்டபத்திற்கு எவரும் அறியாமல் வருகை தந்து மறைந்திருந்த வசந்தமார காமதேவன் இன்னிசை எழுப்பும் வண்டுகளை நாண்களாக ஏற்றிய கரும்புவில்லில் தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, குவளை மலர்க்கணைகளை பூட்டி அங்கிருந்தவர்கள் மீது தொடுத்த வண்ணமிருந்தான். இதயங்களைத் தாக்கிய தாமரைக்கணை திரௌபதியின் மீது காதலுணர்வை எழுப்பி உன்மத்தம் கொள்ளச் செய்தது. இதழ்களை தாக்கிய அசோகக்கணை அவளது பெயரை சொல்லி சொல்லி புலம்ப வைத்தது. கண்களைத் தாக்கிய முல்லைக்கணையோ அவளை மட்டுமே எங்கும் எதிலும் காண வைத்தது. சிரத்தை தாக்கிய மாம்பூக்கணை சித்தமெல்லாம் அவளது நினைவை நிறைத்தது. உடலெங்கும் ஊடுருவிய குவளை மலர்க்கணை திரௌபதி கிடைக்காவிட்டால் உயிரை விடுவதே உத்தமம் என்று ஏங்க வைத்தது.

சபையில் கூடியிருந்த அந்தணர்களும், சத்திரியர்களும், வைசியர்களும், சூதர்களும் சுயம்வர வில்லையோ, கணைகளையோ, யந்திரத்தையோ காணவில்லை.  மன்மதனின் ஐந்து மலர்க் கணைகளால் தாக்கப்பட்டவர்கள் திரௌபதியின் புருவவிற்களையும் பார்வைக்கணைகளையும் கண்டு மயங்கி இருந்தனர். அரங்கத்திற்குள் நுழையும் தகுதி மறுக்கப்பட்ட வருணமற்றவர்கள் தாங்கள் கேள்விப்பட்டவற்றை வைத்து திரௌபதியை கற்பனையில் கண்டு களித்தனர்.

பூரிப்புடன் அரங்கத்தை சுற்றிலும் பார்த்த திரௌபதி கர்ணனைக் கண்டதும் திடுக்கிட்டாள்.

அவனது கவனம் பாஞ்சாலி மீதில்லை. அவன் வில்லின் வனப்பையும், யந்திரத்தின் அமைப்பையும் காதலுடன் கவனித்துக் கொண்டிருந்தான். மன்மதனின் பாணங்கள் அவனை அணுக அஞ்சி செல்திசை விலகி வீழ்ந்து கிடந்தன.

திரௌபதியின் கர்வம் சீண்டப்பட்டது.

'மாவீரரே, வில் என்பது கருவியே. அதன் மூலம் தாங்கள் பெறப்போகும் பெரும்பொக்கிஷத்தை முதலில் பாருங்கள்' என்று மௌனமாகக் கூறினாள்.

அவன் கவனம் மாறவில்லை.

கர்ணனின் பெயர் அறிவிக்கப்பட்டது.

தன் இருக்கையிலிருந்து எழுந்து வில்லை நோக்கி நடந்தான்.

'என்னைப் பாரும் வீரரே. நான் பெண். உமக்கு என்னிடம் நீதி கிடைக்கும்.'

வில்லை வணங்கிய கர்ணன் எவராலும் அசைக்க முடியாத வில்லை தன் வலக்கரத்தால் எளிதாகத் தூக்கினான்.

'ஆம், இவர் மாவீரர். வில்லை ஏந்தி விட்டார். இனி என்னைப் பார்க்கப் போகிறார்!'

கர்ணனின் கவனம் நாணிலிருந்தது. பாஞ்சாலியின் மனம் அவன் பார்வையால் தன்னிடம் உருவாகப் போகும் நாணத்தை நினைத்தது.

'ஒரே ஒரு முறை என்னைப் பாரும். காலமெல்லாம் உம் ஆணைக்காக நான் காத்திருப்பேன்.'

நாணேற்றி விட்டான் கர்ணன். அரங்கமே ஆரவாரம் செய்தது.

திரௌபதியின் பெண்மனம் தன்னைப் பெற்றவர்கள் யாரென்று அறியாமல் அவமானத்தை மட்டும் அறிந்து வளர்ந்த ஆதரவற்ற ஆண்மகனுக்கு அன்பைத் தந்து அவனுக்கு தாயுமானவளாகத் துடித்தது. 'இதோ தாயுமானவளாக நான் காத்திருக்கிறேன். என்னை பார்ப்பீராக.'

கர்ணன் கணையை வில்லில் பூட்டிவிட்டான்.

'வீரனே, வில்லோ, வித்தையோ முக்கியமில்லை. நானே உனக்கு முக்கியம்.'

குறி நோக்கி, நாணை இழுக்க ஆரம்பித்தான் கர்ணன்.

'என்ன கர்வம்! என்ன ஆணவம்! என்னை விட வில்தான் உனக்கு பெரிதா?'

வெகுண்டு எழுந்தாள் திரௌபதி.

'சூதனே, சரம் தொடுக்க நீ சத்திரியனல்ல. சவுக்கே உன் குலக்கருவி. நீ வென்றாலும் தாழ்ந்த குலத்தவனான உன்னை ஏற்க மாட்டேன்' என்றாள் திரௌபதி.

சிறிது நேரம் திகைத்து நின்றான் கர்ணன். முன்னொரு நாள் விளையாட்டு அரங்கில் அர்ச்சுனன் சொன்ன அதே வார்த்தைகள். துரியோதனின் அன்பால் அங்கமன்னனான பின் இன்றுதான் மீண்டும் அந்த வார்த்தைகள் அவன் செவிகளில் விழுகின்றன.

தன் மகன் வில்லேந்தி வெற்றிமாலை சூடப் போவதைக் காணக் காத்திருந்த கதிரவனை கர்ணன் பார்த்தான். கதிரவன் சினத்தோடு கடும்வெப்பத்தை உமிழ்ந்தான். அக்னியில் பிறந்த திரௌபதியாலும் அந்த அனல்வீச்சைத் தாங்க முடியவில்லை. அவளது கரியநிறத் தோல் மேலும் கருமை கொண்டது.

கர்ணன் முதல்முறையாக திரௌபதியைப் பார்த்தான். பார்வைகள் மோதின. கர்ணனின் பார்வையிலிருந்த ஏளனத்தை தாங்க முடியாமல் திரௌபதியின் விழிகள் நிலம் நோக்கி தாழ்ந்தன.

'உன் கர்வத்தை ஒருபோதும் மறவேன்' என்றன திரௌபதியின் விழிகள்.

'உன் சொற்களை ஒருபோதும் மறவேன்' என்றன கர்ணனின் விழிகள்.

'சூதனே, உன்னை என்னால் வெல்ல முடியாது. என்னை பணிபவனே எனக்கு வேண்டும். உன் நித்யபகைவனே என் கணவன்' கர்ணனுக்கு மௌனமொழியில் விடைகொடுத்தாள் கிருஷ்ணை.

கசப்புடன் வில்லை வீசி எறிந்துவிட்டு இல்லம் திரும்பினான் கர்ணன். அவன் வீசி எறிந்த வில்லை தானெடுத்து நாணேற்றலானான் அந்தண அர்ச்சுனன்.

‘சூதாட்டகளத்தில் ஒற்றை ஆடையோடு இருந்த என்னை துரியோதனனும், துச்சாதனனும் அடிமை என்று அழைத்து அவமதித்தனர். அவர்கள் குருதியால் என் கூந்தலை நனைக்க விரும்பினேன். ஆனால். என்னை கற்பற்றவள் என்றழைத்தவன் கர்ணனே. அவனல்லவா எனது ஆடைகள் களையப்பட வேண்டுமென்றவன்? அதிகபட்ச அவமரியாதை செய்தவனை எதிர்த்து ஏன் அன்று அவையில் நான் எதுவும் கூறவில்லை? கர்ணனின் குருதி வேண்டும் என்று ஏன் என்னால் கேட்க முடியவில்லை? ஏன் என்னால் அவனை வெறுக்க முடியவில்லை?’ தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் திரௌபதி. அவளுக்கு விடை கிடைக்கவில்லை.

உரத்த குரலில் கூறினாள் திரௌபதி, ‘என் மனம் வில்லேந்தும் சூதனை இடைவிடாமல் எண்ணியெண்ணி வேதனையுறுகிறது’

கதிரவன் கனிந்திரங்கினான். வனத்தின் மேலிருந்த வானத்தை கருமேகங்கள் சூழ்ந்தன. ‘தனியொரு பெண்ணின் தூயசத்தியம் வறண்டு விட்ட வனத்திற்கு வாழ்வு தரும்’ என்று குளிர்ந்த காற்று கூறியது. அதை ஏற்று ‘ஆம், ஓம்’ என்ற ஞானஒளியாக மின்னல்கீற்று தெறித்தது. அதை ஆமோதித்து ‘ஆம், ஓம்’ என்ற வேதவொலியாக இடியோசை எழுந்தது. புலிகள் உறுமின. மான்கள் துள்ளின. தாவரங்கள் தலையசைத்தன. வனமண்ணை அருள்வெள்ளத்தில் மூழ்கடிக்கப்போகும் பெருமழையின் முதல்துளி திரௌபதியின் அவிழ்ந்த கூந்தலின் மீது விழுந்தது.

கர்ணனின் வில்லிலிருந்து வேகத்துடன் புறப்படும் கணை தன் இலக்கை சரியாக அடைந்தடங்குவது போல, தரையில் கிடந்த மெய்ம்மாங்கனி விசையுடன் எழுந்து மரத்திலிருந்த தன் பிறப்பிடத்தை அடைந்து தன்னைத் தானே கச்சிதமாகப் பொருத்திக் கொண்டது.

(முற்றும்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms