கள்வனின் காவல்

ஒளி இருண்டிருந்த அறையை திடாரென நிரப்பியதும் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். மாலை முழுவதும் வாசித்த புத்தகத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்ததில் விளக்கேற்ற மறந்து, விட்டிருந்தேன்.

விளக்கேற்றிய கமலா புன்னகைத்தாள்.

சிறு தலையணை போலிருந்த புத்தகத்தை அவளிடம் காட்டினேன். ‘காவல் கோட்டம். மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்ததிலிருந்து சுதந்திரப் போராட்ட காலக்கட்டம் வரையிலான மதுரையின் வரலாறு. இதை எழுதியவர் பத்து வருடங்கள் எங்கெங்கோ அலைந்து, தகவல்களை திரட்டி, எழுதியிருக்கிறார். அந்த அர்ப்பணிப்பிற்கு, உழைப்பிற்கு இவருக்கு சாகித்ய அகாதமி பரிசு தந்தது சரிதான்,’ என்றேன்.

‘உங்கள் ஊரின் கதை என்பதால் உடனே ஒரு வார்த்தை விடாமல் வாசித்து விட்டீர்களாக்கும்?’ சிரித்தாள் கமலா.

‘ஆமாம். பாண்டிசேரிக்கு வந்ததும், கவர்னர் துப்ளேயிடம் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளைத்தானே முதல் காரியமாக வாசித்தேன்? நம்மூரைப் பற்றி, நாமிருக்கும் ஊரைப் பற்றி நமக்குத் தெரிய வேண்டாமா?’ என்றேன்.

‘புகழ் பெற்ற எத்தனையோ ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவைப் பற்றி எழுதிய புத்தகங்களை வாசிக்க வேண்டியதுதானே?’ என்று கேட்டாள் கமலா.

‘புகழ் பெற்றவர்கள் உண்மையைத்தான் எழுதுவார்கள் என்று நினைக்கிறாயா? கொஸாம்பி போன்ற ஒரு சிலரைத் தவிர பிறர் எழுதியவை உள்நோக்கம் கொண்ட பொய்களின் அபத்தமான தொகுப்பு.  வரலாற்று நூல் வெறும் அரசியல் நிகழ்வுகளை, போர்களை, ஒப்பந்தங்களைப் பற்றிய தகவல்களை மட்டும் தந்தால் போதுமா? நாடு என்பது மனிதன். அவனைப் பற்றி, அவனது வாழ்வைப் பற்றி, சமூகத்தைப் பற்றி எழுத வேண்டாமா? ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரு நிகழ்வுகள் எப்படி தனிமனித வாழ்வை பாதித்தன, தனிமனிதனின் செயல்கள் எப்படி பெரு நிகழ்வுகளை உருவாக்கின என்று சொல்ல வேண்டாமா? வாழ்வு வளர்ந்த விதத்தை வரலாறு மூலம்  தெரிந்து கொண்டால், இன்று நாம் சமூக முன்னேற்றத்தின் அடுத்த படிக்கட்டில் காலடி வைக்க முடியும்.  நல்ல புத்தகங்களை கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருக்கிறது,’ என்றேன்.

‘எது நல்ல புத்தகம்?’ என்று கேட்டாள் கமலா.

‘என்னைப் பொருத்தவரை, ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தபின், எனக்கு ஒரு நூலிழை அகமுன்னேற்றம் கிடைத்தால் அதை நல்ல புத்தகம் என்பேன்,’ என்றேன்.

‘மதுரை வரலாற்றை வாசித்ததில் என்ன கிடைத்தது?’ என்று கேட்டாள் கமலா.

‘பதிவு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்ச்சிகள் ஸ்ரீ அரபிந்தோவிடம் நான் பெற்ற ஆன்மீக கருத்துக்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன,’ என்றேன்.

‘ஏதாவது ஒரு நிகழ்ச்சியைப் பற்றி சொல்லுங்களேன்,’ என்றாள் கமலா,

‘கள்வனின் காதலை, அவனது காவலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு சிறுகதையாக மாற்றினேன். அதைக் கேள்,’ என்றேன்.

* * * *

மதுரைக்குப் பக்கமாக களவையே குலத்தொழிலாகக் கொண்ட கற்பனையூரின் மொத்த ஜனமும் ஊர் பொது இடத்தில் கூடி உல்லாசமாகவும், வேடிக்கையாகவும் பேசிக் கொண்டிருந்தது, இரவு நெடுநேரமாகிவிட்டிருந்தது, இரவிலே வாழ்ந்து பகலிலே உறங்கும் ஊரது,

'திருமலை நாயக்க மகாராசா மருதையிலே ஏதோ விழா கொண்டாடுறாரே. நம்ம ஊர்லேயும் ஏதாவது பண்ணலாமாடா?' என்று பெரியாம்பிளை இலக்கு எதுவுமின்றி பொதுவாகக் கேட்டு வைத்தார், களவுக்குப் போகமுடியாதபடி மிகவும் வயதாகிவிட்ட பெரிய ஆண்பிள்ளைகள்தான் பெரியாம்பிளைகள். இளவட்டப்பயல்களுக்கு களவு செய்ய பயிற்சி தருவது பெரியாம்பிளைகளின் வேலை.

'விருந்து சாப்பிட்டு கொள்ள நாளாச்சு, என்ன பண்ணலாமினு நீயே சொல்லு. பண்ணிபிடுவோம்,' என்று இன்னொரு பெரியவர் சொன்னார்.

சிறிதுநேரம் யோசித்த பெரியாம்பிளை, 'நம்ம கழுவனுக்கு அவன் முறைப்பொண்ணு பூவாயி மேல ஆசை. அவங்கெ கலியாணத்தையே ஊர் விழாவா வச்சுருவோம்,' என்றார்,

இளமையும், இயற்கையும் தந்த கொடையில் வனப்பும், வாளிப்புமாக இருந்த பூவாயி மீது ஒரு கண் வைத்திருந்த மூக்கனுக்கு எரிச்சல் மூண்டது, மெல்ல கலகத்தை ஆரம்பித்தான். 'ஏ பெரிசு, யோசிச்சுதான் பேசுறியா? கழுவன் இதுவரைக்கும் ஒரு களவுக்குக் கூட வந்ததில்ல. இவன் எப்படி ஒருத்திய வச்சு ஒழுங்கா குடும்பம் நடத்துவான்?'

மூக்கனின் நண்பன் எடுத்துக் கொடுத்தான். 'வித்தை கத்துகிட்டேனு சொல்றான். என்ன பிரயோசனம்? எப்பொ பாரு பூவாயி பின்னாலே திரியுறது மட்டுந்தேன் இவன் காட்டுற வித்தை. ஒரு கொத்திலாவது இவன் சேர முடியுமா?' ஒரு கொத்து என்பது நான்கு அல்லது ஐந்து கள்வர்கள் கொண்ட குழு. கொத்தாகத்தான் களவுக்குப் போவார்கள். திறமையற்றவனை கொத்தில் சேர்த்தால் அனைவருக்கும் ஆபத்து.

உற்சாகமாகிவிட்ட மூக்கன், 'பொம்பிளையா பொறக்க வேண்டியவன் ஆம்பிளையாப் பொறந்துட்டான், இவனுக்கெல்லாம் எதுக்கு கலியாணம்? இவன் ஆம்பிளைனா ஒரு நல்ல களவு பண்ணிகாட்டச் சொல்லு,’ என்றான், தப்பான களவில் மாட்டிக் கொண்டு கழுவன் ஒழிந்துவிட்டால், பூவாயி மூக்கனுக்குத்தான்.

மூக்கன் சொல்வது நியாயம்தான் என்று எல்லோருக்கும் பட்டது, ஆளாளுக்கு கழுவனுக்கு புத்திமதி சொல்ல ஆரம்பித்தனர். அவன் எதையுமே சட்டை செய்யவில்லை. குமரிகள் கூட்டத்தில் வலதுபுற ஓரத்தில் உட்கார்ந்திருந்த பூவாயி மீது மட்டுமே அவன் மொத்த கவனமும் இருந்தது,

கழுவன் தனிப்பிறவி. ஊரோடு ஒத்து வாழாதவன். களவில் எல்லா வகையான பயிற்சிகளும் பெற்றிருந்தாலும் களவிற்கு போவதே இல்லை. அவன் செய்ய விரும்பிய ஒரே களவு பூவாயியின் மனதைக் களவாடுவதுதான்,

ஒரு கிழவி கழுவனைப் பார்த்து, 'ஏ ராசா, இந்த மூக்கன் இம்புட்டு பேச்சு பேசுறானே, நீ ஆடாவது களவாண்டுகிட்டு வாடா,' என்றாள்.

'அது செரிதான் ஆத்தா, ஆடு களவாணிய தவிர வேற எவன் பூவாயிய கட்டுவான்? பெரிய களவு செய்றவங்கெ இவளைத் திரும்பியும் பார்க்க மாட்டாங்கெ,' என்றாள் பூவாயியின் அழகில் பொறாமை கொண்ட ஒரு குமரி.. அவளுக்கு மூக்கன் மீது வெகுகாலமாக ஒரு பிடிப்பு உண்டு,

வெடுக்கென்று எழுந்த பூவாயி விடுவிடுவென்று நடந்து சென்று எவர் கண்ணிலும் படாமல் ஒரு மரத்தினடியில் அதன் வேர்மீது  கோபமாக உட்கார்ந்தாள்.

அவள் பின்னோடு வந்த கழுவன் அவளருகே உட்கார்ந்தான், அவனை வெறுப்புடன் பார்த்த பூவாயி, 'உனக்கு கொஞ்சமாவது ரோஷமிருக்கா? ஊரே திட்டுது, வாய திறந்து ஒரு வார்த்தை பேசுனியா?' என்றாள்.

'அவெங்க கிடக்கிறாங்க துப்புகெட்ட பயலுக,' என்றவாறே பூவாயியின் கைகளைப் பற்ற முயன்றான் கழுவன்.

அவன் கைகளை முரட்டுத்தனமாக உதறிய பூவாயி, 'உன்கிட்டெ சரடு கட்டுகிட்டா ஒருவேளை கஞ்சி ஊத்த உனக்கு துப்பு இருக்கா? நீ மானங்கெட்ட ஜென்மம். என்னையும் அப்பிடி நினச்சியா? நான் வேணுமின்னால் ஊரே மெச்சுற மாதிரி ஒரு களவு பண்ணிகிட்டு வா. அதுக்கப்புறம் கைய பிடி, இடுப்பை வேணா பிடி. இப்பொ எங்கிட்டாவது போயிடு,' என்று கத்தினாள்.

அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த கழுவன் பெருமூச்சுவிட்டபடி எழுந்து மதுரையை நோக்கி ஒரு முடிவோடு அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பார்க்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான். போகும் வழியில் தன் குடிசையிலிருந்து ஒரு சிறு மூட்டையை எடுத்துக் கொண்டான்,

நள்ளீரவு கடந்து நெடுநேரமாகிவிட்ட சமயத்தில், இருளின் பாதுகாப்பில் சத்தமின்றி குதிகாலால் நடந்து மதுரையின் தெற்குக் கோட்டை அரண்மனையின் நெடிதுயர்ந்த சுவரொன்றை நெருங்கிய கழுவன், அகழிக்கருகே ஆளரவமற்ற பகுதியிலிருந்த ஒரு மரத்தினடியில் உட்கார்ந்து கொண்டு சுற்றுப்புறத்தை நோட்டமிட்டான்.

அந்தப்புரம் இருந்த அரண்மனையின் தென்புறத்தில் காவல் மிகமிக அதிகம். ஆனாலும் அங்கு சில பகுதிகள் மட்டும் குறைவான காவலோடு நிசப்தமாக இருந்ததை கவனித்த கழுவன் அவை அனேகமாக அரசரும், அரசியரும் தூங்கும் பகுதியாக இருக்க வேண்டும், அதுவே களவாட சரியான இடம் என்ற முடிவிற்கு வந்தான்,

அந்தப்புரத்தில் அல்லது அரண்மனையில் களவாட எவனும் இதுவரையிலும் துணிந்ததில்லை.. அகப்பட்டுக் கொண்டால், தண்டனை பல ஜன்மங்களுக்கும் மறக்க முடியாத வலியுடன் கூடியதாக இருக்கும். கண்கள் பறிக்கப்பட்டு, மாறுகை, மாறுகால் வாங்கப்பட்டு, ஏழு நாட்கள் மொன்னையான கழுவில் உட்கார்ந்து துடிதுடித்து உயிரை விட வேண்டியதாகிவிடும். பூவாயிக்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கழுவில் உட்காரலாம்.

இரவும், இருளும் கள்வனின் தோழர்கள். பகலும் ஒளியும் அவனது பகைவர்கள். சூழல் சரியாக இருந்தால் களவு சுலபம்  சூழல் சரியாகத்தான் இருந்தது. கழுவன் ஏதோ ஒரு திரவத்தை உடலெங்கும் பூசிக் கொண்டான், இனி அவனை முதலை ஒன்றும் செய்யாது. சத்தமின்றி அகழியில் இறங்கி நீந்தினான். தாமரைக் கொடிகள் காலைச் சுற்றாமல் கவனமாக நீந்தினான், மறுகரை ஏறியதும் கழுவன் தன் தோளிலிருந்த மூட்டையை அவிழ்த்தான். அதிலிருந்து ஒரு உடும்பையும், நீண்ட கயிறையும் எடுத்தான். உடும்பைச் சுற்றிக் கயிற்றை இறுகக் கட்டிய கழுவன் அதை தன் தலைக்கு மேல் மெல்ல இருமுறைச் சுற்றிவிட்டு, பின் வெகு வேகமாக சுவர் உச்சியை நோக்கி எறிந்தான். உடும்பு சுவரை இறுகப் பற்றிக்கொண்டது. இனி கயிற்றில் பெரிய பாறாங்கல்லையே கட்டித் தொங்கவிட்டாலும் கயிறுதான் அறுந்து போகுமே தவிர உடும்பு விழாது. சுவற்றின் மேல் கால்களை ஊன்றி கயிற்றில் விறுவிறுவென விரைவாக ஏறிய கழுவன் சுவரின் உச்சியை அடைந்ததும், அதன் மேற்பரப்பில் ஊர்ந்து ஒரு மண்டபத்தின் மீது வசதியாக உட்கார்ந்து கொண்டான்.

மடியிலிருந்த கன்னக்கோலை எடுத்து விதானத்தின் கூரையை கீற ஆரம்பித்தான். எறும்பு மட்டுமே புகக்கூடிய கீறல். மனிதனின் கண் பார்வைக்கு தெரியாத அளவிற்கு மெலிதான கீறல்கோடுகளால் சிறிய சதுரம் போட்டான். பகலில் கூட பார்வைக்குப் புலப்படாத கோடுகள். பின் அச்சதுரக்கல்லை நெம்பி எடுத்து அப்படியே உருவி கூரை மேல் வைத்தான். கன்னவாசல் திறந்துவிட்டது. ஒரு குச்சியின் நுனியில் துணியைச் சுற்றி, அதை மொண்டிக் கொம்பாக கன்னவாசலின் வழியே செலுத்திவிட்டு, ஏதேனும் ஆளரவம் உண்டா என்று கவனித்தான், சிற்றெறும்புகள் நகரும் பேரோசையைத் தவிர வேறெந்த சப்தமும் இல்லை.

உடலைக் குறுக்கி கன்னவாசலில் நுழைந்து ஒரு கயிற்றின் உதவியோடு அரண்மனைக்குள்ளே கீழே இறங்கினான். அருகிலிருந்த பெரிய அறை கண்ணில் பட்டது. சத்தமின்றி சுவரோடு பல்லி போல் ஊர்ந்து அறைக்குள் சென்றான். அவனுள் சேகரமாகியிருந்த பல தலைமுறை மூதாதையரின் அனுபவசாரத்தினால் உண்டாகியிருந்த உள்ளுணர்வு அவனைக் கைவிடவில்லை. அது ராணியின் அந்தரங்க படுக்கை அறைதான்,

பட்டத்து ராணி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தூக்கம் கெடக் கூடாது என்பதால் திருநங்கை வீரர்கள் தூரமாக காவலிருந்தது கழுவனுக்கு வசதியாக இருந்தது.

ராணி தன் நகைகளை கழட்டி ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்திருந்தாள். விலை மதிப்பற்ற வைரங்கள் பதித்த அந்த நகைகள் இருளிலும் மின்னின. அவற்றைத் தொடாமல் திருமலை நாயக்கரின் முத்திரை மோதிரத்தை மட்டும் எடுத்து மடியில் கட்டிக் கொண்ட கழுவன் வந்த வழியே தடையின்றி, சத்தமின்றி திரும்பினான்.

களவு என்றால் இதுதான்டா களவு - ராஜகளவு.. அடையாளராஜகளவில் களவாடப்படும் பொருளின் அளவும், விலைமதிப்பும் முக்கியமல்ல. பெருங்காதலைப் போல களவிலும் சவால்தான் முக்கியம். சவால் இல்லாத காதலும், களவும் உயிர்த்துடிப்பில்லாதவை..

மறுநாள் ஊரே விக்கித்து போய் ஆலமரத்தடியில் உட்கார்ந்திருந்தது. இந்திரஜாலம், மந்திரஜாலம் போல ஊரிலிருந்த ஒவ்வொரு ஆணும் களவு செய்திருக்கிறார்கள். ஆனால் எந்த தலைமுறையிலும் எவரும் ராஜகளவு செய்ததில்லை. செய்ய நினைத்ததுமில்லை.

நானூறு துருக்க வீரர்கள், இருநூறு திருநங்கை வீரர்கள், நூறு குதிரைவீரகள், பல நூறு சேடிப்பெண்கள் பாதுகாத்த அந்தப்புரம் இத்தனைக் கட்டுக்காவல்களை மீறி, தன்னந்தனியாகச் சென்று இந்த மாயத்தை செய்துவிட்டு வந்து தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த கழுவனை எல்லா கண்களும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன. மூக்கன் கூட அதிர்ந்து போயிருந்தான்,

'டே, ராசா வீட்டு சங்கதியெல்லாம் பேசாதீங்கடா' என்று அனுபவசாலியான ஊர் பெரியாம்பிளை எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அங்கே பின்னதேவன் தலைமையில் கோட்டைத் தலைவனோடு இருபது குதிரை வீரர்கள் வந்தனர்.

கள்வர்நாட்டுத் தலைவனான பின்னதேவனை பார்த்த ஊர் பெரியாம்பிளை, 'ஐயா' என்று அவர் அருகே சென்று நின்றார்.

'அடேய், நேத்து இரவு ராணிகிட்டேயிருந்து முத்திரை மோதிரம் களவு போயிடுச்சி. இதை இந்த ஊர்க்காரங்களைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது. வேற எவனுக்கும் அந்த அளவு திறமையோ, விவரமோ, தைரியமோ கிடையாது.’ என்றார் பின்னதேவன்.

ஊரே மௌனமாக இருந்தது. தன் குடிகளின் போக்கைப் புரிந்து வைத்திருந்த பின்னதேவன், 'டேய், ராஜா சொன்ன சேதியைக் கேளுங்கடா. அவருக்கு அரண்மனை வீர்ங்க மேலதான் கோவம். களவாடினவன் காவலிலே இருக்கிற குறையத்தான் காட்டிக் கொடுத்திருக்கான். அப்பேர்பட்ட சூராதிசூரனைப் பார்க்கணும். முகத்தைக் காட்டி முத்திரை மோதிரத்தைக் கொடுத்திட்டாப் போதுமின்னு சொல்லி அனுப்பினார். பொழுது சாயறதுகுள்ள மோதிரம் வரலையானால், நேத்து காவலுக்கிருந்த நானூறு பேரையும் வெட்டிப் போட சொல்லி விட்டார். கொஞ்சம் தயவு பண்ணுங்கடா,’ என்றார்.

சிறிதுநேரம் பின்னதேவனையே பார்த்த ஊர் பெரியாம்பிளை, 'ஐயா, உங்க சொந்த சாதிக்காரனையே காட்டிக்கொடுத்தா, உங்களுக்கு எத்தனை பொன்னு தரேன்னு ராசா சொன்னாரு?' என்று கேட்டார். முகம் சுருங்கிப்போன பின்னதேவன். 'சந்தேகப்படாதீங்கப்பா. நாம ஒப்படைக்கிற. ஆளுக்கு ஏதாவது ஆகிப்போனா நம்ம ஊர்கோவிலுக்கு என்னை பலி கொடுங்கப்பா,’ என்றார்.

'முடியாது தேவரே, எது நடந்தாலும் யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம். களவு கொடுத்தது ராசாவோட தப்பு. அவரை அபராதம் கட்டிபோட்டு மோதிரத்தை வாங்கிகிட்டுப் போகச் சொல்லுங்க,' ஊர் பேரியாம்பிளை தீர்மானமான குரலில் சொன்னார்.

‘உயிரோடு எரிச்சாலும், தலைகீழே தொங்கப் போட்டு தோலை உரிச்சாலும் உங்க ஆளை நீங்க காட்டிக் கொடுக்க மாட்டீங்க?’ என்று கோபப்பட்டான் கோட்டைத் தலைவன். 'அதான் தெரியுதில்லே? அப்புறம் எதுக்கு இங்க வரணும்?' என்று ஒரு இளவட்டம் எதிர்குரல் கொடுத்தான்.

பின்னதேவன் ‘இப்ப நம்ம ஆளை ஒப்படைக்கலைனா ராஜா மொத்த ஊரையும் கொளுத்திப் போடுவார்,' என்றார்.

'நாந்தேன் எடுத்தேன். இதோ இருக்கு மோதிரம். ராசாகிட்டே நான் வரேன்' திடாரென கழுவன் பேசினான்.

'சந்தோஷமப்பா, உன்னைய பத்திரமா திரும்ப ஊருக்கு கொண்டுவந்து சேர்க்கிறது என் பொறுப்பு,' என்ற பின்னதேவன், 'கிளம்புங்கப்பா,' என்று வீரர்களைப் பார்த்து குரல் கொடுத்தார்,

கழுவனை நடுவே நடக்கவிட்டு அவனைச் சுற்றி வளைத்தவண்ணம் குதிரை வீரர்கள் நகர்ந்தனர்..

'யப்போய், அர்ச்சுனனுக்கு வில்லு, களவாணிக்கு சொல்லு. நாமெல்லாம் களவாணிங்க. சொன்னசொல்லு மாறமாட்டோம். இவனுங்க அரண்மனைக்காரங்க. எதுலேயும் நம்பமுடியாது. நம்பவும்கூடாது. கழுவனைத் தனியா அனுப்பக்கூடாது டோய்,' என்று மூக்கன் உரத்த குரலில் சொன்னான். அனைவரும் அதை ஏற்றுக் கொள்ள, ஊரே திரண்டு கழுவனை அழைத்துச் சென்ற வீரர்கள் பின்னே சென்றது.

குதிரைகளின் பின்னால் நடந்து சென்று கொண்டிருந்த இளவட்டங்களையும், பெரியாம்பிளைகளையும் விலக்கிக் கொண்டு கூட்டத்தின் முன்னால் வந்த பூவாயி, குதிரைகளின் இடையில் புகுந்து கழுவனின் அருகே சென்றாள்.

'ஆரு புள்ளே அது?' குதிரை மீதிருந்த வீரன் அதட்டலாகக் கேட்டான்.

'நானா? கழுவன்கிட்ட சரடு கட்டிக்க போறவ. என்னையத் தவிர வேறெவ அவம்பக்கத்திலேயே நடப்பா?' என்று கேட்டுவிட்டு கழுவனோடு நடக்கத் தொடங்கினாள்.

'நம்ம ராசா பாக்க நல்லா இருக்கிறவங்களைத்தான் கட்டிப்பாரமில்லே? நீ நேத்து பாத்த ராணி எப்படி இருந்தாங்க?' பூவாயி தாழ்ந்த குரலில் கழுவனிடம் கேட்டாள்.

ஏதோ யோசித்தபடி தலைகுனிந்து நடந்து கொண்டிருந்த கழுவன் பூவாயி பேசியதை கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். 'நானாவது ராணியைப் பாக்கிறதாவது? களவுக்கு போகும்போது பொம்பளை நினைப்பும், பேராசையும் வச்சுக்கக் கூடாது,' என்றான் கழுவன்,

சந்தோஷமாகிவிட்ட பூவாயி கழுவனை உரசிக் கொண்டே நடந்தாள். உரசல் யதேச்சையாக நிகழ்ந்ததா, அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது பூவாயிக்கு மட்டுமே தெரியும். கழுவன் அவளைப் பார்த்து சிரித்தான், அவளும் அவனைப் பார்த்து சிரித்தாள். பூவாயி மகுடம் சூட்டிவிட்டாள். கழுவனுக்கு இதுபோதும். இனி தலை போனாலும் கவலையில்லை.

அண்ணாந்து பார்த்தால் கழுத்தே சுளுக்குக் கொள்ளுமளவிற்கு உயரமான யானைககளின் கால்களைப் போன்ற தூண்களைக் கொண்ட மண்டபத்தில் வீரர்களின் பாதுகாப்போடு, சிறு கன்னவாசல் வழியே நுழையக் கூடிய உடல்வாகைப் பெற்ற கழுவன், மதுரை திருமலை நாயக்கர் மன்னர் முன்னால் நிறுத்தப்பட்டான்.

முத்திரை மோதிரமும் அதைக் களவாடியவனும் கைப்பற்றப்பட்டு விட்டதால் மன்னருக்கு கோபம் மறைந்துவிட்டது. சிறிய உடும்பைப் போலிருந்த அவனைப் பார்த்த அவருக்கு சிரிப்பாகவும், அவன் திறமையைப் பார்த்து ஆச்சரியமாகவும் இருந்தது.

அப்போது சேடி ஒருத்தி தங்கத் தாம்பாளத்தில் பொற்கிண்ணங்களில் பழரசம் கொண்டு வந்து மன்னர் அருகில் நின்றாள். ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்ட மன்னர் பழரசத்தைப் பருகினார். கழுவனுக்கும் ஒரு கிண்ணத்தை தரச் சொன்னார். அமைச்சர்களும் கிண்ணங்களை எடுத்து பழரசத்தைப் பருகினர். அரசர் கழுவனுக்கும் ஒரு கிண்ணத்தை தரச் சொன்னார். கள்வனுக்குப் பழரசமா? அமைச்சர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மன்னரை மீறி அவர்களால் என்ன செய்ய முடியும்?

கழுவன் கிண்ணத்தை எடுக்கும்போதோ, குடிக்கும்போதோ, திரும்ப கிண்ணத்தை தாம்பாளத்தில் வைக்கும் போதோ சிறு ஓசை கூட வரவில்லை என்பதை மன்னர் வியப்புடன் கவனித்தார். அவன் களவாடிய விதத்தை விவரிக்கச் சொன்னார்.

சிறு ஓசை கூட இல்லாமல் காற்றில் மிதப்பது போல குதிகாலில் வேகமாக நடப்பதையும், ஒரே வீச்சில் அவனது உடும்பு கோட்டைச் சுவரைப் பற்றிக் கொண்டதையும், எறும்பு புகுமளவிற்கு மட்டுமே மெலிதாக அவன் கன்னக்கோல் கோட்டைச் சுவரைகி கீறியதையும், சிறிய கன்ன வாசலில் அவன் உடல் நுழைவதையும், எந்தத் தடயமுமின்றி அவன் மீண்டும் வந்த வழியே திரும்பியதையும் பார்க்க பார்க்க மன்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

மன்னர் தன் தீர்ப்பை கூறினார், 'முத்திரை மோதிரத்தை களவாடுபவனுக்கு நரகத்தைவிட மோசமான சித்ரவதை சாவுதான் தண்டனை. ஆனால் கழுவன் வெறும் கள்வனல்ல. பெரிய கலைஞன். அதனால் அவனுக்கு அடையாளத் தண்டனையாக மூன்று சவுக்கடிகள் மட்டும் தரப்படும். அதற்குப் பின்னர் மதுரையின் ஊர்க்காவல் தலைமை அவனுக்குத் தரப்படும். அவன் ஊர்காரர்கள் ஒவ்வொரு வீட்டிலும் காவல்கூலி வாங்கிக் கொண்டு களவு, திருடு போகாமல் காவல் செய்து வரவேண்டும். கழுவனைக் கொண்டு வந்த பின்னதேவனுக்கு பரிசாக இரண்டு கிராமங்கள் தரப்படும். இது அரசாணை' என்றார்.

அமைச்சர் கழுவனைப் பார்த்து, 'டேய், உனக்கு ஏதாவது சொல்ல வேண்டி இருக்காடா?' என்று கேட்டார். 'ஐயா, நான் இறங்கிய கன்னவாசலை மூடாமல் அதை அப்படியே விட்டுவிடணும்,' என்றான் கழுவன்.

திடுக்கிட்டுப் போன அமைச்சர் 'ஏண்டா, அது வழியா வேற ஊர் களவாணிங்க உள்ளே நுழைஞ்சால் என்னடா பண்றது?' என்று கேட்டார். 'எங்க காவலில் அது நடக்காதுங்க,' என்று தன்னம்பிக்கையோடு சொன்னான் கழுவன்.

மன்னர் சிரித்தார். கள்வனின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அந்த கன்னவாசல் அதன்பின் மூடப்படவில்லை. அதன் வழியே எவரும் நுழையவுமில்லை. நுழைய முடியவுமில்லை.

கழுவன் சந்தோஷமாக சவுக்கடியைப் பெற்றுக் கொண்டான். அதன்பின் மதுரை ஊர்க்காவலை, கோட்டைக்காவலை அல்ல, ஏற்றுக் கொண்டான். கற்பனையூர் கள்வர்கள் மதுரையின் ஊர்க்காவலர்கள் ஆயினர்,

150 வருடங்கள் கழித்து மதுரையில் பிரிட்டிஷ் ஆட்சி உருவானபோது, ஆங்கிலேய கவர்னர் வி.ஹச், லெவின்ச் பல தலைமுறைகளாக தொடர்ந்திருந்த காவல்முறையை தடுத்து உத்தரவு பிறப்பித்தார், அடுத்தவாரமே, கவர்னர்  பங்களாவில் ஆங்கிலேய சிப்பாய்களின் கட்டுக்காவலை மீறி, லெவின்ச் நல்லமுறையிலும், தகாதமுறையிலும், சேகரித்து வைத்திருந்த அனைத்துப் பொக்கிஷங்களும் கள்வர்களால் களவாடப்பட்டன. பதறிப்போன கவர்னர் தன் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் ஊர் குடிக்காவல் முறையை அனுமதித்தார். அதன்பின் மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மகாராணியின் அரசாங்கம் மதுரையில் போலீஸ்துறையை அறிமுகப்படுத்தும்வரை, கள்வர்களே மதுரையைக் காவல் காத்தனர். சுமார் 250 வருடங்கள் கள்வர்களின் காவலில் மதுரை நிம்மதியாக கண் உறங்கியது.

* * * *

கவனமாக கதையைக் கேட்ட கமலா, ‘களவுள்ள வரை காவல் தேவை. காவலிருந்தால் அங்கு களவிற்கு வாய்ப்புண்டு.திசைகள் வேறானாலும் அடிப்படையில் காவலும், களவும் ஒன்றே,’ என்றாள்.

‘ஒரு தவறான செயல் முழுமையான செம்மை அடைந்தால், நேரெதிரானதாக மாறும். கள்வனின் முழுமையான களவு திறமை பாராட்டப்பட்டு அவனுக்கு காவல் வேலை தரப்பட்டது, பரம்பரை களவு குணத்தை மனஉறுதி கொண்டவனால் மாற்ற முடியும். தனிமனிதன் மாற முயன்றால் சமூகம் எதிர்க்கும். முன்னோடியை சமூகம் ஏற்றால், அனைவருக்கும் நன்மை உண்டு. சுயார்ப்பணம் செய்யும் மனிதன் ஊருக்குத் தலைவனாவான்,’ என்றேன்

‘ஊருக்காக செயல்படாத மனிதன் காதலுக்காக செயல்படுவான். உயிரைப் பொருட்படுத்தாத சாகசத்தை காதல் செய்ய வைக்கும்,’ என்றாள் கமலா.

‘பெண்ணுக்கு பொருளும், பாதுகாப்பும் முக்கியம். ஆணுக்கு பெண்ணும்,அவள் பாராட்டும் முக்கியம்,’ என்றேன்.

'சரி, சரி, உங்களை மனமாரப் பாராட்டுகிறேன்,' என்று கூறி சிரித்தாள் கமலா.

(முற்றும்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms