மீன்கொடி- முன்னுரை

எளிய மனிதனின் வாழ்வுகூட எத்தகைய கற்பனைக் கதையையும் விட அதிக விசித்திரமான சம்பவங்களும், நம்ப முடியாத திருப்பங்களும் கொண்டதாக இருக்கிறது. மனித வாழ்வில் நடக்கும் உண்மை நிகழ்ச்சிகளை கவனிப்பவருக்கு, ஒப்பிடுகையில் உலகப் பெருநாவல்களும் சிறுபிள்ளைத்தனமானவைதான் என்பது புரியும்.

பொதுவாக கதை எழுதும்போது ‘இதில் வரும் மனிதர்களும், சம்பவங்களும் கற்பனையே, எவரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுட்டவில்லை’ என்று பொறுப்புதுறப்பு அறிவிப்பார்கள். ஆனால், நான் எந்த பொறுப்பையும் துறக்கவில்லை.  மீன்கொடி நாவலில் வரும் பல கதாபாத்திரங்கள், எனக்கு நிஜமான என் அக உலகில்  நேற்று வாழ்ந்த, இன்றும் வாழும் உண்மையான மனிதர்கள். மெய்யென்ற ஒன்றில்லாமல் பொய் பிறக்க முடியாது என்பது படைப்பாளிகள் அறிந்த உண்மை. நிஜவுலகில் நடக்கும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில்தான் புனைவுலகம் பிறக்கிறது. வாசகரின் தீவிர ஆர்வத்திற்கும், பக்குவத்திற்கும் புனைக்கதையை அவருக்கேற்ற நிஜக்கதையாக மாற்றும் வல்லமை உண்டு.

இன்னும் சொல்லப் போனால் வாழ்வின் விளையாடலில் உருவான பல விந்தையான நிகழ்ச்சிகளை வேறொரு நாவலுக்காக இங்கே எழுதாமல் விட்டுவிட்டேன். அவற்றையும் எழுதியிருந்தால் ‘இது குழந்தைகளுக்கான மாயதேவதை கதை’ என்று வாசகர்கள் நினைத்து விட்டிருப்பார்கள். வாழ்வு செயல்படும் விதத்தை நம்பத் தயங்கும் நல்லவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்ந்தால் மீன்கொடி நாவலை விட பல மடங்கு சிறந்த மாயதேவதை கதையை அவர்களே எழுதி விட முடியும்.

வாசகர்களில் பலர் ‘இது என்ன, நம் குடும்பத்தில் நடந்ததை அப்படியே எழுதி விட்டார் போலிருக்கிறதே’ என்று திகைக்கக் கூடும். ‘நம் வீட்டில் நடப்பது எவருக்கும் தெரியாத ரகசியம்’ என்ற மனமயக்கம் இருக்கும்வரை திகைப்பு அகலாது. பணம், பெண், பதவி, உறவு சம்பந்தப்படும் இடங்களில் வீட்டிற்கு வீடு ஒரே கதைதான். கதாபாத்திரங்களின் பெயர்களும், காலமும், இடமும்தான் வேறு.

காதல் தெய்வங்களான ரதி, மன்மதன் பவனி வரும் தேரின் உச்சியில் தென்றல் காற்றில் படபடப்பது மீன்கொடி. உலகை வென்று சொக்கநாதனின் காவல் தெய்வமாக நிற்கும் அங்கயற்கண்ணியின் கோட்டையில் பறப்பது மீன்கொடி. பெண்ணாகப் பிறந்து வந்த பெருந்தெய்வத்தின் பேரருளால் வாழ்வில் சாதனை செய்த தீராக்காதலனின் கதை எனது மீன்கொடி.

என்னைப் போன்ற எளியவர்களின் பொருளறியாப் பெருவாழ்வில் ஸ்ரீ அரவிந்தரின், அன்னையின் ஆன்மீகக் கொடியை ஏற்றி வைக்கும் கர்மயோகி அவர்களுக்கு இந்த நாவலை சமர்ப்பணம் செய்கிறேன்.

சமர்ப்பணன்

29 பிப்ரவரி 2016

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms