01. மீசை தாத்தா ஓடிவிட்டார் - மீன்கொடி

எண்பது வயதான எங்கள் மீசை தாத்தா, பேரர்களின் பாகப் பிரிவினைக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார். அவர் போனதால்தான் மற்றவர்களுக்கு பாகப்பிரிவினை செய்யும் துணிச்சலே வந்தது என்றுகூட சில உறவினர்கள் பேசிக் கொண்டார்கள்.

ஓடிப் போவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே ‘எல்லோரையும் விட பரமார்த்தன்தான் அதிர்ஷ்டக்காரன்’ என்று என்னை பற்றி மீசை தாத்தா அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். அவரையும், என் மனைவி ஜமுனாவையும் தவிர வேறு எவரும் அதை நம்பவில்லை.

வருமானமில்லாத எனக்கு பாகப் பிரிவினையில் கிடைத்தவை மயானத்தின் நடுவிலிருந்த எவரும் வாங்கத் துணியாத நிலம், இடிந்து விழப் போகும் எண்பது வயதான ஓட்டு வீடு, மற்றும் கடன்கொடுத்தவர்கள் மட்டுமே வந்து போகும் ஓடாத பழைய கம்பனி. ஆனாலும் என்னை அதிர்ஷ்டக்காரன் என்றுதான் ஜமுனா நினைத்தாள். ‘தாத்தா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்’ என்றாள்.

மீசை தாத்தா ‘எண்பதில் ஓடிப்போய் விட்டார்’ என்பது என் மூத்தவர்களின் சொல்லாட்சி. அவர் துறவறம் போய் விட்டார் என்று நான் நினைத்தேன். ‘நிறைந்த மனத்துடன் தனக்குரிய முழுமையை தேடி சென்றிருக்கிறார், நிச்சயம் திரும்ப வருவார்’ என்று ஜமுனா கூறினாள். முழுமை, பூரணம் என்ற வார்த்தைகளை ஆன்மீகவாதிகளும், தத்துவமேதைகளும் ஆற, அமர்ந்து சாவகாசமாக பேசி எப்படி வேண்டுமானாலும் வரையறை செய்து கொள்ளட்டும். அது அவர்கள் பிரச்சினை.

என் குடும்ப அமைப்பு சற்று சிக்கலானது. எனக்கு இரண்டு அண்ணார்களும், ஒரு அக்காவும் உண்டு. அவர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே திருமணமாகிவிட்டது. சில வாரங்களுக்கு முன்புதான் எனக்கு திருமணமாயிற்று. மீசை தாத்தா எனக்காக செய்த எண்ணற்ற உதவிகளின் சிகரம் ஜமுனாவை போன்ற ஒரு பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தது.

எனக்கு ஐந்து வயதாகும்போது, இருபது வருடங்களுக்கு முன்பு, என் அம்மாவிற்கு தீவிர ஆன்மீக நாட்டம் உண்டாகிவிட்டது. மீசை தாத்தாவின் மொழியில் ‘கிறுக்கு பிடித்து விட்டது’. அம்மா இமயமலை பக்கமிருந்த ஆசிரமத்திற்கு கிளம்பி விட்டார். அப்பாவிற்கு அம்மா மீது தீராக்காதல். அம்மாவோடு அவரும் போய்விட்டார். போகுமுன் குழந்தைகளான எங்கள் நான்கு பேரையும் மீசை தாத்தாவிடம் ஒப்படைத்து விட்டுப் போனார். சொத்து பிரச்சினை, பத்திரம், உயில் என்று எதை பற்றியும் அப்பா கவலைப்படவில்லை. ஏதாவது இருந்தால்தானே அதை பற்றிய கவலை உண்டாகும்?

ஆனால் மீசை தாத்தாவிடம் சில சொத்துக்கள் இருந்தன. எல்லாம் சுய சம்பாத்தியம். அப்பா, அம்மா எங்கோ சென்ற பின், வேறு ஆதரவோ, வசதியோ இல்லாத தூரத்து உறவுப் பெண்ணை எங்களையும். வீட்டையும் கவனித்துக் கொள்ள நியமித்தார். அவரை கவர்னசத்தை என்று அழைத்தோம். அவர் வேலைக்காரி அல்ல. எங்கள் குடும்பத்தில் ஒருவர்.

மீசை தாத்தா இருக்கும்போது கவர்னசத்தை பிரியமாக பேசுவார். இல்லாதபோது சிடுசிடுப்பார். நாளாக, நாளாக தாத்தாவையும் எதிர்த்துப் பேச ஆரம்பித்தார். ஆனால், அதற்குள் நாங்கள் வளர்ந்து விட்டிருந்தோம். ‘பாவம், போக்கற்றவள். வேறு எங்கே போய் இயலாமையை வெளிப்படுத்த முடியும்!’ என்று கூறி மீசை தாத்தா கவர்னசத்தையை இடைவிடாது மன்னித்துக் கொண்டேயிருந்தார்.

கவர்னசத்தையை மட்டுமல்ல. அவரால் எவரையும் மன்னிக்க முடியும். ‘நான் கடவுளையே மன்னித்தவனடா’ என்று சொல்லிக் கொள்வார். அதைப் பற்றி எனக்கு தெரியாது என்றாலும் அவருக்கு விசாலமான மனம் என்பது தெரியும்.

மீசை தாத்தா எங்கோ போகுமுன் ‘பிரிக்க விரும்பினால் என் சொத்துக்களை நீங்கள் நான்கு பேரும் சுமுகமாக பிரித்துக் கொள்ளுங்கள். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஜமுனாவிற்கு தெரியும்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, பல வெற்று காகிதங்களிலும், வெற்று பத்திரங்களிலும் கையெழுத்து போட்டு தந்து விட்டுப் போனார். தன் நம்பிக்கைக்குரிய நண்பர் வாசுதேவய்யா மூலம் அவற்றை ஜமுனாவிடம் ஒப்படைத்து விட்டுப் போனார். நேரில் பார்த்து சொல்லிக் கொண்டு போகக் கூடாது என்பதால் அப்படி செய்தார் என்று நினைத்தேன்.‘ நேரில் பார்த்தால் போக மனம் வராது என்பதால் அப்படி செய்தார்’ என்று ஜமுனா சொன்னாள்.

சித்தப்பாவிற்காகவும், அப்பாவிற்காகவும் மாதாமாதம் ரெகரிங் டெபாசிட்டில் ஒரு தொகையை மீசை தாத்தா சேமித்து வந்திருக்கிறார் என்பது போன்ற பல விஷயங்கள் அப்போதுதான் எனக்கும், ஜமுனாவிற்கும் தெரிய வந்தது.

‘நேற்று வந்த ஜமுனா முக்கியமாகிவிட்டாளா? சின்ன பெண் கையில் அதிகாரத்தை தருவது என்ன நியாயம்?’ என்று என் மூத்தவர்களுக்கு கோபம் வந்து எங்களோடு பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். ஜமுனா என் மூத்தவர்களிடம் ரசீது வாங்கிக் கொண்டு மீசை தாத்தாவின் ஒரு சில தனிப்பட்ட ஆவணங்களைத் தவிர எல்லா பத்திரங்களையும், காகிதங்களையும் அவர்களிடமே கொடுத்துவிட்டாள். அதன்பின்தான் அவர்கள் மீண்டும் எங்களோடு பேச ஆரம்பித்தார்கள்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms