02. மீசை தாத்தாவின் வரலாறு - மீன்கொடி

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த மீசை தாத்தா, பள்ளியில் படிக்கும்போது, தேசிய காங்கிரஸ் ஊர்வலத்தில் முன்னணியில் நின்று வந்தே மாதரம் கோஷம் போட்டு பிரிட்டிஷ் போலீசிடம் முக்கால் மணி நேரம் பிரம்படி வாங்கியிருக்கிறார்.

அடிக்கடி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, சுதந்திர இயக்கத்திற்காக தன் வயதுக்கு மீறிய வேலைகளை செய்ததால் ‘எதிர்காலத்து பயங்கரவாதி’ என்று ஆங்கிலேய போலீஸ் ஆய்வாளரால் கோப்பில் சிவப்பு மையில் சிறப்பு குறிப்பு தரப்பட்டு சில வாரங்கள் சிறுவர்கள் சீர்திருத்த மையத்தில் அடிவாங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்படியும் திருந்தவில்லை. ‘நமக்கெதுக்கடா இந்த வம்பெல்லாம்?’ என்ற பெரியவர்களின் அறிவுரைகளை அவர் பொருட்படுத்தியதே இல்லை.

பின்னாளில் சுதந்திரப் போராட்ட தியாகிக்கான மாத ஓய்வூதியம் தரப் போவதாக அவருக்கு பழுப்பு நிற உறையில் அரசாங்க கடிதம் வந்தபோது ‘இப்படி செய்தால் தேச பக்தி எப்படி வாழும்?’ என்று கூறி அதை கிழித்தெறிந்துவிட்டார். ஆனால் ஒரே ஒரு முறை கூட தான் நாட்டிற்காக செய்தவற்றை இன்றுவரை எவரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டதில்லை.

ஜமுனா ஒரு முறை இது பற்றி கேட்டபோது மீசை தாத்தா ‘நம் வீட்டு வேலையை நாம்தான் செய்ய வேண்டும். அதில் சொல்லிக் காட்ட என்ன இருக்கிறது! மற்றவர்கள் நாட்டிற்காக என்னவெல்லாம் செய்தார்கள்! நான் செய்தது சிறுபிள்ளை விளையாட்டு’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டார்.

கம்பனியில் இருக்கும் அவருடைய அலமாரியை அடுக்கி வைக்கும்போது கதர் குல்லா ஒன்றையும், விவேகானந்தரின் படம் ஒன்றையும் பத்திரமாக மீசை தாத்தா வைத்திருப்பதை தான் பார்த்ததாக ஜமுனா என்னிடம் ரகசியமாக சொன்னாள்.

சுதந்திரம் வந்தபின், மீசை தாத்தா சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் படித்து பட்டம் வாங்கிக் கொண்டார். நாட்டைப் பற்றி பெரிய கனவுகள் வைத்திருந்தார். பல உண்மையான தேச பக்தர்களைப் போலவே சிறிது காலத்தில் ஆளுங்கட்சி மீது நம்பிக்கை இழந்து கம்யூனிஸ்டாக இருந்து பார்த்தார். அப்போது இந்திய போலீசிடம் அடிபட்டார். தேசபக்தர் ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கினார். இந்தியர்களிடம் அதிகமாக அடி வாங்கினார். கம்யூனிசத்திலும் நம்பிக்கை இழந்தபின் எந்த இயக்கத்தோடும் தன்னை தீவிரமாக பிணைத்துக் கொள்ளவில்லை.

பிரிவினை பேசிய கட்சிகளை ஆரம்பம் முதலே அவருக்கு பிடிக்கவில்லை. ‘விரலில் வீக்கம் வந்தால் கையை வெட்டச் சொல்லும் வீணர்கள்’ என்பார். மதராஸ் மாகாணமே பிரிவினை பேசிய தலைவர்களின் மேடைப் பேச்சை வியந்து பாராட்டியபோது, அதை மீசை தாத்தா கடுமையாக விமரிசனம் செய்தார்.‘தமிழா பேசுகிறார்கள்? கண்றாவி. எனக்கு தூக்கம் வரவில்லை என்றால் இவர்கள் பேச்சைத்தான் கேட்கப் போவேன். முக்கியத் தலைவர்கள் பேசினால் இரண்டு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம்’ என்பார் மீசை தாத்தா. ‘இந்தியாவின் மீது அக்கறை இல்லாத இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தால் மற்ற தேசத்து அரசியல்வாதிகளைப் போல வழிப்பறி கொள்ளை அடிக்கமாட்டார்கள். வழியையே கொள்ளை அடித்து விடுவார்கள்’ என்று மீசை தாத்தா கூறியது பிற்காலத்தில் அப்படியே நடந்தது.

அரசியலில் ஆர்வம் இழந்தபின் திருக்குறள், திருவாசகம், வள்ளலார் என்று தன் வாழ்க்கையை மீசை தாத்தா சுருக்கிக் கொண்டார் அல்லது விரிவாக்கிக் கொண்டார். கூடவே பெரிய மீசையும் வளர்த்துக் கொண்டார். மீசை தாத்தா என்ற பெயர் பிற்காலத்தில், அவருக்கு அறுபது வயதாகும்போது, என்னால் அளிக்கப்பட்டது.

கம்யூனிசத்தை காதலித்தபோது மீசை தாத்தா சில வாரங்கள் தலை மறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது நண்பர் ஒருவர் தாத்தாவை தன் வயல் குடிசையில் ஒளித்து வைத்து, ரகசியமாக கூழுற்றி காப்பாற்றினார். பின் தாத்தா போலீசில் பிடிபட்டு, அடிபட்டு இயக்கத்தை விட்டு விலகியபின், நண்பர் தன் தங்கையை மீசை தாத்தா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்படித்தான் பாட்டியோடு திருமணமாயிற்று. அப்போது மீசை தாத்தாவிற்கு இருபத்தி மூன்று வயது. ‘பெரிய மீசை பயமாக இருக்கிறது. நான் இவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன்’ என்று பாட்டி பயந்து மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தபோது ‘என்னோடு பழகிப் பார். மீசை பிடிக்கவில்லை என்றால் எடுத்து விடுகிறேன்’ என்று மீசை தாத்தா சத்தியம் செய்தபின்தான் பாட்டி சந்தோஷமாக தாலி கட்டிக் கொண்டார். சில நாட்களுக்கு பின் பாட்டி ‘ஆண்பிள்ளைக்கு மீசைதான் அழகு’ என்று பேச ஆரம்பித்து விட்டார். பாட்டி அப்படி சொல்லும்போதெல்லாம் புன்னகையோடு தாத்தா மீசையை நீவி விட்டுக் கொள்வார் என்று பாட்டி சொன்னதுண்டு. அது உண்மையா என்று எனக்குத் தெரியாது.

கல்யாணமான அடுத்த வருடமே என் அப்பாவும், அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து சித்தப்பாவும் பிறந்தனர்.

மீசை தாத்தா மாத சம்பள வேலைக்கு போனதே இல்லை. ‘நாடு முன்னேற வேண்டுமானால் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும், அடுத்தவரிடம் வேலை செய்யக் கூடாது’ என்று தாத்தா எல்லோரிடமும் சொல்வாராம். எவரும் இவர் பேச்சை கேட்டதில்லை.

‘அதை நீ முதலில் செய்’ என்று சிலர் கேலியாக சொல்ல மீசை தாத்தா தன்னிடமிருந்த சொற்ப விவசாய நிலத்தையும், அதை ஒட்டிய, குடும்பம் குடியிருந்த வீட்டையும் விற்றபோது, பாட்டியின் அண்ணார் ஊர் பெரிய மனிதர்களை கூட்டிக் கொண்டு நியாயம் கேட்க வந்தார். வீதியில் நின்று கூச்சல் போட்டு மீசை தாத்தாவை அவமரியாதையாகப் பேசினார். ‘உன்னை நம்பியா பெண் கொடுத்தோம்? நிலத்தையும், வீட்டையும் நம்பித்தானே பெண் கொடுத்தோம். பொறுப்பில்லாமல் எங்கள் வீட்டு மகாராணியை நடுத்தெருவில் நிறுத்திவிட்டாயே’ என்று ஓலமிட்டார். அதை மீசை தாத்தா பொருட்படுத்தவில்லை.

ஆனால் ’மீசை வைத்தால் மட்டும் ஆண்பிள்ளை ஆகிவிட முடியாது. எனக்கும், என் பிள்ளைகளுக்கும் வீடு வேண்டும். அண்ணார் எனக்காக நியாயம் கேட்கிறார். பதில் சொல்லுங்கள்’ என்று கூறி எல்லோர் முன்பும் உருண்டு புரண்டு பாட்டி அழுதது மீசை தாத்தாவின் மனதை ஆழத்தில் புண்படுத்தியது.

வீடும், நிலமும் கைமாறியதால் ‘பாதுகாப்பு போயிற்றே’ என்று மூன்று நாட்கள் ஒருவேளையும் சாப்பிடாமல் அழுத பாட்டி, மீசை தாத்தா புதிய நிலமும் வீடுகளும் வாங்கப் போகிறார் என்பது தெரிந்ததும் சிரித்துக் கொண்டே அடுத்த மூன்று நாட்களும் தினம் ஆறுவேளை சாப்பிட்டார்.

விவசாய நிலத்தை விற்று வந்த பணத்தில் மீசை தாத்தா சூளைமேட்டில் ஒரு கிரவுண்டு நிலத்தை சமஸ்கிருத பண்டிதரிடமிருந்து வாங்கினார். அந்த நிலத்தின் மேல் அருகருகே இருந்த பழையகாலத்து ஓடுவேய்ந்த சிறிய வீடுகள் இரண்டும் நிலத்தோடு கிடைத்தன. அப்போது அவருக்கு வயது இருபத்தி ஏழு. ஒரு வீட்டில் தான் குடியேறினார். மற்றொரு வீட்டை தன் கம்பனி அலுவலகம் என்றார். பெயரிடப்படாத தன் கம்பனி என்ன செய்யப் போகிறது என்பது அதை ஆரம்பிக்கும்போது அவருக்கே தெரியாது.

சில நண்பர்கள் ‘புத்தகம் விற்றால் நல்ல லாபம் வரும்’ என்றனர். அதைத் தவறாகப் புரிந்து கொண்ட மீசை தாத்தா அறம், ஆன்மீகம், பண்பாடு, கலை பற்றிய அறிவார்ந்த புத்தகங்கள் போட ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார். இதைக் கேள்விப்பட்ட பாட்டி ‘இவருக்கு புத்தி இப்படி கெட்டு போக வேண்டுமா! எடுக்க எடுக்க நெல் வரும் நிலத்தை விற்றுவிட்டு, ஒரு தடவை கூட விற்க முடியாத புத்தகத்தில் என்ன சம்பாதிக்கப் போகிறார்!’ என்று கேலி செய்ய, மீசை தாத்தா சிந்தனைவயப்பட்டு விட்டார். ‘சினிமா, ஜோதிடம், மர்மம் பற்றி புத்தகம் போட்டால் நம் மக்கள் பணம் கொடுத்து திரும்பத் திரும்ப வாங்குவார்கள். காமக்கதை புத்தகம் விற்பவனை மக்கள் குறுகிய காலத்தில் குபேரனாக்கி விடுவார்கள். நூலகங்களில் புத்தகம் வாங்குவது கணக்கு காட்டத்தான். மனிதன் மாறாதவரை அறிவார்ந்த புத்தகங்களை கரையான்கள் மட்டுமே வாசிக்கும்’ என்பதை புரிந்து கொண்டார்.

எடுக்க எடுக்க நெல் வர வேண்டும். மீண்டும் மீண்டும் எதை விற்க முடியும்? செலவாகும் அல்லது உடையக் கூடிய பொருளைத்தான் அப்படி விற்க முடியும். மீசை தாத்தாவின் கொள்கையின்படி அது அறிவை வளர்க்கும் பொருளாகவும் இருக்க வேண்டும். ‘எதை வேண்டுமானாலும் விற்க நான் வெறும் வியாபாரி அல்ல’ என்று ஒரு முறை சொன்னார். அப்படிப்பட்ட பொருளை தேடி கொண்டிருந்தபோது சிறு குழந்தையாக இருந்த என் அப்பா கண்ணாடி தம்ளர் ஒன்றை கீழே போட்டு உடைத்து விட்டார். அவர் முதுகில் இரண்டு அடி போட்ட பாட்டி ‘உங்கள் பிரிய மகன் இந்த மாதம் மட்டும் மூன்று கண்ணாடி தம்ளர்களை உடைத்திருக்கிறான். எத்தனை தம்ளர்கள்தான் வாங்குவது!’ என்று தாத்தாவிடம் புகார் செய்தார்.

அதைக் கேட்ட மீசை தாத்தாவிற்கு கோபம் வரவில்லை. திட்டம் வந்தது. ‘பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள ஆய்வுக் கூடங்களுக்கான ரசாயனப் பொருட்களையும், கண்ணாடிக் குடுவைகள், குழாய்கள், பியூரட், பிப்பெட் போன்ற பொருட்களையும் விற்றால் என்ன?’ என்று தோன்றியது. மீசை தாத்தாவோடு படித்த பலர் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாக இருந்தனர். அவரது நண்பர்கள் சிலர் கல்வித் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ‘பொருள் தரமாக இருந்தால் வாங்குவதில் எங்களுக்கு ஒரு தயக்கமும் இல்லை’ என்றனர்.

அப்படித்தான் பாரதம் லாப்ஸ் ஆரம்பமாயிற்று. முதலாளி, தொழிலாளி, காவலாளி, கணக்காளி எல்லாம் மீசை தாத்தாதான். திருநின்றவூர் பூசலார் மனக்கோவில் கட்டும்போது கையில் பணமில்லை. அதனால் கல்லுடைக்கும் கலையிலிருந்து, சிற்பம் செதுக்கும் கலை வரை எல்லாவற்றையும் அவரே முறைப்படி கற்றுக் கொண்டு மனதில் செய்தாராம். மீசை தாத்தாவும் கிட்டத்தட்ட அப்படித்தான் செயல்பட்டார். உலையில் ஊதி கண்ணாடி குடுவை உருவாக்கும் முறை முதற்கொண்டு கழிப்பறை கழுவும் கலை வரை எல்லாவற்றையும் தாத்தா கற்றுக் கொண்டார். எப்போது என்ன சாப்பிடுவார், எங்கே எப்படி தூங்குவார் என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. அவருக்கே தெரியாது. உயிர் வாழ ஒரு கப் காபி, ஆறடி நீள தரை போதும் அவருக்கு. அந்த காலத்தில் டீ பிரபலம் இல்லை என்பதால் காபி விரும்பி குடிப்பார். ‘மனுஷர் குடம், குடமாக காபி குடிப்பார். கொட்டை அரைத்து கையே தேய்ந்து விட்டது’ என்று பாட்டி சலித்துக் கொள்வாராம். கிராமங்களுக்கு போக நேர்ந்தால் பனையோலை கிண்ணத்தில் பதநீர் பருகுவார்.

எவரையும் அவர் சார்ந்திருக்கவில்லை. தேய்பிறையில் கம்பனியில் உட்கார்ந்து பொருள் செய்தார். செய்த பொருளை வளர்பிறையில் தென்னிந்தியா முழுவதும் சுற்றி விற்றார். மூன்றே வருடங்களுக்குள் கம்பனி வளர்ந்துவிட்டது.

எங்கள் கம்பனி பொருளின் தரத்தைப் பார்த்த ஒரு பிரெஞ்சு கம்பனி தன் யந்திரங்களுக்கு தேவையான கண்ணாடி பாகங்களை தயாரிக்கும் வேலையைத் தந்தது. சில காலம் கழித்து ‘எங்கள் ஆராய்ச்சிகூட யந்திரங்களை நீங்கள்தான் இந்தியாவில் விற்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது. நூறு ரூபாய்க்கும், இருநூறு ரூபாய்க்கும் ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று கண்ணாடிக் குடுவைகள் விற்றுக் கொண்டிருந்த மீசை தாத்தா டாடா கெமிக்கல்ஸ், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு சென்று ஒரு லட்சத்திற்கும், இரண்டு லட்சத்திற்கும் விற்க தொடங்கினார். விற்கும் அலைச்சல் வெகுவாக குறைந்தது. விற்றதற்கான பணத்தை வசூல் செய்யும் அலைச்சல் அதைவிட அதிகமாக குறைந்தது. நூறு பள்ளிக் கூடங்களுக்கு போய் விற்றால் வரும் தொகை ஒரே ஒரு யந்திரத்தை டாடா கம்பனிக்கு விற்பதில் கிடைத்தது.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீசை தாத்தா கட்டிய புதிய தொழிற்சாலையில் நாற்பது பேர் யந்திரங்களில் வேலை பார்த்தனர். சூளைமேடு அலுவலகத்தில் இருபது பேர் நெருக்கி உட்கார்ந்து வேலை பார்த்தனர். அறுபது குடும்பங்கள் நன்றாக வாழ்ந்தன.

மீசை தாத்தா தியாகராய நகர் போக் சாலையில் இரண்டு கிரவுண்டுகளும், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இரண்டு கிரவுண்டுகளும், அண்ணாமலைபுரம் ராமசாமி சாலையில் இரண்டு கிரவுண்டுகளும் வாங்கினார். தன் முப்பது வயதிற்குள் சொற்ப தொகைக்கு அவற்றை வாங்கி விட்டிருந்தார். நிலம் வாங்க அந்த காலத்தில் நாட்டில் பெரிய போட்டி இருக்கவில்லை. அன்று காடு போலிருந்தவை இன்று கனவான்களும், தனவான்களும் வசிக்கப் போட்டி போடும் பகுதிகள்.

பெரிய இடமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று மீசை தாத்தா நினைத்தபோது, அவசரத் தேவை என்று கெஞ்சிய நெருங்கிய நண்பர் வாசுதேவய்யாவின் கனபாக்கத்தில் இருந்த பத்து ஏக்கர் நிலத்தை, பார்க்காமல், விசாரிக்காமல் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். அன்று அது காடு போலில்லை. காடேதான்.

அந்த நிலத்தை வாங்கி பல மாதங்கள் கழிந்த பின்புதான், அது மயானத்தால் சூழப்பட்ட, போக வர பாதை இல்லாத, விற்பதை கற்பனை செய்யவும் முடியாத நிலம் என்பதையும், சொந்தமாக சமாதி கட்டிக் கொள்ள மட்டும் ஏற்ற இடம் என்பதையும் தெரிந்து கொண்டார். ஆனாலும் நட்பை முறித்துக் கொள்ளவில்லை. ‘அவன் விற்பவன். குறைகளை சொல்லமாட்டான். வாங்கிய நான்தான் விசாரித்திருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்.

வியாபாரத்தை அவர் ஓரளவிற்கு மேல் விரிவுபடுத்தவில்லை. வருடாவருடம் வந்த பணத்தை சேர்த்து வைத்து முப்பது வருடங்களுக்குள் மூன்று வீடுகள் கட்டினார். வீடுகள் என்றா சொன்னேன்? அவை பங்களாக்கள்.

முதலில் கட்டிய தியாகராய நகர் பங்களாவில் குடியேறினார். மற்ற இரண்டு பங்களாக்களையும் பூட்டி வைத்திருந்தார். ‘வாடகைக்கு விட்டால் வருமானம் வருமே’ என்று நண்பர்கள் சொன்னபோது மறுத்துவிட்டார். ‘குடியிருக்க வருபவன் எப்படிப்பட்டவன் என்பது தெரியாது. என் பிள்ளைகள் வாழப்போகும் வீடுகள் சுத்தமாக இருக்கட்டும்’ என்று கூறிவிட்டார்.

ஆனால் அவர் பிள்ளைகள் அந்த வீடுகளில் வாழவில்லை. சித்தப்பா மட்டும் தன் வைப்பாட்டிகளுடன் சில நாட்கள் ஆக்கிரமிப்பு செய்து பின் நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்டார்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms