03. மீசை தாத்தாவின் பிள்ளைகள் - மீன்கொடி

மீசை தாத்தாவிற்கு இரண்டு ஆண்பிள்ளைகள். இருவருமே தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு ரூபாய் கூட சம்பாதித்ததில்லை. அவர்களுக்காக இதுவரை தாத்தாதான் சம்பாதித்து வந்திருக்கிறார். அவர் பிள்ளைகள் எந்த கூச்சமும் இல்லாமல் செலவு செய்து வந்திருக்கிறார்கள்.

என் அப்பா மூத்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் வாங்கினார். கவிதை எழுதுவார். காவியம் வாசிப்பார். வேறு வகையாக சொல்வதென்றால் சம்பாதிக்கும் திறனற்றவராக இருந்தார். சம்பாதிக்கவில்லை என்பதால் காதல் வராமலா இருக்கிறது? உறவுப் பெண்ணான என் அம்மாவை தன் இருபதாவது வயதில் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ‘கல்யாணத்திற்கு என்ன அவசரம்? இன்னும் சில வருடங்கள் போகட்டுமே’ என்று மீசை தாத்தா சொன்னபோது அப்பா ‘கல்யாணம் பண்ணி வைக்காவிட்டால் நான் வீட்டை விட்டு வெளியே போய் விடுவேன்’ என்று மிரட்டினார். ‘எங்கோ ஒழிந்து போகட்டும், இனி தண்ட செலவு இருக்காது’ என்றார் மீசை தாத்தா. பிள்ளைக்கு ஆதரவாக பாட்டி மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். தாத்தா கல்யாணத்திற்கு சம்மதித்த பிறகுதான் பாட்டி சந்தோஷமாகி மீண்டும் சாப்பிடத் தொடங்கினார்.

அம்மாவிற்கு கிருஷ்ண பிரேமை. மனதிற்குள் ராதாராணி என்று நினைப்பு. அம்மா கிருஷ்ண பக்தையாக இருந்ததால் அப்பாவும் கிருஷ்ண பக்தரானார். என் அப்பாவிற்கு அம்மாதான் குடும்பதெய்வம், குலதெய்வம், இஷ்டதெய்வம் எல்லாமே. அம்மா, அப்பா இருவரும் தினமும் ஏதாவது பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்தனர். அதை ‘ஆணவதானம்’ என்று மீசை தாத்தா சொல்வார். பாலும். நெய்யும், வழிந்தோடும் கல்யாண விருந்து தினமும் கிடைக்கும் என்பதால் அந்த பகுதியில் ஏராளமானவர்களுக்கு கிருஷ்ண பக்தி வந்துவிட்டது. தங்கள் பக்தி மற்றவர்களை ஈர்க்கிறது என்று அம்மாவும், அப்பாவும் நம்பினர். பூஜை மட்டுமே செய்து கொண்டிருக்காமல், என் பெற்றோர்கள் அவ்வப்போது காமத்திலும் கவனம் செலுத்தியதில் நாங்கள் நால்வரும் பிறந்தோம். தாத்தாவிற்கு நாற்பத்தைந்தோ, நாற்பத்தியாறோ ஆகும்போது புருஷண்ணார் பிறந்து விட்டார். ‘உன் அப்பாவின் பிடிவாதத்தால் வாலிபனாக இருக்கும்போதே தாத்தாவாகி விட்டேன்’ என்று மீசை தாத்தா சொல்வதுண்டு.

என் சித்தப்பாவிற்கு பட்டப் படிப்பை முடிக்குமுன்பே குலுக்கி நடக்கும் குமரிகள் மீதும், துள்ளியோடும் குதிரைகள் மீதும், தள்ளாட வைக்கும் குடியின் மீதும் பிடிப்பு வந்து விட்டது. இந்த மூன்றில் ஒன்றின் மீது ஆசை வந்தாலே குடும்பம் திவாலாவதை தடுக்க முடியாது. அவர் மூன்றையும் ஒரே சமயத்தில் தழுவினார். காலையில் தயாராகி வாடகை காரில் கோடம்பாக்கத்திற்கு போனால் கணிசமான தொகைக்கு புத்தம்புதிய பெண் கிடைப்பாள். அந்த சந்தோஷத்தை கொண்டாட அவளையும் அழைத்துக் கொண்டு மதியம் கிண்டி போய் குதிரை பந்தயத்தில் பெரிய தொகையை இழப்பார். அந்த துக்கத்தை மறக்க மாலையில் மவுண்ட் ரோடில் இருக்கும் கனவான்களின் கிளப்பில் மேல்நாட்டு மது அருந்தி மீதியிருக்கும் தொகையை செலவழிப்பார். நண்பர்களிடம் கடன் வாங்கி வாடகை காரில் வீடு திரும்புவார்.

தினமும் புது மாப்பிள்ளையாக சாந்தி கல்யாணம் நடத்தி வந்ததால் சித்தப்பா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் நண்பர் ‘கல்யாணம் செய்து கொண்டால் செலவு குறையும்’ என்று சொன்னதற்கு ‘அட போய்யா! கல்யாணம் செய்து கொண்டால் இத்தனை தினுசு கிடைக்குமா! வாழ்நாளெல்லாம் ஒரே பெண்ணா! நரகமையா நரகம்’ என்று  சித்தப்பா பதில் சொன்னாராம்.

மீசை தாத்தா டிபன் பாக்ஸில் தயிர் சாதம் எடுத்துக் கொண்டு, எவரும் எழுந்திருக்குமுன் அதிகாலையில் சைக்கிளில் கம்பனிக்கு சென்று விடுவார். எல்லோரும் தூங்கியபின் நள்ளிரவில் சைக்கிளில் டைனமோ விளக்கு வெளிச்சத்தில் வீடு திரும்புவார். வெயில் காலத்தில் வியர்வையில் நனைவார். மாரிகாலத்தில் மழைநீரில் நனைவார். ‘கார் வாங்கிக் கொள்ளுங்களேன்’ என்று ஆடிட்டர் சொன்னபோது ‘சைக்கிள் மிதிப்பது உடம்புக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டார். அதற்காக அவசியமானபோதுகூட  செலவு செய்யமாட்டார் என்று அர்த்தமில்லை.

மீசை தாத்தாவிற்கு நன்கு தெரிந்த, அவர் பெரிதும் மதித்த ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியை சுதந்திர தின விழாவிற்காக கட்சி ஒன்று அழைத்திருந்தது. அவர் வட இந்தியாவிலிருந்து சொந்த செலவில் சென்னை வந்தார். அவர் தன்னூரிலிருந்து கிளம்பி சென்னைக்கு ரயிலில் வந்து சேருமுன் கட்சி வேறு கூட்டணிக்கு மாறிவிட்டது. ரயில் நிலையத்தில் தனியாக ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்த தியாகி, கையில் பணமில்லாமல் யார் யாரையோ விசாரித்து பஸ் பிடித்து எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

அவரை சிறிது ஓய்வுவெடுக்க சொல்லிவிட்டு வெளியே போன மீசை தாத்தா இரண்டு மணி நேரத்தில் பதிவு எண் கூட வாங்கப்படாத புதிய காரோடும், டிரைவரோடும் திரும்பி வந்தார். அந்த காரில்தான் தியாகி சென்னையும், தமிழ்நாட்டையும் சுற்றிப் பார்த்தார். தியாகி தன்னூருக்கு திரும்பும் நாள் வந்தபோது, ‘புதிய காரை உங்களுக்காகத்தான் வாங்கினேன். எனது அன்பளிப்பாக பெரிய மனது பண்ணி ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தாத்தா கேட்டுக் கொண்டார். ‘இது வாடகை கார் என்று நினைத்தேன். ஊருக்கு சென்றதும் வாடகை பணத்தை உனக்கு அனுப்பி விடலாம் என்று நினைத்தேன். இப்படி செய்து விட்டாயே’ என்று வருந்திய தியாகி, ‘நீ என் நிலையிலிருந்தால் காரை வாங்கிக் கொள்வாயா?’ என்று கேட்டார். ‘மாட்டேன்’ என்றார் தாத்தா. ‘நானும் வாங்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார் தியாகி. பின் தாத்தா படாத பாடு பட்டு, கெஞ்சி, தன் செலவில் விமானத்தில் போக தியாகியை சம்மதிக்க வைத்தார். தியாகி போனபின், காரை கம்பனி உபயோகத்திற்கு தந்து விட்டார். மழைக் காலங்களில் வேலைக்காரியையும், பியூனையும் அவர்கள் குடிசைக்கு சென்று கார் கூட்டி வந்து கொண்டிருந்தது. போன வருடம் அந்த கார் தாத்தாவிற்கு தெரியாமல் விற்கப்பட்டுவிட்டது.

பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி பாட்டி மீசை தாத்தாவிடம் சொல்லவே இல்லை. கண்ணாடி தம்ளர் உடைந்ததை புகார் செய்தவர், குடும்பம் திவாலாகிக் கொண்டிருப்பதை மறைத்துவிட்டார்.

மீசை தாத்தா தினமும் ஒரு பெரிய தொகையை பாட்டியிடம் கொடுத்து வைப்பார். அது அன்றன்றே அழிந்துவிடுகிறது என்பது அவருக்கு தெரியாது.

ஒரு நல்ல நாளன்று ‘அடையாரில் இரண்டு கிரவுண்டு வாங்க ஏற்பாடு செய்திருக்கிறேன். உன்னிடம் இதுநாள்வரை கொடுத்த இத்தனை லட்சத்தை எடுத்து வா’ என்று பாட்டியிடம் சொன்னபோதுதான் வீட்டு நிலவரம் அவருக்கு தெரிய வந்தது. பாட்டியை கோபித்துக் கொள்ளவில்லை. ஒரு கடுமையான வார்த்தை கூட கூறவில்லை. ‘சரி விடு. இனி கவனமாக இருப்போம்’ என்று மட்டுமே சொன்னார். அதில் பாட்டிக்கு தாள முடியாத வருத்தம்.

‘என்னை ஒரு வார்த்தை திட்டவில்லையே. என் மீது இவருக்கு பிரியமோ, அக்கறையோ இல்லை’ என்று மூன்று நாட்கள் ஒரு வேளையும் சாப்பிடாமல் பாட்டி அழுதார். நான்காவது நாள் மீசை தாத்தா ‘இது என்ன அர்த்தமில்லாத ஆர்ப்பாட்டம்? ஒழுங்காக சாப்பிடுகிறாயா இல்லையா?’ என்று கடுமையாக பேசியபின் சிரித்துக் கொண்டே அடுத்த மூன்று நாட்களும் தினம் ஆறுவேளை சாப்பிட்டார்.

அதற்கு பின் மீசை தாத்தா வீட்டு செலவு பட்டியல் போட்டார். ‘மாத செலவு இதற்கு மேல் ஆகக் கூடாது’ என்று கூறி, ஒரு தொகையை மட்டும் பாட்டியிடம் தந்தார். வேறு எந்த பணத்தையும் வீட்டிற்கு கொண்டு வருவதை நிறுத்தினார். ‘நம் குடும்பத்தின் ஆதாரம் அன்பில்லை, பணம்தான்’ என்பதை பாட்டிக்கு பிள்ளைகள் புரிய வைத்தனர்.

என் அப்பாவிற்கு மீசை தாத்தா மீது வருத்தம் எதுவுமில்லை. பூஜைக்கு வரும் பக்தர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி பூஜை நடத்தினார். மேற்கொண்டு கடன் வாங்க முடியாதபோது கிருஷ்ணர் சோதிக்கிறார் என்று நினைத்தார்.  பணம் வருவதற்கென பல வகையான பரிகாரங்கள் செய்யத தொடங்கினார். அவரது முயற்சி வீணாகவில்லை. சித்தப்பா, பாட்டியின் நகைகளை எடுத்து விற்க ஆரம்பித்து, அதில் ஒரு சிறு பங்கை அப்பாவிற்கும் தந்தார். ‘நான் ஆரம்பித்திருக்கும் புதிய வியாபாரத்தில் வருமானம் வருகிறது’ என்றார் சித்தப்பா. தன் கைக்கு அவ்வப்போது பணம் வந்ததால் சித்தப்பா சொன்னதை அப்பா கேள்வி கேட்காமல் நம்பினார். அந்த பணத்தை வைத்து அப்பா பூஜைகள தொடர்ந்து செய்தார். பாட்டி எதுவும் தெரியாதது போல பாவனை செய்து கொண்டிருந்தார்.

நகைகள் தீர்ந்ததும், தன் புதிய வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று சித்தப்பாவிற்கு தோன்றியது. மூன்று பங்களாக்களின் பத்திரங்களையும் எடுத்து சென்று, கள்ள கையெழுத்து போட்டு கணிசமான தொகைக்கு அடகு வைத்தார். திருப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லாததால் எவ்வளவு வட்டி, எத்தனை தவணை என்பன போன்ற அற்ப விஷயங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. வந்த பணத்தில் வழக்கம் போல ஒரு பங்கை என் அப்பாவிற்கும் தந்தார். சூளைமேட்டிலிருந்த எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய பழைய வீடுகளின் மேல் எவரும் கடன் கொடுக்கவில்லை.

அந்த பணமும் தீர்ந்த பின், பத்திரங்களை நகலெடுத்து, அவற்றை அரசியல்வாதிகளின் அடியாட்களிடம் அடகு வைத்து கடன் வாங்கினார். ஒரே சொத்தின் மீது வெவ்வேறு நபர்களிடம் நான்கைந்து முறை கடன் வாங்கினார்.

வட்டி வரவில்லை என்றதும் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்தனர். பாட்டிக்கும், அப்பாவிற்கும் அப்போதுதான் நிலைமை புரியத் தொடங்கியது. சித்தப்பா மாடி அறையில் ஒளிந்து கொண்டு ‘வீட்டில் இல்லை, ஊரில் இல்லை’ என்று சொல்ல சொன்னார். ஆரம்பத்தில் பணிவுடன் பேசிய கடன்காரர்கள் நாளாக, நாளாக வீட்டுப் பெண்களின் ஒழுக்கம் பற்றியும், கற்பு பற்றியும் பற்பல சந்தேகங்கள் எழுப்பி ஏகவசனத்தில் பேசத் தொடங்கினர். பயந்து போன பாட்டி மீசை தாத்தாவிடம் விஷயத்தை சொன்னார். எல்லா விவரங்களையும் கேட்டபின் தாத்தா சிரித்தார்.

மறுநாள் மீசை தாத்தா அம்பத்தூரிலிருந்த தன் தொழிற்சாலையை விற்றார். எல்லா கடன்களையும் வட்டியோடு திருப்பிக் கட்டி பத்திரங்களை மீட்டார். கள்ளப் பத்திரங்களை கிழித்தெறிந்தார். கங்கையை விற்றவர், கங்கோத்ரியை விற்கவில்லை. கங்கோத்ரி இருந்தால் பல புதிய கங்கைகளை உற்பத்தி செய்ய முடியுமென நினைத்தார் போலிருக்கிறது. தொழிற்சாலையை விற்றவர் சூளைமேடு கம்பனியை மூடவில்லை. சிறிய அளவில் ஆரம்ப நிலையில் செய்தது போல தொழிலை தொடர்ந்து நடத்தினார்.

பாட்டியையும், அம்மாவையும் மிரட்டிய போக்கிரிகளின் இடங்களுக்கு மீசை தாத்தா தனியாளாக சைக்கிளில் சென்றார். ஒவ்வொரு கேடியையும் அவனது வீட்டிலேயே பார்த்து மீசையை நீவியபடி ‘என் பக்கம் தவறு இருப்பதால், இந்த முறை உன்னை மன்னிக்கிறேன். இன்னொரு முறை என்னிடம் பெருந்தன்மையை எதிர்பார்க்காதே’ என்றார். வெலவெலத்துப் போன போக்கிரிகள் தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டனர். சித்தப்பா மீண்டும் கடன் கேட்க போன போது ‘கடன் தருகிறோம். ஆனால் சொத்து உன் பெயரில் இருக்க வேண்டும். உன் தகப்பனார் சம்பந்தப்படக் கூடாது’ என்றனர்.

கடன் வாங்க முடியாத நிலையில் என் அம்மாவின், தன் அண்ணியின், வைர நகைகளை எடுத்துக் கொண்டு சித்தப்பா வீட்டை விட்டு வெளியேறினார். அன்றாடம் ஒரு புது பெண்ணுக்கு பணம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை என்பதால், நல்ல குடும்பத்தில் பிறந்து, சென்னைக்கு ஓடி வந்து, சினிமா வாய்ப்பு தேடி, கிடைக்காமல் சீரழிந்துபோன ஆந்திரா பெண்ணையும், கேரளா பெண்ணையும் தமிழரான சித்தப்பா நிரந்தரமாக வைத்துக் கொண்டார். என்ன இருந்தாலும் தேச ஓருமைப்பாட்டை உயிராக நினைப்பவரின் பிள்ளை அல்லவா?

இரண்டு பெண்களின் தூண்டுதலாலும், ‘தோற்க வாய்ப்பே இல்லாத வழக்கு. உன் அப்பாவை துண்டு துண்டாக கிழித்து விடலாம்’ என்று வக்கீல் உற்சாகமூட்டியதாலும், ‘எந்த சொத்தும் என் தகப்பனாரின் சுய சம்பாத்தியம் இல்லை. எல்லாமே பூர்வீக சொத்தை விற்று ஆரம்பித்த வியாபாரத்தில் வந்தவை. அவற்றில் எனக்கு உரிமை உண்டு. பங்கு பிரிக்க வேண்டும்’ என்று மீசை தாத்தா மீது சித்தப்பா வழக்கு போட்டார். ‘விவரமில்லாத சின்ன பிள்ளை. மன்னித்து விடுங்கள்’ என்றார் பாட்டி. ‘ஒரு ரூபாய்கூட தரமுடியாது’ என்று பதில் தந்தார் மீசை தாத்தா.

‘நீங்கள் பற்றற்றவர். உடனே எல்லாவற்றையும் கொடுத்திருப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்களா அப்படி சொன்னீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது’ என்று நான் கேட்டபோது மீசை தாத்தா ‘பெரியவனுக்கு மனைவியும். குழந்தைகளும் உண்டு. சின்னவனுக்கு ஒருவரும் இல்லை. அவன் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதனால்தான் எதுவும் தர மறுத்தேன். பணத்தின் மேல் பற்றில்லைதான். பிள்ளைகள் மீதிருக்கிறதே’ என்றார். பின் சிரித்துக் கொண்டே ‘அவன் திருந்திய பின் கேட்டதெல்லாம் தரலாம் என்று நினைத்தேன். ‘பிள்ளை அப்பாவி, கூடிய சீக்கிரம் திருந்தி விடுவான்’ என்ற மூட நம்பிக்கை இல்லாத தகப்பன் உலகில் உண்டா?’ என்று தன்னைத்தானே கேலி செய்து கொண்டார்.

‘சொத்து எவர் கையில் இருக்கிறதோ, எவர் அனுபவிக்கிறாரோ, அவருக்கு சாதகமாக சட்டம் பேசும். அதனால் ஆந்திராக்காரியை நுங்கம்பாக்கம் பங்களாவிலும், கேரளாக்காரியை அண்ணாமலைபுர பங்களாவிலும் குடி வைத்துவிடு’ என்று வக்கீல் சித்தப்பாவிற்கு ஆலோசனை தந்தார். ‘குடிகார சூதாடியின் கையில் சொத்து வந்ததும், சில்லறையை வீசி எறிந்துவிட்டு சொத்தை எடுத்துக் கொள்ளலாம்’ என்று வக்கீல் நினைத்திருப்பார். அவர் சொன்னதை சித்தப்பா உடனே செயல்படுத்தினார். சித்தப்பாவின் வக்கீல் பல பொய்களை வழக்கில் புகுத்தினார்.

‘என்னுடைய வீடுகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று சித்தப்பா மீது மீசை தாத்தா வழக்கு தொடர்ந்தார். ‘மகன் மீது எந்த தகப்பனாராவது வழக்கு போடுவாரா?’ என்று கண்ணீர் சிந்திய பாட்டி, கோபித்துக் கொண்டு சித்தப்பாவின் வீட்டிற்கு போய்விட்டார். ஆந்திராவா, கேரளாவா என்று தெரியவில்லை. ‘சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வாருங்கள்’ என்று மற்றவர்கள் சொன்னபோது ‘தானாகப் போனவள் தானாக வரட்டும். நானாக வர சொல்லமாட்டேன்’ என்று மறுத்து விட்டார். ஆனால் மாதாமாதம் பாட்டி இருந்த வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துவிட்டு செலவிற்கு பணம் தந்துவிட்டு வருவார். தாத்தாவின் நண்பர் வாசுதேவய்யா ‘இவ்வளவுதானா உன் பிரியம்?’ என்று கேட்டபோது ‘அவள் அண்ணன் சில நாள் என்னை காப்பாற்றினான். அதனால் இவளை கல்யாணம் பண்ணிக் கொண்டேன். எனக்குத் தெரிந்து காதல், பிரியம், தாம்பத்தியம், இல்லறம் எல்லாம் கதைகளில்தான் இருக்கிறது’ என்றாராம்.  

தாத்தா போட்ட வழக்குதான் முதலில் விசாரணைக்கு வந்தது. கண்களை கட்டிய நீதிதேவதையின் மனித ரூபம் என்று வருணிக்கப்பட்ட நீதிபதி ரத்தினத்தின் முன் வழக்கு வந்தது. சில நிமிடங்களில் உண்மையை புரிந்து கொண்டு விட்ட நீதிபதி ‘மகன் போட்ட வழக்கு முடியும் வரை, வீடுகளில் எவரும் குடியிருக்கக் கூடாது. வீடுகளை அரசாங்கம் பராமரிக்கும். அவற்றை பூட்டி அரசாங்க முத்திரை போட வேண்டும்’ என்று இடைக்கால தீர்ப்பு தந்தார்.

நீதிமன்றம் கலைந்தபின் நீதிபதி மீசை தாத்தாவை தனிமையில் அழைத்து ‘உங்கள் பக்கம்தான் உண்மை உள்ளது. ஆனால் சட்டம், இயற்கையைப் போல, தன் போக்கில் மெல்லத்தான் செயல்படும். இருந்தாலும், ஓரளவிற்கு உங்களுக்கு சாதகமாக தற்காலிக தீர்ப்பு சொல்லியிருக்கிறேன்’ என்றார். ‘பராமரிப்பு இல்லாவிட்டால் வீடு பாழாகி விடும். அதற்கான செலவை நான் ஏற்று கொள்கிறேன். அதை அனுமதிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு என்னால் வீண் செலவு வேண்டாம்’ என்று மீசை தாத்தா வேண்டுகோள் வைக்க நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு பாராட்டினார்.

மீசை தாத்தா நீதிபதியை தனிமையில் சந்தித்து லஞ்சம் தந்து விட்டார் என்று வக்கீல் புரளி கிளப்பி, அதை சித்தப்பாவை நம்ப வைத்தார்.

இடைக்கால தீர்ப்பால் சித்தப்பாவின் ஆக்கிரமிப்பு ஒரு மாதத்திற்குள் முடிவிற்கு வந்தது. அவரை ஆட்டுவித்த இரண்டு பெண்களின் நம்பிக்கையும் ஆட்டம் கண்டது. கோயம்புத்தூர் மில் அதிபரின் பண்ணை வீட்டிற்கு ஆந்திர அழகியும், அவரது மகனின் ஊட்டிமலை வீட்டிற்கு மலையாளத்து மங்கையும் இடம் பெயர்ந்தார்கள்.

நீதிபதி ரத்தினத்தின் இடைக்கால தீர்ப்பால் பங்களாக்களை விட்டு வெளியேறிய சித்தப்பா பாட்டியோடு ஒரு சிறிய வாடகை வீட்டிற்கு குடி போனார். அவரது உல்லாச வாழ்க்கை முடிவிற்கு வந்தது. தாத்தாவை எப்படியாவது பழி வாங்க நினைத்தார். பாட்டிக்கு மாதாமாதம் தாத்தா தந்த பணம்தான் ஒரே நிலையான வருமானம். அதில் வீட்டு செலவு போக மீதி இருந்ததை வைத்து சித்தப்பா, மீசை தாத்தாவின் மீதான வழக்கை தொடர்ந்து நடத்தினார். அது மட்டுமே அவரது ஒரே பொழுது போக்காயிற்று. வழக்கு இருபது வருடங்கள் நடந்தது. பாட்டி சித்தப்பாவோடுதான் இன்னமும் இருக்கிறார். எங்கள் வீட்டிற்கு இன்று வரை ஒருமுறை கூட வரவே இல்லை. அது என்ன வீம்போ!

இந்த காலகட்டத்தில்தான் அம்மா வட இந்தியாவிலிருந்த ஆசிரமம் ஒன்றுக்கு கிளம்பினார். கூடவே அப்பாவும் போய் விட்டார்.

ஆனால், தாத்தா உற்சாகமாகவே இருந்தார்.

‘சித்தப்பாவை தூண்டிவிட்ட பெண்களின் மீது சட்டப்படியோ, சட்டத்தை மீறியோ நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாதா?’ என்று ஒரு நண்பர் கேட்டபோது மீசை தாத்தா ‘நான் அதை பற்றி நினைத்ததே இல்லை. மனிதன் என்றால் எப்படியாவது பிழைத்திருக்க வழி தேடுவான். அதைத்தானே அந்த அப்பாவி பெண்களும் செய்தார்கள்? அவர்கள் நிலையிலிருந்து யோசிக்க வேண்டாமா?’ என்று பதில் சொன்னார். சித்தப்பாவின் கூடவே இருந்திருந்தால் அந்த பெண்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மீசை தாத்தா சாப்பாடு போட்டிருப்பார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி கல்யாணத்திற்கு முன் ஜமுனாவிடம் போனில் சொன்னேன். நிச்சயத்திற்கும், கல்யாணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஜமுனாவோடு அடிக்கடி போன் பேசுவேன். சிரித்துக் கொண்டே ஜமுனா ‘அதெல்லாம் சரிதான். பாட்டி, சின்ன மாமா  நிலையிலிருந்து எப்போதாவது தாத்தா யோசித்திருக்கிறாரா?’ என்று கேட்டாள்.

நான் அதை வேடிக்கை என்று நினைத்துக் கொண்டு மீசை தாத்தாவிடம் சொன்னேன். மீசை தாத்தா திகைத்து விட்டார். மீசையை நீவி விட்டுக் கொண்டு மௌனமாக இருந்தார். அதன்பின் அவரது செயல்பாடுகள் வழக்கத்திற்கு மாறாக மேலும் மர்மமாக இருந்தன. எவரிடமும் சொல்லாமல் அடிக்கடி வெளியூர் சென்று வருவது கம்பனி ஆரம்பித்த நாள் முதல் அவரது வழக்கம். எங்கு போய் வருகிறார் என்பது  எவருக்கும் தெரியாத மர்மமாக இருந்தது என்றாலும் சொத்திருக்கும் தாத்தாவை கேள்வி கேட்கும் தைரியம் எவருக்குமில்லை.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms