04. மீசை தாத்தாவின் பேரர்கள் - மீன்கொடி

என் பெரியண்ணார் புருஷோத்தமர் என்னைவிட பத்து வயது மூத்தவர். என் சின்னண்ணார் மதுசூதனர் என்னை விட எட்டு வயது மூத்தவர்.

என்னைப் போலல்லாமல் இருவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள். எம்பிஏ படித்துவிட்டு சென்னையில் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் மேலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.

என்னை விட ஏழு வயது மூத்தவரான அக்கா யசோதா கம்ப்யூட்டர் துறையில் பொறியாளர். படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொண்டு இப்போது இல்லத்தலைவியாக இருக்கிறார்.

மூவருக்கும் கல்லூரியில் படிக்கும்போதே காதல் வந்துவிட்டது. புருஷண்ணார் சென்னையில் பெரிய பட்டு ஜவுளிக் கடை வைத்திருப்பவரின் பெண்ணையும், மதுவண்ணார் சென்னையில் காபித்தூள் விற்கும் கடைகள் பல வைத்திருப்பவரின் பெண்ணையும் காதலித்தனர். இருவருமே ஒருவகையில் தூரத்து சொந்தம். மிகவும் வசதியானவர்கள். தாங்கள் வசதியானவர்கள் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் பிறருக்கு உணர்த்திக் கொண்டே இருப்பவர்கள்.

பெண் வீட்டுப் பெரியவர்கள் வசதி, படிப்பு, வயது, சாதி எல்லாமே பொருந்தி வரும் பையன்களாகப் பார்த்து காதலித்த தங்கள் பெண்களின் கெட்டிக்காரத்தனத்தில் மகிழ்ந்து போனார்கள். ‘சம்பாதிக்கும் தாத்தா, மாமியார் இல்லை, நாளானாலும் ஜெயிக்கப் போகும் வழக்கு என்று பற்பல மேலதிக நன்மைகளும் இருந்தபடியால் இரு அண்ணார்களின் கல்யாணமும் இரு பக்கங்களிலும் சில லட்சங்கள் செலவழிக்கப்பட்டு வெகு சிறப்பாக நடந்தேறின.

மூத்த அண்ணி ஜவுளி அண்ணி என்றும், இளைய அண்ணி காபி அண்ணி என்றும் என்னால் காரணப் பெயர் தரப் பெற்றனர். இருவரும் பெயர்களை விரும்பி ஏற்றுக் கொண்டதால், அவை தீர்க்காயுள் பெற்றன.

அப்போது நான் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டு அண்ணிகளுமே என்னிடம் பிரியத்துடன் இருந்தனர். ஜவுளி அண்ணி என்னை தன் பிள்ளை போலவே நடத்தினார். அதனால் காபி அண்ணியும் என்னிடம் அதே போல நடந்து கொண்டார். இரண்டு அண்ணிகளுக்கும் குழந்தைகள் பிறக்கும்வரை அந்த அன்பு தொடர்ந்தது. அதன்பின் முன்பு போல கவனம் கிடைக்காவிட்டாலும் அவர்கள் என்னிடம் அன்பாகவே இருந்தனர்.

ஜவுளி அண்ணியின் அப்பா ஜவுளி மாமா. அவருக்கு தெரிந்து பல தலைமுறைகளாக சென்னையில் பட்டு ஜவுளி வியாபாரம் செய்து வருவதாக கூறிக் கொள்வார். அவருக்கு முன்னோர்கள் ஐநூறு வருஷங்களுக்கு முன்னால் விஜயநகர பேரரசில் அரசகுடும்பத்தினருக்கு பட்டு ஜவுளி நெய்து தந்தார்களாம். தேவராயர் காலத்தில் மாமாவின் மூதாதை நாட்டில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தாராம். தேவராயரின் அந்தப்புரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆளுக்கு ஒரு பட்டு சேலை நெய்து தந்தாலே சந்தேகமில்லாமல் பெரிய செல்வந்தர் ஆகியிருக்க முடியும்தான். தேவராயர் பத்தாயிரம் பெண்களோடு சல்லாபம் செய்தது பற்றி நான் எதுவும் நினைக்கவில்லை. எப்படி பத்தாயிரம் பெண்களை சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒரே அரண்மனையில் வைத்து பார்த்து கொண்டார் என்பதுதான் எனக்கு புதிராக இருக்கிறது.

பின்னர் வந்த சுல்தான்கள் காலத்தில் சொத்துகளை விட்டுவிட்டு மாமாவின் மூதாதையர் சென்னப் பட்டணம் ஓடி வந்து சிறிய அளவில் தொழில் ஆரம்பித்து இன்று ஓரளவிற்கு நல்ல நிலையில் வியாபாரம் நடக்கிறதாம். இப்பழங்கதைகள் எந்த அளவிற்கு நம்பத்தக்கவை என்பது ஜவுளி மாமாவிற்கே தெரியாது. ஆனால், அவர் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி, இவற்றை வரலாற்று உண்மைகள் என்று பல தலைமுறைகளாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

மாமா குடும்பத்தினரின் பேச்சையும், நடத்தையையும் பார்த்தால் அரச குடும்பத்தினரோடு பழகியதற்கான பல அடையாளங்களை பண்பறியாதவனும் பார்க்க முடியும்.

காபி அண்ணியின் அப்பா காபி மாமா. அவர் குடும்ப வரலாறு ஜவுளி மாமா குடும்ப வரலாறுக்கு நேர்மாறானது. அவருக்கு மூதாதையர் பற்றிய எந்த வரலாறும் தெரியாது. அதனால் குடும்ப பெருமை பற்றிய பேச்சும் அவரிடம் இல்லை.

ஆண்டியில் பரம்பரை ஆண்டி, பஞ்சத்து ஆண்டி என்ற இரண்டு வகை உண்டாம். பணக்காரரிலும் பரம்பரை பணக்காரர், பஞ்சத்து பணக்காரர் என்ற இரண்டு வகை உண்டு. ஜவுளி மாமா முதல் வகை. காபி மாமா இரண்டாவது வகை.

சில வருடங்களுக்கு முன்னால் இனி இந்தியாவில் பஞ்சம் வராது என்று உலகம் நம்பியபோது மகாராஷ்டிராவில் பஞ்சம் வந்தது. அப்போது காபிக் கொட்டை தரகராக சிறு வருமானத்தோடு இருந்த மாமா தமிழ்நாட்டிலிருந்து பலவகையான பொருட்களை சட்டத்திற்கு உட்பட்டும், அப்பாற்பட்டும் மகாராஷ்டிரா கொண்டு போய் அதிக லாபத்திற்கு விற்று பணக்காரரானார். ‘லாபத்தை மட்டும் சொல்லிக் காட்டுகிறீர்களே? பஞ்ச காலத்தில் நாட்டுக்கு நான் செய்ததும் ஒரு சேவைதான்’ என்று தன் செயலை நியாயப்படுத்துவார். அதன்பின் சென்னையில் பல இடங்களில் காபி பொடி விற்கும் கடைகள் ஆரம்பித்து மிக நல்ல நிலையில் இருக்கிறார். காபி மாமா பொதுவாக நல்லவர். ஆனால் சம்பாதிக்க சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தர்ம, நியாயங்களை தற்காலிகமாக ஆசைக்காற்றில் பறக்க விட்டுவிடுவார்.

காபி மாமா திடீர், திடீரென எதிர்பாராத வழிகளில் பெரிய தொகை சம்பாதிப்பதை பார்த்த ஜவுளி மாமாவும், காபி மாமாவின் ஆலோசனையை பின்பற்றி அவ்வப்போது சம்பாதித்தாலும் மனசாட்சியின் உறுத்தலுக்கு ஆளாகி பின் மீள்வார். பல இடங்களில் காபி மாமாவை விட, ஜவுளி மாமாவிற்கு செல்வாக்கு அதிகம் என்பதால், அவர் செல்வாக்கு காபி மாமாவிற்கு தேவையாக இருந்தது. இருவரும் ஜாடிக்கு ஏற்ற மூடியாக இருந்தனர். சந்தர்ப்பத்தை பொறுத்து எவர் ஜாடி, எவர் மூடி என்பது மாறும்.

யசோதா அக்கா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை மகாதேவன் அன்னியம். சொத்து எதுவுமில்லாத, சாதாரணமான குடும்பம் என்றாலும் அவர் நன்றாக சம்பாதித்ததால் வசதியாக வாழ முடிந்தது. மீசை தாத்தா பையனோடு சிறிது நேரம் பேசியபின் ‘இவர் உனக்கு ஒத்து வருவார். நம் குடும்பத்திற்கு ஒத்து வரமாட்டார்’ என்றார். ‘அதனால் பரவாயில்லை’ என்று அக்கா கூறிவிட்டார். கல்யாணம் பெண் வீட்டாரின் முழு செலவில் சிறப்பாக நடந்தது.

அத்தான் அக்காவிடம் மிகுந்த பிரியத்துடன் இருந்தார். ஆனால், வழக்கத்திற்கு அதிகமான மாப்பிள்ளை மரியாதையை எங்கள் குடும்பத்திடமிருந்து எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்ப்பதற்கு அதிகமாகவே மீசை தாத்தா புன்சிரிப்போடு மரியாதை தந்து விடுவார். ஆனால் அத்தானுக்கும், அண்ணார்களுக்கும் அவ்வப்போது மனக்கசப்பு ஏற்பட்டு, பின் தாத்தா தலையிட்டு சமாதானம் உண்டாகும்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms