05. நான் வளர்ந்த விதம் - மீன்கொடி

குடும்பமோ, உறவினர்களோ இல்லாதவரை அனாதை என்பார்கள். அவன் தனிமையில் உழன்று அகத்திலும், புறத்திலும் சமூக நிறுவனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருப்பான்.

குடும்பமும், உறவினர்களும் இருந்தும் நான் எப்போதும் தனிமையில் உழலும் அனாதையாகத்தான் என்னை அறிந்திருக்கிறேன். நான் அகத்தில் சமூக நிறுவனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும், புறத்தில் அந்த எல்லைகளுக்கு முழுக்க உட்பட்டவனாகவே நடந்து வந்திருக்கிறேன்.

பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் இன்னமும் விலங்குகளாகத்தான் இருக்கிறோம் என்பதை அறிவதில்லை. பெரும்பாலான குடும்பங்கள் தாங்கள் இன்னமும் வீடுகளாகத்தான் இருக்கிறோம் என்பதை அறிவதில்லை.  நான் சிறிய வயதிலேயே அதை அறிந்திருந்தேன்.

குடும்பம் என்பது புற அருகாமையாலோ, ஒன்றாக வாழ்வதாலோ உருவாவதில்லை. அகத்தில் பூசலார் ஒவ்வொரு கல்லாக தானே அடுக்கி கட்டியது போல, எவரிடமும் எதுவும் சொல்லாமல் மனிதன் தானாகவே கண்ணாடி பாளங்களை ஒவ்வொன்றாக அடுக்கி, பல வருடங்களில் கட்டும் கோவில் குடும்பம். குடும்பத்தினரில் ஒருவர் சின்னஞ்சிறு சொற்கல் எறிந்தாலும் பொடிப்பொடியாக நொறுங்கி விழக் கூடிய கண்ணாடிக் கோவிலது.

எனக்கு ஐந்து வயதாகும்போது என் அண்ணார்களும், அக்காவும் உயர்நிலை பள்ளிக்கு சென்று விட்டிருந்தனர். அப்பாவும், அம்மாவும் எங்கோ போய்விட்டனர். பாட்டியும், சித்தப்பாவும் வேறு வீட்டில் இருந்தனர். தாத்தா நான் எழுமுன் கம்பனிக்கு சென்றுவிட்டு, நான் தூங்கியபின் வீடு திரும்புவார். கவர்னசத்தை எப்போதும் சிடுசிடுப்பார். பெரிய வீட்டில் பலர் நடுவே தனியாக வாழ்ந்தேன்.

என் அண்ணார்கள் போல, அக்கா போல பேசி, நடந்து கொள்ள முயன்றபோதெல்லாம் கேலிக்கு ஆளானேன். வயது வித்தியாசத்தின் காரணமாக, அவர்களது வயதிற்குரிய தன்மையின் காரணமாக நான் எத்தனை முயன்றும் அவர்களால் என்னோடு பழக முடியவில்லை. ‘ஓடாதே’, ‘ஆடாதே’, ‘பேசாதே’, ‘தொந்தரவு செய்யாதே’ போன்ற சொற்கள்தான் என் மூத்தவர்கள் என்னிடம் எப்போதும் பேசியவை.

குழந்தையை வேலைக்கு வைப்பது குற்றம் என்பது என் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. குழந்தைக்கும் தெரியவில்லை. என் மூத்தவர்களின் அன்பைப் பெற வேண்டுமென்பதற்காக அவர்கள் சொல்லும் அத்தனை எடுபிடி வேலைகளையும் சலிக்காமல் செய்வேன். பதிலுக்கு ஒரே ஒரு அன்பான சொல்லும் கிடைத்ததில்லை. அவர்கள் என்னை துன்புறுத்தியதோ, கடுமையாகப் பேசியதோ இல்லை. அப்படி செய்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். அவர்கள் என்னை முழுமையாகப் புறக்கணித்தார்கள். தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, குற்றேவல் செய்ய மட்டுமே என்னை பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் அதிலேயே நான் நிறைவு காணத் தொடங்கி விட்டேன். மூத்தவர்கள் அப்படி இருப்பது நியாயமே என்று நம்பத் தொடங்கினேன். என்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நான் தவறு செய்து விட்டது போல எனக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது. எவரிடமும் எதையும் கேட்டதில்லை. கேட்க முடிந்ததில்லை. நானாக எந்த முடிவும் எடுத்ததில்லை. எவரும் என் முடிவையோ, என்ன நினைக்கிறேன் என்றோ கேட்டது இல்லை. எவரேனும் இதை செய் என்று என்னிடம் சொன்னால் மட்டுமே நான் செயல்படுவேன்.

எவரும் அடுத்தவரைப் பற்றி தாத்தாவிடம் குறை சொன்னதில்லை என்பதால் வீட்டில் நடப்பது எதுவுமே தாத்தாவிற்கு தெரிய வந்ததில்லை. நேரம் கிடைக்கும்போது மீசை தாத்தா மட்டுமே என்னை எங்காவது வெளியே அழைத்து சென்று உணவு விடுதிகளில் இனிப்பு ஏதாவது வாங்கித் தருவார். அப்போது தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி வேடிக்கையாக சொல்வார். அந்த நாட்களில் என் மீதும் அன்பு செலுத்தும் மனிதர்கள் உண்டு என்ற அறிதல் என்னை உலகை வென்றவனாக உணர வைக்கும்.

சற்று வளர்ந்த பின் புத்தகங்களை வாசிக்கத் துவங்கினேன். துப்பறியும் நாவல்களோ, கண்ணீர் கதைகளோ, காமக் கதைகளோ, நகைச்சுவை கதைகளோ என்னை ஒருபோதும் கவரவில்லை. ஆரம்பத்தில் அறிவார்ந்த புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்து வந்தேன். பின் அவற்றில் ஆர்வமிழந்து ஆன்மீக தீண்டல் இருக்கும் தீவிரமான நூல்களை, கட்டுரைகளை, கதைகளை மட்டும் வாசிக்கத தொடங்கினேன். அவை என்னை பற்றி, என் உலகை பற்றி சிந்திக்கத் தூண்டின.

ஏழாவது வகுப்பு முடிப்பதற்குள் பல முக்கியமான நாவல்களை வாசித்து விட்டிருந்தேன். வீட்டிற்கு அருகே பெரிய அரசாங்க நூலகம் இருந்தது. அதன் நூலகர் தாத்தாவின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அதனால், நான் கேட்கும் புத்தகங்களை தேடி எடுத்துத் தருவார். ‘தாத்தாவை விசாரித்ததாக சொல்லுப்பா’ என்று அடிக்கடி என்னிடம் வேண்டுகோள் விடுப்பார்.

ருஷ்ய நாவல்களை தவிர பிற வெளிநாட்டு நாவல்களை என்னால் மனம் ஒன்றி வாசிக்க முடியவில்லை. மேதைகள் எழுதியவையே என்றாலும், என் உலகம் வேறாகத்தான் இருந்தது. இந்திய நாவல்களை வாசித்தபோது மட்டும் கதாபாத்திரங்களாகவே என்னால் மாற முடிந்ததால் எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள சிறந்த நாவல்களை வாசித்தேன். அந்த பாத்திரங்களின் வாழ்க்கையை நானும் வாழ்ந்து அனுபவங்கள் பெற்றேன்.

வங்காளத்து தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் வாசித்தபோது அலோபதி டாக்டர் போஸாகவும் என்னை அறிந்தேன், அவரது மறுபக்கமான ஆயுர்வேத மருத்துவர் மஷாயாகவும் என்னை அறிந்தேன். காதலி மஞ்சரியாக மஷாயின் மடியில் சரிந்தேன். கன்னடத்து சிவராம காரந்தின் மண்ணும் மனிதரும் வாசித்தபோது அதில் வரும் சுதந்திரப் போராளி ராமனும் நானே, அவன் தாயான நாகவேணியும் நானே என்றுணர்ந்தேன். மராட்டிய காண்டேகரின் யயாதியை வாசித்தபோது சர்மிஷ்டையாகவும், தேவயானியாகவும், யயாதியாகவும், புருவாகவும் சில நாட்கள் வாழ முடிந்தது.

நவீன மேதைகளின் நாவல்கள் முடிந்தபின் நான்காயிரம் வருடங்கள் வரை பின்னோக்கி சென்றேன். மகாபாரதம் என் கதை, நான் நிகழ்த்தியது, அதில் வரும் அனைவரும் நானே என்று நம்பத் தொடங்கினேன்.

இப்போது என் உலகம் மிகவும் விரிந்து விட்டது. எனக்குத்தான் எத்தனை குடும்பங்கள்! எத்தனை உறவினர்கள்! எத்தனை எத்தனை அனுபவங்கள்! ஓவ்வொரு நாவலும் என் குடும்பமாக மாறி விட்டது.

அதனால் எனக்குள் விசித்திர மாறுதல் நிகழ்ந்தது. எல்லோரையும் அவரவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே தயங்காமல் ஏற்றுக் கொள்ள முடிந்தது. எல்லோரையும் ஒரு காரணமும் இன்றி நேசிக்க முடிந்தது. அன்பைத் தர முடிந்தது. இருந்தாலும் என் மூத்த்தவர்களின் அன்பைப் பெற வேண்டும் என்ற இளவயது ஆவல் அழியாமல் அணைக்க முடியாத கங்கு போல என் நெஞ்சில் இருந்து வந்தது.

வீடு, பள்ளி, கல்லூரி, நூலகம் தவிர வேறெங்கும் நான் போனதில்லை. வெளியூர்களுக்கு அண்ணார்கள் போகும்போது எப்போதாவது என்னையும் அழைத்துப் போவார்கள். அப்போதெல்லாம் தாத்தா அந்த ஊர்களில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஏதாவது பரிசுகளை என் மூலம் அனுப்பி வைப்பார். ‘உனக்கென்று நான்கைந்து பேர்களாவது வேண்டுமே!’ என்று கூறுவார். என் சிறு வயதிலிருந்தே என்னைப் பற்றிய கவலை மீசை தாத்தாவிற்கு உண்டாகிவிட்டது.

என் அக அனுபவங்களின் நடுவே தட்டுத் தடுமாறி கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். ஜவுளி அண்ணியின் தூண்டுதலால் ஓரளவிற்கு எளிய சாப்ட்வேர் எழுதப் பழகிக் கொண்டேன். வேலைக்குப் போனால் இலக்கிய வாசிப்பு தடைபடும் என்று தோன்றியதால் சொந்தமாக சாப்ட்வேர் கம்பனி நடத்தப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டேன். சிறிய அளவில் அவ்வப்போது வருமானம் வந்து கொண்டிருந்து. செலவு செய்யத் தெரியாத எனக்கு அதுவே பெரும்புதையல் போலிருந்தது. எனக்கு வந்ததை என் மூத்தார்களின் குழந்தைகளே செலவு செய்து விடுவார்கள்.

என்னால் உருப்படியாக எதையும் செய்ய முடியும் என்று என் குடும்பத்தினருக்கு நம்பிக்கை இல்லை. என்றாலும், யாரையும், எதுவும் கேட்காத, யாருக்கும் தொந்தரவு தராத, இட்ட சில்லறை வேலைகளை மறுக்காமல் உடனே செய்யும் ஜீவராசி என்பதால் என் சிறு அறையில் நிம்மதியாக இருந்து வர முடிந்தது.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms