06. கவர்னசத்தை - மீன்கொடி

நான் சிறு வயதிலிருந்து கதைகள் நிறைய வாசிப்பேன். சில கதைகளில் வரும் விசித்திரமான பெயர்களைப் பார்த்து விட்டு என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏதாவது பெயர் கொடுக்கத் தொடங்கினேன்.

குழந்தையின் விளையாட்டை எல்லோரும் ரசித்தனர்.

ஒரு முறை தாத்தா நண்பர்களோடு கூடத்தில் பேசிக் கொண்டிருந்த போது ‘தாத்தாவிடம் சாவி வாங்கி வா’ என்றார் பாட்டி.

‘நிறைய தாத்தாக்கள் இருக்கிறார்களே. எந்த தாத்தாவிடம் கேட்பது?’ என்றேன்.

‘உன் தாத்தா’ என்றார் பாட்டி.

‘எல்லோரும் என் தாத்தாக்கள்தானே?’ என்றேன்.

‘பெரிய மீசை வைத்திருக்கிறாரே அந்த தாத்தா’ என்றார் பாட்டி.

‘ஓ, மீசை தாத்தாவா?’ என்றேன்.

அந்த கணத்தில்தான் அறுபது வயது வரை வெறும் தாத்தாவாக இருந்தவர் மீசை தாத்தாவாக மாறினார்.

அம்மாவும், பாட்டியும் போனதைப் பற்றி மீசை தாத்தாவிற்கு வருத்தமில்லை. குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான தீர்வைத்தான் உடனடியாகத் தேடிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவரது தூரத்து சொந்தமான பெண் ஒருவர் சிறு பையில் ஒரே ஒரு மாற்றுப் புடவையோடு வந்தார். அப்பெண்ணுக்கு முப்பது வயதிருக்கும். அவள் அண்ணி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாளாம்.

‘பத்து வருஷமாக சம்பளமில்லாத வேலைக்காரியாக வைத்திருந்தாள். எனக்கு ஒரு வரன் கூட பார்க்கவில்லையே! நேற்று பக்கத்து வீட்டுக்காரியிடம் வாய் தவறி அண்ணன் பார்த்துக் கொள்ளும் ஒரு ஏக்கர நிலத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று சொல்லி விட்டேன். குடிகேடி என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். அண்ணன் தனக்கு சம்பந்தமில்லாதது போல பேசாமல் இருந்துவிட்டான். பெரியப்பா, நான் உங்கள் பெண் போல. எனக்கு உங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை’ என்று கூடத்தில் சோபாவில் அமர்ந்திருந்த மீசை தாத்தாவின் காலடியில் தரையில் உட்கார்ந்து கொண்டு அழுதார் அப்பெண்.

‘எங்களுக்கும் உதவிக்கு ஆள் தேவைப்படுகிறது. குடும்பத்தில் ஒருத்தியாக, பிள்ளைகளைப் பார்த்து கொண்டு இங்கேயே இருந்து கொள்’ என்றார் தாத்தா.

ஆனால் அண்ணார்களும், அக்காவும் சமீபத்தில் கிடைத்த சுதந்திரம் பறி போய் விடுமோ என்ற பயத்தில் ‘சமையலுக்குத்தான் ஏற்கனவே ஆள் இருக்கிறதே’ என்றனர்.

‘பரமனுக்கு தாயைப் போல ஒரு பெண் தேவை. ஐந்து வயது குழந்தையடா’ என்று தாத்தா கூறிவிட்டார்.

அம்மாவை எதிர்பார்த்திருந்த என்னிடம் தாத்தா ‘இதுதான் உன் புது அத்தை’ என்று கூறினார். புது அத்தை என்றுமே அம்மாவாக இருக்கவில்லை.

அன்றே அப்பெண்ணுக்கு உயர்ந்தரக புடவைகளும், தேவையான மற்றவற்றையும் வாங்கிக் கொள்ள மீசை தாத்தா பணம் கொடுத்தார். புது அத்தைக்கு என்னை மிகவும் பிடித்து போய் விட்டது. ஆரம்பத்தில் சில நாட்கள் எனக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டே ‘நீ மட்டும் இல்லையென்றால் எனக்கு இந்த வீட்டில் இடம் கிடைத்திருக்காது. எனக்கு வாழ்க்கை கொடுத்தது நீதானடா’ என்று மனதார சொல்வார்.

மற்ற மூன்று குழந்தைகளின் அபிமானத்தையும் பெற பெரிய முயற்சிகள் எடுத்தார். சமையல்காரியை அலட்சியப்படுத்திவிட்டு எங்களுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவார். அளவுக்கதிகமாக அன்பை வழிந்தோட விட்டார். மூத்தவர்களும் அதில் வழுக்கி விழுந்தனர். புது அத்தை மீது பிரியம் உண்டாகாவிட்டாலும் வெறுப்பு மறைந்துவிட்டது.

புது அத்தை வீட்டுக்கு வந்த அன்று ‘நான் யார் சொல் பார்ப்போம்’ என்றார் விளையாட்டாக.

நாம் அப்போது வாசித்திருந்த ஆங்கில கதை ஒன்றில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வருபவரை ‘கவர்னஸ்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தாத்தாவோ ‘அத்தை’ என்று சொல்லியிருக்கிறார்.

‘நீங்கள் கவர்னசத்தை’ என்றேன்.

புது அத்தை நான் அவரை கவர்னர் என்று சொல்வதாக நினைத்துக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது. மகிழ்ந்து போய்விட்டார். அன்றிலிருந்து அவர் கவர்னசத்தை ஆகிவிட்டார். அவருடைய உண்மையான பெயர் என்னவென்று அவருக்கே நினைவிருக்குமா என்று தெரியவில்லை.

பாட்டியின் மற்றொரு முகம் கவர்னசத்தை வரவால் தாத்தாவிற்கு தெரியவந்தது.

கவர்னசத்தை வீட்டுக்கு வந்த மறுநாள் சித்தப்பாவின் வக்கீலின் உதவியாளர் இன்னொரு புதிய வழக்கு போடப் போகிறோம் என்று ஒரு நோட்டீஸ் கொண்டு வந்து கொடுத்தார். கவர்னசத்தைதான் அதை வாங்கி தாத்தாவிடம் கொடுத்தார்.

கவர்னசத்தை பற்றி உதவியாளர் சித்தப்பாவிடம் என்ன சொன்னார் என்பதுவும், சித்தப்பா பாட்டியிடம் என்ன சொன்னார் என்பதுவும் எனக்கு தெரியாது. பாட்டியிடமிருந்து தாத்தாவிற்கு ஆள் மூலம் அவசரத் தகவல் வந்தது. ‘நீங்கள் வீட்டிற்குள் புதிதாக கொண்டு வந்திருக்கும் ஜாலக்காரியை வீட்டை விட்டு துரத்தி விட்டால் நான் வீடு திரும்புகிறேன்’ என்று சொல்லியனுப்பி இருந்தார்.

தாத்தா பதில் கூறவில்லை.

ஆனால் அதற்கு பின் தாத்தா கவர்னசத்தையை ஒரு போதும் தனிமையிலோ, தனி அறையிலோ சந்திக்கவே இல்லை. எதுவானாலும் எங்கள் மூலம்தான் பேசுவார். கூடத்தில் எல்லோர் முன்பும்தான் ஆணைகள் பிறப்பிப்பார். கவர்னசத்தை தாத்தாவை தனியே சந்தித்து ஏதேனும் பேச முயன்றாலும் பதில் கூறாமல் எழுந்து போய்விடுவார்.

ஆனால் கவர்னசத்தைக்கு குடும்பத்தில் உள்ளவர்களுக்குரிய அத்தனை வசதிகளையும், உரிமைகளையும் கொடுத்திருந்தார். கவர்னசத்தை வந்த ஒரு மாதம் கழித்து தாத்தா சம்பளம் தந்தபோது கண்ணீர் விட்டு அழுதார். ‘நான் சம்பளம் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா?’ என்று கேட்டார். தாத்தா சம்பளத்தை திருப்பி வாங்கிக் கொண்டுவிட்டார். அதன்பின் சம்பளமே தரவில்லை. வீட்டு செலவிற்கான பணம் வைக்கும் அலமாரி சாவியை கவர்னசத்தையிடம் தந்து விட்டார். தனக்கு தேவையானதை கவர்னசத்தையே எடுத்துக் கொள்வார். அவர் செய்ததுதான் செலவு. அவர் எழுதியதுதான் கணக்கு. ஆனால், பணவிஷயத்தில் பாட்டி கூட கவர்னசத்தையை குறை சொல்ல முடியாது. அண்ணார்களுக்கு கல்யாணமாகும் வரை சாவிகொத்து  கவர்னசத்தையிடம்தான் இருந்தது.

கவர்னசத்தைக்கு யார் சந்தோஷமாக இருந்தாலும் பிடிக்காது. தன்னால் முடிந்த வரை கெடுதல் செய்ய பார்ப்பார். ஆனால் அது தலைகீழாகத்தான் போகும். அவர் எப்போது குரங்கு பிடிக்க நினைத்தாலும் அது பிள்ளையாராகத்தான் முடியும். அவருக்கு அப்படிப்பட்ட விசேஷமான ராசி உண்டு.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms