07. கல்யாணப் பேச்சு - மீன்கொடி

சில வாரங்களுக்கு முன் ஒரு நாள் ஜவுளி அண்ணி என்னிடம் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு முன்பதிவு செய்து தர சொன்னார். வெளிநாட்டிலிருந்து வந்த இசைக் குழுவின் நிகழ்ச்சி. காலையில் பத்து மணிக்கு சென்றேன். நுழைவு சீட்டு வாங்குமிடத்தை பார்த்து திகைத்துப் போனேன். சென்னையில் இருக்கும் அத்தனை இளவயதினரும் அங்கு கூடியிருப்பது போலத் தோன்றியது. பல நீண்ட வரிசைகலீல் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாத்தா என்னைப் பார்த்து விட்டார்.

‘கஸ்டமரிடம் பணம் வாங்க வந்தேன்’ என்ற மீசை தாத்தா ‘என்னடா பரமா! நீ இந்த வெளிநாட்டு பாட்டெல்லாம் கேட்பாயா?’ என்று கேட்டார்.

‘இல்லை. ஜவுளி அண்ணி டிக்கட் வாங்கி வர சொன்னார்’ என்றேன்.

‘இன்று என்ன கிழமை?’ என்று கேட்டார் மீசை தாத்தா.

‘புதன்’ என்றேன்.

‘இப்போது நேரம் என்ன?’ என்று கேட்டார் மீசை தாத்தா.

‘பத்தரை இருக்கும்’ என்றேன்.

‘எத்தனை வரிசைகள்! ஒவ்வொன்றும் நீளமாக இருக்கிறதே’ என்றார் மீசை தாத்தா.

‘மொத்தம் மூவாயிரம் டிக்கெட்டுகள். இன்னும் இரண்டு மணி நேரமாகுமாம்’ என்றேன்.

சைக்கிளை மிதித்து நகர்த்திய மீசை தாத்தா, திரும்பி என்னருகே வந்தார். வெயில் கண்களை கூசியதால் கையை கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு சொன்னார். ‘இந்தியாவில் இருக்கிற முக்கியமான இசை மேதைகளோட பாட்டும், வாசிப்பும் போன வாரம் ஆறு டிவிடியில் வந்திருக்கிறது. பிஸ்மில்லா ஷெனாய், ஹரிபிரசாத் குழல் முதற்கொண்டு எல்லாமே இருக்கிறது. வேலை முடிந்து திரும்பி வந்ததும், தினமும் கேட்கிறேன். தூங்குகிறேனா அல்லது வேறு உலகத்தில் மிதக்கிறேனா என்றே தெரியவில்லை’ என்றார் மீசை தாத்தா. இவர் இசை கூட கேட்பாரா!

‘எனக்கு வீணை மட்டும்தான் பிடிக்கும் தாத்தா’ என்றேன்.

‘மட்டும்தான் என்கிற வார்த்தை மனுஷனுக்கு தேவையில்லாதது. பார்க்க தெரிந்தவனுக்கு எல்லா காட்சியும் பிரம்மம்தான். கேட்கத் தெரிந்தவனுக்கு எல்லா இசையும் பிரம்மம்தான். கொட்டாங்கச்சியில் ஒற்றை கம்பி கட்டி நாம் வீசி எறிகிற சில்லறைக் காசுகளுக்கு வாசிக்கிறவனின் இசையும், பிரம்மாண்டமான அரங்கத்தில் சிம்பனியிலே வயலின் வாசிக்கிறவனின் இசையும் ஒன்று போலத்தான் எனக்கு கேட்கிறது. இவன் மூலம் வருவதும் முழுமையான பிரம்மநாதம்தான். அவன் மூலம் வருவதும் முழுமையான பிரம்மநாதம்தான். தெருவோர கொட்டங்கச்சி சிறியது, சிம்பனி வயலின் பெரியது என்று மனுஷன்தான் புத்தியை வைத்து யோசிக்கிறான்’ என்றார் மீசை தாத்தா.

வரிசை நகர, நானும் முன்னேறினேன். சைக்கிளை தள்ளிக் கொண்டே மீசை தாத்தாவும் கூடவே வந்தார். ‘வியன்னாவிலே இருந்தானே, அவன் பேரென்ன? லுட்விக் பீத்தோவன். அவன்கிட்டே கேட்டாலும் நான் சொன்னதையேதான் சொல்வான். அவனுக்கு காது நன்றாக கேட்கும்வரை கலைஞனாக இருந்தான். காது கேட்காமல் போனபின்புதான் மேதையானான். புலனை வைத்துத்தான் அறிவும், மனமும் அதிகபிரசங்கம் செய்கின்றன. வேறு வழியில்லாமல் காதுக்கு பதில் ஆன்மாவால் கேட்க ஆரம்பித்தபோதுதான் பீத்தோவனுக்கு சிம்பனிகளும். மற்றவைகளும் உள்ளுக்குள் இருந்து வந்தன’ என்றார்.

நாங்கள் மேலும் முன்னேறினோம்.

‘எல்லாமே பீத்தோவனுக்கு உள்ளேதான் இருந்தது. ஆன்மா வேலை செய்ய ஆரம்பித்ததும் ஆழத்தில் இருப்பது தெரிய ஆரம்பித்தது. பார்க்காதவனுக்கு சத்தியம் தெரியாது. பார்க்கிறவனைப் பொறுத்து சத்தியம் பொய் போலவும் தெரியும். எப்போதும் எல்லோரிடமும் சாதாரணமாக, எளிமையாக இருக்கிற சத்தியம் அறிவுக்கு, பழக்கத்திற்கு, அகப்படாது. எதையும் யோசிக்காமல். எதிர்பார்க்காமல் சின்ன குழந்தை மாதிரி ஆர்வத்தோடு பார்த்தால் சத்தியம் சத்தியமாகவே தெரியும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்’ என்றார் எண்பது வயதான மீசை தாத்தா.

‘அப்படி நேரடியாக சத்தியத்தை பார்க்கிறவர்கள் இந்த காலத்தில் இருக்கிறார்களா என்ன!’ என்றேன்.

‘இல்லாமல் என்ன! மதுரை வாத்தியார் பெண் ஜமுனா அப்படிப்பட்டவள்தான்’ என்ற மீசை தாத்தா பேச்சை மாற்றி ‘உனக்கு என்ன மாதிரியான வீணை பிடிக்கும்?’ என்று கேட்டார்.

‘எனக்கு வீணை என்றால் சரஸ்வதி வீணைதான் நினைவிற்கு வரும். ஏனோ சித்ர வீணை, ருத்ர வீணை எல்லாம் நினைவிற்கு வருவதில்லை’  என்றேன்.

‘போனவாரம் சாப்ட்வேர் சரி செய்ய வேண்டும் என்று கேட்ட உன் நண்பனை போய் பார்த்தாயா? அது நினைவிற்கு வருகிறதா?’ என்று கேட்டார் தாத்தா.

‘இல்லை தாத்தா. அது மிகவும் சின்ன வேலை. தவிர வீட்டு வேலைகளுக்கே நேரம் சரியாக இருக்கிறது’ என்றேன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் மீசை தாத்தா போய்விட்டார்.

நான் சரியாக ஆயிரமாவது ஆள்! அதனால் புல்லாங்குழல் ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதை ஜவுளி அண்ணியிடம் கொடுத்தேன். புருஷண்ணாரும், மதுவண்ணாரும் சிரித்தனர். ‘நீயே வைத்துக் கொள் அல்லது எறிந்து விடு’ என்றனர். நான் பத்திரமாக வைத்திருந்தேன்.

வேறொரு நாள் காபி அண்ணியின் பெங்களூர் தோழி வீட்டுக்கு வந்திருந்தார். ‘மகாபலிபுரம் பார்க்க வேண்டும்’ என்றார். அன்று டிரைவர் ரகு விடுப்பு எடுத்திருந்தார். ‘பரமா, நீ கார் ஓட்டுகிறாயா? எந்த சமயத்திலும் கை கொடுக்க உன்னை விட்டால் இந்த வீட்டில் வேறு எவருமில்லை’ என்றார் காபி அண்ணி.

கார் அடையாரில் போக்குவரத்து நெரிசலில் மெல்ல சென்று கொண்டிருந்தபோது, அருகே சரக்கு ஏற்றிய வேன் வந்தது. டிரைவருக்கு அருகே மீசை தாத்தா உட்கார்ந்திருந்தார். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்.

‘மகாபலிபுரம் போகிறோம் தாத்தா’ என்றேன் உற்சாகமாக.

காரின் பின்சீட்டில் இருந்த காபி அண்ணியையும், அவர் தோழியையும் ஒரு பார்வை பார்த்தார். மரியாதை செய்யும் வகையில் அண்ணி சீட்டில் சற்று முன்னகர்ந்து அமர்ந்தார். தோழிக்கு தாத்தா யாரென்று தெரியவில்லை.

‘உன் அண்ணன்கள் எங்கே?’ என்று கேட்டார் மீசை தாத்தா.

‘அலுவலகம் போயிருக்கிறார்கள்’ என்றேன்.

‘சாப்ட்வேர் கேட்ட நண்பரை போய் பார்த்தாயா?’ என்று கேட்டார் மீசை தாத்தா.

‘இன்னும் இல்லை தாத்தா’ என்றேன்.

வேன் நகர்ந்து விட்டது.

மீசை தாத்தாவின் வேன் வெகு தூரம் தள்ளி சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டபின் தாழ்ந்த குரலில் ‘தாத்தாவிற்கு கலை உணர்ச்சியே கிடையாது. வேலை, சாப்பாடு, தூக்கம்! அவ்வளவுதான் அவருக்கு தெரிந்த வாழ்க்கை’ என்றார் காபி அண்ணி.

அதற்கடுத்த வாரம் சனியன்று மதியம் குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் தங்கமீன், பறவைகள் விற்கும் கடைக்கு சென்றிருந்தேன்.

புருஷண்ணாருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும்தான். ஆண் குழந்தை இல்லாத ஏக்கம் ஜவுளி அண்ணிக்கு உண்டு. ‘தங்கமீன் வாங்கலாம்’ என்று புருஷண்ணார் பெண் சொன்னாள்.

‘தாத்தா கடலில் கொண்டு போய் சேர்த்து விடுவார்’ என்றேன்.

‘சித்தப்பா, லவ் பேர்ட்ஸ் வாங்கலாம்’ என்றான் மதுவண்ணார் பையன். மதுவண்ணாருக்கு ஒரு பையனும், பெண்ணும் உண்டு.

‘வேண்டாம்’ என்றேன்.

‘என்னிடம் பணம் இருக்கிறது’ என்றான் மதுவண்ணார் பையன்.

‘தாத்தா கூண்டை திறந்து விட்டுவிடுவார்’ என்றேன்.

‘இங்கே என்ன செய்கிறீர்கள்?’ என்ற மீசை தாத்தாவின் குரல் கேட்டு திரும்பினேன்.

நான் பதில் சொல்லுமுன் ‘மீன் ஏற்றுமதி செய்ய பாட்டில்கள் வேண்டும் என்று கடைக்காரர் கேட்டிருந்தார். அதற்காக இங்கு வந்தேன்’ என்ற மீசை தாத்தா ‘இந்த மத்தியான வெயிலில் எதற்கு குழந்தைகளை கூட்டிக் கொண்டு இவ்வளவு தூரம் வந்தாய்?’ என்று கேட்டார்.

‘அண்ணார்களின் நண்பர்கள், அமெரிக்காவில் இருப்பவர்கள், விருந்திற்கு வந்திருக்கிறார்கள். குழந்தைகள் இருந்தால் தொந்தரவாக இருக்கும் என்பதால் என்னை வெளியே அழைத்துப் போக சொன்னார்கள்’ என்றேன்.

‘சாப்ட்வேர் என்ன ஆயிற்று?’ என்றார் தாத்தா.

‘வெயில் தாழ போகவேண்டும் தாத்தா’ என்றேன்.

தலையசைத்து விட்டு மீசை தாத்தா போய்விட்டார்.

அடுத்த நாளிரவு என்னையும், அண்ணார்களையும் மீசை தாத்தா தன் அறைக்கு அழைத்தார். அண்ணிகளும் வந்துவிட்டனர். ‘நாளை மதுரை போகலாம். பரமனுக்கு பெண் பார்க்கவேண்டும்’ என்றார். கவர்னசத்தை கதவை ஒட்டி அறைக்கு வெளியே நின்று கொண்டு உள்ளே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார்.

‘நாளைக்கா!’ என்ற புருஷண்ணார் என்னைப் பார்த்து ‘என்னடா. ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே’ என்றார்.

‘எனக்கே இப்போதுதானே தெரியும்’ என்றேன்.

‘யார் வீட்டுப் பெண்?’ என்றார் மதுவண்ணார்.

‘மதுரை வாத்தியார் வீட்டுப் பெண். நமக்கு தூரத்து சொந்தம்’ என்றார் மீசை தாத்தா.

‘அவரா!’ அதிர்ச்சியுடன் கேட்டார் கவர்னசத்தை. ‘நம் அந்தஸ்திற்கு கொஞ்சம் கூட பொருந்தி வராது. போக, வர நன்றாக இருக்காது. எதுவும் செய்ய வக்கில்லாத குடும்பம். நம் டிரைவரே முப்பது பவுன் மிரட்டி வாங்கி கல்யாணம் செய்கிறான்’ என்றார்.

தன் தூரத்து உறவினரான மதுரை மாமா மீது மீசை தாத்தாவிற்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. பல வருடங்களுக்கு முன்பு எங்கள் கம்பனியில்தான் வேலை பார்த்து வந்தார். ‘அவர் சொந்த குழந்தை மாதிரி கம்பனியை பார்த்துக் கொள்வார்!’ என்பார் தாத்தா.

பாண்டிச்சேரியிலிருந்த வியாபாரி ஒருவர் எங்கள் கம்பனியிலிருந்து மொத்தமாக பாட்டில்கள் வாங்கி விநியோகம் செய்து வந்தார். அலைச்சலே இல்லாமல் கம்பனிக்கு அவர் மூலம் முப்பது சதவிகிதம் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. அடிக்கடி சென்னை வந்து தாத்தாவை சந்தித்துவிட்டுப் போவார். அவர் தன் கடைக்கு பத்தாவது ஆண்டு விழா நடத்தினார். தாத்தாவிற்கும், கம்பனி சிப்பந்திகளுக்கும் அழைப்பு விடுத்தார். ‘உங்களுக்காக எவ்வளவு பாடுபடுகிறேன். ஒரு முறை கூட நீங்கள் கடைக்கு வந்ததில்லையே’ என்று கோபித்துக் கொண்டார்.

தாத்தா அப்போது திருச்சி போக வேண்டியிருந்ததால், தன் சார்பில் மதுரை மாமாவை பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தார். ‘நீ எங்கேயும் போவதில்லை. பாண்டியையும் பார்த்துவிட்டு, விழாவிற்கும் போய் வா’ என்று சொல்லி அனுப்பினார்.

இரண்டு நாட்கள் பாண்டியிலிருந்து விட்டு திரும்பிய மதுரை மாமா ‘எல்லா பாட்டில்களும் சாராயக் கம்பனிகளுக்குத்தான் போகின்றன’ என்றார். ‘என்னிடம் மருந்து கம்பனிகளுக்காக வாங்குகிறேன் என்றுதானே சொன்னார்?’ என்றார் தாத்தா. ‘பாட்டில்கள் வாங்கி சாராயம் காய்ச்சும் கம்பனிகளுக்கு விற்கிறார். எனக்கு இது சரியாக படவில்லை. நம் கம்பனி பல வருடங்களாக சாராயத்தின் மூலம் சம்பாதித்து வருகிறது’ என்று வருத்தத்துடன் கூறினார் மதுரை மாமா.

தாத்தா பாண்டிச்சேரி வியாபாரிக்கு பாட்டில்கள் தருவதை உடனே நிறுத்தினார். மொத்த வியாபாரி ‘தரமான பாட்டில்கள். விலை கூட தருகிறேன்’ என்று கூறியும் தாத்தா மறுத்துவிட்டார். கம்பனி விற்பனை முப்பது சதவிகிதம் குறைந்தது. அதன்பின் வேறு இடங்களில் ஆர்டர் எடுத்து விற்பனையை தாத்தா கூட்டிவிட்டாலும், பாட்டிக்கு மாமா மீது வருத்தம் வந்து விட்டது.  

‘மதுரைக்காரனுக்கு பொறாமை. நம் வியாபாரத்தை கெடுக்கிறான்’ என்று பொருமினார் பாட்டி. மீசை தாத்தா ஊரில் இல்லாத சமயமாக மாமாவை வீட்டிற்கு அழைத்து மிகவும் மரியாதைக் குறைவாக திட்ட, மாமா தாத்தாவிடம் சொல்லிக் கொள்ளாமல், ராஜினாமா கடிதம் எழுதி வைத்துவிட்டு  சொந்த ஊரான மதுரைக்கே திரும்பிவிட்டார்.

அங்கே ஏதோ ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் சொற்ப சம்பளத்தில் தற்காலிக ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து, கல்யாணம் செய்து கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகிறார். கல்யாணத்திற்கு பாட்டி போகவில்லை. தாத்தா மட்டும்தான் போனார். மதுரைக்கு போகும்போதெல்லாம் மாமா  வீட்டில்தான் மீசை தாத்தா தங்குவார்.

கல்யாணமான நாள் முதல் மதுரை அத்தையும் அதே தனியார் பள்ளிக்கூடத்தில்தான் பல வருஷங்களாக ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இரண்டு பேர் வேலை பார்த்தும் ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதிக்கு மேல் இல்லை என்கிற இனிய கானம்தான் வீட்டில் ஒலித்தது.   ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால் அரசாங்க மானியம் பெறும்  பள்ளிக்கூடத்தில் அத்தைக்கு வேலை கிடைத்தது. ஆனால் வேலை செய்ய வேண்டிய இடம் மதுரையிலிருந்து மூன்று மணி நேர பஸ் பிரயாண தூரத்தில் இருக்கும் கிராமம்.  அங்கேயே தங்கி கொண்டு, வாரத்திற்கு ஒருநாள் மதுரை வந்து போவார். அத்தைக்கு அந்த வேலை கிடைத்த பின்பு வீட்டு நிலைமை எவ்வளவோ முன்னேறிவிட்டது. இப்போதெல்லாம் இருபதாம் தேதிக்கு மேல்தான் இல்லை என்கிற இனிய கானம் ஒலிக்கிறதாம். இவையெல்லாம் கவர்னசத்தை தந்த தகவல்கள்.    

மீசை தாத்தா ‘கொஞ்ச நாட்களாகவே நமக்குத் தெரிந்த பல பெண்களையும் பற்றி யோசித்தேன். இந்த இடம்தான் பரமனுக்கு ஏற்ற இடம்’ என்றார்.

‘வாத்தியார் வீட்டை பார்த்திருக்கிறேன். எந்த யுகத்தில் எந்த பெருச்சாளி கட்டிய வளையோ! மனிதன் வாழக் கூடிய வீடா அது! இன்னமும் இடிந்து விழாமல் இருப்பது ஆச்சரியம்தான்’ என்றார் கவர்னசத்தை.

‘ரமணர் திருவண்ணாமலைக்கு போவதற்கு முன்பு மதுரையில் இருந்தார். அவர்  வெங்கடராமனாக மதுரை அமெரிக்கன் மிஷன்  பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவார். அப்போதெல்லாம் ஓய்வெடுக்க வாத்தியார் வீட்டு திண்ணையில் கொஞ்சம் நேரம் உட்காருவார். வாத்தியாரின் தாத்தா அவரை பலமுறை பார்த்திருக்கிறாராம். அதனாலேயே வாத்தியார் பழைய வீட்டை மாற்றாமல் இருக்கிறார்’ என்றார் மீசை தாத்தா.

‘தெரிந்தோ, தெரியாமலோ அந்த மகானுக்கு செய்த சேவை பல தலைமுறைகளை காப்பாற்றும். மனிதன்தான் மகானுக்கு சேவை செய்ய வேண்டுமா? வீடும் நிலமும் சேவை செய்யக் கூடாதா?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘வசதியான இடமாக பார்க்கலாமே’ என்றார் மதுவண்ணார்.

‘ஆமாம்’ என்றார் காபி அண்ணி.

உடனே கவர்னசத்தை வேறு மாதிரி பேச ஆரம்பித்தார். ‘உங்கள் தாத்தா சொல்வதுதான் சரி. நியாயத்தை பார்க்க வேண்டும். பரமன் நம் வீட்டு ராஜாதான். ஆனால், உங்கள் தாத்தாவிற்கு பேரன் என்பதை தவிர அவனிடம் வேறென்ன தகுதி இருக்கிறது? உங்களுக்கு ஒரு தங்கை இருந்தால் பரமனுக்கு கொடுப்பீர்களா?’ என்று அண்ணிகளைப் பார்த்து கவர்னசத்தை கேட்டார்.

அண்ணிகள் பதில் சொல்லவில்லை.

‘மதுரை பெண்தான் பெரியவர்கள் பேச்சு கேட்டு அடக்கமாக வீட்டு வேலை செய்து கொண்டு ஒழுங்காக இருப்பாள். வசதியான பெண்கள் என்றால் திமிர் பிடித்து அலைவார்கள். பிள்ளை பெறுவதைத் தவிர வேறு வேலை செய்யத் தெரியாது’ என்றார் கவர்னசத்தை.

காபி அண்ணிக்கு கோபம் வருவது முகத்தில் தெரிந்தது. ஆனால் என்ன செய்வது? கவர்னசத்தையை எதிர்த்து பேச முடியாதே!

‘மதுரை அத்தை பல வருடங்களாக வெளியூரில்தானே வேலை பார்க்கிறார்? தாயின் கவனிப்பு இல்லாமல் தானாக வளர்ந்த பெண்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘மதுரை மாமாவிற்கும் அத்தைக்கும் சொற்ப சம்பளம். பெண்ணுக்கு பெரிய குடும்பத்தில் வாழத் தெரியுமா?’ என்றார் காபி அண்ணி.

‘வேறு நல்ல இடமாக பார்க்கலாம். என் அப்பாவிடம் சொல்கிறேன்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நானும் என் அப்பாவிடம் சொல்கிறேன்’ என்றார் காபி அண்ணி.

‘வாத்தியார் குடும்பத்தையும், பெண்ணையும் எனக்கு நன்றாகத் தெரியும். பெண்ணுக்கு பரமனை பிடித்திருந்தால் கல்யாணத்தை அடுத்த மாதமே முடித்து விடலாம்’ என்றார் தாத்தா.

‘என்ன அவசரம்?’ என்றார் புருஷண்ணார்.

‘வயதாகிறது’ என்றார் தாத்தா.

‘உங்களுக்கு வயதானால் என்ன? நாங்கள் இல்லையா’ என்றார் மதுவண்ணார்.

‘பரமனின் வயதை சொன்னேன். வாத்தியாரிடம் பத்து நாட்களுக்கு முன்பே பேசிவிட்டேன். பெண் வீட்டுக்காரருக்கு நம் வார்த்தை மட்டும் போதாது. அவரும் பரமனை பற்றி விசாரிக்க வேண்டுமே! இன்று மதியம்தான் அவருக்கு போன் செய்து நாளை மாலை பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லிவிட்டேன். எல்லோருக்கும் ரயில் டிக்கெட் எடுத்து விட்டேன். காலையில் போகிறோம்’ என்றார் தாத்தா.

‘அவசரமாக விடுப்பு எடுக்க என்னால் முடியாது’ என்றார் புருஷண்ணார்.

‘என்னாலும் முடியாது’ என்றார் மதுவண்ணார்.

‘இன்று விருந்திற்கு வந்தவர்களோடு நாளையும், மறுநாளும் வெளியே போக ஏற்கனவே திட்டம் போட்டுவிட்டோமே. அக்கா, நீங்கள் மதுரை போய் வாருங்களேன். இங்கே நானிருந்தால் போதும். நீங்கள் வராவிட்டாலும் விருந்தினார்கள் பொருட்படுத்தமாட்டார்கள்’ என்றார் காபி அண்ணி.

மீசை தாத்தா ஊன்றுகோலை கைகளில் உருட்டினார். அவருக்கு கோபம் வரத் தொடங்கிவிட்டது.

‘வேண்டுமானால் யசோதாவை கூட்டிக் கொண்டு போகலாம்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘ஒரு வாரத்திற்கு முன்பே மேள, தாளத்தோடு சென்று பட்டுவேட்டி வைத்து அழைப்பு தந்தால்தான் மாப்பிள்ளை வருவார்’ என்றார் கவர்னசத்தை.

‘பெண் பார்ப்பதற்கு பரமனும், தாத்தாவும் போனால் போதும். நிச்சயம், கல்யாணம் என்று இன்னும் எவ்வளவோ உண்டே!’ என்றார் மதுவண்ணார்.

தாத்தா பதில் சொல்லாமல் ஊன்றுகோலை மேலும் வேகமாக உருட்டினார்.

அதை கவனித்த ஜவுளி அண்ணி கண்களால் ஜாடை காட்டியதும் அனைவரும் அமைதியாகி விட்டனர்.

‘அடுத்த வாரம் வைத்துக் கொண்டால் எல்லோரும் போய் வரலாம்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நான், பரமன், கவர்னசத்தை மூன்று பேர் மட்டும் போய் வருகிறோம்’ என்றார் தாத்தா.

எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்தோம்.

‘பரமா, பெண் அனேகமாக நாட்டுபுறமாகத்தான் இருப்பாள். பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு, நான் உனக்கு வேறு நல்ல பெண்ணாக பார்க்கிறேன்’ என்றார் ஜவுளி அண்ணி. அவர் கண்கள் சிறிது கலங்கி இருந்தன.

‘அதுதான் சரி. ஒன்றுமில்லாதவள் உன் அண்ணிகளைப் பார்த்து பொறாமைப்படுவாள். குடும்பத்தை பிரித்துவிடுவாள்’ என்றார் காபி அண்ணி.

‘தனக்கு எடுபிடிக்கு ஆள் வேண்டும் என்பதற்காக கவர்னசத்தை மதுரை பெண்தான் வேண்டும் என்கிறார்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘கவர்னசத்தை பேச்சை கேட்டு தாத்தாவே முடிவெடுத்துக் கொள்ளட்டும். நமக்கென்ன?’ என்றார் புருஷண்ணார்.

‘என்ன இப்படி பேசுகிறீர்கள்? பரமன் நம் பிள்ளை’ என்றார் ஜவுளி அண்ணி.

‘தாத்தா ஏன்தான் இப்படி செய்கிறாரோ! என் அப்பாவிடம் சொன்னால் தங்க சிலையை வைரத்தில் இழைத்து வெள்ளித் தேரில் கொண்டுவந்து இந்தாடா பரமா என்று கொடுத்துவிட்டுப் போவார்’ என்றார் காபி அண்ணி.

காபி அண்ணி தன் அறைக்குப் போனபின் சிறிது மன வருத்தத்துடன் சிரித்தார் ஜவுளி அண்ணி ‘கல்யாணம், பண்டிகை, விசேஷம் என்றால் வசதியானவர்கள் பட்டு ஜவுளிதான் வாங்குவார்கள். உன் காபி மாமாவிற்கு எத்தனை பெரிய மனிதர்களை தெரிந்து விடப் போகிறது?’ என்றார்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms