08. பெண் பார்த்தல் - மீன்கொடி

மீசை தாத்தாவோடும், கவர்னசத்தையோடும் ஜமுனாவை பெண் பார்க்க மதுரைக்குப் போனேன். யசோதா அக்காவிடம் போனில் தகவல் சொல்லி அழைத்தேன். அண்ணார்களும், அண்ணிகளும், அக்காவும் வரவில்லை. வர முடியவில்லை. வேறு முக்கிய வேலைகள் குறுக்கிடாதிருந்தால் நிச்சயம் வந்திருப்பார்கள். நான் அதை சொன்னபோது, ஊன்றுகோலால் தரையை பலமாக தட்டி ‘முட்டாள்’ என்று மீசை தாத்தா உறுமினார். வேறொன்றும் சொல்லவில்லை. கோபம் வந்தால் மீசை தாத்தா ஊன்றுகோலைத் தட்டுவார் அல்லது உருட்டுவார்.

‘நல்ல காரியத்திற்கு மூன்று பேர் போவது சரியில்லை’ என்று கவர்னசத்தை சொன்னார்.

‘நீ ஒருத்தியே நான்கைந்து விஷமிகளுக்கு சமம்’ என்று கூறிவிட்டார் மீசை தாத்தா.

மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுர வாசலுக்கு அருகே இருந்த நெரிசலான பல குறுகலான தெருக்கள் ஒன்றில் மதுரை மாமாவின் வீடு இருந்தது. சிறிய வளையல் கடை. சம்பந்தமில்லாமல் அதனருகே பத்திரத்தாள் விற்கும் கடை. அதனெதிரே ஓடு வேய்ந்த, திண்ணை வைத்த பழங்காலத்து சிறிய வீடு. நாங்கள் ஆட்டோவில் சென்று இறங்கியபோது மாமாவும், அவர் மகன் சுந்தரமும் வாசலில் எங்களை வரவேற்க தயாராக நின்று கொண்டிருந்தனர். தெருவும், வீடும் எனக்கு மிகவும் பரிச்சயமானவை போன்ற உணர்வு எழுந்தது.

விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் எல்லோரும் உட்கார்ந்தோம். சிறிது நேரம் சம்பிரதாயமாக பெரியவர்கள் பேசியபின், ஜமுனா எல்லோருக்கும் காபி கொண்டு வந்து தந்தாள். தாத்தாவிற்கு நமஸ்காரம் செய்தாள். பெண்களோடு உட்கார்ந்திருந்த கவர்னசத்தையை பார்த்து புன்னகைத்து விட்டு அமர்ந்தாள். ஓரிரு கணங்கள் மட்டுமே அவள் முகத்தை பார்த்தேன்.

சில நிமிடங்கள் எங்கள் எதிரே உட்கார்ந்திருந்து விட்டு உள்ளே போய் விட்டாள். நான் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கத் துணியவில்லை. காபி தரும் போது மருதாணி போட்ட கை விரல்களையும், கால் விரல்களையும் மட்டுமே நன்றாகப் பார்த்தேன்.

‘பரமா, நீ பெண்ணோடு தனியாக ஏதாவது பேசிவிட்டு வா’ என்றார் மீசை தாத்தா.

நான் தயங்கினேன். ‘தம்பி வெட்கப்படுகிறது’ என்று ஒரு பெண் குரல் கூற, பல பெண்கள் சிரிக்கும் ஒலி காதில் விழுந்தது. நான் எவரையும் நிமிர்ந்து பார்க்கத் துணியவில்லை.

‘உள்ளே வாருங்கள் தம்பி’ என்று மதுரை அத்தை அழைத்தார். உள்ளறைக்கு அழைத்து சென்று என்னை விட்டுவிட்டு அவர் மெல்ல அசைந்து வெளியே போய் விட்டார்.

அந்த சிறிய அறை தெருவோரமாக இருந்ததால் ஜன்னல் கதவு மூடப்பட்டு சூரிய வெளிச்சம் இல்லாதிருந்தது. ஓடுகளுக்கிடையே போடப்பட்டிருந்த பல மரச்சட்டங்களில் ஒன்றில் மாட்டப்பட்டிருந்த நீண்ட கம்பியை பிடித்து தொங்கியபடி, வயதாகி நிறம் மாறி விட்டிருந்த மின்விசிறி சிரமப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தது. உலகில் முதன்முதலில் மின்விசிறி செய்யப்பட்டபோது வாங்கியதாக இருக்கக் கூடும்.

இன்னொரு மரச்சட்டமொன்றில் தொங்கிய நீண்ட வயரின் முனையில் மஞ்சள் நிற முட்டை விளக்கு எரிந்து கொண்டிருந்தது விளக்கு வெளிச்சத்தின் அடியில் தரையில் விரித்த பழைய பாயின் மீது ஜமுனா அமர்ந்திருந்தாள். பொன்னிற பார்டர் வைத்த மயில் வண்ண சேலை அணிந்து, அதே நிறத்தில் முழங்கை வரை நீண்ட ரவிக்கை அணிந்திருந்தாள். நெருக்கமாக தொடுக்கப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரத்தை சூடியிருந்தாள். ஒரே ஒரு சிறிய தங்க சங்கிலியும், கைகளில் மெல்லிய தங்க வளையல்களும் அணிந்திருந்தாள்.

என்னைப் பார்த்ததும் எழுந்திருக்க முயன்றாள். பதற்றத்துடன் கைகளை கூப்பி ‘வணக்கம், எழுந்திருக்க வேண்டாம். உட்காருங்கள்’ என்று கூறி விட்டு நான் பாயை விட்டு தள்ளி தரையில் உட்காரப் போனபோது, புன்னகைத்துவிட்டு ‘பாயில் உட்காரலாமே’ என்றாள். பாயின் ஓரத்தில் உட்கார்ந்தேன்.

‘வயதில் பெரியவர்கள் சிரியவர்களை வாழ்த்துவார்கள். வணக்கம் சொல்ல மாட்டார்கள்’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு வணக்கம் சொல்ல வேண்டும் போலிருந்தது’ என்றேன்.

‘வயதானவளாகத் தெரிகிறேனா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் ஜமுனா.

அவளது சம்பிரதாயமற்ற இயல்பான பேச்சால் என் பதற்றம் அடங்கி நானும் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். ‘அப்படியில்லை’ என்று கூறி நிறுத்தினேன். சொல்லத் தோன்றியதை ஜமுனாவிடம் சொல்வது முறையாக இருக்குமா என்ற குழப்பத்தில் பேசாதிருந்தேன்.

‘சொல்ல நினைப்பதை சொல்லி விடலாமே. நான் மட்டும்தானே இருக்கிறேன்?’ என்றாள் ஜமுனா.

‘கோவிலில் மீனாட்சி நின்று கொண்டிருக்கிறார். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்’ என்றேன்.

‘மீனாட்சிதான் சொக்கநாதருக்கு சொக்குபொடி போடுவாள். இங்கே தலைகீழாக இருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘அறைக்குள் நுழைந்து உங்களைப் பார்த்ததுமே எனக்கு அப்படித்தான் தோன்றியது. இந்த இருட்டான அறையில், மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில், அலங்காரத்துடன் நீங்கள் உட்கார்ந்திருப்பது, இருண்ட கர்ப்ப கிருகத்தில் அமர்ந்திருக்கும் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது போலிருந்தது’ என்றேன். ஒரு பெண்ணிடம் அத்தனை வார்த்தைகள் நான் தொடர்ந்து பேசியது என் வாழ்வில் அதுவே முதல் முறை.

ஜமுனாவின் கண்கள் கனிந்தன. பதிலெதுவும் கூறவில்லை.

‘பல காலமாக யோகம் செய்பவருக்கு, அவர் எதிர்பார்க்காத நேரத்தில் நெஞ்சுக் குகையில் பொன்னொளியோடு ஆன்மாவின் தரிசனம் கிடைத்தது போலிருந்தது என்றால் மேலும் பொருத்தமாக இருக்கும்’ என்றேன்.

‘கதை, காவியம், தத்துவம் என்று கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தராதரம் தெரியாமல் வாசிப்பீர்கள் என்று கேள்விப்பட்டேன்’ என்றாள் ஜமுனா.

‘யார் சொன்னது?’ என்றேன்.

‘பெண் கேட்டால் வரனை பற்றி தெரிந்து கொள்ளாமல் உடனே கொடுத்து விடுவார்களா? விசாரித்தவர்கள் உங்களைப் பற்றி பல விஷயங்கள் சொன்னார்கள்’ என்றாள் ஜமுனா.

‘நல்லதாக ஒரு வார்த்தை இருக்காதே’ என்றேன்.

சிரித்தாள் ஜமுனா.

‘உங்களை எத்தனையோ காலமாகத் தெரியும் என்ற உணர்வு தோன்றிக் கொண்டே இருக்கிறது’ என்றேன்.

‘எனக்கும் எட்டு வருஷங்களாக அப்படித்தான் தோன்றிக் கொண்டேயிருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘அதென்ன கணக்கு? இப்போதுதானே என்னை பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘நினைவில்லையா? எட்டு வருஷங்களுக்கு முன் நிஜமாகவே நாம் ஒரு முறை சந்தித்தோம். அப்போது எனக்கு பதினைந்து வயது’ என்றாள் ஜமுனா.

‘அப்படியா?’ என்றேன்.

‘நீங்களும், உங்கள் மூத்தவர்களும் கொடைக்கானலுக்கு போகும் வழியில் மதுரைக்கு வந்தீர்கள். மீசை தாத்தா எங்கள் வீட்டில் தரச் சொல்லி ஒரு பெரிய ஜவுளி மூட்டையை கொடுத்தனுப்பி இருந்தார்’ என்றாள் ஜமுனா.

‘எந்த ஊருக்கு நான் போனாலும் மீசை தாத்தா நாலைந்து வீடுகளுக்கு இப்படி ஏதாவது கொடுத்தனுப்புவார். யாருக்கு, எப்போது, எதை கொடுத்தேன் என்பது நினைவில் இல்லை’ என்றேன்.

‘கொடுத்தவர் மறக்கலாம். வாங்கியவள் மறக்கலாமா? நீங்கள் மட்டும் பைகளை தூக்கிக் கொண்டு மத்தியான வெயிலில் வந்தீர்கள். வேர்வையில் நனைந்து போன முகம், கலைந்த தலை, வெள்ளையில் மெல்லிய நீலக் கட்டங்கள் போட்ட கசங்கிய சட்டை, சரியாக இஸ்திரி போடாத சாம்பல் நிற கால் சட்டை, ரப்பர் செருப்பு. உங்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அம்மா ஊரில் இல்லை. அப்பா வீட்டில் இல்லை. அதனால் நான்தான் உங்களிடமிருந்து பைகளை வாங்கிக் கொண்டேன். காபியும் போட்டு தந்தேன்’ என்றாள் ஜமுனா.

‘இப்போது மங்கலாக நினைவிற்கு வருகிறது. ஆனால் முகம் தெளிவாக நினைவில் இல்லை’ என்றேன்.

‘நிமிர்ந்து என் முகத்தை ஒரு முறையாவது பார்த்திருந்தால்தானே நினைவில் நிற்கும்?’ என்றாள் ஜமுனா.

‘அன்று நான் என்ன பேசினேன்?’ என்று கேட்டேன்.

‘காபி நன்றாக இருந்தது என்று முணுமுணுத்ததை தவிர பேசவே தெரியாதவர் போல நடந்து கொண்டீர்கள்’ என்றாள் ஜமுனா.

‘அறிமுகமில்லாத இளவயது பெண்ணிடம் எப்படி பேசுவது?’ என்றேன்.

‘இப்போது மட்டும் எப்படி பேச்சு வருகிறது?’ என்றாள் ஜமுனா.

‘நமக்குத்தான் எட்டு வருஷங்களுக்கு முன்பே அறிமுகமாகி விட்டதே!’ என்றேன்.

‘பேச்சில் சாமர்த்தியசாலிதான். இன்று கூட நான் காபி போட்டு தந்தேன். நீங்கள் கொண்டு வந்தது என்னவோ!’ என்றாள்.

‘என்னையே கொண்டு வந்திருக்கிறேனே’ என்றேன்.

‘புதுமைப்பித்தனின் கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும் கதையில் வரும் பழைய வசனம். புதிதாக ஒன்றும் தோன்றவில்லையா!’ என்றாள் ஜமுனா.

‘நிறைய வாசிப்பீர்களோ?’ என்று கேட்டேன்.

‘எப்போதாவது நூலகத்திற்கு போவேன்.  நூலகத்தையே வாசிக்க வேண்டும் என்று தோன்றும். எதையாவது புரட்டி பார்த்து விட்டு வருவேன்’ என்றாள் ஜமுனா.

‘ஒவ்வொரு தடவை வரும்போதும் உங்களுக்கு வேலை வைத்து சிரமம் தருகிறேன்’ என்றேன்.

‘சிரமமே இல்லை. ஏதோ நான் உலகத்திற்கே காபி போட்டு கொடுத்தது போல் பேசுகிறீர்கள்! நமக்கு பிடித்தவர்களுக்கு பிடித்ததைச் செய்வதில்தானே சந்தோஷம் கிடைக்கிறது? எனக்கு பதினைந்து வயதாகும்போதே அம்மா வெளியூர் போய்விட்டார். அப்போதிருந்து படித்துக் கொண்டே எல்லா வீட்டு வேலைகளும் செய்து பழகிவிட்டேன். எந்த வேலையும் எனக்கு சிரமமில்லை. சந்தோஷமாக வீட்டையும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வருகிறேன்’ என்றாள் ஜமுனா.

‘இனிமேல் என்னையும், நம் வீட்டையும் பார்த்துக் கொள்ளுங்களேன்’ என்றேன்.

‘அதற்கென்ன?’ என்று விழிகள் விரிய சொன்ன ஜமுனா சுதாரித்துக் கொண்டு ‘இதை என்னிடமா சொல்வது? வெளியே போய் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்’ என்றாள்.

எழ முயற்சித்தேன்.  ‘என்ன அவசரமோ!’ என்றாள் ஜமுனா.

‘சரி’ என்று கூறி உட்கார்ந்து கொண்டேன்.

‘இப்படி பிள்ளையார் போல உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்தால், வெளியே இருப்பவர்கள் கேலி செய்து சிரிப்பார்கள்’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம்’ என்று கூறி எழுந்தேன். ‘இன்னொரு காபி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.

‘அடிக்கடி காபி சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதில்லை. பழச்சாறு தருகிறேன். போகும் வழியிலும் கண்ட இடத்தில், கண்ட உணவை சாப்பிட வேண்டாம்’ என்று கூறியபடி ஜமுனாவும் எழுந்தாள்.

‘வருகிறேன்’ என்று கூறி கை கூப்பினேன்.

‘இப்போது நான் நின்ற கோல மீனாட்சியா!’ என்றாள் ஜமுனா.

நான் சிரித்துக் கொண்டு அறைவாயிலை நோக்கி நடக்கும்போது, அவள் தன் கைகளை லேசாக அசைத்ததால் எழுந்த வளையோசை கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

‘காத்துக் கொண்டேயிருப்பேன்’ என்றாள் ஜமுனா. சடங்கு, சம்பிரதாய ரூபங்களில் சமூகத் தடைகள் இல்லாவிட்டால் அப்போதே என்னுடன் வந்திருப்பாள் என்று தோன்றியது.

‘காதலடி நீயெனக்கு, காந்தமடி நானுனக்கு; வேதமடி நீயெனக்கு, வித்தையடி நானுனக்கு; எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே! முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே!’ என்று தோன்றியது.

அவளது விழிவிளக்குகள் விரித்த பேரொளிப்பாதையின் வழியே அறையை விட்டு வெளியே நடந்தேன். அது ஆரம்பம்தான் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

மீசை தாத்தா எல்லோர் முன்னிலையிலும் என்னிடம் ஜமுனாவைப் பற்றி ஏதாவது கேட்பார் என்று எதிர்பார்த்தேன். அவரோ ‘சென்னைக்குப் போய் கடிதம் எழுதுகிறேன்’ என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

ஆட்டோவில் திரும்பும்போது ‘அலங்காரம் விசேஷமாக இல்லை. சின்ன சங்கிலி மட்டும்தான் போட்டிருந்தாள்’ என்றார் கவர்னசத்தை.

‘வசதி குறைவான நல்ல குடும்பம்’ என்றார் மீசை தாத்தா.

‘அக்கம்பக்கத்தில் ஒரு நாளைக்கு இரவல் வாங்கி போட்டால் என்ன தப்பு? பார்க்க நன்றாக இருக்குமே. பெண்ணின் அம்மாவும் அதேதான் சொன்னாளாம். ஜமுனாதான் ‘கடன் வேண்டாம், என்னிடம் இருப்பதை மட்டும் தெரிந்து கொள்ளட்டும்’ என்று சொல்லிவிட்டாளாம். பொதுவாக இந்த காலத்துப் பெண்களுக்கு வாய் அதிகம்தான். இவள் எல்லோரையும் மிஞ்சக் கூடிய அதிக பிரசங்கி. பெரியவர்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்யத் தோன்றியதா?’ என்றார் கவர்னசத்தை.

மீசை தாத்தா ஊன்றுகோலை கைகளில் உருட்டினார். அவருக்கு கோபம் வரத் தொடங்கிவிட்டது. ‘ஜமுனா எட்டு, பத்து வருஷமாக குடும்ப நிர்வாகம் செய்கிறாள். யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாள்’ என்றார்.

‘அதை விடுங்கள். அழகி என்றார்கள். முகமும், உடம்பும் லட்சணமாக இருந்து என்ன பிரயோஜனம்? சிவப்பில்லை. மாநிறமாகத்தான் இருக்கிறாள்’ என்றார் கவர்னசத்தை.

தாத்தா பதில் சொல்லாமல் ஊன்றுகோலை மேலும் வேகமாக உருட்டினார்.

சென்னை திரும்பும்போது, காவிரியில் நீரோடத் தொடங்கியிருந்தது. ‘இன்றுதான் நீர் திறந்து விட்டிருக்கிறான் போலிருக்கிறது’ என்றார்.

தொலைவில் மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் சிறிய புள்ளியாகத் தெரிந்தது. ‘இப்படி பிள்ளையார் போல உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்தால்?’ என்று ஜமுனா கேட்பது போலிருந்தது.

காவிரி மேம்பாலத்தில் ரயில் வேகமாக ஓடியபோது எங்கள் எதிரே உட்கார்ந்திருந்த பெரியவர் பையிலிருந்து எடுத்த சில்லறை காசுகளை ‘தாயே, எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும்’ என்று கூறிவிட்டு நதி நீரில் வீசி எறிந்தார்.

‘ஏதோ சாஸ்திரத்திற்கு பத்து காசு போட்டால் போதாதோ! ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று கேள்விப்பட்டதில்லையா? வயிற்றெரிச்சலாக இருக்கிறதே!’ என்றார் கவர்னசத்தை.

‘எனக்கு ஜமுனாவைப் பிடித்திருக்கிறது’ என்றேன்.

‘அது பிரச்சினையில்லை. பெண்ணுக்கு உன்னை பிடித்திருக்கிறதா என்பது தெரிய வேண்டும்’ என்ற தாத்தா நரைத்த மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு சிரித்தார்.

மீசை தாத்தா அபூர்வமாகத்தான் சிரிப்பார்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms