09. நிச்சயதார்த்தம் - மீன்கொடி

சென்னை திரும்பியபின் புருஷண்ணார் மட்டும் என்னிடம் ‘என்னடா, முடித்தாகி விட்டதா?’ என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் போய்விட்டார். மதுவண்ணார் எதுவும் கேட்கவில்லை. அண்ணார்கள் தாத்தாவிடம் எல்லா விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் எவரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

ஜவுளி அண்ணி ‘பெண் பிடிக்கவில்லை என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டாயா?’ என்று கேட்டார்.

‘பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டேன்’ என்றேன்.

‘கிறுக்கு பிள்ளையே! ஏன் அப்படி சொன்னாய்?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘பிடித்திருக்கிறதே’ என்றேன்.

‘வாழ்க்கையில் முதல் தடவையாக இளவயது பெண்ணை பார்த்ததில் புத்தி கெட்டு போய் விட்டான். தாத்தா வாக்கு கொடுத்து விட்டாரா?’ என்றார் காபி அண்ணி.

‘இன்னமும் இல்லை. பெண்ணுக்கு என்னை பிடிக்க வேண்டுமாமே! தாத்தா சொன்னார்’ என்றேன்.

‘பரவாயில்லையே! தாத்தா பெண்கள் மனதை கூட புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாரே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘உங்கள் எல்லோரிடமும் தாத்தா அன்பாகத்தானே இருக்கிறார்’ என்றேன்.

‘எங்களிடம் அன்பாக இருந்து என்ன பிரயோஜனம்?’ என்றார் காபி அண்ணி.

‘பெண் என்ன சேலை கட்டியிருந்தாள்?’ என்று ஜவுளி அண்ணி.

‘மயில் நிற சேலை. சரியாக கவனிக்கவில்லை’ என்றேன்.

‘சேலையையே கவனிக்கவில்லை. நகையைத்தானா பார்த்திருக்கப் போகிறாய்?’ என்று சொன்னார் ஜவுளி அண்ணி.

‘முகத்தையாவது பார்த்தாயா?’ என்றார் காபி அண்ணி.

‘நல்ல பெண் அண்ணி’ என்றேன்.

‘எதை வைத்து சொல்கிறாய்?’ என்று கேட்டார் ஜவுளி அண்ணி.

‘பார்த்ததும் பிடித்ததே’ என்றேன்.

‘அது மட்டும் போதுமா?’ என்று கேட்டார் காபி அண்ணி.

‘எனக்கு போதும்தான். மேலும் தனியாக பேசியும் பார்த்தேனே’ என்றேன்.

‘நீயா! தனியாகவா!’ என்று இரண்டு அண்ணிகளும் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

‘தாத்தா பேச சொன்னாரே’ என்றேன்.

‘அதுதானே பார்த்தேன்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘தனியாக பேசினாயா? விவரமாக சொல்’ என்று ஆர்வத்துடன் கேட்டார் காபி அண்ணி.

‘பேசாமல் இருடி. சின்ன பிள்ளையை கேலி செய்யாதே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நீங்களும் கேட்க மாட்டீர்கள். என்னையும் கேட்க விட மாட்டீர்கள்’ என்று நொடித்துக் கொண்டார் காபி அண்ணி.

மதுரைக்கு சென்று திரும்பிய மூன்றாவது நாள் தாத்தா எல்லோரையும் தன் அறைக்கு அழைத்தார்.

‘வரும் ஐந்தாம் தேதி பரமனுக்கு கல்யாணம் நடத்தி விடலாம்’ என்றார்.

‘இன்னும் இரண்டு வாரங்களிலா?’ என்றார் ஜவுளி அண்ணி சற்று திகைப்புடன்.

‘இப்போதெல்லாம் நல்ல மண்டபத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும்’ என்றார் புருஷண்ணார்.

‘புதிதாக தென்றல் ஹோட்டல் கட்டியிருக்கிறார்களே. அதிலிருக்கும் மண்டபத்தை பதிவு செய்து விட்டேன்’ என்றார் தாத்தா.

‘அது மிகவும் சின்ன ஹோட்டல். மண்டபமும் சிறியது. இருநூறு பேர்களைத்தான் கொள்ளும்’ என்றார் மதுவண்ணார்.

‘நம் சார்பில் நூறு பேர்களை கூப்பிட்டால் போதும்’ என்ற தாத்தா புருஷண்ணாருக்கும், மதுவண்ணாருக்கும் ஆளுக்கு பத்து அழைப்பிதழ்களைக் கொடுத்தார். ‘கூட வேண்டுமானால் நீங்கள் அச்சடித்துக் கொள்ளுங்கள்’ என்றார். எதுவும் பேசாமல் அண்ணார்கள் வாங்கிக் கொண்டார்கள்.

‘உனக்கு எத்தனை வேண்டும்? இரண்டுதான் தேவைப்படும் என்று நினைக்கிறேன்’ என்று என்னிடம் சொன்னார் தாத்தா.

தீவிரமாக யோசித்தேன். ‘மூன்று தேவைப்படும்’ என்றேன்.

‘யாரந்த புதிய நண்பன்?’ என்றார் தாத்தா.

‘மாதிரிக்கு எனக்கொன்று வேண்டுமே’ என்றேன்.

‘எங்கள் எல்லோருக்கும் விமரிசையாக கல்யாணம் நடந்தது. பரமனுக்கும் அதே போல நடத்தி விடலாமே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘இவன் படிப்பிற்கும், சம்பாத்தியத்திற்கும் இதுவே அதிகம்’ என்றார் தாத்தா.

வெளியே வந்ததும் ஜவுளி அண்ணி வருத்தப்பட்டார். ‘தாத்தா வரவர விசித்திரமாக நடந்து கொள்கிறார். கல்யாணம் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை நடப்பது. எதற்குமே கணக்கு பார்க்காதவர் இதற்கு போய் கணக்கு பார்க்கிறார்’ என்றார்.

‘ஒரு வகையில் நல்லதுதான். நம் செலவில் சாப்பிட்டுவிட்டு எதுவும் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டுப் போகிறவர்களுக்காக வீண் செலவு செய்ய தேவையில்லை’ என்றார் கவர்னசத்தை.

அன்றிரவு என்னை தாத்தா அழைத்தார். ஒட்டப்பட்டிருந்த இரண்டு காகித உறைகளைத் தந்தார். ஒன்றின் மீது மதுரை மாமா பெயரும் மற்றொன்றின் மீது ஜமுனாவின் பெயரும் எழுதப்பட்டிருந்தன.

‘மதுரைக்கு நேரில் போய் கொடு’ என்றார். கையில் ஒரு ரயில் டிக்கெட்டையும் சிறிது பணத்தையும் தந்தார்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms