10. மீண்டும் ஜமுனா - மீன்கொடி

மறுநாள் காலையில் கிளம்பி இரண்டு மணிக்கு மதுரை சென்றடைந்தேன். மீனாட்சி அம்மன் கோவிலருகே ஒரு விடுதியில் தங்கினேன். உடனே மாமா வீட்டிற்கு போக வேண்டும் என்று தோன்றினாலும் ஆறு மணி வரை காத்திருந்தேன்.

என்னிடம் புதிய சாம்பல் நிற கால்சட்டையும், வெள்ளையில் மெல்லிய நீல கட்டங்கள் போட்ட புதிய சட்டையும் இருந்தன. மடிப்பு கலையாமல் அவற்றை அணிந்து கொண்டு, பளபளப்பேற்றப்பட்ட காலணிகளை போட்டுக்  கொண்டு மாமா வீட்டிற்கு கிளம்பினேன்.

கிழக்கு வாசல் கோபுரத்தை கடக்கும் போது கூடையில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் ‘இருநூறு பூ கொடு ‘என்று கேட்டுக் கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்தேன்.

யதேச்சையாக பக்கவாட்டில் திரும்பிய ஜமுனா என்னை பார்த்து புன்னகைத்தாள்.

நிச்சயமாகி விட்டதால் என்னைப் பார்க்கும் போது வெட்கப்படுவாள். அப்போது பாரதியாரின் நாணிக் கண்புதைத்தல் பாடலை சொல்ல வேண்டும் என்ற திட்டத்தோடு வந்த எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. என் வாழ்வில் இதுவரை எந்த திட்டமும் போட்டதில்லை. போட்ட ஒரே திட்டமும் படுதோல்வி அடைந்துவிட்டது.

‘வாருங்கள். மதுரை வந்தது வாத்தியார் வீட்டு மீனாட்சியைப் பார்க்கவா அல்லது சொக்கநாதர் வீட்டு மீனாட்சியைப் பார்க்கவா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘தாத்தா இரண்டு கடிதங்களை நேரில் கொடுத்து விட்டு வரச் சொன்னார்’ என்று கூறி கடிதங்களை ஜமுனாவிடம் கொடுத்தேன். ‘எதற்கு இருநூறு முழம் பூ வாங்குகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

சிரித்தாள். ‘இந்த ஊரில் எண்ணிக்கை கணக்கு. நம் ஊரில்தான் முழக் கணக்கு. இருநூறு பூக்களை நெருக்கிக் கட்டினால் ஒரு முழம் வரும். தள்ளி கட்டி எட்டு முழமாக்கும் சாமர்த்தியசாலிகளும் உண்டு’ என்றாள் ஜமுனா.

‘இதுவரை நான் பூ வாங்கியதில்லை’ என்றேன்.

‘இனி தினமும் வாங்க வேண்டியிருக்கும். என்னால் ஒரு நாள் கூட மல்லிகை இல்லாமல் இருக்க முடியாது. மதுரையில் வருடம் பூரா மல்லிகை கிடைக்கும்’ என்றாள் ஜமுனா.

‘சென்னையில் சீசனுக்கேற்றாற் போல் பூ கிடைக்கும்’ என்றேன்.

‘பூ வாங்கியதில்லை என்று இப்போது சொல்லவில்லையா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘அண்ணிகள் வாங்குவார்களே’ என்றேன். பின் ‘பதினைந்து வயதிலிருந்து வீட்டு வேலை பார்ப்பது கஷ்டமாக இல்லையா?’ என்று கேட்டேன்.

‘இல்லையே! அவசியத்தை அறிந்து ஆர்வத்தோடு செய்தால் எதுவும் கஷ்டமாக இல்லை’ என்றாள் ஜமுனா.

எதிரே இரண்டு போலீஸ் பெண்கள் சீருடையில் சென்றனர். ‘பதினைந்து வயதில் என் தோழிகள் சாரணர் பயிற்சிக்கு போனார்கள். என்னையும் கூப்பிட்டார்கள். யூனிபார்ம் போட்டு கொண்டு அவர்கள் போவதைப் பார்த்த போது எனக்கும் ஒரு வினாடி போக வேண்டும் என்று ஆசை தோன்றியது. ஆனால் அதிகாலையில் பயிற்சிக்கு போனால் வீட்டு வேலையை யார் பார்ப்பது? இப்படி எப்போதாவது சின்ன ஆசைகள் வந்து உடனே போய்விடும்’ என்றாள் ஜமுனா.

எனக்கு துக்கமாக இருந்தது.

‘திரும்பி வராத இளமையில் நிறைவேறாத ஆசை இழப்பு என்று சொல்வார்களே?’ என்றேன்.

‘காலத்திற்கு கட்டுப்படுபவர்கள்தான் இழப்பு, இறப்பு பற்றி பேசி கவலைப்படுவார்கள். நமக்கென்ன?’ என்றாள் ஜமுனா.

‘குழந்தையை வீட்டு வேலை செய்ய வைப்பது தப்பில்லையா? மாமாவும், அத்தையும் எப்படி இதை ஏற்று கொண்டார்கள்?’ என்றேன்.

‘அப்பாவும், அம்மாவும் ‘எந்த வேலையும் செய்யாதே, வேலையாள் வைத்துக் கொள்ளலாம்’ என்றுதான் சொன்னார்கள். என்னை விடுதியில் போய் இருக்கும்படி கூட சொன்னார்கள். வீட்டு நிதி நிலைமை எனக்கு தெரியாதா?’ என்றாள் ஜமுனா.

‘அதெல்லாம் பதினைந்து வயதிலே புரியுமா? எனக்கு இருபத்தைந்து வயதாகியும் பணத்தை பற்றி ஒன்றும் புரியவில்லையே! எது எப்படி இருந்தாலும் பதினைந்து வயது விளையாட வேண்டிய வயது’ என்றேன்.

‘நான்தான் பிடிவாதமாக எங்கள் வீட்டு பொறுப்பை எடுத்துக் கொண்டேன்’ என்றாள் ஜமுனா.

‘நீங்கள் ரொம்ப பிடிவாதக்காரியோ?’என்று கேட்டேன்.

‘எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ‘என்னால்தான் உன் சின்ன வயது சந்தோஷமெல்லாம் கெட்டுப் போய் விட்டது’ என்று இன்று கூட அம்மா புலம்புவார். இத்தனை வருஷம் அம்மா வீட்டு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அவர் ஒவ்வொரு நிமிஷமும் எங்களுக்காகத்தான் உழைக்கிறார். விழித்திருக்கும் நேரமெல்லாம் எனக்கும், சுந்தரத்திற்கும் அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் நீங்கள் அவருக்கு மாப்பிள்ளையாக அமைந்தீர்களாம்’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா. பின் ‘கோவிலுக்கு போக வேண்டுமா?’ என்று கேட்டாள்.

‘நீங்கள் சொன்னால் போவோம்’ என்றேன்.

‘போவதில்லையா?’ என்றாள் ஜமுனா.

‘பூஜை செய்ய போவதில்லை.. ஆனால் புராதான கட்டடம் எதைப் பார்த்தாலும் உள்ளே நுழைந்து விடுவேன். கோவில், கோபுரங்கள், மண்டபங்கள், சிற்பங்கள் இவையெல்லாமே ஒரு மாபெரும் பண்பாட்டு சாரத்தின் பல்வேறு ரூபங்கள். அவற்றை பார்ப்பதற்காக போவேன். இது போன்ற கோவிலுக்குள் நுழைந்தால் வெளியே வர குறைந்தது நான்கு மணி நேரமாகும்’ என்றேன்.

‘அதனால்தான் விஷயம் தெரியாமல் உங்களை பக்திமான், ஞானவான் என்றார்களோ?’ என்றாள் ஜமுனா.

‘இன்னொரு ரக ஆட்களும் உண்டு. தங்களை புதுமையானவர்களாக நினைத்துக் கொள்பவர்கள் என்னைப் பற்றி மரபுக்காரன், பழைய பஞ்சாங்கம், புதுமைக்கு புறம்பானவன் என்றும் உங்களிடம் சொல்லியிருக்கக் கூடும்’ என்றேன்.

‘அப்படியும் சிலர் சொன்னார்கள்தான்’ என்றாள் ஜமுனா.

‘நான் பொதுவாக இவை போன்ற விஷயங்களைப் பற்றி எந்த முடிவும், கருத்தும் வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் சொன்னதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்றேன்.

சிரித்தாள் ஜமுனா. ‘அதைப் பற்றி நானெதுவும் நினைக்கவில்லை’ என்றாள். பூக்காரிக்கு பணம் கொடுத்துவிட்டு ‘வாருங்கள். நடந்து கொண்டே பேசுவோம்’ என்று கூறி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் ஜமுனா. வீதியில் நடக்கும் எல்லோரும் எங்களையே பார்ப்பது போலத் தோன்றியது.

‘கோபுரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது’  என்றேன்.

‘இந்த கோபுரத்தை கட்டுவதற்கு மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே இதைப் போல மூன்று மடங்கு உயரமான பிரமிடுகளை எகிப்தில் கட்டியிருக்கிறார்கள். சமாதிக்கே அவ்வளவு பெரிய கட்டடம் என்றால் கோவில் கோபுரத்தை பிரமிடைப் போல பத்து மடங்கு பெரியதாகக் கட்ட வேண்டாமா?’ என்றாள் ஜமுனா.

‘அதை விடுங்கள். என்னை பற்றி ஒன்றுமே தெரியாமலா கல்யாணத்திற்கு சம்மதித்தீர்கள்?’ என்று கேட்டேன்.

‘அடுத்தவர்கள் சொல்வதைப் பற்றி நானெதுவும் நினைக்கவில்லை என்றுதான் சொன்னேன். உங்களைப் பார்த்தபோது உங்களோடு ஒன்றானது போல ஒரு உணர்வு. அப்போதே உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். இனி தெரிந்து கொள்ள எதுவுமில்லை’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியவில்லையே’ என்றேன்.

‘என்ன செய்யலாம்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘உங்கள் செல்போன் எண் என்ன?’ என்றேன்

‘பணம் எங்களுக்கு பாலைவனத்து குடிநீர் போல. அப்பாவிடம் மட்டும்தான் செல்போன் இருக்கிறது. எல்லோரும் அதில்தான் பேசுவோம்’ என்றாள் ஜமுனா.

‘கல்யாண வேலைகள் பற்றி ஏதாவது பேச வேண்டுமானால் எப்படி தொடர்பு கொள்வது?’ என்றேன்.

‘அப்பா நம்பரை கூப்பிடுங்களேன். கல்யாண வேலைகளில் அழகுபடுத்திக் கொள்வது, தாலி கட்டிக் கொள்வதைத் தவிர வேறென்ன வேலை எனக்கு இருக்கிறது?’ என்றாள் ஜமுனா.

‘உங்கள் வீடு இருக்குமிடம் தெரியும். விலாசம் தெரியாது. சரியான வீட்டு விலாசத்தைக் கொடுங்கள். ஏதாவது முக்கியமான கடிதம் அனுப்ப வேண்டிவரும்’ என்றேன்.

‘நீங்கள்தான் நேரிலேயே வந்து கடிதம் தருகிறீர்களே? தாத்தா விலாசம் வைத்திருக்கிறார். அவரிடம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘தனிப்பட்ட விஷயம் என்றால் எப்படி தொடர்பு கொள்வது?’ என்று கேட்டேன்.

‘குடும்பம் ஊரைக் கூட்டி கல்யாணத்தை நடத்துகிறது. இதிலென்ன பிரைவெசி வேண்டியிருக்கிறது?’ என்றாள் ஜமுனா.

இதற்கு மேல் ஜமுனாவிடம் எப்படி என் விருப்பத்தை விளக்குவது என்று புரியாமல் திகைத்தேன்.

என்னை சிறிது நேரம் தவிக்க விட்டபின் ‘என்னோடு அடிக்கடி பேச வேண்டுமாக்கும்?’ என்று கேட்டாள்.

‘ஆமாம். கல்யாணத்திற்கு முன்னால் அடிக்கடி பேசினால் உங்களை புரிந்து கொள்ள முடியும் என்று காபி அண்ணி சொல்லிக் கொடுத்தார். அதனால்தான் போன் நம்பர் கேட்கிறேன்’ என்றேன்.

‘அதை நேரடியாக கேட்பதுதானே? வீட்டிற்கு எதிரே பத்திரத்தாள் கடை இருக்கிறதே. மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை நான் மட்டும்தான் அங்கிருப்பேன். அந்த கடையின் போன் நம்பர் தருகிறேன்’ என்றாள் ஜமுனா.

‘வேலை பார்க்கிறீர்களா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. உதவியாக இருக்கிறேன். கடை உரிமையாளர் அப்பாவின் பால்ய சிநேகிதர். மதியம் அவர் சாப்பிடப் போய் திரும்பும் வரை பார்த்து கொள்ள முடியுமா என்று கேட்டுக் கொண்டார். அதனால் செய்கிறேன். சம்பளம் தருகிறேன் என்றார். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பணத்திற்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை பத்திரத்தாள் கடையில் இருப்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது’ என்றாள் ஜமுனா.

நாங்கள் வீட்டை அடைந்தபோதுதான், மாமாவும் திரும்பியிருந்தார். வழக்கமான விருந்தோம்பலுக்குப் பின் மாமா என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஜமுனா கடிதங்களை வாசித்தாள். பின் அவற்றை மாமாவிடம் தந்தாள். ‘பெரியவர் என்ன எழுதியிருக்கிறார்? சொன்னால் மாப்பிள்ளையும் தெரிந்து கொள்வாரே’ என்றார் மாமா.

‘கல்யாண செலவு எவ்வளவு ஆகும் என்று கணக்கு எழுதியிருக்கிறார். அதில் சரிபாதி நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம். தொகையை இவரிடமே கொடுத்து விடலாம்’ என்றார் மதுரை மாமா. ‘உனக்கு என்னம்மா எழுதியிருக்கிறார்?’என்று கேட்டார்.

‘எனக்கொரு செக் அனுப்பியிருக்கிறார். கல்யாணத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் வாங்கிக் கொள்ள சொல்லியிருக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘பெரிய மனசு!’ என்றார் மதுரை அத்தை.

‘என்ன செய்யலாம்?’ என்றார் மதுரை மாமா.

‘செக்கை திருப்பி அனுப்பி விடலாம்’ என்றாள் ஜமுனா.

அத்தை ‘வேண்டாம், தாத்தாவை அவமரியாதை செய்யாதே’ என்று பல முறை கூறியும் ஜமுனா செக்கை திருப்பி தந்து விட்டாள். கல்யாண செலவிற்கான பாதி பணத்தையும் அவள் மூலம்தான் மாமா என்னிடம் கொடுத்தார்.

சென்னை திரும்பியதும் தாத்தாவின் அறைக்கு சென்று பணத்தையும். செக்கையும் தந்தபோது ‘வைத்திரு, அப்புறம் வாங்கி கொள்கிறேன்’ என்றார்.

மறுநாள் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும்போது ‘மதுரை வாத்தியார் என்ன சொன்னார்?’ என்று புதிதாக கேட்பவர் போல் கேட்டார் தாத்தா.

‘நீங்கள் கல்யாண செலவிற்காக கேட்ட பணத்தை கொடுத்துவிட்டார்’ என்றேன்.

‘ஜமுனாவிற்கு நான் கொடுத்த அன்பளிப்பு செக்கை ஆவலாதியாக வாங்கிக் கொண்டு விட்டாளா?’ என்று கேட்டார் தாத்தா.

‘இல்லை. வேண்டாம் என்று திருப்பி கொடுத்து விட்டாள்’ என்றேன்.

‘நான்தான் அவள் திமிர் பிடித்தவள், அகராதி என்று அன்றே சொன்னேனே?’ என்றார் கவர்னசத்தை.

தாத்தா பார்க்காதபோது ஜவுளி அண்ணி என்னைப் பார்த்து புன்னகைத்தார். தனிமையில் ‘நீ தாத்தாவின் கூட்டு களவாணிதானே?’ என்று கூறி சிரித்தார்.

‘எனக்கு புரியவில்லை’ என்றேன்.

அடுத்து வந்த நாட்களில் திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்று எவராலும் சொல்ல முடியவில்லை. முதல் காரணம் தாத்தாவே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இரண்டாவது காரணம் அவர் போட்டிருந்த பட்ஜெட்டில் அவரைத் தவிர வேறு எவராலும் எதுவும் செய்து விட முடியாது.

எல்லா திருமணங்களிலும் முக்கிய பங்கு எடுத்த கவர்னசத்தைக்கு, என் திருமணத்தில் பெண் பார்ப்பதைத் தவிர ஒரு பங்கும் கிடைக்கவில்லையே என்ற கவலை வந்துவிட்டது.

அதனால் புரோகிதர் விஷயத்தில் தலையிட்டார். தனக்குத் தெரிந்த ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள்தான் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றார்.

தாத்தா ‘சாமியாருக்கும், சம்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்? நல்ல மனிதர்கள் எவரேனும் தாலி எடுத்து தரட்டும். இவன் தாலி கட்டட்டும். அது போதும்’ என்றார்.

நானும் அதையே விரும்பினேன். காரணம் அதைத்தான் ஜமுனா விரும்பியிருந்தாள். அவளுக்கு எந்த சடங்கிலும் நம்பிக்கை கிடையாது.

ஆனால் இதே விஷயத்தை கவர்னசத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தார். ‘சரி, என்னவோ செய்’ என்று கூறி விட்டார் தாத்தா.

இது பற்றி ஜமுனாவிடம் போனில் சொன்னேன். தினமும் ஜமுனாவிடம் நாள் முழுவதும் போனில் நான் பேச விரும்பினாலும், அவள் நான்கைந்து நிமிடங்கள் மட்டுமே பேசினாள். ‘பத்திரங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறி போனை வைத்து விடுவாள்.

‘ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளே கல்யாணத்தை நடத்தட்டும். நமக்கென்ன?’ என்றாள் ஜமுனா.

‘இது நம் கல்யாணம்’ என்றேன்.

‘அடுத்தவர்களுக்காகத்தானே கல்யாணமே செய்து கொள்கிறோம்? யாருக்கு எதை நிரூபிக்க வேண்டும்? என்னைக் கேட்டால் மனம் ஒத்து போனால் உடனே சேர்ந்து வாழலாம் என்றுதான் சொல்வேன்’ என்றாள் ஜமுனா.

‘கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலா?’ என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.

‘ஆமாம். ஆனால் நீங்கள் பயப்படுவீர்களே!’ என்று கூறி சிரித்த ஜமுனா ‘எதனை பொருட்படுத்துகிறோமோ, அதுதானே நம்மை பாதிக்கும்? விடுபட்ட மன நிலையில் இருங்களேன்’ என்றாள்.

அதன் பின் நான் புரோகிதரைப் பற்றியோ, சடங்குகளைப் பற்றியோ நினைக்கக் கூட இல்லை. 

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms