11. கல்யாணம் - மீன்கொடி

கல்யாணத்தில் பொதுவாக முதல் நாள் நிச்சயதார்த்தம் அல்லது வரவேற்பு இருக்கும். மறுநாள் காலையில் கல்யாணம் நடக்கும். எனக்கும், ஜமுனாவிற்கும் கல்யாணம் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்யாணத்திற்கு முதல் நாள் மாலை வரை உற்சாகமாக எங்களோடு பேசிக் கொண்டிருந்த தாத்தா, ஏதோ ஒரு  போன் வந்தபின் இறுக்கமாகி விட்டார். மதுரை மாமாவை தனியாக அழைத்து  சென்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.  

மறுநாள் காலையிலும், கல்யாணத்தின் போதும் இறுக்கமாக, வேறேதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் தாத்தா.

கல்யாண மேடை மிக மிக எளிமையாகத்தான் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இருநூறு பேர்களுக்கும் குறைவாகவே வந்திருந்தனர்.

‘காலை ஒன்பது முதல் பத்தரை வரை முகூர்த்தம். நான் சரியாக எட்டரைக்கெல்லாம் வந்து விடுவேன்’ என்று கூறியிருந்தார் ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள். அவர் கேட்டிருந்த கிரியை பொருட்கள் முதல் நாளிரவே வந்து விட்டன. பொதுவான திருமண தெய்வங்கள் தவிர குடும்ப தெய்வம், குல தெய்வம், சாதி தெய்வம் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி பையில் சாமான்கள் வைக்கப் பட்டிருந்தன.

மஞ்சள் நிற நூல் சேலை உடுத்தி நான் தாலி கட்டுவதற்காக மணப்பெண் அறையில் காத்து கொண்டிருந்தாள் ஜமுனா. தாலி கட்டியபின் பட்டு சேலைக்கு மாறிக் கொள்வாள்.

கவர்னசத்தை தனக்கு கட்டுப்படுபவர்களை எல்லாம் அதிகாரம் செய்து கொண்டிருந்தார். எட்டேமுக்கால் அளவில் மதுரை அத்தை ‘சுவாமிகளை இன்னமும் காணோமே’ என்று மெல்ல குரல் எழுப்பினார்.

‘அவர் எப்பேர்பட்ட மகான்! தேங்காய் மூடி புரோகிதரா என்ன!’ என்றார் கவர்னசத்தை.

ஒன்பது மணி ஆனதும் கவர்னசத்தை ரகசியமாக என்னிடம் வந்து ‘ஒரு போன் பண்ணி பார்க்கலாமா?’ என்று கேட்டார். நான் போன் செய்தேன். சுவாமிகளின் போன் அணைக்கப்பட்டிருந்தது.

‘வண்டியில் வந்து கொண்டிருப்பார்’ என்றார் கவர்னசத்தை.

மணப்பெண் அறையிலிருந்த ஜமுனாவிற்கு போன் செய்தேன். ‘தாத்தாவிடம் சொல்லி புரோகிதர் இல்லாமல் கல்யாணம் நடத்தி விடலாமா என்று ஜவுளி அண்ணி கேட்டார். எனக்கும் சரி என்று தோன்றுகிறது’ என்றேன்.

‘அட, என்ன அவசரம் உங்களுக்கு!’ என்றாள் ஜமுனா.

‘நேரமாகிறதே’ என்றேன்.

‘எந்த ஜென்மத்திலும் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு நான் உறவாகத்தான் இருப்பேன். அதனால் பொறுமையாக இருங்கள்!’ என்றாள் ஜமுனா.

அழைக்கப்பட்டிருந்த எல்லோரும் வந்து மண்டபத்தில் கூடி விட்டிருந்தனர். மணமக்கள் இல்லாத மேடையை பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன செய்வதென்று எவருக்கும் தெரியவில்லை.

ஒன்பதரைக்கு மேல்  கவர்னசத்தையால் பொறுக்க முடியவில்லை. மதுவண்ணாரை அதட்டி, பின் கெஞ்சி,  சுவாமிகள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பத்து மணிக்கு திரும்பி வந்தார் மதுவண்ணார்.

‘நல்ல ஆளை பார்த்து விட்டீர்கள்!’ என்று கவர்னசத்தையிடம் சொல்லிவிட்டு ‘தாத்தா, அமைச்சர் தமிழடியான் ஏதோ ஒரு பெரிய திட்டம் ஆரம்பிக்கிறாராம். இந்த சுவாமி அவர் வீட்டிற்கு காலையில் நான்கு மணிக்கே போய்விட்டது. இன்னமும் அங்கேதான் இருக்கிறது. நேரில் பார்த்து விசாரித்தால் ‘வேறு யாரையாவது வைத்து கல்யாணத்தை நடத்திக் கொள். தலைவர் எனக்கு வைர மோதிரம் போட்டிருக்கிறார். இப்போதைக்கு இங்கிருந்து நகர முடியாது’ என்று பேசுகிறது . திரும்பி வந்து விட்டேன்’ என்றார்.

எல்லோரும் கவர்னசத்தையை பார்க்க, அத்தனை சக்தியை அவரால் தாங்க முடியவில்லை. ‘ஏம்பா, அந்த அயோக்கியனுக்கு பின்னந்தலையில் ஒரு அறையாவது கொடுத்து விட்டு வந்திருக்கக் கூடாது? சாதாரண புரோகிதரை கூப்பிட்டிருந்தால் கூட கல்யாணம் இந்நேரம் முடிந்திருக்குமே! விசேஷமான ஆள் என்று இவனை நம்பினேனே’ என்று புலம்பிய கவர்னசத்தை திடீரென சன்னதம் வந்தவர் போலாகி ‘பரமா, உன் தாத்தாவும், நீயும் சொன்னதுதான் சரி. சாரமே இல்லாத சடங்கு எதற்கு? நாம் எந்த நேரத்தை நல்ல நேரம் என்று நினைக்கிறோமோ, அது நல்ல நேரம்தான். நடுவில் எந்த புரோக்கரும் வேண்டாம், புரோகிதரும் வேண்டாம். நீ தாலியை கட்டு’ என்றார்.

‘தாலி கட்டுவது கூட தேவையில்லைதான். ஆனால். திருமண பதிவாளர் ஒத்து கொள்ள மாட்டாரே. ஏதாவது அடையாளம் கேட்பாரே!’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா.

‘கல்யாணம் இல்லாமல் சேர்ந்து வாழலாம் என்று கூட இவள் சொல்வாள் போலிருக்கிறதே’ என்று குத்தலாக சொன்னார் கவர்னசத்தை.

‘அதை ஜமுனா ஏற்கனவே சொல்லிவிட்டாள் கவர்னசத்தை’ என்றேன்.

வாய்விட்டு சிரித்தாள் ஜமுனா.

‘கல்யாணப் பெண் போல லட்சணமாக வெட்கப்பட்டு தலையை குனிந்து கொண்டிரு’ என்று மதுரை அத்தை ஜமுனாவை அதட்டி விட்டு, நிமிர்ந்திருந்த அவளது தலையை அழுத்தி குனிய வைத்தார்.

நான் எந்த மந்திரமும், சடங்கும் இல்லாமல் தாலி கட்டி ஒரு முடிச்சு போட, மற்ற முடிச்சுகளை யசோதா அக்கா போட்டார்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்து கைகொடுத்து, போட்டோ எடுத்து கொண்டு, வண்ண காகிதம் சுற்றப்பட்ட பரிசை தந்துவிட்டு சென்றனர். பல சுவர் கடிகாரங்களும், போட்டோ சட்டகங்களும் கல்யாணப் பரிசாக வந்திருந்தன.

கம்பனிக்கு உதிரி பாகங்கள் செய்து தரும் முருகவேள் கல்லில் செதுக்கிய உள்ளங்கையளவு பிள்ளையார் சிலை ஒன்றை பரிசாகத் தந்தார்.

‘அழகாக இருக்கிறது. எங்கு வாங்கினீர்கள்?’ என்று கேட்டேன்.

‘நானேதான் செதுக்கினேன். சிற்பம் செய்வது என் பொழுதுபோக்கு’ என்றார் முருகவேள்.

அருகே நின்றிருந்த என் நண்பன் ஆடிட்டர் தினகரன் ‘யந்திர வேலைகளையும் நன்றாகத்தான் செய்கிறார்’ என்றான்.

‘இவரை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன்.

‘மண்டபத்தில்தான் தெரிந்து கொண்டேன். என் பழைய ஸ்கூட்டரில் விசித்திரமான சத்தம் வந்து கொண்டிருந்தது. பல மெக்கானிக்குகளிடம் காட்டியும் சரியாகவில்லை’ என்றான் தினகரன்.

‘அதனால்தானே புது மோட்டார் சைக்கிள் வாங்க முடிவெடுத்தாய்?’என்றேன்.

‘பார்க்கிங் இடத்தில் நான் ஸ்கூட்டரை நிறுத்தும்போது, இவரும் சைக்கிள் நிறுத்த வந்தார். எதையோ கழட்டி என்னவோ செய்தார். சத்தம் நின்று விட்டது’ என்ற தினகரன் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு  விடை பெற்றான்.

ஜமுனா சுந்தரத்தை பார்த்தாள். அவன் ‘வாருங்கள் சார், சாப்பிடலாம்’ என்று கூறி முருகவேளையும். தினகரனையும் அழைத்து சென்றான்.

தாத்தா எங்களிடம் ‘நான் அவசர வேலையாக பெங்களுருக்கு போகிறேன். இரண்டு நாட்களில் வந்து விடுவேன்’ என்றார்.

‘அப்படி என்ன அவசரம்? நாளைக்கு போகலாமே’ என்றார் காபி அண்ணி.

‘நீ பேசாமலிரு. தாத்தாவிற்கு தெரியாதா’ என்றார் ஜவுளி அண்ணி. இருந்தாலும் எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

தாத்தா கிளம்பி விட்டார். என்ன சிக்கல் என்று தெரியவில்லை. மர்மமாக இருந்தாலும், ஜமுனாவின் அருகாமையினால் அதை சில நிமிடங்களில் மறந்துவிட்டேன்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms