12. மான்மியம் - மீன்கொடி

தாத்தா கிளம்பிச் சென்ற பின் மண்டபமே காலியாகி விட்டது போலிருந்தது. பனிரெண்டு மணிக்கு மண்டபத்தில் தாத்தா குடும்பத்தினரையும், மதுரை மாமா குடும்பத்தினரையும் தவிர எவருமே இல்லை.

‘கோவிலுக்கு போய்விட்டுத்தான் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொன்னீர்களே கவர்னசத்தை’ என்றேன்.

‘நம் வீடுதான் கோவில். பரமா, இனி எந்த கோவிலுக்கும் போக வேண்டாம். எந்த பூசாரியின் உறவும் வேண்டாம். மாசிலாமணியால் நான் சபையில் பட்ட அவமானம் போதும். இனி எல்லோரையும் ஓட, ஓட விரட்டி நான் யார் என்று காட்டுகிறேன்’ என்று வெறுப்போடு சொன்னார் கவர்னசத்தை.

முதலில் அண்ணிகள் வீட்டுக்கு சென்று விட்டனர். அரைமணி நேரம் கழித்து நாங்கள் கிளம்பினோம்.

வீட்டு வாசலில் காத்திருந்த அண்ணிகள் தலைமையில் நாங்கள் வீடு புகுந்தோம்.

அண்ணிகள் ஆரத்தி எடுத்தபின் ‘புதுப் பெண் வீட்டிற்கு வருகிறாள். யாராவது பாடுங்களேன்’ என்றார் மதுரை அத்தை.

எல்லோரும் சிரித்தார்களே தவிர எவரும் பாட முன்வரவில்லை. சற்று பொறுத்து ‘நான் பாடுகிறேன்’ என்றார் கவர்னசத்தை.

எச்சரிக்கை அடைந்த ஜவுளி அண்ணி ‘பாட்டெல்லாம் எதற்கு?’ என்றார்.

‘பாட்டு வேண்டாம். உள்ளே போகலாம்’ என்றார் காபி அண்ணி.

‘ஒரு வேடிக்கைதானே. நீங்கள் பாடுங்கள்’ என்றார் மதுரை அத்தை, என் மாமியார்.

‘புதுப் பெண்ணுக்கு மாமியார் இங்கில்லை. என்னையே மாமியாராக நினைத்து கொண்டு செட்டி நாட்டு மாமியார் மான்மியம் பாடுகிறேன். பெரிய பாட்டு. சில வரிகள் பாடுகிறேன்’ என்றார் கவர்னசத்தை.

‘வேண்டவே வேண்டாம்’ என்று அண்ணிகள் இருவரும் கிட்டத்தட்ட கூவினர்.

ஆனால், கவர்னசத்தை பாட ஆரம்பித்துவிட்டார்.

நல்லாத்தான் சொன்னாரே நாராயணன் செட்டி!

பொல்லாத பொண்ணாகப் பொறுக்கி வந்து வச்சாரு
வல்லூறைக் கொண்டு வந்து வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும் கரும்பாம்புக் குட்டியையும்
செல்லாப் பணத்தினையும் செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு; உட்கார வச்சிருந்தா
தேரெல்லாம் ஓடிவந்து திருவிழாக் கோலமிடும்!

எட்டுக் கண் விட்டெரிக்க என்தம்பி மகளிருக்க
குத்துக் கல்போலே ஒண்ணெ கூட்டிவந்தோம் வீடுவரை!

அப்பன் கொடுத்த சொத்து ஆறுநாள் தேறாது!
கப்பலிலே வருகுதின்னு கதையாக் கதை படிச்சான்.

கண்ணா வளர்த்த பிள்ளை காலேசிலே படிச்சு வந்து
மண்ணாளும் ராசாபோல் வளர்ந்ததடி என் வீட்டில்!

வந்த நாள் தொட்டு என் மகனைப் பிரிச்சு வைச்சா
எந்த நாள் பாவமோ இப்ப வந்து சுத்துதடி

தலைகாணி மந்திரத்தால் தாயை மறக்க வச்சா
மலையரசி, காளி, எங்க மாரியம்மா கேக்கோணும்!

ராசாக் கிளி போலே நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்
பேசாக் கிளியாச்சு! பெண்டாட்டி நினைவாச்சு!

பாருடா என்று சொன்னா பாக்காம போறாண்டி!
கேளுடா என்று சொன்னா கேக்க மனம் இல்லையடி!

தேவி விசாலாட்சி! தென்மதுரை மீனாட்சி!
காவலுக்கு நீதான் கடைசி வரை வேணுமடி!

ஒரு மகளைப் பெத்தேனா உதவிக்கு வேணுமின்னு?
மருமகளை நம்பி நின்னேன்; மகராசி பேயானா!

நல்லாத்தான் சொன்னாரே நாராயணன் செட்டி!

சட்டென்று அந்த இடம் அமைதி ஆயிற்று. கலைந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்று எவருக்கும் தெரியவில்லை.

கோபத்துடன் காபி அண்ணி ‘என்ன பாட்டு இது!’ உரத்த குரலில் கூற, ஜவுளி அண்ணியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. மதுரை அத்தை விசும்ப ஆரம்பித்தார்.

அப்போது ஜமுனா வாய்விட்டு சிரித்தாள். ‘இது என்ன அசந்தர்ப்பமான சிரிப்பு! பாட்டு இவளுக்கு புரியவில்லையா!’ என்பது போல அனைவரும் ஜமுனாவை பார்த்தனர்.

‘கவர்னசத்தை! இந்த பாட்டு யார் எழுதியது தெரியுமா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘எனக்கு தெரியாதே அம்மா’ என்றார் கவர்னசத்தை.

‘மருமக்கள் சொத்துரிமை முறையில் இருக்கும் சிக்கலை பற்றி கவிமணி ஒரு கேலிப் பாட்டு எழுதினார். நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்று அதற்கு பெயர். அதை பார்த்து இங்கே இருக்கும் திருமண பழக்க,வழக்கத்தை கேலி செய்து கவியரசர் செட்டி நாட்டு மாமியார் மான்மியம் எழுதினார்’ என்றாள் ஜமுனா.

‘கேலிப் பாட்டு என்று தெரியும். நான் வேறென்ன கண்டேன்! தப்பாக நினைத்துக் கொள்ளாதே’ என்றார் கவர்னசத்தை.

‘இதற்கு எதிர் பாட்டு இருக்கிறது கவர்னசத்தை. செட்டி நாட்டு மருமகள் மான்மியம் என்று பெயர். நானும் உங்களைப் போல கொஞ்சம் பாடுகிறேன். கேளுங்கள்’ என்றாள் ஜமுனா. எல்லோரும் திகைப்புடன் ஜமுனாவைப் பார்க்க, அவள் பாடத் தொடங்கினாள்.

அவ கெடக்கா சூர்ப்பனகை; அவ மொகத்தே யார் பாத்தா!
அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான்!

வேறெ வைக்க நாதியில்லை; வீடில்லை; வாசலில்லை;
சோறுவைக்க பானையில்லை; சொத்துமில்லை; பத்துமில்லை!

தலைகாணி மந்திரமாம்; சங்கதியைக் கேளுங்கடி!
பொண்டாட்டி சொல் கேக்க புத்தியில்லா ஆம்பிளையா?

வீட்டு மருமகளா விளக்கேத்த வந்தவளை
கொட்டுகிறா கொட்டு, தேள்கூட கொட்டாது!

எங்காத்தா ஒருவார்த்தை எடுத்தெறிஞ்சு பேசவில்லை
என்னைப்போல் பெண்ணாக இவள எண்ணி நடந்தாக!

மீனாட்சி அம்மன்தான் கூலி கொடுக்கோணும்!
பொன்னரசி, தென்னரசி புத்தி புகட்டோணும்!

தம்பி மகளை எண்ணித் தாளமில்லே கொட்டுகிறா?
நம்பி அவளும் வந்தா நாயாகப் போயிருப்பா!

நாமா இருந்த மட்டும் நாலுழக்கு பாலூத்தி
தேனா கொடுத்திவளை திமிர் புடிக்க வச்சிருக்கோம்!

போனா போகட்டுமினு பொறுத்துக் கெடந்தாக்க
தானானா கொட்டுகிறா; தடம்புரண்டு ஆடுகிறா!

பாக்கத்தான் போறேண்டி; பாக்கத்தான் போறேன் நான்!
கேக்கத்தான் போறேண்டி; கேக்கத்தான் போறேன் நான்!

ஒருத்தருக்கு எம்மனசை ஒழுங்கா நான் தந்திருந்தா
இருக்கிற தெய்வமெல்லாம் எனக்காகக் கேக்கோணும்!

அவ கெடக்கா சூர்ப்பனகை; அவ மொகத்தே யார் பாத்தா!
அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான்!
அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான்!

எல்லா பெண்களும் சிரித்தபடி கைதட்டினர். ஏதோ தங்களுக்கே நடந்து விட்ட அநியாயத்திற்கு நீதி கிடைத்து விட்டது போல மகிழ்ந்தனர்.

கவர்னசத்தையின் முகம் சுருங்கி விட்டது.

‘கேலிப் பாட்டு என்று உங்களுக்கு தெரியாதா கவர்னசத்தை? தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்’ என்று புன்சிரிப்புடன் கூறினாள் ஜமுனா.

மதுரை அத்தையின் முகத்தில் பெருமிதம் எழுந்தது.

ஜவுளி அண்ணியும், காபி அண்ணியும் ஜமுனாவை அணைத்து கொண்டனர். ‘நாங்கள் வரும்போதும் இப்படித்தான் பாடி கவர்னசத்தை அவமானப்படுத்தினார். எங்களுக்கு உன்னைப் போல எதிர்பாட்டு பாடத் தெரியாமல் போய்விட்டது’ என்று ஜமுனாவின் காதோடு மெல்லிய குரலில் கூறினார் காபி அண்ணி.

அதற்கு பின்பு கவர்னசத்தை எல்லோரிடமும் அளவோடு பேச ஆரம்பித்துவிட்டார். ஜமுனாவை பார்க்க நேர்ந்தால் பதறிப் போய் தன்னறைக்குள் புகுந்து மறைந்து கொண்டார்.

‘புதுப்பெண் மீனாட்சியா, காளியா?’ என்று ஒரு பெண் கேட்க அனைவரும் சிரித்தனர்.

‘இனி ஜமுனா வைத்ததுதான் சட்டம். புது வெள்ளம் வந்தால் பழைய நீர் வடிய வேண்டியதுதான்’ என்றார் மற்றொரு பெண்.

அண்ணிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மலர்ந்திருந்த அவர்களது பால்முகங்கள் ஒரு கணம் சுருங்கி, திரிந்து மீண்டன.

அனைவரும் உள்ளே நுழைந்தோம். ஆண்கள் கூடத்தில் உட்கார்ந்து கொள்ள பெண்கள் உள்ளறைக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.

சம்பிரதாயமான பேச்சும், சம்பந்தமற்ற பேச்சுமாக இரண்டு மணி நேரம் கழிந்தது.

மாலை நான்கு மணிக்கு மதுரை மாமா புறப்பட்டார். ‘இனி ஜமுனா உங்கள் வீட்டுப் பெண். நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்றிரவு ஊருக்கு கிளம்புகிறோம்’ என்றார்.

எல்லோரும் அதிர்ச்சி அடைந்தோம். ‘அதற்குள்ளாகவா?’ என்று காபி அண்ணி கேட்டார்.

‘இன்னும் பல சடங்குகள் செய்ய வேண்டுமே. என்ன அவசரம்?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நாளை மறுநாள் போகலாம் என்றால் இன்றே போகலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறார்’ என்றார் மதுரை அத்தை.

‘கவர்னசத்தை பாடிய பாட்டுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்’ என்று இரண்டு அண்ணிகளும் கூறினர்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. வேடிக்கை பாட்டுதானே!’ என்றார் மதுரை மாமா.

‘இன்னும் மூன்று நாட்கள் இருப்பீர்கள் என்று நினைத்தோம்! அப்படி என்ன அவசரம்?’ என்றார் காபி அண்ணி.

‘எங்களுக்கும் இருக்க ஆசைதான். போக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிவிட்டது’ என்றார் மதுரை மாமா.

‘உங்கள் வசதி, விருப்பப்படி செய்யுங்கள். ஜமுனாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று அண்ணிகள் கூறினர்.

மாமா அண்ணார்களிடம் தனிமையில் சற்று நேரம் பேசிவிட்டு விடைபெற்றார்.

‘காரில் கொண்டு போய் விடுதியில் விட்டு வா’ என்று புருஷண்ணார் கூறினார். மாமா குடும்பத்தினரை நானும் ஜமுனாவும் காரில் அழைத்துச் சென்றோம். பழைய பயண சீட்டுகளை ரத்து செய்துவிட்டு, புது சீட்டுகள் எடுத்து அவர்கள் மதுரைக்கு ரயிலேறும் வரை கூடவே இருந்தோம்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms