13. புறப்பாடு - மீன்கொடி

வீடு திரும்பும் போது இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. காரின் முன் விளக்குகளை போடாமல் நான் ஓட்டியபோது, ஜமுனா போட்டு விட்டாள். 

‘புதிய இடம். புதிய மனிதர்கள். பயமாக இருக்கிறதா?’ என்று ஜமுனாவிடம் கேட்டேன்.

சிரித்தவள் ‘உங்கள் முகத்தைப் பார்த்தால்தான் பயந்து போனவர் போலிருக்கிறீர்கள்’ என்றாள்.

நாங்கள் காம்பவுண்டிற்குள் நுழைந்த போது வீட்டு வாசல் கதவு சாத்தப்பட்டிருந்தது. வெளியே விளக்குகள் எரியாமல் வீட்டை இருள் சூழ்ந்திருந்தது.

வாசலில் நானும் ஜமுனாவும் நின்று கொண்டு அழைப்பு மணியை சில முறை அழுத்தினோம். எவரும் கதவை திறக்கவில்லை.

‘எல்லோரும் ஏ.சி. அறைகளில் இருப்பார்கள். அதனால் சத்தம் கேட்டிருக்காது. பல சமயங்களில் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்கிறது’ என்றேன்.

ஜமுனா புன்னகைத்தாள்.

நான் என்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தேன். வீடு இருண்டிருந்தது. அவளது கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்று கூடத்தில் உட்கார வைத்துவிட்டு விளக்கையும், மின்விசிறியை போட்டு விட்டேன். எதுவும் வேலை செய்யவில்லை. ‘மின்சாரம் இல்லை. அதனால்தான் அழைப்பு மணி சத்தம் கேட்கவில்லை. இல்லையென்றால் எல்லோரும் வாசலுக்கு வந்திருப்பார்கள். மாடி அறைகளில்தான் அண்ணிகள் இருப்பார்கள். போய் பார்க்கலாம் வா’ என்று ஜமுனாவை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றேன்.

மாடிப்படி ஏறுமிடத்தில் ஜன்னல் வழியே வந்த நிலவு வெளிச்சம் இருந்தது. அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் கூந்தலை திருத்திக் கொண்டு, ஒப்பனையை லேசாக சரி செய்து கொண்டாள் ஜமுனா. படிகளுக்கு வலிக்காமல் ஏறி வந்தாள். மாடி அறைக்குள் நுழைய யத்தனித்த போது உள்ளே அண்ணார்களும், அண்ணிகளும் பேசுவது தெளிவாகக் கேட்டது.

‘கவர்னசத்தை ‘இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன்’ என்று கோபத்தோடு சொல்லிவிட்டு போய்விட்டாரே! எங்கே போயிருப்பார்?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘இரண்டு நாள் அங்கே, இங்கே என்று அலைந்து விட்டு திரும்ப வந்துவிடுவார். யாரும் இடமோ, வேலையோ கொடுக்கமாட்டார்களே. ஒரு ஆள்தான் என்றாலும் செலவு செலவுதானே? ஜமுனா பாடியது போல நாமா இருந்த மட்டும் நாலுழக்கு பாலூத்தி தேனா கொடுத்திவளை திமிர் புடிக்க வச்சிருக்கோம்’ என்று கூறி வாய்விட்டு சிரித்தார் காபி அண்ணி.

‘பரமன் தனியாளாக இருந்த வரை வீட்டுச் செலவிற்கு நாம் அவனிடம் எதுவுமே கேட்டதில்லை. இனி செலவில் மூன்றில் ஒரு பங்கு அவன் தந்தால்தான் அவனுக்கு கௌரவமாக இருக்கும்’ என்றார் மதுவண்ணார்.

‘அவனால் அவ்வளவு தர முடியாது என்று நினைக்கிறேன். இப்போதுதானே சொந்தமாக சாப்ட்வேர் எழுதி ஏதோ சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறான்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘இருந்தாலும் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே! அவன் குடும்பத்து செலவை அவன்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்? என் குடும்பத்திற்காகவா கேட்கிறேன்’ என்றார் மதுவண்ணார்.

அண்ணார் குடும்பம் வேறு, என் குடும்பம் வேறா? அண்ணாரின் சொற்கள் எனக்கு வருத்தத்தை தந்தன. நான் இதுவரை அப்படி நினைத்ததே இல்லையே.  

‘அவனால் தர முடிகிற வரை, அவன் பங்கை நானே கொடுத்து விடுகிறேன்’ என்றார் ஜவுளி அண்ணி.

பரமனும், ஜமுனாவும் நம் குடும்பம்தான் என்று அண்ணி ஏன் சொல்லவில்லை?

நான் உள்ளே நுழைவதா, வேண்டாமா என்று தயங்கி வாசலில் நின்றேன்.

‘நம் குழந்தைகளும் வளர்ந்து வருகிறார்கள். தனித்தனி அறை தேவைப்படும். பரமன் வேறு வீடு பார்த்துக் கொண்டால்தான் பரமனுக்கும், ஜமுனாவிற்கும் சந்தோஷமாக இருக்கும். புதிதாக கல்யாணம் ஆனவர்கள் இல்லையா?’ என்றார் மதுவண்ணார்.

‘இது நியாயமான பேச்சு. பரமனுக்கு மாதம் எவ்வளவு வரும்?’ என்றார் புருஷண்ணார்.

‘ஏதாவது வருகிறதா என்ன! தனியாக இருந்து குடும்பம் நடத்தினால்தான் நாம் எத்தனை சிரமப்படுகிறோம் என்பது அவனுக்குத் தெரியும்’ என்றார் மதுவண்ணார்.

‘ஒரு மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்தால் ஒன்பது மணி நேரம் கதை படிக்கிறான். அப்படியே நம் மாமனார் மாதிரி இருக்கிறான்’ என்றாள் காபி அண்ணி.

‘அப்படியானால் ஜமுனா அதிர்ஷ்டக்காரிதான்’ என்றாள் ஜவுளி அண்ணி.

அண்ணிகள் சிரித்தனர்.

‘மாமியார் கிருஷ்ண பக்தை. மருமகள் யாருடைய பக்தையோ?’ என்று காபி அண்ணி சொன்னவுடன் மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

‘வயதானதால் நம் தாத்தாவிற்கு பழைய புத்தி கூர்மை மழுங்கிவிட்டது. ஜமுனா வீட்டு மனிதர்கள் ஒன்றுமில்லாதவர்கள். இருபது பவுன் கூட தேறாது. அதுவும் பழைய நகைகள். பரமன் நிலை பரிதாபம்தான்’ என்றார் மதுவண்ணார்.

ஜமுனாவின் மனநிலையை நினைத்து எனக்கு கவலையாக இருந்தது. என் கண்கள் கசிவது போலிருந்தது. ஜமுனாவைப் பார்த்தேன். அவளோ என் கையைப் பற்றிக் கொண்டு புன்னகைத்தாள். பின் கீழே இறங்கத் திரும்பினாள். நான் அவள் கையை சிறிது அழுத்தி நிறுத்தினேன்.

‘மது சொல்வது சரிதான். பரமன் தனிக் குடித்தனம் போனால்தான் பொறுப்பு வரும். சம்பாதிக்கும் ஆர்வம் வரும்’ என்றார் புருஷண்ணார்.

‘சுந்தரம் இப்போதுதான் படிப்பை முடித்திருக்கிறானாம். வேலை தேடி நேராக சென்னைக்குத்தான் வருவான். அப்புறம் நம் வீடு இலவச சத்திரமாகி விடும்’ என்றார் மதுவண்ணார்.

‘தனிவீடு பார்த்துப் போனால் பரமனுக்கு கஷ்டமாக இருக்குமே’ என்றார் ஜவுளி அண்ணி.  

‘தேவைப்பட்டால் கொஞ்ச காலத்திற்கு நம்மால் முடிந்ததை மாதாமாதம் கொடுத்து விடலாம். மளிகை சாமான் கூட மாதாமாதம் வாங்கித் தந்துவிடலாம். ஆனால் இங்கே இருக்க வேண்டாம். சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து பெரிதாகி விடும். வெளியே போகும்போதெல்லாம்  நான் வைர நெக்லஸ் போடுவேன். ஜமுனாவிற்கு மனக் கஷ்டம் வரும். பாவம், இல்லாத சின்னப் பெண். நம் வீட்டுப் பெண் மனம் புண்பட நாமே காரணமாகக் கூடாது’ என்றார் காபி அண்ணி.

அவர்கள் பேச்சு எனக்கு குழப்பத்தை தந்தது. எனக்கு ஆதரவாகப் பேசுகிறார்களா, எதிர்ப்பாக பேசுகிறார்களா என்று புரியவில்லை.

என் கைகளை விட்டுவிட்டு பல படிகள் இறங்கிய ஜமுனா, தன் கொலுசு சத்தம் மற்றவர்களுக்கு நன்றாக கேட்கும்படி தரை அதிர படியேறினாள்.

அறையில் சட்டென மௌனம் பரவியது. நான் அரைகுறையாக சாத்தப்பட்டிருந்த அறைக் கதவை மெல்லத் தட்டினேன்.

‘திறந்துதான் இருக்கிறது’ என்று புருஷண்ணார் குரல் கேட்டதும் கதவைத் தள்ளித் திறந்தேன். உள்ளே சென்றோம்.

உள்ளே மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன.

எல்லோரும் எங்களை விரியும் புன்னகையோடு வரவேற்றனர்.

அண்ணிகள் ஜமுனாவை சிறிது நேரம் உற்றுப் பார்த்தனர்.

ஜவுளி அண்ணி ‘என்ன அழகு! சிலை போல இருக்கிறாயடி’ என்று கூறி அவளை தன்னருகே இழுத்து அணைத்து வலது கன்னத்தில் முத்தமிட்டார்.

காபி அண்ணி ‘அக்கா, உங்கள் கண்ணே பட்டுவிடும்’ என்று கூறிவிட்டு தன் கண்ணிலிருந்து சிறிது மையெடுத்து ஜமுனாவின் முகத்தில் வைத்து விட்டு ‘அக்கா சொன்னது சத்தியம்’ என்று கூறி ஜமுனாவின் இடது கன்னத்தில் முத்தமிட்டார்.

ஜமுனாவின் கண்களில் நீர் துளிர்த்தது. இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

மின்சாரம் வந்து விளக்குகள் எரிந்தன.  ஏ.சி. ஓட ஆரம்பித்தது. வசதியாக உட்கார்ந்து கொண்டு காலையில் நடந்த திருமணத்தைப் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

ஜமுனா அதிகம் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் ஜவுளி அண்ணியிடம் ‘அக்கா, இவர் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது’ என்று ஆரம்பித்தாள்.

அனைவரின் முகத்திலும் புன்னகை மறைந்து தீவிரம் எழுந்தது.

‘சொல்லுப்பா’ என்றார் ஜவுளி அண்ணி.

நான் விழித்தேன்.

‘இவர் நினைப்பு என்ன தெரியுமா? உங்களைப் போல எனக்கும் பொறுப்பு வர வேண்டுமானால் நான் தனியாக குடும்பம் நடத்தி பார்க்க வேண்டுமாம். கொஞ்ச நாள் இங்கே இருந்தாலும் நீங்கள் என்னை ராணி போல நடத்துவதில் எனக்கு சொகுசு பழகிவிடுமாம். ‘உடனே வேறு வீடு போக வேண்டும்’ என்று நினைக்கிறார். உங்களிடம் சொல்ல தயங்குகிறார்’ என்றாள் ஜமுனா.

திகைத்தேன். மற்றவர்களும் திகைத்தனர்.

‘அக்கா, நம்மை பற்றி பரமன் எவ்வளவு உயர்வாக பேசியிருக்கிறான்!’ என்று மகிழ்ந்தார் காபி அண்ணி.

‘இப்போது அதுவாடி முக்கியம்?’ என்று காபி அண்ணியை கடிந்த ஜவுளி அண்ணி என்னிடம் ‘உன்னை கிறுக்கு பிள்ளை என்று விளையாட்டாக சில சமயம் கேலி செய்வேன். அதை உண்மையாக்கி விடுவாய் போலிருக்கிறதே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘என்னடா பரமா? நீ அவ்வளவு பெரிய ஆளாகி விட்டாயா? ஜமுனா சின்னப் பெண்’ என்றார் புருஷண்ணார்.

‘உடனே எங்கேயடா போவாய்? வீடு பார்க்க வேண்டாமா? பணம் வேண்டாமா?’ என்றார் மதுவண்ணார்.

‘எல்லாமே யோசித்து வைத்து விட்டார். சூளைமேடில் தாத்தா வீடு இருக்கிறதாமே. அங்கே போகலாம் என்று நினைக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘அது ஓடு வேய்ந்த பழைய காலத்து வீடு. உனக்கு பிடிக்குமோ என்னவோ?’ என்றார் புருஷண்ணார்.

‘மதுரையில் என் அப்பா வீடும் அப்படிப்பட்ட வீடுதான். ஓடாக இருந்தாலும், கூரையாக இருந்தாலும் நம் வீடு’ என்றாள் ஜமுனா.

‘இது நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது. வாடகை இல்லை. குடும்பம் நடத்த ஓரளவிற்கு சாமான்கள் இருக்கின்றன. பெரிய செலவு எதுவுமில்லை’ என்றார் மதுவண்ணார்.

‘இன்றே கிளம்புகிறோம்’ என்றாள் ஜமுனா.

‘இது என்ன! உன் அப்பாவும் திடீரென்று இன்றே கிளம்பிப் போனார். நீயும் அப்படியே பேசுகிறாய். பேசி வைத்துக் கொண்டு இப்படி செய்கிறீர்களா? இன்றே போக நீ சொல்லும் காரணங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை’ என்ற ஜவுளி அண்ணி ‘என்ன நடந்தது? இவர்கள் மனம் நோகும்படி ஏதாவது பேசி விட்டீர்களா? உள்ளதை சொல்லுங்கள்’ என்று அண்ணார்களைப் பார்த்து கேட்டார்.

‘இது பரமனின் வீடும்கூட. நாங்கள் யார் அவனை போக சொல்ல?’ என்றார் புருஷண்ணார்.

‘அப்படி பேச நாங்கள் என்ன அற்பர்களா?’ என்றார் மதுவண்ணார்.

‘பின்னே எதற்கு இவள் சூடான காபி காலில் கொட்டியது போல துடிக்கிறாள்?’ என்றார் காபி அண்ணி.

எப்போதும் மலர்ந்திருக்கும் ஜவுளி அண்ணியின் முகம் வாடி விட்டிருந்தது. ‘இருப்பதும், போவதும் உங்கள் விருப்பம். சில நாட்கள் இங்கே இருந்து விட்டு போகலாமே’ என்றார்.

‘தாத்தா வாங்கிய முதல் வீட்டில்தான் வாழ்க்கையை ஆரம்பிக்க இவர் நினைக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘அப்படியானால் சரி. வேறெங்கும் போகவில்லையே. அதுவும் நம் வீடுதான். சாப்பிட்ட பின் காரில் கொண்டு விடுகிறேன்’ என்றார் மதுவண்ணார்.

‘இல்லை சின்னத்தான். வெளியே கடைக்கு போக நினைத்தோம். அப்படியே சாப்பிட்டுவிட்டு போகிறோம்’ என்றாள் ஜமுனா.

‘புது ஜோடி வெளியே தனியே சாப்பிட போக நினைக்கிறார்கள்’ என்றார் மதுவண்ணார்.

‘சரி பரமன் விருப்பம். நாமென்ன செய்ய முடியும்? கல்யாணமானதும் மனைவி மூலம் தன் யோசனைகளை சொல்கிறான். பெரிய மனிதனாகிவிட்டான்’ என்றார் புருஷண்ணார்.

‘அண்ணி, இரண்டு மூன்று மாற்று உடைகளை மட்டும் இன்று எடுத்துப் போகிறோம். நாளை வந்து மீதியை எடுத்துக் கொள்கிறோம்’ என்றேன்.

எழுந்து வந்து என்னருகே அமர்ந்த ஜவுளி அண்ணி திடீரென அழ ஆரம்பித்தார். ‘அம்மா போல உன்னை வளர்த்தேன். பட்டு போல பார்த்துக் கொண்டேன். நீயோ என்னை விட்டு போக நினைக்கிறாய். அழுகைதான் வருகிறது’ என்றார்.

காபி அண்ணியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

‘நல்ல நாளில் இதென்ன அழுகை? பார்த்துக் கொண்டேயிரு, எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கும்’ என்றார் புருஷண்ணார்.

ஜவுளி அண்ணி சிறிது சமாதானமானார்.

‘நீயும் ஜவுளி அண்ணியோடு சேர்ந்து எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பித்து விட்டாய்‘ என்று காபி அண்ணியிடம் மதுவண்ணார் சொன்னார்.

‘நான் ஜமுனாவிடம் இப்படியெல்லாம் சொல்லவே இல்லை’ என்று எல்லோரிடமும் கூற நினைத்தேன்.

ஆனால் ஜமுனாவின் ஏற்பாடு எனக்கு உள்ளூர பிடித்திருந்தது. மேலும் சற்று நேரம் கழித்து, நான் விரும்பியபோதும், என்னால் செய்திருக்க முடியாத ஏற்பாடு இதுவே என்றும் தோன்றியது.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms