14. சித்தப்பா - மீன்கொடி

சூளைமேடு வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு ஆறு மணிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில் நானும் ஜமுனாவும் வீட்டை விட்டு வெளியேறினோம்.

மோட்டார் சைக்கிளில் சற்று தயங்கி விட்டு ஏறும் போது ‘இந்த வண்டி யாருடையது?’ என்றாள் ஜமுனா.

‘ஆடிட்டர் தினகரனுடையது. என்னோடு பள்ளியில் படித்தவன். ‘கல்யாண சமயத்தில் தேவைப்படும். சைக்கிளில் அலையாதே. ஒரு வாரம் வைத்திரு’ என்று சொல்லி தந்தான். நான் வேண்டாம் என்று கூறியும் சாவியை என் கையில் திணித்துவிட்டு போய்விட்டான்’ என்றேன்.

‘புது வண்டி போலிருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘உன்னை நான் பெண் பார்த்துவிட்டு வந்த மறுநாள் தினகரன் என்னை பார்க்க வந்தான். ‘இந்த வண்டி ஒன்றரை லட்சம் ஆகிறது. பேங்கில் கடன் தர ஜாமீன் கையெழுத்து கேட்கிறார்கள். என் வாடிக்கையாளர் எவரிடமும் உதவி கேட்க விருப்பமில்லை. நீ போடுகிறாயா?’ என்றான். பதிவு செய்த பின் போன வாரம் வண்டி வந்தது. என்னிடம் கொண்டு வந்து கொடுத்து, உன் கல்யாணம் முடிந்த பின் வாங்கிக் கொள்கிறேன்’ என்றான். புது வண்டி’ என்றேன்.

‘இருந்தாலும் அடுத்தவர் வண்டிதானே?’ என்றாள் ஜமுனா.

பின்னால் உட்கார்ந்து கொண்டு ஒரு பெரிய பையை மடியில் வைத்து கொண்டாள். என் பொருட்கள் இருந்த சிறிய பையை வண்டியின் பக்கவாட்டில் தொங்கவிட்டுக் கொண்டேன்.

‘பாட்டியையும், சின்ன மாமாவையும் பார்த்து விட்டு போகலாமா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘வீடு எங்கே இருக்கிறது என்று தெரியும். வளர்ந்தபின் ஒரு தடவை கூட உள்ளே போனதில்லை’ என்றேன். பின் தயக்கத்துடன் ‘சித்தப்பா பற்றி கேள்விப்பட்டிருப்பாயே’ என்றேன்.

‘எவரைப் பற்றியும் நான் எந்த முடிவான கருத்தையும் வைத்து கொள்வதில்லை’ என்றாள் ஜமுனா.

சித்தப்பா வீட்டிற்கு சென்ற போது கூடத்தில் ஒரே ஒரு மின்விளக்கு துயரத்துடன் தனிமையில் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஒரு சாய்வு நாற்காலியில் சித்தப்பா கண்களை மூடி சரிந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்.

‘இவர்தான் சித்தப்பா’ என்று ஜமுனாவிடம் மெல்லிய குரலில் கூறினேன்.

அவரருகே சென்று தரையில் அமர்ந்த ஜமுனா ‘மாமா’ என்றழைத்தாள்.

கண்களை மெல்லத் திறந்த சித்தப்பா ‘யாரம்மா நீ?’ என்றார்.

‘உங்கள் புதிய மருமகள். கொஞ்சம் எழுந்து நில்லுங்கள்’ என்றாள் சற்று அதிகாரமாக.

திகைப்புடன் மெல்ல எழுந்து தள்ளாடியபடி நின்றார் சித்தப்பா.

எனக்கும் ஜாடை காட்டினாள் ஜமுனா. நானும் அவளும் சித்தப்பாவின் கால்களில் விழுந்தோம். ‘நன்றாக இருங்கள்’ என்றார். தன் சட்டைப்பையை தடவிப் பார்த்தார். அங்குமிங்கும் பார்த்து விட்டு ‘நன்றாக இரும்மா’ என்று கூறிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் சரிந்தார்.

‘எனக்கு அழைப்பு வந்தது. வரக்கூடிய நிலையில் நானில்லை. உங்கள் கல்யாணத்தைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். உன் பெயர் ஜமுனாதானே?’ என்றார் சித்தப்பா.

‘ஆமாம்’

‘இவன் பெயர் என்ன? மறந்துவிட்டேன்’ என்றார் சித்தப்பா.

‘சொல்லுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘பரமார்த்தன்’ என்றேன்.

‘ஜமுனா, எனக்கு மரியாதை கொடுத்து என் காலில் விழுந்த முதல் ஆள் நீதான்’ என்றார் சித்தப்பா. அவர் கண்களில் நீர் திரண்டது. ‘என்னிடம் பணம் வாங்கியவர்கள் கூட என் காலில் விழுந்ததில்லை. நானோ பணத்தையும் கொடுத்துவிட்டு வைப்பாட்டிகளின் கால்களிலும் விழுகிறவன். என்னை எவன் மதிப்பான்?’ என்றார் சித்தப்பா.

‘பாட்டி எங்கே?’ என்று கேட்டேன்.

‘யாருக்குத் தெரியும்? காபி கூட தராமல் வெளியே போய்விட்டார்’ என்றார் சித்தப்பா எரிச்சலுடன்.

‘நான் போட்டு தருகிறேன் மாமா’ என்று எழுந்தாள் ஜமுனா.

‘எனக்கும்’ என்றேன்.

புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றாள் ஜமுனா.

நானும் சித்தப்பாவும் பேசாமல் சில நிமிடங்கள் வெவ்வேறு திசைகளில் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

எங்களுக்கு ஜமுனா காபி கொண்டு வந்த போது ஆவலுடன் சித்தப்பா வாங்கிக் கொண்டார். ‘நான் கேட்காமல் எனக்கு கிடைத்த முதல் காபி இதுதான்’ என்றார்.

சித்தப்பா எங்கள் வரவால் குழம்பிப் போயிருந்தார். ‘என்னைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்குமே?’ என்று கேட்டார்.

‘நான் இன்றுதான் இந்த குடும்பத்திற்குள் வந்திருக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு பெண்பித்தன் என்ற கெட்ட பெயருண்டு’ என்றார் சித்தப்பா.

‘அழகை ஆராதிப்பவரை வாய்ப்பு கிடைக்காத பொறாமைக்காரர்கள் அப்படித்தான் கேலி பேசுவார்கள்’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா.

சற்று நிமிர்ந்து உட்கார்ந்த சித்தப்பா ‘எப்போதும் மயக்கத்தில் வேறு உலகத்தில் இருப்பவன்’ என்றார் சித்தப்பா.

‘சகஜ சமாதியில் இருக்கும் யோகியைப் போல’ என்றாள் ஜமுனா.

‘அப்படியா சொல்கிறாய்? நான் சூதாட தயங்காதவன்’ என்றார் சித்தப்பா.

‘முன்னோடிகள், தொழில் செய்பவர்கள் எல்லோரும் வாழ்க்கையோடு சூதாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்? மாமா, தப்பு என்று எதை யார் சொல்வது? எந்த தப்பும் ஏதோ ஒரு பெரிய நல்லதிற்கு நம்மை கூட்டி செல்லும் வழிகாட்டி’ என்றாள் ஜமுனா.

சித்தாப்பாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. ‘கெட்டிக்காரிதான்’ என்று பாராட்டிவிட்டு ‘உனக்கு ஏதாவது தர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன தருவது என்று தெரியவில்லை’ என்றார் சித்தப்பா.

‘மனதில் அன்பிருந்தால் போதும். உண்மையான நினைப்பு கொடுப்பதற்கு சமானம். எண்ணம் என்பது செயல்தான். நல்ல எண்ணம் நல்ல செயல்’ என்றாள் ஜமுனா.

‘போயும், போயும் வீணாகிவிட்ட என்னை எதற்கு பார்க்க நினைத்தாய்? என்றார் சித்தப்பா.

‘இவருடைய அப்பா எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அப்படியானால் இவருக்கு இப்போது நீங்கள்தானே அப்பா?’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம். நான்தான் உனக்கு மாமனார்’ என்று தலையை ஆட்டி ஆமோதித்தார் சித்தப்பா.

‘உங்கள் ஆசிர்வாதம் இல்லையென்றால் நான் எப்படி நன்றாக வாழ முடியும்? அது மட்டுமில்லை மாமா. உலகம் முன்னேறுகிறது என்றால் எல்லா நாடுகளும் முன்னேற வேண்டும். அமெரிக்கா மட்டும் முன்னேறிவிட்டு ஆப்ரிக்கா முன்னேறவில்லை என்றால் அது எப்படி உலக முன்னேற்றமாகும்?’ என்றாள் ஜமுனா.

‘அதனால்?’ என்றார் சித்தப்பா.

‘நீங்கள் ஒருவர் சந்தோஷமாக இல்லாவிட்டால் கூட நம் குடும்பம் சந்தோஷமாக இல்லை என்றுதானே அர்த்தம்? உங்களை சந்தோஷப்படுத்தத்தான் வந்தேன்’ என்றாள் ஜமுனா.

‘நான் வாழ்க்கையில் முதல் தடவையாக இன்றுதான் உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள், இருந்தால் தருகிறேன்’ என்றார் சித்தப்பா.

‘நம் குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வேறென்ன கேட்க போகிறேன்?’ என்றாள் ஜமுனா.

சிறிது நேரம் யோசித்த சித்தப்பா எழுந்து அறைக்குள் சென்று ஒரு பெரிய காகித கட்டோடு திரும்பி வந்தார். ‘இருபது வருஷமாக கேஸ் நடத்துகிறேன். இதனால் யாருக்கும் சந்தோஷமும் இல்லை. பிரயோசனமும் இல்லை’ என்றார்.

சில வெற்று காகிதங்களில் கையெழுத்து போட்டு, காகிதக் கட்டோடு ஜமுனாவிடம் கொடுத்தார். ‘நீயே போய் வக்கீலிடம் கேஸை நிறுத்தச் சொல்லி விடு. இருபது வருஷமாக தொடர்ந்து வரும் வருமானம் நிற்குமென்றால் அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும்? அவர் எப்படியும் என்னைத் தேடி வருவார். நான் பேசிக் கொள்கிறேன்’ என்றார் சித்தப்பா.

பாட்டிக்காக காத்திருந்தோம். வரவில்லை. மேலும் சற்று நேரம் சித்தப்பாவோடு ஜமுனா பேசிக் கொண்டிருந்தாள். அதன்பின் கிளம்பினோம்.

‘அடிக்கடி வந்து காபி போட்டு தந்துவிட்டு போம்மா’ என்றார் சித்தப்பா. வாசலுக்கு வந்து வழியனுப்பினார்.

புன்னகைத்தாள் ஜமுனா.

மோட்டார் சைக்கிளில் சூளைமேடு வீட்டை நோக்கி போகும் போது ‘எத்தனையோ லட்சங்களை சித்தப்பா தொலைத்திருக்கிறார். தாத்தா நேர்மையாக சம்பாதித்தது’ என்றேன்.

‘பாட்டி மீது தாத்தா வஞ்சம் வைத்திருக்காவிட்டால் அந்த நஷ்டம் கூட வந்திருக்காது. சந்தோஷமான மனநிலையில் கட்டியிருந்தால் பங்களாக்கள் பயன்பட்டிருக்கும். பாட்டியை பழி வாங்கத்தானே பெரிய பெரிய வீடுகளைத் தாத்தா கட்டினார்?’ என்றாள் ஜமுனா.

‘தாத்தாவைப் பற்றி உனக்கு தெரியாது’ என்றேன்.

‘நன்றாகத் தெரியும். எப்போது மதுரை வந்தாலும் வீட்டிற்கு வருவார். சுந்தரமும், நானும் எப்படிப் பேசிக் கொள்வோமோ, அதே போல நானும், தாத்தாவும் பேசிக் கொள்வோம்’ என்றாள் ஜமுனா.

‘சித்தப்பா இப்படி சட்டென மாறுவார் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை’ என்றேன்.

‘அவர் மாறவில்லை. எப்போதும் போலத்தான் இருக்கிறார். நாம்தான் அவரைப் பற்றி இப்போது வேறு வகையாக நினைக்க ஆரம்பித்திருக்கிறோம்’ என்றாள் ஜமுனா.

மணி ஒன்பதாகிவிட்டிருந்தது.

‘எங்கே சாப்பிடலாம்?’ என்றேன்.

‘எனக்கு பசியே இல்லை’ என்றாள் ஜமுனா.

‘எனக்கும்தான்’ என்றேன்.

‘போனதும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘பங்களாவிற்கு போகுமுன் எப்படி இருந்ததோ அதே போல இன்று வரை சூளைமேடு வீட்டை தாத்தா பராமரித்து வருகிறார். மல்லிகா என்ற பெண் தினமும் சுத்தம் செய்து விட்டு போவாள். அடுப்பு, மேஜை நாற்காலி எல்லாமே இருக்கிறது’ என்றேன்.

‘ஏதாவது பலசரக்குக் கடையில் நிறுத்துங்கள்’ என்றாள் ஜமுனா. ஏதோ சில பொருட்களை வாங்கிக் கொண்டாள்.

சிறிது தூரம் சென்றதும் ‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’ என்றாள் ஜமுனா.

சென்னை பர்னிச்சர் மார்ட் என்ற கடையின் கதவை சாத்திக் கொண்டிருந்தார்கள். ‘அண்ணே கொஞ்சம் பொறுங்கள்’ என்றவாறு வண்டியிலிருந்து இறங்கி கடைக்குள் சென்றாள். ‘இரண்டு பாய்களும், தலையணைகளும் வேண்டும்’ என்றாள்.

‘வீட்டில் எல்லாமே இருக்கிறதே’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா. ‘புதிதாக வாங்கலாம். நீங்கள் காட்டுங்கள் அண்ணே’ என்றாள் ஜமுனா.

அவளுடைய புது மணக்கோலத்தையும், கையிலிருந்த பெரிய பையையும் சற்று சந்தேகமாகப் பார்த்த கடைக்காரர் ‘வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட்டீர்களா?’ என்று மெல்ல கேட்டார்.

‘அப்படி இல்லை அண்ணே. கல்யாணம் பண்ணிக் கொண்டதும் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டோம்’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா. கடைக்காரரும் புரியாமல் சிரித்தார்.

‘என்று கல்யாணம் நடந்தது?’ என்று கேட்டார் கடைக்காரர்.

‘இன்று காலையில்தான்’ என்றாள் ஜமுனா.

கடைக்காரர் காட்டிய பல உயர்தர பாய்களையும், தலையணைகளையும், போர்வைகளையும் புரட்டி பார்த்து தனக்கு பிடித்தவற்றை என்னிடம் காட்டினாள்.

‘நன்றாக இருக்கிறதா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘எல்லாமே நன்றாக இருப்பது போலத்தான் எனக்குத் தெரிகிறது. நீயே முடிவெடு. என்னிடம் கேட்காதே’ என்றேன்.

திடீரென நினைவு வந்தவளாக ‘பணம் எவ்வளவு இருக்கிறது?’ என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

என் சட்டை பையிலிருந்த எல்லா நோட்டுகளையும் மொத்தமாக அள்ளி அவள் கையில் கொடுத்தேன். எண்ணி பார்த்துவிட்டு சிறிது யோசித்தாள்.

பின் ‘அண்ணே, பாய்களும், தலையணைகளும் போதும்’ என்றாள்.

‘நல்ல போர்வையம்மா. குளிர் காலம் வேறு. எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் கடைக்காரர்.

‘இன்னொரு நாள் வந்து வாங்கிக் கொள்கிறேன். இப்போது பணமில்லை’ என்றாள் ஜமுனா.

தலையசைத்த கடைக்காரர் போர்வைகளையும் சேர்த்தே கட்டினார். பில்லில் போர்வையை சேர்க்கவில்லை.

‘பில் தப்பாக இருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. பாய் வாங்கினால் போர்வை இனாம்’ என்றார் கடைக்காரர்.

‘முதலில் சொல்லவில்லையே’ என்றாள் ஜமுனா.

‘இப்போதுதான் அந்த யோசனையே வந்தது. இன்றுதான் உங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் குடும்பமும், தொழிலும் வளரும் போது என் கடையை மறந்துவிடவா போகிறீர்கள்?’ என்றார் கடைக்காரர்.

பின் மோட்டார் சைக்கிளைப் பார்த்து விட்டு ‘இந்த மூட்டையை மோட்டர் சைக்கிளில் கொண்டு போக முடியாது’ என்றவர் கடை பையனை அழைத்து ‘டேய், நீ இதை மீன்பாடி வண்டியில் எடுத்து கொண்டு போய் இவர்கள் வீட்டில் கொடுத்து விடு’ என்றார்.

‘மணி ஒன்பதரையாகிவிட்டது’ என்று ஆரம்பித்தான் பையன்.

‘கஷ்டம்தான்’ என்று கூறிக் கொண்டே அவனிடம் இருபது ரூபாயை தந்தாள் ஜமுனா.

‘கஷ்டமெல்லாம் ஒன்றுமில்லை அக்கா. லேசாக குளிருகிறது என்று சொல்ல வந்தேன்’

அவனிடம் வீட்டு அடையாளம் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms