15. முதலிரவு - மீன்கொடி

நாங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் கடைப் பையன் வந்து பாய், தலையணை, போர்வை மூட்டையை கொடுத்துவிட்டுப் போனான்.

சிறிய வீட்டை சுற்றிப் பார்த்தாள் ஜமுனா. ‘நன்றாக இருக்கிறது’ என்றாள். 

‘அண்ணார்கள் நாம் வெளியே போக வேண்டும் என்று சொன்னபோது அண்ணிகள் அதை மறுத்து பேசவில்லை. நாம் வீட்டை விட்டு போனால் என்ன செய்ய வேண்டும் என்று பேசினார்கள். நாம் வெளியே போகப் போவதாக சொன்னதும் கண்ணீர் விடுகிறார்கள். எதை உண்மை என்று எடுத்துக் கொள்வது?’ என்றேன்.

‘இரண்டுமே உண்மைதான். அக்காக்கள் மனதில் இருப்பதைத்தான் அத்தான்கள் பேசினார்கள். அக்காக்களுக்கு உங்கள் மீது அபார பிரியம். என்னை சிலை என்று புகழ்ந்து திருஷ்டி பொட்டும் வைத்தார்கள். எந்த பெண்ணும் அதை செய்யமாட்டாள். உங்களை முழு பிரியத்துடன் ஏற்பதால்தான் அதை செய்தார்கள். ஆனால் அதற்காக அதிகாரத்தை பறி கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால்தான் வீட்டை விட்டு வெளியே அனுப்ப நினைத்து கூடவே கண்ணீரும் விட்டார்கள்’ என்றாள் ஜமுனா.

‘நீ எப்படி அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடியும்?’ என்று கேட்டேன்.

‘எடுத்து கொண்டு விடுவேனோ என்ற பயம் அவர்களுக்கு வந்து விட்டது. என் மருமகள் மான்மியத்தை கேட்டதால் அந்த பயம் வந்திருக்கலாம்’ என்றாள் ஜமுனா.

‘நீ அதை பாடியபோது சந்தோஷப்பட்டார்கள். உன்னை கட்டி அணைத்துக் கொண்டார்களே!’ என்றேன்.

‘கவர்னசத்தையை அவர்கள் சார்பில் பழி வாங்கி விட்டேன் என்று நினைத்ததால் அக்காக்கள் அப்படி செய்தார்கள். அதன்பின் கவர்னசத்தையின் கதி தங்களுக்கும் வந்து விடுமோ என்று பயந்து விட்டார்கள்’ என்றாள் ஜமுனா.

‘தான் வெளியே போகும்போது நெக்லஸ் போட்டால் உன் மனம் சுருங்கும் என்றாரே அண்ணி? உன்னை அற்பப் பெண் என்பது போல பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது’ என்றேன்.

‘மாமியார் இல்லாத வீட்டில் தன்னைத்தான் மாமியாராக இரண்டு பேருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களோடு வெளியே போவதை தன்னால் தாங்க முடியாது என்பதைத்தான் காபி அக்கா அப்படி சொன்னார். ஜவுளி அக்கா வாய்விட்டு அதை சொல்லவில்லை. நாம் அந்த வீட்டில் இருந்தால் அக்காக்களால் ஒரு வினாடி கூட நிம்மதியாக இருக்க முடியாது. அதனால்தான் உடனே வெளியே வர நினைத்தேன்’ என்றாள் ஜமுனா.

‘நீ பேசுவது உண்மை என்றே தோன்றுகிறது. ஆனால் நீ யோசித்து புரிந்து கொண்டது தவறாகவும் இருக்கலாமே?’ என்றேன்.

‘நான் அறிவை வைத்து யோசித்து இதையெல்லாம் புரிந்து கொள்ளவில்லை. அரைகுறையாகப் புரிந்து கொள்ளத்தான் புத்தியும். ஆராய்ச்சியும் வேண்டும். உள்ளது உள்ளபடி எதையும் சரியாக அறிந்து கொள்ள அவை தேவை இல்லை. ஒருவர் பேசும்போது, அந்த கணத்தில் அவரோடு ஒன்றாகி, அவராக மாறிவிடுவது உள்ளதை உள்ளபடி எனக்கு காட்டுகிறது’ என்றாள் ஜமுனா.

‘மனோதத்துவ நிபுணர் போல பேசுகிறாய்’ என்றேன்.

‘பாராட்டுவது போல கேலி செய்கிறீர்களே! எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போலவா பேசுகிறேன்?’ என்றாள் ஜமுனா.

ஜமுனா சமையலறைக்குள் சென்று வாங்கி வந்த சாமான்களை அடுக்கி வைக்கத் தொடங்கினாள்.

பாய்களை விரித்து, அவற்றின் மீது போர்வைகளை விரித்து விட்டேன். சுவரோரமாக தலையணையை சாய்த்து, அதன் மேல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அறைக்குள் வந்த ஜமுனா ‘என்ன யோசனை?’ என்றாள்.

‘உன்னைப் பற்றிய யோசனைதான். மாசறு பொன்னே வலம்புரி முத்தே, காசறு விரையே கரும்பே தேனே, அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெரு மடமகளே!’ என்றேன்.

‘உங்கள் ஜமுனா சிறுகுடி வாத்தியாரின் சாதாரண மகள்! வான்நிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பான கண்ணகி போல வண்டி நிறைய நகையோடு வரவில்லை’ என்றாள் ஜமுனா.

‘நான் மாதவியோடு பழக வழியில்லாமல் செய்துவிட்டாய். அதுவும் நல்லதற்குத்தான். சிலப்பதிகாரம் தெரியுமா?’ என்று கேட்டேன்.

‘ஏதோ கொஞ்சம்’ என்றாள்.

நான் வாசித்து ரசிப்பதையெல்லாம் பகிர்ந்து கொள்ள தோழி கிடைத்த மகிழ்ச்சியோடு ‘மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா இசையே என்கோ?’ என்றேன்.

‘தீராக் காதலின் திருமுகம் நோக்கி இளங்கோ அடிகள் பாடுவதை மனப்பாடமாக சொல்வதை விட்டுவிடுங்கள். உங்கள் தீராக் காதலியின் திருமுகம் நோக்கி சொந்தமாக ஏதாவது சொல்லுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு சொந்தமாக சாப்ட்வேர் மட்டும்தான் எழுதத் தெரியும். இந்த நேரத்தில் உன்னிடம் சாப்ட்வேர் பற்றியா பேச முடியும்?’ என்றேன்.

‘முடியாதுதான். தத்துவம் அல்லது காவியம் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்றாள் ஜமுனா புன்னகையோடு.

‘கேலி செய்கிறாயோ?’ என்றேன்.

‘இல்லையே’ என்றாள் ஜமுனா.

‘எனக்குத் தெரிந்ததையெல்லாம் உனக்கு சொல்லி தருகிறேன். இன்று சிலப்பதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கலாமா?’ என்று ஆவலுடன் கேட்டேன். நான் எவரிடமும் இதுபோல கேட்டதில்லை.

‘உங்கள் விருப்பம்’ என்றாள் ஜமுனா.

‘கண்ணகியிடம் கோவலன் நகையை பற்றி என்ன சொல்கிறான் தெரியுமா? ‘மறுவின் மங்கல அணியே அன்றியும், பிறிதணி அணியப் பெற்றதை எவன் கொல்’ என்கிறான். ‘மாசற்ற உன் இயற்கை அழகின் மேல், செயற்கையான தங்க நகைகளை போடுவது தேவையே இல்லை’ என்று அர்த்தம்’ என்றேன்.

‘இப்படி மனைவியிடம் நைச்சியமாகப் பேசி ஏமாற்றி எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு போய் மாதவியிடம் கொடுத்துவிட்டான் கோவலன்’ என்றாள் ஜமுனா.

‘இளவயது அப்பாவி. மாதவி அழகில் மயங்கி, ஆசையால் அறிவில்லாமல் நடந்து கொண்டுவிட்டான். அதற்கு போய் அவனை திட்டலாமா?’ என்றேன். பின் என் பையிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை எடுத்து ஜமுனாவிடம் நீட்டினேன். ‘உனக்காக இந்தப் பிறிதணியை வாங்கினேன். இது என் பிரியணி. பொன்னணி வாங்க தற்சமயம் வசதியில்லை’ என்றேன்.

பொட்டலத்தை பிரித்தாள் ஜமுனா. உள்ளே வெள்ளிக் கொலுசுகளும், பல வண்ண கண்ணாடி வளையல்களும் இருந்தன. ஒவ்வொன்றாக நிதானமாகப் பார்த்தாள்.

‘எல்லாமே அழகாக இருக்கின்றன. எனக்கு பிடித்திருக்கிறது’ என்றாள் ஜமுனா.

கைகளிலிருந்த ஆறு தங்க வளையல்களையும், கால்களிலிருந்த வெள்ளி கொலுசுகளையும் கழற்றிவிட்டு, ‘நீங்கள் வாங்கி வந்தவற்றை நீங்களே போட்டு விடுங்கள்’ என்றாள்.

தட்டுத் தடுமாறி போட்டுவிட்டேன்.

அவள் கைகளை வளையல்கள் நிறைத்தன. கால்களை கொலுசுகள் தழுவின. அவள் கைகளால் வளையல்கள் மேலும் வண்ணமயமானது போலவும், கணுக்கால்களால் வெள்ளிக் கொலுசுகள் மேலும் பிரகாசிப்பது போலவும் கற்பனை செய்து கொண்டேன். எல்லா கணவர்களுக்கும் என்னைப் போலவே உளமயக்கு உண்டாகுமா என்று தெரியவில்லை.

அவள் கழற்றி வைத்த தங்க வளையல்களை எடுத்தேன். ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டு அவற்றையும், முதலில் போட்டிருந்த கொலுசுகளையும் பைக்குள் போட்டு பத்திரப்படுத்தினாள்.

என் பையில் இருந்த புல்லாங்குழலைப் பார்த்தாள். ‘வாசிப்பீர்களா?’ என்று கேட்டாள்.

‘தெரியாது. ஒரு இசை நிகழ்ச்சியில் ஆயிரமாவது ஆளாக டிக்கெட் வாங்கியதற்கு பரிசாக கிடைத்தது’ என்றேன்.

குழலை எடுத்து பல கோணங்களில் பார்த்தாள்.

‘பழைய காலம் என்றால் விறகு அடுப்பு ஊத உனக்கு பயன்பட்டிருக்கும். கேஸ் அடுப்பிற்கு தேவைப்படாது’ என்றேன்..

புன்னகைத்த ஜமுனா குழலை இசைக்கத் தொடங்கினாள். ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பாட்டை இசைத்தாள். இனிமையாக இருந்தது.

‘எனக்கு தெரிந்தவர்களில்  குழல் வாசிக்கும் ஒரே பெண் நீதான்’ என்றேன்.

‘உலகத்தில் என்னென்ன இசைக்கருவிகள் உள்ளனவோ! எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘இதையெல்லாம் கற்றுக் கொள்ள உனக்கு நேரம் இருந்ததா?’ என்று கேட்டேன்.

‘நேரத்திற்கு என்ன பஞ்சம்? முடிவே இல்லாமல் இருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘நீ யாரிடம் கற்றுக் கொண்டாய்?’ என்று கேட்டேன்.

‘குருவிற்கு காணிக்கை தந்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு வீட்டில் ஏது வசதி? பக்கத்து வீட்டு குட்டி பையனுக்கு ஒரு பெரியவர் அவன் வீட்டிற்கே வந்து சொல்லித் தருவார். அவர் சொல்லித் தரும்போது அந்த பையனாக என்னை நினைத்து கேட்டுக் கொள்வேன். முன்னூறு ரூபாய் சேர்த்து வைத்து குழல் ஒன்று வாங்கினேன். இரவு தூங்குவதற்கு முன் நானாக ஊதி கற்றுக் கொண்டேன். பல வருஷங்கள் கழித்து  கல்யாணம் நிச்சயமானதும் பெரியவருக்கு வேட்டி, சட்டை எடுத்துக் கொடுத்து அழைப்பு தந்தேன். புல்லாங்குழல் கற்றுக் கொண்ட விதத்தை சொல்லி ‘இதுதான் என் குரு காணிக்கை’ என்று சொன்னேன். சந்தோஷப்பட்டார். ‘காணிக்கை என்ன காணிக்கை! நீ கற்றுக் கொள்ள ஆர்வத்தோடு இருப்பது தெரிந்திருந்தால் நான் உனக்கு காணிக்கை கொடுத்து சொல்லி தந்திருப்பேன். நல்ல குருக்களுக்கு நாட்டில் பஞ்சமே இல்லை. நல்ல சிஷ்யர்கள் கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறது’ என்று வருத்தமும் பட்டார்’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு வீணை பிடிக்கும்’ என்றேன்.

‘அதையும் வாசிப்பேன். தோழி வீட்டில் இருந்தது’ என்றாள் ஜமுனா.

‘வீணை ஒன்றும் வாங்கியிருக்க வேண்டியதுதானே?’ என்றேன்.

‘நான் அப்பாவிடம் கேட்கவில்லை. எனக்காக சுந்தரம் கேட்டான். ‘ஆயிரக்கணக்கில் ஆகுமே!’ என்று அப்பா சொல்லி விட்டார்’ என்ற ஜமுனா குழலில் மேலும் சில பாடல்களை வாசித்துக் காட்டினாள்.

அவள் மடியில் சாய்ந்தேன்.

‘உங்கள் கம்ப்யூட்டரை நாளை கொண்டு வந்து விட வேண்டும். நீங்கள் வேலை பார்க்க வேண்டுமே!’ என்று கூறியபின்தான் என்னை மடியில் அனுமதித்தாள்!

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms