16. மறந்ததை நினைவூட்டல் - மீன்கொடி

வழக்கம் போல நான் தாமதமாக எழுந்தபோது வீடு வேறு மாதிரி இருந்தது. சிறிது நேரம் இது யார் வீடு என்று குழம்பி பின் தெளிந்தேன்.

ஜமுனா தலைக்கு குளித்து விட்டு கிணற்றடியில் உட்கார்ந்து கூந்தலை விரித்துப் போட்டு காய வைத்துக் கொண்டிருந்தாள். முகம் கழுவி விட்டு அவளருகே அமர்ந்தேன். பெண்கள் போடும் ஷாம்பூ, சோப்பின் நறுமணம் அவளிடமிருந்து வந்து என் மெல்லுணர்ச்சிகளை தூண்டியது.

பக்கத்திலிருந்த கட்டடத்தை காட்டி ‘இதுதான் கம்பனி கட்டிடமா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘ஆமாம். பழைய கட்டிடம். தாத்தா பத்திரமாக பராமரித்து வந்தார்’ என்றேன்.

‘வந்தாரா? இப்போது யார் பார்த்துக் கொள்கிறார்கள்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘யாருமில்லை. போன வருடம் அண்ணார்கள் தாத்தாவிடம் பேசினார்கள். ‘மாத சம்பளம் செலவுக்குப் போதவில்லை. சொந்தமாக தொழில் செய்ய நினைக்கிறோம். கம்பனியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்றார்கள்’ என்றேன்.

‘இந்த கம்பனியை விட ஆயிரம் மடங்கு பெரிய கம்பனிக்கு திட்டம் போடுவதுதானே? புதிதாக ஏதாவது செய்ய வேண்டியதுதானே?’ என்றாள் ஜமுனா.

‘இதையேதான் தாத்தாவும் கேட்டார். ‘நீங்களே புதியதாக ஒரு கம்பனி ஆரம்பியுங்கள். என்னால் முடிந்த உதவி செய்கிறேன்’ என்றார். ஆனால் அண்ணார்கள் ‘எங்களுக்கு ஓடும் கம்பனிதான் வேண்டும். அதை வைத்து இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்தது போல கம்பனியை உயர்த்திக் காட்டுகிறோம்’ என்றார்கள்’ என்றேன்.

‘நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘நான் சொல்ல என்ன இருக்கிறது? தாத்தாவிற்கு பேரர்கள் மீது எப்போதுமே நம்பிக்கையில்லை. இருந்தாலும் எங்கள் பெயருக்கு கம்பனியை மாற்றிக் கொடுத்தார். தாத்தா எதையாவது கொடுத்துவிட்டால் அதை பற்றி நினைக்கக் கூட மாட்டார். ஆனால் எங்கள் மீதுள்ள பிரியத்தால் கம்பனியை கொடுத்த பின்பும் ‘நீங்கள் கற்று கொள்ளும்வரை வருகிறேன்’ என்று சொல்லி தினமும் அவர்தான் வந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ‘நீங்கள் இப்படி செய்தால் நாங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது’ என்று அண்ணார்கள் கூறியும் அவர் வந்து கொண்டிருந்தார். அதை கேள்விப்பட்ட பாட்டி ‘வயதானாலும் பணத்தாசை போகவில்லை’ என்று கேலி செய்தாராம். அதன்பின் தாத்தா கம்பனிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். தாத்தா கம்பனி பற்றி அண்ணார்களிடம் ஒரு வார்த்தை விசாரிப்பதில்லை. அண்ணார்களும் எதையும் தாத்தாவிடம் கூறுவதில்லை’ என்றேன்.

‘கம்பனி பற்றி நீங்கள் தாத்தாவிடம் சொல்வதுதானே?’ என்றாள் ஜமுனா.

‘நானா! கம்பனி பற்றி எனக்கென்ன தெரியும்?’ என்றேன்.

‘நீங்களும் கம்பனியில் உரிமை உள்ளவர்தானே?’  என்றாள் ஜமுனா.

‘அதெல்லாம் பத்திரத்தில்தான். மற்றபடி அண்ணார்களுக்குத்தான் எல்லாம் தெரியும். நான் கம்பனிக்குள் போய் எத்தனையோ காலமாகிவிட்டது. என்னிடம் சாவி கூட இல்லை’ என்றேன்.

‘ஆனால் தாத்தா கஸ்டமரை பார்க்க போயிருக்கிறார் என்று போன வாரம் கூட போனில் சொன்னீர்களே’ என்றாள் ஜமுனா.

‘அவரை பற்றி தெரிந்த போட்டி கம்பனிக்காரர்கள் பெரிய சம்பளத்திற்கு வேலைக்கு கூப்பிட்டார்கள். முடியாது என்று கூறிவிட்டு எண்பது வயதில் ஏஜென்டாக அலைந்து, திரிந்து சொந்தமாக தொழில் செய்கிறார்’ என்றேன்.

‘எண்பது வயதுதானே ஆகிறது! இன்னும் எத்தனையோ காலம் வேலை பார்க்கலாமே’ என்ற ஜமுனா கட்டடத்தை மீண்டும் பார்த்தாள். ‘பல நாள் மூடிக்கிடக்கும் கட்டடம் போலிருக்கிறதே!’ என்றாள்.

‘சில மாதங்களாக அப்படித்தான் கிடக்கிறது. அண்ணார்களுக்கு அலுவலக வேலை அதிகமாக இருப்பதால் வர முடிவதில்லை என்று நினைக்கிறேன்’ என்றேன்.

‘சிப்பந்திகள் வரத்தானே வேண்டும்?’ என்றாள் ஜமுனா.

‘அக்கவுண்டண்டும், பியூனும் எப்போதாவது வருவார்கள்.  வேறு எவரும் வருவதில்லை’ என்றேன்.

‘ஏன்?’ என்றாள் ஜமுனா.

‘அண்ணார்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்? என்னிடம் சங்கப் பாடல்கள் பற்றி கேள். பதில் சொல்கிறேனா இல்லையா பார்’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா.

‘இன்று பத்தரைக்கு கணக்கர் பழனியப்பரின் பெண் ராகினிக்கு கல்யாணம். போய் வரலாமா? நேற்று கிளம்பும்போது ஜவுளி அண்ணி சொன்னார். அப்படியே வீடுகளை உனக்கு காட்டும்படி காபி அண்ணி சொன்னார்’ என்றேன்.

‘நிலம்?’ என்றாள் ஜமுனா.

‘நம் நிலத்தையும் காட்டுகிறேன்’ என்றேன்.

‘மோட்டார் சைக்கிளை துடைத்து வைத்திருக்கிறேன். திருப்பித் தந்து விட்டு வாருங்கள். வெளியே போகலாம்’ என்றாள் ஜமுனா.

‘வண்டி இல்லாமல் எப்படிப் போவது!’ என்றேன்.

‘இத்தனை நாள் எப்படி போனீர்கள்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘வீட்டில் அண்ணார்களின் கார்களும், அண்ணிகளின் ஸ்கூட்டர்களும் இருக்கின்றனவே’ என்றேன்.

‘நமக்கென வண்டி இல்லையென்றால் வேறு ஆயிரம் வழிகள் இல்லாமலா போய் விட்டது?   ஆட்டோவில், பஸ்ஸில் போவோம். அது முடியவில்லை என்றால் நடந்து போவோம்’ என்றாள் ஜமுனா.

‘உனக்கு எந்த சிரமமும் இல்லாமல் வெளியே கூட்டி சென்று வர ஆசைப்படுகிறேன்’ என்றேன்.

‘புது வண்டி நன்றாக இருந்தது. எனக்கு பிடித்திருந்தது. ஆனால் இரவல் வண்டியில் ஊர்வலம் வர சங்கடமாக இருக்கிறது. நேற்று உங்களோடு வண்டியில் வந்தபோது உங்கள் நண்பரோடு வருவது போலிருந்தது’ என்றாள் ஜமுனா.

‘வண்டியை இப்போதே திருப்பி கொடுத்து விடுகிறேன்’ என்றேன்.

கம்பனி வராண்டாவில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை சுட்டிக்காட்டினாள் ஜமுனா. ‘இது தாத்தாவின் சைக்கிள்தானே? ஏன் இங்கு நிற்கிறது?’ என்று கேட்டாள்.

‘கல்யாண சமயத்தில் பல பெரிய மனிதர்கள் வீட்டிற்கு வருவார்கள். சைக்கிளைப் பார்த்தால் சிரிப்பார்கள் என்று நினைத்து அண்ணார்கள் தாத்தாவிற்கு தெரியாமல் சைக்கிளை இங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள், கல்யாண வேலையில் தாத்தா கவனிக்கவில்லை’ என்றேன்.

‘கவனித்திருப்பார். பொருட்படுத்தியிருக்கமாட்டார். சைக்கிள் தூசி படிந்து நிற்கிறது. நீங்கள் வருவதற்குள் துடைத்து வைக்கிறேன். தாத்தா சைக்கிளில் நாம் வெளியே போய் வரலாம்’ என்றாள் ஜமுனா.

‘உன்னுடனா!’ என்றேன்.

‘அவ்வளவு கனமாகவா இருக்கிறேன்?’ என்றாள் ஜமுனா.

‘பெண்ணை பின்னால் உட்கார வைத்து சைக்கிள் ஓட்டி எனக்கு பழக்கமில்லை’ என்றேன்.

‘நான் சுந்தரத்தையும், அப்பாவையும் பின்னால் உட்கார வைத்து நன்றாக ஓட்டுவேன். இன்று உங்களை பின்னால் உட்கார வைத்து ஓட்டிக் காட்டுகிறேன்’ என்றாள் ஜமுனா. பின் சிரித்துக் கொண்டே ‘அப்பா வீட்டில் ஒரு சைக்கிள்தான் இருக்கிறது. நானும், அப்பாவும் மாற்றி மாற்றி ஓட்டுவோம். சுந்தரம் சைக்கிள் ஓட்டுவதற்காக தவம் கிடப்பான்’ என்றாள்.

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

‘வரும்போது ஒரு நாளைக்கு வாடகை ஸ்கூட்டர் எடுத்து வாருங்கள்’ என்று கூறினாள் ஜமுனா.

என்னிடம் பணம் எதுவுமில்லை. இருந்த எல்லாவற்றையும் நேற்றே அவளிடம் கொடுத்துவிட்டேன்.

‘உங்கள் நண்பர் சிவசங்கரன் சாப்ட்வேர் வேண்டும் என்று கேட்டாராமே. தாத்தா போனில் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்’ என்றாள் ஜமுனா.

‘போகவேண்டும். நேரமே கிடைக்கவில்லை’ என்றேன்.

‘வண்டியை கொடுத்துவிட்டு திரும்பும்போது அவரையும் பார்த்து விட்டு வாருங்கள்’ என்றாள் ஜமுனா.

‘இன்னொரு நாள் போகிறேன். இன்று நாம் வெளியே போகவேண்டுமே’ என்றேன்.

‘வண்டியை கொடுத்துவிட்டு திரும்பும்போது அவரையும் பார்த்து விட்டு வாருங்கள்’ மீண்டும் சொன்னதையே சொன்னாள் ஜமுனா.

இந்த விஷயத்தில் மேற்கொண்டு பேச எதுவுமில்லை என்பது புரிந்தது.

கிளம்பும்போது என்னிடம் நூறு ருபாய் தந்தாள்.

அந்த பணத்திற்கு பெட்ரோல் போட்டேன். தினகரன் வண்டியை இரவல் தரும்போது பெட்ரோல் போட்டுத்தானே தந்தான்?

நான் தினகரனின் வீட்டிற்கு போனபோது அவன் அலுவலகம் சென்று விட்டதாக அவன் அம்மா சொன்னார். அப்போதுதான் என் வயதினரில் பெரும்பாலானவர்கள் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று விடுவார்கள் என்பதை புரிந்து கொண்டேன். வண்டியையும், சாவியையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போதுதான் கையில் பணமில்லை என்பது நினைவிற்கு வந்தது. நடக்க வேண்டியதுதான். மெல்ல நடந்து கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் என்னருகே வந்து நின்றது. ‘என்ன சார், வெயிலில் நடந்து போகிறீர்கள்?’ என்று கேட்டான் சைக்கிள் ஓட்டி வந்த பையன்.

அடையாளம் தெரியாமல் திகைத்தேன்.

‘சென்னை பர்னிச்சர் மார்ட்டில் வேலை பார்க்கிறேன். நீங்களும், அக்காவும் பாய் வாங்கினீர்களே?’ என்றான் கடை பையன்

‘ஓ! நீ எங்கே இந்த பக்கம்?’ என்றேன்.

‘தலையணை டெலிவரி கொடுத்துவிட்டு கடைக்கு போகிறேன்’ என்றான் பையன்

‘பஸ் டிக்கட்டிற்கு பணமில்லாமல் வந்து விட்டேன். அதனால் நடக்கிறேன்’ என்று கூறி புன்னகைத்து விட்டு நடக்கத் தொடங்கினேன்.

‘சார், பின்னால் உட்காருங்கள்’ என்றான் கடை பையன்.

‘பரவாயில்லை தம்பி. நான் நடக்கிறேன்’ என்றேன்.

‘வெயிலில் நடந்தால் அக்கா வருத்தப்படுவார். ஏறுங்கள் சார்’ என்றான் பையன்.

அவன் சைக்கிளில் ஏறிக் கொண்டு சிவசங்கரனின் அலுவலகம் சென்றேன். பங்கு தரகர் என்பதால் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

‘காத்திருக்கவா சார்?’ என்றான் பையன்.

‘வேண்டாம் தம்பி, நன்றி’ என்று கூறி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.

‘என்னடா மாப்பிள்ளை! சொல்லி பல வாரங்களாக வரவில்லை. கல்யாணமானதும் ஒரே நாளில் பொறுப்பு வந்து விட்டதா!’ என்றான் சிவசங்கரன்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. ஜமுனாதான் உன்னைப் பார்த்து வர சொன்னாள்’ என்றேன்.

‘அப்படிப் போடு அருவாளை! இனிமேல் அறுவடைதான்’ என்றான் சிவசங்கரன்.

‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன்.

‘சின்ன வேலைதான் பரமார்த்தா. இந்த சாப்ட்வேரில் சில சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டும்’ என்று கூறி அவனிடம் ஏற்கனவே இருந்த சாப்ட்வேரில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினான்.

‘சிவா, இது வாடிக்கையாளர்கள் கணக்குகளை வைத்திருக்கும் முக்கியமான சாப்ட்வேர். கொஞ்சம் அதிக செலவானாலும் அனுபவசாலிகளிடம் கொடுப்பதுதான் சரி என்று நினைக்கிறேன்’ என்றார் சிவசங்கரனின் உதவியாளர்.

‘நாம் வேலை தந்தால்தானே இவனுக்கு அனுபவம் வரும்? இவன் செய்வதை சரிபார்த்து விட்டுதானே பயன்படுத்தப்போகிறோம்?’ என்றான் சிவசங்கரன்.

‘இரண்டு நாட்களில் செய்து தருகிறேன்’ என்றேன்.

‘உன் போன்ற பெரிய வீட்டு பிள்ளைக்கு நான் பணம் தருவது வேடிக்கைதான். ஆனால் வேலைக்கென்று ஒரு மதிப்பிருக்கிறதே’ என்று கூறிவிட்டு இரண்டாயிரம் தந்தான். ‘இது முன்பணம். வேலை முடிந்ததும் மீதி மூவாயிரம் தருகிறேன்’ என்றான்.

சிவசங்கரன் அலுவலகம் அருகிலேயே எங்கள் குடும்பத்திற்கு நன்றாகத் தெரிந்த ஸ்கூட்டர் மெக்கானிக் கடை இருந்தது. ஸ்கூட்டர் ஒன்றை ஒரு நாள் வாடகைக்கு கேட்டேன். ‘ஜமுனாவோடு வெளியே போக வேண்டும். வாடகை ஸ்கூட்டரில் போகலாம் என்று வீட்டில் சொன்னார்கள் ’ என்றேன்.

‘அது யார் ஜமுனா?’ என்றார் கடைக்காரர்.

‘மன்னித்துக் கொள்ளுங்கள். அண்ணார் உங்களுக்கு அழைப்பு தந்திருப்பார் என்று நினைத்து விட்டேன்’ என்று கூறிவிட்டு கல்யாண விவரங்களைக் கூறினேன். ‘ஜமுனாவும், நானும் வீடுகளையும், நிலத்தையும் பார்க்கப் போகிறோம். கனப்பாக்கம் வரை போக வேண்டும். அதற்கு ஏற்றபடி ஸ்கூட்டர் வேண்டும்’ என்றேன்.

கடைக்காரர் சிரித்தார் ‘புதிதாக கல்யாணம் செய்தவர்கள் ஸ்கூட்டரில் போவதுதான் சரி’ என்றவர் கொஞ்சம் யோசித்து விட்டு ‘அடிக்கடி வெளியே போக வேண்டியிருக்குமே! எதையும் யோசிக்காமல் ஒரு வண்டி வாங்கி விடுங்கள். நான் நாலைந்து பழைய வண்டிகளை சரி செய்து புதுப்பித்து வைத்திருக்கிறேன்’ என்றார்.

‘இப்போதைக்கு கையில் பணமில்லை’ என்றேன்.

‘உங்களை போன்றவர்கள் பேங்கிலும், லாக்கரிலும்தான் பணம் வைத்திருப்பீர்கள்’ என்று சிரித்த மெக்கானிக் ‘இந்த நீல நிற வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் ஓட்டிப் பாருங்கள். திருப்தியாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் வாடகை மட்டும் கொடுத்து விடுங்கள்’ என்றார்.

தெரிந்தவர் என்பதால் முன்பணம் எதுவும் கேட்கவில்லை.

நீலநிற ஸ்கூட்டரில் வீடு திரும்பினேன். விவரங்களை சொல்லி ஜமுனாவிடம் இரண்டாயிரத்தை தந்தேன். வாங்கிக் கொண்டவள் ‘நாளை மறுநாள் சிவசங்கரண்ணா மூவாயிரம் தரும்போது ரொக்கமாக வாங்க வேண்டாம். நல்ல பெரிய கம்பனியில் பங்குகள் வாங்கித் தர சொல்லுங்கள்’ என்றாள்.

‘எனக்கு பங்கு வாங்கத் தெரியாதே’ என்றேன்.

‘உங்களையா வாங்க சொன்னேன்? உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். வாங்கித் தருவார்’ என்றாள் ஜமுனா.

‘அதுதான் சரி. வெளிநாட்டுகாரர்களிடம் எத்தனை அழகாக ஆங்கிலத்தில் பேசுவான் தெரியுமா! ஆனால் நாவல்கள் எதுவும் படிக்க மாட்டான். நான் ஏதாவது கதை சொன்னால் கூட பேச்சை மாற்றி விடுவான்’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms