17. சொத்துகளை அறிதல் - மீன்கொடி

பத்தேகால் மணிக்கு நானும், ஜமுனாவும் கிளம்பினோம்.

‘நம் டிரைவர் ரகுதான் மாப்பிள்ளை’ என்றேன்.

‘காதல் கல்யாணமா?’ என்றாள் ஜமுனா.

‘சரியான ஊகம்தான். தாத்தா கம்பனிக்காக ஒரு கார் கொடுத்திருந்தார். அவர் சைக்கிளில்தான் போவார். கார் பழனியப்பன் சாரை அழைத்து வர அவர் வீட்டிற்கு அடிக்கடி போகும். ரகுதான்  டிரைவர். பழனியப்பன் சார் தன் பெண்னை அந்த காரில் காலேஜிற்கு அனுப்பி வைப்பார்’ என்றேன்.

‘கார் எங்கே?’ என்றாள் ஜமுனா.

‘நான் காதலைப் பற்றி பேசுகிறேன். நீ காரைப் பற்றி கேட்கிறாய்! அண்ணார்கள் பழைய கார் செலவு வைக்கிறது என்று விற்று விட்டார்கள். இப்போது ரகு வீட்டு கார்களை ஓட்டுகிறார்’ என்றேன்.

பத்தரைக்கு மண்டபத்திற்கு போய்விட்டோம்.

மண்டப நுழைவாசலில் வரவேற்பு மேஜைக்கு அருகே நின்றிருந்த பழனியப்பன் சார் ‘வாப்பா பரமா, வாம்மா’ என்று கூறிவிட்டு வேறு எவருடனோ பேச ஆரம்பித்தார். எத்தனை விருந்தாளிகள். தனியாளாக எத்தனை பேரை கவனிக்க முடியும்!

நாங்கள் மேஜைக்கு பின்னால் நின்றிருந்த பட்டு சேலை பெண்களிடம் சந்தனம், குங்குமம், ரோஜா, கல்கண்டு வாங்கி கொண்டு மண்டபத்திற்குள் நுழைந்தோம். கடைசி வரிசையை நோக்கி நகர்ந்தேன். முன் வரிசையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த ஜமுனா திரும்பிப் பார்த்தாள்.

‘நான் அழைப்பு வரும் எல்லா விசேஷங்களுக்கும் போவேன். எவரும் என்னை கவனிக்காத இடத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு திரும்பி விடுவேன்’ என்றேன். காலியாக இருந்த கடைசி வரிசையின் முதலிரண்டு நாற்காலிகளை பார்த்தேன்.

நுழைவாயிலில் பரபரப்பு எழுந்தது. பழனியப்பன் சார் ‘வாருங்கள், வாருங்கள், உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம்’ என்று அண்ணார்களையும், அண்ணிகளையும் வரவேற்பது தெரிந்தது. பின் அவர்களை தன்னோடு முன் வரிசைக்கு அழைத்து சென்று அமர செய்தார். தன் மனைவியையும், போட்டோ எடுப்பவரையும், வீடியோ எடுப்பவரையும் பாய்ந்து சென்று அழைத்து வந்தார்.    

‘என்னம்மா, புதுப் பெண்ணே! எப்படி இருக்கிறது வாழ்க்கை?’ என்று கோணலாக சிரித்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தார் பூபதி. எங்கள் கம்பனி பியூன்.

ஜமுனா லேசாக தலையசைத்தாள். புன்னகைக்கவோ, மறுமொழி கூறவோ இல்லை.

‘என்னப்பா மாப்பிள்ளை! பெண்டாட்டியை வெளியே அழைத்து வருமளவிற்கு பெரிய மனுஷனாகி விட்டாய்’ என்றார் பூபதி.

நான் புன்னகைத்தேன்.

அவர் நகரத் தொடங்கியபோது ‘பூபதி, ஒரு துணி எடுத்து வந்து இந்த நாற்காலியை துடை. சார் உட்கார வேண்டும்’ என்று மெல்லிய குரலில் கூறினாள் ஜமுனா. கத்தியின்  கூர்மையான நுனி போன்ற மெல்லிய குரல்.

ஒரு கணம் கோபத்தோடு ஜமுனாவின் முகத்தை பார்த்த பூபதி திகைத்தார். பின் அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஒரு மூலையிலிருந்த துணியை எடுத்து வந்தார்.

‘இதை விட அழுக்கான துணி உனக்கு கிடைக்கவில்லையா? எத்தனை காலம் பியூனாக இருக்கிறாய்? போய் நல்ல துணியாக எடுத்து வா’ என்றாள் ஜமுனா.

‘ஒரு நிமிஷம் மேடம்’ என்று கூறிவிட்டு குழப்பத்துடன் சுற்றிலும் பார்த்த பூபதி பழனியப்பன் சாரிடம் வேகமாக சென்றார். ‘இந்த துண்டை கொடுங்கள்’ என்று அவரது தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை தானாகவே எடுத்து வந்து நாற்காலிகளை துடைத்து விட்டார். ‘உட்காருங்கள் மேடம்’ என்றார்.

அவன் அப்பால் நகர்ந்தபின் ‘பூபதி கம்பனியில் எவருக்குமே அடங்காதவர்’ என்றேன்.

‘முதலாளி யாரென்பதை எல்லோருமே மறந்து விட்டீர்கள்’ என்றாள் ஜமுனா.

தாலி கட்டியதும் ஜமுனா எழுந்தாள். ‘வாருங்கள்’ என்று என்னை மேடைக்கு அழைத்து சென்றாள். ‘மேடைக்கு எதற்கு? பின்புறமாக போய் சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம்’ என்றேன். அவளோ மேடையை நோக்கி நடந்து கொண்டே இருந்ததால் நானும் பின் தொடர்ந்தேன்.

மேடையில் ஏறும்போது எங்களை கவனித்த அண்ணிகள் எங்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். அண்ணார்கள் வேறெங்கோ கவனமாக இருந்தனர்.

மணமக்களை வாழ்த்தியபின் ‘கிளம்புகிறோம்’ என்றாள்.

‘மேடமும், சாரும் இன்னமும் சாப்பிடவில்லை’ என்று பதறினார் பூபதி.  

‘சாப்பிட்டு போங்கள்’ என்று எங்கள் பின்னால் ஓடி வந்தார் பழனியப்பன் சார்.

‘முக்கியமான இடங்களுக்கு போக வேண்டியிருக்கிறது’ என்று கூறி விட்டு திரும்பிப் பார்க்காமல் நகர்ந்தாள் ஜமுனா.

மண்டபத்தை விட்டு வெளியே வந்தபின் ‘பரிசு ஒன்றும் தரவில்லையே’ என்றேன்.

‘நாம் வந்ததே பரிசுதான்’ என்றாள் ஜமுனா.

மண்டபத்திலிருந்து கிளம்பி அண்ணாமலைபுரம் சென்றோம். அண்ணாமலைபுரம் பங்களா மற்றவற்றை விட புதியது. பெரியது. ஜமுனாவிற்கு அதை முதலில் காட்டலாம் என்று நினைத்தேன்.

போக் ரோடை தாண்டும்போது ‘முதலில் உங்கள் கம்ப்யூட்டரை எடுத்து கொள்ளலாம்’ என்றாள்.

‘அதை தூக்கிக் கொண்டு அலைவானேன்? இன்னொரு நாள் எடுத்துக் கொள்ளலாம்’ என்றேன்.

‘நான் தூக்கி வருகிறேன்’ என்றாள்.

என்னிடம் ஒரு சாவி இருந்ததால், போக் ரோடு வீட்டிற்குள் சென்று கம்ப்யூட்டரை எடுத்து வந்தேன். ‘நாம் உள்ளே வந்து கம்ப்யூட்டர் எடுத்து சென்றது பற்றி ஒரு கடிதம் எழுதி வையுங்கள் அல்லது போன் செய்து சொல்லுங்கள்‘ என்றாள்.

நான் ஜவுளி அண்ணிக்கு போன் செய்து சொன்னேன். ‘எதற்கு சொல்கிறாய்? இது என்னடா புது பழக்கம்?’ என்று அண்ணி கோபித்துக் கொண்டார்.

‘ஜமுனா சொல்லித் தந்திருப்பாள்’ என்று பின்னால் காபி அண்ணி சொல்வது கேட்டது.

அண்ணாமலைபுர பங்களாவை காட்டி ‘அழகாக இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

ஜமுனாவோ வேறெங்கோ பார்த்துக் கொண்டு ‘பங்களாவிற்கு மேலே வானத்தில் பறக்கும் வெள்ளை பறவையைப் பாருங்கள். என்ன அழகு! சிறகுகள் இருந்தால் நானும் பறந்திருப்பேன். எல்லையில்லாத வானத்தில் உயர உயர பறந்து கொண்டேயிருப்பேன். முடிந்தால் எல்லா மனிதர்களையும் இதுபோல பறக்க வைப்பேன்’ என்றாள்.

‘பங்களா பிடிக்கவில்லையா?’ என்று கேட்டேன்.

‘இதிலென்ன இருக்கிறது? இது இன்னொரு வீடு. அவ்வளவுதானே?’ என்றாள் ஜமுனா.

‘நாம் இந்த வீட்டில் இருந்தால் நமக்கு பெருமை என்று உனக்கு தோன்றவில்லையா?’ என்று கேட்டேன்.

‘மாற்றி சொல்கிறீர்களே. நாம் இருந்தால் இந்த வீட்டிற்கு பெருமை வரும்’ என்றாள் ஜமுனா.

வீட்டிற்கு நீதிமன்றம் முத்திரை வைத்திருந்ததால் உள்ளே போக முடியவில்லை. ஜமுனா வீடு பற்றி எந்தவித உற்சாகத்தையும் காட்டாததால், இரண்டு நிமிடங்கள் அங்கே நின்றிருந்துவிட்டு கனப்பாக்கம் சென்றோம்.

மயானத்திற்கு நடுவில் நிலம் இருந்தது. அதனால் மயானத்திற்குள் நுழைந்துதான் போயாக வேண்டும். ஜமுனா பயப்படுவாள் என்று பயந்தேன். அவளோ உற்சாகமாக இருந்தாள். நிலத்தின் மேல் வழக்கு இல்லை என்பதால் உள்ளே நுழைய முடிந்தது. ‘சூளைமேடு வீடும், இந்த நிலமும்தான் நம் மேல் பிரியமாக இருக்கின்றன’ என்றாள் ஜமுனா. அங்கு ஒரு மணி நேரம் இருந்தோம்.

‘புதைப்பது, சமாதி கட்டுவது என்று எதையுமே ஒழுங்காக அழகாக செய்யவில்லை. சரியாக செய்தால் இந்த மயானத்தில் உலகத்தையே புதைக்கலாம்’ என்றாள் ஜமுனா.

‘எல்லாவற்றையும் பெரியதாக நினைக்கலாம்தான். அதற்காக இப்படியா சொல்வாய்?’ என்றேன்.

சிரித்தாள் ஜமுனா.

‘தாத்தா அரை கிரவுண்டு, ஒரு கிரவுண்டு என்று சின்ன இடங்கள் சிலவற்றை ஆங்காங்கே  வாங்கி போட்டிருக்கிறார்.  அண்ணார்களுக்குத்தான் விவரங்கள் தெரியும்’ என்றேன்.

வரும் வழியில் நுங்கம்பாக்கம் பங்களாவையும் வெளியே இருந்து இரண்டு நிமிடங்கள் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்.  

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms