18. மீசை தாத்தாவின் வரவு - மீன்கொடி

நாங்கள் சூளைமேடு வீட்டிற்கு வந்த மூன்றாவது நாள் தன் ஊன்றுகோலை வேகமாக சுழற்றியபடி மீசை தாத்தா வந்தார். அதை அவர் கையிலிருந்து கிட்டத்தட்ட பறித்து மேஜை மீது வைத்தாள் ஜமுனா.

‘என்னம்மா ஜமுனா, உன் அத்தான்கள் என்ன சொல்லி உங்களை வெளியே அனுப்பினார்கள்?’ என்று கேட்டார் தாத்தா.

அண்ணார்களிடம் கூறிய கதையை அப்படியே தாத்தாவிடம் கூறினாள்.

அவர் சிரித்துவிட்டு ‘நீ சொன்னதிலிருந்து சொல்லாமல் விட்டதை தெளிவாகத் தெரிந்து கொண்டேன்’ என்றார்.

ஜமுனாவும் சிரித்துவிட்டு எதையும் மறைக்காமல் நடந்தவற்றை கூறினாள்.

பின் சிறிது யோசித்த தாத்தா பெருமூச்சு விட்டார். ‘கூட்டுக் குடும்பம் பெரிதாகி வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் போன்ற வயதானவர்களின் ஆசை’ என்றார்.

‘காலத்தை நகராமல் நிற்க வைக்க முடிந்தால் கூட்டுக் குடும்பங்கள் சிதறுவதை தடுக்க முடியும்’ என்றாள் ஜமுனா.

‘எதற்கு எதையும் தடுக்க வேண்டும்? சிதைவதையும், சிதறுவதையும் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டு நாம் மாறுவதுதான் நல்லது’ என்றார் தாத்தா.

‘நாங்கள் கல்யாணத்தன்றே அங்கிருந்து கிளம்பி இங்கு வந்ததில் உங்களுக்கு வருத்தமில்லையே?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘உண்மையை சொல்லப் போனால் இதுதான் எனக்கு பிடித்திருக்கிறது’ என்றார் தாத்தா. பின் என்னை பார்த்து ‘சாப்ட்வேர் கேட்ட நண்பரைப் போய் பார்த்தாயா’ என்று கேட்டார்.

‘நேற்று போய் பார்த்தேன். வேலையை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்’ என்றேன்.

‘ஜமுனா அனுப்பி வைத்தாளாக்கும்?’ என்றார் தாத்தா.

நான் புன்னகைத்தேன்.

தாத்தா ஏதோ கேட்க நினைத்து தயங்கினார். ‘முன்பணமாக இரண்டாயிரம் கிடைத்தது. என்னிடம் கொடுத்து விட்டார்’ என்றாள் ஜமுனா.

‘கொடுத்தானா? அல்லது பிடுங்கிக் கொண்டாயா?’ என்று கேட்டு சிரித்தார் தாத்தா.

தன் கையிலிருந்த கண்ணாடி வளையல்களை தாத்தாவிடம் காட்டினாள் ஜமுனா.

‘உங்கள் பேரர் தந்த பரிசு’ என்றாள் ஜமுனா.

‘பரிசு தருவான் என்று தெரியும். கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் என்று ஏதாவது புத்தகம் தருவான் என்று நினைத்தேன்’ என்றார் தாத்தா.

‘புத்தகம் தந்தால் நான் படிப்பேனோ, மாட்டேனோ என்ற சந்தேகம் வந்து விட்டது போலிருக்கிறது. அவரே தினமும் சொல்லித் தரப் போகிறாராம்’ என்றாள் ஜமுனா.

உரக்க சிரித்தார் தாத்தா.

ஜமுனாவும், தாத்தாவும் பேசிக் கொண்ட விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தாத்தா எவரிடமும் அளவாகவும், இறுக்கமாகவும்தான் பேசுவார். என்னோடு எப்போதாவது சில நிமிடங்கள் இப்படி பேசியதுண்டு.

‘இவனைத் தவிர மற்றவர்களுக்கு நான் பெயர் வைக்கவில்லை. சத்தியத்தில் உயர்ந்தது பரமார்த்தம். அந்த அர்த்தத்தில் இவனுக்கு பரமார்த்தன் என்று நான்தான் பெயர் வைத்தேன். இவனோ பரமார்த்த குரு போல ஒன்றும் தெரியாதவனாக இருக்கிறானே என்று எனக்கு பல வருடங்களாக கவலை இருந்து வந்தது. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். இனி எனக்கு பேத்தி, பேரர்களைப் பற்றிய கவலை இல்லை’ என்று கூறி விட்டு துயரப் பெருமூச்சு விட்டார் தாத்தா.

‘கவலைப்படவேண்டாம் தாத்தா, எல்லா கவலைகளும் சீக்கிரம் சரியாகி விடும்’ என்று கூறிய ஜமுனா உள்ளே சென்று சித்தப்பா தந்த காகிதக் கட்டையும், வெற்று பத்திரங்களையும் தந்தாள். சித்தப்பா வீட்டிற்கு போய்வந்த விவரத்தை சொன்னாள்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த தாத்தா ‘இதை ஏன் இன்னமும் நீ வக்கீலிடம் தரவில்லை?’ என்று கேட்டார்.

‘உங்களிடம் சொல்லிவிட்டு செய்யலாம் என்று நினைத்தேன்’ என்றாள் ஜமுனா.

‘இனிமேல் என்னிடம் எதையும் கேட்கவோ, சொல்லவோ தேவை இல்லை. நம் குடும்பத்திற்கு எது நல்லதோ அதை எவரிடமும் கேட்காமலே நீ செய்துவிடு’ என்றார் தாத்தா. பின் ‘நீயே வக்கீலைப் போய் பார்த்து வழக்கை முடித்துவிடு’ என்றார்.

‘ஆகட்டும் தாத்தா’ என்றாள் ஜமுனா.

‘குரங்குகளுக்கு இந்த விஷயம் தெரியுமா?’ என்று கேட்டார் தாத்தா.

‘இன்னமும் சொல்லவில்லை’ என்றாள் ஜமுனா.

‘நான் சொல்லிக் கொள்கிறேன். கூத்தாடுவார்கள்’ என்றார் தாத்தா.

‘பாட்டியைத்தான் இன்னமும் பார்க்க முடியவில்லை’ என்றாள் ஜமுனா.

‘எதை, எங்கே, எப்போது, எப்படி செய்யக் கூடாதோ, சொல்லக் கூடாதோ அதை, அங்கே, அப்போது, அப்படி செய்பவள், சொல்பவள் உன் பாட்டி. நான் அவளை பார்த்த முதல் நாளிலிருந்து அப்படித்தான் இருக்கிறாள்’ என்றார் தாத்தா.

‘ஒரேயடியாகத்தான் பாட்டியை கேலி செய்கிறீர்கள் தாத்தா’ என்றாள் ஜமுனா.

‘நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தலைமறைவானபோது, இவள் அண்ணன்தான் ஒரு குடிசையில் ரகசியமாக வைத்து காபியும், கஞ்சியும் கொடுத்து வந்தான். ஊர் முழுவதும் போலீஸ் என்னை தேடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் ஏதோ அவசர வேலை வந்து விட்டது என்று இவளிடம் கஞ்சி எடுத்துக் கொண்டு ரகசியமாக போக சொல்லியிருக்கிறான். இவளோ திருவிழாவிற்கு போவது போல நன்றாக அலங்கரித்துக் கொண்டு, கூடையில் பெரிய டிபன் கேரியரில் விருந்து சாப்பாடு எடுத்து வந்தாள். பகல் நேரத்தில் இவள் சாதாரணமாக நடந்து போனாலே எல்லோருக்கும் சந்தேகம் வரும். அலங்காரம் பண்ணி, முகத்தை முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு, அங்கேயும் இங்கேயும் திருதிருவென்று விழித்துக் கொண்டு வந்திருக்கிறாள். அது கூட பரவாயில்லை. ரகசியமாக தோட்டத்திலும். வயலிலும் வருகிறவள் ஜல், ஜல்லென்று கொலுசு சத்தம் கேட்க நடந்து வருகிறாள். இவள் பின்னோடு போலீஸ்காரன் வந்து என்னை பிடித்து விட்டான். என்னை அடிக்கும்போது போலீஸ்காரன் ‘இந்த மாதிரி ஒரு பெண்ணை உதவிக்கு வைத்துக் கொண்டு நீயெல்லாம் ஏன்டா தலைமறைவாக நினைக்கிறாய்?’ என்று சொல்லி சொல்லி அடித்தானம்மா’ என்று கூற இருவரும் பல நிமிடங்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

‘பாட்டியை போலீஸ் ஒன்றும் செய்யவில்லையா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘இல்லை. இவளைப் பிடித்து வைத்தால் என்னவெல்லாம் பட வேண்டுமோ என்று போலீஸ்காரன் பயந்திருப்பான்’ என்று சிரித்த தாத்தா ‘அப்படியில்லை. இவள் அண்ணன் ஒரு கட்டு பணத்தை கொடுத்தான்.  அண்ணனையும். தங்கையையும் விட்டு விட்டார்கள். இவள் அண்ணன் எனக்காகவும் பணம் கொடுப்பதாக சொன்னான். ‘லஞ்சம் கொடுத்து விடுதலை வாங்க மாட்டேன்’ என்று கோஷம் போட்டேன். அதற்கு கூடுதலாக நான்கடி விழுந்தது. நான் விடுதலை கேட்கவில்லை. சுதந்திர போராட்ட தியாகி என்று பெரிய தண்டனை தராமல் அவர்களாகவே விட்டு விட்டார்கள்’ என்றார் மீசை தாத்தா.

மீண்டும் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

‘பாட்டி வந்தபிறகுதான் நீங்கள் பெரிய தொழிற்சாலை ஆரம்பித்தீர்கள். அவர் உங்களை விட்டு போனபின் திரும்பவும் பழைய நிலைக்கு வர முடியவில்லையே?’ என்றாள் ஜமுனா.

சிறிது நேரம் பேசாமல் இருந்த தாத்தா பின் ‘கவர்னசத்தையை என்ன செய்தாய்? உன் பெயரைச் சொன்னாலே மிரளுகிறாள்’ என்றார் தாத்தா.

‘அவருடைய முகம் பார்க்கும் கண்ணாடியாக சில நிமிடங்கள் இருந்தேன். அவரால் தன் முகத்தை பார்க்க முடியவில்லை’ என்ற ஜமுனா ‘வீடு திரும்பி விட்டாரா?’ என்று கேட்டாள்

தாத்தா சிரித்தார். ‘திரும்பாமல் என்ன? அவளுக்கு நம்மை விட்டால் வேறு எவருமில்லை’ என்றார்.

புன்னகைத்தாள் ஜமுனா.

‘பரமார்த்தன் அதிர்ஷ்டக்காரன்’ என்றார் தாத்தா.

அதன்பின் அடிக்கடி அதையே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms