20. மீசை தாத்தாவின் துறவு - மீன்கொடி

தாத்தா வந்த இரண்டாவது நாள் நானும், ஜமுனாவும் சித்தப்பாவின் வக்கீலைப் போய் பார்த்தோம்.  வக்கீல் இல்லை. வயதான உதவியாளர்தான் இருந்தார்.

அவருக்கு என்னை தெரிந்திருந்தது. ஜமுனாவை தெரியவில்லை. என் மனைவி என்றபோது உடனடியாக நம்பவில்லை. ‘எங்களுக்கு பத்திரிகை வரவில்லையே. பின் உனக்கு எப்படி கல்யாணம் ஆகியிருக்க முடியும்? உண்மையிலேயே மனைவிதானா? ஆதாரமில்லையே?’ என்று சந்தேகப்பட்டார்.

நாங்கள் சித்தப்பாவை சந்தித்த மறுநாளே சித்தப்பா வக்கீலை சந்தித்து வழக்கை முடிக்க சொன்னாராம்.

‘கிட்டத்தட்ட ஜெயித்து விட்டோம். இப்போது போய் வழக்கை இனி நடத்த வேண்டாம் என்கிறாயே!’ என்று வக்கீல் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சித்தப்பா கேட்கவில்லையாம்.  

‘வழக்கை முடித்து விட்டு, அது சம்பந்தமான எல்லா காகிதங்களையும் உன் சித்தப்பாவிடம் வக்கீல் தந்தார். அவர் எல்லாவற்றையும் இங்கேயே கிழித்துப் போட்டுவிட்டார்’ என்றார் உதவியாளர்.

எனவே எங்களுக்கு எந்த வேலையும் இருக்கவில்லை.

வாடகை ஸ்கூட்டரை மறுநாளே திருப்பி கொடுத்து விட்டேன். பெரும்பாலும் தாத்தாவின் சைக்கிளில் வெளியே  சென்று வந்தேன். ஜமுனாவோடு போவதென்றால் மட்டும் மீண்டும் அரை நாள் அல்லது ஒரு நாள் கணக்கில் வாடகைக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொண்டேன்.   வாடகை ஸ்கூட்டர் கடை வரை சைக்கிளில் சென்று அதை நிறுத்தி விட்டு ,ஸ்கூட்டரை எடுத்து வருவது எனக்கு சிரமமாக இல்லை. ஜமுனாவோடு செல்லும் எண்ணம் உற்சாகத்தைத்தான் தந்தது.

மீசை தாத்தா மூன்று நாட்கள் எங்களோடு தங்கியிருந்தார். நான்காவது நாள் காலை போக் ரோடு வீட்டிற்கு சென்றார்.

போகுமுன்பு ஜமுனாவிடம் கையெழுத்திட்ட காசோலை புத்தகம் ஒன்றை நீட்டினார். ‘பரமன் எவ்வளவு சம்பாதிப்பான் என்று எனக்கு தெரியும். வசதியாக இரு’ என்றார்.

அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டாள் ஜமுனா. ‘இவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதற்குள் என்னால் வசதியாக வாழ முடியும்’ என்றாள் ஜமுனா.

அன்று மாலை தாத்தாவின் நண்பர் வாசுதேவய்யா ஒரு சிறு பெட்டியோடு வந்தார். அவருக்கு தாத்தாவின் வயதாகிறது. சூளைமேட்டில் எங்கள் வீட்டருகே நமது நகலகம் என்று ஒரு போட்டோ காபி கடை வைத்திருக்கிறார். அவர் பெயர் வாசுதேவன். நான் அவரை வாசுதேவய்யா என்று அழைக்க ஆரம்பித்து அந்த பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.

‘வெளியே போயிருந்தீர்களா?’ என்று கேட்டார்.

‘இல்லையே’ என்றாள் ஜமுனா.

‘கொஞ்ச நேரத்திற்கு முன்பு மீசைக்காரன், கடைக்கு வந்து இந்தப் பெட்டியை உன்னிடம் தரச் சொன்னான்’ என்று கூறி கையில் இருந்த சிறு பெட்டியையும், அதன் சாவியையும் ஜமுனாவிடம் தந்தார்.

‘வேறென்ன சொன்னார்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘பெரிய பெட்டியோடு ஆட்டோவில் வந்தான். ‘வெளியூர் போகிறேன்’ என்று மட்டும் சொன்னான். ஏதோ சரக்கு விற்க போகிறான் என்று நினைக்கிறேன்’ என்றார் வாசுதேவய்யா.

அவருக்கு நன்றியோடு ஒரு காபியும் தந்து அனுப்பிய பிறகு ஜமுனா பெட்டியைத் திறந்தாள்.

ஒரு கடிதமும், பெட்டி நிறைய ஆவணங்களும், பத்திரங்களும் இருந்தன.

கடிதத்தை வாசித்துவிட்டு ஜமுனா என்னிடம் தந்தாள். தாத்தா கூட்டெழுத்தில் கடிதத்தை எழுதியிருந்தார்.

‘என் பிரியத்திற்குரிய ஜமுனா,

நம்மிடம் இருக்கும் எல்லா சொத்துக்களின் விவரங்களையும், பத்திரங்களையும் முக்கியமான காகிதங்களையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். பேரர்கள் கூட்டுக் குடும்பமாக சொத்துக்களை வைத்திருப்பதோ அல்லது பிரித்துக் கொள்வதோ அவர்கள் விருப்பம். பாகப்பிரிவினை செய்வதென்றால் அது சுமுகமாக நடக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அதற்கு ஆவன செய்யவும். பல வெற்று காகிதங்களில், பத்திரங்களில் தேதி போடாமல் கையெழுத்து போட்டு வைத்திருக்கிறேன். சொத்து, கம்பெனி, குடும்ப விஷயங்கள் அனைத்திலும் எந்த முடிவும் நீ எடுக்க உனக்கு முழு உரிமையைத் தருகிறேன். மற்றவர்கள் உன் முடிவிற்கு கட்டுப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

எனக்குரிய முழுமையைத் தேடிச் செல்கிறேன்.

அன்புடன்,
உன் தாத்தா.’

‘எத்தனை நாள் பயணம் என்று சொல்லவில்லையே’ என்றேன்.

‘அவருக்கே அது தெரியாது’ என்றாள் ஜமுனா.

‘கடிதத்தை பார்த்தால் துறவியாகி விட்டார் என்று தெரிகிறது’ என்றேன்

‘துறவியாகப் போகிறவர் பெட்டியோடா போவார்?’ என்றாள் ஜமுனா.

‘திரும்பி விடுவார் என்றா சொல்கிறாய்?’ என்றேன்

‘அவருக்குரிய முழுமையைத் தேடிப் போயிருக்கிறார். அது கிடைத்தால் திரும்பி விடுவார்’ என்றாள் ஜமுனா.

‘கிடைக்கவில்லையென்றால்?’ என்று கேட்டேன்.

‘கிடைக்கும்வரை தேடிக் கொண்டு இருப்பார். தேடிக் கொண்டே முன்னேறினால் கடைசியில் தேடுவது கிடைத்துவிடும். தேடுவதை பாதியில் விட்டுவிட மாட்டார்’ என்றாள் ஜமுனா.

‘அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லையே?’ என்றேன்

‘உங்கள் அண்ணார்களிடம் சொல்லுங்களேன்’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம். அதை செய்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்’ என்றேன்

சிரித்தாள் ஜமுனா. அவள் சிரித்தது அசந்தர்ப்பமானதாக இருந்தது.

தாத்தா வைத்திருந்த பட்டியலையும் பத்திரங்களையும் ஒவ்வொன்றாக சரிபார்க்கத் தொடங்கினாள் ஜமுனா. இருட்டத் தொடங்கும் நேரத்தில் போக் ரோடு வீட்டிற்கு கிளம்பினோம். கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தாள் ஜமுனா.

‘பெட்டி?’ என்று கேட்டேன்.

‘இங்கேயே இருக்கட்டும். எல்லாவற்றையும் முழுவதுமாக வாசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘இதையெல்லாம் வாசித்தாலும் எனக்குப் புரியாது’ என்றேன்.

‘உங்களை யாராவது வாசிக்கச் சொன்னார்களா?’ என்று கேட்டாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms