21. மீசை தாத்தா பற்றிய கவலை - மீன்கொடி

தாத்தாவின் கடிதம் வந்த ஒரு மணி நேரத்தில்  நானும், ஜமுனாவும் போக் ரோடு வீட்டிற்குச் சென்றோம். எல்லோரும் வீட்டில்தான் இருந்தனர். தாத்தாவின் கடிதத்தை புருஷண்ணாரிடம் கொடுத்தேன். அவர் கண்ணாடி போட்டிருக்கவில்லை. ‘என்ன கடிதம்?’ என்று கேட்டார்.

‘தாத்தாவின் கடிதம். வெளியூர் போய்விட்டார்’ என்றேன்.

‘இரண்டு நாட்களில் திரும்பி விடுவார். வழக்கமாக நடப்பதுதானே’ என்றார் புருஷண்ணார்.

‘கடிதம் எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார்’ என்றேன்.

‘அதற்கென்ன? போன் கிடைத்திருக்காது’ என்றார் மதுவண்ணார்.

‘வயதான காலத்தில் எதற்கு ஏஜென்சி எடுத்துக் கொண்டு ஊர், ஊராக அலைய வேண்டும்? ஒரு மூலையில் சாய்ந்து கொண்டு பாரதமும், கீதையும் வாசிக்க வேண்டியதுதானே?’ என்றார் புருஷண்ணார்.

‘நாம்தான் பணத்தாசை பிடித்து அவரை அலைய விடுகிறோம் என்று எல்லோரும் வம்பு பேசுகிறார்கள்’ என்றார் மதுவண்ணார்.

‘தாத்தா ஒரு போதும் கடிதம் எழுதி வைத்து சொத்து பத்திரங்களை தந்துவிட்டு போனதில்லையே’ என்றேன்.

அப்போதுதான் கடிதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக கடிதத்தை மீண்டும் மீண்டும் இருவரும் வாசித்தனர்.

‘பத்திரங்களை உன்னிடம் தந்தாரா?’ என்று கேட்டார் புருஷண்ணார்.

‘ஜமுனாவிடம் தந்திருக்கிறார். வாசுதேவய்யா மூலம் கொடுத்தனுப்பினார்’ என்றேன்.

‘இனி சொத்து பற்றிய எல்லா முடிவுகளையும் சின்னப் பெண்ணான ஜமுனாதான் எடுத்தாக வேண்டும் போலிருக்கிறது’ என்றார் மதுவண்ணார்.

‘அதை பற்றி பேச வரவில்லை. தாத்தாவை எங்கே தேடுவது? எப்படி கண்டுபிடிப்பது?’ என்று கேட்டேன்.

‘பார்க்கலாம்’ என்று அண்ணார்கள் சொன்னார்கள்.

மாடியிலிருந்து இறங்கி வந்த ஜவுளி அண்ணி எங்களை வரவேற்றுவிட்டு ‘கையில் என்ன கடிதம்?’ என்று புருஷண்ணாரை கேட்டார்.

‘தாத்தா ஓடிப் போய் விட்டார்’ என்றார் மதுவண்ணார்.

அப்போது அங்கு வந்த காபி அண்ணி ‘யார் யாரோடு ஓடிப் போனார்கள்?’ என்று ஆர்வத்துடன் கேட்டார்.

‘இவள் ஒருத்தி!’ என்றார் ஜவுளி அண்ணி.

புருஷண்ணார் ‘தாத்தா சொத்துக்களை பிரித்து கொள்ள சொல்லியிருக்கிறார்’ என்றார்.

‘என் அப்பாவிடம் சொல்கிறேன். அவருக்கு பிரிப்பதில் அதிக அனுபவமுண்டு’ என்றார் காபி அண்ணி.

கடிதத்தை உரக்க வாசித்த ஜவுளி அண்ணி ‘விரும்பினால் பாகப் பிரிவினை செய்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்’ என்றார்.

‘தாயும், சேயும் ஒன்று என்றாலும் வாயும், வயிறும் வேறுதானே?’ என்றார் கவர்னசத்தை.

‘கவர்னசத்தை சொல்வது சரிதான். யாருக்கு என்ன சேர வேண்டும் என்று எழுதிவைத்து விட்டு தாத்தா ஓடிப் போயிருக்கலாம்’ என்றார் மதுவண்ணார்.

‘இப்போது என்ன செய்வது?’ என்றார் காபி அண்ணி.

‘கடைசி மருமகள் என்ன சொல்கிறாளோ அதன்படி நடந்து கொள்ளுங்கள். தாத்தா சொல்லியிருக்கிறாரே’ என்றார் கவர்னசத்தை.

அதன்பின் அண்ணார்கள் என்னிடமும், ஜமுனாவிடமும் எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களில் உள்ளே சென்றுவிட்டனர். அரைமணி நேரமாகியும் வெளியே வரவில்லை.

‘தூங்கிவிட்டார்கள்’ என்று ஜவுளி அண்ணி சங்கடத்துடன் சொன்னார்.

அன்றிரவு மதுரை மாமாவிற்கு போன் செய்து விஷயத்தை சொன்னதும் உடனே கிளம்பி வந்துவிட்டார்.

‘மாமாவிற்கு எதற்கு சிரமம்? அவர் ஏன் அலைய வேண்டும்?’ என்றேன்

‘பெண் கொடுத்திருக்கிறாரே. அப்படித்தான் அலைவார்’ என்றாள் ஜமுனா.

தாத்தா பற்றி மாமா என்னிடம் மேலோட்டமாகத்தான் விசாரித்தார். ஜமுனாவிடம் தனிமையில் பல கேள்விகள் கேட்டதாக அவள் சொன்னாள்.

மறுநாள் காலை மாமாவும், நானும், ஜமுனாவும் ஆட்டோவில் போக் ரோடு வீட்டிற்கு போய் அண்ணார்களை சந்தித்தோம். ஜமுனா ஒரு சிறு பையோடு வந்தாள்.

காபி மாமாவும், ஜவுளி மாமாவும் அங்கு வந்திருந்தனர்.

அண்ணார்கள் இருவரும் என்னுடன் எதுவும் பேசவில்லை. ஜமுனாவுடனும் பேசவில்லை. தாத்தாவை பற்றி விசாரித்த மதுரை மாமாவுடன் அளவாக பேசினர்.

ஜவுளி அண்ணி எங்களருகே அமர்ந்து கொண்டு, ‘உன் அண்ணார்கள் தாத்தா போனதை நினைத்து, நினைத்து கவலையில் மூழ்கி விட்டார்கள். பேசும் நிலையில் இல்லை’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் அண்ணார்கள் காபி மாமாவுடனும், ஜவுளி மாமாவுடனும் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜமுனா தன் பையிலிருந்து ஒரு கட்டு பத்திரங்களை எடுத்தாள்.

‘அத்தான், தாத்தா கொடுத்த பத்திரங்களை கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள்தான் வீட்டுக்குப் பெரியவர். இவை உங்களிடமிருந்தால் நன்றாக இருக்கும்’ என்றாள்.

ஒரு கணம் திகைத்த புருஷண்ணார் பத்திரக் கட்டை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டார். காகிதக் கட்டின் மேல் முதலாவதாக இருந்த காகிதத்தை பார்த்து விட்டு ‘இது என்ன?’ என்றார்.

‘தாத்தா திரும்பி வந்து பத்திரங்கள் எங்கே என்று கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டுமே. நான் உங்களிடம் கொடுக்கும் பத்திரங்களுக்கான ரசீது’ என்றாள் ஜமுனா.

‘ரசீதா!’ என்று திகைத்தார் புருஷண்ணார்.

‘கொடுக்கும் பத்திரங்களுக்குத்தானே ரசீது கேட்கிறாள். அதிலென்ன தப்பு?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘தப்பில்லைதான்’ என்ற ஜவுளி மாமா ‘இப்படி கொடுங்கள்’ என்று எல்லா பத்திரங்களையும் வாங்கிக் கொண்டார்.

ஒவ்வொரு பத்திரமாக சரி பார்த்தார். ‘தாராளமாக ரசீதில் கையெழுத்து போடுங்கள் மாப்பிள்ளை’ என்றார் ஜவுளி மாமா. பத்திரங்களை அவர் கையிலிருந்து எடுத்து பார்வையிட்டார் காபி மாமா.

‘நீங்களும் ஒரு கையெழுத்து போடுங்கள்’ என்றார் காபி அண்ணி.

‘ரசீதுதானே? சொத்தையா மாற்றுகிறோம்?’ என்றார் மதுவண்ணார்.

‘எதற்கும் ஒரு கையெழுத்து போட்டு வையுங்கள்’ என்றார் காபி அண்ணி.

மதுவண்ணாரும் ரசீதில் கையெழுத்துப் போட்டார்.

‘என்னடா பரமா, கண்ணெல்லாம் சிவந்திருக்கிறது. சரியாக தூங்கவில்லையா?’ என்று கேட்டார் புருஷண்ணார்.

‘ஜமுனா, இவனுக்கு ஒன்றும் புரியாது. தாத்தா சின்ன பிள்ளை இல்லை என்று நீயாவது சொல்லி புரிய வைக்கக் கூடாதா? தேவையில்லாமல் கவலைப்படுகிறான்’ என்றார் மதுவண்ணார்.

சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பியபோது அண்ணார்கள் இருவரும் ‘என்னடா இது. இவ்வளவு நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல் போவது நன்றாக இல்லை’ என்று கோபித்துக் கொண்டனர்.

சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது மதுரை மாமாவிடம் ‘மாமா, அடுத்த மாதம் தாத்தா சொன்னபடி பாகம் பிரிப்பது பற்றி பேசிவிடலாம். பெரியவரான நீங்களும் வந்திருந்து சுமுகமாக காரியத்தை முடித்து தர வேண்டும்’ என்றார் புருஷண்ணார்.

மதுரை மாமா மிகவும் மகிழ்ந்து போனார்.

புருஷண்ணார் எங்களை காரில் அழைத்து வந்து சூளைமேடு வீட்டில் இறக்கிவிட்டார்.

மதுரைக்குக் கிளம்பும் வரை மாமா ‘அருமையான அண்ணார்கள், அற்புதமான அண்ணிகள்’ என்று கூறிக் கொண்டே இருந்தார்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms