22. பாகப் பிரிவினை - மீன்கொடி

மூன்று நாட்கள் கழித்து மதியம் மதுவண்ணாரிடமிருந்து போன் வந்தது. ‘இப்போதே ஜமுனாவை அழைத்துக் கொண்டு வா’ என்றார்.

‘இப்போதேவா?’ என்றேன்.

‘வர முடியாதோ? வேலையில்லாமல்தானே இருக்கிறாய்? வா’ என்றார்.

‘தாத்தாவைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைத்திருக்குமோ?’ என்று போகும் வழியில் ஜமுனாவிடம் கேட்டேன்.

‘சொத்து பற்றி பேசப் போகிறோம்’ என்றாள் ஜமுனா.

‘எதை வைத்து அப்படி சொல்கிறாய்?’ என்று கேட்டேன்.

‘தாத்தா பற்றிய விஷயம் என்றால் இத்தனை அவசரமாக என்னையும் வர சொல்லி இருக்க மாட்டார்கள்’ என்றாள் ஜமுனா.

போக் ரோடு வீட்டில் யசோதா, அத்தான், ஜவுளி மாமா, காபி மாமா உட்பட  எல்லோருமே இருந்தனர்.

‘பல சொத்துகள் இருக்கின்றன. எப்படி பிரிப்பது என்று பேசத்தான் கூப்பிட்டோம். இன்றே முடிவெடுத்து விடலாம்’ என்றார் மதுவண்ணார்

‘இன்றேவா? தாத்தாவை பற்றி விசாரிக்க வந்த மதுரை மாமாவிடம் ‘இந்த மாதம் சொத்து பற்றி பேசப் போகிறோம். நீங்களும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்’ என்று புருஷண்ணார் சொன்னாரே. மதுரைக்கு தகவல் தந்து அவர் எப்படி இன்றே வர முடியும்?’ என்றேன்.

‘மரியாதை நிமித்தம் சொன்ன வார்த்தைகள். அதற்கெல்லாமா நீ முக்கியத்துவம் தருகிறாய்?’ என்றார் புருஷண்ணார்.

‘பரமன் சொல்வது சரிதான். மதுரை மாமா வந்து விடட்டுமே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘அடுத்தவருக்கு யோசனை சொல்கிறோம் என்றால் நமக்கு அனுபவம் இருக்க வேண்டும். அவர் சாதாரண பள்ளிக்கூட வாத்தியார். பரம்பரை சொத்தும் இல்லை. சொந்தமாக சொத்து சேர்க்கவும் இல்லை. உலகத்தை பற்றி ஒன்றும் தெரியாதவரை எதற்கு தொந்தரவு செய்ய வேண்டும்?’ என்றார் ஜவுளி மாமா.

‘என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்! அவர் பூகோள வாத்தியார். உலகத்தையும், நிலத்தையும் பற்றி அவருக்கு தெரியாதது ஏதாவது இருக்க முடியுமா!’ என்றார் காபி மாமா.

என்னை தவிர எல்லா ஆண்களும் சிரித்தனர். இறுக்கமான முகத்தோடு உட்கார்ந்திருந்த அத்தான் புன்னகை செய்தார்.

ஜவுளி மாமா, ‘இந்த குடும்பத்திற்கு தலைவர் மீசை தாத்தா. அவர் இங்கே இல்லை என்றாலும் அவர் வார்த்தை நம்மோடு இருக்கிறது. அந்த வார்த்தைப்படி நாமெல்லோரும் சுமுகமாக பேசி ஒரு நல்ல முடிவிற்கு வர வேண்டும்’ என்றார்.

காபி மாமா சொத்து பட்டியல் பிரதியை ஆளுக்கொன்றாகத் தந்தார்.

‘மூன்று ஆண் வாரிசுகள், ஒரு பெண் வாரிசு. தேவையான அளவிற்கு சீர்வரிசை தந்து, பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவது குடும்ப கடமை. அதை இந்த குடும்பம் ஒரு குறையுமில்லாமல் செய்து விட்டது. அதை மகாதேவன் தம்பியும் ஒப்புக் கொள்வார். ஆண் வாரிசுகள் விருப்பப்பட்டு ஏதாவது பெண் வாரிசுக்கு செய்யலாம்’ என்றார் காபி மாமா.

அத்தான் எழுந்தார். ‘கிளம்பலாமா யசோதா?’ என்றார்.

‘என்ன ஆயிற்று? என்றார் ஜவுளி அண்ணி.

‘ஆரம்பமே சரியில்லை. பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை உண்டு. ஆனால் காபி பெரியப்பா ஏதோ பிச்சை போடலாம் என்கிறார். நாம் பேசினால் மனஸ்தாபம் வரும். வக்கீல் மூலம் பேசிக் கொள்ளலாம்’ என்றார்.

‘உட்காருங்கள் மாப்பிள்ளை. சொத்து பற்றி பேசும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எல்லோருடைய அபிப்பிராயத்தையும் எல்லோரும் கேட்போம். அப்புறமாக முடிவெடுப்போம்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘சரி அக்கா. உங்கள் முகத்திற்காக பொறுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி விட்டு அமர்ந்தார் அத்தான்.

ஜவுளி அண்ணியின் மலர்ந்த முகமும், இனிய பேச்சும் எப்பேர்பட்ட கோபக்காரரையும் நிதானப்படுத்த வல்லவை.

‘தம்பி, நமக்கென்று ஒரு பண்பாடு, கலாசாரம் இருக்கிறது. அதை விட்டு கொடுக்கக் கூடாது. அன்பை பெண்ணுக்கும், ஆஸ்தியை ஆணுக்கும் தருவதுதான் நம் பாரம்பரியம். என்ன சொல்கிறீர்கள்?’ என்று அத்தானைப் பார்த்து கேட்டார் காபி மாமா.

‘எல்லோரும் பேசிய பின் முடிவெடுப்போம் என்று அக்கா சொன்னார். நான் கடைசியாகப் பேசுகிறேனே’ என்றார் அத்தான்.

‘நடுநடுவே மற்றவர்களை ஒட்டியும், வெட்டியும் பேசலாம். தப்பில்லை’ என்றார் ஜவுளி மாமா.

‘அப்படியானால் நான் வெட்டியே பேசி விடுகிறேன். நம் பாரம்பரியத்திலே பெண் நன்றாக இருப்பதற்காக முழு சொத்தையும் தந்த எத்தனையோ பெரிய குடும்பங்கள் இருக்கின்றன. எனக்கு அவ்வளவு பேராசை இல்லை. எது சரியோ அதைச் செய்யுங்கள். நியாயத்திற்கு கட்டுப்படுவேன்’ என்றார் அத்தான்.

‘நாங்களும் நியாயத்திற்கு கட்டுப்படுபவர்கள்தான் தம்பி’ என்றார் காபி மாமா.

‘நியாயமென்றால் அது சட்டப்படியான நியாயமாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் சொல்கிறது’ என்றார் அத்தான்.

‘தம்பி, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஆயிரம் வருஷ பாரம்பரியம் என்று ஒன்று இருக்கிறதே’ என்றார் காபி மாமா.

‘உங்களுக்கும் சொத்து இருக்கிறது. காபி அக்காவைத் தவிர ஒரே ஒரு ஆண் வாரிசுதான். பாரம்பரியப்படி எல்லாமே அவருக்குத்தானா! நீங்கள் உங்கள் பெண்ணுக்கும், மாப்பிள்ளை மதுசூதனனுக்கும் எதுவும் கொடுக்கப் போவதில்லையா?’ என்று கேட்டார் அத்தான்.

காபி மாமா தன் மகளையும், மாப்பிள்ளையையும் ஒரு முறை பார்த்தார். பிரச்சினை திசை திரும்புவதை தவிர்க்க விரும்பினார் என்று தோன்றியது. உதவி கேட்கும் பாவனையில் ஜவுளி மாமாவைப் பார்த்தார்.

‘தம்பி, சுற்றி வளைத்து பேசுவானேன்? சொத்து பட்டியல் உங்கள் கையில் இருக்கிறது. என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று சொல்லி விடுங்கள்’ என்றார் ஜவுளி மாமா.

‘குடும்பம், வேலை, வீடு மனிதனுக்கு முக்கியம். முதல் இரண்டும் எனக்கு திருப்தியாக அமைந்துவிட்டது. அருமையான மனைவியை இந்த குடும்பம் எனக்கு தந்திருக்கிறது. இப்போதிருக்கும் வேலையை தாத்தாதான் வாங்கித் தந்தார். அதையெல்லாம் நான் மறக்க மாட்டேன். அதே போல அருமையான ஒரு வீட்டையும் இந்த குடும்பம் எனக்கு தந்துவிட்டால் போதும். வேறெதுவும் வேண்டாம். நான் பேராசைக்காரனல்ல’ என்றார் அத்தான்.

‘மூன்று பங்களாக்கள்தானே இருக்கின்றன? மூன்று பிள்ளைகள் இருக்கிறார்களே’ என்றார் ஜவுளி மாமா.

‘நானும் பல விஷயங்களை பார்க்கிறவன்தான். கேள்விப்படுகிறவன்தான். பட்டியல் நீளமாகத்தான் இருக்கிறது. அதிலிருப்பதைத்தானே என்னால் பார்க்க முடியும்? விடுபட்டதை என்னால் பார்க்க முடியாதே’ என்றார் அத்தான்.

புருஷண்ணா கோபத்துடன் ‘பலவற்றை மறைத்து விட்டோம் என்கிறீர்களா?’ என்று கேட்டார்.

பதிலுக்கு அத்தான் கோபத்துடன் இரைந்தார். ‘சத்தியசீலர்களா நீங்கள்? யசோதாவை கல்யாணம் பண்ண நான் விரும்பிய போது உங்கள் சித்தப்பா குடிகாரர், பெண் பித்தர், சூதாடி, சொந்த வீட்டில் திருடுபவர் என்பதையெல்லாம் மறைத்தீர்களா இல்லையா? ஒரு தடவை தப்பு செய்த நீங்கள் அடுத்த தடவை செய்ய மாட்டீர்கள் என்று எப்படி நம்புவது?’

‘என்ன மாப்பிள்ளை இது? எப்போதோ நடந்த விஷயம். என்ன இருந்தாலும் இவர் சித்தப்பா வயதில் பெரியவர். பெரிய மனம் வைத்து வழக்கை திருப்பி வாங்கிக் கொண்டதால்தான் நாம் சொத்தைப் பற்றியே பேச முடிகிறது. அவரைப் பற்றி இப்படிப் பேசலாமா?’ என்று தணிவான குரலில் ஜவுளி அண்ணி சொன்னார்.

நிதானமடைந்த அத்தான், ‘தப்புதான் அக்கா. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. எல்லோரும் மன்னித்துவிடுங்கள்’ என்றார்.

‘மூன்று வீடுகள்தான் இருக்கின்றன. மூன்று பிள்ளைகளுக்கு ஆளுக்கொன்று வேண்டும். அது நியாயம்தானே?’ என்று கேட்டார் காபிமாமா.

‘நான் என்ன நினைக்கிறேன் என்றால்...’ என்று காபி அண்ணி ஆரம்பித்ததும் ‘நீ சும்மா இருடி. ஆண்கள் பேசட்டும்’ என்று அவரை அடக்கினார் ஜவுளி அண்ணி.

‘நீங்களும் பேச மாட்டீர்கள். என்னையும் பேச விடமாட்டீர்கள்’ என்று நொடித்துக் கொண்டார் காபி அண்ணி.

எனக்கு சொத்து பேச்சு சலிப்புத் தட்ட ஆரம்பித்துவிட்டது. எவருக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே! குடும்பத்தில் அடுத்தவரிடம் கேட்க வேண்டுமா என்ன! காலையில் ஜமுனா பூரியும், உருளைக்கிழங்கு மசாலும் செய்திருந்தாள். வழக்கமாக சாப்பிடுவதைப் போல இரண்டு மடங்கு சாப்பிட்டிருந்தேன். தூக்கம் கண்களை சுழற்றியது. ஜமுனாவைப் பார்த்தேன். என்னைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள். அவள் என்னருகே உட்கார்ந்திருந்தால் அவள் மடியிலேயே தூங்கியிருப்பேன்.

‘சொத்தாக இருந்தால்தானே சிக்கல்? எல்லாவற்றையும் விற்றுவிடலாம். வரும் பணத்தை சமமாகப் பிரித்துக் கொண்டு விடலாம்’ என்றார் அத்தான்.

‘விற்றால் திரும்ப வாங்க முடியுமா? வாழையடி வாழையாக வாழ வேண்டிய குடும்பம் சொத்து வாங்குவதைப் பற்றிதான் பேசும். வேறு மாதிரியான குடும்பங்களில்தான் விற்பது, அடகு வைப்பது போன்றவை நடக்கும்’ என்றார் ஜவுளி மாமா.

‘நான் பெரிய வீட்டில் இருக்கிறேன். வசதியாக இருக்கிறேன். ஆனால் அது வாடகை வீடுதான். சொந்த வீட்டில் இருக்க ஆசைப்படுவது தப்பா? என்னை உங்கள் சொந்த பிள்ளையைப் போல நினைத்து பேசுங்கள்’ என்றார் அத்தான்.

‘போல என்ன போல! நீங்கள் என் பிள்ளையேதான்’ என்றார் ஜவுளி மாமா.

‘அப்படியானால் அதற்கேற்ற நியாயத்தை செய்யுங்கள்’ என்றார் அத்தான்.

பேச்சில் ஆர்வமிழந்து நான் ஜமுனாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த காபி அண்ணி ஜமுனாவிடம் ரகசியமாக ஏதோ கூற, ஜமுனாவின் முகத்தில் சிரிப்பும், சங்கடமும் உண்டாயின. பேச்சை கவனிக்க சொல்லி என்னை ஜாடையில் அதட்டினாள்.

பேச்சை கவனிக்க முயன்றேன். தூக்கம் வந்துவிட்டது. கல்லூரியில் பல வகுப்புகளில் உட்கார்ந்து கொண்டே பிறர் அறியாதபடி தூங்குவதில் எனக்கு நல்ல பயிற்சி உண்டென்பதால் இங்கும் என்னால் தூங்க முடிந்தது.

நல்ல தூக்கம்தான். இருந்தாலும் நடுநடுவே உரத்த குரல்கள் என்னை எழுப்பிவிட்டு. மீண்டும் தூங்க வைத்துக் கொண்டிருந்தன.

எல்லோரும் சிரிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். மாலையாகி இருட்டத் தொடங்கி இருந்தது. இவ்வளவு நேரமாகவா பேசியிருக்கிறார்கள்!

அண்ணார்களும், மாமானார்களும், அத்தானும் சுமுகமாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்க திருப்தியாக இருந்தது. எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது போல தெரிந்தது. மதுவண்ணார் மட்டுமே சற்று சுருங்கிய முகத்துடன் இருந்தார்.

‘யசோதாவின் வீட்டுக்காரர் வீடுதான் வேண்டும். தரவில்லை என்றால் கோர்ட்டுக்கு போவேன் என்று தெளிவாக சொல்கிறார். ஒரு தடவை இந்த குடும்பம் கோர்ட்டுக்கு போனதே போதும். அவருக்கு நுங்கம்பாக்கம் வீட்டை தந்துவிடலாம். அதற்கு மேல் வேறெதிலும் அவருக்கு பங்கு தர வேண்டியதில்லை. அண்ணாமலைபுரம் வீட்டை விற்று வரும் பணத்தையும், மற்றவற்றையும் மூன்று பிள்ளைகளும் பிரித்துக் கொள்ளலாம். போக் ரோடு வீட்டில் மாடிகள் கட்டி அதில் சின்ன மாப்பிளைகள் இருந்து கொள்ளலாம். நானும், காபியும் கலந்து பேசியதில் இதுதான் சரி வரும் என்று தோன்றுகிறது. இந்த முடிவு உங்களுக்கு திருப்திதானே?’ என்றார் ஜவுளி மாமா.

‘பெரியவர்கள் சொன்னால் நான் மறுத்தா பேசப் போகிறேன்?’ என்றார் அத்தான்.

‘இதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது. அண்ணார்கள் பக்கத்திலேயே இருக்கலாம்’ என்று எனக்கு தோன்றியது.

அப்போது டீ கோப்பைகளை ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்த கவர்னசத்தை குறுக்கிட்டு பேசினார். ‘நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன்’

‘பெண்கள் பேச வேண்டியதில்லை என்று அக்கா சொன்னாரே’ என்றார் காபி அண்ணி.

‘அது உனக்கு, எனக்கில்லை’ என்று முறைப்பாக சொன்னார் கவர்னசத்தை. ‘தாத்தா கட்டிய வீட்டை விற்பது பற்றிய பேச்சே எடுக்கக் கூடாது. புருஷோத்தமனுக்கு இந்த போக் ரோடு வீட்டையும், மதுசூதனனுக்கு அண்ணாமலைபுர வீட்டையும் தந்துவிடுங்கள். அண்ணிகள் பெரிய குடும்பத்து பெண்கள். பெரிய வீடுகளில் வாழ்ந்து பழகியவர்கள்’ என்றார்.

‘நான் ஒன்றுமில்லாத குடும்பத்தை சேர்ந்தவன் என்கிறீர்களா?’ என்றார் அத்தான்.

‘எங்கள் வீட்டு மாப்பிளையை அப்படி சொல்வேனா தம்பி? எவ்வளவு பெரிய கம்பனியில் எவ்வளவு பெரிய அதிகாரி நீங்கள்! உங்களுக்குத்தான் நுங்கம்பாக்கம் வீடு’ என்றார் கவர்னசத்தை.

‘சரி, சரி’ என்றார் அத்தான்.

‘இந்த பிள்ளை பரமன் என்ன செய்வான்?’ என்று கவலையோடு கேட்டார் ஜவுளி அண்ணி.

‘ஜமுனா என்னை போலவே சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். விட்டு கொடுத்து வாழத் தெரிந்தவள். பொது நன்மைக்காக எதுவும் செய்வாள்... ‘ என்றார் கவர்னசத்தை.

ஜமுனாவை பாராட்டிப் பேசுகிறார். சமாதானமாகிவிட்டார் என்று தோன்றியது.

‘...சின்ன வீட்டில் இருக்க சங்கடப்படவே மாட்டாள். அதனால் சூளைமேடு வீட்டை பரமனுக்கு தந்து விடலாம். மற்ற வீடுகளோடு ஒப்பிட்டால் அதன் விலை குறைவு. அதனால் கம்பெனியையும், கனப்பாக்கம் நிலத்தையும் பரமனுக்கு தந்து விடலாம். எதையும் நியாயமாக செய்ய வேண்டும்’ என்றார் கவர்னசத்தை.

ஜவுளி அண்ணி ‘மயான நிலமா! என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்டார். .

‘போக் ரோடு கூடத்தான் ஒரு காலத்தில் காடாக இருந்தது. முப்பது, நாற்பது வருஷத்தில் கனப்பாக்கம் நிலமும் அதே போல ஆகிவிடும். இரண்டு கிரவுண்டுக்கு பதில் பத்து ஏக்கர் தருகிறோமே. நம் பரமன் என்பதால்தானே அள்ளி, அள்ளி கொடுக்க சொல்கிறேன்?’ என்றார் கவர்னசத்தை.

ஜவுளி மாமாவும், காபி மாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘தம்பி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று அத்தானை கேட்டார் காபி மாமா.

‘நுங்கம்பாக்கம் வீட்டை எனக்கு தரப் போகிறீர்கள். அதற்கு மேல் வேறெதையும் கேட்பதோ, வேறெதைப் பற்றியும் கருத்து சொல்வதோ தவறாகி விடும். என்ன இருந்தாலும் நான் சம்பந்தகாரன் பாருங்கள்’ என்றார் அத்தான்.

‘வாஸ்தவமான பேச்சு’ என்ற காபி மாமா அண்ணார்களைப் பார்த்தார்.

மதுவண்ணாரின் முகத்தில் பதற்றம் தெரிந்தது. ‘சொத்திலிருந்து விலகி நின்று பேசுவதால் கவர்னசத்தையால் நிதானமாக, சரியாக யோசிக்க முடிகிறது’ என்றார்.

புருஷண்ணார் எதுவும் சொல்லவில்லை.

ஜவுளி அண்ணிதான் பதற்றத்துடன் அண்ணார்களை மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.

‘ஜவுளி, இப்படி கொஞ்சம் வாரும்’ என்று கூறி காபி மாமா, ஜவுளி மாமாவை உள்ளறைக்கு அழைத்து சென்றார்.

சற்று நேரம் கழித்து கூடத்திற்கு திரும்பினர். ‘தாத்தா கம்பெனிதான் எல்லா சொத்துகளுக்கும் ஊற்றுமுகம். அதை வைத்து இன்னமும் எத்தனை பங்களாக்களும் வாங்கலாம்! பத்து ஏக்கர் நிலம். கம்பெனி, வீடு எல்லாவற்றையும் தராசில் வைத்து, மறுபக்கம் மற்ற எல்லா சொத்துக்களை வைத்தாலும் பரமார்த்தனின் தட்டுதான் தாழ்ந்திருக்கும். நுங்கம்பாக்கம் வீடு பெண் வாரிசு யசோதாவிற்கு. கனப்பாக்க நிலம், சூளைமேடு வீடு, கம்பனி அத்தனையும் கடைசி ஆண் வாரிசு பரமார்த்தனுக்கு. இந்த பழைய போக் ரோடு முதல் ஆண்வாரிசு புருஷோத்தமனுக்கு. அண்ணாமலைபுரம் வீடு நடுவாரிசு மதுசூதனனுக்கு. பரமார்த்தனுக்கு பல சொத்துகள் கொடுப்பதால், மீதி இருக்கும் சில்லறைகளையும், லொட்டு, லொசுக்குகளையும் இரண்டு மூத்த ஆண் வாரிசுகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டியது. இது நியாயமான முடிவு என்று நினைக்கிறோம்’ என்றார் ஜவுளி மாமா.

‘பரமன் கல்யாணத்திற்கு கொஞ்சம்தானே செலவு செய்தோம்? நம் கல்யாணங்களுக்கு லட்சக்கணக்கில் ஆயிற்றே! அதற்கு ஈடு செய்ய வேண்டுமே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நீ பேசாமலிரு அம்மா. அதெல்லாம் பெரியவர் எடுத்த முடிவு. அதை கணக்கில் எடுப்பது தாத்தாவையே கேள்வி கேட்பது போல. அது தப்பு’ என்ற காபி மாமா புருஷண்ணாரைப் பார்த்து ‘உங்களுக்கு சம்மதமா?’ என்றார்.

மதுவண்ணார் ‘சம்மதம்’ என்றார்.

‘வயதுபடி உங்கள் முறை அடுத்து வரும். முதலில் மூத்தவர் சொல்லட்டும்’ என்றார் ஜவுளி மாமா.

‘எனக்கும், என் மனைவிக்கும் சம்மதம்’ எனற புருஷண்ணார்.

‘இப்போது நீங்கள் சொல்லுங்கள்’ என்றார் காபி மாமா.

‘எனக்கும், என் மனைவிக்கும் சம்மதம்’ என்றார் மதுவண்ணார்.

‘தம்பி, இப்போது உங்கள் முறை’ என்று அத்தானைப் பார்த்து சொன்னார் ஜவுளி மாமா.

‘எனக்கும், என் மனைவிக்கும் சம்மதம்’ என்றார் அத்தான்.

‘என்ன சின்ன மாப்பிள்ளை, நாங்கள் வெளியாட்கள். தராசு முள் மாதிரி நடுநிலையில் நின்று எடுத்த முடிவில் உங்களுக்கு சம்மதம்தானே? நீங்கள் வாய்விட்டு சொன்னால்தான் விஷயம் முடிவிற்கு வரும்’ என்றார்.

நான் ஜமுனாவைப் பார்த்தேன். புன்னகைத்தாள். ‘பேசுங்கள்’ என்று ஜாடை காட்டினாள்.

சொத்து விவகாரம், பேச்சு, சச்சரவு எதுவும் எனக்கு புரியவில்லை. தூங்கி எழுந்ததில் மனம் உற்சாகமாக இருந்தது.

‘எனக்கு எல்லாவற்றிலும் சம்மதம்’ என்றேன். என் கருத்தையும் கேட்கிறார்கள் என்பதே பெரிய சந்தோஷத்தை தந்தது.

‘என்னம்மா ஜமுனா, உனக்கு சம்மதம்தானே?’ என்று கேட்டார் ஜவுளி மாமா.

ஜவுளி அண்ணி ஜமுனாவின் கையை பற்றினார். கண்களால் ஜாடை காட்டினார். ஜமுனா கையை விடுவித்துக் கொண்டாள்.

‘அவர் சொல்வதுதானே பெரியப்பா என் வார்த்தையும்கூட?’ என்றாள் ஜமுனா.

‘எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இப்போது பேசியதை பத்திரத்தில் எழுதி நாளை கையெழுத்து போட்டுவிடலாம். இனி வேறு பேச்சு பேச வேண்டியதில்லை’ என்றார் காபி மாமா அவசரமாக.

‘நாளை எதற்கு மாமா? இப்போதே எழுதி விடுங்கள். நான் கையெழுத்து போடுகிறேன். அப்பா, அம்மா முகங்கள் எனக்கு நினைவில்லை. என் மூத்தவர்கள்தான் என் அப்பா, அம்மா எல்லாம். குறிப்பாக சொல்வதென்றால் ஜவுளி அண்ணிதான் என் அம்மா. எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் பாருங்கள். குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இவர்கள் முகங்களில் சந்தோஷம் வருவதற்காக எத்தனை கையெழுத்து வேண்டுமானாலும் நான் போடுவேன்’ என்றேன்.

‘அதெல்லாம் நிதானமாக வக்கீல் வைத்து எழுத வேண்டிய விஷயம். நாளைதான் செய்ய முடியும்’ என்றார் ஜவுளி மாமா.

ஜவுளி அண்ணியின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. புருஷண்ணாரைப் பார்த்து ‘என்னங்க, நான் சொல்வதைக் கேளுங்கள்’ என்று ஆரம்பித்தார்.

‘எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது. இனியென்ன பேசப் போகிறாய்? எல்லோரும் வெளியே போய் சேர்ந்து சாப்பிட்டு வரலாம்’ என்றார் புருஷண்ணார்.

குடும்பத்தினர் சேர்ந்து சாப்பிட்டு எத்தனை நாளாகி விட்டது! ஜவுளி அண்ணியைத் தவிர எல்லோரும் உற்சாகமாக இருந்தோம். அவர் சரியாகவே சாப்பிடவில்லை. அவரை நினைத்து எனக்குக் கவலையாக இருந்தது. மதுவண்ணார் தான் தருகிறேன் என்று பிடிவாதம் பிடித்தபோதும் உணவு விடுதி பில்லை ஜமுனாதான் தந்தாள். இவளிடம் ஏது இவ்வளவு பணம்? வீட்டிற்கு போனதும் கேட்க வேண்டும்.

அன்று இரவு சூளைமேடு வீட்டிற்கு திரும்பும்போது மணி பதினொன்றாகிவிட்டது. புறப்படுமுன் புருஷண்ணார் கம்பெனி சாவிகளை என் கையில் கொடுத்தார். அக்கா ‘பார்த்து பத்திரமாக இருந்து கொள்ளடா’ என்று என் கையை பற்றி கொண்டு கூறினாள். பின் என்ன தோன்றியதோ என் நெற்றியில் முத்தமிட்டாள். அக்கா இதுவரை என்னிடம் இத்தனை பிரியத்துடன் இருந்ததே இல்லை.

மனம் நிறைவாக இருந்தது. பாகப்பிரிவினை, சொத்து பிரச்சினை என்று உலகில் எல்லோரும் பணத்திற்காக ஏனிப்படி சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள்?

என் அண்ணார்களையும், அக்காவையும் நினைத்து பெருமையாக இருந்தது. எந்த சிக்கலும் இல்லாமல் சுமுகமாக பாகப் பிரிவினை செய்து கொடுத்த ஜவுளி மாமாவையும், காபி மாமாவையும் நன்றியோடு நினைத்துக் கொண்டேன். அண்ணிகளையும்தான்.

ஸ்கூட்டரில் திரும்பும் வழியில் மழை பலமாக தூற ஆரம்பித்தது.

‘கவர்னசத்தை சமாதானமாகி விட்டார் போலிருக்கிறதே’ என்றேன்.

‘எல்லோரையும் விட கவர்னசத்தைதான் அதிக சந்தோஷமாக இருந்தார்’ என்றாள் ஜமுனா.

‘ஏனப்படி?‘ என்றேன்.

‘என்னை பழி வாங்கிவிட்டதாக நினைக்கிறார். வேறென்ன?’ என்றாள் ஜமுனா.

‘எப்படி பழி வாங்கினார்?’ என்று புரியாமல் கேட்டேன்.

‘பஸ் வருகிறது. ரோடை பார்த்து வண்டியை ஓட்டுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘நான் எப்படி பேசினேன்?’ என்று கேட்டேன்.

‘பிரமாதம். உங்களைத தவிர வேறு எவராலும் இப்படி பேச முடியாது’ என்றாள் ஜமுனா.

ஜமுனா பாராட்டியது சந்தோஷமாக இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் வந்தது.

‘நீ கேலி செய்வது போலிருக்கிறதே’ என்றேன்.

‘இல்லையே’ என்றாள் ஜமுனா.

‘ஆகக் கடைசியில் எல்லோருக்கும் சந்தோஷம். உனக்கும் சந்தோஷம்தானே?’ என்று கேட்டேன்.

‘உங்கள் சந்தோஷமான முகத்தை பார்த்த பின் எனக்கு சந்தோஷம் வராமலிருக்குமா?’ என்றாள் ஜமுனா.

‘நமக்கு கிடைத்த பங்கைப் பற்றி உனக்கு சந்தோஷமா என்று கேட்கிறேன்’ என்றேன்.

‘ஓட்டையாகி ஒழுகும் ஓட்டு வீட்டிலிருந்து கொண்டு தற்காலிக வேலைப் பார்க்கும் வாத்தியார் வீட்டு பெண்ணுக்கு வந்த பேரதிர்ஷடம் இது! அப்படிதான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘அப்போது நன்றாக இருந்தாய். இப்போது கவலையாக இருப்பது போல தெரிகிறதே’ என்றேன்.

‘கவலையாகத்தான் இருக்கிறது. துணி ஊறப் போட்டிருந்தேன். துவைத்து காயப் போட வேண்டும். காய வைத்திருந்த மிளகாயெல்லாம் நனைந்திருக்கும்’ என்றாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms