23. பிரிவினைக்குப் பின் - மீன்கொடி

வீடு திரும்பி உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, ஓடுகளின் இடைவெளி வழியே கசிந்த மழைநீரின் துளியொன்று ஜமுனாவின் நெற்றியில் விழுந்து மெல்ல உருண்டது.

‘உமா தேவியை விட அழகாக இருக்கிறாய்’ என்றேன்.

சேலை மாற்றிக் கொண்டிருந்த ஜமுனா நிமிர்ந்து பார்த்தாள். ‘இதுவரை சொன்னதே இல்லையே! யாரவள்?’ என்றாள்.

‘சிவபெருமான் சம்சாரம்’ என்றேன்.

‘ஓ அவளா!’ என்றாள் ஜமுனா.

‘காளிதாஸ் எழுதிய குமாரசம்பவத்தில் ஒரு காட்சி. கடுமையான தவம் பூண்டிருக்கிறாள் தேவி உமை. அவளது தவ வெப்பத்தினால் உலகமே கோடைகால அனலில் வாடுகிறது. பொறுக்க முடியாத வெப்பத்தால் அவள் உடலில் வியர்வை அரும்பும்போது உலகில் மழைக்காலம் வருகிறது. அவளது நீண்ட கண்களின் இமைகளில் தங்கிய வைரம் போல பிரகாசிக்கும் நீர்த்துளிகள் உருண்டு, நெருங்கியிருக்கும் இமயத்தின் இரு மலை சிகரங்களின் நடுவில் உள்ள பள்ளத்தாக்கு போன்ற தேவியின் இணைமுலைகளின் இடைவெளி வழியே நீர்வீழ்ச்சியாக வழிந்து, வயிற்றுமடிப்புகளின் மீது ஓடி, சமவெளியிலிருக்கும் ஏரி போன்ற நாபியில் வந்து விழுகின்றன. அப்படித்தானே உலகம் சுபிட்சம் பெறுகிறது?’ என்றேன்.

முந்தானையை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்ட ஜமுனா ‘இத்தனை நாள் மனுஷப் பெண்களை பற்றித்தான் வாய்க்கு வந்தபடி வருணனை வரும். எவரையும் விட்டு வைத்ததில்லை. இப்போது சாமியைப் பற்றி! ரொம்ப தப்பு’ என்றாள்.

‘அது மகாகவி காளிதாஸ் வருணனை. என்னுடையதில்லை’ என்றேன்.

‘அவர் மகாஞானி. எதுவும் சொல்லலாம். பெரியவர்கள் பெயரை சொல்லிக் கொண்டு நீங்கள் அதிகபிரசங்கம் பண்ண வேண்டாம்’ என்றாள் ஜமுனா.

‘இதையெல்லாம் நீ வாசித்திருந்தால் இலக்கியத்தின் பெருமை புரியும்’ என்றேன் வருத்தத்துடன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த ஜமுனா ‘காளிதாஸ் ஆயிரத்திற்கும் மேலே உவமைகள் பயன்படுத்தி இருக்கிறார். புரிவதற்கு சிரமமான எந்த கருத்தையும், தத்துவத்தையும் உவமை, உவமேயம் மூலம் விளக்குவது வேத காலத்திற்கும் முன்பிருந்தே இங்கே இருக்கும் வழக்கம். வெள்ளைக்காரர்கள்தான் உவமை என்றால் கேலியாக சிரிப்பார்கள். ஒரே உவமை பயன்படுத்துபவரின் திறமை, சூழ்நிலை பொருத்து விதவிதமாக அர்த்தம் தரும் என்பதற்கு இப்போது நீங்கள் சொன்ன உவமையே உதாரணம். இந்த உவமையைப் போலவே கம்பரும், அஸ்வகோஷரும் உவமைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உங்களுக்கு தெரிந்திருக்குமே?’ என்றாள்.

‘தெரியாதே’ என்றேன் தவிப்புடன்.

‘கம்ப ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் கம்பரும், புத்த சரிதம் எட்டாவது காண்டத்தில் அஸ்வகோஷரும் இதே போல பாடியிருக்கிறார்கள்’ என்றாள் ஜமுனா.

‘இதெல்லாம் பெண்ணான உனக்கெப்படித் தெரியும்?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

‘பெண் என்றால் எதுவும் தெரிந்திருக்கக் கூடாதா? என் அப்பா நேர்மையான பள்ளிக்கூட வாத்தியார். தங்கமும், வெள்ளியும் சீதனமாகத் தர முடியவில்லை. ஆனால். குணத்தையும், அறிவையும் எவ்வளவு எடுத்தாலும் குறையாத அளவிற்கு கொடுத்திருக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘பிறந்த வீட்டைப் பற்றி உனக்கு ரொம்ப பெருமைதான். அதில் உண்மையும் இருக்கிறது. கவர்னசத்தை சொல்லியதை நினைத்து கவலைப்படாதே’ என்றேன்.

‘அவர் என்னை ஒன்றுமில்லாதவள் என்று சொன்னபோது உங்கள் அண்ணார்களும், அண்ணிகளும் கேட்டுக் கொண்டுதானே இருந்தார்கள்?’ என்றாள் ஜமுனா.

‘என்னைப் போல நீயும் பேசாமல்தானே இருந்தாய்?’ என்றேன்.

‘பேச எனக்கென்ன பயம்? உங்கள் மனம் புண்படக்கூடாது என்றுதான் பேசாதிருந்தேன். உங்களை மற்றவர்கள் அவமதிக்கிறார்கள். அதை நீங்கள் பொறுத்துக் கொள்ளலாம். நான் உங்கள் மனைவி. உங்களை அவமதிப்பவர்களை என்னால் ஏற்க முடியாது’ என்றாள் ஜமுனா.

‘அவமரியாதையா! இல்லாத ஒன்றை இருப்பதாக நினைக்கிறாய்!’ என்றேன்.  

‘ஜவுளி அண்ணி தவிர வேறு எவருக்கும் உங்கள் மீது உண்மையான பிரியமில்லை. நீங்களோ இல்லாத அன்பை இருப்பதாக நினைக்கிறீர்கள். உங்கள் குறையை என் குறையாக சொல்லுங்கள்! சொத்து பற்றி எல்லோரும் என்னவெல்லாம் பேசினார்கள்! அங்கே எதுவுமே சாதிக்கவில்லை. பேசத் தெரியாத தங்கப்பதுமை போல் இருந்துவிட்டு, படுக்கையறையில் பெண்டாட்டியிடம்தான் உங்கள் பேச்சுத் திறமையை காட்டுகிறீர்கள்!’ என்றாள் ஜமுனா.

‘என் சாதனையெல்லாம் பேச்சளவில்தான் என்கிறாயா?’ என்றேன்.

நான் அவள் கைகளைப் பற்றினேன்.

கைகளை விலக்கிக் கொண்டு ‘வாங்கி கொடுத்ததே பத்து கண்ணாடி வளையல்கள். அவையும் உடைய வேண்டுமா?’ என்றாள் கொஞ்சலாக.

‘நான் சம்பாதித்து வேறு வளையல்கள் வாங்கி தர முடியாதவனா?’ என்றேன்.

‘அப்படியா சொன்னேன்? நீங்கள் மனம் வைத்தால் வைர வளையல் கடையே வைக்க முடியுமே. கண்ணாடி வளையல் உடைந்தால் உங்கள் விரல்களை குத்தி விடும்’ என்றாள் ஜமுனா.

‘உன்னையும்தான் குத்தும்’ என்றேன்.

‘அது பரவாயில்லை. பழகி விட்டது. நான் போய் துணி துவைத்துவிட்டு வருகிறேன்’ என்றாள் ஜமுனா.

‘இந்த நேரத்திலா! பனிரெண்டு ஆகப் போகிறதே’ என்றேன்.

‘எதிர்பாராமல் நம்மவர்கள் பேச கூப்பிட்டு விட்டதால், மத்தியானம் துணி துவைக்க முடியாமல் போய்விட்டது. காலையிலேயே ஊற வைத்து விட்டேன். துவைக்காவிட்டால் பாழாகிவிடும்’ என்றாள் ஜமுனா.

‘அப்போதே கேட்க நினைத்து மறந்து விட்டேன். மாதக் கடைசி. பணமே இல்லையே. நீ எப்படி ஹோட்டல் பில் கட்டினாய்? பெரிய பில்லாக இருந்ததே. கடன் வாங்கினாயா? சென்னையில் நமக்கு யார் கடன் தரப் போகிறார்கள்!’ என்றேன்.

முறைத்தாள் ஜமுனா. ‘உங்களிடம் சொல்லாமல் அப்படி ஏதேனும் செய்வேனா? பட்டினி கிடந்தாலும் கடன் வாங்கி வீட்டு செலவு செய்யக் கூடாது என்று என் அப்பா சொல்லி கொடுத்திருக்கிறார். அதை மறப்பேனா?’ என்றாள் ஜமுனா.

‘பின் ஏது பணம்?’ என்று கேட்டேன்.

‘நீங்கள் இன்டர்நெட்டில் சம்பாதித்து கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் சேமித்து வைத்திருந்தேன். அந்த பணம்தான் விருந்தாகி விட்டது’ என்றாள் ஜமுனா.

‘நான் கொடுக்கும் அற்ப தொகையில் எப்படி உன்னால் சிக்கனமாக செலவு செய்ய முடிகிறது! ஒரு நாள் கூட நாம் சிரமப்படுகிறோம் என்று எனக்கு தோன்றியதே இல்லை.’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

‘அது பெண்ணுக்கு மட்டும் இருக்கும் திறமை. நான் போய் துணி துவைக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘நிறைய வருமானம் வந்ததும் முதல் வேலையாக ஒரு சலவை யந்திரம் வாங்கி விடலாம்’ என்றேன். அடுத்த வினாடியே நான் எடுத்த முன்முயற்சி தோல்வியில் முடிந்தது.  

‘அதற்கு அவசரமில்லை. துவைப்பதில் எனக்கு சிரமமில்லை. உங்களுக்கு ஒரு புது வண்டி வாங்கிவிட வேண்டும். அதுதான் முக்கியம். சைக்கிள் மிதிப்பது உங்களுக்கு எத்தனை கஷ்டமாக இருக்கும்!’ என்று கூறிவிட்டு ஜமுனா துணி துவைக்க சென்று விட்டாள்.

நொந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் ஏனிப்படி இருக்கிறேன்? மனைவியை வசதியாக வைத்திருக்க முடியாதவன் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? ஜமுனா எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம்தான். சந்தேகமேயில்லை. ஆனால் அவளால் அது போல சொல்ல முடியுமா? இவளுக்காக என்ன செய்யப் போகிறேன்?

ஜமுனாவை நேசிக்கிறேன். எனக்கென்று வேறு ஆசையோ, விருப்பமோ இல்லை. என் குடும்பத்தினர் நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது.  நான் எதையும் தேடவில்லை. நான் இந்த உலகில், வாழ்வில் இருக்கிறேன். இருத்தலில் இன்பமடைகிறேன். ஆனால் அது மட்டுமே ஜமுனாவிற்கு போதுமா? மனைவியின் தேவைகளை நிறைவேற்றாதவன் எப்படி கணவனாக இருக்க முடியும்?

சிறிது நேரம் கழித்து பின்கட்டிற்கு சென்றேன். சேலையை சற்றே உயர்த்தி இடுப்பில் செருகிக் கொண்டு சற்று குனித்து நின்று நீலநிற பிளாஸ்டிக் வாளியில் துணிகளை அலசிக் கொண்டிருந்தாள். மஞ்சள் நிற குண்டு விளக்கு தந்த மங்கலான வெளிச்சத்தில் அவள் கணுக்கால்கள் பொன்னிறத்தில் தெரிந்தன. ஈரமான வெள்ளிக் கொலுசுகளில் ஒட்டியிருந்த சோப்பு நீர்த்துளிகள் பல வண்ணங்களில் பளபளத்தன. வளையல்கள் கலகலத்தன. குளிர் காற்று என் உடலை லேசாக நடுங்க வைத்தது.

நான் வந்த ஓசை கேட்டு திரும்பி பார்த்த ஜமுனா, ‘தூங்கவில்லையா?’ என்றாள்.

‘உன்னை பார்க்க வேண்டும் போலிருந்தது’ என்றேன்.

‘ஏதாவது காதல் வசனம் பேசினால் வாளியில் இருக்கும் சோப்பு நீரை உங்கள் மீது ஊற்றி விடுவேன்’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு ஒரு சந்தேகம்’ என்றேன்.

‘என்ன?’ என்றாள் ஜமுனா.

‘நான் அற்பன்’ என்றேன்.

’புத்தபெருமானுக்கு போதிமரத்தடியில் ஞானம். என் வீட்டுக்காரருக்கு கிணற்றடியில் அஞ்ஞானம்’  என்றாள் ஜமுனா.

‘நான் உனக்கேற்ற கணவனில்லையோ?’ என்று கேட்டேன்.

‘உண்மைதான். உங்களுக்கு என்னை போலில்லாமல் வேறு நல்ல வசதியான பெண்ணாக பார்த்திருக்கலாம்’ என்றாள் ஜமுனா.

‘நான் சொல்வதை நீ திரித்துப் பேசுகிறாய். உன் சௌகரியத்திற்காக, உன் நன்மைக்காக, நான் எதையுமே செய்வதில்லை. அதற்கான வசதியும், வருமானமும் என்னிடமில்லை. நிலைமை இப்படி இருக்க பணியாள் மகாராஜாவிற்கு சேவை செய்வது போல நீ எனக்கு சேவை செய்து கொண்டிருக்கிறாய்’ என்றேன்.

‘நீங்கள் மகாராஜாவாக இருந்தால்தான் நான் சேவை செய்ய வேண்டுமா? நான் சேவை செய்வதால் நீங்கள் மகாராஜாவாக மாற முடியாதா?’ என்றாள் ஜமுனா.

‘உன் நிலைமை உனக்குப் புரியவில்லை. உன்னை பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டேன்.

‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். உங்கள் அம்மா சின்ன வயதிலேயே உங்களை விட்டு போய்விட்டார். அந்த இடத்திற்கு நான் வந்திருப்பதாக நினைக்கிறேன்’ என்ற ஜமுனா ஈரக் கைகளால் என் சட்டைகாலரை பிடித்திழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள். ‘நேரமாகிவிட்டது. குளிர்காற்று வீசுகிறது. உள்ளே போய் நிம்மதியாக தூங்குங்கள். எதுவானாலும் நாளைக்கு பேசிக் கொள்ளலாம். சீக்கிரம் விடிந்து விடும்’ என்று கூறிவிட்டு கையிலிருந்த ஈரப்புடவையை முறுக்கிப் பிழியத் தொடங்கினாள்.

என் மனதையும்தான்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms